Wednesday, 5 October 2011

தடைகற்கள்

பாதையில் பல கற்கள்
போதையில் விழுந்தவனை போல
தடுமாறி கிடக்கின்றன
தள்ளி வைப்பார் எவருமில்லை

கற்களால் குத்துபட்டோ வெட்டுபட்டோ
கடந்து சென்றவர்கள் மிச்சம்
கற்களை கடத்தி வைத்தவர்கள்
கொஞ்சம் கூட மிச்சமில்லை

தடைகற்கள்தனை பிறர் தாண்டிய விதம்
தாண்டுவோரை மலைக்க வைப்பதில்லை
வெட்டுபட்டும் குத்துபட்டும்
கடந்து கொண்டே இருக்கிறார்கள்

தடைகற்கள் அகற்றுவதாய்
சாமியும், சாமி துதிபாடும் பூசாரியும்
தலைவரும், தலைவர் துதிபாடும் தொண்டரும்
மனிதர்களில் குறைச்சல் இல்லை

தடைகற்கள்தனை பொடிப்பொடியாய்
உடைத்துப் போட்டாலும்
தடைகற்கள் தடைகற்களாய்
உடை உடுத்தி கொள்தல் அபாயமோ!

Saturday, 24 September 2011

தூக்கு தண்டனை வேண்டாமெனும்

இதுவரை மனித அறிவிற்கு எட்டியவரை இந்த உலகத்தில் பூமியில் தவிர வேறு கிரகங்களில் ஜீவராசிகள் இருப்பதாக தெரியவில்லை. இருப்பினும் பூமியை போலவே வேறு கிரகங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும், சில கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் உண்டு, அந்த கிரகங்களில் ஜீவராசிகள் இருக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் நம்புகிறார்கள். ஆனால் இதுவரை எந்த ஒரு தடயமும் கிடைக்கவில்லை. 

இப்படியொரு அரிய வாய்ப்பினை பெற்ற பூமியில் நிம்மதியாக வாழ்ந்து விட வேண்டும் என்கிற முனைப்பு பலரிடம் இருப்பதாக தெரியவில்லை. ஏதாவது பிரச்சனைகளை உருவாக்கி கொள்கிறார்கள் அல்லது சிக்கி கொள்கிறார்கள். இப்படிப்பட்ட கட்டுக்குள் அடங்காத வாழ்க்கையில் இப்படி வாழ்வதே பெரும் சுவாரஸ்யமாக இருக்கிறது என்கிறார்கள் பலர். 

பொருளாதார சரிவு ஒருபுறம். தொலைந்து போகாத தீவிரவாத போக்கு ஒரு புறம் என இந்த பூமி தொடங்கிய தினம் முதல் இதுவரை பல இன்னல்கள் மறையவில்லை. சமுதாய மாற்றம் என்பது அத்தனை எளிதாக நடைபெறும் எனும் கனவு கனவாகவே இருக்கப் போகிறதோ எனும் அவ நம்பிக்கை வந்து போகிறது. 

திருடர்கள், கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள் என அனைவருமே இந்த வாழ்க்கையில் மிகவும் எளிதாக தப்பிவிடுகிறார்கள். இவர்கள் அத்தனை எளிதாக பிடிபடுவது இல்லை, இவர்களுக்கு கிடைக்கும் இந்த சுதந்திரமே தொடர்ந்து தவறுகள் நடைபெற்று வருவதற்கு காரணமாகும். ஹசாரே ஒவ்வொரு அதிகாரிகளின் வீடு சென்று ஊழல் செய்கிறார்களா என ஆராயவாப் போகிறார், வேண்டா வெறுப்பாக மசோதா இயற்றிய அரசு கடுமையாக நடந்து கொள்ளத்தான் போகிறதா? இப்படித்தான் மொத்த உலகமும் திண்டாடி கொண்டிருக்கிறது. 

போதை பொருள் விற்பனை என ஒரு பக்கம் கோடி கோடியாக சம்பாதிக்கும் கயவர்கள் கூட்டம், தெரிந்தே தவறு நடந்து கொண்டிருக்கிறது. இதை கண்டு கொள்ளும் நிலையில் நாம் இல்லை என்பதுதான் ஆச்சரியம். 

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் கொலை நடந்து வருடங்கள் உருண்டோடி விட்டன. அவரின் உயிர் எடுக்கப்பட்ட விதம், அவரின் உயிர் எடுக்கப்பட வேண்டிய அவசியத்தின் காரணம் என நியாயங்களும், எதிர் விவாதங்களும் என பிரிந்து நின்றவர்கள் பற்றி நினைக்கும்போது இவர்களும் வாழ்கிறார்கள் என்கிற நினைப்பு மட்டுமே எஞ்சி நிற்கும். தவறு செய்ய திட்டமிட்டவர்கள், தவறு செய்ய துணை போனவர்கள் என தெரிந்தும் நியாயம், அநியாயம் என விவாதிக்கப்பட்டு சட்டம் என ஒரு தீர்ப்பு எல்லாம் சொன்ன பிறகும் அநியாயம், நியாயம் என பேசி கொண்டிருப்பவர் பற்றி நினைக்கும்போது இவர்கள் எல்லாம் எப்படிப்பட்டவர்கள் எனும் நினைப்பு மிஞ்சி நிற்கும். 

பொது விவாதம் எல்லாம் முள்ளுக்கு முள் சரியா என்பதுதான். கொடுமைகள் செய்ய கொஞ்சமும் பயம் இல்லாத, எதைப்பற்றியும் கொஞ்சமும் சிந்திக்காத இந்த உலகில் உலா வந்து கொண்டிருக்கும் பல அர்த்தமற்ற பிறப்புகள் பற்றிய சிந்தனை அவசியமில்லாததுதான். 

இலங்கை மாநகரில் தீவிரவாத கொடுமைகளால் கொல்லப்பட்ட உயிர்கள் எத்தனை? அத்தனை உயிர்களை பறித்த மன சாட்சியே இல்லாத ராணுவ வீணர்கள் எந்த சவ சட்டத்திடம் அனுமதி பெற்றார்கள்? அத்தனை கொடுமைகளையும் நிறைவேற்றிய பின்னரும் கொக்கரித்துக் கொண்டிருக்கும் கேவல பிறப்புகள் இன்றும் உலகில் உலா வருகிறதே? அந்த பிறப்புகளுக்கு  உலக அமைப்பு தூக்கு தண்டனை தர வேண்டும் என தீர்மானித்தால் இவர்கள் என்ன சொல்வார்கள் என்றுதான் பார்க்க வேண்டும்! ஒவ்வொருவருக்கும் தான் செய்கிற காரியத்திற்கு அவர்களுக்கு ஏற்றார் போல் ஒரு காரணம் இருக்கத்தான் செய்யும், தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். 

உலகில் மிக அதிகமான மக்கள் சூழ்நிலைகளால் தவறு செய்கிறார்களாம். ஆனால் சூழ்நிலைகளை காரணம் காட்டி பிற உயிர்களை பறிக்கும் உரிமை எவருக்குமே இல்லை என வீர வசனம் பலருக்கும் அத்துப்படி. அப்படி பிற உயிர்களை பறிக்கும் கொடுமைகளை செய்ய துணை நிற்கும், பிற உயிர்களை எடுத்து தொலையும் மற்ற உயிர்கள் இவ்வுலகில் இருக்கவேண்டும் என்பதெல்லாம் அவசியம்தானா என்பதற்கான விவாதம் கூட தேவை இல்லை. 

திருத்தப்படாத சட்டம், திருந்த முடியாத வட்டம். 

எவராவது எழுதலாம் தூக்கு தண்டனை வேண்டுமெனும் என. 


Monday, 12 September 2011

கொலைகார பாதகர்கள்

'அரசியல்' இல்லாத உலகம் ஒன்று உருவாக்கப்படுமானால்... அது எப்படி இருக்கும் என்பதை யூகம் செய்வது அத்தனை எளிதில்லைதான். ஆனால் இன்றைய அரசியல் கலந்த வாழ்க்கை கலப்படம் மிக்கதாகவே இருக்கிறது என்பதை யூகம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை, அதனை கண்கூடாகவே நாம் பார்த்து கொண்டிருக்கிறோம்.

போராட்டம் என்கிற பொதுப் பெயரில் நடத்தப்படும் சூறையாடல்கள் மனிதகுலத்திற்கே ஒரு ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும். இதனால் ஏற்படும் உயிர் இழப்புகள் முதற்கொண்டு எல்லா இழப்புகளும் இளக்காரமாகத்தான் இதில் ஈடுபடுவோருக்கு தெரிகின்றன. இவர்கள் எதை சாதிக்க நினைக்கிறார்கள் என்பதுதான் புரியாத புதிர்.

சாதி! இனம்! நிறம்! கட்சி! மொழி என மனிதர்கள் கொண்டிருக்கும் பாகுபாடுகள் தரும் இன்னல்கள் அளவுக்கு அதிகமானவை. அவ்வப்போது இந்த தொடர் அவமானங்கள் ஏதாவது ஒரு பெயரில் நிகழ்த்தப்பட்டு கொண்டே வருகின்றன. இதனை தடுக்கும் தலைவர்களைவிட முடுக்கி விடும் தலைவர்களே அதிகம் என்கிறது எழுதப்படாத வரலாறு. இதுதான் அரசியல் என்கிறார்கள்.

'பிரித்து வைத்து ஆள்வது' என்பதுதான் உலகின் தாரக மந்திரம். மானிடர்கள் எண்ணங்களால் பிரிந்து கிடக்கிறார்கள், அதனால் மனித குலமே சரிந்து கொண்டிருக்கிறது. இப்பொழுது சாதி எதற்கு? என்று கேள்வி கேட்டால் சாதிக்கு என்று குலத்தொழில் இருக்குமாம். அந்த குலத்தொழில் தொலைந்து போகாமல் இருக்க இந்த சாதி தொடருமாம். பொருளாதாரம் மட்டும் அனைவருக்கும் சமமாக இருந்துவிட்டால் இந்த சாதி தொழில் தொலைந்து போயிருக்கும் எனபதை எத்தனை உறுதியாக சொல்ல இயலுமோ தெரியாது. இந்த சாதியினால் மட்டுமே பல பரம்பரை விசயங்கள் இன்னும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன என எவராலும் உறுதியாக சொல்லவும் இயலாது. பொருளாதாரம் நிறைவான நாடுகளில் கூட ஏதவாது ஒரு வகையில் பிரச்சினைகள் தலை தூக்கி கொண்டே இருக்கின்றன.

எத்தனையோ காரணங்கள் சொல்லப்பட்டாலும், வேலை இல்லாத வெட்டி வீணர்களால், வாய்சவடால் மட்டுமே பேச தெரிந்த அரசியல் கட்சி தலைவலிகளால் சாதாரண மக்கள் படும் துயரங்கள் அளவிட முடியாதவை.

வலியவன் எளியவனை எள்ளி நகையாடுதல் ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வரும் கோர சம்பவம். உரிமைகளை தொலைத்துவிட்டு அடிமையாக ஒடுக்கப்பட்ட சமுதாயம் உலகெங்கும் இருக்கத்தான் செய்கிறது.  வேலை செய்ய பிடிக்காத ஒரு சமூகம். வேலை செய்தும் தகுந்த கூலி பெற இயலாத சமூகம் என சீழ் பிடித்து போன சமூகத்தில் நடைபெறும் அவலங்களை துடைத்தெறிய அவ்வப்போது தலைவர்கள் உருவாக்கப்படுவது உண்டு. அவர்கள் 'அந்த இனத்திற்காக, அந்த சாதிக்காக போராடுவார்கள். இப்படி எனது சாதி, எனது இனம் என போராடிய காரணத்தினால் தான் இன்னும் பிரிவினை தொடர்ந்து கொண்டிருக்கிறது. மனித இனம் ஒன்று என்கிற ஒரு உணர்வு ஓங்கி இருந்து இருக்கேமேயானால்... ஆருடம் சொல்ல வேண்டிய அவசியம் எதுவும் இல்லை.

வன்னியர்க்கு என்று ஒரு அரசியல் கட்சி தொடங்கியவன், முக்குலத்தோர்க்கு  என ஒரு அரசியல் கட்சி தொடங்கியவன், தலித்துகளுக்கு ஒரு கட்சி தொடங்கியவன், தமிழனுக்கு, தெலுங்கனுக்கு, கொங்கனுக்கு என அரசியல் கட்சி தொடங்கியவன் மனிதத்தை அழிக்க கட்சி தொடங்கியவனே. இவன் எப்படி ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க இயலும் என எதற்கு எவரும் சிந்திப்பதில்லை. இவனை பின்பற்ற பல உணர்வற்ற சடங்கள். இவனைப் போன்றோர் கொள்வதெல்லாம் பிற சமூகத்தின் மீதான காழ்ப்புணர்ச்சி மட்டுமே அன்றி நிச்சயம் ஒரு மாற்றுக்கு என கொள்ள இயலாது. ஒரு கட்சியானது, அமைப்பானது மொத்த மக்களுக்கு என தொடங்கப்பட வேண்டும், அதில் பிரிவினை எல்லாம் இருத்தல் கூடாது. அதைப்போலவே மிக சிறந்த கொள்கைகளும், நேர்மையான செயல்பாடுகளும் உடைய ஒரு பாதையை பின்பற்றும் மக்கள் அதிகரிக்க வேண்டும். ஆனால் திருட்டு உலகில் குருட்டுத்தனம் மட்டுமே மிச்சம்.

சக மனிதரை மதிக்க தெரியாத பாதகர்கள் உலகில் இருக்கும் வரை அறிக்கைகளும், துப்பாக்கி சூடுகளும் குறைவில்லாமல் அவ்வப்போது நடந்து கொண்டேதான் இருக்கும். மத வெறியர்கள், சாதி வெறியர்கள், நிற வெறியர்கள் என அழைக்கப்படுபவர்கள் எல்லாருமே மனித வெறியர்கள்.
சாதியை அழித்தால், சாதி வெறியர்களை அழித்தால், மதத்தை ஒழித்தால், மத வெறியர்களை ஒழித்தால், நிறத்தை கலைத்தால், நிற வெறியர்களை கலைத்தால் இந்த சமுதாயம் திருந்திவிடும் என்பதெல்லாம் வெறும் கனவு. மனிதர்களின் எண்ணங்கள் மேம்பட வேண்டும். அது ஒன்றுதான் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு.

'ஆடத் தெரியாதவனுக்கு தெரு கோணல்' வாழ தெரியாதவனுக்கு எல்லாமே கோணல்' அப்படித்தான் இந்த உலகில் இன்னும் பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பரிணாம வளர்ச்சியில் முயலுக்கு கூட மூன்று கால் சாத்தியமாகலாம், குதிரைக்கு கூட கொம்பு முளைத்துவிடலாம் ஆனால் இந்த மனித வெறியர்களின் வழித் தோன்றல்கள் திருந்துவது என்பது சாத்தியமே இல்லை என கறைபடிந்து காட்டி கொண்டிருக்கிறது வரலாறு.

அன்று மன்னர்கள் கொன்று வென்ற காலங்கள், இன்று மாக்கள்கள் கொன்று மடியும் கோலங்கள்.

கொலைகார பாதகர்கள்!