திரு ஞாநி ஒரு டுபாக்கூரா? என்பதற்கும், திரு ஞாநி கதை விடுபவரா, காதில் பூ சுற்றுபவரா என்பதற்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது ஆனால் அர்த்தம் என்னவோ ஒன்றுதான். டுபாக்கூர் என்பது கொச்சை தமிழ், இழிவுபடுத்தி சொல்லப்படும் வார்த்தை. கதை விடுபவர் என்பது சுத்த தமிழ், வஞ்ச புகழ்ச்சி அணியை தழுவியது.
கதை விடுபவர் என்பதற்கும் கதை சொல்பவர் என்பதற்கும் கூட வித்தியாசம் இருக்கிறது. கதை சொல்பவர் என்பது ஒருவரின் செயலை நல்லவிதமாக குறிக்கிறது, அதே வேளையில் கதை விடுபவர் என்பது ஒருவரின் செயலை கெட்டவிதமாக குறிக்கிறது. அதாவது ஏமாற்றுக்காரர் என்கிற தொனியில் அது அமைகிறது.
இப்பொழுது திரைப்படம் என்றால் என்ன? அது ஒரு கனவு தொழிற்சாலை எனவும், பொழுதுபோக்கு கலை எனவும் குறிப்பிடப்படுகிறது. கற்பனைகளின் கூடாரம் என்று கூட குறிப்பிடலாம். ஒரு திரைப்படத்திற்கான அளவுகோல் எது? மக்களின் ரசனைக்கு ஏற்றமாதிரி எடுப்பதா? சிறந்த கதையுடன் அல்லது சிறந்த கதையாக இல்லாவிட்டாலும் சிறப்பான திரைக்கதை கொண்டதா? மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதா? இப்படி பல கேள்விகள் இந்த திரைப்படத்தை குறித்து எழுந்தாலும் அது ஒரு கனவு மட்டும் கற்பனை தொழிற்சாலை என்பது உண்மை.
நடந்த விசயங்களை சொன்னாலும் அது ஒரு கதை வடிவமே. உண்மையான பாத்திரங்களை சொல்ல முடியாது. திரைப்படம் சமூகத்தை சீரழிக்கின்றன என்றும், சமூகத்தில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்த இயலும் என்பது அவ்வப்போது நடைபெறும் சில விசயங்கள் உறுதிபடுத்தினாலும் முழுமையான தாக்கத்தை, ஒட்டுமொத்த சமூக மாற்றத்தை திரைப்படங்கள் கொணர இயலுவதில்லை. நமது கற்பனைகளை, ஆதங்கங்களை வடிவமாக கண்டு மகிழும் நிலையில் இருப்பவர்கள்தான் நாம். அதற்காகவே ஒரு எம் ஜி ஆரோ, ரஜினியோ பெரும் புகழ் அடைய வழிவகுத்தது.
தமிழில் வெளிவரும் பெரும்பாலான திரைப்படங்கள் மிகவும் மோசமாக இருப்பதாக பரவலான குற்றச்சாட்டு உண்டு. தமிழில் நல்ல படங்கள், மசாலா படங்கள், குப்பை படங்கள் என பிரித்து பார்த்தால் ஐம்பது சதவிகிதம் குப்பை படங்களும், நாற்பத்தி ஐந்து சதவிகிதம் மசாலா படங்களும் மீதி ஐந்து சதவிகிதம் மட்டுமே நல்ல படங்கள் என பிரித்துவிடலாம். சிறந்த பொழுதுபோக்கு படங்கள்தனை விரும்பும் மக்கள் அதிகம் உள்ளவர்களே தமிழகத்தில் இருக்கிறார்கள் என்பதற்கு பல மசாலா படங்கள் சாட்சி. இதில் கதை எல்லாம் இரண்டாம்பட்சம் தான்.
இப்படிப்பட்ட சூழலில் திரு ஞாநி அவர்கள் ஒரு சிறந்த படம் எடுக்க வேண்டும் எனும் முனைப்போடு ஒரு செயலில் ஈடுபட்டார்கள். அதாவது ஆள் பிடிப்பது. நல்ல படங்கள் வரவேண்டும் என முனைப்புடன் இருப்பவர்களை சேர்த்து ஒரு படம் எடுப்பது. இன்றைய காலகட்டத்தில் குறைந்த செலவில் படங்கள் எடுப்பது மிகவும் அரிதான விசயம். இந்த திரைப்படத்தில் பணியாற்றும் குழுவினர்கள் என பார்த்தால் ஒரு நிறுவனம் போலவே அந்த படத்தில் பங்கு பெற்று இருப்பவர்கள் இருப்பார்கள். அதற்காக செலவாகும் தொகை மிகவும் பெரிது. அதைப்போலவே அந்த திரைப்படத்தின் வாடிக்கையாளர்கள் என பார்த்தால் மிகவும் அதிகம். அதன் காரணமாகவே பல கோடி செலவு செய்து லாபம் அடையவும் செய்கிறார்கள். இதனால் இந்த திரைப்படம் எடுப்பது சாதாரண விசயம் இல்லை என்பதை பலரும் தெரிந்தே வைத்திருக்கிறார்கள்.
சமீபத்தில் எனது நண்பர் செல்வமுரளி தனது விசுவல் மீடியா நிறுவனத்தை விரிவாக்கம் செய்துள்ளார். அவருக்கும் வாடிக்கையாளர் வந்து சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர் விளம்பரம் செய்தது மிகவும் குறைவே. இது ஒரு சிறிய நிறுவனம், மிகப் பெரிய நிறுவனமாக வளரும் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது. ஆனால் திரைப்படம் என்பது அப்படியல்ல. அது ஒரு பொழுதுபோக்கு சித்திரம். உடனடி லாபதாரர்கள் ஒரு படத்தின் மூலம் பார்க்கலாம், அதைப்போலவே பெரும் நஷ்டம் அடைபவர்களையும் காணலாம்.
திரு. ஞாநி அவர்களின் விளம்பரம் இப்படித்தான் இருந்தது.
'நல்ல படங்கள் வரவேண்டுமென்று எங்களைப் போல உங்களுக்கும் ஆசை உண்டா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்....
நம்மில் பலர் நல்ல படங்களுக்கு ஏங்குகிறோம். நம் வாழ்க்கையை மேலும் அர்த்தமுள்ளதாக்கும் கதைகள் எவ்வளவோ உண்டே, அவையெல்லாம் ஏன் படமாவதில்லை என்று ஏங்குகிறோம். அப்படிப்பட்ட கதைகள் ஏராளமாகத் தமிழிலும் பிற மொழிகளிலும் இருந்தாலும், அவற்றைப் படமாக்க ஏற்ற வணிகச் சூழல் இங்கே இல்லை.
எனவே அதற்கு வெளியில் ஒரு மாற்றுச் சூழலை உருவாக்கக் களம் இறங்கியிருக்கும் கோலம் இயக்கம், வருடத்துக்கு மூன்று முதல் ஐந்து முழு நீள வீடியோ படங்களைத் தயாரிக்க விரும்புகிறது. இது சாத்தியம்தானா ? நல்ல படங்கள் வரவேண்டுமென்று ஆசைப்படும் ஆயிரக்கணக்கானவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பைப் படம் வருவதற்கு முன்பே அளித்தால் சாத்தியம்.
நீங்கள் செய்ய வேண்டியது என்ன ? முதல் படத்தின் டி.வி.டிக்கான முன்பதிவு தொகையாக ஐநூறு ரூபாய்களை செப்டம்பர் 15, 2009க்கு முன்னதாக எமக்கு அனுப்பவேண்டும். அக்டோபரில்¢ படப்பிடிப்பைத் தொடங்குவோம். நவம்பரில் படம் முழுமையாகி அதன் ஒரிஜினல் டி.வி.டி உங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து சேரும்.
இதே போல மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சில ஆயிரம் பேர் ஆளுக்கு ஐநூறு ரூபாய் அனுப்பி டி.வி.டி முன்பதிவு செய்தால்..... தொடர்ந்து தமிழிலும் பிற மொழிகளிலும் உள்ள நல்ல நாவல்கள், சிறுகதைகள், இன்றைய சமூகத் தேவைக்கு உகந்த படைப்புகள், அவற்றை உருவாக்கக் கூடிய புதுப் புது படைப்பாளிகள், கலைஞர்கள் நம் வீட்டுக்குள்ளேயே வந்து டி.வி.டிகளாக நம்மை சந்திப்பார்கள். படைப்¢பாளியும¢ பார்¢வையாளரும¢ நேரடியாக உறவு கொள்¢ளும¢ இயக்¢கமே கோலம்¢. எண்¢ணற்¢ற புள்¢ளிகளாக பார்¢வையாளர்¢கள்¢ இருக்கிறார¢கள்¢. இந்¢தப்¢ புள்¢ளிகளை இணைத்¢து ஒரு கோலம்¢ வரையும்¢ படைப்¢பாளிகளின் அமைப¢பு கோலம்¢.
இந்த முயற்சியைப் பற்றி உங்கள் ஒவ்வொரு நண்பருக்கும் சொல்லுங்கள். ஒவ்வொருவரையும் முன்பதிவு செய்து இந்தக் கனவு மெய்ப்பட, உதவச் சொல்லுங்கள். முக்கியமானது காலத்தே செய்யும் உதவி. எனவே செப்டம்பர் 15க்குள்¢ முதல் படத்துக்கான உங்கள் முன்பதிவுத் தொகைகள் எம்மை வந்து பிரமிக்கச் செய்யட்டும்.
ஊர் கூடி தேர் இழுப்போம்.
எப்படி பணம் அனுப்புவது ?
முன்பதிவுத் தொகையை (இந்தியாவுக்குள்: ரூ 500/-& வெளிநாடுகள்: அமெரிக்க டாலர் 15) கேட்போலைகள், காசுக்கட்டளை அஞ்சல்கள் அனைத்தும் ‘கோலம்’ பெயரிட்டு அனுப்ப வேண்டிய முகவரி: கோலம். மே/பா, ஞாநி 39 அழகிரிசாமி சாலை, கலைஞர் கருணாநிதி நகர், சென்னை 600078. செல்பேசி: 94440 24947. e mail: kolamcinema@gmail.com நேரடியாக கோலம், a/c no. 007705013590 ICICI K.K.Nagar branch என்ற வங்கிக்கணக்கிலும் பணம் செலுத்தலாம். பதிவு செய்யும்போது உங்கள் பெயர், வயது, பாலினம், தொழில், முகவரி, தொலை¢பேசி, செல்பேசி, மின்னஞ்சல, முதலிய விவரங்களை எங்களுக்குத் தவறாமல் தெரிவியுங்கள்'
அதற்கான எனது மறுமொழி இப்படித்தான் இருந்தது.
'இப்படி அவசர அவசரமாக ஒரு படம் எடுத்து எதைச் சாதிக்க நினைத்து இருக்கிறீர்கள். ஒரு படத்தின் மூலம் சமுதாயத்தில் என்ன சாதித்துவிட முடியும் என நினைக்கிறீர்கள். இதுவரை வெளியான படங்கள், கதைகள் சாதித்தது என்ன? தனிமனிதனின் முயற்சியினால் மட்டுமே ஒவ்வொருவரும் சாதித்து காட்டி இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சொல்லும் காரணங்கள் குறிப்பில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியவைதான். அரிச்சந்திரன் நாடகம் பார்த்து திருந்தினேன் என ஒரு காந்தி தான் சொன்னார், நாடகம் பார்த்த பலர் எங்கே போனார்கள்?
ஒரே ஒரு படம் ஒட்டு மொத்த சமுதாயத்தையும் மாற்றுமாறு எடுங்கள், பாராட்டுகிறேன். நீங்கள் எடுத்துக் கொண்டுள்ள முயற்சி எனக்கு என்னவோ மனிதர்களை முட்டாளாக்க முயற்சிப்பதாகத்தான் படுகிறது. இருப்பினும் தங்கள் முயற்சி நன்மை பயக்குமெனின் வாழ்த்துகிறேன். மிக்க நன்றி.'
இந்த உரையாடல் எனது வலைப்பூவில் நடந்த வருடம் ஆகஸ்ட் 2009. திரு ஞாநி அவர்கள் தங்களது இலக்கை அடைந்தாரா? இலக்கை நோக்கிய பயணம் தொடர்கிறதா என்பது குறித்து எதுவும் தெரியவில்லை. திரு ஞாநி நீங்கள் கதை விடுபவரா? என்கிற கேள்வி மட்டுமே தொக்கி நிற்கிறது.
இவரைப்போலவே ரூபாய் 30,000 முதலீடு செய்யுங்கள், ஒரு அழகிய படம் எடுத்து காட்டுகிறேன் என முயற்சி செய்து கொண்டிருக்கும் நண்பர் திரு. கேபிள் சங்கர் எனும் சங்கர் நாராயண் இலக்கை அடைந்தாரா? இந்த திரைபடத்தின் மூலம் பல குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இவர்களுக்காக மூலதனம் செய்பவர்கள் மூலம் நல்ல திரைப்படம் எடுக்கப்பட்டு நிறைய பொருளாதாரம் ஈட்டிட்டால் மேலும் மேலும் இது போன்ற நிகழ்வுகள் பெருகும். வாழ்த்துகள்.
இவர்களை போன்றே பல கனவுகளுடன் வாழும் பலர் தங்கள் இலக்குகளுக்கான முயற்சிகளில் வெற்றி பெற பெரும் போராட்டம் நடத்தி கொண்டிருக்கிறார்கள். அவர்களும் வெற்றி பெற வாழ்த்துகள். எங்களது ஆய்வில் பத்து பதினைந்து வருடங்கள் போராடி ஒரு மருந்தினை கண்டுபிடித்து உலக மக்களை நோயிலிருந்து விடுபட செய்தாலும் எங்களுக்கு கிடைக்கும் வரவோ வெறும் வாய்.
ஒரு மருந்தினை கண்டுபிடிக்கிறேன், நீங்கள் மூலதனம் செய்யுங்கள் என உங்களிடம் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள் என்பது எனக்கு தெரியும். :)