Thursday, 25 November 2010

அடியார்க்கெல்லாம் அடியார் 35

வேகமாகத் திரும்பிய அந்த நபர் மதுசூதனனை நோக்கி ''உன்னை சிவலோகம் அனுப்புதேன், நீயே சிவனைச் சந்திக்கலாம்லே'' என அரிவாளை ஓங்கினார். அப்போது சிலர் ஓடி வந்தார்கள்.

''
என்னை வெட்டட்டும், இடைமறிக்க வேண்டாம்'' என நின்றான் மதுசூதனன். அரிவாளுடன் வந்தவர் கூட்டம் கண்டு ஒருநிமிடம் தடுமாறினார். ''விலகும்லே, அவனை'' என்றார் அந்த நபர். மற்றவர்கள் ஓடி வந்து அந்த நபரைப் பிடித்து அடிக்க ஆரம்பித்தார்கள். அந்த இடத்திலிருந்து விரைந்து ஓடி மறைந்தார் அந்த நபர். 

மதுசூதனனை நோக்கி கூட்டம் ஏற்பாடு செய்த சுப்பிரமணி, ''சாமி நீங்க தங்க ஒரு அறை ஏற்பாடு பண்ணியிருக்கேன், நீங்க இங்கேயே இருக்கலாம். உங்களுடைய பேச்சு மிகவும் நல்லா இருக்கு, என்னுடைய விண்ணப்பத்தை ஏத்துக்கிரனும்'' என்றார். 

மதுசூதனன் சம்மதம் தெரிவித்தான். ''எம் அடியாரும் எம்முடன் இருக்கச் சம்மதம் சொன்னால் மகிழ்வேன்'' என்றான் மதுசூதனன். ''டேய் உன்னை'' என கோபம் கொண்ட கதிரேசன் சினம் அடக்கினான். ''நீதான் எனக்கு அடியார்'' என்றான் மதுசூதனன் மறுபடியும். 

கதிரேசன் ஈஸ்வரியுடன் கிளம்பினான். வைஷ்ணவி மதுசூதனனிடம் '' உன் நிலைமையைப் பார்த்தாயா?'' என்றாள். ''என் மதியின் நுட்பம் எவருக்கும் தெரிவதில்லை'' என்றான் மதுசூதனன். ''நீ மாறிட்டேனு நினைச்சேன்'' என்றாள் வைஷ்ணவி. ''உம்மிடம் யாம் எவ்வித மாற்றமும் கொள்வதில்லை'' என்ற மதுசூதனன் ''செல்லலாமா'' என சற்றுத் தள்ளி நின்றிருந்த சுப்பிரமணியிடம் கூறினான்

மதுசூதனன் தினமும் சிவன் கோவிலில் உரையாற்றத் தொடங்கினான். அவனது உரையைக் கேட்டு அனைவரும் பாராட்டிச் சென்றார்கள்.

ஒரு நாள் இரவு மதுசூதனன் தங்கி இருந்த அறையில் வெளிச்சம் பரவியிருப்பதைக் கண்டு தயங்கிய அந்த நபர் மெதுவாக சன்னல் வழியே எட்டிப்பார்த்தார். மதுசூதனன் தியான நிலையில் அமர்ந்து இருந்தான். அவனை அந்தக் கோலத்தில் கண்டதால் தனது கையில் இருந்த அரிவாளின் மேலிருந்த பலம்தனை சற்று தளரச் செய்தது. மதுசூதனன் கண்களைத் திறப்பதைக் கண்டதும் அறைக் கதவைத் தட்டினார் அந்த நபர். மதுசூதனன் கதவைத் திறந்தான். பக்கத்து அறைக்கதவுகளும் திறந்தது.

அரிவாளுடன் ஒருவர் நிற்பதைக் கண்ட பட்டாச்சாரியர்கள் இருவர் பாய்ந்து வந்து அந்த நபரைப் பிடித்தனர். அந்த நபரின் கையில் இருந்த அரிவாள் கீழே விழுந்தது. ‘’அவரை விட்டுவிடுங்கள், என்ன நினைத்து வந்தாரோ அதைச் செய்துவிட்டுப் போகட்டும்’’ என்றான் மதுசூதனன். ‘’உங்களைக் கொல்ல வந்திருக்கிறான், சும்மா இவனை விடச் சொல்றீகளே’’ என பட்டாச்சாரியர் முணுமுணுத்தார். அந்த நபர் திமிறினார். கால்களை முன்னும் பின்னும் உதைத்தார். ‘’அவரை விடுங்கள்’’ என்றான் மதுசூதனன். 

பட்டாச்சாரியர் ஒருவர் குனிந்து அரிவாளை எடுத்துக் கொண்டார். அந்த நபரை விட்டார்கள், அந்த நபரை உள்ளே அழைத்தான் மதுசூதனன். பட்டாச்சாரியர்கள் காவலுக்கு இருப்பதுபோல் நின்றார்கள். மதுசூதனன் அவர்களை அவர்களுடைய அறைக்குப் போகச் சொன்னான்.

மதுசூதனன் கதவை சாத்தினான். ‘’என்மேல் நீவிர் கொண்ட வெறுப்பிற்கான காரணம் அறியத் தருவீரா’’ என்றான் மதுசூதனன். ‘’நீ பொய் வேசம் போடுதல, சாமிய கும்பிடுறது உண்மையா இருக்கறதுக்குல, இப்ப கூட நீ கருணை காட்டுதேனு நினைக்காதல, அடிச்சே கொன்னு போடுவேன்ல’’ என்றார் அந்த நபர். ‘’செய்துவிட்டுப் போ’’ என்றான் மதுசூதனன். மதுசூதனனை ஓங்கி அறைந்தார் அந்த நபர். சத்தம் கேட்டு பட்டாச்சாரியார்கள் ஓடி வந்தார்கள். மதுசூதனனின் மார்பில் எட்டி உதைத்தார் அந்த நபர். எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் எந்த சப்தமும் எழுப்பாமல் அமைதியாய் இருந்தான் மதுசூதனன். பட்டாச்சாரியார்கள் அந்த நபரை பாய்ந்துப் பிடிக்கப் போனார்கள். ‘’இதுதாம்லே உனக்கு கடைசி’’ எனச் சொல்லிவிட்டு அறையைவிட்டு ஓடினார் அந்த நபர். 

மதுசூதனன் எழுந்தான். ‘’வலிக்கிறதா, போலீஸுக்குத் தகவல் சொல்லி அனுப்புவமா’’ என்றார் பட்டாச்சாரியார். எதுவும் வேண்டாம் என சைகையிலேயே சொன்னான் மதுசூதனன்.

பட்டாச்சாரியர்கள் இரவில் நடந்த விசயத்தை கோவில் நிர்வாகியிடம் சொன்னார்கள். அவர் பதறிப்போனார். மதுசூதனனிடம் விபரம் கேட்டார். மதுசூதனன் அமைதியாகவே இருந்தான். காவல்துறைக்குச் செல்வதைத் தவிர்த்தார்கள்

மதுசூதனன் ஒருநாள் கதிரேசனை எதிர்கொண்டான்.''வைஷ்ணவியைப் பொண்ணுப் பார்க்க வந்திருக்காங்க' என்றான் கதிரேசன். அசட்டுப் புன்னகை புரிந்தான் மதுசூதனன். ''என்கூட வைஷ்ணவி வீட்டுக்கு வா'' என்றான் கதிரேசன் மேலும். 

கதிரேசன் முன்னால் நடக்க அவனைப் பின் தொடர்ந்தான் மதுசூதனன். ''என்னை உன்னோட அடியாரா இருக்கச் சொன்னீயே, நீ சிவனுக்கு இன்னுமா அடியார், நீ கோவிலுல ரொம்ப அருமையாப் பேசினனு ஒருநாள் கோவிலுக்குப் போன என் அம்மா ரொம்பச் சந்தோசமாச் சொன்னாங்க, உனக்கு எப்படி இப்படியொரு எண்ணம் வந்தது, நீ வேஷம் போடுறனுதான் நினைச்சிட்டு இருந்தேன் ஆனா நீ எவ்வளவு மாறிட்ட'' என்றான் கதிரேசன். மதுசூதனன் புன்னகை மட்டுமே புரிந்தான்.

வைஷ்ணவி வீட்டினை அடைந்தார்கள். அங்கே மதுசூதனின் மனைவி ருக்மணி இருப்பதை சற்றும் மதுசூதனன் எதிர்பார்க்கவில்லை. ''இவ்வளவுப் படிச்சிட்டு நீ இப்படி ஒரு முடிவுக்கு ஏன் போன, நீ வேலைப்பார்த்துட்டே, குடும்பத்துல இருந்துக்கிட்டு இறைப்பணி ஆற்றலாமே'' என்றார் மதுசூதனனின் பெற்றோர். 

''இனிமேல் நீங்க இங்க இருக்க வேணாம், நான் அவசரப்பட்டுட்டேன்'' என சொன்னார் ருக்மணி. ''மதுசூதனா, என்ன தயங்குற'' எனறாள் வைஷ்ணவி. ''இவள் எம்மோடு என் அடியாராய் தங்கட்டும்'' என்றான் மதுசூதனன். வா என ருக்மணியை தன்னுடன் அழைத்தான் மதுசூதனன். 

''அறிவுகெட்டவனே, உன்னை கொன்னாத்தான் சரியாகும்'' என மதுசூதனின் தந்தை அவனை அடிக்க ஓடினார். ''எம்மை யாம் கொன்று பல மாதங்கள் ஆகிவிட்டது, உமக்கும் சம்மதம் எனில் உமது மனைவியருடன் எமக்கு அடியாராய் நீவிர் இருக்கலாம், எமது அடியாரை வழி மறிக்காதீர்'' என நடந்தான் மதுசூதனன். அவனை பின்தொடர்ந்து நடந்தாள் ருக்மணி.

(தொடரும்)