Sunday, 8 January 2012

மொழிகளில் தாய் - தமிழா, சமஸ்கிருதமா? - 2

வணக்கம் தமிழ் நெஞ்சங்களே, நான் ஜார்ஜ் ஹார்ட் பேசுகிறேன். என்னைப் பற்றி ஒரு சிறிய அறிமுகம் தருகிறேன்.

நான் ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் சம்ஸ்கிருத மொழியில் பட்டம் பெற்றேன். நான் முதன் முதலாக சம்ஸ்கிருத பேராசிரியராக விஸ்கான்சின் பல்கலைகழகத்தில் பணியாற்றினேன். பின்னர் கலிபோர்னியா பல்கலைகழகத்தில்  ஆண்டு முதல் நான் தமிழ் பேராசிரியாராக பணிபுரிந்து வருகிறேன். அதோடு மட்டுமில்லாமல் தமிழ் தலைமைபீடத்தின் பொறுப்பாளராக அந்த பல்கலைகழகத்தில் இருந்து வருகிறேன்.

எனக்கு ஆங்கிலம், தமிழ், சமஸ்கிருதம் மட்டுமல்லாது தொன்மை வாய்ந்த லத்தீன், கிரேக்கம் போன்றவைகள் நன்றாக தெரியும், அந்த மொழிகளில் எழுதபட்டிருக்கும் இலக்கியங்களை அதன் மூல மொழியில் நன்றாக அலசி ஆராய்ந்து இருக்கிறேன். இது தவிர ஐரோப்பா மொழிகளில் ரஷ்யா, ஜெர்மன், பிரெஞ்ச் போன்ற மொழிகளில் படித்து இருக்கிறேன். அதோடு மட்டுமில்லாமல் தமிழ், சமஸ்கிருதம் மற்றும் மலையாளம் அல்லாத இந்திய மொழிகளில் உள்ள இலக்கியங்களை மொழிபெயர்ப்பில் படித்து இருக்கிறேன். தெலுங்கு மொழியில் உள்ள இலக்கியங்கள் குறித்து அதிகம் தெலுங்கில் புலமை பெற்ற நாராயண ராவ் அவர்களிடம் விவாதம் செய்து இருக்கிறேன். இந்தி இலக்கியங்களை அதிகம் படித்து இருக்கிறேன், குறிப்பாக மகாதேவி வர்மா, துளசி மற்றும் கபீர் போன்றவர்களின் படைப்பை வாசித்து இருக்கிறேன்.

எனது மொத்த வாழ்நாள் காலங்களை சமஸ்கிருதம் படிப்பதில் அதிகமாக செலவழித்து இருக்கிறேன். காளிதாசர், மகா, பைரவி, ஹர்சா, ரிக் வேதங்கள், உபநிடதங்கள், மகாபாரதம், கதாசரிதசாகரா, ஆதிசங்கரரின் எழுத்துகள் என எல்லாம் சமஸ்கிருதத்தில் படித்து இருக்கிறேன். இதை எல்லாம் நான் சொல்வதற்கு காரணம் என்னவெனில் எனது பல மொழிகளின் புலமையை வெளிப்படுத்த அல்ல, தமிழ் செம்மொழி என்பதை சொல்வதற்கு நான் தகுதியானவன் என்பதை உங்களுக்கு சுட்டிக்காட்டவே இதை சொல்கிறேன்.

பாரதியார் குறிப்பிடுவதை போல 'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்' என்பது நூற்றுக்கு நூறு உண்மை. அதே வாக்கியங்களை சொல்வதற்கு எனக்கும் அருகதை இருப்பதாக கருதுகிறேன். எந்த ஒரு அடிப்படை காரணம் எடுத்தாலும், தமிழ் மொழி மிகவும் தொன்மையான, மரபு சார்ந்த ஒரு அழகிய மொழி என்பதை ஆணித்தரமாக என்னால் அடித்து சொல்ல முடியும்.

இதற்கான காரணங்கள் பல உண்டு எனினும் நான்கு காரணங்கள் மட்டும் குறிப்பிட விழைகிறேன். முதலில் தமிழ் தொன்று தொட்டு பேசப்பட்டு வரும் மொழியாகும். குறிப்பாக தொல்காப்பியம் தனை சொல்லலாம். பிற இந்திய மொழிகளில் உள்ள இலக்கியங்களை விட தமிழ் இலக்கியங்கள் ஆயிரம் வருடங்கள் பழமை வாய்ந்தது. மிகவும் பழமை வாய்ந்த சங்கம் வளர்த்த தொகை நூல்கள் பல. தமிழில் பத்துப்பாட்டு போன்ற கவிதை இலக்கியங்கள் காளிதாசரின் எழுத்துகளை விட குறைந்தது இரு நூறு வருடங்கள் முன்னர் இருந்தது ஆகும்.

இரண்டாவதாக தமிழ் மொழி மட்டுமே சமஸ்கிருதத்தில் இருந்து எந்த ஒரு கலாச்சாரத்தையும் தன்னில் எடுத்த செல்லாத மொழியாகும். சமஸ்கிருதத்தின் ஆதிக்கம் வருவதற்கு முன்னரே தமிழ் தன்னில் ஒரு பெரிய இலக்கியத்தை தன்னளவில் படைத்து வளர்த்து கொண்டிருந்தது அதோடு மட்டுமில்லாமல் தமிழ் மொழி மட்டுமே பிற இந்திய மொழிகளில் இருந்து தனித்தன்மை பெற்று இருந்தது. தமிழின் சொந்த இலக்கணங்கள், கவிதை விதிமுறைகள், அழகியல் கோட்பாடு என தமிழ் தனித்துவம் பெற்று விளங்கியதை எவரும் மறுக்க இயலாது. மிகவும் பழைய, மிகவும் பெரிய பாரம்பரியத்தை தமிழ் பெற்று இருந்தது என்பதே சமஸ்கிருதத்தில் இருந்து தமிழ் தனித்து இருந்தது எனலாம்.

மூன்றாவதாக தமிழ் இலக்கியங்களில் தரமானது பத்தரை மாத்து தங்கமானது. இதுவே தமிழ் இலக்கியங்களை பிற மொழிகளின் இலக்கியங்கள், சமஸ்கிருதம், கிரேக்கம், லத்தீன், சைனீஸ், பெர்சியன், அராபிக், இருந்து வேறுபடுத்தி காட்டி கொண்டிருந்தது. திருக்குறள் பற்றி நான் சொல்லித்தான் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டுமா? ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல பல தரம், திறம் வாய்ந்த இலக்கியங்கள் கொண்ட தமிழ் மொழிக்கு அழகு சேர்ப்பது திருக்குறள். இந்த தமிழ் இலக்கியம் எல்லாவிதமான மனித இருப்புதனை பட்டைதீட்டி கூர் பார்த்துவிட்டது எனலாம், மனித இருப்புதனை தொடாத இடமே இல்லை என சொல்லலாம்.

இறுதியாக தமிழ் மொழிதான் இந்திய மொழிகளின் மூல காரணி என்பதை குறித்து நிறையவே எழுதி இருக்கிறேன். தென்னிந்திய கலாச்சாரம் எப்படியெல்லாம் சமஸ்கிருதத்தை பாதித்து உள்ளது என்பது சம்ஸ்கிருத இலக்கியங்களில் தென்படும். தமிழ் இந்து மத கோட்பாடுகள், சங்க தொகை நூல்கள், எல்லாமே பகவத் புராணம் போன்றவைகள் மட்டுமல்ல, கன்னடம், பிற மொழி இலக்கியங்களில் கையாளப்பட்டு இருக்கிறது. தமிழ் மொழியின் புனித தன்மையால் அவை வேதங்களுக்கு நிகரானவை, அதன் காரணமாகவே திருப்பதி போன்ற பெரிய தலங்கள் முதற்கொண்டு பல தென்னிந்திய தலங்களில் வேந்தங்களுக்கு நிகராக தமிழ் மொழி ஓதப்பட்டு வருகிறது. எப்படி சமஸ்கிருதம் இந்திய-ஆரியர்களின் மூல மொழியாக இருக்கிறதோ அதைப்போல தமிழ் மொழி பல தென்னிந்திய மொழிகளின் மூலம் என சொல்லலாம்.

தமிழை செம்மொழி இல்லை என மறுப்பவர்கள் கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருட்டு என சொல்லக்கூடிய வகையை சேர்ந்தவர்கள். செம்மொழி எனும் தகுதி எந்த ஒரு மொழிக்கும் இந்த உலகில் இடம் இல்லை, தமிழை தவிர. ஒரு செம்மொழி என அதற்கு பழமையானது, தனித்துவம் பெற்று தனக்கே உரிய மரபு கொண்டது, பழமையான இலக்கியங்கள் கொண்டது என பல காரணிகள் பார்க்கும்போது தமிழ் ஒன்றே அதற்கு தகுதியானது ஆகும்.

இதை எல்லாம் உங்களிடம் சொல்வதற்கு நான் மிகவும் விந்தையாக, அதிசயமாக உணர்கிறேன். ஏனெனில் இந்தியா மாபெரும் தேசம், இந்து மதம் உலகின் மிக சிறந்த மதம் என எவரும் சொல்லியா தெரிய வேண்டும். தமிழ் மொழி பற்றி தெரிந்தவர்கள் ஒருபோதும் தமிழ் செம்மொழி என்பதை மறுக்க மாட்டார்கள்.

வாழ்க தமிழ்.

-------------

இப்படி பேசிய ஜார்ஜ் ஹார்ட் அவர்களிடம் இதை எல்லாம் ஆங்கிலத்தில் சொன்ன நீங்கள் தமிழில் பேசி இருக்கலாமே என்று கேட்க தோணியது. தமிழர்களே தமிழில் பேச, எழுத தயங்கும்போது ஆங்கிலேயன் நான் ஆங்கிலத்தில் பேசுவது தவறு என எப்படி சொல்ல முடியும் என கேட்டாலும் கேட்பார் என நினைக்க வேண்டியதானது, அதோடு மட்டுமில்லாமல் இப்படி பழமை வாய்ந்த தொன்மையான மொழி பலரும் பேசும், எழுதும் மொழியாக வளர்ச்சி அடையாமல் போனதற்கு தமிழர்களின் குறுகிய மனப்பான்மை என்று சொல்ல இயலுமோ? திரை கடலோடி திரவியம் தேடு என்று சொன்னார்களே தவிர திரைகடலோடி தமிழ் மொழி பரப்பு என சொல்ல மறந்துவிட்டார்கள். எனது சந்ததிகள் தமிழ் தெரியாத சந்ததிகளாக உருவாகும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்பதை நினைக்கும் போதே தமிழ் செம்மொழி என சொன்னாலும் தமிழ் தமிழ் என சொல்ல எனக்கு என்ன அருகதை இருக்கிறது?

மேலும் பிற மொழிகளை தன்னில் கலக்கவிட்டு தனது நிறம் தொலைத்த தமிழ் மொழி குறித்து என்ன சொல்ல முடியும்? மொழிகளில் தாய் இன்னும் தொடரும். 

Thursday, 5 January 2012

மொழிகளில் தாய் - தமிழா, சமஸ்கிருதமா? - 1

அனைத்து மொழிகளின் தாய் தந்தை என எல்லாமே தமிழ் தான் என வாதிடுவோர் உண்டு. இது குறித்து பல இடங்களில் விவாதங்கள் நடந்தது கண்டது உண்டு. சமஸ்கிருதத்தை தேவ பாஷை என குறிப்பிடுகிறார்கள். இது குறித்து தமிழ் உணர்வாளர்கள் வெகுண்டு எழுவது உண்டு. மேலும் சமஸ்கிருதத்தில் உள்ள மந்திரங்கள் பல இழிவானவை என கருதுபவர்கள் உண்டு. இப்படி பல விசயங்களை அடிப்படையாக கொண்ட மொழியின் மூலம் பிரிவினைகள், கருத்து வேறுபாடுகள் எல்லாம் தவிர்க்க முடியாதவை என இந்த காலகட்டத்தில் ஆகிப்போனது.

இது குறித்து பார்க்கும்போது லெவிட் எனும் அமெரிக்கரும், கு. அரசேந்திரன் தனது புத்தகத்திலும் தமிழே தொன்மையான மொழி என குறிப்பிட்டு உள்ளதாக கூறுகிறார்கள். தமிழ் மீது பற்று கொண்ட ஜார்ஜ் ஹார்ட் தமிழே தொன்மையானது என பல கருத்துகளை குறிப்பிட்டு வாதிடுகிறார்.

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி தமிழ் குடி என சொல்வது மிகவும் மிகைப்படுத்தக்கூடிய செயலாகத்தான் தெரிகிறது, இல்லையோ? இருப்பினும் இது குறித்து பலரது கருத்துகளை பார்ப்போம்.

முதலில் ஜார்ஜ் ஹார்ட் என்ன சொல்கிறார் எனில்... தொடரும். 

Wednesday, 4 January 2012

ஜீரோ எழுத்து - 2

ஒரு வட்டம் போடும் போது ஒரு புள்ளி வைத்து தொடங்குவோம், அப்படியே அந்த புள்ளியினை கோடாக்கி மீண்டும் அந்த புள்ளியில் சேர்க்கும் போது வட்டம் உருவாகிவிடும். அப்படியெனில் புள்ளி தான் தொடக்கம், அந்த புள்ளி தொடக்கம் எனினும் புள்ளியில் இருந்து தொடங்கிய கோடு மீண்டும் புள்ளியை தொடும்போது எது தொடக்கம், எது முடிவு என்பது பின்வரும் நாளில் வரைந்தவருக்கே மறந்து போய்விடும்.

இது எந்த ஒரு மூடப்பட்ட சூழலுக்கும் பொருந்தும், சதுரம், செவ்வகம், முக்கோணம் என எந்த ஒரு வடிவத்தை எடுத்தாலும் தொடக்கம் எது, முடிவு எது என அறிவது மிகவும் கடினம், ஆனால் தொடக்கமும் முடிவும் அந்த கோடுக்குள் தான் இருக்கும் என்பது மிக மிக தெளிவு. அதே வேளையில் தொடங்கும் இடத்தில் ஒரு வண்ணத்தை வைத்து ஆரம்பித்துவிட்டு இப்பொழுது கோடு வரைவோம், மீண்டும் வண்ணம் இடத்திற்கே வருவோம், இப்பொழுது தொடக்கம் வரைந்தவருக்கு தெரிந்துவிடும். ஆனால் இதை புதிதாக பார்ப்பவர்க்கு தொடக்கத்திற்காக இடப்பட்ட வண்ண புள்ளியா, அல்லது முடிவுக்காக இடப்பட்ட வண்ண புள்ளியா என்பது புரியாது.

ஒரு வட்டம் போடத்தான் ஒரு புள்ளியை வைத்து தொடங்க வேண்டும். அதனால் வட்டத்தில் புள்ளி தொடக்கம் எது எனும் தேடல் அவசியமாகலாம், ஆனால் புள்ளியே வட்டமாக விரிவடைந்தால் அந்த புள்ளிதான் தொடக்கமும், எல்லாமும். இந்த பிரபஞ்சமும் அப்படித்தான் என்கிறது அறிவியல். இப்பொழுது இந்த புள்ளி இருக்க ஒரு இடம் இருக்க வேண்டும், காலம் இருக்க வேண்டும், நேரம் இருக்க வேண்டும், எல்லாம் இருக்க வேண்டும். ஆனால் இதற்கு முன்னர் அப்படி ஒரு நிலை இல்லை எனும் கூற்று  அத்தனை எளிதாக ஏற்று கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால் அப்படித்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என வேதங்களும் சொல்கிறது, அறிவியலும் சொல்கிறது. வேதங்களும், அறிவியலும் சொல்கிறது என்பதற்காக சமரசம் செய்து கொள்ள வேண்டுமென்பது அவசியமில்லை. இருக்கின்ற தன்மை கொண்டு இல்லாத தன்மையை சிந்திக்கும்போது இது போன்ற நிகழ்வுகள் வாடிக்கை.

இப்பொழுது புள்ளி விரிவடைந்து கொண்டே செல்லும்போது ஒரு வெறுமை, எதுவுமற்ற தன்மை புள்ளிக்குள், அதாவது வட்டத்திற்குள், உருவாவது போன்ற தோற்றம் நமக்கு தெரியும். ஆனால் உண்மை அதுவல்ல, அந்த வட்டத்திற்குள் புலப்படாத விசயங்கள் இருக்கின்றது என்பதுதான் நமக்கு புரிந்து கொள்ள வேண்டிய அறிவு. இறைவனை பற்றி அல்லது ஒன்றை பற்றி சதா எந்நேரமும் சிந்தித்து  கொண்டிருக்கும் ஒருவரும் சரி, ஒரு கணத்தில் மட்டுமே இறைவனை அல்லது ஒன்றை பற்றி சிந்திக்கும் நிலையிலும் சரி அதற்குரிய சிந்தனை மிகவும் முக்கியத்துவம் ஆகிறது.

இறைவன் எங்குமே இல்லை என சொல்லும்போதே அந்த வார்த்தையில், வாக்கியத்தில் இறைவன் இருப்பதாகவே அர்த்தம் காட்டப்படும். இல்லாத ஒன்றை பற்றி எதற்கு எவரும் பேச வேண்டும்? அதோ அந்த இடத்தில் ஏதோ சத்தம் வருகிறது, என்னவென பார்த்து வருகிறாயா என எவரையேனும் அனுப்பி அவரை அந்த இடத்தை பார்த்து வர சொன்னால், அங்கே ஒன்றுமே இல்லை என அவர் சொல்வதன் மூலம் என்ன அர்த்தம் நமது மனதில் ஓடும் என்பது பொறுத்தே இந்த பிரபஞ்சத்திற்கான விடை இருக்கிறது.

நிறைய சிந்தனைவாதிகளை இந்த உலகம் தந்து இருக்கிறது. ஒவ்வொருவரின் சிந்தனைகளும் மிகவும் நேசிப்புக்கு உரியவையாக இருக்கின்றன.  இறைவன் நம்பிக்கை சரி, இறைவன் அற்ற நம்பிக்கை சரி, எந்த விசயம் எனினும் அது குறித்து திறம் படவே சிந்தித்து இருக்கிறார்கள். இருப்பினும் உலகம் எப்படி உருவானது என்பதற்கு இது விடை தெரியாத கேள்வி என்றே ஒதுங்கி கொள்கிறார்கள், இன்றல்ல, பல காலம் முன்னர் எழுதப்பட்ட ரிக் வேதம் கூட அதைத்தான் சொல்கிறது.

ரிக் வேதம் : 10 .129 (மொழி பெயர்ப்பு: ராதாகிருஷ்ணன்; தவறுகளுக்கும், தவறுதலான கருத்துக்கும் நானே பொறுப்பு; ரிக் வேதம் எழுதியவர் அல்ல) 


இருப்பு நிலையும், இல்லாத நிலையும் இல்லாதிருந்தது. காற்றின் ஆட்சியும் இல்லை, அதைத் தாண்டிய ஆகாயமும் இல்லை. என்ன, எங்கே மறைத்து இருந்தது? யார் அடைக்கலம் கொடுத்தது? தண்ணீர் இருந்ததோ? எந்த ஆழத்தில் இருந்ததோ?


இறப்பு நிலையும் இல்லை, இறவா நிலையும் இல்லை. எந்த ஒரு அறிகுறியும் இல்லை, இரவென்றும், பகலென்றும் பிரித்துணர. ஒன்றே ஒன்று சுவாசமற்ற தன்மையில் அதனின் தன்மையில் சுவாசித்து கொண்டிருந்தது, அதைத்தவிர வேறு ஒன்றுமே இல்லை. 


இருள் இருந்தது. அந்த இருளில் ஒழுங்கின்மையுடன் எல்லாம் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது. ஒரு வெற்றிடமாய் மட்டுமே எந்த ஒரு தன்மையும் இன்றி இருந்தது. அந்த ஒரு நிலையிலே மிகப்பெரிய அன்பு நிறைந்த சக்தி/ஆற்றல் ஒரு தொகுதியாய் உருவானது. 


அந்த அன்பு நிறைந்த ஆற்றலில் ஒரு ஆசை பிறந்தது. அந்த ஆசைதான் முக்கிய காரணங்களில் மூல விதை. முனிவர்கள் இதயப்பூர்வமாக இதை தேடியபோது கண்டு கொண்டார்கள். இருக்கும் தன்மையின் உறவு இல்லாத தன்மையில் இருந்தது என. 


அந்த நிலையானது குறுக்கே விரிவடைந்தது, அதற்கு மேலே என்ன இருக்கிறது, கீழே என்ன இருக்கிறது? உற்பத்தி திறன் இருந்தது, எல்லையில்லா சக்தி இருந்தது, சுதந்திரமான ஆக்கமும், ஆற்றலும் உலவியது


யாருக்கு முழுமையாக தெரியும், யார் அதை பிரகடனப்படுத்துவது, எப்பொழுது பிறந்தது, எப்பொழுது உற்பத்தியானது? கடவுளர்கள் எல்லாம் இந்த உற்பத்திக்கு பின்னே உருவானார்கள்? யாருக்கு தெரியும் முதன் முதலில் இங்கு எப்படி இயக்கத்திற்கு வந்தது என. 


அவனே, இந்த உற்பத்திக்கு முதலானவன், அவன் உருவாக்கினானா, இல்லை உருவாக்கவில்லையா, இந்த உலகத்தை சுவர்க்கத்தில் இருந்து பார்த்து கொண்டிருப்பவன், அவனுக்கு எல்லாம் தெரிந்திருக்கும், ஒருவேளை தெரியாமலே இருக்க கூடும். 

இப்பொழுது இந்த வாசகங்கள் எல்லாம் (தமிழ் படுத்தும் பாடு!) படிக்கும்போது மனிதர்களின் சிந்தனை எப்படி உலகம் உருவாகி இருக்கும் என்பது குறித்து அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அக்னி, வாயு, காயத்ரி, இந்திரன், சோமன் போன்ற கடவுள்கள் எல்லாம் பிற்பாடே தோன்றி இருக்கிறார்கள் எனும் தெளிவு அன்றே இருந்து இருக்கிறது. இந்த உற்பத்தியை கண்காணிப்பவனுக்கு கூட  ஒரு வேளை தெரியாது என்று எழுதி இருப்பதுதான் விசேசம். ஏனெனில் அத்தனை குழப்ப நிலையில் அன்றே மனிதர்கள் இருந்து இருக்கிறார்கள், இன்றும் இருக்கிறார்கள். அவர்களுக்கு நிச்சயம் இறைவன் பற்றிய சிந்தனை குறித்து ஒரு தெளிவே இல்லாமல் தான் இருந்து இருக்கிறது. அதிலும் இருக்கும் தன்மையின் உறவு இல்லாத தன்மையில் இருந்தது என்பது கூட அறிவுக்கு எட்டாத ஒரு விசயம் என்பதால் மட்டுமே அப்படி எழுதி வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த ரிக் வேதத்தில் எழுதியதைத்தான் அறிவியலும் குறிப்பிட்டு வருகிறது, ஒரு வேளை காலப்போக்கில்  மாறக்கூடும்.  ஆனால் இந்த வரி ஒன்றே ஒன்று சுவாசமற்ற தன்மையில் அதனின் தன்மையில் சுவாசித்து கொண்டிருந்தது, மிகவும் யோசிக்க வைத்தது. ஒன்றுமே இல்லாமல் எதுவுமே உருவாகி இருக்க முடியவே முடியாது. உற்பத்தி நிலை குறித்து சிவவாக்கியர் எனும் சித்தர் குறிப்பிடும்போது

அண்ணலே அநாதியே அநாதிமுன் அநாதியே
பெண்ணும் ஆணும் ஒன்றலோ பிறப்பதற்கு முன்னெலாம்
கண்ணிலாநீர் சுக்கிலம் சுருதிஓங்கும் நாளிலே
மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாறு எங்ஙனே?

இப்படி கேள்வி மேல் கேள்வி கேட்டு பதில் ஒண்ணுமில்லை என சொன்னால் எப்படி? பதிலே இல்லாத கேள்வி இந்த பாரினில் இருக்கத்தான் முடியுமா? இந்த ஒரு கேள்விக்கு ஆன்மிகம் தேடி கண்டுபிடித்த விடை 'இறைவன்'. அறிவியல் தற்போதைக்கு  தேடிக் கொண்டு இருக்கும் விடை 'கடவுளின் துகள்'

ஒண்ணுமே இல்லாமல் தான் உயிரினங்கள் வந்ததா? அப்படி அதில் ஜீரோ சாதித்தது என்ன?

(தொடரும்)