Thursday, 5 May 2011

சமூக சேவை எனும் சாக்கடை

சேவை மனப்பான்மை என்பது அனைவருக்கும் அத்தனை எளிதில் கை கூடுவதில்லை. சமூகத்தின் மீது அக்கறை கொண்டு சமூகத்தினை ஒரு சிறந்த, உயர்ந்த சமூகமாக மாற்றிட பலரின் மனதில் எண்ணம் ஓடிக் கொண்டிருக்கும். 

இந்த சமூக சேவையானது வீட்டில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பார்கள். வீட்டினை குப்பையாக வைத்திருப்பவர் சமூகத்தினை நிச்சயம் துப்புரவு செய்ய இயலாது. 

இந்த சமூகத்தில் நான் என்பது தனி, நாம் என்பது ஒரு கூட்டம். இதில் ஒரு நாம் என்பதற்கு பதிலாக பல நாம் இருப்பதுதான் சமூக பிரச்சினை ஆகிறது. 

நோய் என ஒன்று வந்துவிட்டால் அதன் அடிப்படை விசயத்தை அறிந்து கொண்டு தீர்வு செய்யாவிட்டால் அந்த நோய் மீண்டும் மீண்டும் வந்து சேரும். அதைப் போலவே சமூக பிரச்சினைகளுக்கான ஆணி வேரதனை அறியாது போனால் பிரச்சினைகள் ஒருபோதும் அழியாது. 

சிறுவர்களை வதைப்படுத்தும் படங்களை சேமித்து வைப்பது தனக்கு ஒரு பொழுது போக்கு என ஒருவரை கைது செய்தபோது கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லாமல் அவர் சொன்னதை கேட்டபோது தவறு எங்கு தொடங்கபடுகிறது என்பது அறிவது அவசியமாகிறது. 

நல்லவையோடு தீயவைகளும் சேர்ந்தே இருக்கும், அதில் நல்லவைகளை மட்டும் தேர்ந்தெடுத்து வாழ வேண்டும் என இருப்பதுதான் பகுத்தறிவு என சொன்னாலும், மனிதர்களின் பலவீனங்களால் தீயவைகளே மிகவும் முன்னிலை வகிக்கின்றன. 

அப்படிப்பட்ட தீயவைகளை அடியோடு ஒழித்து கட்ட முயலாமல் வேடிக்கை பார்க்கும் சாக்கடை சமூகம் தான் இவ்வுலகம் எங்கும் நிலவுகிறது. பல கோடி மக்களை பார்க்கும்போது இவர்களா தவறு செய்கிறார்கள் எனும் இனம் புரியாத கேள்வி எழும் வேளையில் நாமும் தவறு செய்கிறோம் என்கிற ஒரு உணர்வு சகிப்புத்தன்மையை ஏற்படுத்தி செல்வதை எவராலும் தவிர்க்க இயலாது. ஏதோ ஒருவகையில் முரண்பட்ட வாழ்வினை வாழும் சமூக புழுக்கள் ஆகிப் போனோம். 

நேர்மையும், நியாயமும் கேலிப் பொருளாகிப் போனது. தவறு செய்பவர்களை மறைக்கும் கேவலம் எங்கும் நிறைந்து போனது. இப்படித்தான் உலகம் இருக்கும் என்பதை ஏற்று கொண்ட பின்னர் அதன்படியே வாழ்வது என்பது பலருக்கும் பழகித்தான் போனது.

கொலை குற்றங்கள் என நிறைந்து காணப்படும் சமூகத்தில் நாம் வாழ்ந்தால் என்ன? அழிந்தால் என்ன? 

ஒவ்வொரு வினாடியும் பல குழந்தைகள் பரிதாப நிலைக்கு உட்படுத்தபடுகிறார்கள். இதை தெரிந்தும் தெரியாத சமூகமாகவே வாழும் நமக்கு எதிர்காலம் என்பது வெளிச்சமாகவே இருக்கிறதாம். 

Tuesday, 3 May 2011

முடியாது என சொல்லவா தெரியாது!

முடியாது என சொல்ல தெரியாமல் பல விசயங்களில் மனிதர்கள் சிக்கி கொண்டு தடுமாறுகிறார்கள் என படித்தபோது ஆச்சர்யமாக இருந்தது.

நம்மை பற்றி நாம் அறிந்து கொண்டிருப்பதை விட நம்மை பற்றி பிறர் அதிகம் அறிந்து வைத்திருக்கும் வகையில் நாம் நடந்து கொள்கிறோம் என்பதுதான் இந்த சிக்கலுக்கு காரணம். 

பிறரின் தூண்டல்களில் நம்மை நாம் ஈடுபடுத்தி கொள்வதினால் நாம் மிகவும் சிரமப்படுகிறோம். இதைத்தான் ஆசையே துன்பத்திற்கு காரணம் என சொல்லலாம். 

துன்பம் துயரம் இல்லாம் உயரம் கைக்கு எட்டுவதில்லை. அப்படியெனில் சிரமம் இல்லாமல் வாழ்வது எப்படி? போராடாமல் வாழ்வது எப்படி?

சிரமப்படாமல், போராடாமல் வாழ ஒருவர் நினைத்துவிட்டால் அதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவுதான். 

நினைத்ததை செயல்படுத்த அதற்கான அயற்சி இல்லாத முயற்சி அவசியம். முடியாது என சொல்லவா தெரியாது. 

முடியும் விசயத்தில் முடியாது என சொல்பவர்கள் சாதனையாளர்களாக முடியாது என்பது உண்மை. முடியாது விசயத்தில் முடியும் என சொல்பவர்கள் சோதனைகுட்பட்டு, வேதனைக்குட்பட்டு சீரழிகிறார்கள். 

முடியும் விசயம் எது? முடியாது விசயம் எது? உங்களை நீங்களே உறுதி படுத்தி கொள்ளுங்கள். அடுத்தவர் சொல்வதை கேட்டு அடுத்த அடி கூட எடுத்து வைக்காதீர்கள். 

Sunday, 1 May 2011

கூட்டி கழித்தல்

கூட்டி கழித்தல் 
மனிதர்களின் அற்புத விளையாட்டு 

தேவையெனில் கூட்டுவதும்
தேவையற்றதெனில் கழித்தலும்
பரம்பரையாய் வந்த விளையாட்டு 

லாப கணக்குதனில் கூட்டுதலும்
நஷ்ட கணக்குதனில் கழித்தலும்
கால கணக்குகளின் விளையாட்டு 

கூட்டுதலிலும் கழித்தலிலும் 
மனம் வைத்தே பெருக்குவதில்
சிறுத்து போன மனித விளையாட்டு!