திருமோகூர் கோவிலில் சரியாக சொன்னபடி ஏழு மணிக்கு அனைவரும் திரண்டார்கள். பக்கத்து ஊர்களில் இருந்தும் மக்கள் வந்து இருந்தார்கள்.
வேல்முருகன் கம்பீரமான குரலில் பேசத் தொடங்கினான்.
'இந்த படம் எடுக்க குறைஞ்சது ஒரு வருடம் ஆகும். நீங்க எல்லாம் இந்த ஊர்லதான் இருக்கனும். உங்களுக்கு தினமும் வேலை இருக்கு. யார் யாருக்கு என்ன சம்பளம், எப்படியெல்லாம் படம் எடுக்க போறோம் அப்படிங்கிற விவரம் எல்லாம் இந்த டாகுமென்ட்ல இருக்கு. இதை எல்லாம் படிச்சி பாருங்க. சுருக்கமா சொல்ல போனா பதினைஞ்சி ஏக்கர் தரிசு நிலத்தை நீங்க எல்லாரும் சேர்ந்து பண்பட்ட நிலமா மாத்தி அதுல விவசாயம் செய்யனும். அந்த நிலத்துல சாகுபடி பண்ணனும், அது ஒரு போகமா இருக்கலாம், அல்லது ரெண்டு போகமா இருக்கலாம். நிலத்தை பண்படுத்த எப்படியும் குறைஞ்சது மூணு மாசம் ஆகும். நீங்கதான் உழைக்க போறீங்க. இங்க என்ன நடக்குது அப்படிங்கிற விவரம் எல்லாம் என்னோட இணையதளத்துல எழுதி படங்கள் எல்லாம் போட்டு வருவேன். எப்படி வேலை செய்றீங்க எல்லாம் படம் எடுத்து இணையத்துல எழுதுவேன். இப்படி நடக்கிற விசயங்களை கதையோட இணைச்சி சுவராஸ்யமா சொல்றதுதான் நம்மோட 'நன் செய்' படம். உங்களுக்கு மேற்கொண்டு இந்த படத்துல நடிக்க விருப்பம் இருந்தா, இங்க இருக்கலாம், அப்படியில்லைன்னா நீங்க கிளம்பி போகலாம். வேறு படத்தில கமிட் ஆகி இருந்தா அந்த படம் சம்பந்தப்பட்டவங்களுக்கு தகவல் சொல்லி அனுப்பிருங்க'
வேல்முருகனுடன் தங்கி இருந்த மூன்று இயக்குனர்கள் புன்னகை முகத்துடன் இருந்தார்கள். பின்னர் வந்து சேர்ந்த அனைவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். சிலர் இதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது என பேசிக்கொண்டார்கள்.
'எதுக்கு சார் இதெல்லாம், ஒரு காட்சியில தரிசு நிலத்தை காட்டுவோம், அடுத்த காட்சியில விவசாயம் ஆயிருச்சின்னு விளைநிலத்தை காட்டுவோம். இதுக்கு போய் நாங்க எல்லாம் மாடா உழைச்சி தரிசு நிலத்தை விளை நிலமா மாத்தனுமா. நடிக்க சொல்வீங்கன்னு பார்த்தா நிசமாவே வாழ சொல்றீங்களே, என்ன பைத்தியகாரத்தனம் இது, நீங்க சரியான பைத்தியம்' என ஒருவர் உயர்ந்த குரலில் பேசினார்.
'சினிமான்னு சொல்லிக்கிட்டு அதை சாதிக்கிறான், இதை சாதிக்கிறான் அப்பிடின்னு ஒரு ஹீரோவை படத்துல காமிக்கிறது, அவன் தான் உலகத்துல ரொம்ப நல்லவன்னு காட்டுறது, ஊழலை ஒழிக்கிறான் அப்படின்னு ஊழல் பண்றவனைய படத்துல நடிக்க சொல்றது, பள்ளிக்கூடம் பக்கமே போயிருக்க மாட்டான் அவனையெல்லாம் ஐ பி எஸ், ஐ எ எஸ், டாக்டர் அப்படின்னு படத்துல காட்டுறது எல்லாம் பைத்தியகாரத்தனமா தெரியலையா.பொழுதுபோக்கு அப்படின்னு சொல்லிக்கிட்டு மொத்த சமூகத்தையும் பைத்தியமாக்கி வைச்சிருக்க இந்த சினிமா, சமூக அக்கறை, சாக்கடை திருத்தம் அப்படின்னு சொல்லிக்கிட்டு, கடையில கஷ்டப்பட்டு உழைக்கிறவங்களோட வறுமையை, கொடுமையை படமா காட்டுறோம்னு காசு பணத்தை அள்ளி பைக்குள்ள போட்டுகிறது முதற்கொண்டு இப்படி அடவாடித்தனம் பண்ற மத்தவங்க எல்லாம் நல்லவங்க, சினிமாவுல சொல்லப்போற சமூக சிந்தனைய வாழ்க்கையா வாழ்ந்து காட்டுங்க அப்படின்னு சொல்ற நான் பைத்தியகாரன், சரிதான். இந்த சினிமா மூலம் ரொம்ப நல்ல விசயங்கள் பண்ணலாம் அப்படிங்கிறதைத்தான் சமூகத்துக்கு சொல்லப்போறேன், இஷ்டம் இருந்தா இருங்க, இல்லைன்னா போகலாம்'
வந்தவர்களில் சிலர் மட்டுமே களைந்து சென்றார்கள். மற்றவர்கள் சம்மதம் என சொல்லி நின்றார்கள்.
படம் தொடங்கியது. அனைவரும் தரிசு நிலத்தை பண்படுத்த வேலையாட்களாக இறங்கினார்கள். பூஜை என்ற பெயரில் காசு பணத்தை வீணாக்குவது, விளம்பரம் என்ற பெயரில் காசு பணத்தை கரியாக்குவது என இல்லாமல் படம் இணையதளத்தில் அறிவிப்புடனே தொடங்கியது. சில நாட்களில் படத்திற்கான காட்சிகள் எடுக்கப்பட்டன. படம் தொடங்கிய சில நாட்களில் இன்னும் சிலர் பிரிந்து சென்றார்கள்.
பண்படுத்தப்பட்ட நிலம், விளைச்சலில் இறங்கியது. இறுதியாக இருநூற்றி முப்பத்து ஆறு பேர் கொண்ட அந்த படக்குழு பெருமிதம் கொண்டது. தினமும் விவசாய வேளைகளில் தங்களை ஈடுபடுத்தி கொண்டார்கள். இணையதளம் மூலம் பரவிய செய்தியினால் பணம் நன்கொடையாகவும் வந்து கொண்டிருந்தது.
படத்திற்கான காட்சிகளும் எடுத்து முடிக்கப்பட்டன. அனைவரும் சந்தோசம் கொண்டார்கள். தாங்கள் விளைத்த நிலத்தில் தாங்களே அறுவடை செய்தார்கள். நன் செய் படமும் வெளியானது.
ஒரு படத்தை எடுத்து வெளியிட்ட சந்தோசத்தை விட ஒரு தரிசு நிலத்தை விளைநிலமா மாத்துன திருப்திதான் ரொம்ப பெரிசு என இந்த படத்தில் ஈடுபட்டவர்கள் சொல்லிக்கொண்டார்கள். கால காலத்திற்கும் விவசாயம் செய்வது என முடிவு கொண்டார்கள். அவர்களைக் கொண்டே எடுக்க இருக்கும் அடுத்த படத்துக்கிற்கான அறிவிப்பை வெளியிட்டார் வேல்முருகன். படத்தின் பெயர் 'குறைவற்ற செல்வம்'
சுத்தம் நிறைந்த நோயற்ற பகுதிகள் உருவாக்க வேண்டும் என்பதுதான் படத்தின் கதை. விவசாயத்தோடு மாசு அற்ற நகரங்கள் உருவாக அந்த படக்குழு தமது புது படத்தை தொடங்கியது.
இப்படித்தான் படைப்பாளிகளும், எழுத்தாளர்களும் தங்களது சமூகம் பற்றிய சிறந்த எண்ணங்களை கற்பனை மூலம் வெளிக்கொண்டு வருகிறார்கள். ஆனால் உண்மையில் அவை எல்லாம் உண்மையாக நடப்பது அரிதாகவே இருக்கின்றது.
இதுதான் வாழ்க்கை என்றான பின்னர் எவரை குறைபட்டு என்ன பிரயோசனம். திருமோகூருக்கு அருகில் பதினைந்து ஏக்கர் நிலம் இன்னும் தரிசாகவே இருக்கிறது!