சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் நாளான 20ம் தேதிக்கு பின்னர் இப்படியொரு செய்தியை படித்தால் தமிழகத்தில் உள்ள மக்களின் மனநிலை எப்படி இருக்கும்?
மக்களின் நலனை மட்டுமே கருதி 'தோற்றுப் போய்விடுவோம்' என தெரிந்தும் 'தனது பணம் வீணாகும், என புரிந்தும் மக்கள் இந்த அரசியல் கட்சிகளை ஓரம் கட்டமாட்டார்களா என ஒவ்வொரு தொகுதியில் நம்பிக்கையுடன் போட்டியிடும் உண்மையான நேர்மையான சுயேச்சை வேட்பாளர்களை அடையாளம் கண்டுபிடித்து அவர்களை எல்லாம் ஒருங்கிணைத்து வெற்றி பெற செய்ய கூடிய ஒரு அமைப்பு தோன்ற வேண்டும். இது ஒரு மாநிலத்தில் மட்டுமல்ல அனைத்து மாநிலங்களிலும் பரவ வேண்டும். இதுதான் நான் கொண்டிருக்கும் கனவு.
அப்படிப்பட்ட மக்களின் நலம் சார்ந்த ஒரு அமைப்பினை உருவாக்கும் பொறுப்பு 'அரசியல்' சாராத, குறுக்கு நெடுக்கு அரசியல் நடத்த விரும்பாத தமிழ் பதிவர்களிடம் உருவாக வேண்டும். இப்படி போன்ற அமைப்பிற்கு மக்களின் ஆதரவை திரட்ட வேண்டும். அது எப்படி சாத்தியம்? உள்குத்து இல்லாத, உண்மையாகவே சமூக அக்கறையுடன் போராடக் கூடிய, நான் பெரிதா, நீ பெரிதா என்கிற பாரபட்சம் பார்க்கும் மன நிலையில் இல்லாத பதிவர்கள் இந்த விசயத்தை தொடங்க வேண்டும். நமக்கெல்லாம் அரசியல் எதற்கு என்கிற மனோபாவம் தொலைத்து மக்களின் நலனுக்காக போராடும் குணம் தமிழ் பதிவர்களிடம் உருவாக வேண்டும். இப்படி தமிழ் பதிவர்களின் பார்வையானது பலமாக சமூகத்தில் படும்போது அதற்குரிய மாற்றத்தை உருவாக்கும் திறன் நிச்சயம் வளரும்.
புத்தகம் வெளியிடும் பதிவர்கள் ஒவ்வொருவரும், தங்களது இந்த முயற்சியை புத்தகத்தில் குறிப்பிட்டு மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இதோ பதிவர்களால், பதிவர்களுடன் கூட்டு சேர்ந்துள்ள யுடான்ஸ் தொலைக்காட்சி இது போன்ற விசயங்களை மக்களுக்கு எளிதாக கொண்டு செல்ல வேண்டும். இதற்குரிய முயற்சியை, இதுவரையிலும் வேறு கட்சிகளில் தொடர்பு இருந்தாலும் அதை அறுத்து எறிந்து விட்டு, ஒரு நடிகரின், நடிகையின் ரசிகனாக இருந்தாலும் அதோடு நிறுத்திவிட்டு, கையில் எடுக்க வேண்டும். இந்த எழுத்து போராட்டம், வாசிப்பவர்களின் மனதில் புது வேகத்தை கொடுக்க வேண்டும்.
பதிவர்களிடையே இருக்கும் வேற்றுமை எண்ணங்கள் மறைந்து மக்களின் நலனுக்காக பாடுபடும் அமைப்பை இந்த உலகமெல்லாம் இருக்கும் தமிழ் பதிவர்கள் தொடங்கியே தீர வேண்டும். நோக்கம் மக்களின் நலன். போராட்டம் மக்களின் நலன். இதுதான் தீர்மானம். ஒரு விதை இருளில் இருந்துதான் முளைக்கிறது. மாபெரும் கும்மிருட்டில் இந்த விதையை தூவுகிறேன்.
பத்து இருபது படங்களில் நடிக்கும் ஒரு நடிகரோ, நடிகையோ கட்சி ஆரம்பித்தால் அதற்கு ஆதரவு தரும் இந்த மக்கள் தங்களுக்கென போராட ஒரு அமைப்பு இருக்கிறதென உணர வேண்டும். வெறும் பேருக்கென இருக்கும் இலக்கிய அமைப்புகள் பற்றியோ, வெட்டி சவாடல் விடும் அமைப்புகள் பற்றியோ நாம் இங்கு பேசவில்லை. அது போன்ற அமைப்புகள் இருப்பவர்கள் மக்களின் நலன் கருதி உண்மையாக போராட வேண்டும். ஒரு எழுச்சியை நம்மால் உருவாக்க இயலும்.
இதோ பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் பேசுகிறார், திராவிட கட்சிகளை அழிப்பதே அவரது கட்சியின் நோக்கமாம். அட, மக்களுக்கு பாடுபடுவதுதானே கட்சியின் நோக்கமாக இருக்க வேண்டும். எந்த நோக்கத்திற்காக கட்சி ஆரம்பித்தேன் என்பது கூட இத்தனை வருசம் தெரியாமல் இப்படி உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதற்காக வீர வசனம் பேசி திரியலாமா?
இதோ தே மு தி க தலைவர் ஊரெல்லாம் மக்களுடன் கூட்டணி என பேசுகிறார். அட, மக்களுடன் கூட்டணி, என்ன மக்களுடன் கூட்டணி, எதற்காக கட்சி ஆரம்பித்தீர், என்ன நோக்கம், என்ன கொள்கை என்பது குறித்து அல்லவா பேச வேண்டும். எதற்கெடுத்தாலும் அதை இலவசமாக தருவேன், இதை இலவசமாக தருவேன். தனியாக போட்டியிடுவேன் எனும் வீர வசனம் எதற்கு? இலவசமாக கொடுக்க பணத்தை எங்கே இருந்து எடுப்பீர்களோ? இதை கூட சிந்திக்கும் திறன் இழந்த மக்களை அல்லவா உருவாக்கி வைத்து இருக்கிறீர்கள். விசுவாத்தின், நம்பிக்கையின் அடிப்பைடயில் நலிந்து போன மக்கள் ஐயா, நலிந்து போன மக்கள்.
இவர் எப்பொழுது கட்சி தலைமைக்கு வந்தார்? எதற்கு தி மு க கட்சி தொடங்கப்பட்டது என்பதெல்லாம் பேசி பேசியே திரைப்படங்களில் ஆஹோ ஓஹோ என வசனம் எழுதியே அரசியல் நடத்திய தி மு க தலைவர். எல்லா வேலைக்கும் ஒரு குறிப்பிட்ட வயதில் கட்டாய ஓய்வு கொடுத்து விடுவார்கள். ஆனால் அரசியலில் மட்டும் அப்படிப்பட்ட ஓய்வு எல்லாம் இல்லை, எதற்கு தெரியுமா கழக தலைவரே? உங்களுக்கு கலிங்கத்து பரணி எல்லாம் அத்துப்படி, பல விசயங்கள் பசுமையாக இருக்கும் உங்கள் நினைவினை திரும்பி பாருங்கள். மக்களின் சேவைக்கு ஓய்வு என்பதே கூடாது என்பதற்காகத்தான். இதுநாள் காறும் என்ன செய்தீர்கள் என்பதை யோசித்து பாருங்கள், பல விசயங்கள் உங்களை உறுத்தும், உறுத்த வேண்டும்.
அம்மா. அட பாவமே. அம்மா என மாடு அழைத்தால் கூட இவரைத்தான் அழைக்கிறது என்கிற தோரணை எல்லாம் கட்டப்பட்டு இருந்த காலம். மக்கள் தலைவர் என போற்றப்பட்ட ஒருவரின் உதவியின் மூலம் கொள்கை பரப்பு செயலாளார் எனும் பதவி கொண்டு பல இன்னல்களுக்கு இடையில் போராடி அ தி மு க எனும் அரசியல் கட்சியை அழிந்து போகவிடாமல் இன்று முதல் அமைச்சர் எனும் முக்கிய பதவியில் அமர்ந்து இருக்கிறார்கள். கொள்கை பரப்பு செயலாளர், நிச்சயம் கொள்கைகள் தெரிந்து இருக்க வேண்டும், ஆனால் கொள்கைகள் எல்லாம் காற்றில் பறந்து கொண்டிருக்கிறது. தி மு க வை தோற்கடிக்க அமைந்த கூட்டணி. மக்களின் நலனுக்கு அமையவில்லை கூட்டணி என்பதை ஐந்து மாத கால கட்டத்துக்குள் நிரூபித்தாகி விட்டது.
மக்களே எதற்கு இன்னமும் யோசனை?
இனிமேல் இதுவரை சுயநலத்துக்காகவே உருவாக்கப்பட்ட இது போன்ற கட்சிகளின் சார்பில் போட்டியிடும் எந்த வேட்பாளரும் வெற்றி பெறக் கூடாது என்கிற முழு தீர்மானம் மக்களிடம் எழ வேண்டும். மக்களின் நலனே முக்கியம் என பாடுபடும், நினைக்கும் இது போன்ற அரசியல் சார்ந்த கட்சிகளில் வேட்பாளாராக போட்டியிடும் வேட்பாளர்கள் கட்சியில் இருந்து விலகி மக்களை முறையாக அணுகி வெற்றி பெற வேண்டும். அல்லது இந்த அரசியல் கட்சிகள் மக்களுக்காக உண்மையாக பாடுபடுவோம் என்கிற உறுதியை எடுத்து செயலாற்ற வேண்டும். இனிமேலாவது மக்களுக்கென பாடுபடும் மக்களை அடையாளம் கண்டு கொண்டு அவர்களை வெற்றி பெற செய்ய வேண்டும். மக்களின் நலன் குறித்த சிந்தனை உடையவர்களே உண்மையான வேட்பாளர்கள் என்கிற எண்ணம் எழ வேண்டும்.
இது போன்ற எண்ணங்கள் எல்லாம் கனவுக்கும், கற்பனைக்கும் மிகவும் நன்றாக இருக்கும் என்பதுதான் இதுவரை உலகம் கண்ட வரலாறு. இந்த மாற்றத்தை ஏற்படுத்த மாபெரும் புரட்சி ஒன்றை எழுத்து மூலம் தொடங்கி வைப்போம். பின்னர் செயல்களில் முறைப்படுத்த முனைவோம்.