எப்ப, எனக்கும் எந்த குறையும் இல்லைன்னு ஒரு இடத்தில பேசினாலும் பேசினாரு, சோதனைக்கின்னே வந்து சேர்ந்துச்சு நோயி. அந்த பேச்சை கேட்டதும் என்னை அறியாமலே 'அட பாவமே' என்றுதான் தோணிச்சி, ஆனா இப்படி வந்து சேரும்னு நினைக்கல. வேதனையுடன் சொல்கிறார் ரஜினியின் மீது பிரியம் வைத்து இருப்பவர். கண்ணு பட்டுருச்சோ ரஜினி.
உங்களுக்கு சிறு பிரச்சினை என்றால் அதை பெரும் பிரச்சினை என வேடிக்கை பார்க்கும் மனிதர்கள் உண்டே ரஜினி. நீங்கள் எண்பதுகளில் பட்ட வேதனையை விட இது ஒன்றும் பெரிது இல்லைதான். வயது வளர்கிறதல்லவா!
இந்த கஷ்ட நேரத்தில் எதையும் எழுதி உம்மை கஷ்டபடுத்த விரும்பலை, உம்மை என் எழுத்து கஷ்டபடுத்தவும் படுத்தாது. ஆனால் உம்மை பின்பற்றும் பல கோடி ரசிகர்களின் மனம் வேதனை படுமே ரஜினி. அவர்கள் வாழ்க்கையில் இனிமேலும் வேதனை படுவது அவசியமில்லாத ஒன்றுதான். நீங்கள் கைவிட்டு விட்ட புகை பழக்கம், மது பழக்கம் பலரும் கைவிட கூடும். எண்பது வயதாகும் என் தந்தையின் உடல்நலம் சீரடைந்து பின்னர் சீராகி பல வருடங்களாக உண்ணாமல் இருந்த முட்டையை உண்பதாக சொன்னபோது 'வாழ்க்கையை எப்படியும் வாழ்ந்துவிட வேண்டும் எனும் ஆசை எவரையும் விட்டுவிடுவதில்லைதான். வெளிப்படையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் உங்களை பலருக்கும் பிடித்துதான் இருக்கிறது, உங்களில் அவர்களை பார்க்கிறார்கள்.
புகை பிடிக்கும் பழக்கத்தை இத்தனை வருட காலம் கொண்டிருந்தீர்களே, அது உடனடியாக எதுவும் செய்யாது என்பதலா? நீங்கள் பிடிக்கிறீர்கள் என நானும் பிடிக்கிறேன் என பிடித்து காட்டிய நண்பர்கள் கண்டு வெறுப்பு அடைந்திருக்கிறேன். 'தலைவர் பிடிக்கிராருடா' என என்னை ஏளனம் பேசியவர்கள் உண்டு.
மது பழக்கம் இல்லாத மக்களை மேலை நாடுகளில் பார்ப்பது கடினம், அந்த மதுவையே மறைந்து இருந்து குடிக்கும் வழக்கம் கொண்ட பலர் நம் ஊரில் அதிகம். இந்த மதுவை விட முடியாத வாழ்க்கை கொண்டீர்களே, என்ன காரணம் ரஜினி. கணித மேதை ராமனுஜரின் வாழ்க்கை வரலாறு மிகவும் மோசமானது ரஜினி. தெரிந்து இருப்பீர்கள். கடல் கடந்து சென்றால் ஒரு பிராமணர் என்ற அந்தஸ்து தொலையும் என்ற நிலையிலும் கடல் கடந்து சென்றவர். ஆனால் தனது உயிர் புலால் உண்பதால் சரியாகும் என்கிற நிலையிலும் அதை தொடாதவர் என்றே வரலாறு சொல்கிறது. அது என்ன காரணமோ ரஜினி. தனிப்பட்ட மனிதர்களின் வாழ்க்கை தனிப்பட்ட மனிதருக்கு மட்டுமே சொந்தம். ஆனால் எப்பொழுது அவர்கள் பொது மனிதர்கள் ஆகிறார்களோ அப்பொழுது அவர்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கை எதுவும் இல்லைதான்.
சாதாரண மனிதருக்கு இருக்கும் பொறுப்பை விட பிரபலமான மனிதர்களுக்கு இருக்கும் பொறுப்பு மிக மிக அதிகம் என சொல்வார்கள். ஆனால் பொறுப்பில்லாமல் நடந்து கொள்ளும் பக்குவம் அந்த பிரபலமானவர்களுக்கே உரித்தான ஒன்று. எத்தனை கதாபாத்திரங்கள், எத்தனை கதைகள் படித்து இருப்பீர்கள். எத்தனை கதைகள் சொல்லி இருப்பீர்கள். உங்களுக்கு தெரியாததா ரஜினி.
ஆன்மிகம் என சொல்லிக்கொண்டு சக உயிரினங்களை உண்டு வாழும் வாழ்க்கை எப்படி சரியென சொல்வது. தனது அன்னை, தந்தை, உறவினர்களின் உடல் நலம் பற்றி அக்கறை கொள்ளாத பலர் உங்கள் உடல் நலம் குறித்து வேதனை கொண்டிருப்பதை கண்டீர்களா ரஜினி. மது, புகை என இருந்தாலும் இத்தனை வருடம் பிரச்சினை இல்லாமல் வாழ்ந்ததே உங்களின் கட்டுகோப்பான வாழ்க்கைதான். உங்களின் கட்டுகோப்பு எங்களை போன்றவர்களிடம் இல்லையே ரஜினி.
நீங்கள் நல்ல மனிதர் என்றே பலராலும் அறியப்பட்டு இருக்கிறீர்கள். ஆனால் குடிப்பழக்கம், புகைப்பழக்கம், புலால் உண்ணல், கோபம் போன்றவை கொண்டிருப்போர் நல்ல மனிதர்களாக இருந்திடல் சாத்தியம் எனினும் நல்ல உடல் நலத்துடன் இருப்பது சாத்தியம் இல்லை என்பது உங்களுக்கு இமயமலை கற்றுத் தராததா.
சூழ்நிலை கைதி என சொன்னீர்களே ரஜினி. பணம் சம்பாதிக்கும் வியாபாரிகள் அனைவருமே அப்படித்தான். அந்த வியாபாரிகள் தனது சொந்த நலனுக்காக எதையும் விற்றுவிடும் அளவுக்கு துணிந்தவர்கள். நேர்மையும், நியாயமும் உலகில் எங்குமே இல்லையே ரஜினி.
இத்தனை விசயங்கள் என்னை போன்று எழுதும் பலர், பேசும் பலர் எல்லாம் யோக்கியவான்கள் இல்லை ரஜினி. இந்த எழுத்தை, பிறர் எழுத்தை, பிறர் பேசுவதை நீங்கள் படிக்க, கேட்க நேரிட்டால் மனதுக்குள் சிரித்து கொள்வீர்கள் அல்லவா. அதுதான் மனிதர்களின் ரகசியம். பிறருக்கு ஒன்று எனில் உடனே அறிவுரை சொல்லும் வித்தைகாரர்கள். தன்னை பற்றி நினைத்து கூட பார்க்க மாட்டார்கள். நீங்கள் இதற்கெல்லாம் கவலைப்பட போவது இல்லை. விரைவில் நலம் பெறுங்கள் ரஜினி. உங்களால் மனதளவில் உற்சாகம் கொள்ளும் கோடி மக்கள் உண்மையிலேயே உண்டு.