//எனவே வெளிநாடு சென்றவர்கள் வெளிநாடு என இருந்து விடுகிறார்கள். இதற்கு என்ன காரணம், எதற்கு என அலசியதில் சில விசயங்கள் பிடிபட்டன. பல விசயங்கள் புரிபடவே இல்லை.//
இதை இன்னும் கொஞ்சம் விரிவாக சொல்லியிருக்கலாமேன்னு தோணுது.முக்கிய காரணங்களாய் எனக்கு தெரிவது பொருளாராதர வித்தியாசங்கள்,அரசியல் சமூக வாழ்க்கை முறைகளின் மாறுபாடுகள் இந்தியா வரணும்ன்னு இதயம் சொன்னாலும் வராதேன்னு மூளை சொல்லுது.
பெங்களூரில் நானும் எனது மாமா மகளின் கணவர் பாபுவும் பேச ஆரம்பித்தபோது இரவு பத்து மணி. நாங்கள் பேசி முடித்து உறங்க சென்றபோது அதிகாலை நான்கு மணி. இத்தனைக்கும் அவரை அப்பொழுதுதான் முதன் முதலில் பார்க்கிறேன். இதற்கு முன்னர் எனக்கு எனது மாமா மகளை தவிர அவரது குடும்பத்தினர் எவரையும் எனக்கு தெரியாது.
முதலில் நான் எழுதிய புத்தகங்கள் பற்றிய பேச்சுதான் ஆரம்பித்தது. அப்பொழுது அவரது வாசிப்பு அனுபவம் பற்றி பகிர்ந்து கொள்ள தொடங்கியபோது நான் அவரை பிரமிப்புடன் பார்த்தேன். எனது புத்தகங்களை இன்னமும் அவர் வாசிக்கவில்லை, எனது புத்தகங்கள் நான் கொண்டு செல்ல மறந்து போயிருந்தேன். எத்தனையோ எழுத்தாளர்கள் பற்றி சொன்னார். எனக்கு நினைவில் தற்போது இல்லை. வாசிப்பு அனுபவம் இல்லாத எனக்கு பல விசயங்கள் புதிராகவே இருக்கும்.
அதற்கு பின்னர் அவர் தொடுத்த ஆயுதம் தான் உறக்கமில்லா நிலைக்கு கொண்டு சென்றது. அவர் கேட்ட கேள்வி இதுதான் 'எதற்கு வெளிநாட்டில் போய் வெளிநாட்டிலேயே இருக்கிறீங்க, இந்தியாவுக்கு வந்து ஏதாவது செய்யலாம்ல' கேள்வி அத்தனை சாதாரணமானது இல்லை. வெளிநாட்டில் வாழும் ஒவ்வொருவரையும் உலுக்கும் கேள்வி. பிறந்த மண்ணை விட்டு சொந்த பந்தங்களை விட்டு எவருக்கோ அடிமை வாழ்க்கை வாழ்ந்து தனது சுயத்தை பெருக்கி கொள்ளும் கொத்தடிமைகளா நாம் என ஒவ்வொருவரும் கேட்டு கொள்ள வேண்டிய கேள்வி. எதற்காக இந்த வெளிநாடு வந்தோம், திரவியம் தேடுவதே முழு குறிக்கோள் எனில் திரவியம் தேடிய பின்னர் ஊருக்கு அல்லவா செல்ல வேண்டும் என்கிற மனோபாவம் எத்தனை பேரிடம் உள்ளது என்பதை சுய சிந்தனை செய்து கொள்ள வேண்டிய நோக்கத்தில் எழுப்பட்ட கேள்வி அது.
எனது பதில் எப்படி இருந்து இருக்கும்? எனது பதில் கூட தடுப்பு சுவர் எழுப்பக் கூடிய கேள்வி தொனியில் தான் அமைந்தது. 'எதற்கு கிராமத்தை விட்டு பெங்களூர் வந்தீர்கள்?'
பெங்களூரில் சில காலம் தங்கிவிட்ட நீங்கள் கிராமத்தை அல்லவா முன்னேற்ற திரும்பி சென்று இருக்க வேண்டும். எனது கேள்வி அவருக்குள் சில சலனங்களை ஏற்படுத்தி இருக்கலாம். ஆமாம் நீங்கள் சொல்வது சரிதான் என அவர் சொன்னபோதே நல்லதொரு கலந்துரையாடலுக்கு தயாராகிறார் என்றே புரிந்து கொண்டேன். 'வெளிநாட்டுக்கு வாய்ப்பு கிடைக்காதவர்கள் மட்டுமே இந்த பழம் புளிக்கும் என சொல்வார்கள், 'உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் போகமாட்டீர்களா? என்பதுதான் எனது கேள்வியாக இருந்தது. 'எனது பெற்றோரை தனியாக விட்டுவிட்டு போகமாட்டேன்' என்றார்.
அவரது எண்ணம் எல்லாம் வெளிநாட்டுக்கு செல்பவர்கள் தங்களது அன்னை, தந்தையை அலைகழித்து விடுகிறார்கள். பெற்றவர்களை பெரிதும் பாடாய் படுத்துகிறார்கள் என ஓரிடத்தில் இருந்தது. இதே கருத்தை வலியுறுத்தும் எத்தனை கவிதைகள், எத்தனை கதைகள்? அவரது ஆதங்கம் புரிந்து கொள்ள முடிந்தது. அதே வேளையில் எப்பொழுது ஒருவர் கிராமத்தை விட்டு வெளியேறுகிறாரோ அப்பொழுதே அவரின் பெற்றோர்கள் அலைக்கழிய தொடங்கி விடுகிறார்கள் என்பதும் மறுக்கவியலா ஒன்று. பெற்றோர்களுடன் உடனிருந்தே பெற்றோர்களை அலைக்கழிக்கும் குழந்தைகளை இன்றல்ல பல வருடங்களாகவே காண்கிறோம். முதியோர் இல்லங்கள் இப்பொழுது மட்டுமே அதிகம் அல்ல. எப்பொழுதும் அதிகம் தான். முன்னால் தெரியாமல் நடந்தது, இப்பொழுது பலருக்கும் தெரிந்தே நடக்கிறது.
பெற்றவர்கள் மனதில் நினைக்கும் கவலைகள் பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்பது. அதற்காக அவர்கள் படும்பாட்டினை கட்டுரையில் வடிக்கவியலாது. பிள்ளைகள் நன்றாக இருந்துவிட்டால் தங்களை தங்கள் விருப்பங்களை பிள்ளைகள் நிறைவேற்ற வேண்டும் எனும் அதிக எதிர்பார்ப்புள்ள கவலைகள் ஒருபுறம். இங்குதான் பெற்றவர்கள் வேதனைப்படுகிறார்கள், விம்முகிறார்கள். பிள்ளைகள் அலட்சியம் நிறைந்தவர்களாக பார்க்கப்படுகிறார்கள். வாழ்க்கையின் தராதரம் உயரும்போது, வசதிகள் வாய்ப்புகள் பெருகும்போது தேவைகள் வித்தியாசப்படுகின்றன. அலட்சிய போக்கு அனைவரிடத்திலும் இருக்கத்தான் செய்கிறது.
இப்படியெல்லாம் இருக்கும் பட்சத்தில் வெளிநாட்டில் சென்று வெளிநாட்டில் இருப்பது எதற்கு. எனது பார்வை உங்களது பார்வையாக இருக்கலாம், இல்லாதும் போகலாம். நான் உங்கள் பார்வையை என்னில் பொருத்த வேண்டிய அவசியமோ, எனது பார்வையை உங்களுக்கு மாட்டிக் கொள்ள வேண்டிய நிர்பந்தமோ இங்கு இல்லை என்பதை தெளிவு படுத்தி கொள்கிறேன்.
எனக்கு சிறு வயதில் ரஷ்யா என்றால் கொள்ளை பிரியம். அந்த நாடு மனதில் பதிந்ததன் நோக்கம் என்னவெனில் ரஷ்யா இந்தியாவின் நட்புறவு நாடு என அறிந்து கொண்டதுதான். அதன் காரணத்தினால் ரஷ்யாவுக்கு செல்ல வேண்டும் என நினைத்தேன். கம்யூனிச சிந்தனைகளை புரட்டி பார்த்த தருணங்கள் அவை. முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் எல்லாம் இணைத்து கொண்ட நேரங்கள் அவை. என்னிடம் வெளிநாடு செல்லும் மோகம் இல்லை எனினும் ரஷ்யா எனும் ஒரு தாகம் இருந்தது. அதுவும் பதினொன்னாவது படிக்கும் போது முற்றிலும் தொலைந்து போனது.
அதற்கு பின்னர் எனது மூத்த சகோதரியை லண்டனிலிருந்து உறவுக்காரர்கள், இவர்கள் சிங்கப்பூரில் பல வருடங்கள் இருந்த பின்னர் லண்டன் வந்தவர்கள், பெண் பார்க்க வந்தார்கள். வீட்டில் இருந்த பெரியவர்கள் எல்லாம் மறுப்பு தெரிவிக்க எனது அன்னை மட்டும் போராடி இருக்கிறார். போராட்டத்தில் வெற்றியும் பெற்று இருக்கிறார். பெண் பிள்ளையை தொலை தூரத்துக்கு எதற்கு அனுப்ப வேண்டும் என இருபத்தி ஆறு வருடங்கள் முன்னால் ஏற்பட்ட பலரின் உள சிக்கலை இல்லாதவாறு பண்ணியதில் என் அன்னைக்கு அதிகம் பங்கு உண்டு.
எனக்கு வெளிநாடு செல்லும் ஆசை எல்லாம் இல்லை. வெளிநாடு என்றால் எப்படி இருக்குமோ என்கிற ஒரு எதிர்பார்ப்பு என்னுள் இருந்தது. அதைவிட எனக்கு இந்தியாவில் பிரதமராகும் கனவு ஒன்று இருந்தது. நான் கல்கத்தாவில் பயின்றபோது, டில்லியில் ஆராய்ச்சிக்கு என இருந்த போது இந்தியா என்றால் எனக்கு அத்தனை பிரியம், அதுவும் எனது கிராமத்திற்கு செல்வதென்றால் எனக்கு அத்தனை ஆசை. அங்கிருக்கும் குழந்தைகளுக்கு பாடம் சொல்லி தருவது எனக்கு பிடித்தமான வேலை. நேரம் கிடைக்கும் போது விவசாயம் செய்வது உண்டு. எனது கனவுகளின் நாயகனாக வாசன் எனும் கதாபாத்திரத்தை நுனிப்புல்லில் வைத்தேன்.
இப்படியெல்லாம் இருக்க நான் வெளிநாட்டுக்கு படிக்க போகவேண்டுமென ஒரு பொய் வேடம் தரிக்க உட்படுத்தபட்டேன். நான் அதற்காக எழுதிய தேர்வு ஒன்றே ஒன்றுதான். எந்த வெளிநாட்டு கல்லூரிக்கும் விண்ணப்பம் போடவில்லை. எனக்கு நமது நாட்டில் படித்து, நமது நாட்டில் இருந்து விடத்தான் கொள்ளை ஆசை.
(தொடரும்)
அடுத்த பாகத்தில் முடித்து விட முயற்சிக்கிறேன்.