Wednesday, 17 November 2010

அடியார்க்கெல்லாம் அடியார் - 32


கதிரேசன் அடுத்தநாள் காலையில் அவசரம் அவசரமாக கிளம்பினான். மதியம் வீடு திரும்புவதாக ஈஸ்வரியிடம் கூறிவிட்டு வைஷ்ணவியைச் சந்திக்கச் சென்றான். வைஷ்ணவி கதிரேசனுக்காக காத்துக் கொண்டிருந்தாள். 


''என்ன விசயமா பேசனும், சொல்லு'' என்றான் கதிரேசன். 


''நேத்து ஈஸ்வரிகிட்ட பேசினப்ப அவகிட்ட ஒருவித பயம் தெரிஞ்சது. நீ அவளை விட்டுட்டுப் போயிருவனு நினைக்க ஆரம்பிச்சிட்டா. அதனால அவளுக்குனு ஒரு குழந்தைப் பொறந்துட்டா அந்த பிடிமானத்தோட நீயும் கூடவே இருப்பனு நினைக்கிறா. நீ கொஞ்சம் உன்னோட சிவன் பக்தியை தள்ளி வைக்கக் கூடாதா'' என்றாள் வைஷ்ணவி.


''நம்மைப் பத்தி நாம பிறருக்கு விளக்கம் சொல்லிக்கிட்டிருக்கத் தேவையில்லை. நம்மளைப் புரிஞ்சவங்களுக்கு விளக்கம் அவசியமில்லை, நம்மளைப் புரியாதவங்களுக்கு நாம சொல்றது நம்பும்படியா இருக்கப் போறதில்லை, சிவன் பக்தியை தள்ளி வைக்கச் சொல்றதைத்தான் முக்கியமான விசயம்னு ஈஸ்வரிகிட்ட சொன்னியா?'' என்றான் கதிரேசன். 


''இல்லை, மதுசூதனன் பத்தி பேசனும், ஆனா அதுக்கு முன்னால இந்த விசயத்தையும் பேசலாம்னு நினைச்சேன். நீ ஈஸ்வரியை விட்டு பிரியமாட்டியில்ல'' என்றாள் வைஷ்ணவி. ''என்ன பேச்சு இது, பிரிஞ்சிப் போறதுக்கா அவளைக் கல்யாணம் பண்ணினேன், ஏன் இப்படி ஒரு நினைப்பு வருது உங்க இரண்டு பேருக்கும். அவளையும் பிரியமாட்டேன், உன்னையும் பிரியமாட்டேன்'' என்றான் கதிரேசன். 


''பட்டினத்தார், அருணகிரிநாதர், திருநீலகண்டர், திருஞானசம்பந்தர்னு ஏதேதோ பேசுறா ஈஸ்வரி'' என்றாள் வைஷ்ணவி. ''அவ படிச்சது அப்படி, அவ என்னைவிட்டுப் பிரியாம இருந்தாலே போதும்'' என்றான் கதிரேசன். மதுசூதனன் பற்றி கேட்டான்.  தனது செயல்களே ஈஸ்வரியின் இந்த மனநிலைக்கு காரணம் என அறிந்து கொண்டான். அவள் தன்னிடம் சொல்ல இயலாமல் தவிப்பதை நினைக்கும்போது கதிரேசனுக்கு கஷ்டமாகத்தான் இருந்தது. 


மதுசூதனன் திருமணம் சில பிரச்சினைகளால் தடைப்பட்டுப் போனதாகவும், அவனது செய்கையால் அவனது பெற்றோர்கள் பெரும் அவமானத்துக்கு உள்ளானார்கள் என அறிந்து கொண்டதாக கூறியவள், அவனுக்கு ஏதேனும் வகையில் உதவி செய்ய வேண்டும் என கதிரேசனிடம் கூறினாள் வைஷ்ணவி. அதைக் கேட்ட கதிரேசன் ''இதெல்லாம் எப்பொழுது நடந்தது, எப்படி இவ்விசயம் தெரிய வந்தது, இன்னும் அவனையே நினைத்துக் கொண்டிருக்கிறாயா, மிகவும் தெளிவானவளாக அல்லவா நீ இருந்தாய் ஏன் மனம் இப்படி அலைபாய்கிறது'' எனக் கேட்டான் கதிரேசன். 


''நீ மட்டும் ஈஸ்வரியை திருமணம் செய்துகிட்டு  இன்னமும் சிவனையே நினைச்சிட்டு இருக்கலையா? '' என்றாள் வைஷ்ணவி. ''அது வேற   , இது வேற. இந்நேரம் அவன் திருமணம் செஞ்சி இருந்தா என்ன செய்து இருப்ப?'' என்றான் கதிரேசன். ''நினைப்பு இருந்திருக்கும்'' என்றாள் வைஷ்ணவி. ''தெளிவா பேசிய நீயா இப்படி குழம்புறது, உனக்கு தகவல் சொன்னது யார்?'' எனக்கேட்டான் மீண்டும். ''மதுசூதனனின் நண்பன்தான் பேசினான்'' என்றாள் வைஷ்ணவி. ''நீ அவனை மறக்க மாட்டாயா?'' என்றான் கதிரேசன். ''நீ சிவனை மறக்கமாட்டாயா?'' என்றாள் வைஷ்ணவி. ''நீ விசயம் கேள்விபட்டதும் அவன்கிட்ட நேரடியா பேசியிருக்கனும்'' என்றான் கதிரேசன். ''முயற்சி பண்ணினேன், ஆனா அவன் எடுக்கலை'' என்றாள் வைஷ்ணவி. 


''கொஞ்சம் இரு'' என சொல்லிவிட்டு மதுசூதனனுக்கு உடனே அழைப்பு விடுத்தான் கதிரேசன். எதிர்முனையில் ஒரு பெண் குரல் கேட்டது. ''யார் பேசறது'' என்றது குரல். ''கதிரேசன் பேசறேன், மதுசூதனனோட நண்பன், இது மதுசூதனனோட நம்பர் தானே, நீங்க யாரு'' என்றான் கதிரேசன். ''அவர் வெளியேப் போயிருக்கார், இப்ப வந்துருவார், நான் அவரோட மனைவி பேசறேன், வந்ததும் சொல்றேன்'' என இணைப்பைத் துண்டித்தாள். கதிரேசன் மிகவும் கோபமானான். ''வைஷ்ணவி அவன் உன்னோட வாழ்க்கையில விளையாடறான், நீ இப்படி ஏமாளியா இருக்காதே. அவன் கல்யாணம் எல்லாம் நல்லாவே நடந்துருச்சி''. 


சிறிது நேரத்தில் கதிரேசனை அழைத்தான் மதுசூதனன். ''எதுக்குடா போன் பண்ணின, என் கல்யாணம் நின்னுப்போச்சுனு கேள்விப்பட்டு என்னை அவளோட சேர்த்து வைக்க முயற்சி பண்றியா. அவளோட கல்யாணம் தான் இனிமே ஒவ்வொருதடவையும் நிற்கும். நீ அவளை ரெண்டாம் தாரமா கல்யாணம் பண்ணிக்கிட்டாதான் உண்டு. அவளைப் புரிஞ்சிக்கிட்ட சிவனாச்சே நீ'' என சொல்லி பயங்கரமாக சிரித்தான் மதுசூதனன். கதிரேசன் சற்றும் இதை எதிர்பார்க்கவில்லை. ''நீ தானே அவளை வேணாம்னு ஒதுக்கின, இப்போ ஏன் அவளுக்கு தொந்தரவு தர. இப்ப கூட உனக்கு உதவனும்னு நினைக்கிறா, அவகிட்ட பேசு'' என்றான் கதிரேசன். 


''உங்ககிட்ட எனக்கு என்னடாப் பேச்சு, வடிகட்டின முட்டாள்டா நீ'' என சொல்லிவிட்டு வைத்தான் மதுசூதனன். கதிரேசனுக்கு கோபம் அதிகமானது. வைஷ்ணவி கதிரேசன் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தாள். கதிரேசன் ஆறுதல் சொன்னான். ''நீ கவலைப்படாதே, நாங்க எல்லாம் இருக்கோம்'' என வைஷ்ணவியை தன்னுடன் வீட்டுக்கு அழைத்து வந்தான். கதிரேசன் பூஜை அறைக்குள் நுழைந்தான்.


''காதலில் கேடும் உளதோ கண்டறியேன் பெருமானே
காதலும் காத்தே நிற்கும் உண்மையோ
ஒருமுறை காதல் வயப்பட்டுப் போய்விடின் மறந்தே
மறுமுறை காதல்வருமோ சொல்சிவனே''


(தொடரும்)

Friday, 12 November 2010

மனித உரிமைகள் எனும் அக்கப்போர்

இது ஒரு கேடு கெட்ட சமூகம் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. அந்த கேடு கெட்ட சமூகத்தில் நாமும் ஒரு அங்கம் என்பதை மறுக்க வேண்டும் என்பது நிச்சயம் இல்லை.

ஒரு வீடு வாங்குவது என்பது எத்தனை பெரிய விசயம்? வீட்டினை கட்டிப் பார், கல்யாணம் பண்ணி பார் என்பது நமது ஊருக்கு பொருந்தும். ஆனால் லண்டன் போன்ற நகரங்களில் கட்டப்பட்ட வீடுகள் வாங்குவதே பெரிய விசயம்.

சொந்த பணத்தில் வீடு வாங்குவது என்பது பத்து சதவிகித மக்களால் முடியும். மீதி எல்லாம் வங்கியில் கடன் வாங்கி வீடு வாங்குபவர்கள்தான். அப்படித்தான் ஒருவர் வீடு வாங்கி அந்த வீட்டினை புதுபித்து கொண்டிருந்தார்.

வீட்டினை புதுப்பித்து கொண்டிருக்கும்போது அங்கேயா தங்க முடியும். தான் இருந்த வாடகை வீட்டினில் இருந்து கொண்டு புதிய வீட்டு வேலையை செய்து வந்தார். இங்கே வீடு வேலை செப்பனிடுபவர்கள் தொடர்ச்சியாக ஒரு வேலையை செய்து முடித்தோமா என இருக்க மாட்டார்கள். அங்கொரு வீடு, இங்கொரு வீடு என பல வீடுகளை செப்பனிட்டு கொண்டிருப்பார்கள். அவ்வாறு இருக்கும்போது இவரது வீடு பல நாட்களாக வேலை செய்யாமல் இருந்தது.

இந்த சமயம் பார்த்து அந்த வீட்டிற்குள் கிழக்கு ஐரோப்பாவை சேர்ந்த வீடு இல்லாத நபர்கள் உள்ளே சென்று குடியேறி விட்டார்கள். விசயம் அறிந்த நபர் திடுக்கிட்டு போனார். காவல் அதிகாரிகளுக்கு விபரம் தெரிவித்ததும் வந்தார்கள். அவர்களை வெளியேற்ற மனு ஒன்று பெற்றாக வேண்டும் என சொன்னார்கள்.

இப்படி முறையின்றி குடியேறும் நிகழ்ச்சி அவ்வப்போது லண்டனில் நடைபெற்று வருகிறது. அவ்வாறு குடியேறியவர்களை வீட்டின் சொந்தக்காரர்கள் எதுவும் செய்ய கூடாது, அதற்கான உரிமை கிடையாது. சட்டமே எல்லாம் செய்யும். அந்த முறையில்லா சட்டம் என்ன சொல்கிறது என்றால் வீட்டை உடைத்து செல்பவர்களை ஒன்றும் செய்யாதாம். ஏனெனில் மனித உரிமை பிரச்சினையாம்.

இந்த நாட்டில் இருக்கும் சட்டங்கள் குறித்து ஒரு சின்ன கதை ஒன்றை முன்னரே எழுதி இருந்தேன். ஒரு ஒழுங்கு முறை வேண்டும், அதற்காக அளவற்ற ஒழுங்கு முறையா?

மனித உரிமைகள் என்கிற போர்வையில் திருடர்கள், கொள்ளைக்காரர்கள் என அனைவரையும் வேடிக்கை பார்க்கும் அவலம் உலகெங்கிலும் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த மனித உரிமைகள் என்றால் என்ன? புரியாத விசயங்களில் இதுவும் ஒன்றாகி போனதுதான் அவலம்.

கதை இங்கே.

வரதனின் சட்டம்

வரதன் இங்கிலாந்து நாட்டிற்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகிறது. இங்கிலாந்து நாட்டில் பிரிஸ்டால் எனும் பகுதியில் நான்கு மாதங்கள் சுயமாக ஒரு சின்ன கடை வைத்து பிழைப்பினைத் தொடங்கி இருந்தான். அவனது கடைக்குள் வருவோரில் சிலர் சில பொருட்களை எடுத்துவிட்டு பணம் தராமல் ஓடிச் செல்வதை கண்டு மிகவும் கோபமுற்றான். அவர்களை விரட்டிச் சென்று பிடிக்க இயலாமல் உள்ளதை தொலைத்துவிடுவோம் என கடையிலே இருந்து கொள்வான். காவல் அதிகாரிகளிடம் சொல்லியும் எந்த நடவடிக்கையும் இல்லை. 

வரதனின் நேர்மையான குணமும், கடைக்கு வருவோரிடம் பேசும் நல்ல பண்பும் அந்த கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை கவர்ந்து இருந்தது. மேலும் நியாய விலைக்கே பொருட்களை விற்று நல்ல பெயர் சம்பாதித்து இருந்தான் வரதன். ஆனால் திருடர்களின் அட்டூழியத்தை அவனால் சகித்துக் கொள்ள இயலவில்லை. ஏழை நாடான இந்தியாவில் கூட இப்படி பொருட்கள் களவாடிச் செல்பவர்கள் இல்லையே என நினைத்து வேதனையுற்றான். 

கடையில் வருவோரிடம் ஆலோசனை கேட்டான். அவர்களால் தகுந்த பதிலைச் சொல்ல முடியவில்லை எனினும், ஒரு காவலாளி வைத்துக்கொள்ளுங்கள் என சொன்னார்கள். ஆனால் வரதனுக்கு காவலாளி எல்லாம் வைத்து சம்பளம் தந்து கட்டுபடியாகும் எனத் தோணவில்லை. அசைபட கருவி நிறுவியும் எந்த பலனும் இல்லை.

ஒருமுறை இப்படி திருடிச் சென்ற சிறுவனை பிடித்துவிட்டான் வரதன். அவனிடம் நல்லபடியாய் புத்திமதி கூறி, வேண்டுமெனில் பணம் கொடுத்து வாங்கிப்போ இப்படி தூக்கிச் செல்லாதே என சொன்னதும் அந்த சிறுவன் பொருளை வரதனின் முகத்தில் எறிந்துவிட்டு தகாத வார்த்தையால் திட்டிவிட்டு ஓடினான். வரதனுக்கு கோபம் அதி பயங்கரமாக வந்தது. ஆனால் துரத்திச் செல்லாமல் விட்டுவிட்டான். என்ன நாடு இது, ஒரு ஒழுங்கு, ஒழுக்கம் எல்லாம் இல்லை. இச்சின்னஞ்சிறு வயதிலே இப்படிச் செய்தால் இந்த நாட்டின் எதிர்காலம் என்னாவது என மனதுக்குள் அச்சம் கொண்டான். இந்தியாவிலோ வறுமையின் கொடுமை தாங்காமல் ஹோட்டல்களிலும், தொழிற்சாலைகளிலும் வெயில் மழை என பொருட்படுத்தாது வேலை செய்யும் சிறுவர்களை நினைத்த போது இங்கிருக்கும் சிறுவர்களின் நடத்தை மேல் அதிக கோபம் வந்தது. ஏன் இந்த நாட்டிற்கு வந்தோம் என்றெல்லாம் நினைக்க ஆரம்பித்துவிட்டான் வரதன். 

உதவித்தொகை என அரசிடம் வாங்கிக் கொண்டு வேலை செய்யாமல் சோம்பேறியாய் இருப்பவர்கள் தனது கடையில் பொருள் திருடிச் சென்றதையும் கண்டிருக்கிறான். சமூக நலன் பாதுகாவலர்கள் என சுற்றிச் சுற்றி வரும் காவல் அதிகாரிகளிடம் சொல்லியும் எவ்வித பயனில்லை. 

ஒருமுறை நாளிதழைப் பார்க்கையில் அதில் ஒரு முதலாளியின் வீட்டில் திருட நுழைந்தவனை அந்த முதலாளி சுட்டுவிட்டார். அதற்கு சட்டம் முதலாளியை தண்டித்து இருந்தது. திருடனை ஒன்றும் செய்யவில்லை. திருட வந்தவனை ஏன் நீ தடுக்கிறாய் என்றுதான் கேட்டது. இதனைப் படித்ததும் கொதித்துப் போனான் வரதன். மனதில் ஒரு முடிவு செய்தான். இந்த கேடு கெட்ட சட்டத்திற்கு ஒரு பாடம் புகட்டுவது என தீர்மானித்தான். 

கடையில் ஒரு சின்ன கத்தியை எடுத்து வைத்துக்கொண்டான். இந்த கத்தியானது அட்டை பெட்டிகளை திறக்க அவன் பயன்படுத்துவதுண்டு. ஒரு வாலிபன் உள்ளே வந்தபோதே சந்தேகம் கொண்டான் வரதன். அவனை கண்காணித்துக் கொண்டே இருந்தான். வரதன் நினைத்தது போல விலையுயர்ந்த பொருளைத் தூக்கிக் கொண்ட ஓட எத்தனித்தான் அவன். ஒரே பாய்ச்சலாக கடையின் கதவு முன்னால் நின்றான் வரதன். ஓட இருந்தவன் வரதனை தள்ளிவிட்டு அடித்துவிட்ட ஓட நினைக்கையில் முகத்தில் கத்தியால் கீறல் போட்டான் வரதன். அந்த வாலிபன் வலியால் துடிதுடித்து பொருளை கீழே போட்டுவிட்டு ஓடினான்.

வரதன் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வரதனின் வக்கீல் வரதன் தன்னையும், தனது வியாபாரத்தையும் காப்பாற்றிக்கொள்ளவே அவ்வாறு செய்தான் என வாதிட்டார். அங்கிருந்த மக்களும் வரதன் மேல் வழக்குப் பதிவு செய்தது முட்டாள்தனம் என சொன்னார்கள். இந்த வேளையில் கடையில் திருடிய வாலிபன் தன்மேல்தான் தவறு இருக்கிறது, வரதன் மேல் இல்லை என நீதிபதிக்கு கடிதம் எழுதினான். இதையெல்லாம் விசாரித்த நீதிபதி வரதனை விடுதலை செய்தார், ஆனால் இது சட்டத்திற்கு மீறிய குற்றம் என கண்டிக்கவும் செய்தார். 

மனித உரிமை என கொலைகாரர்களையும், கொள்ளைக்காரர்களையும் உங்கள் நாட்டில் ஏன் மனிதர்களாக கணக்கில் வைக்கிறீர்கள் என சத்தம்போட்டுச் சொன்னான் வரதன். நீதிபதி வரதன் சொன்னதை வெகுவேகமாக எழுதிக்கொண்டிருந்தார். அதுதானே மனித உரிமைச் சட்டம் மனிதர்களுக்கு மட்டுமே! மனிதர்கள் யார் என்பதை வரையறுக்குமா இந்தச் சட்டம்?.

Thursday, 11 November 2010

சிறந்த பதிவர் விருது - 3 (ஷக்திப்ரபா)

பயணம் என்றால் பெரும்பாலோனோருக்கு கொள்ளை பிரியம். எனது தந்தை ஓரிடத்தில் ஓய்வாக அமர்ந்திருக்க மாட்டார். ஆசிரியராக வேலை புரிந்தபோது அவர் சைக்கிளில்தான் வேலைக்கு செல்வார். அதனால் எண்பது வயதாகியும் கூட திடகாத்திரமாகவே இருக்கிறார். அவ்வபோது அவர் இறந்து போவதாக எனக்கு கெட்ட கனவு வந்து தொலைக்கும். அப்பொழுதெல்லாம் மனம் திடுக்கிட்டு எழும். சில நாட்கள் எல்லாம் கவலைகள் மனதை கொத்தி பிடுங்கும். எங்களை எல்லாம் ஆரோக்கியமாக இருக்க சொல்லும் அவரை நினைக்கும்போது பல நேரங்களில் மனது கவலைப்படும். உடல்நலனை பற்றி அக்கறை இல்லாமல் போய்விட்டோமே என தோன்றும்.

அந்த சைக்கிள் பயணம் மட்டுமின்றி நடை பயணமும் அதிகம் மேற்கொண்டவர். ஓய்வு காலங்களில் ஓய்வு எடுத்து கொள்ளுங்கள் என சொன்னாலும் அதை எல்லாம் பொருட்படுத்தாதவர். வாகனம் வாங்கி தருகிறோம், அதில் சென்று வாருங்கள் என வாகனமும் வாங்கி தந்த பின்னரும் விருதுநகர், மதுரை, கோயம்புத்தூர் என பல நேரங்களில் பேருந்தில் பயணம் புரிபவர். லண்டன், அமெரிக்கா என வருடம் இருமுறை பயணம் மேற்கொள்வார். வீட்டினில் தங்கவே மாட்டார். காலை எழுந்ததும் பூங்கா செல்கிறேன் என நடை பயணமும், மாலை வேறொரு பூங்கா செல்கிறேன் என நடை பயணமும் என அவரது வாழ்க்கை பயணங்களில் தான் மிகவும் அதிகமாக கழிந்து இருக்கிறது.

சில இடங்களுக்கு சென்றதுமே அலுப்பு தட்டி விடும் பலருக்கு. எப்படி அலைவது என அங்கலாய்ப்போர் பலர். எனது தந்தையை பார்த்தால் எப்படி இப்படி இவரால் அலைய முடிகிறது என ஆச்சர்யம் எழத்தான் செய்கிறது.

அப்படிப்பட்ட பயணம் மேற்கொண்ட அவரிடம் அவரது பயணம் பற்றி ஒருநாளேனும் ஒருநாள் அமர்ந்து கேட்டுவிடத்தான் ஆசை. நான் பல இடங்கள் பயணம் செய்தது உண்டு. அதை இணையதளங்களில் எழுதிய பின்னர் எழுத்தில் வைத்தது உண்டு. ஆனால் எத்தனை சுவராஸ்யமாக எழுதினேன் என எனக்கு தெரியாது. ஆனால் என்னை மிகவும் கவர்ந்த விதத்தில் ஒரு பயண கட்டுரை படித்தேன் சில ஆண்டுகள் முன்னர். அந்த பயண கட்டுரை படித்ததும், அந்த இடத்தினை சென்று பார்க்கும் ஆவல் மேலிட்டது. அடுத்த வருடமே பயணம் மேற்கொண்டோம்.

இவர் குழுமத்தில் முன்னர் எழுதினாலும், வலைப்பூவில் என்னைப் போலவே எழுதிய பல விசயங்களை சேகரித்து வருகிறார். இவரது எழுத்துகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. இவரது மற்ற கட்டுரைகளும் குறைந்தவைகள் அல்ல. நிச்சயம் பல விசயங்களை இவரது பதிவின் மூலம் தெளிந்து கொள்ளலாம்.

அவருக்கு சிறந்த பதிவர் விருது வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அவர் வேறு யாருமல்ல மின்மினிபூச்சிகள் வலைப்பூவின் சொந்தக்காரரான ஷக்திப்ரபா. அவர் எழுதிய பயணக் கட்டுரை தங்கள் பார்வைக்கு.

திருவண்ணாமலை பற்றிய அற்புதமான பயணக் கட்டுரை.

1



3

4

5