முத்தமிழ்மன்றத்தில் இருக்கும்போது ஏதாவது கருத்துப் பிரச்சினை வரும். அப்பொழுது எதற்கு இப்படி எல்லாம் நடந்து கொள்கிறார்கள் என்கிற ஒரு ஆதங்கம் வந்து சேரும். பின்னர் யோசித்துப் பார்த்தால் அவருக்கு தெரிந்தது அவர் செய்கிறார் என்கிற ஒரு விசயம் எச்சமாக நிற்கும். இப்பொழுது கூட அந்த பதிவுகளை எல்லாம் படித்தால் சிரிப்பு மட்டுமே மிஞ்சுகிறது. எங்கே போனார்கள் அவர்கள்?
அந்த மன்றத்தில் பல உறுப்பினர்கள் சேர்ந்து இருந்தாலும் பங்களிப்பார்கள் மிகவும் குறைவு. இரண்டாயிரத்து ஆறாம் வருடத்தில் அங்கே இணைந்த நான் இதுவரை பத்தாயிரம் பதிவுகள் பதிந்து உள்ளேன். அதில் ஒரு வரி பதிவுகளான நன்றிகள், மறுமொழிகள் மிக அதிகம். அங்கே இருந்து இந்த வலைப்பூவில் நான் கொண்டு வந்து சேர்த்ததில் ஐநூறுக்கும் குறைந்த பதிவுகளே தேறின. அதிகம் தமிழ் வாசித்தது முத்தமிழ்மன்றத்தில் தான். பின்னர் தமிழ்மணத்தின் மூலம் பல தமிழ் பதிவுகள் வாசிக்கத் தொடங்கினேன். ஆச்சர்யமூட்டும் வகையில் பல எழுத்துகள் இருந்தாலும், நகைச்சுவை பதிவுகளும், சர்ச்சைக்குரிய பதிவுகளுமே அதிகம் ஈர்த்தது. காரணம் அது மனித இயல்பு.
பொதுவாகவே சர்ச்சைக்குரிய பதிவுகள் குறித்து, சர்ச்சைக்குரிய விசயங்கள் குறித்து எதுவும் எழுதுவதில்லை. பல பிரச்சினைகள் பார்த்து இருந்தாலும் எல்லாம் காலப்போக்கில் நீர்த்துப் போய்விடும் என்பதன் காரணமாகவே. இப்படி பிரச்சினைகள் வரும்போது அது குறித்து எழுதி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் பதிவர்கள் பலர் உண்டு. ஒரு பிரச்சினை பதிவுலக பிரச்சினை ஆகிவிடும் அளவுக்கு அதிகம் பேசப்படும், பின்னர் வேறு விசயங்களுக்கு சென்று விடுவார்கள். அப்பொழுதுதானே எழுத்து பயணம் தொடரும். எத்தனை நாளுக்குத்தான் ஒரே விசயத்தை பற்றி எழுத்து போர் நடத்துவது. இதனால் தமிழ் பதிவர்கள் குறித்த சிந்தனை ஒன்று நானும் எழுதியது உண்டு. ஒரு கூட்டணியாக வலம் வரும் பதிவர்கள் ஒன்றுமில்லாத விசயத்தை கூட பலரும் படிக்கும் வகையில் அதை பெரிதுபடுத்திவிடுவார்கள். அதில் தவறும் இல்லை. ஏனெனில் நோக்கம் என்பது எழுதுவது. அவ்வளவே. வாசிக்கும் வாசகர் எதை வாசிப்பது, எதை வாசிக்க கூடாது என்பதை அவரே தீர்மானம் செய்து கொள்ள வேண்டியதுதான்.
இதில் இன்ன இன்ன பதிவர் இப்படிப்பட்டவர் என்கிற தனி முத்திரையும் உண்டு. இந்து மதத்தை கேலி செய்யும் ஒரு கூட்டம் உண்டு. ஆனால் அதைப்பற்றி எதிர் பதிவு போடும் அளவுக்கு நிறைய பதிவர்கள் கூட்டு சேர்ந்ததை கண்டதில்லை. மதம் சார்ந்த, இயக்கம் சார்ந்த, அமைப்புகள் சார்ந்த, நட்புகள் சார்ந்த தளங்கள் நிறையவே உண்டு. அவையெல்லாம் ஒரு சாதாரண வாசகர் எனக்கு வெளிச்சம் போட்டு தந்தது இந்த தமிழ்மணமே.
இந்த தமிழ்மணத்தில் இணைந்த பதிவர்கள் பலர் எழுதாமலேயே நிறுத்தி இருக்கிறார்கள். எதாவது பிரச்சினையின் போது விலகியும் போய் இருக்கிறார்கள். இதனால் தமிழ்மணம் இழந்தது ஒன்றுமில்லை. எழுதுபவர்கள் இழக்கிறார்கள். தனது கருத்துகள் பலருக்கு செல்லும் வழியை தாங்களே அடைத்து கொள்கிறார்கள். ஒரு நாட்டுக்கு தலைவர் அவசியம். ஆனால் அந்த தலைவரை விட மக்கள் அவசியம் எனில் தலைவர் எதற்கு? எத்தனையோ மிக சிறந்த பதிவர்கள் இந்த திரட்டிகளில் எல்லாம் இணைத்து கொண்டதில்லை. மிகவும் பிரபலமான நபர்கள் எவருமே தங்களை திரட்டியில் சேர்த்ததும் இல்லை. இணைய வழியில் எழுதாதபோது எழுத்தாளர்கள் இருக்கத்தானே செய்தார்கள்.
விமர்சனம் செய்ய எனக்கு உரிமை இருக்கிறது என சொல்பவர்கள், பிறர் விமர்சிப்பதை தாங்கி கொள்ள மறுத்துவிடுகிறார்கள்.
நகைச்சுவையாகத்தான் இருந்தது. தமிழ்மணத்திற்கு சமீபத்திய பிரச்சினைக்கு தமிழ்மணத்தில் தங்கள் பதிவுகளை இணைத்தே கண்டனம் தெரிவித்தது. இப்படி எதிர்ப்பை தமிழ்மணத்தில் இணைக்காமல் எழுதி இருக்க வேண்டும். நாங்களும் படித்து இருக்கமாட்டோம். மேலும் இந்த பிரச்சினை தங்கள் சுயத்தை உரசிப் பார்த்துவிட்டது என தெரிந்து இருந்தால் தமிழ்மணம் பக்கமே எட்டிப் பார்த்து விடக்கூடாது. ஆனால் யார் யார் என்ன எழுதி இருக்கிறார்கள் என தமிழ்மணத்தில் தேடி தேடி பதிவு போடுகிறார்கள். இப்படி அவர்களது கருத்தை தெரிவிக்க இந்த தமிழ்மணம் வேண்டும்? இது போன்றவர்களை முட்டாள் பதிவர்கள், வெட்டிப் பதிவர்கள், வீண் பதிவர்கள் என்று எல்லாம் இப்போது நான் சொன்னால் இவர்கள் வருந்தமாட்டார்களா? அதோடு மட்டுமில்லாமல் தமிழ்மணத்தை தடை செய்வார்களாம். தமிழ்மணம் தார்மீக மன்னிப்பு கேட்கவேண்டுமாம். வெங்காயங்கள் என இவர்களை திட்டினால் வருந்தமாட்டார்களா? தமிழ்மனங்கள் வருந்துகின்றனவாம். எத்தனை இழிவாக, நாகரிம் அற்று எல்லாம் எழுதிய பதிவுகள் இதே இணைய வீதியில் சிதறித்தான் கிடக்கின்றன. அதில்தான் நான் மிதிப்பேன் என்றால் யாருக்கு என்ன கவலை? தெருவுக்கு தெரு, நாட்டுக்கு நாடு ஒருவரை ஒருவர் மதத்தினால், சாதியினால் கேவலப்படுத்துவதை மதப் போர்வையில், சாதிப் போர்வையில், ஆணாதிக்கப் போர்வையில் ஒளிந்திருக்கும் மனித மிருகங்கள் குறித்து எந்த கவலையும் இல்லை இவர்களுக்கு. ஒரு வேலை உணவு க்கு வழி இல்லாமல், வானம் பொய்த்து, பூமியும் பிய்த்து வாடும் நாடுகள் பற்றிய அக்கறை இல்லை எவருக்கும். எந்த வாசகத்துக்கு சண்டை தொடங்கியதோ அந்த வாசகத்திற்கே அர்த்தம் தெரியாத சடங்களை குறித்து இறைவன் இப்போது என்ன நினைத்து கொண்டிருக்கக் கூடும்? தவறு செய்தவரை கூட்டமாக குறி வைத்து தாக்கியவர்கள் கூட குற்றவாளிகள். மன ஒழுங்கு இல்லாதவரிடம் இருந்து ஒதுங்கிப் போகக் கூடியவரே புத்திசாலி. ஒரு குற்றம் தொடங்கி ஓராயிரம் குற்றங்கள் ஏற்பட எவர் காரணம்? தான் தவறு செய்தேன் என பிறர் சொல்லி தெரிகிற அளவுக்கு ஒருவரின் மனநிலை இருக்குமெனில் அவரை எப்படி திருத்துவது?
அதெல்லாம் இருக்கட்டும். ஒரு தனிமனிதன் செய்யும் தவறுக்கு மொத்த நிர்வாகம் எதற்கு பங்கு ஏற்க வேண்டும்? முதலில் தனிமனிதன் தவறுக்கு அவரே பொறுப்பு. நிர்வாகத்தில் அவர் கலந்து ஆலோசித்து பின்னர் செயல்பட்டாரா? நிர்வாகம் இதற்கு அனுமதி தந்ததா? நிர்வாகத்தில் இருப்பவர் பொறுப்புடன் செயல்படவில்லையெனில் நிர்வாகத்தின் பெயர் கெட்டுவிடும் என்பது அவருக்கு தெரிந்து இருக்க வேண்டும். மொத்த நிர்வாகமும் இதேபோல் செயல்பட்டால் அந்த நிர்வாகம் குறித்து கண்டனம் எழுப்பலாம். அதைவிடுத்து நிர்வாகம் குறித்த கருத்துகள் கேலிக்குரியவையாக இருக்கும்.
மதம் சார்ந்த விசயங்கள் மனிதனை மிகவும் புண்படுத்துகின்றன. நம்பிக்கை சார்ந்த விசயங்கள் மனிதனை மிகவும் அச்சுறுத்துகின்றன. இறைவனுக்கு எதுவுமே வலிப்பதில்லை. ஆனால் இந்த இழிநிலை மனிதர்களுக்குத்தான் எல்லாமே வலிக்கின்றன, ஏனெனில் இறைவன் ஏற்படுத்தாத பல விசயங்கள் இவர் ஏற்படுத்தி வைத்திருப்பதுதான். இறைவன் எழுதியதாக சொல்லப்படும் புத்தகங்கள், இவர் கொண்டிருக்கும் சாத்திர சம்பிராதயங்கள், அப்பப்பா. உலகம் பிளவுப்பட்டு போனதில் இவர்களின் பங்கு மிக மிக அதிகம். பொருளாதாரம், நிறம், இனம் என இவர்களின் கொலைக்குற்றங்கள் கணக்கில் அடங்காது.
புதிய பதிவர்கள், நடுநிலை பதிவர்கள், பிரச்சினைக்கு என போகாமல் எழுத்தே தலையாயப் பணி என இருப்பவர்கள் திரட்டிகளினால் பயன் அடைவார்கள். உங்கள் நிர்வாகி ஒருவரின் எழுத்து அவரது கருத்து. பொது இடத்தில் வந்து விட்டாலே பொல்லா வினையும் வந்து சேரும் என்பது நான் உட்பட அனைவருமே கருத்தில் கொள்ள வேண்டியதுதான்.
ஒரு எழுத்து ஒருவரை ஓரளவுக்கே அடையாளம் காட்டும். நேரில் பேசுங்கள், நேரில் பழகுங்கள். வாழ்க்கை சுகமாகும். சாந்தி நிலவும், சமாதானமும் நிலவும்.