Thursday, 24 November 2011

போதைப் பொருளால் கசங்கிய பெண்

இப்ஸ்விச் எனும் இங்கிலாந்து நாட்டில் உள்ள ஊரில் வசித்து வந்தாள் அந்த பெண். அழகிய மேனி. பளபளக்கும் கண்கள். வாழ்வில் சாதிக்க வேண்டும் எனும் வெறி. பள்ளிபடிப்பு, கல்லூரி எல்லாம் கடந்து தனக்குப் பிடித்தவரை மணமுடித்து தொடங்கிய இந்த பெண்ணின் வாழ்க்கையில் புதிதாய் வந்தான் ஒருவன்.  பிரேசில் நாட்டில் வசித்து வந்தான். மாநிறம். பண வெறி. நீண்ட மூக்கு. 

இருவருக்கும் இணையம் மூலம் மெதுவாக தொடங்கிய நட்பு, ஒரு சில மாதங்களில் அவனை இவளது வீட்டுக்குள் வரவைத்தது. இவளது குடும்பத்தில் நல்ல நண்பன் ஆனான். இங்கிலாந்து வருவதும் போவதுமாய் சில வருடங்கள் இருந்தான். வர இயலாத காலங்களில் தொலைபேசி மூலம், இணையம் மூலம் தொடர்பு கொண்டு இருந்தான். இவர்களுக்குள் எவ்வித தவறான பழக்கங்களும் இல்லை. எவ்விதமான சண்டை சச்சரவு என எதுவும் இல்லை. கணவன், மனைவியின் நட்பினை வெகுவாக சம்பாதித்தான். ஐந்து வருடங்கள் அதற்குள் கடந்து இருந்தன.

சில வருடங்கள் பிரேசில் நாட்டுக்கு அழைத்து இருக்கிறான். அப்பொழுது இவளால் செல்ல வழியில்லாமல் இருந்தது. மறுமுறையும் அழைத்தான். 

'பிரேசில் நாட்டினை சுற்றிப் பார்க்க வருகிறாயா, எனது மனைவி, குழந்தைகள் உன்னைப் பார்க்க ஆவலுடன் இருக்கிறார்கள்' என்றான்.

'சரி வருகிறேன்'

பெண்ணின் கணவன் பலமுறை தடுத்தும் கேளாமல் இந்த பெண் பிரேசில் நாட்டுக்கு சென்றாள். அங்கே விமான நிலையத்தில் இவளை வரவேற்க அவன் இல்லை. அவனது தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டபோது அது உபயோகத்தில் இல்லை என வந்தது. கலங்கியபடியே நின்றாள்.

சிறிது நேரம் கழித்து தொடர்பு கொண்டபோது ஒரு மார்கெட் இடத்திற்கு வர சொன்னான். அங்கே சென்று பார்த்தபோது அவனுடன் ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள். 

மொழி தெரியாத ஊரில் வேதனையுடன் தான் கழித்த நேரங்களை சொல்லியவள் 'எங்கே மனைவி, பிள்ளைகள்?' என்றாள்.

'வீட்டில் இருக்கிறார்கள், பிறகு அழைத்து செல்கிறேன் என தன்னுடன் இந்த பெண்ணை அறிமுகப்படுத்தினான்' 

'நான் சில பொருட்கள் ஊருக்கு செல்ல வாங்க வேண்டும்' என இந்த பெண் சொன்னதும் 'இவளை அழைத்துக் கொண்டு போ, நான் ஒரு விசயமாக வேறு இடம் செல்ல வேண்டி இருக்கிறது' என சென்றான். 

பல பொருட்கள் வாங்கியவள் அவனை தொடர்பு கொண்டபோது தொடர்பில் இல்லை. வழக்கம் போல சிறிது நேரம் பின்னர் நீங்கள் இந்த ஹோட்டல் அறைக்கு சென்று தங்குங்கள், எனது மனைவியும் குழந்தைகளும் இப்போது அவர்களது தந்தை ஊருக்கு சென்று விட்டார்கள். வர எப்படியும் சில மாதங்கள் ஆகும் என்று சொன்ன விசயத்தை கேட்டு ஏமாந்து போனாள். 

அதன்படியே அவன் வந்தான். வந்தவன் தன்னிடம் இருந்த பையை தந்தவன் அனைத்து பொருட்களையும் இந்த பையில் வைத்து செல், இந்த பையானது ஒரு வகை மரத்தினால் ஆனது, எனவே சற்று வாடை அடிக்கும், அதைப் பற்றி கவலைப்படாதே, உனக்காக வாங்கி வந்தேன் என தந்துவிட்டு சில இடங்களை காட்டிவிட்டு ஊருக்கு அனுப்பி வைத்தான். இப்படி வாடை அடிக்கிறதே என அவள் சுதாரிக்க வில்லை. இதற்கு முன்னர் போதைப் பொருள் பழக்கம் இல்லாததால் எப்படி இருக்கும் எனும் சிந்தனை அவளுக்கு இல்லை. 

விமான நிலையத்தில் சோதனை செய்யப்பட்டபோது அந்த பையினுள் போதைப்பொருள் வைக்கப்பட்டு இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. அதைக்கேட்ட மறுநிமிடமே இவள் மயங்கி விழுந்தாள். தன்னை ஏமாற்றிவிட்டானே என மனதுக்குள் புலம்பினாள். விமான சோதனை அதிகாரிகளிடம் எத்தனையோ முறை சொல்லியும் அவளை விடவில்லை. அவர்களுக்கு ஆங்கிலம் புரியாத காரணம் வேறு. 

தனக்கும், போதைப்பொருளுக்கும் சம்பந்தம் இல்லை என அழுது பார்த்தாள், எதுவும் நடக்கவில்லை. அவளை சிறையில் அடைத்தார்கள். அவளிடம் காவல் அதிகாரிகள் தவறாக நடக்க முயன்றார்கள். அத்தனை வேதனைகளையும் சுமந்து கொண்டு எப்படியாவது தான் நிரபராதி என நிரூபிக்க வேண்டும் என ஆங்கிலம் தெரிந்த ஒரு அதிகாரியிடம் பேசிப் பார்த்தாள். ஆனால் எவரும் இவளை நம்புவதாக இல்லை. கதறினாள். கெஞ்சினாள்.

விசயம் கணவனுக்கு தெரிந்தது. தன்னுடன் ஒரு வழக்கறிஞர் ஒருவரை அழைத்து வந்து பேசிப் பார்த்தார். எதுவும் நடக்கவில்லை. இவளுடன் பழகியவன் மாயமாக மறைந்து இருந்தான். தான் கொடுத்தனுப்பிய பொருள் கிடைக்காதது கண்டு சுதாரித்து கொண்டான். 

கணவனும் வழக்கறிஞரும் ஒரு திட்டம் தீட்டினார்கள். மருத்துவமனைக்கு அவளை கொண்டு சென்று அங்கே இருந்து அவளை தப்பிக்க சொல்லி ஒரு போலி பாஸ்போர்ட் உருவாக்கி இங்கிலாந்து சென்று விடலாம் என நினைத்தார்கள். இவளுக்கு அந்த தைரியம் வரவில்லை. மருத்துவமனையில் இருந்து தப்பி ஓட முடியாமல் தவித்தாள். தனக்கு தைரியம் வரவில்லை என மீண்டும் சிறைக்கே சென்றாள். இனிமே வாழ்க்கையே சிறையில் தான் என எண்ணி வேதனையுற்றாள். கணவனும் ஒன்றும் செய்வதறியாது திரும்பினார்.

நமது ஊரில் சில தலைவர்கள் பிறந்த நாள் வரும்போது சில கைதிகளை வெளியிடுவது போல அந்த ஊரிலும் செய்யும் வழக்கம் உண்டு. அப்படி ஒரு நாள் வந்தது. அந்த நாளில் இவளையும் விடுதலை செய்தார்கள். தப்பித்தோம் பிழைத்தோம் என இங்கிலாந்து வந்தபோது அதிர்ச்சி காத்து இருந்தது.கணவன் தனது வாழ்க்கை சீரழிந்து போனதாக இவளுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார்.

போதைப் பொருட்கள் பக்கமே தலைவைத்து படுக்காதவர் நட்பு எனும் போதையினால் தனது வாழ்க்கையையே தொலைத்தது மிகவும் கொடுமையான விசயம். 

எந்த புற்றில் எந்த பாம்பு இருக்கும் என எவராலும் கண்டு கொள்ள முடிவதில்லை. நட்புகளே, உறவுகளே நாம் பல வருடங்கள் ஒருவருடன் பழகி இருந்தாலும் மிக மிக எச்சரிக்கையாக இருப்பது நமது பொறுப்பு. 

Wednesday, 23 November 2011

முஸ்லீம் வீட்டு திருமணம்

மதம் சார்ந்து மனிதர்கள்  வாழ ஆரம்பித்த பின்னர் மதம் எதற்கு என கேட்பவர்கள் சற்று வெளியே நின்று வேடிக்கைப்  பார்க்கவும். 

நான் அடிப்படையில் ஒரு இந்து மதம் ஒட்டிய சமூகத்தை சேர்ந்தவன். எனது உறவினர்கள், உற்றார்கள் என அனைவரும் இந்து மத சமூகத்தை சார்ந்தவர்கள். 

இதற்காக நான் முஸ்லீம் வாத்தியாரிடம் படிக்கமாட்டேன் என்றோ, கிறிஸ்துவ வாத்தியாரிடம் படிக்க மாட்டேன் என்றோ அடம் பிடித்தது கிடையாது. 

என்னுடன் இந்து சமூகத்தை சார்ந்தவர்கள் மட்டுமே பழக வேண்டுமென ஒரு கட்டாயம் கொள்வதும் கிடையாது.

இந்து சமூகத்தை சார்ந்தவன் என்றாலும், பிற மத சம்பிராயதங்களை அதனதன் பாட்டுக்கு விடுவதில் மட்டுமே எனக்கு உரிமை உண்டு. அதை சகட்டுமேனிக்கு விமர்சிக்க எனக்கு எவ்வித உரிமையும் கிடையாது. 

இப்படி ஒரு மதத்தை சார்ந்து வாழ்வது எனினும், அனைவரும் மக்கள் என்கிற உணர்வு இருக்கும் என்கிற படசத்தில் இந்த மதங்களே அவசியம் இல்லை என்றாகிவிடுகிறது. ஆனால் இந்த மதங்கள்  ஒரு சாத்திர சம்பிராதய அடையாளங்களாக இருந்து வருவதை  மாற்றுவது சற்று கடினமானது. 

என்னுடன் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் தோழி ஒருவர் முஸ்லீம் மதத்தினை சார்ந்தவர் என்பதை அறிய கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆகிப்போனது எனக்கு. பொதுவாகவே பெண்களிடம் கலகலப்பாக நான் பேசுவது இல்லை. மேலும், ஒருவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆர்வமும் எனக்கு அத்தனை இல்லை. 

நான்கு வருடங்கள் பின்னர் தான் எனது ஆசிரியர் மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் பெண் இருவரும் கணவன் மனைவி என்பதே எனக்கு தெரிய வந்தது. 

இப்படியெல்லாம் இருக்க இந்த தோழி எனக்கு நல்ல பழக்கமானாள். அப்பொழுதுதான் இவளது திருமணம் நிச்சயிக்கப்பட போவதாகவும் நவம்பர் மாதம் திருமணம் நடைபெற போவதாகவும் சொன்னாள். திருமண பேச்சு பற்றிய விபரம் தெரிந்த பின்னரே இவர் ஒரு முஸ்லீம் என தெரிய வந்தது. அதோடு மட்டுமில்லாமல் நான் சில வருடங்களாக உதவி புரிந்த மற்றொரு பெண் முஸ்லீம் என தெரிய வந்தது. 

முஸ்லீம் என்றால் பர்கா போட்டு இருக்க வேண்டும் போன்ற சட்ட திட்டங்கள் இல்லாமல் இவர்கள் சாதாரணமாக இருந்ததால் இவர்கள் எந்த மதம் என எவராலும் கண்டுபிடிக்க இயலாமல் போனது. இப்படித்தான் அடையாளங்கள் ஏதும் நாம் அணியாமல் போனால் நமக்கு மத முத்திரை குத்தப்படமாட்டாது. மேலும் மதம், கடவுள் பற்றிய விசயங்களை எவரும் ஆய்வகங்களில் அத்தனை பெரிதாக விவாதித்தது இல்லை. 


நான் சில நாட்களாக தாடி வளர்த்து இருந்தேன். சில தினங்கள் முன்னர் கோவிலுக்கு சென்றபோது அங்கிருந்த சிவாச்சாரியார், ஐயப்பனுக்கு மாலை போடப் போறீங்களா என கேட்டார். இல்லையே என சொன்னபிறகுதான் தெரிந்தது, அட தாடி. பிறகுதான் தெரிந்தது இந்த தாடி முஸ்லீம்களின் அடையாளம் என.

சில மாதங்களுக்கு முன்னரே திருமணத்திற்கு வருகிறோம் என இவரிடம் உறுதி கொடுத்தாகிவிட்டது. இரண்டு மணி நேர பயணத்திற்கு பின்னர் திருமணம் நடக்க இருக்கும் ஊரை அடைந்தோம். ஒரு ஹோட்டலில் அன்று இரவு தங்க அறை எடுத்து இருந்தோம்.

மதியம் மூணு மணிக்கெல்லாம் சென்று விட்டதால் அந்த ஊரை சுற்றிப் பார்க்க சென்றோம், எங்கு பார்த்தாலும் ஆசிய மக்கள். சரவண பவன், சென்னை தோசா, என தமிழ்கடைகள் இருந்தன. சற்று தள்ளிப் போனால் இண்டிகோ, பீஸ்ட் இந்தியா என்றெல்லாம் கடைகள். நான்கு மணி ஆகி இருந்தது, சாப்பிட வேண்டும் என மனைவியும் மகனும் விரும்பியதால் இண்டிகோ ஹோட்டலில் சாப்பிட்டோம். இன்னும் சற்று நேரத்திற்கெல்லாம் திருமணத்திற்கு சென்றுவிடுவோம், அங்கு சென்று சாப்பிடலாம் என நினைத்து இருந்ததால் குறைவாகவே சாப்பிட்டேன்.

சில கடைகளையும் சுற்றிப் பார்த்துவிட்டு, லண்டனில் இல்லாத துணி எல்லாம் இங்கே இருக்கிறது, மறுமுறை இந்த ஊருக்கு வர வேண்டும் என நினைப்புடன் ஹோட்டலுக்கு சென்று இந்திய உடையில் ஏழு மணி முப்பது நிமிட திருமணத்திற்கு ஆறு மணி நாற்பத்தினைந்து நிமிடத்திற்கு சென்று விட்டோம்.

மிகப்பெரிய கட்டிடம், அழகாக அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. வெகு சிலரே ஆங்காங்கே அமர்ந்து இருந்தார்கள். எங்களை சைவம் என குறிப்பிட்டு இருந்த ஒரு மேசையில் அமர வைத்தார்கள். எனது வேலை பார்க்கும் இடத்தில் இருந்து நண்பர்கள் வர இருப்பதாக சொன்னார்கள், ஆனால் எவரையும் காணவில்லை. மணமேடை போடப்பட்டு இருந்தது. ஆனால் அங்கே யாரும் இல்லை. மணி ஏழு முப்பது தொட்டது. மணமேடையில் எவருமே இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் வந்து சேர்ந்தார்கள். யார் எந்த மதத்தினர் என அடையாளம் காண இயலவில்லை. தோழியின் அம்மாவும், அப்பாவும் எங்களை வரவேற்பு செய்து விட்டு போனார்கள். தாடி முஸ்லீம்களின் அடையாளம் அல்ல, தனி மனிதர்களின் விருப்ப அடையாளம் என புரிந்தது.

மணி எட்டு ஆனது. எனது நண்பர்கள் வந்தார்கள், அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட மேசையில் சென்று அமர்ந்து கொண்டார்கள். மணி எட்டு முப்பது தொட்டது. திருமண மேடை அப்படியேதான் இருந்தது. அப்பொழுதுதான் அப்பளம் வைத்து விட்டு போனார்கள். அப்பாடா என இருந்தது, அதுவரை தண்ணீர், மற்றும் பழச்சாறு மட்டுமே! நல்லவேளை சாப்பிட்டோம் என நினைத்து கொண்டோம்.

இந்த வேளையில் எங்களது மேசையில் எவருமே அமர வரவில்லை. இரண்டு வாலிபர்கள், அவர்களது அம்மா வந்தார்கள். இது சைவ மேசை என்றதும், இன்னும் எத்தனை மேசை மாற வேண்டுமோ என எழுந்து சென்றார்கள். அதன் பின்னர் ஒரு கணவர், மனைவி வந்தார்கள். ஆனால் அவர் முஸ்லீம் என பார்த்தவுடன் அடையாளம் சொல்ல இயலவில்லை. அவர் எங்களுடன் பேசினார். அப்பொழுதுதான் முஸ்லீம் திருமணம் குறித்து பல விசயங்கள் சொன்னார். இத்தனை நேரமாகிறதே என்றபோது குடும்பத்தை பொறுத்தது என்றார். எனது கல்யாணம் இங்குதான் நடந்தது, சரியான நேரத்தில் நடந்து முடிந்தது, மேலும் முஸ்லீம்களில் வெவ்வேறு சமூகம் உண்டு என சொல்லிக் கொண்டார். எனது தோழி இருக்கும் சமூகத்தில் அத்தனை கட்டுப்பாடு இல்லை எனவும், ஆனால் மணமகனின் சமூகம் மிகவும் கட்டுப்பாடானது என்று சொன்னார்.

அப்பொழுது மணமகன் வந்துவிட்டார் என அறிவிப்பு வந்தது. நிறைய மேசைகள் மண மேடையின் அருகில் காலியாகவே இருந்தது. நாங்கள் கூட என்ன இப்படி இருக்கிறதே என நினைத்து இருந்தோம். சிறிது நேரத்தில் மணமகனுடன் பெரிய பட்டாளமே வந்து இறங்கியது. அனைவரும் சென்று அமர அனைத்து மேசைகளும் நிறைந்தன. தோழியை காணவே இல்லை. பாகிஸ்தான் பேருந்து ஒன்றில் மாப்பிள்ளை வந்து இறங்கினார் என பேருந்தினை காண ஓடினோம். பேருந்து அலங்கரிக்கப்பட்டு அருமையாக இருந்தது.

மணமகன் மேடைக்கு செல்லவே இல்லை. சிறிது நேரத்தில் மணமகனுடன் பலர் இணைந்து முதல் மாடிக்கு சென்றார்கள். மணி பத்து ஆகிவிட்டது. சிறிது நேரம் முன்னர் தான் ரொட்டியும், காய்கறி வகைகளும் கொண்டு வந்து வைத்தார்கள். நாங்கள் சைவ மேசை என அமர்ந்து இருக்க அசைவம், சைவம் என எல்லாம் கொண்டு வந்து வைத்தார்கள். மனிதர்களால் எங்கள் மேசையும் நிறைந்துவிட்டது.

மணமேடையில் திருமணம் நடக்கும் என நினைத்தால் திடீரென திருமணம் முடிந்துவிட்டது என சொன்னார்கள். மாடியில் நின்று படம் எடுத்து கொண்டிருந்தார்கள். பக்கத்தில் அமர்ந்து இருந்த பெண்மணியிடம் விசாரித்தோம். இமாம் என்பவர் இந்த திருமணத்தை கீழே நடத்த சம்மதிக்கவில்லை, அதனால் மாடிக்கு சென்று நடத்தி இருக்கிறார் என்றார். எங்கே மணமகள் என்றோம்? மணமகள் வர தேவையில்லை. மணமகளிடம் தனியாக சம்மதமா என மூன்று முறை கேட்பார்கள், சம்மதம் சொன்னதும் இரண்டு நபர் சென்று சம்மதம் சொல்வார்கள். திருக்குரானில் ஒரு பகுதி ஓதப்படும். பின்னர் இருவருக்கும் விவாகரத்து நடந்தால் மணமகளுக்கு எவ்வளவு பணம் தருவது குறித்து பேசி ஒரு கையொப்பம் இடுவார்கள். மணமகன் தரும் வரதட்சணை. இந்த பணம் உடனே தர வேண்டிய அவசியம் இல்லையாம்.

அப்படி கையொப்பம் இட்டவுடன் திருமணம் முடிந்ததாக அறிவிக்கப்படும் என்றார். எனக்குள் ஒலித்தது திருமணம் நடக்கும் முன்னரே விவகாரத்தா? அதற்கேற்றார்போல முஸ்லீம்கள் மிகவும் பிராக்டிகலாக இருக்க விருப்படுகிறார்கள், திருமண வாழ்வில் எதுவும் நடக்கும் என்பதால் பெண்ணுக்கு பாதுகாப்பு கருதி இவ்வாறு செய்கிறார்கள் என்றார். அது அந்த காலத்து சம்பிராதயம் என்றே தோன்றியது. ஏனெனில் அந்த காலத்தில் முஸ்லீம் பெண்கள் வேலைக்கு செல்வதில்லை, எனவே அவரது குடும்பம் கணவனை நம்பியே இருக்கும், அதனால் இப்படி ஒரு சட்டம் இருக்கலாம் என தோன்றியது.

பின்னர் மணமகன் மேடையில் அமர, மணமகள் வந்தார். அதற்குள் சோறு, சாம்பார் என சாப்பிட்டு முடித்து இருந்தோம். மணி பதினொன்று மேல் ஆனது. வாழ்த்துகள் தெரிவித்து விட்டு ஹோட்டல் வந்து சேர்ந்தோம்.

புரோகிதர், யாகம் வளர்த்தல், மந்திரம் செபித்தல் என எதுவும் இல்லாமல் இந்துக்கள் நடத்தும் சீர்திருத்த கல்யாணம் என்பது முஸ்லீம்களின் கல்யாணம் தான் போல.

எங்களை இந்து என்று எவருமே அடையாளம் காணவில்லை. :) மதம் நமக்கு அவசியமில்லாத ஒன்று என்பது எனக்கு மிகவும் அழுத்தமாகவே புரிந்தது. 

Monday, 21 November 2011

ஒரு சினிமா தயாரிப்பாளரின் பைத்தியகாரத்தனம்

திருமோகூர் கோவிலில் சரியாக சொன்னபடி ஏழு மணிக்கு அனைவரும் திரண்டார்கள். பக்கத்து ஊர்களில் இருந்தும் மக்கள் வந்து இருந்தார்கள்.

வேல்முருகன் கம்பீரமான குரலில் பேசத் தொடங்கினான். 

'இந்த படம் எடுக்க குறைஞ்சது ஒரு வருடம் ஆகும். நீங்க எல்லாம் இந்த ஊர்லதான் இருக்கனும். உங்களுக்கு தினமும் வேலை இருக்கு. யார் யாருக்கு என்ன சம்பளம், எப்படியெல்லாம் படம் எடுக்க போறோம் அப்படிங்கிற விவரம் எல்லாம் இந்த டாகுமென்ட்ல இருக்கு. இதை எல்லாம் படிச்சி பாருங்க. சுருக்கமா சொல்ல போனா பதினைஞ்சி ஏக்கர் தரிசு நிலத்தை நீங்க எல்லாரும் சேர்ந்து பண்பட்ட நிலமா மாத்தி அதுல விவசாயம் செய்யனும். அந்த நிலத்துல சாகுபடி பண்ணனும், அது ஒரு போகமா இருக்கலாம், அல்லது ரெண்டு போகமா இருக்கலாம். நிலத்தை பண்படுத்த எப்படியும் குறைஞ்சது மூணு மாசம் ஆகும். நீங்கதான் உழைக்க போறீங்க. இங்க என்ன நடக்குது அப்படிங்கிற விவரம் எல்லாம் என்னோட இணையதளத்துல எழுதி படங்கள் எல்லாம் போட்டு வருவேன். எப்படி வேலை செய்றீங்க எல்லாம் படம் எடுத்து இணையத்துல எழுதுவேன். இப்படி நடக்கிற விசயங்களை கதையோட இணைச்சி சுவராஸ்யமா சொல்றதுதான் நம்மோட 'நன் செய்' படம்.   உங்களுக்கு மேற்கொண்டு இந்த படத்துல நடிக்க விருப்பம் இருந்தா, இங்க இருக்கலாம், அப்படியில்லைன்னா நீங்க கிளம்பி போகலாம். வேறு படத்தில கமிட் ஆகி இருந்தா அந்த படம் சம்பந்தப்பட்டவங்களுக்கு தகவல் சொல்லி அனுப்பிருங்க'

வேல்முருகனுடன் தங்கி இருந்த மூன்று இயக்குனர்கள் புன்னகை முகத்துடன் இருந்தார்கள். பின்னர் வந்து சேர்ந்த அனைவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். சிலர் இதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது என பேசிக்கொண்டார்கள். 

'எதுக்கு சார் இதெல்லாம், ஒரு காட்சியில தரிசு நிலத்தை காட்டுவோம், அடுத்த காட்சியில விவசாயம் ஆயிருச்சின்னு விளைநிலத்தை காட்டுவோம். இதுக்கு போய் நாங்க எல்லாம் மாடா உழைச்சி தரிசு நிலத்தை விளை நிலமா மாத்தனுமா. நடிக்க சொல்வீங்கன்னு பார்த்தா நிசமாவே வாழ சொல்றீங்களே, என்ன பைத்தியகாரத்தனம் இது, நீங்க சரியான பைத்தியம்' என ஒருவர் உயர்ந்த குரலில் பேசினார். 

'சினிமான்னு சொல்லிக்கிட்டு அதை சாதிக்கிறான், இதை சாதிக்கிறான் அப்பிடின்னு ஒரு ஹீரோவை படத்துல காமிக்கிறது, அவன் தான் உலகத்துல  ரொம்ப நல்லவன்னு காட்டுறது,  ஊழலை ஒழிக்கிறான் அப்படின்னு ஊழல் பண்றவனைய படத்துல நடிக்க சொல்றது, பள்ளிக்கூடம் பக்கமே போயிருக்க மாட்டான் அவனையெல்லாம் ஐ பி எஸ், ஐ எ எஸ், டாக்டர் அப்படின்னு படத்துல காட்டுறது எல்லாம் பைத்தியகாரத்தனமா தெரியலையா.பொழுதுபோக்கு அப்படின்னு சொல்லிக்கிட்டு மொத்த சமூகத்தையும் பைத்தியமாக்கி வைச்சிருக்க இந்த சினிமா, சமூக அக்கறை, சாக்கடை திருத்தம் அப்படின்னு சொல்லிக்கிட்டு, கடையில கஷ்டப்பட்டு உழைக்கிறவங்களோட வறுமையை, கொடுமையை படமா காட்டுறோம்னு காசு பணத்தை அள்ளி பைக்குள்ள போட்டுகிறது முதற்கொண்டு இப்படி அடவாடித்தனம் பண்ற மத்தவங்க எல்லாம் நல்லவங்க, சினிமாவுல சொல்லப்போற சமூக சிந்தனைய வாழ்க்கையா வாழ்ந்து காட்டுங்க அப்படின்னு சொல்ற நான் பைத்தியகாரன், சரிதான். இந்த சினிமா மூலம் ரொம்ப நல்ல விசயங்கள் பண்ணலாம் அப்படிங்கிறதைத்தான் சமூகத்துக்கு சொல்லப்போறேன், இஷ்டம் இருந்தா இருங்க, இல்லைன்னா போகலாம்' 

வந்தவர்களில் சிலர் மட்டுமே களைந்து சென்றார்கள். மற்றவர்கள் சம்மதம் என சொல்லி நின்றார்கள். 

படம் தொடங்கியது. அனைவரும் தரிசு நிலத்தை பண்படுத்த வேலையாட்களாக இறங்கினார்கள். பூஜை என்ற பெயரில் காசு பணத்தை வீணாக்குவது, விளம்பரம் என்ற பெயரில் காசு பணத்தை கரியாக்குவது என இல்லாமல் படம் இணையதளத்தில் அறிவிப்புடனே தொடங்கியது. சில நாட்களில் படத்திற்கான காட்சிகள் எடுக்கப்பட்டன. படம் தொடங்கிய சில நாட்களில் இன்னும் சிலர் பிரிந்து சென்றார்கள். 

பண்படுத்தப்பட்ட நிலம், விளைச்சலில் இறங்கியது. இறுதியாக இருநூற்றி முப்பத்து ஆறு பேர் கொண்ட அந்த படக்குழு பெருமிதம் கொண்டது. தினமும் விவசாய வேளைகளில் தங்களை ஈடுபடுத்தி கொண்டார்கள். இணையதளம் மூலம் பரவிய செய்தியினால் பணம் நன்கொடையாகவும் வந்து கொண்டிருந்தது. 

படத்திற்கான காட்சிகளும் எடுத்து முடிக்கப்பட்டன. அனைவரும் சந்தோசம் கொண்டார்கள். தாங்கள் விளைத்த நிலத்தில் தாங்களே அறுவடை செய்தார்கள். நன் செய் படமும் வெளியானது. 

ஒரு படத்தை எடுத்து வெளியிட்ட சந்தோசத்தை விட ஒரு தரிசு நிலத்தை விளைநிலமா மாத்துன திருப்திதான் ரொம்ப பெரிசு என இந்த படத்தில் ஈடுபட்டவர்கள் சொல்லிக்கொண்டார்கள். கால காலத்திற்கும் விவசாயம் செய்வது என முடிவு கொண்டார்கள். அவர்களைக் கொண்டே எடுக்க இருக்கும் அடுத்த படத்துக்கிற்கான அறிவிப்பை வெளியிட்டார் வேல்முருகன்.  படத்தின் பெயர் 'குறைவற்ற செல்வம்' 

சுத்தம் நிறைந்த நோயற்ற பகுதிகள் உருவாக்க வேண்டும் என்பதுதான் படத்தின் கதை. விவசாயத்தோடு மாசு அற்ற நகரங்கள் உருவாக அந்த படக்குழு தமது புது படத்தை தொடங்கியது. 

இப்படித்தான் படைப்பாளிகளும், எழுத்தாளர்களும் தங்களது சமூகம் பற்றிய சிறந்த எண்ணங்களை கற்பனை மூலம் வெளிக்கொண்டு வருகிறார்கள். ஆனால் உண்மையில் அவை எல்லாம் உண்மையாக நடப்பது அரிதாகவே இருக்கின்றது. 

இதுதான் வாழ்க்கை என்றான பின்னர் எவரை குறைபட்டு என்ன பிரயோசனம். திருமோகூருக்கு அருகில் பதினைந்து ஏக்கர் நிலம் இன்னும் தரிசாகவே இருக்கிறது!