Wednesday, 11 January 2012

மொழிகளில் தாய் - தமிழா, சமஸ்கிருதமா? - 4

எனது தந்தை தமிழ் ஆசிரியர் மற்றும் அவர் சில காலங்கள் முன்னர் வரை தமிழ் அடிப்படைவாதியாக இருந்தவர். தமிழ் தொன்மையான, உன்னதமான மொழி என எனக்கு மூளை சலவை செய்து வளர்த்து வந்தார். ஆனால் அவர் தொடர்ந்து இப்படி சொல்லி வந்ததும், மற்றும் மற்ற தமிழ் புலமை உள்ளவர்களின் செயலும் என் மனதில் சந்தேகத்தை வரவழைத்தது. அதன் காரணமாக நானே தமிழ் குறித்து ஆராய்ச்சி செய்து தமிழ் தொன்மையான மொழி இல்லை என்பதை கண்டு கொண்டேன். எனது தந்தையார் முன் வைத்த எனது விவாதங்கள் மூலம் எனது தந்தை தமிழ் மீது வைத்திருந்த நம்பிக்கையை சற்று மாற்றியமைக்க வித்திட்டது. தற்போது தமிழ் சார்ந்த பாரபட்ச எண்ணங்களை கைவிட்டுவிட்டார். அந்த சில எண்ணங்களை தங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புவதோடு எவரோடும், எந்த நிமிடத்திலும், எந்த இடத்திலும் விவாதம் செய்ய தயார் என செண்பகமுருகன் எனும் ஆங்கிலத்தில் வலைப்பதிவு எழுதும் பதிவர் 2007ம் ஆண்டு பகிங்கிரமாக அறிவிப்பு செய்து இருந்தார்.

ஆராய்ச்சி செய்தேன் என சில இடங்களை என்னைப் போல் தேடிப் பார்த்துவிட்டு, நான் தமிழ் தொன்மையான மொழி என சொன்னேன், அவரோ தமிழ் தொன்மையான மொழி இல்லை என சொல்லிவிட்டார். காலம் காலமாக தொல்பொருள் ஆராய்ச்சி, மொழி ஆராய்ச்சி என செய்தவர்கள் முன்னர் கிடைக்கும் சில விசயங்கள் அடிப்படையில் தமிழ் தொன்மையான மொழி இல்லை என அவர் முடிவுக்கு வந்தது வியப்புக்குரியது. அதே வேளையில் தமிழ் தொன்மையான மொழிதானா எனும் சந்தேகம் அவசியம் அற்றது என்பதற்கு தம் இல் என தெளிந்து கொண்டோம். உலகில் உள்ள எல்லா உயிரினங்களும், உயிரற்ற சடப்பொருள்களும் தமிழிலியே பேசின. செண்பகமுருகன் எழுதியதை வைத்து தமிழ் மீது பற்று கொண்டவர்களின் கருத்துகள் மிகவும் சுவாரஸ்யமாகவே இருந்தது.

மொழியில் இரண்டு வகை உண்டு, ஒன்று எழுத்து மொழி மற்றொன்று பேச்சு மொழி. பேச்சு மொழியை எழுத்தில் வைக்க பழங்கால மனிதர்கள் திணறி இருப்பார்கள். இப்படித்தான் வேத நூல் எனும் ஒரு சிறுகதையில் பேச முடியாத ஒருவர் பேச வேண்டும் என நினைக்கும்போது எழுத்து உருவாக்கப்பட்டது என ஒரு கற்பனை எழுந்தது. மனித இனம் தோன்றி மில்லியன் ஆண்டுகள் ஆகிவிட்டன என தொல்லுயிர் எச்சம் மூலம் கிடைக்கும் விசயங்கள் உணர்த்துகின்றன. ஆனால் இந்த கல்வெட்டுகள் போன்றவை எல்லாம் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு உட்பட்டே உள்ளது என தெரிகிறது. ஒன்று இந்த கல்வெட்டுகள் எல்லாம் வரலாற்றை சிதைத்து கொண்டிருக்க வாய்ப்பு உண்டு. அது எப்படியெனில்  தொல்லுயிர் எச்சங்கள் கிடைப்பது போன்ற இந்த கல்வெட்டுகள் எல்லாம் காலப்போக்கில் தங்கள் மீது எழுதப்பட்ட அடையாளங்களை சிதைத்து இருக்கலாம் என எண்ண வாய்ப்புண்டு.

சமஸ்கிருதம் பற்றி குறிப்பிடும்போது அது வாய் மொழி என்றே கூறப்பட்டு வந்து இருக்கிறது. ஒலி எழுப்புதல் பொறுத்தே ஒரு மொழி எழுதப்பட்டு இருக்குமெனில் அது தமிழ் மொழியாக முதலில் இருக்க வாய்ப்பு இல்லை. ஏனெனில் க, த, ட போன்றவைகள் பல விதங்களில் உச்சரிக்க பிராமி, கிரந்தா, சமஸ்கிருதம் என எழுத்து மொழியில் வெவ்வேறு விதமாக உச்சரிக்கப்பட்டு உள்ளது. ஆனால் தமிழில் அப்படி இல்லை என சொல்வோர் உண்டு. ஆனால் இதன் காரணமாக தமிழ் மொழி மிகவும் பின்தங்கியது என வாதிட முடியாது. வாடா. வாடா. எனும் வார்த்தைகளில் என்ன வித்தியாசம் எழுத்தில் காண முடியும்? ஆனால் இந்த வார்த்தைகள் சொல்லும் விதத்தில் ஒருவரின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியும் என கண்டு கொண்ட மொழி தமிழ்.

இப்படி பிறமொழிகளில் உள்ள எழுத்துகள் போன்று இல்லாமல் தனித்தே காணப்பட்டதால் தமிழ் தொன்மையான மொழி என உறுதியாக இறுதியாக அறியலாம் என கூறுவோர் உண்டு. அதிலும் சில சமஸ்கிருத வார்த்தைகள் எல்லாம் தமிழில் உள்ளதால் தமிழ் தொன்மையான மொழி இல்லை என சொல்வோர் உண்டு. ஆனால் தமிழ் வார்த்தைகள் தான் மருவியிருக்கிறது என்பதை எவரும் அறிய முற்படுவதில்லை. ஆங்கில வார்த்தைகள் கலந்து தமிழ் தற்போது பேச்சு வழக்கில் இருப்பதால், தங்கிலிஷ் ஆளுமையால் பிற்காலத்தில் தமிழ் ஆங்கிலம் தழுவியது என சொன்னாலும் சொல்வார்கள். இருப்பினும் எந்த மொழி முதலில் வந்தது என்பது கண்டு கொள்வது கடினமில்லை, ஆனால் தமிழ் முதல் மொழியில்லை என நிரூபிக்க தமிழர்களே முன் நிற்பது  நகைப்புக்குரியது.

தமிழ் கொண்ட மாற்றங்கள் என ஒரு தனிக்கட்டுரையே எழுதலாம். எழுத்து, பேச்சு என தமிழ் தனிச்சிறப்பு பெற்று விளங்குகிறது. சங்கத்தமிழ், செந்தமிழ், கொடுந்தமிழ் என தமிழ் பிரிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது கொடுந்தமிழ் காலத்தில் இருக்கிறோம். சென்னை தமிழ், மதுரை தமிழ், நெல்லை தமிழ், கோவை தமிழ் என தமிழ் பேசும் மக்களின் வேறுபாடு தமிழ் எத்தைகைய அழகு மொழி என புரியும். எழுத்து என வரும்போது இந்த பேதம் எழுத்தில் தெரியுமா என நெல்லை பதிவர்கள், மதுரை பதிவர்கள், கோவை பதிவர்கள், சென்னை பதிவர்கள்  என தேடிப்பார்த்தால் தான் புரியும்.

தமிழ், தமிழ் என சொல்வதை விட்டு உருப்படியாக வேலையை பாருங்கள் என சொல்பவர்கள் உண்டு. ஒரு மொழி அழிந்தால் அதன் இனம் அழியும். இந்த பூமியில் எத்தனையோ அழிவுகள் ஏற்பட்டு இருக்கின்றன. ஒரு தமிழ் கண்டமே அழிந்து போனதாக கதைகள் உண்டு, ஆனால் அறிவியலில் அப்படி ஒரு கண்டம் இருந்ததற்கான சாத்திய கூறுகள் இல்லை என்றே சொல்கிறார்கள். இந்த லெமுரியா கண்டம் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். இது குறித்த தேடல் அதிகம் தேவை எனினும் தொலைந்தது, தொலைந்ததுதான். எப்படி சமஸ்கிருதம் இன்று அழிந்து கொண்டிருக்கிறதோ அது போன்ற நிலை தமிழுக்கு நேரலாம், எனினும் தமிழ் பற்றாளர்கள், தமிழகம் இருக்கும்வரை தமிழுக்கு அழிவில்லை.

கல்தோன்றி மண் தோன்றா காலத்தே... தமிழர்கள் பூமி உருவானபோதே உருவாகிவிட்டார்கள். இது அறிவியலுக்கு வியப்பை தரும். படிப்பவர்களுக்கு எரிச்சலை தரும். ஆனால் இந்த பூமியில் என்ன நடந்தது என எவருக்கு தெரியும்? வீரஸ் எனும் ஒரு தமிழர் தமிழ் பெருமை குறித்து இப்படி கூறுகிறார். வீரஸ் என்பவரின் இந்த சிந்தனை மிகவும் அழகாக இருக்கிறது.

வெடித்து சிதறிய பூமியானது வாயுக்களாக இருந்தது. வெப்பம் தணிந்ததும் முதன் முதல் பூமியில் எங்கும் தண்ணீர் நிரம்பியிருந்தது. பின்னர் சூரியனின் வெப்பத்தில் தண்ணீர் ஆவியாக தொடங்கியது. அப்படி ஆவியானதும் மலைக்குன்றுகள் மட்டுமே  தெரிந்தன. இதைக்கண்டதும் மலைகளும் மலைகள் சார்ந்த இடங்கள் குறிஞ்சி என தமிழர்கள் சொன்னார்கள். காலப்போக்கில் சில இடங்கள் மரங்கள் உருவாகும் வகையில் இருந்தன. அதைக்கண்டு காடுகளும், காடுகள் சார்ந்த பகுதிகள் முல்லை  என்றார்கள். அதற்குப்பின்னர் சின்ன சின்ன இடங்கள் விவசாயம் செய்யும் நிலங்கள் என கண்டு கொண்டார்கள். அதை மருதம் என அழைத்து வயலும் வயல் சார்ந்த இடங்கள் என சொன்னார்கள். சில இடங்கள் மிகவும் தாழ்வாக இருந்ததால் அங்கே தண்ணீர் ஆவியாக வில்லை, அந்த இடங்கள் உள்ள தண்ணீர் ஆவியாகி மீண்டும் மழையாக பொழிந்து கடல் போன்று இருந்ததது. அதை நெய்தல் என்றார்கள். கடலும் கடல் சார்ந்த இடங்கள். அதே போன்று சில இடங்கள் வறண்டே காணப்பட்டன, அதைக்கண்டு பாலை என சொன்னார்கள். நீரற்ற வறண்ட பகுதி. இப்படி பூமியின் பெருமையை அழகாக தமிழர்களே சொன்னார்கள் என்கிறார் வீரஸ்.

சமஸ்கிருத மொழி இலக்கியம், கணிதம், மனிதர்கள் என அந்த மொழி அளித்த பங்கு மறுக்கவியலாது. ஆர்யபட்டர், பாஸ்கரர், விஷ்ணு சர்மா, வச்தசயனர், வியாசர், வால்மீகி என ஒரு சமஸ்கிருத பட்டாளமும், திருவள்ளுவர், ஆழ்வார்கள், நாயன்மார்கள், சமணர்கள் என தமிழர்கள் பட்டாளமும், இரண்டு மொழிகளிலும் மாபெரும் இலக்கியங்கள் படைத்த ஆண்டு என வரலாறு சொல்வது கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு உட்பட்டுதான். அதுவும் முதல் நூற்றாண்டு முதல் பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை இலக்கிய சிந்தனையாளர்கள் கோலோச்சி கொண்டிருந்தார்கள். குப்த, பல்லவ ஆண்டு காலம் மொழிகளின் பொற்காலம் என்றே சொல்லப்படுகிறது. வேற்றுமை இருந்த காரணத்தால் பல விசயங்கள் அழிந்து போயின. அதுவும் களப்பிரர் காலம் கரு மேகங்கள் கொண்டு தமிழை அழித்ததாக சொல்வார்கள். இவர்கள் கன்னடியர்கள் எனும் குற்றச்சாட்டு இன்றும் உண்டு. இதே காலத்தில் கிரேக்கர்களின் சிந்தனைகள் கொடிகட்டி பறந்தன. மிகவும் சிறப்பு வாய்ந்த  மொழிகளின் இலக்கியங்கள் குறித்து இனி பார்வையை திருப்புவோம். 

Tuesday, 10 January 2012

மொழிகளில் தாய் - தமிழா, சமஸ்கிருதமா - 3

இந்தியாவின் உணர்வை பிரதிபலிக்கும் மொழி சமஸ்கிருதம் என்று சமீபத்தில் நடந்த பதினைந்தாவது உலக சமஸ்கிருத மாநாட்டில் இந்திய பிரதமர் திரு. மன்மோகன் சிங் கூறி இருக்கிறார். சமஸ்கிருதம்  இந்திய திருநாட்டின் உணர்வையே பிரதிபலிக்கிறது எனும் கூற்று நகைப்புக்குரியதாக இருக்கிறது. தமிழ் என்பதற்கு என்ன அர்த்தம் என்பதை நாம் அறிந்து வைத்திருக்கிறோமோ இல்லையோ பிற நாட்டு மொழி ஆர்வலர்கள் நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள். செக்கோஸ்லோவோகியா நாட்டை சேர்ந்த சமீபத்தில் மரணமடைந்த மொழி ஆய்வாளர் கமில் ஜ்வேலேபில் தம் - இல் என்று பிரித்து தம் என்றால் ஒருவருடைய இல் என்றால் ஒலி என கூறுகிறார். மொழி என்றால் அது தமிழ். ஆனால் தமிழை ஒழித்து கட்ட பல்வேறு காலங்களில் பல்வேறு வகையில் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இன்று ஆங்கிலம்தனை தன்னில் ஏற்றுக்கொண்டு தமிழ் வலம் வந்து கொண்டிருக்கிறது.

மொழிகளுக்கு எல்லாம் தாய் எதுவெனில் ஒலி. இதை எவரும் மறுக்க இயலாது. ஒலி மூலமே மொழி பயன்பாட்டிற்கு வந்திருக்க இயலும். தமிழ் எனும் வார்த்தை உருவானதிலிருந்தே நாம் தெளிவுபடுத்த வேண்டியது என்னவெனில் மொழிகளுக்கெல்லாம் தாய் தமிழ். தமிழ் மொழி ஒலியின் வடிவத்தில் இருந்து தொடங்கி பின்னர் கொண்ட மாற்றங்கள் இதை மிகவும் அழகாக பறைசாற்றுகின்றன. நன்னூல் மிகவும் அழகாகவே சொல்கிறது, பவணந்தி முனிவர் நன்னூல் எழுதும்போது இவ்வாறு தமிழ் கொண்ட மாற்றத்தை மனதில் கொண்டே பழையன கழிதலும், புதியன புகுதலும் வழுவல கால வகையினானே என நன்னூல்தனை முடித்து வைக்கிறார். முக்காலமும் உணர்ந்த முனிவர்கள்.

இதே சமஸ்கிருதம் என்றால் என்ன அர்த்தம்? சமஸ்தம் என்றால் யாவும் என பொருள்படும், கிருதம் என்றால் சேர்த்து என்று பொருள்படும். பிற மொழிகளையெல்லாம் சேர்த்து உருவாக்கியது சமஸ்கிருதம் என்று தந்தை பெரியார் குறிப்பிட்டதாக கூறுகிறார்கள். அதே வேளையில் சம்யம்-கிருதம் என்றால் நன்கு அமைக்கப்பட்டது என்று பொருள்படும். மேலும் சமஸ்கிருதம் பற்றி திரு மன்மோகன் சிங் குறிப்பிடுகையில் சமஸ்கிருதம் ஒரு இனத்துக்கோ, மதத்துக்கோ சொந்தமானது அல்ல என கூறி இருக்கிறார். சமஸ்கிருதம் ஒரு இனத்தின் மொழியாகத்தான் இருந்து இருக்க கூடும். இன்றைய கணக்குப்படி பேச்சு வழக்கில் இல்லாத மொழியாக சமஸ்கிருதம் ஆகிப்போனது என்னவோ உண்மை, வெறும் பதினைந்தாயிரம் மக்களே சமஸ்கிருதம் தெரிந்தவர்களாக உள்ளனர் எனும்போது சமஸ்கிருதம் பேசும் இனம் அழிந்து போனது என்பதுதான் வரலாறு காட்டும் உண்மை.

சமஸ்கிருதத்தில் உருவாக்கப்பட்ட இலக்கியங்கள் அடிப்படையில், வேதங்கள் அடிப்படையில் சமஸ்கிருதம் பெரும் மதிப்பை பெற்றது என்பது அன்றைய காலத்தில் சரியே. சிறந்த சிந்தனையாளர்கள் தமிழில் இருந்தார்கள் என்பதற்கு சிலப்பதிகாரம், மணிமேகலை எல்லாம் ஒரு சாட்சி. ராமாயணமும், மகாபாராதமும், வேதங்களும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட காரணத்தால் சமஸ்கிருதம் மொழிகளில் தாய் ஆகிவிட இயலாது. ஓம் எனும் பிரணவ மொழி தமிழ் தந்ததுதான். தமிழில் எழுத்துக்கள் உண்டு, எண்கள் உண்டு, மாதங்கள் உண்டு, வாரங்கள் உண்டு, வருடங்கள் உண்டு.

இந்த சமஸ்கிருதம் முன்னர் குறிப்பிட்டதை போல தென்னிந்திய மொழிகளில் பெருமளவு கலந்து சற்று சீரமைப்பு செய்தது என மொழி ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். ஆனால் தொல்காப்பியம் எழுதப்பட்டதை வைத்துப் பார்க்கும்போது தமிழுக்கு இலக்கணம் சொல்லித்தந்தது சமஸ்கிருதம் என்பதெல்லாம் எத்தகைய உண்மை என புரிவதற்கு இல்லை. ரிக் வேதங்களில் தமிழ் சொற்கள் கலந்து இருக்கிறது என்கிறார்கள். யாதும் ஊரே, யாவரும் கேளிர் எனும் வாக்கியம் எந்த வேதத்துக்கும் மேலானது, அதைத் தந்தது தமிழ் தான்.

பழங்கால கல்வெட்டுகளில் இருந்த மொழி தமிழ் தான் என தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். சமஸ்கிருதம் கி.பி இரண்டாம் நூற்றாண்டு வரை எந்த ஒரு கல்வெட்டிலும் இல்லை என்பது தெளிவு. இந்த மொழி பிற மொழிகளில் இருந்து கடன் வாங்கியே வளர்ந்து உள்ளது. எப்படி ஆங்கிலம் கடன் வாங்கி வளர்ந்ததோ அதைப்போல இந்த சமஸ்கிருதம் செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு மொழி. ஆனால் தமிழ் இயற்கையாகவே உருவான மொழி எனவும் உலகில் உள்ள மொழிகளுக்கெல்லாம் தாய் தமிழ் என்பது மறுக்க முடியாத உண்மை.

தமிழ் செம்மொழி என போராடி இந்திய அரசால் 2004ம் ஆண்டு தமிழுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டாலும் தமிழ் உலகின் தாய் மொழி எனும் அங்கீகாரம் விரைவில் கிடைக்கும். மொழிகளில் தாய் தமிழ் பற்றிய சிறப்பு பார்வை தொடரும். 

Sunday, 8 January 2012

மொழிகளில் தாய் - தமிழா, சமஸ்கிருதமா? - 2

வணக்கம் தமிழ் நெஞ்சங்களே, நான் ஜார்ஜ் ஹார்ட் பேசுகிறேன். என்னைப் பற்றி ஒரு சிறிய அறிமுகம் தருகிறேன்.

நான் ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் சம்ஸ்கிருத மொழியில் பட்டம் பெற்றேன். நான் முதன் முதலாக சம்ஸ்கிருத பேராசிரியராக விஸ்கான்சின் பல்கலைகழகத்தில் பணியாற்றினேன். பின்னர் கலிபோர்னியா பல்கலைகழகத்தில்  ஆண்டு முதல் நான் தமிழ் பேராசிரியாராக பணிபுரிந்து வருகிறேன். அதோடு மட்டுமில்லாமல் தமிழ் தலைமைபீடத்தின் பொறுப்பாளராக அந்த பல்கலைகழகத்தில் இருந்து வருகிறேன்.

எனக்கு ஆங்கிலம், தமிழ், சமஸ்கிருதம் மட்டுமல்லாது தொன்மை வாய்ந்த லத்தீன், கிரேக்கம் போன்றவைகள் நன்றாக தெரியும், அந்த மொழிகளில் எழுதபட்டிருக்கும் இலக்கியங்களை அதன் மூல மொழியில் நன்றாக அலசி ஆராய்ந்து இருக்கிறேன். இது தவிர ஐரோப்பா மொழிகளில் ரஷ்யா, ஜெர்மன், பிரெஞ்ச் போன்ற மொழிகளில் படித்து இருக்கிறேன். அதோடு மட்டுமில்லாமல் தமிழ், சமஸ்கிருதம் மற்றும் மலையாளம் அல்லாத இந்திய மொழிகளில் உள்ள இலக்கியங்களை மொழிபெயர்ப்பில் படித்து இருக்கிறேன். தெலுங்கு மொழியில் உள்ள இலக்கியங்கள் குறித்து அதிகம் தெலுங்கில் புலமை பெற்ற நாராயண ராவ் அவர்களிடம் விவாதம் செய்து இருக்கிறேன். இந்தி இலக்கியங்களை அதிகம் படித்து இருக்கிறேன், குறிப்பாக மகாதேவி வர்மா, துளசி மற்றும் கபீர் போன்றவர்களின் படைப்பை வாசித்து இருக்கிறேன்.

எனது மொத்த வாழ்நாள் காலங்களை சமஸ்கிருதம் படிப்பதில் அதிகமாக செலவழித்து இருக்கிறேன். காளிதாசர், மகா, பைரவி, ஹர்சா, ரிக் வேதங்கள், உபநிடதங்கள், மகாபாரதம், கதாசரிதசாகரா, ஆதிசங்கரரின் எழுத்துகள் என எல்லாம் சமஸ்கிருதத்தில் படித்து இருக்கிறேன். இதை எல்லாம் நான் சொல்வதற்கு காரணம் என்னவெனில் எனது பல மொழிகளின் புலமையை வெளிப்படுத்த அல்ல, தமிழ் செம்மொழி என்பதை சொல்வதற்கு நான் தகுதியானவன் என்பதை உங்களுக்கு சுட்டிக்காட்டவே இதை சொல்கிறேன்.

பாரதியார் குறிப்பிடுவதை போல 'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்' என்பது நூற்றுக்கு நூறு உண்மை. அதே வாக்கியங்களை சொல்வதற்கு எனக்கும் அருகதை இருப்பதாக கருதுகிறேன். எந்த ஒரு அடிப்படை காரணம் எடுத்தாலும், தமிழ் மொழி மிகவும் தொன்மையான, மரபு சார்ந்த ஒரு அழகிய மொழி என்பதை ஆணித்தரமாக என்னால் அடித்து சொல்ல முடியும்.

இதற்கான காரணங்கள் பல உண்டு எனினும் நான்கு காரணங்கள் மட்டும் குறிப்பிட விழைகிறேன். முதலில் தமிழ் தொன்று தொட்டு பேசப்பட்டு வரும் மொழியாகும். குறிப்பாக தொல்காப்பியம் தனை சொல்லலாம். பிற இந்திய மொழிகளில் உள்ள இலக்கியங்களை விட தமிழ் இலக்கியங்கள் ஆயிரம் வருடங்கள் பழமை வாய்ந்தது. மிகவும் பழமை வாய்ந்த சங்கம் வளர்த்த தொகை நூல்கள் பல. தமிழில் பத்துப்பாட்டு போன்ற கவிதை இலக்கியங்கள் காளிதாசரின் எழுத்துகளை விட குறைந்தது இரு நூறு வருடங்கள் முன்னர் இருந்தது ஆகும்.

இரண்டாவதாக தமிழ் மொழி மட்டுமே சமஸ்கிருதத்தில் இருந்து எந்த ஒரு கலாச்சாரத்தையும் தன்னில் எடுத்த செல்லாத மொழியாகும். சமஸ்கிருதத்தின் ஆதிக்கம் வருவதற்கு முன்னரே தமிழ் தன்னில் ஒரு பெரிய இலக்கியத்தை தன்னளவில் படைத்து வளர்த்து கொண்டிருந்தது அதோடு மட்டுமில்லாமல் தமிழ் மொழி மட்டுமே பிற இந்திய மொழிகளில் இருந்து தனித்தன்மை பெற்று இருந்தது. தமிழின் சொந்த இலக்கணங்கள், கவிதை விதிமுறைகள், அழகியல் கோட்பாடு என தமிழ் தனித்துவம் பெற்று விளங்கியதை எவரும் மறுக்க இயலாது. மிகவும் பழைய, மிகவும் பெரிய பாரம்பரியத்தை தமிழ் பெற்று இருந்தது என்பதே சமஸ்கிருதத்தில் இருந்து தமிழ் தனித்து இருந்தது எனலாம்.

மூன்றாவதாக தமிழ் இலக்கியங்களில் தரமானது பத்தரை மாத்து தங்கமானது. இதுவே தமிழ் இலக்கியங்களை பிற மொழிகளின் இலக்கியங்கள், சமஸ்கிருதம், கிரேக்கம், லத்தீன், சைனீஸ், பெர்சியன், அராபிக், இருந்து வேறுபடுத்தி காட்டி கொண்டிருந்தது. திருக்குறள் பற்றி நான் சொல்லித்தான் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டுமா? ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல பல தரம், திறம் வாய்ந்த இலக்கியங்கள் கொண்ட தமிழ் மொழிக்கு அழகு சேர்ப்பது திருக்குறள். இந்த தமிழ் இலக்கியம் எல்லாவிதமான மனித இருப்புதனை பட்டைதீட்டி கூர் பார்த்துவிட்டது எனலாம், மனித இருப்புதனை தொடாத இடமே இல்லை என சொல்லலாம்.

இறுதியாக தமிழ் மொழிதான் இந்திய மொழிகளின் மூல காரணி என்பதை குறித்து நிறையவே எழுதி இருக்கிறேன். தென்னிந்திய கலாச்சாரம் எப்படியெல்லாம் சமஸ்கிருதத்தை பாதித்து உள்ளது என்பது சம்ஸ்கிருத இலக்கியங்களில் தென்படும். தமிழ் இந்து மத கோட்பாடுகள், சங்க தொகை நூல்கள், எல்லாமே பகவத் புராணம் போன்றவைகள் மட்டுமல்ல, கன்னடம், பிற மொழி இலக்கியங்களில் கையாளப்பட்டு இருக்கிறது. தமிழ் மொழியின் புனித தன்மையால் அவை வேதங்களுக்கு நிகரானவை, அதன் காரணமாகவே திருப்பதி போன்ற பெரிய தலங்கள் முதற்கொண்டு பல தென்னிந்திய தலங்களில் வேந்தங்களுக்கு நிகராக தமிழ் மொழி ஓதப்பட்டு வருகிறது. எப்படி சமஸ்கிருதம் இந்திய-ஆரியர்களின் மூல மொழியாக இருக்கிறதோ அதைப்போல தமிழ் மொழி பல தென்னிந்திய மொழிகளின் மூலம் என சொல்லலாம்.

தமிழை செம்மொழி இல்லை என மறுப்பவர்கள் கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருட்டு என சொல்லக்கூடிய வகையை சேர்ந்தவர்கள். செம்மொழி எனும் தகுதி எந்த ஒரு மொழிக்கும் இந்த உலகில் இடம் இல்லை, தமிழை தவிர. ஒரு செம்மொழி என அதற்கு பழமையானது, தனித்துவம் பெற்று தனக்கே உரிய மரபு கொண்டது, பழமையான இலக்கியங்கள் கொண்டது என பல காரணிகள் பார்க்கும்போது தமிழ் ஒன்றே அதற்கு தகுதியானது ஆகும்.

இதை எல்லாம் உங்களிடம் சொல்வதற்கு நான் மிகவும் விந்தையாக, அதிசயமாக உணர்கிறேன். ஏனெனில் இந்தியா மாபெரும் தேசம், இந்து மதம் உலகின் மிக சிறந்த மதம் என எவரும் சொல்லியா தெரிய வேண்டும். தமிழ் மொழி பற்றி தெரிந்தவர்கள் ஒருபோதும் தமிழ் செம்மொழி என்பதை மறுக்க மாட்டார்கள்.

வாழ்க தமிழ்.

-------------

இப்படி பேசிய ஜார்ஜ் ஹார்ட் அவர்களிடம் இதை எல்லாம் ஆங்கிலத்தில் சொன்ன நீங்கள் தமிழில் பேசி இருக்கலாமே என்று கேட்க தோணியது. தமிழர்களே தமிழில் பேச, எழுத தயங்கும்போது ஆங்கிலேயன் நான் ஆங்கிலத்தில் பேசுவது தவறு என எப்படி சொல்ல முடியும் என கேட்டாலும் கேட்பார் என நினைக்க வேண்டியதானது, அதோடு மட்டுமில்லாமல் இப்படி பழமை வாய்ந்த தொன்மையான மொழி பலரும் பேசும், எழுதும் மொழியாக வளர்ச்சி அடையாமல் போனதற்கு தமிழர்களின் குறுகிய மனப்பான்மை என்று சொல்ல இயலுமோ? திரை கடலோடி திரவியம் தேடு என்று சொன்னார்களே தவிர திரைகடலோடி தமிழ் மொழி பரப்பு என சொல்ல மறந்துவிட்டார்கள். எனது சந்ததிகள் தமிழ் தெரியாத சந்ததிகளாக உருவாகும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்பதை நினைக்கும் போதே தமிழ் செம்மொழி என சொன்னாலும் தமிழ் தமிழ் என சொல்ல எனக்கு என்ன அருகதை இருக்கிறது?

மேலும் பிற மொழிகளை தன்னில் கலக்கவிட்டு தனது நிறம் தொலைத்த தமிழ் மொழி குறித்து என்ன சொல்ல முடியும்? மொழிகளில் தாய் இன்னும் தொடரும்.