Tuesday, 26 October 2010

நுனிப்புல் பாகம் 2 (20)

திருமால் திரும்பினார் 

விஷ்ணுப்பிரியன் கலக்கத்துடன் திருமாலையும் வாசனையும் மாற்றி மாற்றிப் பார்த்தார். சிரிப்பொலி சட்டென நின்றது. விஷ்ணுப்பிரியன் அங்கிருந்து கோவில் உள்ளே செல்லாமல் வீடு நோக்கி நடக்கத் தொடங்கினார். திருமால் விஷ்ணுப்பிரியனை அழைத்தார். ஆனால் விஷ்ணுப்பிரியன் காதில் வாங்கிக் கொள்ளாது நடந்தார். வாசன் விஷ்ணுப்பிரியனை பின் தொடர்ந்து சென்று அவரது கையைப் பிடித்து அழைத்து வந்தான். விஷ்ணுப்பிரியனின் கையைப் பிடித்தபோது அவரது நடுக்கத்தை இவன் உணர்ந்தான். கோவிலுக்குள் செல்லாமல் கோவிலின் பக்கவாட்டிற்கு திருமால் அவர்களை அழைத்துச் சென்றார். 

திருமால் விஷ்ணுப்பிரியனின் சுருக்கமாக பெருமாள் தாத்தா சொன்ன விசயங்களைச் சொன்னார். அதைக் கேட்ட விஷ்ணுப்பிரியன் மிகவும் மனம் கலங்கினார். அந்த வேளைப் பார்த்து பார்த்தசாரதியும் அங்கே வந்து சேர்ந்தார். விஷ்ணுப்பிரியன் தான் கொடுத்த வாக்கினை நிறைவேற்றவே தனது மனைவியை முதலில் இதற்கு சம்மதம் தெரிவித்ததாகவும், பார்த்தசாரதியின் வேண்டுகோளுக்கிணங்க தனது முடிவை மாற்றிக்கொண்டதாகவும் தெரிவித்தார். ஆனால் தான் அவசரப்பட்டு செல்களை அழித்துவிட்டதாகவும் இதனால் ஏற்படக்கூடிய பின்விளைவுகள் என்னவாக இருக்கும் என யோசிக்கையில் தான் மிகவும் வேதனையும் கலக்கமும் அடைவதாக கூறினார். 

திருமால் தனக்கு இடப்பட்ட கட்டளையை நிறைவேற்றவே தான் வந்ததாகவும், அப்படி ஒருவேளை விஷ்ணுப்பிரியன் தவறியிருந்தால் அதை ஞாபகப்படுத்திச் செல்லவும், நேரடியாக பார்த்துச் செல்லவும் வந்ததாக கூறினார். இதைக்கேட்ட விஷ்ணுப்பிரியன் சற்று மனம் நிம்மதி அடைந்தவராக தென்பட்டார். பார்த்தசாரதி எல்லாம் அவன் கருணை என வேண்டிக்கொண்டார். வாசன் மட்டும் மிகுந்த யோசனையில் இருந்தான். 

இதை இப்படித் திட்டமிட்டு செய்ய வேண்டிய காரியமும், எவர்க்கும் தெரியாமல் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது குறித்துக் கூறினார். பார்த்தசாரதி விஷ்ணுப்பிரியனை ஆரத் தழுவினார். ஆனால் விஷ்ணுப்பிரியன் இந்த விசயத்தை கடைசிவரை பாதுகாப்பது என்றே தான் இருப்பதாகவும், சுபா மருத்துவ குறிப்புகளைப் பார்த்துத் தெரிந்து கொண்டாள் என அறிந்ததும், அவளிடம் மறைக்கமுடியாமல் தான் தவித்ததும் குறித்து சில நாட்கள் பல மாதங்கள் போல் நகர்கிறது என்று சொன்னார். திருமால் விஷ்ணுப்பிரியனிடம் தனது முகவரியை தந்தார். வாசன் இவர்கள் பேசுவதை கவனமாகக் கேட்டுக்கொண்டவன், மெளனமாகவே நின்று கொண்டிருந்தான். 

திருமால் மற்றும் அனைவரும் ஆலய தரிசனம் செய்துவிட்டு பார்த்தசாரதி வீட்டிற்குச் சென்றார்கள். பார்த்தசாரதி வீட்டில் உணவருந்தினார்கள். திருமால் உடனடியாக தான் கிளம்ப வேண்டும் என அன்று இரவே கிளம்பினார். மற்றவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். திருமால் தன்னை திருவில்லிபுத்தூரில் கொண்டு விடுமாறு விஷ்ணுப்பிரியனை கேட்டுக்கொண்டார். வாசன் உடன் சென்றான். 

வாசனிடம் செடி விசயம் வெற்றிகரமாக முடிந்ததும் தன்னை வந்து சந்திக்குமாறு கூறினார் திருமால். வாசன், பேசுவதை இன்று தங்கியே பேசிச் செல்லலாம் என சொன்னான். ஆனால் திருமால் வாசன் கட்டாயம் சென்னை வர வேண்டும் என கேட்டுக்கொண்டார். வாசன் தனது ஆஸ்ரம விசயம் குறித்துச் சொன்னான். திருமால் சிரித்தார். இது அவருக்கு மனதில் கடைசியில் தோன்றிய ஆசையாக இருக்கக்கூடும் என்றார் திருமால். 

திருவில்லிபுத்தூரிலிருந்து ஒன்பது மணியளவில் சென்னைக்குக் கிளம்பினார் திருமால். அவர் செல்வதையேப் பார்த்துக்கொண்டிருந்தான் வாசன். விஷ்ணுப்பிரியன் வாசனிடம் தான் திருமால் குறித்து பயந்து போனதாக சொன்னார். வாசன் திரும்பியவன் பூங்கோதைக்கு திருமணம் நடைபெறாமல் போய் இருந்தால் என்ன பண்ணி இருப்பீர்கள் எனக் கேட்டான். இந்த விசயத்தில் விஷ்ணுப்பிரியன் நடந்து கொண்ட முறை சற்றும் முறையில்லை என்று சொன்னான். விஷ்ணுப்பிரியன் தன்னை மன்னிக்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் வாசன் அவரை அத்தனை எளிதாக விடுவதாக இல்லை. இந்த சூழலால் ஏதாவது பூங்கோதைக்கு பிரச்சினை வரும் எனில் தன்னால் அதை அத்தனை எளிதாக ஏற்றுக்கொள்ள இயலாது எனச் சொன்னான். விஷ்ணுப்பிரியன் வாசனிடம் தைரியம் சொன்னார். 

அன்றைய இரவு பொழுது வேகமாக கழிந்தது. காலை எழுந்ததும் பெரியவரும் வாசனும் திருவில்லிபுத்தூர் மலைக்குச் செல்ல வேண்டும் என கிளம்பினார்கள். பூங்கோதை கல்லூரிக்குச் செல்ல தயாரானாள். கேசவன் பார்த்தசாரதியுடன் கட்டிட வேலை ஒன்றுக்கு கிளம்பினான். மூன்று மாதங்கள் செல்ல வேண்டுமே என வேண்டிக்கொண்டான் கேசவன். 

வாசனிடம் பூங்கோதை திருமால் குறித்துக் கேட்டாள். வாசன் உண்மை சொல்வதா? வேண்டாமா? என தவித்தான். பொய் சொல்ல விருப்பம் இல்லாதவனாய் மாலை வந்து அனைத்தும் விபரமாக சொல்வதாக சொன்னான். பூங்கோதை சந்தோசமாகச் சென்றாள். 

மலையடிவாரத்தை அடைந்ததும் வாசன் நோட்டினைத் திறந்தான். பெரியவர் சிரித்தார். என்னவெனப் பார்த்தான் வாசன். சிரமப்படாம எல்லாம் சாதிக்கனும்னு நினைக்கிறியா தம்பி என்றார். வாசன் புரியவில்லை என்றான். ஒரு விதை அத்தனை சாதாரணமா மண்ணில உருவாகிறது இல்லை. இந்த விதையின் மூல ஆதாரம் என்னனு உனக்குத் தெரியுமா? இந்த பிரபஞ்சத்துக்குச் சொந்தக்காரன்தான் விதைக்கு மூல ஆதாரம்னு நான் சொன்னா நீ சிரிப்பே. ஆனால் மூல ஆதாரம் என்னனு சொல்ல முடியுமா? என பெரியவர் வாசனிடம் கேட்டார். வாசன் நோட்டினை மூடினான். சூரியனே ஆதாரம் என்றான். பூமியைத் தவிர வேறு கிரகங்கள் தெரியுமா தம்பி? என்றார். வாசன் பெரியவரை உற்று நோக்கினான். சற்றே தடுமாறினான். புதன் என பெயரிடப்பட்ட கிரகங்களிலிருந்து புளூட்டோ எனப் பெயரிடப்பட்ட கிரகம் வரைக்கும் தெரியும் என்றான். புத்தகத்தில் படிச்சியா தம்பி என்றார் பெரியவர். வாசன் விதையின் மூல ஆதாரம் தனக்குத் தெரியாது என்றான். பெரியவர் கலகலவெனச் சிரித்தார். சூரியன் சட்டென மறைந்து மின்னல் வெட்டியது. மழை மிக வேகமாக கொட்டியது. ஒதுங்க இடம் இன்றி இருவரும் முழுவதும் நனைந்துவிட்டனர். வாசன் எழுதிய நோட்டுப்புத்தகம் முழுதும் மழையில் நனைந்து இருந்தது. பெரியவரை அர்த்தம் புரியாமல் பார்த்தான் வாசன். அன்றைய தேடல் அப்பொழுதே முடிவுக்கு வந்தது. 

(
தொடரும்)

Thursday, 21 October 2010

வெளிநாடு செல்பவர்கள் வெளிநாட்டிலேயே இருப்பதேன் 2

ஆசை யாருக்குத்தான் இல்லை. என்னுடைய ஆசையெல்லாம் இப்படித்தான் இருந்தது என எவராலும் முழுமையாக சொல்ல இயலுமா? எவரும் அவர் அவர் ஆசைகளை அப்படியே வெளி சொல்ல இயலாது. பல விசயங்கள் மனதோடு புதைக்கப்பட்டு இருக்கும். பக்கம் பக்கமாக எழுதினாலும் சில ஆசைகள் மட்டும் மனதில் ஒளிந்து கொண்டிருக்கும். இப்படித்தான் ஒருமுறை நண்பர்கள் ஆசைகளை பட்டியலிட சொன்னபோது இவ்வாறு எழுதி இருந்தேன். அதில் எங்கேயும் வெளிநாடு செல்ல வேண்டும் என ஆசை இருந்ததாக குறிப்பிடவே இல்லை.

ஆசைப்பட்டேன் - முன்னுரை 

ஆசைப்பட்டேன் - 1 

ஆசைப்பட்டேன் - 2

ஆசைப்பட்டேன் - 3

ஆசைப்பட்டேன் -4 

ஆசைப்பட்டேன் - 5

கடவுள் ஆசைப்படுவாரா? 

இப்பொழுதும் நினைத்து பார்க்கிறேன். என் தாய்! நினைக்கும் போதெல்லாம் கண்கள் கலங்கி விடுகிறது. எனக்கு எந்த ஒரு வலியும் ஏற்பட்டு விடக்கூடாதென எனது வாழ்க்கையை முடிவு செய்த தாய். ஒரு மனைவி வந்தால் அவளால் நான் பாதுகாக்கப்படுவேன் என எப்படியம்மா உங்களால் எனது வாழ்க்கையை நிர்ணயிக்க முடிந்தது? இதுவே தவறாகி போயிருந்தால் உங்கள் மீது ஒருபோதும் பழி சுமத்தி இருக்க மாட்டேன் அம்மா. நான் எத்தனையோ விசயங்கள் உங்களிடம் பகிர்ந்து கொண்ட போதும், ''நீ சின்ன பையன்டா'' என உங்கள் உத்தரவுக்கு என்னை அன்பினால் கட்டி போட்ட உண்மை எத்தனை பேருக்கு தெரியும்?

ஆம், என் தாய் மட்டும் எனது திருமணத்திற்கான முன்னேற்பாடுகளை பண்ணியிருக்காவிட்டால் நான் இலண்டன் வந்திருக்கும் வாய்ப்பின் கதவு அடைபட்டு போயிருக்கும். நான் இளநிலை பட்டம் படித்து கொண்டிருக்கும்போதே பெண் பார்க்கும் நிகழ்வு நடந்தது. எனது மனைவி மூன்று வயதில் இருந்தே வளர்ந்தது எல்லாம் இலண்டனில்தான். எனது அன்னையின் மரணம் நிகழ்ந்த ஆண்டுதனில் ஆறுமாதம் பின்னர் எங்கள் திருமணம் நடந்தது . திருமணம் நடந்து முடிந்த இரண்டு மாதத்தில் லண்டன் வந்து சேர்ந்தேன். எனது அன்னையின் ஆசையுடன் எனது ஆசையும் ஒட்டிக் கொண்டது.

ஒரு நாட்டுக்கு செல்ல விசா பலவகைகளில் வழங்கபடுகிறது. வேலை பார்க்க அனுமதி விசா. வியாபார விசா. மாணவர் விசா. சுற்றிப் பார்க்க செல்ல விசா என பல வகை விசா உண்டு. அதோடு மட்டுமா குடியுரிமை விசா என்றொன்று உண்டு. நான் லண்டன் வந்தது குடியுரிமை விசா என்பதில் தான். நான் மிகவும் சராசரி மாணவன். என்னை பெரும் அறிவுடையவனாக மாற்றி கொள்ள வேண்டும் எனும் யோசனையும், முயற்சியும், ஒருபோதும் என்னுள் வந்ததில்லை, இனி எப்போதும் வரப் போவதுமில்லை. எனது அறிவின் மூலமாகவோ, எனது படிப்பின் மூலமாகவோ நான் லண்டன் வரவில்லை என்பதை இங்கே பதிவு செய்துவிடுகிறேன். நான் வெளிநாடு சென்றதற்கான அடிப்படை காரணம் திருமணம். நான் பணம் சம்பாதிக்கவோ, பெயரும், புகழும் பெறவோ லண்டன் நோக்கி பயணம் செய்ய வில்லை. எனது வாழ்க்கையினை வாழ லண்டன் பயணித்தேன். அப்பொழுதெல்லாம் லண்டன் வருவது இப்போது போல அத்தனை எளிதாக இல்லை என்பதை குறித்து வைத்து கொள்வது நல்லது.

விசா வழங்குமிடத்தில் நடத்தப்பட்ட நேர்முக வினாக்கள் இன்னும் மனதில் ஆடுகிறது அதிலும் குறிப்பாக

1 மாப்பிள்ளை வீட்டுக்குத்தானே பெண் வருவார், எதற்கு பெண் வீட்டிற்கு மாப்பிள்ளையாகிய நீ செல்ல வேண்டும்?

2 1996ல் பாஸ்போர்ட் எல்லாம் எடுத்து வைத்திருக்கிறாய்? கல்யாணம் பண்ணி லண்டன் போகத்தானே?

3 நீ எல்லாம் படித்தவனா?

எனது பதில்கள் மிகவும் கலங்கிய வண்ணம் இருந்தன. அதிலும் இப்படி எல்லாம் சொன்னேன். 'இதற்கு முன்னர் எங்கள் ஊரை விட லண்டன் ஒன்றும் பெரிதில்லை. ஆனால் எனது மனைவியின் பொருட்டே நான் லண்டன் செல்ல வேண்டி இருப்பதால்  லண்டன் பெரிதாகிப் போனது'. இந்த பதிலை சொல்லும்போது எனக்குள் நடுக்கம் நிலவத்தான் செய்தது. எனது நேர்முக வினா பதில்களை இப்பொழுதும் எனக்கு அவர்கள் போட்டு காட்டினால் பெரு மகிழ்ச்சி அடைவேன். எத்தனை பயம்? எத்தனை கலக்கம்? தவறு செய்கிறோமோ என்கிற பய உணர்வு. வெளிநாடு செல்வது என்பது அத்தனை சுலபமா அப்போது. நான் சில மாதங்கள் சிரமப்பட்டேன். எனது மனைவி, எனது மனைவியின் அண்ணன் மற்றும் லண்டன் ஸ்ரீ மகாலட்சுமி கோவில் நிறுவனர் உதவிகள் செய்யாது போயிருந்தால் நானாவது இலண்டனாவது.

ஆனால் மாணவர்கள் விசாவில், இங்கே கல்லூரி இல்லாமலே, இங்கே வந்தவர்களை பார்த்து இருக்கிறேன், தங்கி விடுவதையும் பார்த்து இருக்கிறேன். வேலை அனுமதி விசாவில் வந்து இங்கேயே இருப்பவர்களையும் பார்த்து இருக்கிறேன். ஆலய நிர்வாகத்தில் பணி செய்தபோது பலரை அழைத்து இருக்கிறோம், அவர்களில் பலர் இங்கேதான் இருக்கிறார்கள். பெரும்பாலும் அனைவருமே தங்கிவிட்டார்கள். மனைவி, குடும்பம் என ஆகிவிட்டது. ஒரு பகுதி என்ன, பல பகுதிகள் இங்கிலாந்தில் ஆசியர்களும், ஆப்பிரிக்கர்களும் ஆக்கிரமித்து விட்டார்கள். நான்கு வருடங்கள் தொடர்ந்து ஒரு இடத்தில் வேலை பார்த்தால் போதும், இந்த நாட்டில் எல்லா நாட்களும் இருக்குமாறு குடியுரிமை பெற்றுவிடலாம். இப்பொழுது சில மாற்றங்கள் செய்து இருக்கிறார்கள்.

ஆனால் வேலைக்கு என வந்தவர்கள், படிப்பதற்கு என வந்தவர்கள்  எவரையும் கட்டாயமாக குறிப்பிட்ட வருடத்திற்குள் சென்று விட வேண்டும் என்றோ, அந்த குறிப்பிட்ட வருடங்கள் மேல் அந்த நாட்டில் வேலை செய்ய எப்போதுமே அனுமதி இல்லை என்றோ, வேறொரு வெளிநாட்டில் வேலை பார்த்தால், இன்னொரு வெளிநாட்டில் வேலை பார்க்க கூடாது என்றோ எந்த ஒரு நாடும் சட்டம் வைத்திருப்பதாக தெரியவில்லை. அப்படி இவர்கள் சட்டம் வைத்து இருந்தால் எவருமே குடியுரிமை வைத்து இருந்திருக்க இயலாது.

இப்பொழுது சொல்லுங்கள்? இத்தகைய வாய்ப்புகள் இருக்கும்போது அதனை பயன்படுத்தாமல் இருக்க வேண்டுமென்பது வெளிநாடு சென்றவர்கள் தவறா? வெளிநாட்டின் சட்ட திட்டங்கள் தவறா?

இலண்டன். ஒரு ரொட்டி கடையில் வேலை பார்ப்பவர் அதிக நேரம் வேலை பார்த்து வரும் பணமும் சரி, ஒரு நல்ல  வேலை பார்த்து வரும் பணமும் சரி பெரிய வித்தியாசம் இருக்கப் போவதில்லை. முன்னவர் சேமிப்பார், பின்னவர் செலவழிப்பார். ;)

இங்கே வாங்கும் பணத்தின் மதிப்பு ஊரில் சுமாராக எழுபது மடங்கு அதிகம். சம்பாதித்தல் இங்கே. செலவழித்தலும் சுகபோக வாழ்க்கையும் இந்தியாவில் என இருப்போர்கள் அதிகம். ஊரில் இருக்கும் சொத்துக்கள் எல்லாம் சொந்த பணத்தில் வாங்கியது. இங்கே வாங்கி இருக்கும் சொத்துகள் எல்லாம் கடன் பணத்தில் வாங்கியது. இங்கிலாந்தில் கடன்காரன், இந்தியாவில் பணக்காரன். ;)

இலண்டன். மின்சார வெட்டு இல்லை. தண்ணீர் பிரச்சினை இல்லை. போக்குவரத்து சச்சரவு இல்லை. (சுரங்க பாதை ரயில் பணியாளர்கள் வேலை நிறுத்தம் ஆடிக்கு ஒரு தரம் மட்டுமே தலைகாட்டும், ஆனாலும் வேலைக்கு போய்விடலாம்). நமது ஊரில் இருப்பதை போல சாதிகள் இல்லை, சண்டைகள் இல்லை. அரசியல் கூட்டங்கள் இல்லை, அனாவசிய பேச்சுகள் இல்லை. ஊழல் இல்லை. ஒருவருக்கும் ஜால்ரா போட தேவையில்லை. வேலை, வேலை, வேலை. சம்பாதிக்கிறாயா, எல்லா வரிகளுக்கும் பணத்தை கட்டுகிறாயா, சந்தோசமான வாழ்க்கைதான்.

லண்டன். படித்தவர்களா,  இந்த வேலையைத்தான் பார்க்க வேண்டும் என வரையறை வைத்து கொள்ளாத வெட்கப்படாத பூமி இது. துபாயில் சென்று ஒட்டகம் மேய்த்தான் என நக்கல் பண்ணாத பூமி இது. அபுதாபியில் கழிவறையை சுத்தம் செய்கிறான் என கௌரவம் பேசாத சுத்தமான பூமி. உயர்ந்தவன், தாழ்ந்தவன் என பிரித்து பேசாத பூமி.

நான் முதலில் நூலகத்தில் புத்தகங்களை எனது ஆராய்ச்சி படிப்பு முடியும் வரை, மூன்று வருடம்,  மாலை ஆறு மணியிலிருந்து இரவு ஒன்பது மணி வரை வாரம் இரு தினங்கள் எடுத்து வைப்பேன். கிறிஸ்துமஸ் சமயங்களில் தபால் நிலையத்தில் சென்று மாலையில்  வேலை பார்த்து இருக்கிறேன். ரொட்டி தயாரிக்கும் நிறுவனத்தில் கூட வேலை செய்ய செல்ல நான் தயக்கம் காட்டியது இல்லை. ஆனால் வீட்டில் மறுத்துவிட்டார்கள்.  கடைகளில் மெய்க்காவலன் வேலை செய்ய கூட தயாராக இருந்தேன். எதற்கும் துணிந்து இருந்தேன். உழைப்புதனை நம்புவன் ஒருபோதும் ஒடிந்து போவதில்லை என்பதுதான் நான் கண்ட வாழ்க்கை அனுபவம். எனது மாமனார் பெரிய பட்ட படிப்பு படிக்கவில்லை, எனது மாமியார் பள்ளிக்கூடம் செல்லும் வாய்ப்பே இல்லை. அவர்கள் உழைத்த உழைப்பு அடுத்த தலைமுறையும் லண்டனில் இருக்கிறது.

இந்த உழைப்புக்கு ஏற்ற ஊதியம், உழைப்பை மதிக்கும் மாண்பு இந்தியாவில் இருக்கிறதா?

வசதிகளும் வாய்ப்புகளும் நிறைய பெருக்கி கொள்ள ஒரு தளம் இருக்கும்போது எவரேனும் அந்த தளத்தை விட்டுவிட முயற்சிப்பார்களா?

சும்மா வீட்டில் அமர்ந்து இருக்க பணம் தரும் பூமி இது.

இலண்டன் வந்து பிடிக்காமல் திரும்பி போனவர்கள் மிகவும் குறைவு.

அவ்வப்போது அலுவலகம் மூலமாக வேலை மட்டும் வந்து பார்த்துவிட்டு செல்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இந்தியா. எங்கு பார்த்தாலும் பிரச்சினைகள். ஒரு சின்ன விசயத்தை செய்ய எத்தனை பேரிடம் மல்லுக்கு நிற்க வேண்டி இருக்கிறது. ஒரு ஒழுங்கு முறை இருக்கிறதா? ஒருவர் நிலம் வாங்குவாராம், ஆனால் வேறு ஒருவர் தனது என்று அந்த நிலத்தில் உட்கார்ந்து கொள்வாராம்.  ஒருவர் கஷ்டப்பட்டு உழைத்த பணம் வைத்திருப்பாராம், முதலாளிகளை அடித்து நொறுக்கு என வெட்டியாக திரிபவர்கள் கோஷம் போடுவார்களாம். எதற்கெடுத்தாலும் வீட்டுக்கு ஆட்டோ வரும் எனும் கூப்பாடு வேறு. தைரியமாக எதையும் சொல்ல இயலவில்லை. பொய் வழக்கு போடுகிறார்கள் புரட்சிகர இந்தியர்கள். பயப்படுகிறோம், இந்தியா வருவதற்கே அச்சப்படுகிறோம் என்கிறார்கள் பலர். இந்தியாவில் முதலீடு செய்ய எத்தனை சிரமம் என்பதை முதலீட்டாளர்களைத்தான் கேட்க வேண்டும். எனக்கு அதில் பரிச்சயம் இல்லை.

என்னிடம் இந்தியா பற்றி பிறர் குறைபடும்போதேல்லாம்,  இந்தியா, அப்படித்தான் இருக்கும், முடிந்தால் அங்கே சென்று வாழ்ந்து பாருங்கள் என்றுதான் என்னால் சொல்ல இயலும். அந்த இந்தியாவை பொன்னான இந்தியாவாக மாற்ற என்னால் முடியாது போனது போல பலராலும் முடியாது போய்விட்டிருக்க கூடும்.

இந்தியா எனது தாய் நாடு. தமிழ் எனது உயிர் என்று எழுதுவதற்கு சந்தோசமாகத்தான் இருக்கும், ஆனால் எனது இந்திய தேசம் எனக்கு ஒரு விடுமுறை தேசமாகிப் போனதுதான் உண்மை.

அதே பாபு சொன்னார். அமெரிக்காவில் சென்று வாழ்பவர்கள் இந்தியா வர வேண்டுமென நினைக்கிறார்கள். ஆனால் லண்டன் சென்றவர்கள் எவருக்குமே அந்த நினைப்பு இல்லை என்றார். அது ஒரு விதத்தில் உண்மைதான். இந்தியா செல்ல வேண்டுமென எவருமே இங்கே தங்கி விட்டவர்கள் விரும்புவதே இல்லை. அப்படி செல்ல வேண்டும் என அவர்கள் சொன்னாலும் உள்ளத்தின் ஓரத்தில் அட இந்தியாவா என்றுதான் இருக்கும்.

நான் இன்னும் பல விசயங்களை சொல்லாமல் விட்டுவிட்டேன்.  எழுதுங்கள் அமெரிக்க வாழ் இந்தியர்களே, அமீரக வாழ் இந்தியர்களே. இந்திய வாழ் இந்தியர்களே.

Wednesday, 20 October 2010

வெளிநாடு செல்பவர்கள் வெளிநாட்டிலேயே இருப்பதேன் - 1

ராஜ நடராஜன் said

//எனவே வெளிநாடு சென்றவர்கள் வெளிநாடு என இருந்து விடுகிறார்கள். இதற்கு என்ன காரணம், எதற்கு என அலசியதில் சில விசயங்கள் பிடிபட்டன. பல விசயங்கள் புரிபடவே இல்லை.//

இதை இன்னும் கொஞ்சம் விரிவாக சொல்லியிருக்கலாமேன்னு தோணுது.முக்கிய காரணங்களாய் எனக்கு தெரிவது பொருளாராதர வித்தியாசங்கள்,அரசியல் சமூக வாழ்க்கை முறைகளின் மாறுபாடுகள் இந்தியா வரணும்ன்னு இதயம் சொன்னாலும் வராதேன்னு மூளை சொல்லுது.


பெங்களூரில் நானும் எனது மாமா மகளின் கணவர் பாபுவும் பேச ஆரம்பித்தபோது இரவு பத்து மணி.  நாங்கள் பேசி முடித்து உறங்க சென்றபோது அதிகாலை நான்கு மணி. இத்தனைக்கும் அவரை அப்பொழுதுதான் முதன் முதலில் பார்க்கிறேன். இதற்கு முன்னர் எனக்கு எனது மாமா மகளை தவிர அவரது குடும்பத்தினர் எவரையும் எனக்கு தெரியாது. 

முதலில் நான் எழுதிய புத்தகங்கள் பற்றிய பேச்சுதான் ஆரம்பித்தது. அப்பொழுது அவரது வாசிப்பு அனுபவம் பற்றி பகிர்ந்து கொள்ள தொடங்கியபோது நான் அவரை பிரமிப்புடன் பார்த்தேன். எனது புத்தகங்களை இன்னமும் அவர் வாசிக்கவில்லை, எனது புத்தகங்கள்  நான் கொண்டு செல்ல மறந்து போயிருந்தேன்.  எத்தனையோ எழுத்தாளர்கள் பற்றி சொன்னார். எனக்கு நினைவில் தற்போது இல்லை. வாசிப்பு அனுபவம் இல்லாத எனக்கு பல விசயங்கள் புதிராகவே இருக்கும்.  

அதற்கு பின்னர் அவர் தொடுத்த ஆயுதம் தான் உறக்கமில்லா நிலைக்கு கொண்டு சென்றது. அவர் கேட்ட கேள்வி இதுதான் 'எதற்கு வெளிநாட்டில் போய் வெளிநாட்டிலேயே இருக்கிறீங்க, இந்தியாவுக்கு வந்து ஏதாவது செய்யலாம்ல' கேள்வி அத்தனை சாதாரணமானது இல்லை.  வெளிநாட்டில் வாழும் ஒவ்வொருவரையும் உலுக்கும் கேள்வி. பிறந்த மண்ணை விட்டு சொந்த பந்தங்களை விட்டு எவருக்கோ அடிமை வாழ்க்கை வாழ்ந்து தனது சுயத்தை பெருக்கி கொள்ளும் கொத்தடிமைகளா நாம் என ஒவ்வொருவரும் கேட்டு கொள்ள வேண்டிய கேள்வி. எதற்காக இந்த வெளிநாடு  வந்தோம், திரவியம் தேடுவதே முழு குறிக்கோள் எனில் திரவியம் தேடிய பின்னர் ஊருக்கு அல்லவா செல்ல வேண்டும் என்கிற மனோபாவம் எத்தனை பேரிடம் உள்ளது என்பதை சுய சிந்தனை செய்து கொள்ள வேண்டிய நோக்கத்தில் எழுப்பட்ட கேள்வி அது.

எனது பதில் எப்படி இருந்து இருக்கும்? எனது பதில் கூட தடுப்பு சுவர் எழுப்பக் கூடிய கேள்வி தொனியில் தான் அமைந்தது. 'எதற்கு கிராமத்தை விட்டு பெங்களூர் வந்தீர்கள்?' 
பெங்களூரில் சில காலம் தங்கிவிட்ட நீங்கள் கிராமத்தை அல்லவா முன்னேற்ற திரும்பி சென்று இருக்க வேண்டும். எனது கேள்வி அவருக்குள் சில சலனங்களை ஏற்படுத்தி இருக்கலாம். ஆமாம் நீங்கள் சொல்வது சரிதான் என அவர் சொன்னபோதே நல்லதொரு கலந்துரையாடலுக்கு தயாராகிறார் என்றே புரிந்து கொண்டேன். 'வெளிநாட்டுக்கு வாய்ப்பு கிடைக்காதவர்கள் மட்டுமே இந்த பழம் புளிக்கும் என சொல்வார்கள்,  'உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் போகமாட்டீர்களா? என்பதுதான் எனது கேள்வியாக இருந்தது. 'எனது பெற்றோரை தனியாக விட்டுவிட்டு போகமாட்டேன்' என்றார். 

அவரது எண்ணம் எல்லாம் வெளிநாட்டுக்கு செல்பவர்கள் தங்களது அன்னை, தந்தையை அலைகழித்து விடுகிறார்கள். பெற்றவர்களை பெரிதும் பாடாய் படுத்துகிறார்கள் என ஓரிடத்தில் இருந்தது. இதே கருத்தை வலியுறுத்தும் எத்தனை கவிதைகள், எத்தனை கதைகள்? அவரது ஆதங்கம் புரிந்து கொள்ள முடிந்தது. அதே வேளையில் எப்பொழுது ஒருவர் கிராமத்தை விட்டு வெளியேறுகிறாரோ அப்பொழுதே அவரின் பெற்றோர்கள் அலைக்கழிய தொடங்கி விடுகிறார்கள் என்பதும் மறுக்கவியலா ஒன்று. பெற்றோர்களுடன் உடனிருந்தே பெற்றோர்களை அலைக்கழிக்கும் குழந்தைகளை இன்றல்ல பல வருடங்களாகவே காண்கிறோம். முதியோர் இல்லங்கள் இப்பொழுது மட்டுமே அதிகம் அல்ல. எப்பொழுதும் அதிகம் தான். முன்னால் தெரியாமல் நடந்தது, இப்பொழுது பலருக்கும் தெரிந்தே நடக்கிறது. 

பெற்றவர்கள் மனதில் நினைக்கும் கவலைகள் பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்பது. அதற்காக அவர்கள் படும்பாட்டினை கட்டுரையில் வடிக்கவியலாது. பிள்ளைகள் நன்றாக இருந்துவிட்டால் தங்களை தங்கள் விருப்பங்களை பிள்ளைகள் நிறைவேற்ற வேண்டும் எனும் அதிக எதிர்பார்ப்புள்ள கவலைகள் ஒருபுறம். இங்குதான் பெற்றவர்கள் வேதனைப்படுகிறார்கள், விம்முகிறார்கள். பிள்ளைகள் அலட்சியம் நிறைந்தவர்களாக பார்க்கப்படுகிறார்கள். வாழ்க்கையின் தராதரம் உயரும்போது, வசதிகள் வாய்ப்புகள் பெருகும்போது தேவைகள் வித்தியாசப்படுகின்றன. அலட்சிய போக்கு அனைவரிடத்திலும் இருக்கத்தான் செய்கிறது. 

இப்படியெல்லாம் இருக்கும் பட்சத்தில் வெளிநாட்டில் சென்று வெளிநாட்டில் இருப்பது எதற்கு. எனது பார்வை உங்களது பார்வையாக இருக்கலாம், இல்லாதும் போகலாம். நான் உங்கள் பார்வையை என்னில் பொருத்த வேண்டிய அவசியமோ, எனது பார்வையை உங்களுக்கு மாட்டிக் கொள்ள வேண்டிய நிர்பந்தமோ இங்கு இல்லை என்பதை தெளிவு படுத்தி கொள்கிறேன். 

எனக்கு சிறு வயதில் ரஷ்யா என்றால் கொள்ளை பிரியம். அந்த நாடு மனதில் பதிந்ததன் நோக்கம் என்னவெனில் ரஷ்யா இந்தியாவின் நட்புறவு நாடு என அறிந்து கொண்டதுதான். அதன் காரணத்தினால் ரஷ்யாவுக்கு செல்ல வேண்டும் என நினைத்தேன். கம்யூனிச சிந்தனைகளை புரட்டி பார்த்த தருணங்கள் அவை. முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் எல்லாம் இணைத்து கொண்ட நேரங்கள் அவை. என்னிடம் வெளிநாடு செல்லும் மோகம் இல்லை எனினும் ரஷ்யா எனும் ஒரு தாகம் இருந்தது. அதுவும் பதினொன்னாவது படிக்கும் போது முற்றிலும் தொலைந்து போனது. 

அதற்கு பின்னர் எனது மூத்த சகோதரியை லண்டனிலிருந்து உறவுக்காரர்கள், இவர்கள் சிங்கப்பூரில் பல வருடங்கள் இருந்த பின்னர் லண்டன் வந்தவர்கள்,  பெண் பார்க்க வந்தார்கள். வீட்டில் இருந்த பெரியவர்கள் எல்லாம் மறுப்பு தெரிவிக்க எனது அன்னை மட்டும் போராடி இருக்கிறார். போராட்டத்தில் வெற்றியும் பெற்று இருக்கிறார். பெண் பிள்ளையை தொலை தூரத்துக்கு எதற்கு அனுப்ப வேண்டும் என இருபத்தி ஆறு வருடங்கள் முன்னால் ஏற்பட்ட பலரின் உள சிக்கலை இல்லாதவாறு பண்ணியதில் என் அன்னைக்கு அதிகம் பங்கு உண்டு. 

எனக்கு வெளிநாடு செல்லும் ஆசை எல்லாம் இல்லை. வெளிநாடு என்றால் எப்படி இருக்குமோ என்கிற ஒரு எதிர்பார்ப்பு என்னுள் இருந்தது. அதைவிட எனக்கு இந்தியாவில் பிரதமராகும் கனவு ஒன்று இருந்தது. நான் கல்கத்தாவில் பயின்றபோது, டில்லியில் ஆராய்ச்சிக்கு என இருந்த போது இந்தியா என்றால் எனக்கு அத்தனை பிரியம், அதுவும் எனது கிராமத்திற்கு செல்வதென்றால் எனக்கு அத்தனை ஆசை. அங்கிருக்கும் குழந்தைகளுக்கு பாடம் சொல்லி தருவது எனக்கு பிடித்தமான வேலை. நேரம் கிடைக்கும் போது விவசாயம் செய்வது உண்டு. எனது கனவுகளின் நாயகனாக வாசன் எனும் கதாபாத்திரத்தை நுனிப்புல்லில் வைத்தேன். 

இப்படியெல்லாம் இருக்க நான் வெளிநாட்டுக்கு படிக்க போகவேண்டுமென ஒரு பொய் வேடம் தரிக்க உட்படுத்தபட்டேன். நான் அதற்காக எழுதிய தேர்வு ஒன்றே ஒன்றுதான். எந்த வெளிநாட்டு கல்லூரிக்கும் விண்ணப்பம் போடவில்லை. எனக்கு நமது நாட்டில் படித்து, நமது நாட்டில் இருந்து விடத்தான் கொள்ளை ஆசை. 

(தொடரும்) 

அடுத்த பாகத்தில் முடித்து விட முயற்சிக்கிறேன்.