நான் பதிவுலகில் இதுவரை பெற்ற விருதுகள் இரண்டு.
முதலில் விதூஷ் அவர்கள் எனது ஆண்டாளுக்கு கல்யாணம் எனும் கதைக்கு கொடுத்த விருது. மிகவும் மகிழ்ச்சியான தருணம் என்றுதான் சொல்வேன்.
பின்னர் ஸ்டார்ஜன் அவர்கள் கொடுத்த விருது. இந்த இரண்டு விருதுகளையும் பலருடன் சேர்ந்து பகிர்ந்து கொண்டதில் சந்தோசமாக இருந்தது.
இவர்கள் கொடுத்த விருதினை மனப்பூர்வமாக பெற்று கொண்டேன். ஆனால் அதை எவரிடமும் பகிர்ந்து தரவேண்டும் எனும் எண்ணமோ, 'போனால் போகுது' என்கிற பாணியில் விருதினை மற்றவர்களிடம் தர வேண்டும் என்கிற எண்ணமோ என்னிடம் எப்போதும் இருந்தது இல்லை.
பொதுவாக விருது என்பது ஒருவரை சிறப்பிக்கவும், கௌரவிக்கவும் தரப்படுவது. இந்த பதிவுலகில் பதிவர்களுக்கு இடையில் தரப்படுகின்ற விருதுதனை கேலி பேசியவர்கள் உண்டு. அதற்கான பதிவுகளை இப்போது தேடி பார்ப்பது அவசியமில்லாத ஒன்றுதான். அதனால் அப்படி சம்பந்தப்பட்ட பதிவுகளை இப்போது விட்டுவிடலாம். மேலும் திறமையானவர்களை கண்டுபிடித்து ஊக்கம் தந்து அவர்களின் எழுத்துகளை மென்மேலும் மெருகுபடுத்திட அவர்களுக்கு தொடர்ந்து உற்சாகம் தரும்போது அவர்களின் எழுத்தில் நிச்சயம் தனித்தன்மை வெளிவரும். இந்த விருதெல்லாம் வெறும் கண்துடைப்பு, இந்த விருதுக்கு எல்லாம் நான் எழுதுவது இல்லை என்கிற மனோபாவமும் பலரிடம் உண்டு. இப்பொழுது பிரச்சினை என்னவெனில் 'பிரபலம்' என கருதப்படும் பதிவர்களுக்கு விருதுகள் அவசியமா? 'பிரபலம்' என அவர்கள் கருதப்படுவதால் அவர்கள் எழுதுவது எல்லாமே விருதுக்கு தகுதியானவைகளா? எனும் கேள்விகள் எழத்தான் செய்யும்.
இங்கே தமிழ் பதிவுலகில் எழுதப்படும் பதிவுகள் மிகவும் அதிகம். ஒவ்வொன்றும் தனித்திறமையுடனே எழுதப்படுகின்றன என்பதில் இருவேறு கருத்தில்லை. ஆனாலும் சில பதிவர்களின் பதிவுகள் மனதில் ரீங்காரமிட்டு கொண்டே இருக்கத்தான் செய்கின்றன.
அப்படி ஒரு நல்ல பதிவு என பார்க்கும்போது அதில் என்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்பதை விருது கொடுப்பவர் மட்டுமே நிர்ணயிக்கிறார் எனும்போது சில சங்கடங்கள் இருக்கத்தான் செய்யும். எனது பதிவுகளை விட மற்றவரின் பதிவுகள் எந்த விதத்தில் உசத்தி என்கிற மனோபாவம் ஒவ்வொருவரிடமும் எழுவது இயற்கைதான், நாம் மூடி வைக்க நினைத்தாலும் கூட. அதே வேளையில் தனக்கு பிடித்த, தான் மிகவும் ரசித்த ஒரு பதிவரின் பதிவுகளுக்கு ஒருவர் விருது தருவதில் எந்தவித பாரபட்சமும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
இந்த பதிவுலகை கடந்த இரண்டு வருடங்களாக மட்டுமே கண்காணித்து வருகின்றேன். இந்த பதிவுலகில் நான் படித்த இடுகைகள் அதிகம் பிரச்சினைக்குரியவைகள்தான். அனால் அவையெல்லாம் உலக பிரச்சினைகள் அல்ல, தனிப்பட்ட நபர்களின் பிரச்சினைகள். அதன் காரணமாகவே எரிச்சலூட்டும் தமிழ் பதிவர்கள் என எழுதியது முதற்கொண்டு, பதிவர்களை நண்பர்களாக எப்படி சேர்த்து கொள்வது என்கிற யோசனை வரையிலும் பதிவர்கள் சம்பந்தப்பட்ட பதிவுகள் நிறையவே எழுதி இருக்கிறேன். இதன் முழு காரணம் ஒரு விசயத்தில் நம்மை ஈடுபடுத்தி கொள்ளும்போது அது சம்பந்தப்பட்ட விசயங்கள் பற்றி முழுவதும் தெரிந்து கொள்வது அவசியம். நல்ல விசயங்கள் பற்றி அதிகம் கவலை படத்தேவையில்லை. கெட்ட விசயங்கள் பற்றி நமது முழு கவனமும் இருக்க வேண்டும். அல்லவை நீக்கி நல்லவை நாடுவது; கனியிருப்ப காய் கவர்ந்தற்று என்பது எல்லாம் மிகவும் சரியே. ஆனால் ஒரு சமூகத்தில் அல்லவைகளை அறவே நீக்காமல் நல்லவைகளை பாதுகாப்பது ஒருபோதும் பயனளிக்காது.
தமிழ்மணம் விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இந்த விருது வாசிக்கும் வாசகர்களால் தேர்ந்தெடுக்கப்படுவது உண்டு. இங்கே பாரபட்சம் என்று எதுவும் காண இயலாது என முற்றிலும் ஒதுக்கிவிட இயலாது, அதே வேளையில் இந்த விருது தனிப்பட்ட நபரின் திறமையை அங்கீகரிக்கும் ஒன்றாகத்தான் கருத வேண்டும். பொதுவாகவே சிறுகதை, கவிதை போட்டிகள் நடத்தப்படும்போது 'பிரபலங்கள்' எழுதி இருக்கிறார்கள் எனும் பார்வை வந்துவிடுகிறது என்பதை மறுக்க இயலாது. அதை தவிர்க்கவே தற்போது சமீபத்தில் நடத்தப்பட்ட போட்டியில் யார் யார் எழுதி இருக்கிறார்கள் என்பதை மறைக்கும் வண்ணம் செயல்படுவதாக போட்டியாளர்கள் அறிவித்து இருந்தார்கள்.
இங்கே நடுவர்களின் அளவு கருவி எது? எழுதப்பட்ட விதமா? கொடுக்கப்பட்ட விசயத்தினை எப்படி உட்கிரகித்து கொண்டார்கள் என ஆய்வு செய்வதா? என்னைப் பொருத்தவரை போட்டி என அறிவித்தல் வந்தவுடன் போட்டி சம்பந்தப்பட்ட கதைகளோ, கவிதைகளோ எங்குமே வெளியிடக்கூடாது என ஒரு அறிவிப்பு தர வேண்டும். போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் அவரவர் அவர்களுடைய தளத்தில் வெளியிட்டு கொள்ளலாம் என்றுதான் இருக்க வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் போட்டியின் தன்மை பாதுகாக்கப்படும். இனிமேல் போட்டிகள் அறிவிப்பவர்கள் இதனை கவனத்தில் கொள்வது நல்லது என கருதுகிறேன். நடுவர்களுக்கும் மிகவும் எளிதாக இருக்கும்.
பதிவர்களுக்கு விருது வழங்கும்போது பணமுடிச்சு ஏன் வழங்கப்படுவதில்லை என்கிற கேள்வியும் இருக்கத்தான் செய்கிறது. ஒரு அமைப்பு நடத்தும்போது அதற்குரிய வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. மணற்கேணி என சிங்கை பதிவர்கள் நடத்திய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு பற்றி இங்கே கட்டாயம் குறிப்பிட்டாக வேண்டும். அதிக பணம் செலவழித்து பதிவர்களுக்கு கௌரவம் தந்த அமைப்பு அது. நிச்சயம் இதுபோன்ற அமைப்புகளுக்கு பதிவர்களின் ஒத்துழைப்பு இருப்பது அவசியம்.
பதிவர்களின் 'ஈகோ' பிரச்சினையால் பதிவுலகம் அவ்வப்போது தள்ளாடத்தான் செய்கிறது. ஆனால் அதை எல்லாம் ஒரு பொருட்டாக மதிக்காமல் அற்புதமான பதிவுகளை தந்து கொண்டிருக்கும் பல பதிவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதில் எவருக்கேனும் மாற்று கருத்து இருக்கும் என தெரியவில்லை.
அறிவியல் பதிவுகள், ஆன்மிக பதிவுகள், தொழில்நுட்ப பதிவுகள், மருத்துவ பதிவுகள், சமூக பிரச்சினைகள் சுட்டிக்காட்டும் பதிவுகள், திரைப்படம் சம்பந்தப்பட்ட பதிவுகள், மதம் , இனம் சம்பந்தபட்ட பதிவுகள் என பல்வேறு பதிவுகளில் தனிப்பட்ட நபர்களை தாக்கும் பதிவுகளும் வலம் வருகின்றன. இதில் மிகவும் சுவாரஸ்யமானவை மொக்கை பதிவுகள் என அழைக்கப்படுபவை.
'மொக்கை' பதிவுகள் தான் உங்களுடையது என குற்றம் சாட்டுபவர்கள் அதிகம் இருக்கிறார்கள். 'மொக்கை மகளிர் சங்கம்' என்கிற அமைப்பும் இருப்பதாக கேள்வி பட்டு இருக்கிறேன். மொக்கை என்றால் என்ன? என்பதை விளக்கினால் அதுவும் ஒரு மொக்கையாகத்தான் இருக்கும்! நான் மொக்கை பதிவுகள் தான் எழுதுகிறேன், அதற்கென்ன இப்போ என்கிற மனோபாவம் பதிவர்களிடம் இருக்கத்தான் செய்கிறது. இதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. அவரவருக்கு தெரிந்த விசயத்தை வைத்து வாழ்வில் முன்னேறி வருவது இயல்புதான்.
பின்னூட்டங்கள் பற்றிய பெரும் சச்சரவு உண்டு. யார் யார் எவருக்கு பின்னூட்டம் போடுவது என்பதை பின்னூட்டம் போடுபவர்கள் மட்டுமே தீர்மானிக்க இயலும். நண்பர்கள் சேர்த்து கொண்டால் மட்டுமே தொடர்ந்து பின்னூட்டங்கள் பெற இயலும் எனும் பார்வை பலரிடம் இருந்தாலும், ஒரு 'நல்ல' பதிவுக்கு பின்னூட்டம் என்பது அரிது எனும் குற்றச்சாட்டு உண்டு. பொதுவாக ரசிக்கும் மனோபாவம் பொருத்தே ஒவ்வொருவரின் தேவைகளும் பதிவுகளில் விழுகின்றன. பின்னூட்டம் என்பது அவரவர் விருப்பத்துடன் எழுதுவது. எனவே இந்த சர்ச்சை தீராது.
அதிக 'ஹிட்ஸ்' எனும் ஒரு மாயை வேறு உண்டு. 'ஹிட்ஸ்' வாங்கி சமைக்கவா முடியும்? அது ஒரு விளையாட்டு. பிறரை விட நானே பெருமளவில் பார்க்கப்படுகிறேன் என்கிற ஒரு புதிர். அதிலும் பதிவுகள் எழுதி 'கல்லா கட்டுகிறார்கள்' எனும் குற்றச்சாட்டு உண்டு. 'கல்லா கட்டி' சேர்த்து வைத்து சென்னையிலோ, லண்டனிலோ, சிங்கப்பூரிலோ அரண்மனையா கட்ட இயலும். அதே போல வாக்குகள் பற்றியும் ஒரு குற்றச்சாட்டு உண்டு. இதையெல்லாம் ஒரு விளையாட்டாக கருதி புறந்தள்ளிவிட வேண்டும்.
நமக்கு முக்கியம், உண்மையான , நேர்மையான சமூக அக்கறையுடைய பதிவர்கள் மென்மேலும் வளரவேண்டும், அவர்கள் போற்றப்பட வேண்டும். அவர்கள் எழுத்தில் மட்டுமில்லாது சமூகத்திலும் இணைந்து தொண்டாற்ற வேண்டும்.
சிறந்த பதிவர் விருது யாருக்கு வழங்குவது? நான் பல பதிவுகளை படித்து கொண்டே வருகிறேன். பலர் பிரமிக்க வைக்கிறார்கள். பல விசயங்கள் அறிந்து கொள்ள முடிகிறது. இனியும் வாசித்து கொண்டே வருவேன்.
முதன் முதலில் வாசித்ததும் இந்த பதிவுக்கு நிச்சயம் விருது வழங்க வேண்டும் என இந்த வருடம் ஜனவரி மாதம் மனதில் நினைத்து இருந்தேன். இதோ பத்து மாதங்கள் ஓடிவிட்டன. அந்த பதிவரால் எழுதப்படும் ஒவ்வொரு பதிவும் எத்தனை அருமையாக இருக்கின்றன என நினைத்து பார்க்கும்போது மனதில் திருப்தி இருக்கத்தான் செய்கிறது.
அப்படிப்பட்ட பதிவருக்கு விருது வழங்குவதில் மிகவும் பெருமை அடைகிறேன். எனக்கு விருது வழங்கும் தகுதி இருக்கிறதா என்பதை அவரே தீர்மானித்து கொள்ளட்டும். அந்த விருதினை, எந்த பிரிவின் கீழ் வழங்குகிறேன் என , மற்றொரு பதிவில் அறிவிக்கின்றேன். அந்த விருதினை தொடர்ந்து சில விருதுகள் மற்ற பதிவர்களுக்கும் தொடர்ந்து வழங்குவதாக இருக்கின்றேன்.
விருதுகள் பெற்றுக் கொள்வதில் உங்களுக்கு மகிழ்ச்சி இருக்கிறதோ, இல்லையோ விருதினை வழங்குவதில் எனக்கு மிகவும் மகிழ்வாக இருக்கிறது.
(தொடரும்)