Wednesday, 16 November 2011

இங்கே சினிமா கதைகள் விற்கப்படும்

 'அப்பா நீங்க சொன்ன மாதிரி டிகிரி முடிச்சிட்டேன், ரெண்டு கோடி ரூபா கொடுங்க'

'கம்ப்யூட்டருக்கு படிச்சிட்டு எதுக்கு என்னோட மானத்த வாங்கற'

'இந்த கம்ப்யூட்டரை வைச்சித்தான் நான் நினைச்சதை செய்யப் போறேன், சொன்ன வாக்கு மீறாதீங்கப்பா'

'வட்டிக்கு விட்டு, காடு கழனில உருண்டு விழுந்து சம்பாதிச்சது, இன்னைக்கு விவசாயத்துக்கு வான்னு கூப்பிட்டா யாரும் வேலைக்கு ஆளு கிடைக்கலை, அப்படியே ரொக்கமா ரெண்டு கோடி ரூபா கொடுக்கச் சொன்னா எனக்கு மனசு வரலை'

'பணத்தை தனியா எடுத்து வைச்சிக்கோங்க, நான் கேட்கறப்ப கொஞ்சம் கொஞ்சமா கொடுத்தா போதும்'

'நான் சொல்லி இனி நீ கேட்கவா போற, எப்ப மெட்ராசு கெளம்புற'

'நான் எதுக்கு சென்னைக்கு போகனும், இங்கேயே இருந்துதான் செய்யப் போறேன்'

'ஒரு படத்தை இங்கே இருந்து எப்படிடா எடுப்ப, எல்லோருக்கும் ஹீரோ ஆகனும் டைரக்டர் ஆகனும்னு ஆசை இருக்கும், நீ பட தயாரிப்பளாரா ஆசைப் படறியே, எங்க போய் என் தலைய முட்டிக்கிறது'

'எல்லாரும் படம்னா சென்னைக்கு ஓடுறாங்களே, அதை மாத்தி மதுரைக்கு ஓடி வர வைக்கனும்'

'நிறைய செலவு ஆகுமேடா'

'ஆகாது'

'என்னமோ செய்டா போ'

'முன் பண தொகையா பத்து லட்சம் கொடுங்க'

இப்படித்தான் மதுரையில் அருகில் இருக்கும் திருமோகூரில் இருந்து ஒரு தயாரிப்பாளர் உருவாக இருக்கிறார்.

அவரது கனவுகள் நிறைவேறியதா? அவர் தனது திட்டங்களை எப்படி செயல்படுத்தினார்? விரைவில் தொடரும்.




Monday, 14 November 2011

மனைவியின் மயோர்கா -1

இந்த வருடம் தான் இந்தியாவுக்கு போகலையே, எத்தனைவாட்டிதான் இங்கிலாந்தில் உள்ள இடங்களையே சுற்றிப் பார்ப்பது, அதனால் ஐரோப்பாவில் உள்ள ஏதேனும் ஒரு நாட்டிற்கு செல்லலாமா என எனது மனைவி அவரது ஆசையை சொல்லி வைக்க, அந்த ஆசையை நிறைவேற்றி வைக்கும் முயற்சியில் இறங்கினேன்.

அவர் சொன்ன இரண்டு இடங்களும் விமானத்தில் பயணம் செய்யும்படிதான் இருந்தது. அதில் ஒன்று ஸ்பெயின் நாட்டின் குட்டித் தீவான டேனரீப் (1 ) மற்றொன்று ஸ்பெயின் நாட்டின் குட்டி தீவான மயோர்கா (2 )

                                             1 .
          
                                            2




டேனரீப் எனும் இடத்தில் தான் சில வருடம் முன்னர் ஒருவன் வெளிநாட்டில் இருந்து சுற்றுலா பயணியாக வந்திருந்த ஒரு பெண்ணின் கழுத்தை வெட்டி சர்வ சாதாரணமாக சாலையில் நடந்து சென்றான் என்பதை படித்தபோது திகிலுடனே இருந்தது. அதனால் என்ன, டேனரீப் செல்லலாம் என முடிவு எடுத்து நான் எப்பொழுதும் ஹோட்டல்கள் முன்பதிவு செய்யும் தளத்தில் சென்று ஒரு ஐந்து நட்சித்திர ஹோட்டல் பார்த்தோம். அந்த ஹோட்டல் அறை விலை மிகவும் குறைச்சலானதாக இருந்ததை பார்த்து ஹோட்டலை முன்பதிவு செய்துவிட்டோம்.

பின்னர் விமானத்திற்கு பயணச்சீட்டு தேடியபோது நமது ஊருக்கே சென்று வந்துவிடலாம் போலிருக்கிறதே எனும் அளவிற்கு விலை மிகவும் அதிகமாகவே இருந்தது. டேனரீப் வேண்டாம் என முடிவு செய்து மயோர்காவைத் (majorca) தேர்ந்தெடுத்தோம். டேனரீப் ஹோட்டலை வேண்டாம் என சொல்லிவிட்டு மயோர்காவில் ஒரு ஹோட்டல் முடிவு செய்தாகிவிட்டது. விமானத்தளத்தில் இருந்து அந்த ஹோட்டல் மிகவும் அதிக தொலைவு என அதனையும் ரத்து செய்துவிட்டு மற்றொரு ஹோட்டலை தேர்வு செய்தோம். சற்று விலை குறைச்சலாகவே அப்போது இருந்தது. உடனே ஹோட்டலை முன்பதிவு செய்துவிட்டு விமானம் தேடினோம்.

ஐரோப்பா பயணம் எனில் நான் அதிகம் விரும்பி தேர்ந்தெடுக்கும் விமானம் ஈசிஜெட்.  நான் முதன் முதலில் கிளாஸ்கோ சென்றபோதும் சரி, சுவிட்சர்லாந்து சென்றபோதும் சரி இந்த விமானம்தான் தேர்ந்தெடுத்தேன். இதற்கு முக்கிய காரணம் பயண சீட்டு சற்று குறைந்த விலையில் கிடைக்கும். டேனரீப்க்கு விலை மிகவும் அதிகமாக இருந்தது, ஆனால் மயோர்காவுக்கு சற்று விலை குறைந்தே இருந்தது. சரி என இந்த விமானத்தில் பதிவு செய்தோம்.

மிகவும் ஆர்வமாகவும் அதே நேரத்தில் பயமாகவும் இருந்தது. நான், எனது மனைவி, பையன் மட்டுமே. நன்றாக வெயில் அடிக்க வேண்டும் என வேண்டிக்கொண்டோம். இங்கிலாந்தில் இந்தியாவைப் போலவே இடது பக்கம் வாகனம் செலுத்துவார்கள். ஆனால் ஐரோப்பா நாடுகளில் வலது பக்கம் வாகனம் செலுத்த வேண்டும். இதற்கு முன்னர் இவ்வாறு வாகனம் ஓட்டி பழக்கம் இல்லை. எனவே மயோர்காவில் சுற்றிப் பார்க்க வேண்டும் எனில் வாடகைக்குத்தான் காரை அழைக்க வேண்டும் எனும் நினைப்பு வேறு. துபாய் சென்றபோது மிகவும் பாதுகாப்பாக இருந்தது நினைவில் வந்து போனது, அதைப்போலவே இங்கேயும் பாதுகாப்பாக இருக்குமா எனும் அச்சம் தொற்றிக்கொண்டது. இதுகுறித்து மனைவியிடம் சொன்னபோது, நாம் ஹோட்டலில் தங்கி பொழுதை கழித்துவிட்டு வந்துவிடலாம் என்றார். எனக்கு பெருத்த ஏமாற்றமாக இருந்தது.

பயண நாள் நெருங்கியது. பொதுவாகவே உறவினர் எவராவது விமான நிலையம் வரை அனுப்பிவிட்டு செல்வார்கள், அது போல திரும்பி வரும்போது எவராவது வந்து அழைத்து செல்வார்கள். ஆனால் இந்த முறை காரை விமான நிலையத்திலே விட்டுவிட்டு செல்லலாம் என முடிவெடுத்தோம். நான்கு நாட்கள் பயணம். காரை விமான நிலையத்தில் விட்டு செல்ல ஒரு தளத்தில் பதிவு செய்தோம்.

கார் பத்திரமாக இருக்குமா? எனும் கேள்வி மனதுள் எழுந்தது, இருப்பினும் தைரியத்துடன் காரை நிறுத்திவிட்டு செல்லலாம் என முடிவுடன் கிளம்பினோம். பயண நாள் வந்தது. காரை எடுத்துக்கொண்டு விமான நிலையத்திலிருந்து இருபது நிமிட தொலைவில் நிறுத்திவிட்டு (3 )கையில் கார் சாவியினை எடுத்துக்கொண்டு அங்கிருந்து ஒரு பேருந்தில் விமான நிலையம் அடைந்தோம். நன்றி: கூகிள் படங்கள்.

3 .

இரண்டு மணி நேர பயணத்திற்கு பின்னர் மயோர்கா விமான நிலையம் அடைந்தோம். டாக்சி என தேடினோம், அதற்கு முன்னர் ஏதாவது சாப்பிட வேண்டும் போல் தோணியது. மொழி தெரியாத இடம். நானும் எனது மனைவியும் சைவம். பிரான்ஸ் நாட்டில் ஒரு முறை சைவம் என்பதால் பட்ட பாடு நினைவுக்கு வந்து போனது.

விமான நிலையத்தில் இருந்த ஒரு உணவு கடையில் கையை காட்டி ரொட்டி போன்ற உணவு வாங்கினோம். கார் வாடகைக்கு நான்கு நாட்கள் எடுத்துக் கொள்ளலாமா? என்று எனது மனைவியிடம் கேட்டதற்கு வேண்டாம் என ஒரேயடியாக மறுத்துவிட்டார். சரி, பேருந்தில் செல்லலாம் என்று சொன்னதற்கும் வேண்டாம் என மறுக்க துபாயில் போலவே வரிசையாய் விமான நிலையத்தில் வெளியில் டாக்சி நிற்க கையில் இருந்த ஹோட்டல் பெயரை காட்ட அரை மணி நேரத்தில் ஹோட்டல் அடைந்தோம். வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது.


பயணம் மிகவும் வித்தியாசமாக இருந்தது. அமெரிக்காவில் எனது அண்ணனுடன் விமான நிலையத்தில் இருந்து அவரது வீடு வரை சென்றபோது இல்லாத வித்தியாச உணர்வு இங்கே இருந்தது. கார் வாடகைக்கு எடுக்க வேண்டும் எனும் நினைப்பில் சாலையெல்லாம் மனனம் செய்ய தொடங்கிவிட்டேன். ஹோட்டல் பக்கத்தில் வந்ததும் சுற்றுப் பாதை வந்தது. இங்கிலாந்தில் செல்வதற்கு எதிர்மாறாக அங்கே சென்றதை கண்டதும், காராவது, வாடகைக்கு எடுப்பதாவது என மனம் அல்லாடியது. ஹோட்டல் மிகவும் நன்றாகத்தான் இருந்தது. கார் எடுப்பதா வேண்டாமா  என மீண்டும் நடந்த சின்ன கலந்துரையாடலில் மனைவி சற்று அதிகமாகவே பயபட்டார். அறையில் சிறிது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு மயோர்காவில் சுற்றிப் பார்ப்பது குறித்து ஹோட்டல் அலுவலர்களிடம் பேச கீழே வந்தோம். மனம் கார், கார் என நினைக்க தொடங்கியது.


(தொடரும்)

வாழ்க்கையில் சீரழிவது எப்படி? வக்கத்தவனும் போக்கத்தவனும்

தொல்பொருள் ஆராய்ச்சியின் மூலம் மனிதர்கள் கல்தனை பல வேலைகளுக்கு உபயோகப்படுத்தி வந்தார்கள் என்பதை அறியலாம். இந்த கற்காலம் கிட்டத்தட்ட மூன்று மில்லியன் வருடங்கள் வரை மனித வாழ்வில் பெரும் இடம் பெற்று உள்ளது. தற்போது கூட இந்த கல்லானது மனித வாழ்வில் பெரும் பங்கு வகித்தாலும் அவை உபயோக பொருளாக இல்லாமல் உபய பொருளாக மாறிவிட்டது. கல்லிலே கலைவண்ணம் கண்டான் என சிலாகித்து பாடும் வண்ணம் இந்த கல் பெருமை பெற்றது. சில வேதிவினை ஆராய்ச்சிகள் மூலம் ஒரு கல்லானது எப்படி இருக்கிறது, எதற்காக உபயோகப்படுத்தபட்டது என்பதை தெரிந்து கொள்ளலாம். சில கல்லின் அமைப்புகள் அவை பல விசயங்களுக்கு உபயோகபடுத்தபட்டு இருக்கிறது என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்து கொண்டே இருக்கின்றன.


                                                         நன்றி : விக்கிபீடியா   


விலங்குகளை வெட்டி உண்ணும் பழக்கம் உடையவராக இந்த கற்கால மனிதர்கள் வாழ்ந்து இருக்கிறார்கள். அப்பொழுது எல்லாம் இரும்பு, தாமிரம் போன்ற தகடுகள் உபயோகத்தில் இல்லை. எனவே இந்த கல்லினை கூறு செய்து அதை ஆயுதமாக உபயோகப்படுத்தி இருக்கிறார்கள். அன்றைய மனிதர்கள் மட்டுமா கல்லினை ஆயுதமாக உபயோகம் செய்தார்கள்? இன்று கூட கல்லினை எடுத்து வாகனங்களை உடைப்பது, அடுத்தவரின் மண்டையை உடைப்பது என கல்லினை இன்றைய மனிதர்களும் ஒரு ஆயுதமாக பயன்படுத்தத்தான் செய்கிறார்கள்.

இந்த கல்லினை ஆயுதமாக உபயோகபடுத்தியது மட்டுமில்லாமல் இந்த கல்லை தங்களுக்கு தரும் ஒரு பாதுகாப்பு இடமாகவும் உபயோகப்படுத்தி வந்து இருக்கிறார்கள். மரக்கிளைகள் கூட இந்த கால கட்டத்தில் ஆயுதமாக இருந்து இருக்கலாம். ஆனால் அவையெல்லாம் மண்ணோடு மண்ணாக மக்கி இன்றைக்கு அவை நிலக்கரியாகவோ, வாயுவாகவோ, எண்ணையாகவோ மாறி இருந்து இருக்கலாம். எனவே தொல்பொருள் ஆராய்ச்சியில் இந்த தடயங்கள் எதுவும் கிடைக்காமல் போனது ஆச்சரியம் இல்லை.

இந்த கல் மூலம் பல விசயங்களை செய்த இந்த காட்டுமிராண்டி நாகரிகத்தில் வாழ்ந்த மனிதர்கள் அந்த கல்லில் இருந்து எப்பொழுது உலோகங்களை  கண்டு கொண்டனரோ அப்பொழுது இந்த கற்காலம் மறைந்து உலோக காலம் தொடங்கியது. அந்த கால கட்டத்திற்கு சற்று முன்னர் தான் விவசாயம் எனும் முறையை இந்த மனிதர்கள் கற்றறிந்து இருந்தார்கள். பன்னிரண்டு ஆயிரம் வருடங்கள் முன்னர் தான் இந்த விவாசய முறை கொஞ்சம் கொஞ்சமாக நடைமுறை படுத்தப்பட்டது. அப்பொழுது அவர்களிடம் இருந்த காட்டுமிராண்டி நாகரிகம் குறையத் தொடங்கியது. அதோடு மட்டுமில்லாமல் முதன் முதலில் தாமிரத்தை கல்லில் இருந்து பிரித்தெடுக்கும் முறையை எட்டாயிரம் வருடங்கள் முன்னர் மனிதர்கள் கண்டறிந்தார்கள். தாமிர கத்தி போன்றவை உருவானது. அதற்கு பின்னர் தாமிரத்தையும் பிற தனிமங்களுடன் கலந்து உருவாக்கும் தன்மையை கண்டறிந்து இருக்கிறார்கள்.

இந்த மனிதர்களுக்கு எந்த வாத்தியார் சொல்லி கொடுத்தார்? இந்த மனிதர்களுக்கு எந்த காவல்காரர் காவல் இருந்தார்? எதன் காரணமோ வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை, போக்கத்தவனுக்கு போலிஸ் வேலை என சொல்லி வைத்தார்கள். நாம் கற்று கொள்ள எந்த ஆசிரியரும் அவசியம் இல்லை, நம்மை பாதுகாத்து கொள்ள எந்த போலிசும் அவசியம் இல்லை. ஆனால் நமது அறிவு வளர்ச்சியானது ஆசிரியர்களை கொண்ட பள்ளிக்கூடங்களையும், கல்லூரிகளையும் உருவாக்கியதோடு மட்டுமில்லாமல் ஊருக்கு ஊர் காவல் நிலையங்களை உருவாக்கி வைக்கச் சொல்லிவிட்டது. இந்த வாழ்க்கை சீரழிவுக்கு உப்டடுத்தபட்ட நாம் காட்டுமிராண்டி நாகரிகத்தை விட கேவலமான நாகரிகத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் மறுத்தாலும் நான் மறுக்கப் போவதில்லை.

புதிய புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்த பலர் பள்ளிக்கூடங்களில் இவைகளை கற்றுக்கொண்டதில்லை. பள்ளிக்கூடங்கள், இவர்கள் எப்படி கண்டுபிடித்தார்கள் என்றுதான் கற்றுத் தருகிறது. எப்படி கண்டுபிடிக்க வேண்டும் என எந்த பள்ளிக்கூடமும் கற்றுத் தருவதில்லை. கற்றுக் கொள்தல் என்பது அவரவர் ஆர்வத்தை உள்ளடக்கி உள்ளது. எண்களை கண்டுபிடித்தவருக்கு எந்த ஆசிரியர் சொல்லிக் கொடுத்தார்? இதோ இந்த கணினி எப்படி உபயோகிப்பது என்பது குறித்து எந்த ஆசிரியரிடம் நாம் கற்றுக் கொண்டோம்? ஒருவர் உருவாக்குகிறார், அதன் பயனை பலர் அனுபவிக்கிறோம். அந்த கற்றுக் கொள்தலை பிறருக்கு சொல்லி தருகிறோம், அப்படி சொல்லித் தருவதால் நாம் ஆசிரியர் ஆகிறோம், இதன் காரணமாகவே கல்வி ஒரு வியாபார பொருளாகிப் போனது.

கொலை, கொள்ளை, திருட்டு என்பதெல்லாம் காட்டுமிராண்டி நாகரிகத்தில் இல்லாமல் இல்லை. அப்பொழுது பணம் என்பது இல்லாமல் போனதன் காரணமாக, தனது உடைமைகள் என எதையும் பாதுக்காக்க வேண்டிய நிர்பந்தம் இல்லாததன் காரணமாக அவையெல்லாம் பெரிய விசயமாகவே இல்லை. மனிதர்களை கொன்று தின்னும் நரமாமிசர்கள் இருந்தார்கள் என்கிறது வரலாறு, இன்னும் ஆங்காங்கே இருந்து தொலைக்கிறார்கள் எனும் செய்தியும் உலவுகிறது. இந்த காட்டுமிராண்டி நாகரிகத்தில் பலியிடுதல் எனும் கொடுமைகள் இல்லை. கொன்றால் அவை உணவு என்றுதான் இருந்தது. இப்பொழுது திருடர்கள், அவர்கள் திருட்டுக்கு தண்டனை, தண்டனை கொடுக்க சட்டம், அதை பாதுகாக்க சட்ட நிபுணர்கள், காவல் அதிகாரிகள். அறிவு வளர வளர பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும், ஆனால் பயம் அதிகரித்துப் போனது நம்மிடம்.

இரும்பு போன்றவைகளை உபயோக செய்யும் அறிவு கிட்டத்தட்ட இரண்டாயிரத்து முன்னூறு வருடங்கள் முன்னரே உருவானது. அந்த இரும்பு உலோகம் இன்று வீச்சருவா, வெட்டருவா, வேல், கத்தி என பரிணாமம் கொண்டது. இந்த உலோகங்களின் தன்மையினால் அவை துப்பாக்கிகளாகவும், பீரங்கிகளாகவும் பரிணமித்தது. வானில் பறக்கும் விமானம் கூட ஆயுதமாக மாற்றப்பட்ட கேவலமான நாகரிகம் நம்முடையதுதான். அந்த கேவலத்தை செய்ய ஒரு மதம் காரணமாக காட்டப்பட்டது காட்டுமிராண்டித்தனத்தினை விட மிகவும் கேவலமானது.

வாழ்க்கையில் சீரழிய முட்டாளாக மட்டுமே இருக்க வேண்டிய அவசியமில்லை. அறிவினை முட்டாள்தனமாக உபயோகபடுத்த தெரிந்தால் அது போதும்.

முட்டாள்தனமான அறிவு குறித்து தொடர்வோம்.

---------

To earn money thorough Bingo Liner, click here