Wednesday, 21 December 2011

கருப்புதனை கருப்புனு சொல்றது தப்பா?

 எங்க ஊருல கருவாயன் அப்படின்னு என்னை கூப்பிடுவாங்க. நான் ஒரு நாள் கூட என்னை கூப்பிட்டவனை திருப்பி அடிச்சது இல்லை. நிற வெறியை கிளப்புறானு இனவெறியை சொல்றான்னு ஒருநாளும் கத்துனது இல்லை.

கஞ்சா கருப்பு அப்படின்னு ஒரு நகைச்சுவை நடிகரு கூட இருக்காரு. அவர் ஒரு நாள் கூட தன பேருல கருப்பு இருக்கேன்னு கவலைப்பட்டு இருப்பாரானு தெரியலை.

சினிமா பாட்டு எழுதி தேசிய விருது வாங்குன விஜய் கூட கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு அப்படின்னு ரொம்பவே கருப்பு கலரை புகழ்ந்து எழுதுனாரு. கருவண்ண கண்கள், கரு மேக கோலங்கள் அப்படி இப்படி கருப்பு பத்தி நம்ம ஊருக்காரங்க அத்தனை பெருமையா பேசுறாங்க.

ஆனா கருப்பு இனத்தவரை 'டே கருப்பு' அப்படின்னு சொன்னா அது இனவெறி, நிறவெறியாம். எனக்கு ரொம்ப நாளாவே சந்தேகமா இருந்துச்சு. கருப்பு இனத்தவர்கிட்ட போய் இதை கேட்டு பாக்கலாமா அப்படினுட்டு ஒரு கருப்பு இனத்தவரை 'டே கருப்பு' அப்படின்னு கூப்பிட்டேன். பொளார் அப்படின்னு ஒரு அறை விட்டதுல  என் கன்னம் கருப்பா பழுத்து போச்சு. அன்னைக்குல இருந்து எது எது என்னைய சொன்னா எனக்கு வலிக்குமோ அதுமாதிரி அது அது மத்தவங்களை சொன்னா வலிக்கும்னு நினைச்சேன். ஆனா நினைப்பு நினைப்போட இருந்துச்சு.

'யே குண்டு' அப்படின்னு ஒருத்தரை கூப்பிட்டேன். 'என்னடா சொன்ன, அப்படின்னு அந்த பொண்ணு காலுல இருக்க செருப்பை தூக்கி என் மேல எறிஞ்சிருச்சி' வலி தாங்கலை. குண்டா இருக்கவங்களை 'குண்டு' அப்படின்னு சொல்றது கூட தப்புதானாம். ஒல்லியா இருக்கிறவங்களை 'ஒல்லி பச்சான்' அப்படின்னு சொல்றதும் குத்தம் தானாம். இருக்கறதை இருக்கறமாதிரியே சொன்னா எல்லாரும் அடிக்க வராங்க. 'டூ யூ நோ ஹௌ ஐ ஃபீல்? அப்படின்னு கேட்கறாங்க.

இது மாதிரி என்னை ஒருதரம் 'போடா முட்டாபயலே' அப்படின்னு ஒருத்தர் திட்டினதும் எனக்கு ஜிவ்வுன்னு கோவம் தலைக்கு மேல ஏறிருச்சு. எதுக்குடா அப்படி சொன்ன? அப்படின்னு கேட்டேன். 'முட்டாபயல முட்டாபயனு திட்டாம அறிவாளினா திட்டுவாங்க' அப்படின்னு சொல்லிட்டு விடுவிடுன்னு போய்ட்டான்.

ஹூம், முட்டாளத்தான இருக்குமோ அப்படின்னு நினைக்கிறப்போ ஒரு கருப்பு இனத்தவரு போனாரு.

வாய் வரைக்கும் வார்த்தை வந்துச்சி. அன்னைக்கு வாங்குன அடி நினைவுக்கு வந்ததால மனசுக்குள்ளார சொல்லிக்கிட்டேன். டே கருப்பு! அவனுக்கு கேட்கபோறதும் இல்லை, என்னை அவன் அடிக்கப் போறதும் இல்லை.

அப்புறம் தான் செய்தி தாளைப் பார்த்தேன். கருப்பு அப்படின்னு ஒரு கருப்பு இனத்து விளையாட்டு வீரரை ஒரு வெள்ளை இனத்து விளையாட்டு காரர் கூப்பிட்டாருன்னு அந்த வெள்ளை இனத்தவரை எட்டு போட்டிகளில் தடை பண்ணிட்டாங்க. அவரும் என்கிட்டே பாவமா கேட்டாரு. கருப்புதனை கருப்பு அப்படின்னு சொல்றது தப்பா!

ரொம்ப ரொம்ப ரொம்பவே தப்பு அப்படின்னு ஆறுதல் சொல்லிட்டு இனிமே மனசுக்குள்ள சொல்லிக்கோ அப்படின்னு போய்ட்டேன். ஒரு சில வார்த்தைகள் இனத்தை கேலி பண்ணுவதாகவும், நிறத்தை கேலி பண்ண கூடியதாகவும் இருக்கு, அதை எல்லாம் தெரிஞ்சி வைச்சிக்கிரனும் அப்படின்னு புது டிக்சனரி போடலாம்னு போய்கிட்டு இருக்கேன்.

டே கருவாயா! எவனோ என்னை கூப்பிட்டான். அவனை சொல்லி குத்தமில்ல!

Monday, 19 December 2011

இறுமாப்பு

சரியாக மதியம் ஒரு மணிக்கு எல்லாம் விமானம் கிளம்பிவிடும் என்பதால் காலை எட்டு மணிக்கு எல்லாம் தயார் ஆகி பயணம் தொடங்கியாகிவிட்டது. சரியாக மூன்று மணி நேரம் முன்னர் விமான நிலையம் சென்று சேர்ந்து விடலாம் எனும் எண்ணம் மனதில் ஓடியது. விமான நிலையத்திற்கு செல்ல மூன்று வழிகள் உண்டு. இரண்டு வழிகளை புறக்கணித்துவிட்டு ஒரு வழி தேர்ந்தெடுத்தாகிவிட்டது.

பாதையெல்லாம் சரியாய் இருக்க பயணம் நன்றாகத்தான் போய் கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் சென்ற சாலையில் விபத்து நடந்து இருக்கிறது என வாகனங்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தது. இன்னும் நேரம் இருக்கிறதே என காத்துக் கொண்டிருக்க காலம் காத்திருக்கவில்லை. பாதையில் இருந்து விலகி செல்ல வேறு வழியும் இல்லை.

எப்படியும் சென்று விடலாம் எனும் இறுமாப்புடன் காத்திருக்க காலம் கடந்து கொண்டிருந்தது. ஒரு வழியாய் பாதை சரியாக வேகமாக செல்ல வழியின்றி வழி நெடுக வாகனங்கள். அரை மணி நேரத்திற்கு முன்னர் விமான நிலையம் சென்று அடைய இனிமேல் விமானத்தில் சென்று செல்ல முடியாது என்றே விமான நிலைய அதிகாரிகள் மறுத்துவிட்டார்கள்.

எப்படி விமானத்தை எல்லாம் தவற விடுகிறார்கள் என்றே ஏளனமாக நினைத்தது உண்டு, இறுமாப்பில் விமானத்தை தவற விட்ட போதுதான் எப்படி வேண்டுமானாலும் நடக்க வாய்ப்புண்டு என புரிய முடிந்தது.

எவர் என்ன செய்துவிடுவார்கள், எவர் என்ன சொல்லி விடுவார்கள், எவர் என்ன சொன்னால் நமக்கென்ன எனும் இறுமாப்பு எப்போதும் இருப்பது உண்டு. அந்த இறுமாப்பில் பலரோடு இணக்கங்கள் பிணக்கங்கள் ஆனது கண்டு இறுமாப்புதனை தளர்த்தி கொள்ள விழைகின்றேன்.

அகங்காரம் கொண்டால் அடுத்தடுத்த பிறப்பு வருமென்றும், ஒவ்வொரு பிறப்பிலும் அந்த இறைவனை நினைத்து கொண்டே இருக்கலாம் என்றும் கவிதை வடித்தது நினைவில் வருகிறது. அகங்காரம் அழிவை தரும் என படித்து இருந்தாலும் அகங்காரம் அவ்வப்போது அலங்காரம் பூசி கொள்கிறது.

இறுமாப்பு கொள்வது இருப்புக்கு ஆகாது
இறுமாப்பு இன்னல் தராமல் போகாது
இறுமாப்பிடம் இன்பங்கள் ஒருபோதும் சேராது
இறுமாப்பு இனிமேல் எனக்கு ஆகவே ஆகாது.


பைத்தியகாரர்கள் சங்கமம்

இவர்கள் ஏனோ குழுமமாய் திரிகிறார்கள். இவர்கள் நோக்கங்கள் எவரேனும் அறிந்தது உண்டா!
இணையத்தில் எழுதுகிறார்கள். எழுதியதால் இணைகிறார்கள். வருடம் ஒருமுறையோ சிலமுறையோ கூடி கழிக்கிறார்கள், களிக்கிறார்கள். 

எழுத்து பைத்தியங்கள் இவர்கள். பைத்தியகாரத்தனத்தை பதிவு செய்தும் வைக்கிறார்கள். இவரின் பராக்கிராமங்களை  படித்துப் பார்த்தது உண்டா! கட்டிங், வெட்டிங், ஒட்டிங் என்றே கண்டதையும் சொல்லித் திரிகிறார்கள், பிரிகிறார்கள். 

அறியா சங்கங்கள் வைத்ததால் நாடு பலன் பெற்றது உண்டா! ஒருவர் மீது ஒருவர் துவேசம் கொண்டதை அறியாதோர் போல் நடந்தே செல்கிறார்கள். மன அழுத்தத்தில் முகம் தனை மறைத்தே உலவுகிறார்கள், உறைகிறார்கள். 

சின்னதாய் ஆரம்பித்தே பெரியதாய் மாறப்போகும் தன்மை கண்டது உண்டா! ஈக்கள் மொய்த்தால் பண்டங்கள் கெட்டுவிடும்.எங்கும் பைத்தியங்கள் மீண்டும் மீண்டும் சங்கமித்தால் இவ்வுலகம் கெட்டுவிடும்.  கலாச்சார சீரழிவின் கரையை தொடுகிறார்கள், ஓடுகிறார்கள். 

பாராட்டு மழையில் நனைந்ததோ சிலர். பார்த்து ரசித்ததோ பலர். தாங்கள் செல்ல முடிந்தும் இதுபோன்ற பைத்தியகாரதனத்தில் ஈடுபட மனமின்றி விலகி நின்றோரை கண்டதுண்டா! வரமுடியவில்லையே என வருத்தம் தெரிவிக்கிறார்கள், அறிவிக்கிறார்கள். 

வெளிநாட்டில் வாழ்ந்தும் உள்நாட்டில் மனம் வைத்திருப்போர். வழி தெரியாது தவித்திருப்போர். எட்டாத கனியை கண்டு ஏக்கம் கொண்டு நிற்பார்கள் பார்த்தது உண்டா! கனவுலகம் என்றே அறிந்தே காலையும், மாலையும் பாராது அலைகிறார்கள், சிலைகளாகிறார்கள்.

இன்னும் இன்னும் எப்படியோ! எவரேனும் ஏதேனும் சொல்லித் திரிவார்கள். துவண்டு போய் தொலைந்து போய்விடுவோமோ! பிறர் பார்வையில் பைத்தியங்களாகவே இருந்துவிட்டுப் போவோம். குறைந்த பட்சம் இந்த பைத்தியங்கள் மூலமாவது இந்த உலகம் சுபிட்சம் பெறட்டும். 

விதை மெதுவாய் வளரட்டும். விருட்சம் ஆகட்டும். விழி கொண்டு பார்த்தே மகிழட்டும். விடை பெறும் தருணமிது. வியக்கும் நாள் அது வருமது. கனவுகள் கலைகிறது, மனிதர்கள் கவலைகளால் கதறிக் கொண்டே இருக்கிறார்கள், மரிக்கிறார்கள்.