Thursday, 15 December 2011

இவர்கள் எல்லாம் ஏன் எழுதுவதில்லை

சேவல் கூவும் முன்னர் எழுந்திருந்து, சூரியன் உதிக்கும் முன்னர் வாசல் தெளித்து, கோலம் இட்டு பழைய சோற்றினை பாங்காய் உண்டு களை எடுத்திட காட்டுக்கு விரைந்து நெற்பயிர்களும், சோலைக் கதிர்களும் வளர வழி செய்து, ஆட்டுக்கும், மாட்டுக்கும் புல் கட்டு சுமந்து ஓயாமல் ஆடியாடி ஓடியாடி வேலையே கதியென கிடக்கும் இவர்கள் ஏன் எழுதுவதில்லை?

பூமியை தோண்டி அதற்குள் சிமேண்ட்டையும், கற்களையும் குழைத்து போட்டு வீடு கட்ட செங்கலும், சுண்ணாம்பு கலவையும் சுமந்து திரியும் சித்தாள்களும், பிதாகரஸ் தியரம் தெரியாது போனாலும், அல்ஜீப்ரா, டிரிக்நோமேட்ரி என எதுவும் புரியாது போனாலும் விழுந்து விடாத வீட்டை வலுவாக கட்டி வைக்கும் கொத்தனார்களும் ஏன் எழுதுவதில்லை?

உயிருக்கு போராடும் மாந்தருக்கு தனது உயிரையும் பொருட்படுத்தாது இரவும் பகலும் கண் விழித்து வாந்தியையும் வாடையையும் பொருட்படுத்தாது உயிர் காப்பாற்ற உழைக்கும் நர்ஸ்களும், சிறிது நேரம் கூட ஓய்வில்லாமல் அறுவை சிகிச்சை அறையிலேயே அடைந்து கிடக்கும் மருத்துவர்களும் ஏன் எழுதுவதில்லை?

மௌனமாய் மரத்தின் கீழ் அமர்ந்து மாபெரும் சோதி கண்டபின்னும் தான் கண்டது கடவுளென கூறாமல் கலையாத தவம் கொண்டோர்களும், குப்பை நிறைந்த சாலைகளை துப்புரவாக்கி, பசியென அலையும் பலருக்கு அன்னம் தயாரித்து சமூக சேவகமே தனது சிந்தனையாய் போராடுபவர்கள் ஏன் எழுதுவதில்லை?

உரிமைகள் தொலைந்தது என உயிரை தந்து உரிமை மீட்டிட ஒரு வாய் சாதம் கூட நிம்மதியாய் உட்கார்ந்து சாப்பிட வழியின்றி சமூக அவலங்களை துடைத்திட துடியாய் துடிப்பவர்கள் ஏன் எழுதுவதில்லை?

கருமமே கண்ணாய், காரியமே கருத்தாய் கண்ணீர் துடைப்பதே செயலாய் முதியோர்களுக்கு குழந்தைகளாய், ஆளில்லார்க்கு ஆளாய் அவதியை இன்பமாய் பாவித்து வாழ்பவர்கள் ஏன் எழுதுவதில்லை?

Wednesday, 14 December 2011

கன்னத்தில் முத்தமிட்டால் கறை படியும்

ஒரு தெய்வம் தந்த பூவே பாடலை கேட்டுக் கொண்டே இருக்கையில் இந்த படத்தை பார்க்கவே இல்லையே எனும் ஒரு வேண்டாத ஆசை வந்து சேர்ந்தது. இந்த படம் வந்து கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள் மேல் ஆகிவிட்டது.

ஈழத்து தமிழர்கள் பற்றிய படம் என்றெல்லாம் கேள்விபட்டது மட்டுமே உண்டு. பலரும் இந்த படத்தை சிலாகித்து பேசக் கேட்டது உண்டு. விடைகொடு எங்கள் நாடே எனும் பாடல் அத்தனை துயரங்களை சொல்லி செல்லும்.

அப்படி என்னதான் படம் என பார்த்தால் ஒரு எழுத்தாளரும், ஒரு குழந்தையும் பற்றிய கதை. ஈழத்து நிகழ்வுகளை பற்றி கதை கதையாக பேசி ஈழம் வெளிநாடுகளில் மலர்ந்து விட்டது என கூவி கோடிக்கணக்கான  மக்களின் கனவுகள் சிதைந்து போன தேசமாக இப்போது இலங்கை இருந்து வருகிறது. இந்த இலங்கை அற்புத தேசம் எனவும் சுற்றுலா தளங்களில் மிகவும் சிறந்தது எனவும் சொல்லப்படுவது உண்டு.

ஒரு குழந்தையின் ஏக்கம் தனை படம் முழுக்க காட்டப்பட்டு சினிமா நடிக்க வேண்டும் என, வீட்டுக்கு பயந்து என வீட்டை ஓடிப் போகும் குழந்தைகள் போல தாயை தேடி அகதி முகாம் செல்லும் வரை என குழந்தையின் மன நிலையை இளங்கன்று பயம் அறியாது என காட்டி இருந்தது நன்றாகவே இருந்தது.

ஒரு சாதாரண மனிதருக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் விடுதலை வேட்கையை தற்கொலை மனிதராக காட்டியது திடுக்கிடத்தான் செய்தது. ஒரு கிராமத்தில் வாழும் பூசாரி அந்த இறைவன் வந்து காப்பற்ற மாட்டாரா எனும் ஏக்கம் எல்லோர் மனதிலும் நிறைந்தே இருக்கும். இப்படி காட்சிக்கு காட்சி என ஒரு திரைப்படம் கவிதையாக வடிக்கப்பட்டு இருந்தாலும் ஒரு இனம் புரியாத சோகம் மனதில் இழையோடிக் கொண்டே இருந்தது. எட்டு ஆண்டுகள் முன்னர் கள்ளத்தோணி பிடிச்சி வந்தேன் என கண்ணீர் கதையை சொன்ன நண்பரை கட்டிபிடித்து என்ன செய்யலாம் என கேட்டபோது இங்கே இருந்தே அவங்களுக்கு சாவு மணி அடிக்கலாம் என்றார். அவரை அதற்கு பின்னர் நான் காணவே இல்லை. ஈழத்தில் நடந்த விசயங்கள் சாதாரண விசயங்கள் என எவரேனும் சொன்னால் அவர்கள் கல் நெஞ்சக்காரர்கள், இடுக்கண் வருங்கால் நகுக என இளித்து கொண்டு போக கூடியவர்கள். ஆனால் வாழ்க்கை அத்துடன் நிற்கவில்லை. தினமும் எவரும் இந்த நிகழ்வுகள் நினைத்து அழுது கொண்டிருக்கவும் இல்லை. இதுதான் பூமி கண்ட கோட்பாடு. செத்தாருக்கு சொல்லி அழு. அழுதவுடன் எல்லாம் தீர்ந்தா போய்விடுகிறது! வடுக்கள் ஏற்பட வழியில்லா ரணம் ஆறிட வழி இல்லை. சொந்த மண்ணை கீறி எரிதழலில் போட்டு பொசுக்கி போன பின்னர், எதுவுமே நடக்கவில்லை என்றா இளைய தலைமுறை வரலாறு கற்று கொள்ளும்? வெறுப்பு எப்படி எல்லாம் வளர்ந்து தொலைக்கிறது!!!

இப்பொழுது ஈழம் எப்படி இருக்கும்? சிங்களவர்கள் அனைவருமே கெட்டவர்கள் அல்ல என இருந்தாலும் சிங்களவர்கள் எனும் நினைப்பே தமிழர்களுக்கு ஒருவித எரிச்சல் தந்துவிட்டு போகிறது. எனக்கு தெரிந்த சிங்கள நண்பரிடம் பேசும்போது வார்த்தை தடுமாறுகிறது. அவரோ சகஜமாகவே பேசுவார், என்ன செய்வது சில கோணங்கி புத்தி உடையவர்களால் மொத்த இனமே வேறுபாட்டினை கொள்கிறது என்பார். ஆனால் சில கோணங்கி புத்தி இல்லை, ஒரு இனமே கோணங்கி புத்தி உடையதாக அல்லவா இருக்கிறது என அவரிடம் சொல்லிவிட்டு, நீங்கள் புலம் பெயர்ந்து வந்ததால் அந்த உணர்வு இருக்க வாய்ப்பு இல்லை என நகர்ந்து விடுவேன். அதுவும் எத்தனை உயிர்கள் மாய்க்கப்பட்டன, எத்தனை சிறார்கள் சிதறடிக்கப்பட்டார்கள், இது போன்ற காணொளி எல்லாம் இணையதளத்தில் உலவியபோது அதை பார்க்கும் தைரியம் எதுவுமே இல்லை. மருத்துவ உதவி செய்யப்போன புலம் பெயர் தமிழர் சொன்ன கதையை கேட்டு, போர் நிறுத்தம் செய்ய கூறி போராட்டம் நடத்தப்பட்ட வெளிநாடுகளில் கூடிய கூட்டம் கண்டு ஈழம் மலர்ந்து விடும் என்றே கனவுகள் உண்டு. ஆனால்... ஐம்பது வருட போராட்டம் கண்டது... இப்பொழுது இலங்கை அரசு மீதான நடவடிக்கைகள் எதுவுமே நடப்பதாக தெரியவில்லை. ஈழம் பற்றிய அக்கறை இனி எவருக்கும் வரப்போவது இல்லையோ! எல்லாம் போச்சு! என்றுதான் என்னிடம் ஒரு நண்பர் பிரபாகரன் மரணம் அடைந்த செய்தி வந்ததும் சொன்னார். ஒரு நல்ல இலக்கியம் ஒன்றை தமிழுக்கு படையுங்கள் என ஒரு நண்பர் கேட்டார். கதைகளும், காவியங்களும் எவருக்கு தேவை, கண்ணீருடன் வாழ்ந்து மடியும் இனங்கள் உள்ளபோது என இருந்தாலும் வரலாற்றை திரிக்கும் முயற்சியில் பலர் ஈடுபட்டு இருப்பது வேதனைக்கு உரியது. கறைபடிந்த வரலாறாக மாறக்கூடாது.

இலங்கைக்கு சென்று வரும் எனக்கு தெரிந்த நண்பர்களிடம் எல்லாம் நாடு எப்படி இருக்கிறது என்று கேட்டு கொள்வதோடு, அங்கே செல்வதால் பயம் இல்லையா என்று கேட்டால் 'எனது தாய் மண்' என்றே பெருமிதம் கொள்கிறார்கள். கண்கள் பனிக்கின்றன.

இருபது வருடங்கள் முன்னால் எழுதிய கவிதை தொலைந்து போய்விட்டது. மயானத்தில் கூட அமைதி, அந்த அமைதியையா இந்த போர் வேண்டி நிற்கிறது என வரும் அந்த கவிதை. போர்  எல்லாம் அமைதிக்கான வழியே இல்லை, இருப்பினும் எதிரிகளின் கன்னத்தில் முத்தமிட்டால் நமது உதடுகளில் கறைபடிந்து விடுவதை துடைக்க வழிதான் தெரிவதில்லை. 

Tuesday, 13 December 2011

அணையை உடைச்சிட போறானுங்க

முல்லை பெரியாறு அணை விவகாரம் தமிழகத்தில் மற்றும் கேரளாவில் தற்போது பெரிய அளவில் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து இருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது. இரண்டு மாநில அரசியல் தலைவர்களின் மதி கெட்ட செயல்களால் பாதிப்புக்கு உள்ளாகப் போவது மக்கள் தானே தவிர அரசியல் தலைவர்கள் அல்ல. நீதியை முறையாக கடைபிடிக்கும் நாடாக, பிரச்சினைக்குரிய விசயங்களில் சமயோசிதமாக நடக்கும் நாடாக  இந்தியா இன்று இருந்து இருக்கும் எனில் பல பிரச்சினைகள் எளிதாக முடிந்து இருக்கும். ஆனால் அரசியல் காரணங்களுக்காக பல பிரச்சினைகள் இழுவையிலேயே இருந்து கொண்டிருக்கிறது. குற்றம் செய்ய நினைப்பவர்களுக்கு நீதி ஒன்றும் பொருட்டு அல்ல!

எதற்கு மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து அரசு நடந்து கொள்ள மறுக்கிறது என தெரியவில்லை. இந்த அணை கட்டப்பட்டு கிட்டத்தட்ட நூற்றி பதினாறு வருடங்கள் ஆகிவிட்டது. சில வருடங்கள் முன்னர் இந்த அணையில் சிறு கசிவு ஏற்பட்டதால் அணையின் ஸ்திரதன்மை பாதிக்கப்பட்டு இருக்கலாமோ எனும் அச்சம் வருவதில் எந்தவித தவறும் இல்லை. ஆனால் அதையே காரணம் காட்டி மொத்த அணையும் உடைந்துவிடும் என அடிப்படை காரணம் இல்லாமல் அவதூறு பரப்புவது நியாயம் இல்லை. இதற்கு தூபம் போடும் வகையில் வெளிவந்த ஒரு திரைப்படம் DAM999 இந்த படத்தை பற்றி கொஞ்சம் கூட அக்கறை இல்லாமல் இருந்து இருந்தால் இன்று இத்தனை பிரச்சினை வந்திருக்குமா என தெரியாது. இந்த திரைப்படத்தை தடை செய்வது முதற்கொண்டு இவர்களே தங்களது தலையில் மண்ணை அள்ளிப் போட்டு கொண்டார்கள். இன்று தேனி போன்ற மாவட்டங்களில் பெரும் போராட்டங்களும் கடை அடைப்புகளும் நடந்தேறி கொண்டிருக்கின்றன. இதற்கு தகுந்த தீர்வை மத்திய அரசுதான் செய்ய வேண்டும் என இல்லை. அந்த அந்த பகுதி வாழ் மக்கள் புரிந்துணர்வுடன் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணலாம், ஆனால் தற்போது நிலைமை கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருக்கிறது போன்ற நிகழ்வுகள் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. நதிகள் தேசியமயமாக்கப்படுவது குறித்து மக்கள் புரட்சி செய்தாக வேண்டும். இப்பொழுது கூட கேரளா அரசு வேறு ஒரு அணையை கட்ட எவரும் தடை விதிக்க முடியாது எனும் ஒரு நிலை வந்தால் பெரும் பிரச்சினைதான். முல்லை பெரியாறு அணியின் பின்னணி சுவாரஸ்யமாகவே இருக்கிறது.

முதன் முதலாக கட்டப்பட்ட அணையானது வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு பின்னர் பிரிட்டிஷ் பொறியாளர் ஜான் பென்னி குக் தலைமையில் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் போராடி கட்டப்பட்ட அணை தான் இந்த முல்லைப் பெரியாறு அணை. ராமநாதபுரம் சமஸ்தானத்தை சார்ந்த பிரதானி முத்து இருளப்ப பிள்ளை என்பவர் தான் இந்த திட்டத்தை கிட்டத்தட்ட இருநூறு வருடங்கள் முன்னர் செயல்படுத்த திட்டமிட்டவர். இந்த் அணையின் மூலம் தமிழக மாநிலங்கள் பயன்பெறும் எனவும், ராமநாதபுரம் அதிக பயன் பெரும் எனவும் திட்டமிட்டவர். முத்துராமலிங்க சேதுபதி சிறுவராக இருந்ததால் முத்து இருளப்ப பிள்ளை ஆட்சி பொறுப்பினை ஏற்றார். ஆட்சிக்கு வந்த இந்த முத்து இருளப்ப பிள்ளை பல திட்டங்களை கொண்டு வந்தார். ஆனால் முத்துராமலிங்க சேதுபதி தான் வளர்ந்த பின்னர் இவரின் மீது பல குற்றச்சாட்டுகள் சொல்லி முத்து இருளப்ப பிள்ளையை ஒரு துரோகியாகவே சித்தரித்து இருப்பதாக வரலாறு சொல்கிறது. இதனால் வெறுப்புற்ற முத்து இருளப்ப பிள்ளை தனது அமைச்சர் பதவியை துறந்தார், அத்துடன் இவரது வரலாறு மறக்கடிக்கப்பட்டது.

பென்னிகுக் பற்றி அந்தோணி முத்து பிள்ளை அன்றைய காலத்தில் பெரிதாக போற்றினார். தண்ணீரில் உனது பெயர் எழுதப்பட்டு இருந்தாலும் இந்த பெரியார் ஆறு ஓடும் வரை உனது பெயர் இருக்கும் என்றார். அப்படிப்பட்ட பெரும் பாரம்பரியம் மிக்க பெரியார் அணையை இப்பொழுது ஏதேதோ காரணம் காட்டி உடைத்துவிட்டு புதிய அணையை வேறொரு இடத்தில் கட்ட இருப்பதாக கேரளா அரசு சட்டசபையில் மசோதா இயற்றி இருப்பது வேடிக்கைக்கு உரியது.

புதிய அணையை கட்டுவதைவிட இருக்கும் அணையை பராமரித்தல் என்பது ஒன்றும் பிரச்சினைக்குரிய விசயம் இல்லை. அணை கட்டப்பட்டு இருக்குமிடம் கேரளா என்றாலும் 999 வருட குத்தகைக்கு தமிழக அரசு இந்த அணை மற்றும் அணையை சுற்றியுள்ள இடங்களை பராமரிக்கும் பொறுப்பினை ஏற்று உள்ளதுதான் பிரச்சினை.

இந்த அணை உடைந்து போகும் அபாயம் என சொல்லி அவதூறு பிரச்சாரங்களை கேரளா அரசு மேற்கொண்டு வருவது மூலம் தமிழர்கள் மலையாளிகள் இடையே உள்ள நல்லுறவை குலைக்கும் வண்ணம் சிலர் செயல்படுவது கண்டனத்துக்குரியது. கேரளாவில் தான் படித்தவர்கள் நிறைய இருக்கிறார்கள் என்றால் முட்டாள்களும் நிறைய இருக்கிறார்கள் என காட்ட இந்த கேரளா அரசு கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுவது வேதனைக்குரியது. செம்மறியாடு போன்ற குணங்கள் கொண்ட மக்கள் பலரை இரண்டு அரசுகளும் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறது. இதனால் பொதுவுடைமை பொருள்களுக்கு சேதம் விளைவிக்கும் செயல்களில் பலர் ஈடுபடுவதால் பதட்டம் நிலவுவதை தவிர்க்க இயலாது. ஒருவர் உண்ணாவிரதம் இருப்பேன் என்கிறார், மற்றொருவர் அதைப் பார்த்து உண்ணாவிரதம் இருப்பேன் என்கிறார். இந்த உண்ணாவிரதம் மூலம் இவர்கள் உயிர் போகாது என்பது இவர்களுக்கு தெரியும் என்பதால் இது போன்ற வித்தைகளை காட்டி மக்களுக்காக போராடுகிறேன் என பூச்சாண்டி காட்டுகிறார்கள்.

இந்த பிரச்சினை ஒருபுறம் இருந்தாலும் தண்ணீர் இல்லாமல் உரிய வசதிகள் இல்லாமல் வாடும் ஏழை விவசாயிகளுக்கு இந்த அரசும் சரி, இதற்கு முந்தைய அரசுகளும் சரி என்ன செய்தது?

தண்ணீர் கொள்ளளவு 142 அடி என இருந்தால் பிரச்சினை வரும் என்கிறது கேரள அரசு. அணையானது வலுவாக இருப்பதாக சில மாதங்கள் முன்னர் ஆராய்ந்த குழு சொல்லியாகிவிட்டது. இந்த மாதம் கூட மேலும் ஒரு குழு சோதனைக்கு வர இருக்கிறதாம். ஒரு அணை வலுவா இல்லையா என்பதை எப்படி சோதிக்கிறார்கள்?

கேரளா அரசு தனது காரியத்தில் சாதிக்க வேண்டுமென நினைத்து எது வேண்டுமெனிலும் செய்துவிடுமோ எனும் அவசியமற்ற அர்த்தமற்ற அச்சம் எழத்தான் செய்கிறது. ஆனால் இதை அரசியல்வாதிகள் பேசினால் பெரும் பிரச்சினை ஆக வாய்ப்புண்டு. அதோடு மட்டுமில்லாமல் சோதனை செய்கிறேன் என செல்பவர்களும், போராட்டம் செய்கிறேன் என அணையின் மீது ஏறி நின்று போர்க்கொடி தூக்குபவர்களும் அணையை உடைச்சிட போறானுங்க எனும் கவலை மட்டுமே எஞ்சி நிற்கிறது ஒரு பாபர் மசூதியை தொலைத்தது போல!