புண்ணாக்கு எனப்படுவது மாட்டு தீவனத்தில் ஒன்று. இந்த புண்ணாக்கு பொதுவாக எண்ணை நிறைந்த வித்துகளில் இருந்து எண்ணை நீக்கப்பட்ட பின்னர் உருவாக்கப்படுகிறது. அதாவது தமிழில் சக்கை என சொல்வார்கள். இந்த சக்கையில் என்ன சத்து இருந்து விடப்போகிறது என நினைக்காமல் அதை ஒரு தீவனமாக பயன்படுத்திய முன்னோர்களின் அறிவு!
தாவரங்கள் ஒளியின் உதவியால் உணவை உற்பத்தி செய்கின்றன. தாவரங்கள் கரியமில வாயுவை (கார்பன் டை ஆக்சைடு) உட்கிரகித்து அவற்றை நீருடன் இணைத்து ஆக்சிஜனையும், குளுக்கோசையும் உருவாக்குகிறது. இந்த உணவு உருவாக்கும் முறையானது இரண்டு நிலைகளில் செயல்படுகிறது. ஒன்று ஒளியின் உதவியால் நடைபெறுகிறது மற்றொன்று ஒளியின் உதவியின்றி நடைபெறுகிறது. நீரினை பகுத்திட ஒளி பயன்படுகிறது. அத்துடன் ஒளியின் வேலை முடிவடைந்து விடுகிறது. அதன் பின்னர் எலக்ட்ரான்கள் உயர் ஆற்றல் நிலை அடைவது, புதிய ஆற்றல் மூலக்கூறு நடைபெறுவது என வேலை தொடர்கிறது. அதற்கு பின்னர் ஒளியற்ற நிலையில், கால்வின் சக்கரம், குளுக்கோஸ் உருவாக்கப்படுகிறது. இலையின் பசுமை நிறத்து காரணியான குளோரோபில் எனப்படும் பொருளின் மூலமே இந்த உணவு தயாரிக்கும் முறை நடைபெறுகிறது, ஏனெனில் இந்த குளோரோபில் ஒளியை உறிஞ்சும் தன்மை கொண்டது. மனிதரின் செல்களில் இந்த குளோரோபில் போன்ற ஒன்றை உருவாக்க இயலுமா என்பதுதான் எனது நீண்ட நாளைய ஆராய்ச்சி கனவு. அதாவது மரங்களே இல்லாத சூழல் ஒன்று வருகிறது என வைத்து கொள்வோம், அப்பொழுது மனிதர் போன்ற விலங்கினங்கள் தங்களுக்கு தாங்களே உணவு தயாரிக்க இயலுமா என்பதுதான் பரிணாம, மரபணு வழியில் வந்த ஒரு புது சிந்தனை. பார்க்கலாம்.
ஒளி தாயரிப்பு எப்படி ஏறடுகிறது என்பதற்கான வேதிவினை இது.
ஒளி
கார்பன் டை ஆக்சைடு + நீர் --------------------------> குளுக்கோஸ் + ஆக்சிஜன்
குளோரோபில்
இந்த குளுக்கோஸ் பலவகையில் மாற்றம் கொள்கிறது. இந்த குளுக்கோஸ் செல்களில் உள்ள செல்லுலோசாக மாற்றம் கொள்கிறது. அதாவது பாலிமர் என இதை குறிப்பிடுகிறார்கள். இந்த குளுக்கோஸ் பல குளுக்கோஸ்களுடன் ஒரு இணைப்பு சங்கிலி ஏற்படுத்தி உருவாவதுதான் செல்லுலோஸ்.
மேலும் இந்த குளுக்கோஸ் எளிதாக நீரில் கரையும் தன்மை உடையதால் எதிர்கால சேமிப்புக்கு என இவை அப்படியே இருக்க முடியாது என்பதால் இவை ஸ்டார்ச் எனும் மற்றொரு பாலிமர் போன்று தன்னை மாற்றி கொண்டு சேமிப்பாக மாறிவிடுகிறது. இந்த ஸ்டார்ச் பிறிதொரு நாளில் தாவரங்கள் உணவு தயாரிக்க முடியாது போகும் பட்சத்தில் குளுக்கோஸாக மாற்றம் உடைந்து பயன்படுகிறது. இந்த ஸ்டார்ச் கரையும் தன்மை அற்றது. இந்த ஸ்டார்ச் அமைலோஸ், அமைலோபெக்டின் எனும் இரு பொருட்களால் ஆனது. இந்த இரண்டுமே பல குளுக்கோஸ் இணைந்து உருவான சிறிது வேறுபாட்டுடன் கூடிய இரட்டை பிள்ளைகள்.
இப்படியான குளுக்கோஸ் தாவர விதைகளில் எண்ணையாக மாற்றம் கொள்கிறது. மேலும் இந்த குளுகோஸ் பழங்களில் வேறொரு இனிப்பாக சுக்ரோஸ், பிரக்டோஸ் என மாற்றம் கொண்டு அதிக இனிப்பு தன்மையை உருவாக்குகிறது. மேலும் இந்த குளுக்கோஸ் நைட்ரெட் போன்ற தாது பொருட்களுடன் இணைந்து அமினோமிலங்கள் உருவாக்கி பின்னர் புரதம் உருவாக்குகிறது. மிக முக்கியமாக ஆற்றலை தருவது இந்த குளுக்கோஸ் தான். செல்களில் நடைபெறும் சுவாச வேதி வினையின் காரணமாக இந்த குளுக்கோஸ் ஆற்றலாக மாறுகிறது.
குளுக்கோஸ் + ஆக்சிஜன் ------------------> கார்பன் டை ஆக்சைடு + நீர் + ஆற்றல் (சக்தி)
இப்படி தாவர விதைகளில் எண்ணையாக மாறிய குளுக்கோஸ் தனை விதைகளை நசுக்கி, பிழிந்து எண்ணையை பிரித்தெடுத்து விடுகிறார்கள். சில நேரங்களில் விதைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து எண்ணையை ஆவியாக்கி பின்னர் குளிரூட்டி பிரித்து விடுகிறார்கள். இப்பொழுது கிடைக்கும் சக்கையானது இந்த குளுக்கோஸ் மூலம் உருவான பல பொருட்களால் ஆனது. அதைத்தான் புண்ணாக்கு என அழைக்கிறார்கள். இது சக்கை என்றாலும் இதில் உள்ள பொருட்களை செரிக்கும் தன்மையை இந்த மாடு போன்ற விலங்கினங்கள் கொண்டுள்ளன. நம்மால் இந்த பொருட்களை செரிக்கும் திறன் கிடையாது, எனவேதான் கரும்பில் இருக்கும் திரவத்தை உறிஞ்சிவிட்டு சக்கையை துப்பி விடுகிறோம். வாழைப்பழ தோலை தூக்கி எறிவதும் இதன் காரணமே. ஆனால் ஆடு மாடு போன்ற விலங்கினங்கள் இவைகளை உண்டு செரித்து கொள்கின்றன.
புண்ணாக்கு பெயர்க்காரணம் கூறுக. தாவர விதையை காயப்படுத்தி உருவாக்கப்பட்ட பொருள் என்பதால் புண்ணாக்கு என அழைக்கப்பட்டது. புண் + ஆக்கு = புண்ணாக்கு என கொள்ளலாம். பிண்ணாக்கு =பிண்ணம் +ஆக்கு , அதாவது சிதைத்து பின்னர் உருவாக்கியது, விதைகளை கூழாக நசுக்கி பின்னர் கிடைப்பது எனப்பொருள், ஹி..ஹி இது ஏதோ நினைவில் இருந்து எழுதுகிறேன், சரியானு தமிழ் ஆர்வலர்கள் தான் சொல்லனும்! (நன்றி வவ்வால்) இந்த புண்ணாக்கு கடலை, தேங்காய், எள்ளு, ஆமணக்கு போன்ற எண்ணை விதைகளில் இருந்து உருவாக்கப்படுகிறது.
புண்ணாக்கு என ஒருவரை அழைப்பது அவரிடம் சரக்கு எதுவும் இல்லை என்பதை குறிக்கவே. அதாவது மிகவும் பயன்பாடான எண்ணை நீக்கப்பட்ட பின்னர் உள்ள சக்கையை போல அவர் இருக்கிறார் என சொல்லாலம், ஆனால் அது கூட ஒருவகை தவறுதான், ஏனெனில் புண்ணாக்கு கூட பயன்பாடான பொருளாகவே இருக்கிறது என்பதை அறிந்தோம். ஜீரோ எழுத்தில் எழுதப்பட இருப்பதை போல எந்த ஒரு பொருளும் ஒன்றும் இல்லாமல் இல்லை. அதாவது எதுவுமே இல்லாமல் எதுவுமே இல்லை.
மதிப்பிற்குரிய எனது நண்பர் ஒருவர் ஆளில்லாத கடையில் டீ ஆத்துவது தவறு என சொன்னார். அதாவது இந்த வலைப்பூ எழுதுவதன் மூலம் பிறர் பயன்பட வேண்டும் என்றும் கருத்து பரிமாற்றம் நிகழ வேண்டும் என்பதுதான் அவரது எண்ணம். பலர் வந்து மறுமொழியோ, பின்னூட்டங்களோ எழுத வேண்டும், அப்படி எழுதி கருத்துகளை பரிமாற வேண்டும். ஒரு எழுத்துக்கு பின்னூட்டங்கள், மறுமொழிகள், எழுதுபவரை உற்சாகத்தில் வைத்திருக்கும், இல்லையெனில் ஈ ஓட்டுவது, காற்று வாங்குவது என பொருள்படும் என்பது அவரது கருத்து. ஆனால் எனக்கு சொல்லி தந்த ஆசிரியரோ எவருமே செருப்பு அணியாத இடத்தில் சென்று செருப்பு விற்பவனே அதி புத்திசாலி என சொல்லிக் கொடுத்தார். ஒன்றை விரும்பாத, ஒன்றை அறியாத மக்களிடம் சென்று புதுமையை புகுத்துவது. அதன் மூலம் அவர்களை அந்த விசயத்திற்கு அடிமையாக்குவது என்பதாகும்.
நீங்கள் வலைப்பூக்களில் சென்று இடும் உங்கள் பின்னூட்டங்கள் புண்ணாக்கா? எண்ணையா?