Monday, 1 November 2010

நுனிப்புல் பாகம் 2 (21)

21. ஆணும் பெண்ணும்

நாட்கள் நகரத் தொடங்கின. தினமும் காலையில் மலையடிவாரத்திற்குச் செல்வதும் மலையின் மேல் ஏறிச் செல்லாமல் அங்கே கீழேயே அமர்ந்து பேசுவதுமாக பெரியவருக்கும் வாசனுக்கும் நாட்கள் கழிந்தது. ஒவ்வொரு நாளும் வாசனுக்கு ஏதாவது அறிவுரை ஒன்றை சொல்வதை கடமையாக்கிக்கொண்டிருந்தார் பெரியவர். 

மழையில் நனைந்த நோட்டினை வாசன் இப்பொழுதெல்லாம் எடுத்து வருவதில்லை. பெரியவர் தன்னுடன் எந்த நோட்டையும் கொண்டு வருவதில்லை. வாசனுக்கு அம்மா அப்பாவின் ஞாபகமும் ஊரின் ஞாபகமும் வந்திருந்தது. எப்பொழுது செடி கிடைக்கும், விதை கிடைக்கும் என வாசன் பரபரப்புடன் இருந்தாலும் பெரியவர் மிகவும் நிதானமாகவே காணப்பட்டார். 

அன்றைய தினம் வழக்கம்போல மாலையில் பார்த்தசாரதியின் வீடு வந்து சேர்ந்தனர் இருவரும். வந்தவுடன் நேராக தங்களுக்கென ஒதுக்கப்பட்ட அறைக்கு வாசன் சென்றுவிடுவது வழக்கம். சிறிது நேரம் அனைவருடன் பேசினாலும் அவரவர் வேலை என இருப்பதால் வாசனின் நேரம் பெரியவருடனே கழிந்தது. 

அன்று வாசன் விஷ்ணுப்பிரியனைச் சந்திக்கச் சென்றான். விஷ்ணுப்பிரியன் வாசனிடம் நலம் விசாரித்தார். சுபாவும் வரவேற்றார். வாசன் நேரடியாகவேக் கேட்டான். 

''
எப்படி குளோனிங் எல்லாம் பண்றது?''

''
இப்ப பண்றதில்லை''

''
எப்படி பண்ணினீங்க''

''
சிரமமான காரியமாத்தான் இருந்தது, ஆண்டாள் மேல பாரத்தைப் போட்டு பண்ணிட்டேன்''

''
பையனாகவே இருக்குமா குழந்தை''

''
ஆமாம்''

''
பொண்ணாக மாறிச்சினா''

''
அப்படியெல்லாம் மாறாது''

''
அதெப்படி அவ்வளவு உறுதியா சொல்றீங்க''

''
குளோனிங்கல் எந்த நியூக்ளியஸை வைக்கிறோமோ அதோ நியூக்ளியஸ் தன்மையுள்ள குழந்தைதான் பிறக்கும், இப்போ பெருமாளோட நியூக்ளியஸ் பெருமாளாவே பிறக்கும்''

''
பூங்கோதை?''

''
பூங்கோதை கருவைச் சுமக்கிற தாய், அவங்க நியூக்ளியஸ் இதுல இல்லை, ஆமா நியூக்ளியஸ் எல்லாம் தெரியுமா வாசன் உங்களுக்கு, எந்த குழந்தை பிறக்கும்னு தெரியுமா?''

''
ஜனவரி மாசம் கருத்தரிச்சா ஆண் குழந்தைப் பிறக்கும்னு ஐதீகம் தெரியும்''

வாசன் சொன்னதைக் கேட்டதும் விஷ்ணுப்பிரியன் சத்தம் போட்டு சிரித்தார். வாசன் தொடர்ந்தான். விஷ்ணுப்பிரியனின் சிரிப்பொலி கேட்டு சுபா என்னவென சமையல் அறையில் இருந்து வந்தார். 

''
கருவாகி நிற்கிறவங்க கையை வயித்துக்கு மேலே வைச்சா அது பொண்ணு, வயித்துக்கு கீழே வைச்சா அது ஆணு அப்படிங்கிற பாட்டிக் கதையும் தெரியும்''

விஷ்ணுப்பிரியன் தொடர்ந்து சிரித்தார். சுபா வாசன் சொன்னதைக் கேட்டு புன்முறுவலிட்டுக் கொண்டவாறே சமையலைறைக்குள் சென்றார். வாசன் நிறுத்தினான். 

''
வாசன், நீங்க இவ்வளவு புத்திசாலியா இருப்பீங்கனு நான் எதிர்பார்க்கலை'' 

விஷ்ணுப்பிரியன் சிரித்துக்கொண்டே சொன்னார். வாசன் தலையை குனிந்து கொண்டான். விஷ்ணுப்பிரியன் படம் எடுத்து காண்பித்தார். ஒவ்வொன்றாக விளக்கினார். 

''இதோ பாருங்க வாசன், செல்கள் பொதுவா மைட்டாசிஸ் அப்படிங்கிற முறையில இரண்டாப் பிரியும். அப்படிப் பிரியறப்போ இரண்டா இணைஞ்சிருக்க குரோம்சோம்கள் தனித்தனியா இரண்டாப் பிரியும். இப்படி இரண்டாப் பிரியற குரோம்சோம்கள் தனக்கு தனக்குனு ஒரு புது குரோம்சோம்களை உருவாக்கிக்கிரும், இப்போ அந்த குரோம்சோம்கள் ஒவ்வொரு துருவத்துக்கும் போகும். செல் பக்கவாட்டில பெரிசாகி நடுவுல பிரியறப்போ ஒரு புது குரோம்சோம்கள் புதுசா உருவாகின இரண்டு செல்லுக்கும் கிடைச்சிரும். இப்படி உருவாகிறதுதான் நம்ம உடம்புல நடக்கிறது. ஆனா விந்து செல்லும், அண்ட செல்லும் உருவாகிற விதமே தனி. இந்த இரண்டு செல்லுக்கும் அது அதுக்கு ஒரே ஒரு குரோம்சோம்தான் இருக்கும். இந்த செல் பிரிவை மியாசிஸ் அப்படினு சொல்வாங்க.






இப்போ ஒரு செல்லிலிருந்து பிரியற குரோம்சோம்கள் தனித்தனியா இரண்டு செல்லுக்குப் போய் நிற்கும். குரோம்சோம்கள் எக்ஸ் ஒய் வடிவுல இருக்கும். ஆணுக்கு எக்ஸ் ஒய் குரோம்சோம்கள். பெண்ணுக்கு எக்ஸ் எக்ஸ் குரோம்சோம்கள். இப்படி நாலு குரோம்சோம்கள் தனித்தனியா இருக்கும். இப்போ ஆணோட எக்ஸ் குரோம்சோம் பெண்ணோட எக்ஸ் குரோம்சோமோட இணைஞ்சா பிறக்கறது பெண்ணாப் பிறக்கும், ஆணோட ஒய் குரோம்சோம் பெண்ணோட எக்ஸ் குரோம்சோமோட இணைஞ்சா பிறக்கறது ஆணாப் பிறக்கும் புரியுதா வாசன்?''

''பெருமாள் தாத்தா எப்படி பெருமாள் தாத்தாவாவே வருவார்?''

''
நான் வைச்சது பெருமாள் நியூக்ளியஸ் மட்டும்தான், இது உடல் செல்லிருந்து எடுத்தது அதனால எக்ஸ் தனியாகவோ, ஒய் தனியாகாவோ நான் பிரிச்சி வைக்கலை அப்படியேதான் வைச்சேன்''


படங்கள் : நன்றி கூகிள் 

''
எனக்கு எதுவுமேப் புரியலை, இந்த படத்தில் இருக்கிறத தமிழ்படுத்தினா நல்லா இருக்குமே''

''
உனக்கு ஜெனிடிக்ஸ் பத்தி முதல்ல இருந்து சொன்னாத்தான் புரியும், தினமும் ஒன்பது மணிக்கு இங்க வா, ஒரு மணிநேரம் சொல்லித்தரேன்''

''அதெல்லாம் வேண்டாம். 
பூங்கோதைக்கும் கேசவனுக்கும் பெருமாள் தாத்தா இல்லாம வேற பிறக்கப்போற குழந்தை என்ன குழந்தையா இருக்கும்னு நினைக்கிறீங்க?''

''
பெண் குழந்தையாப் பிறக்கனும்னு ஆண்டாளை வேண்டிக்கிறேன்''

''
ஏன்?, நீங்க வேண்டிகிட்டா மட்டும் அப்படி பிறந்துரமா?''

''
சக்திக்கு அண்ணனாக வருவதுதானே பெருமாளுக்கு அழகு''

"அப்படி நடக்காது"

"நல்லாவே ஜோசியம் சொல்றோம் வாசன்"

விஷ்ணுப்பிரியன் சொல்லக் கேட்டதும் வாசனுக்கு தலை விண்ணென்று வலித்தது. குரோம்சோம்கள் மனதை குழப்பம் அடையச் செய்து இருந்தது. வாசன் தலைவலிப்பதாக கூறிவிட்டு ஹார்லிக்ஸ் அருந்திவிட்டு உடனடியாக கிளம்பிச் சென்றான். உனக்கு எதுவுமே தெரியாதா வாசன் என அவனுக்குள் யாரோ கேள்வி கேட்பது போல் இருந்தது. 

அந்த இரவே பெரியவரிடம் விஷ்ணுப்பிரியன் சொன்ன விசயத்தைச் சொன்னான் வாசன். பெரியவர் புரிந்ததுபோல் சிரித்தார். வாசன் புரியாமல் பெரியவரிடம் அவன் சொன்னது புரிந்ததா எனக் கேட்டான். பெரியவர் இதை நிர்ணயிப்பவன் யார் எனத் தெரியுமா எனக் கேட்டார். வாசனுக்கு பேசாமல் தூங்கலாம் என இருந்தது. இதோடு பெரியவர் ஒவ்வொரு நாளும் கேட்ட கேள்விக்குத் தெரியாது என பதில் சொல்லியே பழகிக் கொண்டான் வாசன். பெரியவர் இன்றைய தேடலும் இன்றோடு முடிந்தது என்றார்.

மறுநாள் காலையில் கல்லூரிக்கு விடுமுறை என்பதால் பூங்கோதை வீட்டிலே இருந்தாள். சாப்பிட வந்த வாசனிடம் பேச வேண்டும் என சொன்னாள். பெரியவர் இன்று மலைப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என சொன்னார். சிலநாட்கள் முன்னரே சொல்வதாக சொன்ன வாசனிடம் பூங்கோதை மீண்டும் திருமால் வந்திருந்தபோது என்ன நடந்தது எனக் கேட்டாள். வாசன் அதிர்ந்தான். 

(
தொடரும்)

Friday, 29 October 2010

சிறந்த பதிவர் விருது - 1

நான் பதிவுலகில் இதுவரை பெற்ற விருதுகள் இரண்டு.

முதலில் விதூஷ் அவர்கள் எனது ஆண்டாளுக்கு கல்யாணம் எனும் கதைக்கு கொடுத்த விருது. மிகவும் மகிழ்ச்சியான தருணம் என்றுதான் சொல்வேன்.

பின்னர் ஸ்டார்ஜன் அவர்கள் கொடுத்த விருது. இந்த இரண்டு விருதுகளையும் பலருடன் சேர்ந்து பகிர்ந்து கொண்டதில் சந்தோசமாக இருந்தது.

இவர்கள் கொடுத்த விருதினை மனப்பூர்வமாக பெற்று கொண்டேன். ஆனால் அதை எவரிடமும் பகிர்ந்து தரவேண்டும் எனும் எண்ணமோ, 'போனால் போகுது' என்கிற பாணியில் விருதினை மற்றவர்களிடம் தர வேண்டும் என்கிற எண்ணமோ என்னிடம் எப்போதும் இருந்தது இல்லை.

பொதுவாக விருது என்பது ஒருவரை சிறப்பிக்கவும், கௌரவிக்கவும் தரப்படுவது. இந்த பதிவுலகில் பதிவர்களுக்கு இடையில் தரப்படுகின்ற விருதுதனை கேலி பேசியவர்கள் உண்டு. அதற்கான பதிவுகளை இப்போது தேடி பார்ப்பது அவசியமில்லாத ஒன்றுதான். அதனால் அப்படி சம்பந்தப்பட்ட பதிவுகளை இப்போது விட்டுவிடலாம். மேலும் திறமையானவர்களை கண்டுபிடித்து ஊக்கம் தந்து அவர்களின் எழுத்துகளை மென்மேலும் மெருகுபடுத்திட அவர்களுக்கு தொடர்ந்து உற்சாகம் தரும்போது அவர்களின் எழுத்தில் நிச்சயம் தனித்தன்மை வெளிவரும். இந்த விருதெல்லாம் வெறும் கண்துடைப்பு, இந்த விருதுக்கு எல்லாம் நான் எழுதுவது இல்லை என்கிற மனோபாவமும் பலரிடம் உண்டு. இப்பொழுது பிரச்சினை என்னவெனில் 'பிரபலம்' என கருதப்படும் பதிவர்களுக்கு விருதுகள் அவசியமா? 'பிரபலம்' என அவர்கள் கருதப்படுவதால் அவர்கள் எழுதுவது எல்லாமே விருதுக்கு தகுதியானவைகளா? எனும் கேள்விகள் எழத்தான் செய்யும்.

இங்கே தமிழ் பதிவுலகில் எழுதப்படும் பதிவுகள் மிகவும் அதிகம். ஒவ்வொன்றும் தனித்திறமையுடனே எழுதப்படுகின்றன என்பதில் இருவேறு கருத்தில்லை. ஆனாலும் சில பதிவர்களின் பதிவுகள் மனதில் ரீங்காரமிட்டு கொண்டே இருக்கத்தான் செய்கின்றன.

அப்படி ஒரு நல்ல பதிவு என பார்க்கும்போது அதில் என்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்பதை விருது கொடுப்பவர் மட்டுமே நிர்ணயிக்கிறார் எனும்போது சில சங்கடங்கள் இருக்கத்தான் செய்யும். எனது பதிவுகளை விட மற்றவரின் பதிவுகள் எந்த விதத்தில் உசத்தி என்கிற மனோபாவம் ஒவ்வொருவரிடமும் எழுவது இயற்கைதான், நாம் மூடி வைக்க நினைத்தாலும் கூட.  அதே வேளையில் தனக்கு பிடித்த, தான் மிகவும் ரசித்த ஒரு பதிவரின் பதிவுகளுக்கு ஒருவர் விருது தருவதில் எந்தவித பாரபட்சமும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

இந்த பதிவுலகை கடந்த இரண்டு வருடங்களாக மட்டுமே கண்காணித்து வருகின்றேன். இந்த பதிவுலகில் நான் படித்த இடுகைகள் அதிகம் பிரச்சினைக்குரியவைகள்தான். அனால் அவையெல்லாம் உலக பிரச்சினைகள் அல்ல, தனிப்பட்ட நபர்களின் பிரச்சினைகள். அதன் காரணமாகவே  எரிச்சலூட்டும் தமிழ் பதிவர்கள் என எழுதியது முதற்கொண்டு, பதிவர்களை நண்பர்களாக எப்படி சேர்த்து கொள்வது என்கிற யோசனை வரையிலும் பதிவர்கள் சம்பந்தப்பட்ட பதிவுகள் நிறையவே எழுதி இருக்கிறேன். இதன் முழு காரணம் ஒரு விசயத்தில் நம்மை ஈடுபடுத்தி கொள்ளும்போது அது சம்பந்தப்பட்ட விசயங்கள் பற்றி முழுவதும் தெரிந்து கொள்வது அவசியம். நல்ல விசயங்கள் பற்றி அதிகம் கவலை படத்தேவையில்லை. கெட்ட விசயங்கள் பற்றி நமது முழு கவனமும் இருக்க வேண்டும். அல்லவை நீக்கி நல்லவை நாடுவது; கனியிருப்ப காய் கவர்ந்தற்று என்பது எல்லாம் மிகவும் சரியே. ஆனால் ஒரு சமூகத்தில் அல்லவைகளை அறவே நீக்காமல் நல்லவைகளை பாதுகாப்பது ஒருபோதும் பயனளிக்காது.

தமிழ்மணம் விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இந்த விருது வாசிக்கும் வாசகர்களால் தேர்ந்தெடுக்கப்படுவது உண்டு. இங்கே பாரபட்சம் என்று எதுவும் காண இயலாது என முற்றிலும் ஒதுக்கிவிட இயலாது, அதே வேளையில் இந்த விருது தனிப்பட்ட நபரின் திறமையை அங்கீகரிக்கும் ஒன்றாகத்தான் கருத வேண்டும். பொதுவாகவே சிறுகதை, கவிதை போட்டிகள் நடத்தப்படும்போது 'பிரபலங்கள்' எழுதி இருக்கிறார்கள் எனும் பார்வை வந்துவிடுகிறது என்பதை மறுக்க இயலாது. அதை தவிர்க்கவே தற்போது சமீபத்தில் நடத்தப்பட்ட போட்டியில் யார் யார் எழுதி இருக்கிறார்கள் என்பதை மறைக்கும் வண்ணம் செயல்படுவதாக போட்டியாளர்கள் அறிவித்து இருந்தார்கள்.

இங்கே நடுவர்களின் அளவு கருவி எது? எழுதப்பட்ட விதமா? கொடுக்கப்பட்ட விசயத்தினை எப்படி உட்கிரகித்து கொண்டார்கள் என ஆய்வு செய்வதா? என்னைப் பொருத்தவரை போட்டி என அறிவித்தல் வந்தவுடன் போட்டி சம்பந்தப்பட்ட கதைகளோ, கவிதைகளோ எங்குமே வெளியிடக்கூடாது என ஒரு அறிவிப்பு தர வேண்டும். போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் அவரவர் அவர்களுடைய தளத்தில் வெளியிட்டு கொள்ளலாம் என்றுதான் இருக்க வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் போட்டியின் தன்மை பாதுகாக்கப்படும். இனிமேல் போட்டிகள் அறிவிப்பவர்கள் இதனை கவனத்தில் கொள்வது நல்லது என கருதுகிறேன். நடுவர்களுக்கும் மிகவும் எளிதாக இருக்கும்.

பதிவர்களுக்கு விருது வழங்கும்போது பணமுடிச்சு ஏன் வழங்கப்படுவதில்லை என்கிற கேள்வியும் இருக்கத்தான் செய்கிறது. ஒரு அமைப்பு நடத்தும்போது அதற்குரிய வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. மணற்கேணி என சிங்கை பதிவர்கள் நடத்திய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பு பற்றி இங்கே கட்டாயம் குறிப்பிட்டாக வேண்டும். அதிக பணம்  செலவழித்து பதிவர்களுக்கு கௌரவம் தந்த அமைப்பு அது. நிச்சயம் இதுபோன்ற அமைப்புகளுக்கு பதிவர்களின் ஒத்துழைப்பு இருப்பது அவசியம்.

பதிவர்களின் 'ஈகோ' பிரச்சினையால் பதிவுலகம் அவ்வப்போது தள்ளாடத்தான் செய்கிறது. ஆனால் அதை எல்லாம் ஒரு பொருட்டாக மதிக்காமல் அற்புதமான பதிவுகளை தந்து கொண்டிருக்கும் பல பதிவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதில் எவருக்கேனும் மாற்று கருத்து இருக்கும் என தெரியவில்லை.

அறிவியல் பதிவுகள், ஆன்மிக பதிவுகள், தொழில்நுட்ப பதிவுகள், மருத்துவ பதிவுகள், சமூக பிரச்சினைகள் சுட்டிக்காட்டும் பதிவுகள், திரைப்படம் சம்பந்தப்பட்ட பதிவுகள், மதம் , இனம் சம்பந்தபட்ட பதிவுகள் என பல்வேறு பதிவுகளில் தனிப்பட்ட நபர்களை தாக்கும் பதிவுகளும் வலம் வருகின்றன. இதில் மிகவும் சுவாரஸ்யமானவை மொக்கை பதிவுகள் என அழைக்கப்படுபவை.

'மொக்கை' பதிவுகள் தான் உங்களுடையது என குற்றம் சாட்டுபவர்கள் அதிகம் இருக்கிறார்கள். 'மொக்கை மகளிர் சங்கம்' என்கிற அமைப்பும் இருப்பதாக கேள்வி பட்டு இருக்கிறேன். மொக்கை என்றால் என்ன? என்பதை விளக்கினால் அதுவும் ஒரு மொக்கையாகத்தான் இருக்கும்! நான் மொக்கை பதிவுகள் தான் எழுதுகிறேன், அதற்கென்ன இப்போ என்கிற மனோபாவம் பதிவர்களிடம் இருக்கத்தான் செய்கிறது. இதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. அவரவருக்கு தெரிந்த விசயத்தை வைத்து வாழ்வில் முன்னேறி வருவது இயல்புதான்.

பின்னூட்டங்கள் பற்றிய பெரும் சச்சரவு உண்டு. யார் யார் எவருக்கு பின்னூட்டம் போடுவது என்பதை பின்னூட்டம் போடுபவர்கள் மட்டுமே தீர்மானிக்க இயலும். நண்பர்கள் சேர்த்து கொண்டால் மட்டுமே தொடர்ந்து பின்னூட்டங்கள் பெற இயலும் எனும் பார்வை பலரிடம் இருந்தாலும், ஒரு 'நல்ல' பதிவுக்கு பின்னூட்டம் என்பது அரிது எனும் குற்றச்சாட்டு உண்டு. பொதுவாக ரசிக்கும் மனோபாவம் பொருத்தே ஒவ்வொருவரின் தேவைகளும் பதிவுகளில் விழுகின்றன. பின்னூட்டம் என்பது அவரவர் விருப்பத்துடன் எழுதுவது. எனவே இந்த சர்ச்சை தீராது.

அதிக 'ஹிட்ஸ்' எனும் ஒரு மாயை வேறு உண்டு. 'ஹிட்ஸ்' வாங்கி சமைக்கவா முடியும்? அது ஒரு விளையாட்டு. பிறரை விட நானே பெருமளவில் பார்க்கப்படுகிறேன் என்கிற ஒரு புதிர். அதிலும் பதிவுகள் எழுதி 'கல்லா கட்டுகிறார்கள்' எனும் குற்றச்சாட்டு உண்டு. 'கல்லா கட்டி' சேர்த்து வைத்து சென்னையிலோ, லண்டனிலோ, சிங்கப்பூரிலோ அரண்மனையா கட்ட இயலும். அதே போல வாக்குகள் பற்றியும் ஒரு குற்றச்சாட்டு உண்டு. இதையெல்லாம் ஒரு விளையாட்டாக கருதி புறந்தள்ளிவிட வேண்டும்.

நமக்கு முக்கியம், உண்மையான , நேர்மையான சமூக அக்கறையுடைய பதிவர்கள் மென்மேலும் வளரவேண்டும், அவர்கள் போற்றப்பட வேண்டும். அவர்கள் எழுத்தில் மட்டுமில்லாது சமூகத்திலும் இணைந்து தொண்டாற்ற வேண்டும்.

சிறந்த பதிவர் விருது யாருக்கு வழங்குவது? நான் பல பதிவுகளை படித்து கொண்டே வருகிறேன். பலர் பிரமிக்க வைக்கிறார்கள். பல விசயங்கள் அறிந்து கொள்ள முடிகிறது. இனியும் வாசித்து கொண்டே வருவேன்.

முதன் முதலில் வாசித்ததும் இந்த பதிவுக்கு நிச்சயம் விருது வழங்க வேண்டும் என இந்த வருடம் ஜனவரி மாதம் மனதில் நினைத்து இருந்தேன். இதோ பத்து மாதங்கள் ஓடிவிட்டன. அந்த பதிவரால் எழுதப்படும் ஒவ்வொரு பதிவும் எத்தனை அருமையாக இருக்கின்றன என நினைத்து பார்க்கும்போது மனதில் திருப்தி இருக்கத்தான் செய்கிறது.

அப்படிப்பட்ட பதிவருக்கு விருது வழங்குவதில் மிகவும் பெருமை அடைகிறேன். எனக்கு விருது வழங்கும் தகுதி இருக்கிறதா என்பதை அவரே தீர்மானித்து கொள்ளட்டும். அந்த விருதினை, எந்த பிரிவின் கீழ் வழங்குகிறேன் என ,  மற்றொரு  பதிவில் அறிவிக்கின்றேன். அந்த விருதினை தொடர்ந்து சில விருதுகள் மற்ற பதிவர்களுக்கும் தொடர்ந்து வழங்குவதாக இருக்கின்றேன்.

விருதுகள் பெற்றுக் கொள்வதில் உங்களுக்கு மகிழ்ச்சி இருக்கிறதோ, இல்லையோ விருதினை வழங்குவதில் எனக்கு மிகவும் மகிழ்வாக இருக்கிறது.

(தொடரும்)

Thursday, 28 October 2010

எனக்கேற்ற நண்பரை காணேன்

கடலை உணர்ச்சிகள் 

மனைவியின் பிரசவ வலி என அறிந்ததும் சொல்லிக் கொள்ளாமல் எப்படி போவது என தெரியவில்லை. என்ன விசயம் என்றே கேட்டாள் மணப்பெண். எனது மனைவிக்கு பிரசவ வலி, மருத்துவமனைக்கு கொண்டு சென்று இருக்கிறார்கள் என்றேன். உடனே அவளை திருமணம் செய்து கொள்ள போகும் அந்த மனிதர் தம்பி இங்கே வா என ஒருவனை நோக்கி அழைத்தார். இந்த சாரை நம்ம காருல நீ அவர் சொல்ற இடத்தில இறக்கிவிட்டுட்டு ஏதும் பிரச்சினையில்லைன்னு தெரிஞ்ச பிறகு இங்க வா என்றார். அந்த பையனும் சரி சார் என தலையாட்டினான்.

கிளம்புங்க சார் என்றார் அந்த மனிதர். மணப்பெண் 'ஒன்னும் ஆகாது கவலைபடாதீங்க. என்னை மாதிரி பொண்ணுதான் பிறந்து இருக்கும், என்னோட பெயரை வைங்க' என்றாள். எனது மனதின் வலி இன்னும் அதிகரித்தது. 'என்னை மன்னித்துவிடுங்கள், நானும் எனது மாமாவுடன் போக வேண்டும்' என ஆங்கிலத்தில் சொன்ன எனது மாமா மகள் என்னுடன் வர தயாரானாள். 'நீ இருந்துட்டு வாயேன்' என்று எனது பரிசு பொருளை அவளிடம் திணிக்க எத்தனித்தேன். அதற்குள் சார் நீங்க போய்ட்டு வாங்க என அருகில் இருந்தவர்கள் பரிசு பொருளை என்னிடமிருந்தும், எனது மாமா மகளிடமிருந்தும் பெற்று கொண்டார்கள்.

காரினை வேகுவேகமாக ஓட்டினான் அவன். சரியாக முப்பது நிமிடங்களுக்கு எல்லாம் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தான். இன்னும் திருமணம் நடந்து இருக்காது என கணித்த நான், தம்பி நீ மண்டபத்துக்கு போ என அனுப்பிவிட்டேன். அவனும் தயங்கினான். நான் சார்கிட்ட பேசிக்கிறேன், எந்த பிரச்சினையும் இல்லை என சொன்னேன். அவன் சென்றுவிட்டான். எனக்காக காத்திருந்தவர் போல என் தந்தை மருத்துவமனை வெளியில் நின்று கொண்டிருந்தார்.

வேகமாக பிரசவ அறைக்கு சென்றேன். நான் செல்லவும் மருத்துவர் வெளியே வரவும் சரியாக இருந்தது. மகாலட்சுமி பொறந்திருக்கா என மருத்துவர் சொல்லி சென்றது எனது காதில் விழுந்தது. மனதில் அதிக பயம் வந்து சேர்ந்தது. சரஸ்வதி என்றோ, வீரலட்சுமி என்றோ எதற்கு இந்த மருத்துவர் சொல்லவில்லை என மனதில் குடைந்து கொண்டிருக்கும்போதே 'மாமா, பொண்ணு பிறந்தா அவளோட பெயரைத்தான் வைப்பீங்களா' என காரில் வரும்போது எனது மாமா மகள் கேட்டது காதில் ஒலித்தது.

அங்கிருந்த பாட்டி 'பொட்ட புள்ளைய பெத்துட்டு என்ன பகுமானம் வேண்டி கிடக்கு' என முகத்தை சிலுப்பி கொண்டார். ஆனால் என் அம்மா பேத்திதான் வேண்டும் என வேண்டி கொண்டாராம். எனக்கோ என்னுடன் வேலை பார்த்த மணப்பெண் மனதில் பயமுறுத்தினாள். என்னைப் போலவே உன் பொண்ணும் கஷ்டப்படுவா பாரு என சபிப்பது போல இருந்தது.

அந்த பிரச்சினையெல்லாம் தள்ளி வைத்துவிட்டு தாயும் சேயும் நலம் என அறிந்து மகிழ்ந்தேன். சுகப்பிரசவம் என்பதால் அன்றே செல்லலாம் என மருத்துவர் சொல்லி இருந்தார்கள். மனைவியிடம் என்ன பெயர் வைப்பது என அப்போதே கேட்டேன். வைக்கலாம் என அசதியுடன் சொன்னார். அது என்ன பேரு, வைக்கலாம் என கேட்டு வைத்தேன். அனைவரும் சிரித்தார்கள். எனக்கு பெரிய நகைச்சுவை சொல்லிவிட்டது போன்று ஒரு மகிழ்ச்சி.

மதிய வேளை நெருங்கி கொண்டிருக்க மணப்பெண் தனது கணவர் மற்றும் சிலருடன் மருத்துவமனைக்கு வந்துவிட்டாள். வாங்க என வரவேற்ற எனது காலில் அவர்கள் இருவரும் விழுந்து வணங்கியபோது நான் துடிதுடித்து போனேன். பொண்ணுக்கு என் பேருதானே வைச்சீங்க என குழந்தையை லாவகமாக தூக்கி அவளது பெயரை எனது மகளின் காதில் மூன்று முறை சொன்னாள்.

தம்பி என்றார் அந்த பெண்ணின் கணவர். கையில் நிறைய பரிசு பொருட்கள். எல்லாம் இந்த குழந்தைக்கு வாங்கி வந்தோம் என அவர்கள் அந்த பரிசு பொருட்களை அடுக்கியபோது அவளை கட்டிப்பிடித்து அழ வேண்டும் போலிருந்தது.

முதன் முதலில், நீ ஒரு ஆணாக பிறந்து இருக்கக் கூடாதா, குறைந்த பட்சம் நான் ஒரு பொண்ணாக பிறந்து இருக்கக் கூடாதா என அவளிடம் சொல்லி கதற வேண்டும் போலிருந்தது.

நாங்கள் கிளம்பும்வரை அங்கேயேதான் இருந்தார்கள். மருத்துவமனையிலிருந்து அனைவரும் கிளம்பி செல்லும்போது அவள் என்னிடம் வந்து பெயரை மாத்தி வைச்சிராதீங்க, ப்ளீஸ் என்றாள். நான் பதில் சொல்லும் முன்னரே, இந்த பெயர் நல்லா இருக்கு, மாத்தி எல்லாம் வைக்கமாட்டோம் என எனது மனைவி சொன்னதும் எனக்கேற்ற நண்பரை காணேன் என இனிமேல் ஒருபோதும் சொல்லமாட்டேன் என மனதில் உறுதி கொண்டேன்.

(தொடரும்)