Monday, 2 January 2012

என் பதிவு திருடு போச்சே!

உங்க பதிவு ஒன்னு திருடு போச்சு, கவனிச்சீங்களா?

எப்பவோ சொல்லிட்டேனே, என் பதிவுகளை தாராளமாக திருடுங்கள் அப்படினுட்டு, அது சரி இந்த திருட்டை எங்க போய் எப்படி கவனிக்கிறது?

இந்த பதிவு நீங்க எழுதினதா அல்லது நீங்க திருடி எழுதினதா? 

எந்த பதிவு?


ஆமாம், நான் எழுதினதுதான். 

எப்படி நம்புறது, இதை கருப்புரோஜாக்கள் ராஜேஷ், தான் எழுதினது போல அவரோட வலைப்பூவில் எழுதி வெளியிட்டு தேன்கூடு அப்படிங்கிற ஒரு திரட்டியில இணைச்சி இருக்காரு, யுடான்ஸ் ல இணைச்சி இருக்கார். 

நான் எழுதின தேதி நவம்பர் 3, 2011. அவர் வெளியிட்ட தேதி நவம்பர் 18, 2011. தலைப்பை கூட மாத்தாம அப்படியே வெளியிட்டு இருக்கார். அழகான ஒரு படம் போட்டு இருக்கார். அந்த படம் தான்  வித்தியாசம். 

உங்களுக்கு கோவம் வரலையா?
எதுக்கு கோவம் வரனும்? அவருக்கு பிடிச்ச பதிவுகளை சேகரிச்சிட்டு வரார். என்னமோ போங்க, அடுத்தவங்க எழுதினதை தன்னோடது போல காட்டுறது அவருக்கு ஒரு சந்தோசம். இதுமாதிரி ரொம்ப பேரு பிடிச்ச பதிவுகளை தங்களோட பதிவு போல காப்பி பண்ணி பேஸ்ட் பண்றது ரொம்பவே சகஜம் தானே. சினிமா செய்திகள், செய்திகள் அப்படின்னு விசயங்களை பிற தளங்களில் இருந்து பகிர்ந்து கொள்வது தவறில்லைதான், ஆனா ஒரு நன்றி அப்படின்னு போட்டுட்டா குறைஞ்சிறவா போறாங்க. இப்படித்தான் கிராம வளர்ச்சி அப்படின்னு ஒரு சிறுகதை எழுதி தட்ஸ்தமிழ் இணையத்துக்கு அனுப்பினேன், அவங்க அந்த கதையை வெளியிட்டாங்க. அட பரவாயில்லையே அப்படின்னு நினைச்சு தேடுனப்ப ரெண்டு மூணு இணையத்தில வெளியிட்டு இருந்தாங்க, என்னோட பெயரோட. பரவாயில்லையேன்னு நினைச்சிகிட்டேன். அந்த கதை இந்த வலைதளத்தில இல்லை, அதை வேகமா இணைச்சிருறேன். 

உங்களை மாதிரி இருக்கறவங்க இப்படி பதிவுகளை திருடி வெளியிடுறவங்களை  ஊக்குவிக்கிறீங்கதானே! அவங்களுக்கு பிடிச்சி இருந்தா ஒரு இணைப்பு தந்தா போதாதா, அல்லது நன்றி சொல்லி போட்டா ஆகாதா! அவருக்கு மின்னஞ்சல் அனுப்பலையா?

நிச்சயமா நான் அவங்களை ஆதரிக்கவில்லை. எனக்கு என்னமோ இப்படி எழுதி என்னத்தை பெரிசா சாதிச்சி பேரு வாங்க போறோம், பொழுது போக்கு, ஆத்ம திருப்தி அப்படி இப்படின்னு எதோ தமிழ் தெரியும் அப்படிங்கிறதுக்காக எழுதிட்டு வரோம், அப்படிங்கிற நினைப்பு மட்டும் தான். இஷ்டபட்டா அவங்க பதிவா போட்டுட்டு போகட்டும், என்ன பண்றது. தப்பு அப்படின்னு தெரிஞ்சே செய்றவங்களுக்கு என்ன தண்டனை தந்தா திருந்துவாங்க? சொல்லுங்க. எதுக்கு மின்னஞ்சல்? பிறர் பொருள் கள்வர்களுடன் என்ன பழக்கம் வேண்டி இருக்கிறது? 

உங்க வீட்டை என்னோட வீடு அப்படின்னு ஒருத்தர் சொன்னா, உங்க பொருளை என்னோட பொருள் அப்படின்னு மத்தவங்க சொன்னா சண்டைக்கு போக மாட்டீங்களா?. 

ஹூம், எது எதுக்கோ முடிச்சி போடறீங்க. நிச்சயம் சண்டைக்கு போகமாட்டேன், காவல் துறையில புகார் கொடுத்துட்டு என் வேலைய நான் பாத்துட்டு இருப்பேன். இப்போ நான் எழுதினதை எல்லாம் எடுத்து ஒரு புத்தகமா போட்டு அது மூலம் ஒருத்தர் லாபம் அடைஞ்சா எனக்கு எந்த வருத்தமும் வரப்போறதில்லை. என்னோட பெயர் இல்லாம போனாலும். 

பாரதியார், திருவள்ளுவர், கம்பர் இவங்க எல்லாம் புகழ், பெயர் வேணுமின்னு எழுதின மாதிரி எனக்கு தெரியலை. இந்த எழுத்து மூலம் நான் ஒருபோதும் புகழோ பெயரோ தேடிக்கிற போறதில்லை.  நினைச்சதை எழுதுவேன், புத்தகம் வெளியிடுவேன், அது குழந்தைகால கனவு. எல்லாருக்கும் தங்களோட கனவுகளை நனவாக்குற வாய்ப்பு கிடைக்கிறது இல்லை, அதனால புத்தகமா வெளியிட ஆசைப்படறவங்க எழுத்தை புத்தகமா வெளியிடற எண்ணம் எல்லாம் இருக்கு, காலம் கனியட்டும். 

நீங்க இனிமே எதைப்பத்தி எழுதப்போறீங்க? புது வருட புதிய கொள்கைகள்?

என்னது நீங்க திருந்திடீங்களா அப்படின்னு யாரும் என்னை கேட்ககூடாது. அப்படியேதான் இருக்கும் என் எழுத்து. மீண்டும் உறுதி அளிக்கிறேன், என் பதிவுகளை தாராளமாக திருடுங்கள், தயவு செய்து பிறர் பதிவுகளை திருடி எனது பெயர் பொறித்துவிடாதீர்கள், அது போதும். 

Saturday, 31 December 2011

புதிதாக என்ன இருக்கிறது?

இன்றைய புதியவகைகள் நாளைய பழையவகைகள் ஆகின்றன. நேற்றைய புதியவைகள் இன்றைய பழையவைகள் ஆகின்றன. புதியவைகள் புதியவைகளாக என்றுமே இருப்பதில்லை. இருந்தும் புதியவகைகள் தரும் மோகத்திற்கு குறைவும் இல்லை.

புதிதாக வாங்கிய ஒன்று தொலைந்து போயிருந்தது. அதை தேடி கண்டெடுக்கும்போது அது பழையவையாக மாறியிருக்க கூடும். புதியவகைளை போற்றி பாதுகாக்க செய்யும் முயற்சியை போல பழையவைகளை போற்றி பாதுகாக்க மனம் முயல்வதில்லை. பழையதுதானே எனும் அலட்சியம் பரவலாகவே ஏற்படுவது உண்டு.

பழையவைகள் தம்மை புதியவைகளாக மாற்றி வலம் வருவதுண்டு.  இருப்பினும் தம்மிடம் இருக்கும் பழமையை முற்றிலும் அவை துறப்பது இல்லை. தாம் பழையவைகள் ஆகிவிடுவோம் என்கிற கவலை கொஞ்சமும் இல்லாமல், எண்ணற்ற புதியவைகள் ஒவ்வொரு நாளும் வந்து கொண்டே இருக்கின்றன.

புதிய சிந்தனைகள் எல்லாம் பழையவற்றில் இருந்தே தோன்றி அந்த புதிய சிந்தனைகள் மீண்டும் பழைய சிந்தனைகள் ஆகின்றன. சிந்தனையற்ற நிலையில் மனம் லயித்து கொண்டிருப்பது என்பது ஒரு கடினமான பயிற்சியாகவே இருக்க கூடும். தியானத்தில் கூட, உறக்கத்தில் கூட ஏதாவது ஒரு சிந்தனையில் மனம் ஓடிக்கொண்டே இருக்கிறது. அதைப் பிடித்து உட்காரவைக்கும் திறன் எவர் கொண்டு இருப்பாரோ?

ஆதியும் அந்தமும் இல்லாத அனைத்திலும் நிரம்பிய இறைவன் மிக மிக பழையது. புதிதாய் தோன்றும் மனிதர்களால் இறைவன் புதுப்பிக்கப்பட்டு கொண்டே இருக்கிறான் அல்லது இறைவனை  புதுப்பிக்க புதிய புதிய விசயங்கள் மனிதர்களால் படைக்கப்பட்டு கொண்டே இருக்கின்றன.

நிறைக்கும் எடைக்கும் வித்தியாசம் உண்டு. மாற்றமில்லா நிறை இந்த பிரபஞ்சத்தில் எங்கும் ஒரே நிலையில் இருக்கும். அதே மாற்றமில்லா நிறையின் எடை கிரகத்துக்கு கிரகம் மாறும். இருக்கின்ற எல்லாமே பழையது. அதில் வந்து அமரும் சிந்தனை, சிந்தனையின் செயல் வடிவம் புதியது.

ஒரு பொருளுக்கு நிறை வந்தது எப்படி எனும் தேடல் புதியது. நிறை என்பது எந்த ஒரு பொருளுக்கும் பழையது. பொருளின் வஸ்து அளவை நிறையை கொண்டே கணிக்கப்படுகிறது. அந்த பொருளில் எத்தனை அணுக்கள் இருக்கின்றன, மூலக்கூறுகள் இருக்கின்றன என்பது மூலமும் எத்தனை சக்தியால் பின்னப்பட்டு இருக்கிறது என வஸ்துவின் அளவை கணிக்கிறார்கள்.

ஒரு பொருளின் சடத்துவதிணிவு என்பது ஒரு விசையை அந்த பொருளின் மீது செலுத்தும்போது அந்த பொருளானது தனது இடப்பெயர்ச்சியை எதிர்க்கும் சக்தியை பெற்று இருப்பதை பொறுத்தே அளக்கப்படுகிறது. ஈர்ப்பு பொருண்மை பொறுத்து பொருளின் வேகம் மாறுபடும். இதுபோன்று ஆங்கிலத்தில் சொல்லப்பட்ட விசயங்கள் பழையது. அதை தமிழில் மொழிபெயர்த்து சொன்னால் தமிழுக்கு புதியது.

இந்த கவிதை புதியது, அதில் இருக்கும் எழுத்துகள் பழையது.

புதிய ஆண்டுதான்
புதிய எண்கள்தான்
நாம் ஏனோ
பழையது போன்றே இருக்கிறோம்.

ஆசையுடன் வாங்கினேன்
புதிய ஆடை, புத்தாண்டு
என்னிடம் இருந்த
பழைய ஆடையும் புதிதானது
இல்லாதவன்
உடுத்தி கொண்டதால்.

பழையவைகள் எல்லாம் பொக்கிசங்கள்
பெருமிதமாய் சொல்லி வைத்தார்
பழையன கழிதல் என்றே
பொக்கிசங்கள் தொலைந்து போயின.

புதியது பழையது
எல்லாம் மனது
சொல்லி சிரித்தார்
அவரிடமே கேட்டேன்
இனி புதிதாக என்ன இருக்கிறது?


இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
   (மொழி வாரியாக, இனம் வாரியாக, நாடு வாரியாக புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருவது புதிதான பழையது)

Wednesday, 28 December 2011

மயக்கம் என்ன வியக்கும் வண்ணம்

சார், எதற்கு ஒரு மாதிரி இருக்கீங்க?

வாழ்க்கையே வெறுத்து போச்சுயா, எதுக்கு இந்த உசிரை பிடிச்சி இருக்கணும்னு தோணுது.

சார், எதுக்கும் ஒரு கல்யாணம் பண்ணிகிட்டீங்கன்னா உங்க பொண்டாட்டி உங்களை பெரிய லெவலுக்கு கொண்டு போயிருவாங்க, இப்படி விரக்தியா எல்லாம் பேசமாட்டீங்க.

வெங்காயம், அவளால் தான் நான் இந்த நிலைமைக்கு வந்து உட்காந்துருக்கேன், கல்யாணமாம் கல்யாணம், கிளம்பிரு இல்லை கடிச்சி வைச்சிருவேன்.

சில நேரங்களில் பல விசயங்கள் மிகவும் அதிகபடுத்தபட்டு பேசபடுகிறதோ எனும் ஒரு எண்ணம் தானாக எழுவது உண்டு. பிறர் நமக்கு ஊக்க சக்தியாக இருந்தாலும், நம்முள் ஒரு ஊக்கமும், உந்துதலும் இல்லையெனில் நம்மால் ஒரு காரியத்தை செய்ய இயலாது என்பதுதான் நான் கண்டு கொண்ட கற்று கொண்ட பாடம். எதற்கு இந்த எண்ணம் சிந்தனை எழுந்தது எனில் இந்த விசயத்தை முன்னரே எழுதி இருக்கிறேன். அரிச்சந்திரன் நாடகம் பார்த்து ஒரு காந்தி மட்டும் ஏன் உருவானார் என்பதுதான்?

மயக்கம் என்ன படம் சரியில்லை என்று கேள்விபட்டேன், ஆனால் விமர்சனம் எதுவும் படிக்கவில்லை. படம் பார்க்க அமர்ந்ததும் படத்தின் வேகம் சற்று யோசிக்க வைத்துவிட்டது. ஆனாலும் மிகவும் பிடித்து இருந்தது. மிகவும் நகைச்சுவையாகவே காட்சிகள் நகர்ந்து கொண்டிருந்தன. அதுவும் 'ஓட ஓட' எனும் பாடலில் 'சாமி என்ன பங்கம் பண்ணுது' எனும் காட்சி அமைப்பில் சாமி சிலைகள் தலையை தொங்கபோட்டதை கண்டு அதிகமாகவே சிரிப்பு வந்தது. இப்படியாக சென்று கொண்டிருக்கும் படத்தில் ஒரு காட்சியில் கதாநாயகனும், அவரது நண்பனும் அழுத பின்னர் 'ரொம்பவே அழுதுட்டோம்' என சொல்லும் போது சிரிப்பு வந்து சேர்ந்தது.

ஒரு படைப்பு என்பது என்ன? அதை படைப்பவரின் வலி எப்படி இருக்கும் என்பதை பிறர் எழுத்து மூலம் அறிந்த நான் இந்த படத்தை பார்த்துதான் காவியமாக தெரிந்து கொண்டேன். நான் ஆராய்ச்சி செய்தபோது நான் எனது ஆராய்ச்சி பற்றி வெளியிட இருந்த அதே விசயத்தை, ஒரு மருந்து ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டது குறித்து ஏமாற்றம் மட்டுமே என்னால் அடைய முடிந்தது. அங்கே வேலைக்கு என ஒரு வருடம் முன்னர் தான் விண்ணப்பம் போட்டு இருந்தேன். வெளியிட்ட ஆராய்ச்சியில் எல்லா வேலைகளும் அவர்கள் செய்தது, ஆனால் சிந்தனை மட்டும் என்னுடையது. அதே வேளையில் ஆராய்ச்சியில் ஒரே சிந்தனை பலருக்கு வர வாய்ப்பு இருக்கிறது, எனவே நாம் செய்து இருக்கலாம் என்கிற ஒரு ஏக்கம் இருப்பது இயல்புதான். அதே வேளையில் எவர் செய்தால் என்ன எனும் பக்குவம் அந்த நாளில் இருந்து எனக்குள் வந்து கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள் ஆகிவிட்டது. இப்பொழுதெல்லாம் புன்னகையுடன் கடக்க பழகி  கொண்டேன். அதைப் போல இந்த எழுத்துகளை திருடினேன், தாரளாம திருடங்க என பதிவுகளும் போட்டு இருக்கிறேன். ஆனால் தனது வேலையை மட்டுமே நம்பும், உயிராக போற்றும் மனிதரின் வலிகள் மிகவும் அதிகம் தான்.

ஒரு திறமைசாலியின் திறமையை எவராலும் அடைத்து வைக்க முடியாது. ஒரு படம் எடுத்த அந்த கதாநாயகன் அதைப்போல பல படங்கள் எடுக்க இயலும், ஆனால் மனம் உடைந்து போகும் பலவீனனாக காட்டி இருப்பது யதார்த்தம். பலர் தங்களது திறமைகளை உணராமலே இருக்கிறார்கள் என்பதற்கு இதுவும் எடுத்துகாட்டு. உடைஞ்சி போய்ட்டேன் என எத்தனை தடவை எத்தனை விசயங்களில் பேசி இருப்போம். நமக்குள் ஒரு உந்துதல் இல்லையெனில் நம்மால் முன்னேறவே முடியாது. படம் எடுத்தது கதாநாயகன், படத்தை அனுப்பி வைத்தது மனைவி. சில எதிர்மறை விசயங்கள் படத்தில் உண்டு, அதை பற்றி எதற்கு பேசுவானேன்.

ஒரு மனிதன் போராடி சாதிக்கும் போது நமக்குள் கண்ணீர் வந்து சேர்வது இயல்புதான். அதற்கு பின்னணி காரணங்கள் என்னவாக இருந்துவிட்டு போகட்டும். இந்த படத்தை பற்றி இன்னும் இன்னும் எழுதி கொண்டே போகலாம். பல விசயங்கள் கனவாக இருக்கும் என நினைத்தபோது நான் என்ன சீரியலா எடுத்துட்டு இருக்கேன் என இயக்குனர் காட்சிகள் மூலம் நம்மை கேள்வி கேட்பது மிகவும் அருமை.

மயக்கம் என்ன என்கிற வார்த்தையை படத்தின் தலைப்பாக போட்டுவிட்டு மௌனம் என்ன என கதாநாயகனின் மனைவி மூலம் நிறையவே பேசி இருக்கிறார். சில பல நேரங்களில் தவறிப் போகும் மனிதர்களை மன்னித்து அவர்களை நல்ல பாதையில் செல்ல வைக்க இயலும் எனும் இயல்பான வசனங்கள் மூலம் புரிந்து கொள்ள முடிந்தது.

இந்த மயக்கம் என்ன பலருக்கும் மயக்கத்தை தரும் என்பதில் சந்தேகம் இல்லை. வாழ்த்துகள்.