Tuesday, 9 November 2010

நுனிப்புல் (பாகம் 2) 26

25. சாத்திரம்பட்டி ஒரு சரித்திரம்

அன்று இரவே வாசனிடம் மாதவி சாத்திரம்பட்டி செல்வது குறித்துக் கேட்டாள். வாசன் ஆவலுடன் சரியென சொன்னான். மாதவி பாரதிக்கு தகவல் தெரிவித்தாள். பாரதி பெரியவரிடம் சொன்னபோது அங்கெல்லாம் எதுக்கும்மா என்றார். மாதவி அழைத்தாள் என சொன்னவள் வாசன் செல்கிறான் எனச் சொன்னதும் ம்ம் சரிம்மா, வாசன் கூடவே இருந்து, கவனமா போய்ட்டு வாம்மா என்று மட்டும் சொன்னார். அங்கே இருந்த நாற்காலியில் அமர்ந்தவர் நாராயணா உன்னோட வேலையை நான் நல்லாதானே செஞ்சேன், செடியெல்லாம் நல்லாதானே வருது என மனதில் சொல்லிக்கொண்டு கண்கள் கலங்கினார். 

பாரதியிடம், கிருத்திகா தன்னை பூங்கோதை வரச்சொன்னதாகவும் அதனால் அவளுடன் இருக்கப்போவதாக கூறிவிட்டாள். மாதவி, தேவகியை நாராயணபுரத்தில் தங்கிக்கொள்ளச் சொன்னவள் அங்கே கிருஷ்ணதேவி என்பவரைப் பார்க்குமாறு கூறினாள். தாங்கள் திரும்பி வரும்போது தேவகியை உடன் அழைத்துச் செல்வதாக சொன்னதும் தேவகி சரியென சொன்னாள்.

அடுத்தநாள் காலையில் நால்வரும் கிளம்பினார்கள். நாராயணபுரத்தில் கல்லூரி தோழி பிரேமாவின் வீட்டிற்குச் சென்றார்கள். ஏழ்மை நிலையில் இருக்கும் பிரேமா குடும்பத்தினர் சற்றும் இவர்களை எதிர்பார்க்கவில்லை. எனினும் வீட்டில் நல்ல வரவேற்பு தந்தார்கள். தேவகி மட்டும் நாராயணபுரத்தில் தங்கிக்கொண்டாள். மூவர் மட்டும் சாத்திரம்பட்டிக்குக் கிளம்பினார்கள். மாதவியிடம் பிரேமா குடும்பத்தினருக்கு உதவக்கூடாதா என வாசன் கேட்டான். கல்லூரியில் அவளுக்குப் படிக்க உதவியாக இருக்கிறோம் மாமா என்று மட்டுமே முடித்துக்கொண்டாள் மாதவி. பாரதி அமைதியாகவே வந்தாள். 

பேருந்து பிடித்து ஒரு மிகச்சிறிய நகரத்தை அடைந்தபோது மணி காலை பத்தாகி இருந்தது. அங்கே சாத்திரம்பட்டி பற்றி கேட்டபோது ஒரு பாதையை காட்டி ஐந்து கிலோமீட்டர் செல்ல வேண்டும், பேருந்து வசதி கிடையாது என சொன்னார்கள். அங்கே இருந்த மிதி வண்டிக்கடையில் மிதிவண்டி வாடகைக்குக் கேட்டபோது அந்த மிதிவண்டிக்கடைக்காரர் வாசன் மற்றும் இருவரையும் பார்த்துவிட்டு இரண்டு மிதிவண்டிகள் தந்தார். தம்பி இதுதான் என்னோட பிழைப்பு என சொல்லிக்கொண்டு பெயரை எழுதிக்கொண்டார். மிதிவண்டிகளைப் பத்திரமா கொண்டு வந்துருவோம் என வாசன் அவருக்கு நம்பிக்கை வருமாறு சொன்னான். 

நான் மாமா கூட வரேன், நீ சைக்கிள் ஓட்டிட்டு வா பாரதிஎன கண்சிமிட்டிக் கொண்டே சொன்னாள் மாதவி. மாதவி எனக்கு சைக்கிள் மறந்துப் போச்சு, ஹோண்டா வாடகைக்கு கிடைச்சா வாசன் பார்த்துட்டு வரட்டும்என்றாள் பாரதி. நீங்க இரண்டு பேரும் அந்த சைக்கிளுல வாங்கஎன்றான் வாசன். மாமா நீங்க பாரதியை உட்கார வைச்சிட்டு வாங்கஎன்ற மாதவியைப் பார்த்து நான் உன்னோட வரேன் மாதவிஎன்றாள் பாரதி. 

இல்லை இல்லை நீ மாமா கூட வா ப்ளீஸ், எனக்கும் சைக்கிள் ஓட்டி ரொம்ப நாளாகுது, பேலன்ஸ் தவறி கீழே விழுந்துட்டா பிரச்சினைஎன்றாள் மாதவி. அவர்கள் பேசிக்கொண்டே நிற்பதைப் பார்த்தவர்களில் ஒருவர் 'என்னம்மா உங்களுக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாதா' எனச் சிரித்தார். ம்ம் தெரியாது நீங்க வேணும்னா ஓட்டிட்டு வரீங்களாஎன்றாள் மாதவி. எனக்கு வேலை இருக்கும்மாஎன கேட்டவர் நிற்காமல் சென்றுவிட்டார். 

கடைசியில் பாரதி வாசனுடன் செல்வது என முடிவானது. மாதவி சைக்கிளை நன்றாகவே ஓட்டினாள். மாதவி நீ நல்லாத்தானே சைக்கிள் ஓட்டுறேஎன்றாள் பாரதி. மாமாவை நான் ஒருதரம் சைக்கிள் போட்டியிலே ஜெயிச்சிருக்கேன் பாரதி, நீதான் சைக்கிள் பழக வானு சொன்னா வீட்டுக்குள்ள ஓடிப்போயிருவ, நீச்சலாவது தெரியுமா பாரதிஎன்றாள் மாதவி. 

மாமா என்ன பேசாம வரீங்க

சாத்திரம்பட்டிக்கு போகனும்னு உனக்கு எதுக்கு தோணிச்சி?’ என்றான் வாசன். பாரதிதான் போகலாம்னு சொன்னா, அவளோட சொந்தக்காரங்களைப் பார்க்கனுமாம்' என்றாள் மாதவி. 

எங்க சொந்தக்காரங்களா?’ பாரதி புரியாமல் கேட்டாள். வெயில் அடித்ததால் அனைவருக்கும் வியர்க்க ஆரம்பித்தது. சற்று தொலைவு சென்றதும் பாரதி நீ என் சைக்கிளுல வா, மாமா கஷ்டப்படறார்என மாதவி சொன்னாள். அதெல்லாம் ஒண்ணுமில்லை, பாரதி என்கூடவே வரட்டும், பாரதி நீ மாறி உட்கார நினைச்சா உட்கார்ந்துக்கோ’ என்றான் வாசன்.  ‘பேலன்ஸ் தவறாதுல்ல மாதவிஎன்றாள் பாரதி சிரித்தவாறு. 'அதெல்லாம் தவறாது' மாதவி சொன்னதும் பாரதி மாறிக்கொண்டாள். என்னோட சொந்தக்காரங்க யாரு?’ என்றாள் பாரதி. 'அங்கே போனதும் சொல்றேன்' என மாதவி சொன்னாள். 

சாத்திரம்பட்டிக்குள் சென்றார்கள். இவர்கள் மூவரையும் அந்த ஊரில் இருந்த மந்தையில் இருந்தவர்கள் வித்தியாசமாகப் பார்த்தார்கள். ஒருவர் இவர்களை நோக்கி வந்தார். வாங்க, எங்கிருந்து வரீங்க, யாரைப் பார்க்கனும்? என்றார். பாரதியும் மாதவியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டிருக்க வாசன் அச்சுதன் அவரைப் பார்க்கனும்என்றான். ஓ ஜோசியம் பார்க்க வந்திருக்கீங்களா அவர் பார்க்கறதை நிறுத்தி பல வருசங்கள் ஆச்சு. இந்த ஊரில அவங்க அண்ணன் அனந்தன் அப்படிங்கிறவரும் இருக்கார் அவரும் ஜோசியம் பார்க்கறது இல்லை. ம்ம் நீங்க எதுக்கும் இப்படியே கொஞ்ச தூரம் போனா கடவுட்துறை அப்படிங்கிற ஊரு வரும் அங்கே நம்பெருமாள்னு ஒருத்தர் பார்ப்பார் அங்கே போங்கஎன்றதும் நாங்க ஜோசியம் பார்க்க வரலை, அச்சுதனைப் பார்க்கனும்என முடித்தான் வாசன். 

மூவரும், அச்சுதன் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அச்சுதன் ஐம்பதுக்கும் மேற்பட்ட வயதானவராக காணப்பட்டார். வீட்டில் இருந்த படங்களைப் பார்த்தபோது அவருக்கு குழந்தைகள் இருப்பது தெரிந்து கொள்ள முடிந்தது. அச்சுதன் இவர்களை அழைத்து உள்ளே அமர வைத்தார். தனது மனைவியை அழைத்து இவர்களுக்கு சாப்பாடு தயார் செய்யுமாறு கூறியவர் தானே எழுந்து சென்று மோர் ஊற்றிக்கொண்டு வந்து தந்தார். முதல்ல குடிங்க அப்புறம் பேசுவோம் என சொன்னார். 

மோர் குடித்தப் பின்னர் வாசன் பேசினான். இவதான் சோலையரசபுரம் குளத்தூர் மாதவிஎன்றான் வாசன். அச்சுதன் கைகள் எடுத்து வணங்கினார். மாதவி, அச்சுதன் வணங்கியதைக் கண்டு தானும் வணங்கினாள். 

இவளுக்குத்தான் நீங்க கடைசியா ஜாதகம் எழுதினீங்கஎன்றான் வாசன். அப்படின்னா நீ வாசன் தானேஎன்றார் அவர். வாசன் ம்என்றான். அனந்தன் என்னோட அண்ணன், அவர் கடைசியா உன்னோட ஜாதகத்தை எழுதினார்என்றார் மேலும். இப்போ அவர் எங்கே இருக்கார்?’ என்றான் வாசன். இங்கிருந்து மூணாவது வீடுஎன்றார். பாரதி அதிர்ச்சியில் அமர்ந்து இருந்தாள். 

குளத்தூர் பெருமாள் தாத்தா இறந்துட்டார், கேள்விப்பட்டீங்களாஎன்றான் வாசன். யாரும் தகவல் சொல்லலையே, அந்த விநாயகம் கூட தகவல் சொல்ல மறந்துட்டாரோ, அவர் இந்த ஊருக்கு வரட்டும், அன்னைக்குத்தான் இருக்குஎன்றார். நீங்களாவது குளத்தூர் வந்துருக்கலாமேஎன்றான் வாசன். நாங்க குளத்தூர் வரதா, அவர் இங்கே வரதா, வாசன் இந்த பொண்ணு யாரு, விநாயகத்தோட தம்பி பொண்ணாஎன்றார் அச்சுதன். பாரதி வேகமாக ஆம் என்பது போல் தலையாட்டினார். மாதவி தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தாள். 

பெரியவருக்கும் உங்களுக்கும் அப்படி என்ன சம்பந்தம்என்றான் வாசன். அச்சுதன் கோபம் கொள்வதைக் கண்டான் வாசன். மாதவி உங்க மக இப்போ எங்கே இருக்காங்கஎன்றாள். ஏம்மா எனக்கு மக இருக்கா அப்படிங்கிறது கூட தெரிஞ்சிருக்கு, எங்கே இருக்கானு தெரியாதாஎன்றார் அவர். போட்டோவுல பார்த்தேன்என சுவரில் மாட்டியிருந்த படத்தைக் காட்டி மனதுக்குள் பெருமூச்சு விட்டாள் மாதவி. அவ இப்போ குடும்பத்தோட நாராயணபுரத்துலதான் இருக்காஎனச் சொன்னவர் வாசனிடம் திரும்பினார். யார் யாருக்கு சம்பந்தம்னு நீ கேட்டியில்லஎன்றார். ம்என்றான் வாசன். எழுந்திருச்சி வா காட்டுரேன்என எழுந்தார். அலமேலு, இப்போ வந்துருரோம்என வெளியேறினார். மாதவி வாசனிடம் என்ன மாமா, பிரச்சினை புரியாம இப்படி பண்றீங்கஎன்றாள். என்ன பிரச்சினை?’ என்றான் வாசன். மாதவிஎன அச்சுதன் சற்று கோபத்துடனே மாதவியின் பெயரை சொல்லித் திரும்பினார். மாதவி தலையை குனிந்தாள். பேசாம வாஎன்றார். பயமா இருக்கு வாசன்என்றாள் பாரதி. 

அந்தத் தெருவின் கடைக்கோடிக்கு வந்தார் அச்சுதன். நாச்சியார், நாச்சியார்என ஒரு வீட்டின் வெளியில் இருந்து சத்தமிட்டார். உள்ளே இருந்து ஒரு பெண்மணி வந்தார். என்னண்ணேஎன வந்தவர் இவர்களை நோக்கி வணங்கியவாறே உள்ளே வாங்கப்பா என்றார். போங்க உள்ளேஎன்றார் அச்சுதன். 

வீட்டில் உள்ளே நுழைந்ததும் பெரியவர் விநாயகம்  இளைஞராக இருந்தபோது எடுத்த படம் சுவரில் மாட்டப்பட்டு இருந்ததைக் கண்டான் வாசன். பாரதி அந்த படத்தைக் கண்டு பெரியப்பாஎன்றாள். ம்ம் உன்னோட பெரியப்பாதான் அதுஎன்றார் கோபமாக அச்சுதன். அனந்தன் அப்போது மெதுவாக வீட்டின் உள்ளே நுழைந்தார். தம்பி, குளத்தூரில இருந்து வந்துட்டாங்களாஎன்றார் அனந்தன். விநாயகம் வரலை, வாசனும் மாதவியும் வந்திருக்காங்கஎன்றார் அச்சுதன். கூட யாருஎன்றார் அனந்தன். விநாயகத்தோட தம்பி பொண்ணு பாரதிஎன்றார் அச்சுதன். திருமால் கடிதம் போட்டிருந்தான் பாரதிஎன்றார் அனந்தன். 

அதிர்ச்சியில் நின்று கொண்டிருந்த வாசன் சென்னையில இருக்கிற திருமாலாஎன்றான். வாசன், உனக்குத் தெரியாதா? அவருக்கு எத்தனை திருமால் இருக்க முடியும்என்றார் அச்சுதன். பாரதி மாதவியின் கைகளைப் பிடித்துக்கொண்டாள். பயப்படாதே பாரதி, தைரியமா இருஎன்றாள் மாதவி. எல்லோரும் உட்காருங்கஎன போர்வையை விரித்தார் அனந்தன். 

இந்தாங்கப்பா குடிங்கஎன சர்பத் கலக்கிக் கொண்டு வந்து தந்தார் நாச்சியார். வேண்டாம் அம்மா, நாங்க இப்போதான் மாமா வீட்டில மோர் குடிச்சோம்என்றாள் மாதவி. வாசன் மாதவியை நோக்கி மாமா வீடா என்பது போல் பார்த்தான். குடிங்கனு அன்பா கொடுக்கிறாங்க, ஏன் வேணாம்னு சொல்றீங்கஎன்றார் அச்சுதன். பாரதி வேகமாக வாங்கிக்கொண்டாள். வாசனும் வாங்கிக்கொண்டான். மாதவி வேண்டாம் என மறுத்தாள். பிடிவாதம் பண்றியா மாதவிஎன்றார் அச்சுதன். இப்போதானே குடிச்சேன், திரும்பிக் குடிக்கச் சொன்னா எப்படிஎன்றாள் மாதவி. 

இதேதான் இதேதான் இருபத்தி ஐஞ்சி வருசமா சொல்றாஎன அச்சுதன் சுவரில் தனது கையை அறைந்தார். அதைப் பார்த்த பாரதி தனது கையில் இருந்த டம்ளரை நழுவவிட்டாள். சர்பத் எல்லாம் கொட்டியது. பரவாயில்லைப்பா நான் துடைச்சிருரேன், இந்தாப்பா இந்த சர்பத்தை குடிப்பாஎன நாச்சியார் பாரதியிடம் தந்தார். தம்பி என்ன இது, நம்மளைப் பார்க்க வந்தவங்ககிட்ட இப்படியா நடந்துக்குறதுஎன்றார் அனந்தன்.

வாசன், நம்பெருமாள் சொல்லிதானே இங்கே வந்துருக்கேஎன்றார் அச்சுதன் மிகவும் வேகமாய். ஆமா அவர் சொல்லிதான் தெரியும், ஆனா இவங்க தான் இன்னைக்குப் போகலாம்னு சொன்னாங்க, இல்லைண்ணா நானும் பெரியவரும் ஒருநாள் வரதா இருந்தோம்என்றான் வாசன். போ அதை முதல்லச் செய், உடனே அவரைக் கூட்டிட்டு வாஎன்றார் அச்சுதன். தம்பி, திருமால் கிட்டதான் திருமலையில வைச்சி பேசியிருக்காரே விநாயகம், பின்ன ஏன் அவர் இங்க வரனும்னு நினைக்கிறேஎன்றார் அனந்தன். திருமால் போட்ட கடிதத்த வைச்சி எல்லாம் சொல்லமுடியாது, அவர் இங்கே நேரா வரனும்என்றார் அச்சுதன். இருபத்தி அஞ்சி வருசமா வராதவர் இனிமே வந்து என்ன செய்யப் போறஎன அனந்தன் சொன்னதும் நாச்சியார் கண்கள் கலங்கியது. நாச்சியார் பக்கத்தில் நின்று கொண்டிருந்த மாதவி, அம்மா என நாச்சியார் கைகளைப் பிடித்தாள். முன்னமே வந்துருக்கக் கூடாதா மாதவிஎன நாச்சியார் மாதவியிடம் சொன்னார். மாதவிக்கு கஷ்டமாக இருந்தது. வாசனுக்கு ஒன்றுமே புரியவில்லை. பாரதி தனக்குள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டாள். பாரதியை பேசுமாறு சைகை காட்டினாள் மாதவி. 

பெரியப்பாவுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்என்றாள் பாரதி. புரியலை உனக்கு, உன் அப்பா சேகர் சொல்லலையாஎன அச்சுதன் பாரதியிடம் கோபமாக சொன்னார். அண்ணா, அந்த பொண்ணு மேல ஏன் கோபப்படறண்ணாஎன்றார் நாச்சியார். சொல்லுங்க அச்சுதன் சார், உங்களுக்கும் எங்களுக்கும் அப்படி என்னதான் சம்பந்தம்?’ என்றாள் பாரதி மிகவும் தைரியமாய். 

பாரதி உனக்கு இவ்வளவு தைரியமா?’ என்றார் அச்சுதன். பாரதி பேசாம இருஎன்றான் வாசன். இருங்க வாசன், எனக்குத் தெரிஞ்சாகனும் இவர் ஏன் இவ்வளவு கோபமா இருக்காருண்ணு, என் பெரியப்பா இவங்களுக்கு என்ன செஞ்சார்னு, சொல்லுங்க சார்என்றாள் பாரதி. குரலில் கலக்கம் தெரிந்தது. தம்பி நீ நடந்துக்கிறது முறையில்லைஎன அச்சுதனிடம் அனந்தன் சொல்லியபடி அவர்கள் மூவரையும் சாப்பிட அச்சுதன் வீட்டிற்கு வருமாறு சொல்லிவிட்டு அச்சுதனனை அழைத்துக்கொண்டு வெளியேறினார். நாச்சியார் கலங்கிய கண்களுடன் பாரதியினை வணங்கினார். அவதான் சாத்திரம்பட்டி போகலாம்னு சொன்னாம்மாஎன்றாள் மாதவி. நாச்சியார் பாரதியின் கைகளைப் பிடித்தார். பாரதி அழுதுவிட்டாள். 

(
தொடரும்)

Monday, 8 November 2010

நுனிப்புல் (பாகம் 2) 25


25 குளத்தூரில் நெகாதம்


பெரியவரின் தோட்டத்தில் நெகாதம் செடியில் இருந்த மொட்டுகள் அனைத்தும் ஒருசேர அந்த இனிய மாலை வேளையில் மலர்ந்து இருந்தன. அழகிய மலர்வனம் போல காட்சி அளித்தது கண்களுக்கு இதமாகவும், அந்த இனிய மலர்களின் மணம் மனதினை மயக்க வைக்கக் கூடியதாகவும் இருந்தது. 


பாரதியும் கிருத்திகாவும் தோட்டத்துக்கு வந்தார்கள். பாரதி நெகாதம் செடியைக் கண்டு அளவிலா ஆனந்தம் கொண்டாள். கிருத்திகாவுக்கு மலர்களின் வாசம் மிகவும் பிடித்துப் போனது. தோட்டத்தினை சுற்றிக்கொண்டே வந்தாள். 


''வாசன் வீட்டுக்குப் போவோமாயா''


''நாளைக்குப் போவோம், எனக்குப் போய் தூங்கனும்போல இருக்கு''


''என்னய்யா நீ, இன்னொரு தரம் குளிக்கலாம்யா இங்கே''


''இப்போ வேணாம் கிருத்தி''


''அப்படின்னா வாசன் வீட்டுக்குப் போவோம்யா''


''வாசன் வர நேரமாகும்''


''என்னை வாசன் வீட்டுல விட்டுட்டு நீ போய்யா, நான் பார்த்துப் பேசிட்டு வரேன்யா''


''ரொம்ப அடம்பிடிக்கிற நீ, நானும் வரேன் நானும் பேசனும்''


''காதல்னு எதுவும் பேசிராதய்யா''


''உஷ்... கிருத்தி, மாதவி வந்துருக்கா நீ எதுனாலும் விளையாட்டுக்குக் கூடப் பேசிராத''


''ஓ மாதவியைத்தான் வாசன் கல்யாணம் பண்ணப்போறாரா''


''ம்ம் வாசன் சொன்னதாக உன்கிட்ட சொன்னேனே''


''சரிய்யா''


வாசன் வீட்டிற்குச் சென்றார்கள். அங்கே மாதவியும் தேவகியும் வீட்டுக்கு வெளியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். வாங்க என வரவேற்றார்கள். வீட்டுக்குள் அவர்களை அழைத்துச் சென்றாள் தேவகி. ராமம்மாள் அவர்களை வரவேற்றார். பாரதி, ராமம்மாளைக் கட்டிப்பிடித்துக்கொண்டாள். இன்னும் எத்தனை வருசம் கழிச்சி வருவியோனு இருந்தேன்மா என பாரதியிடம் சொன்னார் ராமம்மாள். எங்க அப்பாகிட்ட உடனே சொல்லிட்டு கிளம்பி வந்துட்டேன், முன்ன விடமாட்டாரு ஆனா இப்போ எல்லாம் என்னை எதுவும் சொல்றதில்ல என்றாள் பாரதி. ம் உட்காருங்க என ராமம்மாள் பலகாரங்கள் எடுத்துக்கொண்டு வைத்தார். காபி போட்டு வரட்டுமா என கேட்டதற்கு சரியென சொன்னார்கள். மாதவி எழுந்து நான் போட்டு வரேன் அத்தை என சொன்னபோது நீ பேசிட்டு இரும்மா என ராமம்மாள் சென்றார். 


கிருத்திகா வழக்கம்போல கலகலப்பாக பேச ஆரம்பித்துவிட்டாள். மாதவி, கிருத்திகா பேசுவதையேக் கேட்டுக்கொண்டிருந்தாள். வாசன் எப்போ வருவார் என கேட்டாள் கிருத்திகா. ம்ம் இப்போ வந்துருவார் என மாதவி சொன்னாள். கிருத்திகா தனக்கு கவிதைகளிலும் கதைகளிலும் அதிக ஈடுபாடு இருப்பதாகவும் வாசனின் கவிதைகள் தனக்கு மிகவும் பிடித்து இருப்பதாகவும் கூறினாள். மாதவியிடம் நீங்க கவிதை கதை எழுதுவதுண்டா எனக் கேட்டாள். மாதவி உருகும் உயிர் கதையைப் பற்றி கூறினாள். ஆனால் யாருக்கும் தெரியாது எனவும் வாசன் மட்டுமே படித்து இருக்கிறான் எனவும் சொன்னபோது பாரதிக்கும் ஆச்சரியமாக இருந்தது. பாரதி உன்னோட மரபியல் மருத்துவ ஈடுபாட்டைச் சொல்லு என சொன்னாள் கிருத்திகா. 


பாரதி தனது ஈடுபாட்டினையும் இப்போது தான் அதுகுறித்து குறிப்புகள் எழுதத் தொடங்கி இருப்பதாகவும் கூறினாள். மாதவி சந்தோசம் தெரிவித்தாள். தேவகி தனக்கு ஒரு மருத்துவராக வேண்டும் என்பது மட்டுமே ஈடுபாடு என கூறினாள். கிருத்திகா மாதவியின் ஈடுபாட்டினைக் கேட்டபொழுது மாதவி அமைதியாக இருந்தாள். பின்னர் சொன்னாள். 


''மூளை பற்றிய ஆராய்ச்சி தான் என்னுடைய ஈடுபாடுனு இருக்கு. ஆனா என்னுடைய மேடத்துக்கிட்ட நான் ஒரு கட்டுரை எழுதிக்கொடுத்தேன். அவங்க படிச்சிட்டு ஒரு வாரத்தில சொல்றேனு சொன்னாங்க, ஆனா ஒரு மாசம் மேல ஆயிருச்சி. என்னானு கேட்டப்ப இது எல்லாம் செய்ய முடியாதுனு சொல்லிட்டாங்க. நானும் பரீட்சை இருந்ததால மேற்கொண்டு எதுவும் செய்யலை அது அப்படியே இருக்கு''


''காப்பி இருக்கா மாதவி'' என்றாள் பாரதி. 


''வைச்சிருக்கேன், வீட்டுக்குப் போறப்ப எடுத்துத் தரேன்''


''ஒருத்தரு டாக்டர், ஒருத்தரு ஜெனிடிக்ஸ், ஒருத்தரு பிரெய்ன்'' என்றாள் கிருத்திகா. 


''கிருத்திகா நாங்க செய்றதையெல்லாம் நீங்க கதையா கவிதையா எழுதுங்க''


''ம்ம் நல்ல யோசனைதான்'' என சிரித்தாள் கிருத்திகா. 


ராமம்மாள் அவர்களுக்கு காப்பி போட்டு வந்துக் கொடுத்தார். அப்பொழுது வாசன் வந்தான். கிருத்திகா அறிமுகமானாள். வாசனிடம் கவிதைகளைப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டாள். வாசன் மகிழ்ச்சியுடன் கேட்டுக்கொண்டான். கவிதைகள் இருந்தால் தருமாறு கேட்டான். வாசன் தருகிறேன் என சொல்லிவிட்டு மாடிக்குச் சென்றான். 


''மாமா உருகும் உயிர் கதையும் எடுத்துட்டு வாங்க, கிருத்திகாவுக்கு வேணுமாம்''


''ம்ம் எடுத்துட்டு வரேன்''


''பாரதி மாமாகிட்ட பேசலையா'' என்றாள் மாதவி. 


''பேசனும் மாதவி, வரட்டும்'' என்றாள் பாரதி. 


''உன் கனவினால ரொம்பவே அன்னைக்குப் பயந்துப் போய்ட்டாரு'' என்றாள் மாதவி. 


''பயமா, அப்புறம் எதுக்கு கோவிலுக்குப் போனாரு'' என்றாள் பாரதி. 


''ம்ம் நீதான் கேட்கனும்'' என்றாள் மாதவி. 


வாசன் கீழிறங்கி வந்தான். கவிதைகளையும் கதையையும் கிருத்திகாவிடம் தந்தான். கிருத்திகா படிக்க ஆரம்பித்துவிட்டாள். 


''பாரதி, சுந்தரன் எப்படி இருக்கான்?''


''நல்லா இருக்கான்''


''வீட்டுல பிரச்சினை எதுவும் இல்லையே''


''திருமாலினால வீட்டுல இப்போ என்னை எதுவும் சொல்றதில்லை''


''வீட்டுக்கு வந்திருந்தாரா?''


''உங்களையும் பெரியப்பாவையும் பார்த்ததாக எங்க அப்பாவைப் பார்த்து சொல்லியிருக்கார் அப்படியே என்னைப் பத்தியும் இவளைப் பத்தியும் சொல்லி இருக்கார்''


''என்னையும் சென்னைக்கு வரச் சொல்லி இருக்கார், நீ எத்தனை நாள் லீவுல வந்துருக்க''


''நாலு நாளுல போகனும்''


''ஓ அவசர வேலையா வந்தியா''


''இல்லை வரனும்னு தோணியது, கிளம்பிவந்துட்டேன் துணைக்கு இவ திடீரென கிளம்பி வந்துட்டா''


''ம்ம் நீங்க பேசிட்டு இருங்க நான் இப்போ வந்துருரேன்''


''மாமா கொஞ்ச நேரம் இருங்க நாங்களும் தான் கிளம்பறோம் போலாம், பாரதி கேளுங்க''


''என்ன கேட்க மாதவி''


''கோவில்''


''என்ன மாதவி, பாரதியை என்ன கேட்க சொல்ற?''


''அதெல்லாம் ஒண்ணுமில்லை வாசன்''


வாசன் சிரித்தான். 


''மாதவி, நீ கனவு பத்திதானே கேட்கச் சொன்ன''


பாரதி ஒரு நிமிடம் வாசன் முகத்தைப் பார்த்தாள். பேச்சில் கவனம் இல்லாதவளாய் இருந்த கிருத்திகா வாசன் சொன்னதைக் கேட்டு சட்டென திரும்பினாள். 


''மாமா நான் பேசினதை கேட்டுட்டீங்களா''


''மாதவி நீ இதைப் பேசினப்ப அவர் வரலையே''


''பாரதி நான் நாளைக்கு விபரமா பேசறேன், மாதவி காப்பி குடிச்சாச்சா, போலாமா''


அனைவரும் கிளம்பினார்கள். வாசன் மந்தைக்குச் சென்றான். மாதவி தனது கட்டுரையை எடுத்து பாரதியிடம் தந்தாள். 


''பாரதி நாளைக்கு நாரயணபுரம் வரியா, நானும் தேவகியும் போறோம்''


''என்ன விசேசம் அங்கே''


''போய்ட்டு வரலாம்னு போறோம் பிரெண்டோட ஊரு''


''அப்படியே சாத்திரம்பட்டிக்குப் போய்ட்டு வரலாம்''


''வாசன் மாமாவை கூப்பிட்டு பார்க்கிறேன், வந்தா சாத்திரம்பட்டி போகலாம் இல்லைன்னா நாராயணபுரம் போய்ட்டு திரும்பிரனும், நீ பூங்கோதையப் பார்த்தியா''


''இன்னும் இல்லை, இப்போ போய் பார்க்கிறேன்''


''ம்ம் நான் வாசன் மாமாகிட்ட கேட்டுட்டு சொல்றேன், காலையில தயாரா இரு''


பாரதியுடன் கிருத்திகா பெரியவர் வீட்டிற்குச் சென்றுவிட்டு பூங்கோதையினைப் பார்க்கச் சென்றாள். 


''எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்குய்யா''


''கவிதையா கதையா''


''ம், இங்க எல்லாரையும், வாசன் அந்த ரெண்டு பொண்ணுங்க, அவங்க அம்மா''


''இன்னும் இருக்காங்க ஊரில எல்லாரையும் பார்க்கலாம்''


கேசவன் வீட்டிற்குச் சென்றார்கள். பூங்கோதைக்கும் கேசவனுக்கும் வாழ்த்துகள் சொன்னாள் பாரதி. கேசவன் பாரதியைப் பற்றி சொன்னான். பூங்கோதையிடம் பாரதி குழந்தையைப் பற்றிக் கேட்டாள். பூங்கோதை நடந்த அனைத்தையும் பாரதியிடம் விபரமாக சொன்னாள். பூங்கோதை சகஜமாக பேசுவதைக் கேட்டு பாரதி சந்தோசமானாள். இதை எல்லாம் அறிந்த கிருத்திகா வாயடைத்து நின்றாள். 


(தொடரும்)

Sunday, 7 November 2010

நுனிப்புல் (பாகம் 2) 24


 24. உருவமில்லா உருவம்
பெரியவரும், வாசனும் குளத்தூர் வருமுன்னர் நடந்தவைகள்... 


பூங்கோதையிடம் வாசன் எவ்வாறு செடியைப் பறித்தாள் என்று அன்று இரவே கேட்டான். பூங்கோதை பெரியவர் சொன்ன குறிப்பை அறிந்து கொண்டு தான் பறித்ததாக கூறினாள். வாசன் அது எவ்வாறு சாத்தியம் என கேட்டபொழுது பூங்கோதை சாத்தியமாகிவிட்டது அல்லவா என சொல்லிவிட்டு அமைதியானாள். இந்த செடிகளை ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள ஒரு தாவர ஆராய்ச்சி மையத்தில் நாளை சென்று தந்து சோதித்துப் பாதித்துவிடலாம் என பூங்கோதை சொன்னாள். வாசன் பெரியவரிடம் இதுகுறித்து கேட்கவேண்டும் என சொன்னான்.


பூங்கோதை தான் பெரியவரிடம் அனுமதி பெற்றுவிட்டதாக கூறியதும் வாசனுக்கு ஆச்சரியமாக இருந்தது. இந்த செடிகளை நாம் ஊருக்கு எடுத்துச் சென்று வளர்ப்பதுதானே திட்டம். அதற்குள் இந்த செடிகளை ஆராய்ச்சிக்கூடத்தில் கொடுத்து அதுபற்றிய அனைத்து விபரங்களையும் அறிவது என்பது எதற்கு என வாசன் யோசித்தான். பூங்கோதையிடம் விபரங்களைக் கேட்டான் வாசன். 


அனைத்துச் செடிகளையும் காய வைத்து இலைகள், வேர், தண்டு என பிரித்து அதனை இரசாயனத்தில் மூழ்க வைத்து அதில் இருந்து மூலக்கூறுகளைப் பிரித்தெடுத்துச் செய்வார்கள் என பூங்கோதை கூறியதும் வாசன் தலையை ஆட்டினான். 


''இல்லைங்க பூங்கோதை, நம்மகிட்ட இருக்கறதோ கொஞ்சம்தான் இதைப் போய் நாமக் கொடுத்துட்டா நாங்க வளர்க்கறதுக்குனு எதுவும் இல்லாம போயிரும், நாங்க இந்த செடிகளைப் போய் வளர்த்துட்டு காய், கனினு எல்லாம் கொண்டு வறோம் அப்புறமா சோதனையெல்லாம் பண்ணிக்கிரலாம், தயவு செய்து இந்த விசயத்தை இப்படியே விட்டுருங்க''


''சரி அண்ணா, நான் ஆராய்ச்சிக்கூடத்துல போய்க் கொடுக்கலை''


''இந்த செடிகள் கிடைக்கிறதே அபூர்வமா இருக்குங்க பூங்கோதை, நீங்க பறிச்ச இடத்துக்கு மேலே ஏறிப் போனீங்களா''


''இல்லை அண்ணா''


''இன்னும் கொஞ்ச தூரம் ஏறிப்போனா கொஞ்ச செடிகள் கிடைக்கலாம்னு தோணுது''


''அண்ணா இந்த செடிகளை திசு வளர்ப்பு முறையில வளர்த்தா நிறைய செடிகளை உருவாக்கலாம் அண்ணா, நீங்க கொஞ்ச செடிகளை நான் சொல்ற மாதிரி வெட்டி வெட்டி ஒன்னா இருக்கற செடியை பல செடிகளாக மாத்திரலாம்''


''ஓ எப்படி செய்றது''


''நான் அந்த விபரத்தை நான் நாளைக்குத் தரேன் அண்ணா''


வாசன் பூங்கோதையிடம் பேசிவிட்டு பெரியவரைச் சந்தித்தான். வந்து சில மாதங்கள் ஆகியிருந்தது. பெரியவரிடம் நாளை ஒரே ஒரு இடத்தினை மட்டும் பார்த்துவிட்டு ஊருக்குக் கிளம்ப வேண்டும் என கூறினான். பூங்கோதை கூறியதை பெரியவரிடம் கேட்டான் வாசன். தனக்கு ஆராய்ச்சிக்கூடத்தில் தர விருப்பமில்லை எனக் கூறியதை பெரியவர் சரியெனக் கேட்டுக்கொண்டார். மேலும் பூங்கோதையின் ஆலோசனையைக் கூறினான். பெரியவர் சம்மதம் சொன்னார்.


அடுத்த நாள் பூங்கோதையிடம் திசு வளர்ப்பு முறை விபரங்களைப் பெற்றுக்கொண்டான் வாசன். பெரியவரும் வாசனும் மலைப்பகுதியை அடைந்தனர். பூங்கோதை செடி பறிக்கச் சென்ற வழியைக் காட்டினார். வாசன் மலை மீது ஏறினான். அதிக தொலைவு சென்றதும் செடிக்கூட்டம் அங்கு இருந்தது. செடிகளை எண்ணினான். சரியாக 64 செடிகள் இருந்தது. மொத்தம் 108 செடிகள் என கணக்கிட்டுக் கொண்டான். இந்த 108 செடிகளை ஆறு கூறுகளாக வெட்டினால் 648 செடிகள் வந்து சேரும் என அங்கேயே குறிப்பு எழுதினான். எந்த ஒரு காரணத்திற்காகவும் ஒரு செடியைக் கூட விட்டுச் செல்லக்கூடாது என முடிவெடுத்தான். தானே அனைத்துச் செடிகளையும் ஆறு கூறுகளாக வெட்டி நட்டுவிடுவது என முடிவு செய்தான். மேலும் தேடினால் செடிகள் கிடைக்கும் என யோசித்தான். ஆனால் இனிமேலும் தாமதிப்பதில்லை எனவும் ஊருக்குச் செல்வதுதான் சிறந்தது என யோசித்து மலையிலிருந்து கீழிறங்கினான். 


பெரியவர் வாசன் தனது திட்டம்தனை சொன்னான். பெரியவர் சிரித்துக்கொண்டே சரியென சொன்னார். அன்று இரவு அமைதியாக கழிந்தது. பெரியவரும் வாசனும் செடிகளுடன் குளத்தூர் செல்ல தயாரானார்கள். கேசவனும், பூங்கோதையும் சில வாரங்களில் குளத்தூருக்கு வருவதாக கூறினார்கள். 


பூங்கோதைக்கு பரிசோதனை செய்ய வேண்டும் என சுபா அன்றே வந்து அழைத்தார். ஆனால் பூங்கோதை தான் கல்லூரிக்குச் செல்வதாலும் தேர்வுகள் முடித்தபின்னர் வருவதாகவும் கூறிவிட்டாள். பார்த்தசாரதி முன்னர் சோதனைகள் வேண்டாம் என சொன்னவர் தற்போது உரிய பரிசோதனைகள் செய்து கொள்வது சரியென சம்மதம் தந்து இருந்தார்.


பெரியவரும் வாசனும் திருமலையை விட்டு கிளம்பினார்கள். பெரியவர் மனதில் எல்லையில்லா சந்தோசம் அடைந்தார். வாசன் பெரியவரிடம் கனவில் நாராயணன் ஒளியாய் தோன்றியது உண்மையா? என்றான். பெரியவர் புன்னகையுடன் இதோ செடிக்கு உருவமிருக்கிறது கண்டுகொண்டாய் செடியும் கனவில்தானே சொல்லப்பட்டது என்றார். இருளில் கூட ஒளி இருக்கும் அது ஒளிந்து இருக்கும், ஒளி இல்லாத இடம் என்று எதுவுமே இல்லை அப்படித்தான் அந்த நாராயணன் என்றார் பெரியவர் மேலும். வாசன் கண்களில் கண்ணீர் நிரம்பியது. 


உடலில் நிறுத்தமுடியாதா? எங்கும் நிரம்பியிருப்பவன், உருவமில்லாதவன் அந்த அந்த உருவம் எடுத்துக் கொள்பவன். 


உயிரற்றதில் உயிரற்றதாய்
உயிருள்ளதில் உயிராய்
இருப்பதில் இல்லாததாய்
இல்லாததில் இருப்பதாய்
எங்குமிருக்கும் உன்னை
பங்குபோடவும் கூடுமோ!

இருவரும் குளத்தூர் வந்ததும் நடந்தவைகள். 


குளத்தூரில் அன்று இரவு அவர்கள் இறங்கியதும் ஊர் மக்கள் எல்லாம் ஓடி வந்தார்கள். எங்கே செடி எங்கே செடி என கேட்டு வந்தவர்கள் செடியைப் பார்த்ததும் அட இது என்ன வித்தியாசமா இருக்கு, நம்ம தோடத்துல காட்டுல இப்படி ஒரு செடி வந்ததில்லையே, எப்படி இந்த மண்ணுல முளைக்கும்! என அவர்கள் வருத்தமாகப் பார்க்கையில் வாசன் மனதில் பெரும் நம்பிக்கையை வளர்த்துக் கொண்டான். 


''இந்த செடி நம்ம ஊரு கரிசலுல கட்டாயம் வளரும்'' 


வாசன் சத்தமாக சொன்னது பெரியவருக்கு ஸ்ரீமன் நாராயணா என கேட்டது!

அனைத்துச் செடிகளையும் அன்றேத் தோட்டத்தில் கொண்டுச் சேர்த்தார்கள். பெற்றோர்களுடன் திருமலை மற்றும் திருவில்லிபுத்தூர் பற்றி விபரமாகக் கூறினான் வாசன். பெற்றோர்களுக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. அருளப்பன் அன்றே அனைத்து கணக்கு விபரங்களையும் வாசனிடம் கொண்டு கொடுத்துவிட்டுப் போனார். எந்த ஒரு பிரச்சினையுமின்றி ஊர் கட்டுப்பாட்டிலே இருந்தது என மகிழ்வுடன் சொல்லிவிட்டுச் சென்றார். வாசனுக்கு சந்தோசமாக இருந்தது. முத்துராசு தோட்டத்தில் செடிகளுடன் படுத்து உறங்கினார். 


இரவில் வாசனுக்கு யோசனைத் தோன்றியது. இந்த செடிகளை வெட்டி நடுவதைவிட அப்படியே வேருடன் நட்டு வைத்தால் என்ன என எண்ணம் வந்தது. வெட்டி நடுவதைப் பற்றி எங்குமே நோட்டில் குறிப்பிடவில்லை. இந்த வேளையில் செடிகளை வெட்டி நடப்போய் ஏதாவது தவறு நடந்துவிட்டால் மீண்டும் செடிகளைத் தேடச் செல்ல வேண்டும். வாசன் பூங்கோதையின் யோசனையை இறுதியாக நிராகரித்துக்கொண்டான். 


அடுத்தநாள் அதிகாலையிலே தோடத்துக்குச் சென்று செடிகளை வேருடன் நட்டு வைத்தான். கட்டப்பட்ட பாத்தியில் ஆறு செடிகள் வீதம் நட்டு வைத்தான். முத்துராசு வாசனுக்கு உதவியாக செயல்பட்டார். அனைத்து செடிகளையும் வைத்தபோது மணி ஒன்பது ஆகியிருந்தது. பெரியவர் தோட்டத்துக்கு வந்துப் பார்த்தபொழுது செடிகள் நடப்பட்டு தண்ணீர் பாய்ச்சப்பட்டு கொண்டிருப்பதை பார்த்து மனதுக்குள் சிரித்துக் கொண்டார். 


வாசன் பெரியவரிடம் தான் செய்த செயல் குறித்து எந்தவித விளக்கமும் தரவில்லை. பெரியவர் அதுகுறித்து எதுவும் கேட்கவும் இல்லை. 


''எல்லா செடிகளும் நல்லபடியா நட்டு வைச்சாச்சா''


''ஆமாம், தம்பி காலையிலே நாலு மணிக்கு வந்து என்னை எழுப்பி விட்டுருச்சு''


''ரொம்ப சந்தோசம், நல்லபடியா செடி வளரட்டும்''


''நல்லா வரும்யா, அங்கிருந்து கொண்டு வந்த கொஞ்ச மண்ணை இங்கே போட்டுருக்கோம்''


''வாசா, முத்துராசு பாத்துக்கிரட்டும் நீ உன் தோட்ட வேலையைப் போய் பாரு''


''இருக்கட்டும் ஐயா, முத்துராசு அண்ணே இப்போ போயிருவாரு நானே எல்லாத்துக்கும் தண்ணீ பாய்ச்சிட்டு போயிருரேன்''


''செடியை கொண்டு வந்து நட்டாச்சு, எப்போ ஆஸ்ரமம் தொடங்கப் போற''


''கொஞ்ச நாள் ஆகட்டும்யா''


''இந்த செடி எத்தனை மாசம் ஆகி இருக்கும்''


''தெரியலைய்யா, பூ எல்லாம் வந்தா ஒரு கணக்கு சொல்லலாம்''


''பாதுகாப்பா வளர்க்க வேண்டியது நம்ம பொறுப்பு, யாரும் பறிச்சிட்டுப் போயிராம''


''சுத்தி கல்லு நட்டுருக்கோம், எதுவும் பிரச்சினை வராதுய்யா''


வாசன் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டே பேசினான். முத்துராசு கிளம்பிச் சென்றார். பெரியவர் வாசனிடம் ஊர் மக்களின் எண்ணம் குறித்துக் கேட்டார். ஊர் மக்கள் இந்த செடியை விநோதமாக பார்ப்பதாக தனக்குப் படுவதாக கூறினான். ஆனால் இதனால் எந்தவித பிரச்சினையும் இருக்காது என்றான். 


நாட்கள் நகரத்தொடங்கின. செடிக்கு எந்த பிரச்சினையும் வரவில்லை. நன்றாகவே இருந்தது. எப்பொழுது பூக்கள் வரும் என ஒவ்வொரு நாளும் பார்த்துக்கொண்டிருந்தார்கள் வாசனும் பெரியவரும். ஒருநாள் காலையில் வாசன் பெரியவரின் தோட்டத்துக்குச் சென்றுப் பார்க்கையில் அனைத்துச் செடிகளிலும் ஒரு சேர மொட்டுகள் வந்திருந்தன. வாசன் அளவில்லா ஆனந்தம் கொண்டான். பெரியவரிடம் ஓடிச்சென்று விசயம் கூறினான். பெரியவரும் ஆர்வத்துடன் வந்துப் பார்த்தார். மொட்டுகள் உடனே மலராமல் மொட்டுகளாகவே இருந்தது. ஒருவரை ஒருவர் மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டார்கள். மாலை நேரத்திலும் சென்று பார்த்தான் வாசன். மொட்டுகளாகவே இருந்தது. மந்தைக்குச் சென்றான் வாசன். அப்பொழுது மாலை நேர பேருந்து ஊருக்குள் வந்தது. பேருந்தில் இருந்து பூங்கோதையும் கேசவனும் பூங்கோதையின் பெற்றோர்களும் வந்திறங்கினார்கள். அவர்களுக்குப் பின்னால் வாசனின் சித்தப்பா, சித்தியும் ரோஹினியும் இறங்கினார்கள். இவர்களைப் பார்த்ததும் வாசன் அளவில்லா மகிழ்ச்சி கொண்டான். 


அவர்களை அன்புடன் வரவேற்றான். கேசவனை பின்னர் சந்திப்பதாக கூறிவிட்டு சித்தப்பா சித்தி மற்றும் ரோஹினியை அழைத்துக்கொண்டு தனது வீட்டிற்குச் சென்றான். அனைவரும் சந்தோசமாக காணப்பட்டார்கள். வேலன் சித்தப்பாவும் சித்தி, பொன்னுராஜ் மாமா , அத்தை என அனைவரும் வந்துவிட்டார்கள். வாசன் அவர்களை அழைத்துக்கொண்டு புதிய வீட்டினைக் காட்டினான். அனைத்து ஏற்பாடுகளும் முன்னரே செய்யப்பட்டு இருந்தது. மிகவும் மகிழ்ச்சியாக சொந்த ஊருக்கே வந்து சேர்ந்தார்கள்.


பின்னர் கேசவனை சந்திக்கச் சென்றான் வாசன். பூங்கோதை வாசனிடம் செடிகளைப் பற்றிக் கேட்டாள். வாசன் தான் செய்த விபரத்தை கூறினான். பூங்கோதை ஏன் தான் சொன்னவாறு செய்யவில்லை என கேட்கவில்லை. நீங்கள் செய்தது சரியாகவே இருக்கும் என சொன்னாள். வாசன் பூங்கோதையை ஆச்சரியமாகப் பார்த்தான். கேசவனிடம் பேசியபொழுது பரிசோதனைகள் மூலம் பூங்கோதை தாய்மை அடைந்த நிலையை ஊர்ஜிதம் செய்ததாக கூறினான். ஆனால் ஸ்கேன் என எதுவும் செய்யவில்லை எனவும் இரட்டை குழந்தைதானா என தெரியாது என கூறினான். வாசன், தாய்மை அடைந்ததை பரிசோதித்து தெரிந்து கொள்ளாமலே வயிற்றைப் பார்த்தாலே தெரியுமல்லவா என்றான். கேசவன் புன்முறுவலிட்டான். ஸ்கேன் எதுவும் எடுக்க வேண்டாம் என பூங்கோதை சொல்லிவிட்டதாக கூறினான் கேசவன். இரட்டை குழந்தையா என பிறந்தபின்னரே தெரியும் என கேசவன் சொன்னபோது வாசன் எதுவும் பேசாமல் அமர்ந்து இருந்தான். 


அடுத்த நாள் காலையில் ரோஹிணியும் பூங்கோதையும் பெரியவரின் தோட்டத்தில் சந்தித்துக் கொண்டார்கள். ஒருவருக்கொருவர் பரிச்சயமானார்கள். தாவரத்தைப் பற்றி பேச ஆரம்பித்தாள் பூங்கோதை. தாவரத்தில் உள்ளிருக்கும் மூலக்கூறுகளைப் பற்றிச் சொன்னாள் ரோஹிணி. 


''வாசு அண்ணாகிட்ட சொல்லி நமக்கு இங்கேயே ஒரு ஆய்வகம் பண்ணித்தரச் சொல்லிரலாம், நாம உழைச்ச மாதிரி இருக்கும், உலகத்துக்கு உதவின மாதிரி இருக்கும், என்ன சொல்ற பூங்கோதை''


''ம்ம் நல்ல யோசனைதான், ஆனா ஆஸ்ரமம் கட்டப்போறதா சொன்னாரே''


''ஆஸ்ரமத்தோட ஆய்வகமும் கட்டித்தரட்டும், கிராமத்துல ஆய்வகம் இருக்கக்கூடாதுனு எதுவும் இருக்கா''


பெரியவர் அந்த நேரம் பார்த்து அங்கே வந்தார். ரோஹிணி தனது யோசனையை சற்றும் யோசிக்காமல் பெரியவரிடம் சொன்னாள். பெரியவரும் சம்மதம் சொன்னார். நிலத்தில் ஒரு சிறுபகுதியானது ஆய்வகத்துக்கு ஒதுக்குவதாக அப்போதே அவர்களிடம் உறுதி அளித்தார். பூங்கோதைக்கும் ரோஹிணிக்கும் மிகவும் ஆச்சரியமாக இருந்தது. ரோஹிணி யோசித்தவள் தான் அவசரப்பட்டு கேட்டதாக கூறினாள். ஆனால் பெரியவர் தான் நிதானமாகவே உறுதி அளித்ததாக கூறினார். 

(தொடரும்)