Saturday, 24 December 2011

வாழ்க்கையில் சீரழிவது எப்படி? சுடர்மிகு அறிவும் சுரைக்காயும்

முன்பகுதி இங்கே. 

மரங்கள் ஓங்கி வளர்ந்து இருந்ததை கண்டு இந்த மரங்கள் எல்லாம் எவரால் நடப்பட்டன எனும் சிந்தனை கற்காலம் தாண்டிய மனிதனின் எண்ணத்தில் மலர்ந்தது. விலங்குகளை வேட்டையாடி திரிந்த மனிதன் ஓரிடத்தில் அமர இந்த தாவரங்கள் பெரிதும் உதவியாய் இருந்தன. ரோமங்களால் மூடப்பட்டு இருந்த உடலுக்கு இலைகள் எல்லாம் உடைகள் ஆயின.

இந்த தாவரங்கள் எப்படி உருவாகின? மதம் எனும் கோட்பாட்டிற்குள், மத நூல்கள் தரும் போதையில் சிக்கி கொண்டு இந்த உலகம் இறைவனால் படைக்கப்பட்டது எனும் வேதாந்த கருத்தில் மனம் வைத்து சுடர்மிகு அறிவுதனை எரித்து கொண்டிருப்பது எவருக்கும் பயன் அளிக்கப் போவதில்லை. இதை இப்படி பிரித்தோம், அதை அப்படி படைத்தோம் என வியாக்கியானங்கள் எல்லாம் படிப்பதற்கு சுவையாக இருக்கும். அந்த வியாக்கியானங்களை இறைவன் எனும் ஒரு பாகுபாடற்ற தன்மைக்கு அலங்காரம் சூட்டி நம்மை நாமே அடிமைபடுத்தி கொள்வது என்பது இந்த காலகட்டத்தில் தவிர்க்க இயலாத ஒன்றாகவே இருக்கலாம். ஆனால் தவிர்க்க கூடிய தைரியம் மிக்க அறிவு எவருக்கும் அத்தனை எளிதில் வாய்ப்பதில்லை. உள்ளூர பயம் இருந்து கொண்டேதான் இருக்கும். சனிப்பெயர்ச்சி பலன்கள் என படித்து பரிகாரம் தேடும் அளவுக்கு சுடர்மிகு அறிவுடன் நாமெல்லாம் படைக்கப்பட்டு இருக்கிறோம்! படைக்கப்பட்டு? ஆம், அறிவினை முட்டாள்தனமாக உபயோகிக்க தெரிந்த விதமே பல சீரழிவுகளுக்கு காரணம்.

இந்த தாவரங்கள் எல்லாம் அப்படி அப்படி முளைத்தது அல்ல, அப்படி அப்படி பிடுங்கப்பட்டு நடப்பட்டது அல்ல. எப்பொழுதாவது இந்த தாவரங்கள் கண்டு பிரமிப்பு அடைந்தது உண்டா. இவைகளுக்கு மனம் இல்லை, பேசும் வாய்ப்பு இல்லை, நடந்து திரியும் பழக்கமும் இல்லை. ஆனால் கூட்டம் கூட்டமாக நிலப்பரப்பை அழகு படுத்தி கொண்டிருக்கும். பாறைகள் உடைபட்டு அதிலிருந்து வெளிப்பட்ட தாது பொருட்கள், மண்ணின் அமிலத்தன்மை, மண்ணில் இருக்கும் தண்ணீர், நுண்ணுயிர்கள் என்பவையே தாவர வளர்ச்சிக்கான காரணிகள். நிலத்தில் உள்ள தாது பொருட்கள் உட்கொண்டு முதலில் சிறு தாவரம் உருவாகும். அந்த தாவரத்தை பின்பற்றி மற்றொரு தாவரங்கள் உருவாகும். இப்படியாக பெரிய தாவரங்கள் உருவானதும் அங்கே ஒரு மர கூட்டத்தின் நாகரிகம் முடிவடையும். இதை அழகு தமிழில் மண் தொடர் மாற்றம் என குறிப்பிடுவார்கள். இந்த மண் தொடர் மாற்றம் என்பது இரண்டு நிலைப்படும். முதல் மண் தொடர் மாற்ற நிலை, இரண்டாம் மண் தொடர் மாற்ற நிலை. இது ஒரு சுழற்சியாகவும் தொடரலாம். பாலைவனங்களில் கூட வளரும் தன்மை கொண்ட தாவரங்களை நேரில் கண்டபோது உங்களை எவர் படைத்தது என கேட்டுவிடத்தான் தோணியது!

முதல் மண் தொடர் மாற்ற நிலையில் சில தாவர வகைகள் வரும், அதற்கு பின்னர் அந்த தாவர வகைகள் மாறி இரண்டாம் மண் தொடர் மாற்ற நிலையில் வேறு தாவர வகைகள் வரும். இந்த தாவரங்களின் பயன் மூலமே விலங்கினங்கள் உருவானது என்பது பின்னர் தான் தெரிந்தது. நிலத்து தாவரங்கள் போல நீர் தாவரங்களும் உண்டு. எந்த ஒரு அவதாரமும் தாவரமாக உருவெடுத்ததாக நமது அறிவு சிந்திக்க மறுத்துவிட்டது. சுரைக்காய்!

இப்படி தாவரங்கள் உருவானது போலவே மனிதர்களும் கூட்டம் கூட்டமாக வாழ ஆரம்பித்தார்கள். இப்படியாக நாகரிகம் என தொடங்கியது  கிட்டத்தட்ட ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் என்றுதான் காலக்கணக்கீடு காட்டுகிறது. ஆறுகள் நாகரிகத்திற்கு வழிகாட்டியாக அமைந்து இருக்கலாம் என்பது மதிப்பீடு. மீசொபோடோமியா மற்றும் எகிப்து போன்ற இடங்களே மனிதர்கள் ஓரிடத்தில் முதலில் அமர்ந்தார்கள் என்கிறது வரலாறு. முதலில் ஒரு சிலர் சென்று அங்கே தங்குவார்கள், பின்னர் கூட்டமாக வந்து சேருவார்கள், அது கிராமம், நகரம், நாடு என பிரிந்தது என்பதுதான் நாகரிகத்தின் வெளிப்பாடு. இந்த மரங்களை எல்லாம் பார்த்த மனிதர்களுக்கு அவைகளை வைத்து விவசாயம் செய்ய இயலுமா எனும் சுடர்மிகு அறிவுதான் ஒரு நாகரிகத்தை உருவாக்கியது.

இந்த சிந்தனை எவர் விதைத்தது? தாவரங்களை உட்கொண்ட, வேட்டையாடி விலங்குகள் உண்ணும் பழக்கம் இல்லாத மனிதர்கள் ஒரு பிரிவாக உருவாகி இருக்கலாம். அவர்களின் சிந்தனையே இந்த மாபெரும் மாற்றத்திற்கு காரணம். ஒரு நண்பரிடம் விளையாட்டாக கேட்டேன், இன்னமும் விலங்குகள் கொன்று அதை சமைத்துதான் நமது உடலை வளர்க்க வேண்டுமா என! அதற்கு நண்பர் பதில் சொன்னார், மத நூலில் சொல்லப்பட்டிருக்கிறதாம், விலங்குகள் நீங்கள் உண்பதற்காகவே படைத்தோம் என! பிரமித்து போனேன்.  எந்த ஒரு எழுத்தையும், நூலையும், மத நூல் உட்பட, முழுவதும் படித்து பொருள் உணராமல் நாமாக கற்பனை செய்து பேசுவது, இட்டுகட்டி எழுதுவது, காலத்திற்கு ஏற்ப அதனை மாற்றியமைத்து கொள்வது போன்றவை மிகவும் மோசமான விளைவுகளை தரும். அதாவது இருக்கும் உண்மையை அப்படியே மாற்றி போட்டு விடும். அப்படிப்பட்ட சுடர்மிகு அறிவில் தான் நாம் ஜொலித்து கொண்டிருக்கிறோம். இப்படியெல்லாம் இருந்திருக்க கூடும் என கிடைக்கும் செய்திகளில், எழுதப்பட்ட விசயங்களில் அடிப்படையில் தான் நமது அறிவு மின்னி கொண்டிருக்கிறது.

மழை இல்லாத காலத்தில் தண்ணீருக்கு என்ன செய்வது என்பதுதான் ஆறுகளின் ஓரங்களில் மனிதர்கள் குடியேறினார்கள்.  இந்த நாகரிகம் ஒருவரை பார்த்து ஒருவர் தொடர்ந்ததா என தெரிந்து கொள்ள வாய்ப்பாக அமையவில்லை. தற்போது ஒரே சிந்தனை உடைய மனிதர்கள் உலகெலாம் பரவி இருப்பதை போல ஆங்காங்கே குடியமர்ந்த மக்களில் இந்த சிந்தனை எழ வாய்ப்புண்டு என்பதை மறுப்பதற்கில்லை. சிந்து சமவெளி, கிரேக்க சமவெளி, சைனா சமவெளி, இன்கா, அஜ்டேக் என ஆறுகள், கடல் ஓரங்களில் உருவான நாகரிகம் ஒன்றுக்கொன்று தொடர்புடையதா என பார்க்கும் போது சைனாவில் உருவான நாகரிகம் வெளித் தொடர்பே இல்லாமல் தான் இருந்து வந்திருக்கிறது, அதனால் தான் இன்னமும் சைனா அதே மன நிலை கொண்ட நாடாக இருக்கிறது என்பார் சிலர். இந்த நாகரிகங்கள் வளர்ந்த சமயங்களில் அவர்களது அறிவு படம் வரைவதிலும், எழுதி வைப்பதிலும் கவனம் செலுத்தியமையே பல விசயங்களை வெளிக்கொணர்ந்தது.

இப்படியான அறிவுதனில் எப்படி இறைவன் உள்ளே வந்தார் என்பது பயம் எனும் உணர்வும், இயற்கை சக்தியை போற்றி வளர்ந்த தன்மையும் என்கிறார்கள் அறிவியல் வல்லுனர்கள். ஒரு சீரற்ற சமூக அமைப்புக்கு சீரான வழிகாட்டுதல் எப்படி தருவது என்கிற சிந்தனையில் உருவானதுதான் கோட்பாடுகளும், வாழ்க்கை நெறிமுறைகளும். அவ்வாறு நெறிபடுத்தப்பட்ட போது ஏற்பட்ட பிரிவினைகள் இன்னமும் வாழ்வினை சீரழித்து கொண்டுதானிருக்கிறது.

தொலைந்த நாகரிகங்கள் மூலம் முட்டாள்தனமான அறிவு குறித்து மேலும் அறிய முயல்வோம்.

Friday, 23 December 2011

இங்கே குப்பைகளை கொட்டாதீர்கள்

மிகவும் அருமையான எழில் கொஞ்சும் அழகிய கிராமம் அது. பச்சை பசேலென எங்கு பார்த்தாலும் ஆகாயத்துடன் போட்டி போட்டு கொண்டு பூமி பசுமையாய் காட்சி அளித்து கொண்டிருந்தது. அழகிய சாலைகள் மிகவும் சீராக அமைக்கப்பட்டு இருந்தன. அந்த கிராமத்தில் வசிப்பவர்கள் எல்லாம் அவரவர் வீட்டினை சுத்தம் செய்வதோடு சாலைகளை சுத்தமாக வைத்து இருந்தார்கள். அந்த கிராமத்தில் எவரை கண்டாலும் அத்தனை சுத்தமாக இருந்தார்கள். மணலில் சோறு போட்டு சாப்பிடும் மாந்தர்கள் எல்லாம் அந்த கிராமத்துக்கு சென்றால் மிகவும் தைரியமாக தெருக்களில் சோறினை போட்டு சாப்பிடலாம், அத்தனை சுத்தமாக இருந்தது. அப்படிப்பட்ட கிராமத்தில் இருக்கும் வீடுகள் பல கண்டு கோவில் என கும்பிட்டுவிட்டு செல்லலாம்.

அந்த கிராமத்தில் திருஷ்டி பொட்டு வைப்பது போல ஒரு வீடு இருந்தது. அந்த வீட்டில் சுப்பிரமணியம் மட்டும் வசித்து வந்தார். அவருக்கு அறுபது வயதாகிவிட்டது. முப்பத்து ஆறு வருடங்களுக்கு முன்னாள் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அவருக்கு திருமணம் ஆகவில்லை, உடன் பிறந்தோர் என அனைவரும் வெவ்வேறு ஊர்களுக்கு சென்று வசித்தார்கள். பெற்றோர்கள் இருவரும் இப்போது உயிருடன் இல்லை. இந்த சுப்பிரமணியம் வீட்டினை பார்த்தால் மொத்த குப்பைகளின் கூடாரம் எனலாம். ஆனால் ஊராரின் கண்ணுக்கு குப்பைகள் என தெரிந்தவை எல்லாம் அவருக்கு மிகவும் அவசியமாகவே தென்பட்டது. இவரது அன்னை உயிரோடு இருந்தவரை இந்த வீடு ஆலயமாகவே தென்பட்டது. அன்னையின் மறைவிற்கு பின்னர் சுப்பிரமணியத்திடம் ஒருவித பழக்கம் தொற்றி கொண்டது. மனிதர்கள் பல்வேறு பழக்கங்களுக்கு அடிமையாகும் மனதை பெற்று இருக்கிறார்கள்.

இந்த பழக்கங்களுக்கு அடிமையாகும் மனிதர்கள் ஒரு நோயாளியாகவே கருதப்படுகிறார்கள். ஆனால் இவர்களுக்கு தாங்கள் ஒரு மன நோயாளி என்பதை உணரும் சக்தி எதுவும் இருப்பது இல்லை. இந்த அடிமை பழக்கவழக்கத்தால் தன்னிலை மறந்து கோபமும் வெறுப்பும் அதிகமாகி உலகமே தன்னை எதிர்ப்பது போன்ற உணர்வினை பெறுகிறார்கள். கதைக்குள் ஒரு கதை விடுகிறேன். ஒரு முறை துரியோதனர்களிடமும், பாண்டவர்களிடமும் உங்களு வீட்டுக்கு வருகிறோம், உங்கள் வீட்டினை நீங்கள் நிரப்பி வையுங்கள் என முனிவர் சொல்லி செல்கிறார். முனிவர் துரியோதனன் வீட்டிற்கு செல்கிறார். வீட்டின் கதவை திறக்க முடியாமல் வெளியில் நிறுத்தப்படுகிறார் முனிவர். என்ன என விசாரித்தபோது வீட்டினை வைக்கோலால் நிரப்பி விட்டேன் என துரியோதனன் சொல்லி பெருமைபட்டு கொள்கிறான். ஆனால் முனிவரோ என்ன மடத்தனம் என திட்டிவிட்டு போகிறார். அடுத்து பாண்டவர் வீட்டிற்கு செல்கிறார் முனிவர். அங்கே உள்ளே வரவழைத்து முனிவரை உபசரிக்கிறார்கள். உடன் துரியோதனனும் செல்கிறான். வீட்டில் அகர்பத்திகளை ஏற்றிவைத்து வீடெல்லாம் மணம் பரப்பி கொண்டிருந்தது. அந்த மணத்திலும், உபசரிப்பிலும் மனம் லயித்து பாண்டவர்களை வெகுவாக பாராட்டி செல்கிறார் முனிவர்.

இப்படி வைக்கோலால் எப்படி துரியோதனன் வீட்டினை ஒரே நாளில் நிரப்பினானோ அதைப் போல முப்பத்து ஆறு ஆண்டுகளாக குப்பைகளை சேகரிக்கும் ஒருவித மன நோயாளி தன்மையை இந்த சுப்பிரமணியம் பெற்றார். தான் வாங்கும் நாளிதழ்களை சேகரித்து வைப்பது, சின்ன சின்ன பொருட்களை எல்லாம் வீட்டிலேயே வைத்துவிடுவது போன்ற பழக்கம் ஆரம்பித்து அவரது வீட்டின் பின்புற தோட்டத்து இடத்தில் குப்பைகள் எல்லாம் சேர்த்து வைக்கத் தொடங்கினார். வீடு எல்லாம் கடந்த முப்பத்து ஆறு வருடத்தில் நாளிதழ்கள் என எல்லாம் நிரம்பி வாசற்படியையே அடைக்கும் அளவுக்கு வந்துவிட்டது. வாசற்படியில் ஊர்ந்து சென்றால் தான் உள்ளே செல்ல முடியும். உள்ளே சமையல் அறை, படுக்கை அறை என எல்லாம் நாளிதழ்கள் மேல் ஊர்ந்து சென்றால் மட்டுமே முடியும். படுக்கை அறையில் ஒரு தொலைக்காட்சி, சின்ன மேசை, ஒரு நாற்காலி மட்டுமே இருந்தது. அதில் தான் உறக்கம். தினமும் இரண்டு முட்டையும் ஒரு ரொட்டி மட்டுமே சாப்பாடு.

ஊரார்கள் சுப்பிரமணியம் மீது வழக்கு போட்டார்கள். ஆனால் வழக்கில் சுப்பிரமணியமே வெற்றி பெற்றார். எவர் என்ன சொன்னாலும் கேட்பதில்லை. இப்படியாக இருந்த சுப்பிரமணியத்திற்கு அவருக்கு குப்பைகளை சேகரிக்கும் நோய் இருக்கிறது என ஒரு மருத்துவர் உதவ வந்தார், அந்த உதவியை நிராகரித்தார் சுப்பிரமணியம், தனக்கு எதுவும் இல்லையென சாதித்தார். வீட்டில் இருக்கும் பொருட்களை எல்லாம் தூக்கி போட சம்மதிக்கவே இல்லை. கடந்த ஏழு வருடங்களாக குளிக்கவே இல்லை. ஆனால் மன நோய் தவிர்த்து வேறு எந்த நோயிற்கான அறிகுறியும் தென்படவில்லை.

இவரது வீட்டிற்குள் நுழையவே அதிகாரிகள் சிரமப்பட்டார்கள். அந்த ஊரில் இருந்தவர்கள் எல்லாம் இவர் வழக்கில் வெற்றி பெற்றதால் கோபமும் ஆத்திரமும் கொண்டார்கள். ஆனால் அந்த ஊர்ருக்கு புதிதாக குடிவந்த ஒருவர் இவரிடம் மெதுவாக பேச்சு கொடுத்து தோட்டத்து பக்கம் ஒரு அடைப்பை ஏற்படுத்தினால் குப்பைகள் வெளியில் இருப்பவருக்கு தெரியாது என சொல்லி ஒரு அடைப்பை ஏற்படுத்தினார். இவருடன் மெதுவாக தினமும் பேச்சு கொடுத்து தோட்டத்தில் இருந்த குப்பைகள் கொஞ்சம் அகற்றினார். எதற்குமே சம்மதிக்காத சுப்பிரமணியம் இந்த மனிதரின் பேச்சில் சற்று இறங்கி வந்தார். அதற்கடுத்து ஊரில் இருந்த ஒரு சிலர் குப்பைகளை அகற்ற வந்தார்கள். குப்பைகள் எல்லாம் ஒரு சில வாரங்களில் அகற்றப்பட்டது. தோட்டப்பகுதி சுத்தமானதை கண்டு மற்றவர்கள் சந்தோசபட்டார்கள், ஆனால் சுப்பிரமணியம் இரண்டுவித மன நிலையிலேயே இருந்தார்.

பின்னர் அவரது வீட்டில் இருக்கும் குப்பைகளை அகற்றும் பணி தொடங்கியது. தனது மனநிலையை முதலில் உணர்ந்து கண்ணீர் விட்டார் சுப்பிரமணியம். தான் ஒரு நோயாளி என்பதை அறிந்தாலும் தன்னிடம் மாற்றம் ஏற்பட சில காலங்கள் ஆகும் என்றார். தன்னால் உடனே இந்த குப்பைகள் சேகரிக்கும் பழக்கத்தை கைவிடமுடியாது என சொல்லிக்கொண்டார். ஆனால் முதல் முறையாக பல வருடங்கள் பின்னர் குளித்தார். அவரது மன அழுக்கு நீங்கியதை போல உடல் அழுக்கு நீங்கியது. உதவி செய்ய வந்த நபர் மூலம் வீட்டில் இருந்த குப்பைகளும் அகன்றது. ஊரில் இருந்தவர்கள் நாங்கள் எவ்வளவோ சொன்னோம், ஆனால் கேட்கவில்லை, சொல்லத்தான் செய்தோம், உதவி என கேட்டால்தான் உதவுவது என இருந்தோம் என சொன்னார்கள். ஆனால் நிலைமையை உணர்ந்த ஒருவர் செய்த உதவியின் மூலம் இன்று சுப்பிரமணியம் அனைவரிடம் நன்றாக பழகுகிறார், சகஜ நிலைக்கு திரும்பிவிட்டார் என பெருமைப்பட்டு கொண்டார்கள்.

சுப்பிரமணியம் இப்போதெல்லாம் குப்பைகளை சேகரிப்பது இல்லை. அவ்வப்போது சுத்தம் செய்துவிடுகிறார். இந்த சுப்பிரமணியம் போல இன்னும் எத்தனையோ விதவிதமான சுப்பிரமணியர்கள் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் திருந்த ஒரே ஒரு அன்பு உள்ளம் தேவை! அந்த அன்பு உள்ளத்தை எங்கே தேடுவது?!

Wednesday, 21 December 2011

கருப்புதனை கருப்புனு சொல்றது தப்பா?

 எங்க ஊருல கருவாயன் அப்படின்னு என்னை கூப்பிடுவாங்க. நான் ஒரு நாள் கூட என்னை கூப்பிட்டவனை திருப்பி அடிச்சது இல்லை. நிற வெறியை கிளப்புறானு இனவெறியை சொல்றான்னு ஒருநாளும் கத்துனது இல்லை.

கஞ்சா கருப்பு அப்படின்னு ஒரு நகைச்சுவை நடிகரு கூட இருக்காரு. அவர் ஒரு நாள் கூட தன பேருல கருப்பு இருக்கேன்னு கவலைப்பட்டு இருப்பாரானு தெரியலை.

சினிமா பாட்டு எழுதி தேசிய விருது வாங்குன விஜய் கூட கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு அப்படின்னு ரொம்பவே கருப்பு கலரை புகழ்ந்து எழுதுனாரு. கருவண்ண கண்கள், கரு மேக கோலங்கள் அப்படி இப்படி கருப்பு பத்தி நம்ம ஊருக்காரங்க அத்தனை பெருமையா பேசுறாங்க.

ஆனா கருப்பு இனத்தவரை 'டே கருப்பு' அப்படின்னு சொன்னா அது இனவெறி, நிறவெறியாம். எனக்கு ரொம்ப நாளாவே சந்தேகமா இருந்துச்சு. கருப்பு இனத்தவர்கிட்ட போய் இதை கேட்டு பாக்கலாமா அப்படினுட்டு ஒரு கருப்பு இனத்தவரை 'டே கருப்பு' அப்படின்னு கூப்பிட்டேன். பொளார் அப்படின்னு ஒரு அறை விட்டதுல  என் கன்னம் கருப்பா பழுத்து போச்சு. அன்னைக்குல இருந்து எது எது என்னைய சொன்னா எனக்கு வலிக்குமோ அதுமாதிரி அது அது மத்தவங்களை சொன்னா வலிக்கும்னு நினைச்சேன். ஆனா நினைப்பு நினைப்போட இருந்துச்சு.

'யே குண்டு' அப்படின்னு ஒருத்தரை கூப்பிட்டேன். 'என்னடா சொன்ன, அப்படின்னு அந்த பொண்ணு காலுல இருக்க செருப்பை தூக்கி என் மேல எறிஞ்சிருச்சி' வலி தாங்கலை. குண்டா இருக்கவங்களை 'குண்டு' அப்படின்னு சொல்றது கூட தப்புதானாம். ஒல்லியா இருக்கிறவங்களை 'ஒல்லி பச்சான்' அப்படின்னு சொல்றதும் குத்தம் தானாம். இருக்கறதை இருக்கறமாதிரியே சொன்னா எல்லாரும் அடிக்க வராங்க. 'டூ யூ நோ ஹௌ ஐ ஃபீல்? அப்படின்னு கேட்கறாங்க.

இது மாதிரி என்னை ஒருதரம் 'போடா முட்டாபயலே' அப்படின்னு ஒருத்தர் திட்டினதும் எனக்கு ஜிவ்வுன்னு கோவம் தலைக்கு மேல ஏறிருச்சு. எதுக்குடா அப்படி சொன்ன? அப்படின்னு கேட்டேன். 'முட்டாபயல முட்டாபயனு திட்டாம அறிவாளினா திட்டுவாங்க' அப்படின்னு சொல்லிட்டு விடுவிடுன்னு போய்ட்டான்.

ஹூம், முட்டாளத்தான இருக்குமோ அப்படின்னு நினைக்கிறப்போ ஒரு கருப்பு இனத்தவரு போனாரு.

வாய் வரைக்கும் வார்த்தை வந்துச்சி. அன்னைக்கு வாங்குன அடி நினைவுக்கு வந்ததால மனசுக்குள்ளார சொல்லிக்கிட்டேன். டே கருப்பு! அவனுக்கு கேட்கபோறதும் இல்லை, என்னை அவன் அடிக்கப் போறதும் இல்லை.

அப்புறம் தான் செய்தி தாளைப் பார்த்தேன். கருப்பு அப்படின்னு ஒரு கருப்பு இனத்து விளையாட்டு வீரரை ஒரு வெள்ளை இனத்து விளையாட்டு காரர் கூப்பிட்டாருன்னு அந்த வெள்ளை இனத்தவரை எட்டு போட்டிகளில் தடை பண்ணிட்டாங்க. அவரும் என்கிட்டே பாவமா கேட்டாரு. கருப்புதனை கருப்பு அப்படின்னு சொல்றது தப்பா!

ரொம்ப ரொம்ப ரொம்பவே தப்பு அப்படின்னு ஆறுதல் சொல்லிட்டு இனிமே மனசுக்குள்ள சொல்லிக்கோ அப்படின்னு போய்ட்டேன். ஒரு சில வார்த்தைகள் இனத்தை கேலி பண்ணுவதாகவும், நிறத்தை கேலி பண்ண கூடியதாகவும் இருக்கு, அதை எல்லாம் தெரிஞ்சி வைச்சிக்கிரனும் அப்படின்னு புது டிக்சனரி போடலாம்னு போய்கிட்டு இருக்கேன்.

டே கருவாயா! எவனோ என்னை கூப்பிட்டான். அவனை சொல்லி குத்தமில்ல!