இப்ஸ்விச் எனும் இங்கிலாந்து நாட்டில் உள்ள ஊரில் வசித்து வந்தாள் அந்த பெண். அழகிய மேனி. பளபளக்கும் கண்கள். வாழ்வில் சாதிக்க வேண்டும் எனும் வெறி. பள்ளிபடிப்பு, கல்லூரி எல்லாம் கடந்து தனக்குப் பிடித்தவரை மணமுடித்து தொடங்கிய இந்த பெண்ணின் வாழ்க்கையில் புதிதாய் வந்தான் ஒருவன். பிரேசில் நாட்டில் வசித்து வந்தான். மாநிறம். பண வெறி. நீண்ட மூக்கு.
இருவருக்கும் இணையம் மூலம் மெதுவாக தொடங்கிய நட்பு, ஒரு சில மாதங்களில் அவனை இவளது வீட்டுக்குள் வரவைத்தது. இவளது குடும்பத்தில் நல்ல நண்பன் ஆனான். இங்கிலாந்து வருவதும் போவதுமாய் சில வருடங்கள் இருந்தான். வர இயலாத காலங்களில் தொலைபேசி மூலம், இணையம் மூலம் தொடர்பு கொண்டு இருந்தான். இவர்களுக்குள் எவ்வித தவறான பழக்கங்களும் இல்லை. எவ்விதமான சண்டை சச்சரவு என எதுவும் இல்லை. கணவன், மனைவியின் நட்பினை வெகுவாக சம்பாதித்தான். ஐந்து வருடங்கள் அதற்குள் கடந்து இருந்தன.
சில வருடங்கள் பிரேசில் நாட்டுக்கு அழைத்து இருக்கிறான். அப்பொழுது இவளால் செல்ல வழியில்லாமல் இருந்தது. மறுமுறையும் அழைத்தான்.
'பிரேசில் நாட்டினை சுற்றிப் பார்க்க வருகிறாயா, எனது மனைவி, குழந்தைகள் உன்னைப் பார்க்க ஆவலுடன் இருக்கிறார்கள்' என்றான்.
'சரி வருகிறேன்'
பெண்ணின் கணவன் பலமுறை தடுத்தும் கேளாமல் இந்த பெண் பிரேசில் நாட்டுக்கு சென்றாள். அங்கே விமான நிலையத்தில் இவளை வரவேற்க அவன் இல்லை. அவனது தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டபோது அது உபயோகத்தில் இல்லை என வந்தது. கலங்கியபடியே நின்றாள்.
சிறிது நேரம் கழித்து தொடர்பு கொண்டபோது ஒரு மார்கெட் இடத்திற்கு வர சொன்னான். அங்கே சென்று பார்த்தபோது அவனுடன் ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள்.
மொழி தெரியாத ஊரில் வேதனையுடன் தான் கழித்த நேரங்களை சொல்லியவள் 'எங்கே மனைவி, பிள்ளைகள்?' என்றாள்.
'வீட்டில் இருக்கிறார்கள், பிறகு அழைத்து செல்கிறேன் என தன்னுடன் இந்த பெண்ணை அறிமுகப்படுத்தினான்'
'நான் சில பொருட்கள் ஊருக்கு செல்ல வாங்க வேண்டும்' என இந்த பெண் சொன்னதும் 'இவளை அழைத்துக் கொண்டு போ, நான் ஒரு விசயமாக வேறு இடம் செல்ல வேண்டி இருக்கிறது' என சென்றான்.
பல பொருட்கள் வாங்கியவள் அவனை தொடர்பு கொண்டபோது தொடர்பில் இல்லை. வழக்கம் போல சிறிது நேரம் பின்னர் நீங்கள் இந்த ஹோட்டல் அறைக்கு சென்று தங்குங்கள், எனது மனைவியும் குழந்தைகளும் இப்போது அவர்களது தந்தை ஊருக்கு சென்று விட்டார்கள். வர எப்படியும் சில மாதங்கள் ஆகும் என்று சொன்ன விசயத்தை கேட்டு ஏமாந்து போனாள்.
அதன்படியே அவன் வந்தான். வந்தவன் தன்னிடம் இருந்த பையை தந்தவன் அனைத்து பொருட்களையும் இந்த பையில் வைத்து செல், இந்த பையானது ஒரு வகை மரத்தினால் ஆனது, எனவே சற்று வாடை அடிக்கும், அதைப் பற்றி கவலைப்படாதே, உனக்காக வாங்கி வந்தேன் என தந்துவிட்டு சில இடங்களை காட்டிவிட்டு ஊருக்கு அனுப்பி வைத்தான். இப்படி வாடை அடிக்கிறதே என அவள் சுதாரிக்க வில்லை. இதற்கு முன்னர் போதைப் பொருள் பழக்கம் இல்லாததால் எப்படி இருக்கும் எனும் சிந்தனை அவளுக்கு இல்லை.
விமான நிலையத்தில் சோதனை செய்யப்பட்டபோது அந்த பையினுள் போதைப்பொருள் வைக்கப்பட்டு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. அதைக்கேட்ட மறுநிமிடமே இவள் மயங்கி விழுந்தாள். தன்னை ஏமாற்றிவிட்டானே என மனதுக்குள் புலம்பினாள். விமான சோதனை அதிகாரிகளிடம் எத்தனையோ முறை சொல்லியும் அவளை விடவில்லை. அவர்களுக்கு ஆங்கிலம் புரியாத காரணம் வேறு.
தனக்கும், போதைப்பொருளுக்கும் சம்பந்தம் இல்லை என அழுது பார்த்தாள், எதுவும் நடக்கவில்லை. அவளை சிறையில் அடைத்தார்கள். அவளிடம் காவல் அதிகாரிகள் தவறாக நடக்க முயன்றார்கள். அத்தனை வேதனைகளையும் சுமந்து கொண்டு எப்படியாவது தான் நிரபராதி என நிரூபிக்க வேண்டும் என ஆங்கிலம் தெரிந்த ஒரு அதிகாரியிடம் பேசிப் பார்த்தாள். ஆனால் எவரும் இவளை நம்புவதாக இல்லை. கதறினாள். கெஞ்சினாள்.
விசயம் கணவனுக்கு தெரிந்தது. தன்னுடன் ஒரு வழக்கறிஞர் ஒருவரை அழைத்து வந்து பேசிப் பார்த்தார். எதுவும் நடக்கவில்லை. இவளுடன் பழகியவன் மாயமாக மறைந்து இருந்தான். தான் கொடுத்தனுப்பிய பொருள் கிடைக்காதது கண்டு சுதாரித்து கொண்டான்.
கணவனும் வழக்கறிஞரும் ஒரு திட்டம் தீட்டினார்கள். மருத்துவமனைக்கு அவளை கொண்டு சென்று அங்கே இருந்து அவளை தப்பிக்க சொல்லி ஒரு போலி பாஸ்போர்ட் உருவாக்கி இங்கிலாந்து சென்று விடலாம் என நினைத்தார்கள். இவளுக்கு அந்த தைரியம் வரவில்லை. மருத்துவமனையில் இருந்து தப்பி ஓட முடியாமல் தவித்தாள். தனக்கு தைரியம் வரவில்லை என மீண்டும் சிறைக்கே சென்றாள். இனிமே வாழ்க்கையே சிறையில் தான் என எண்ணி வேதனையுற்றாள். கணவனும் ஒன்றும் செய்வதறியாது திரும்பினார்.
நமது ஊரில் சில தலைவர்கள் பிறந்த நாள் வரும்போது சில கைதிகளை வெளியிடுவது போல அந்த ஊரிலும் செய்யும் வழக்கம் உண்டு. அப்படி ஒரு நாள் வந்தது. அந்த நாளில் இவளையும் விடுதலை செய்தார்கள். தப்பித்தோம் பிழைத்தோம் என இங்கிலாந்து வந்தபோது அதிர்ச்சி காத்து இருந்தது.கணவன் தனது வாழ்க்கை சீரழிந்து போனதாக இவளுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார்.
போதைப் பொருட்கள் பக்கமே தலைவைத்து படுக்காதவர் நட்பு எனும் போதையினால் தனது வாழ்க்கையையே தொலைத்தது மிகவும் கொடுமையான விசயம்.
எந்த புற்றில் எந்த பாம்பு இருக்கும் என எவராலும் கண்டு கொள்ள முடிவதில்லை. நட்புகளே, உறவுகளே நாம் பல வருடங்கள் ஒருவருடன் பழகி இருந்தாலும் மிக மிக எச்சரிக்கையாக இருப்பது நமது பொறுப்பு.