18. விநாயகம் திருமால் வாசன்
மாலை வேளையில் திருவில்லிபுத்தூரை அடைந்தார்கள் பெரியவரும் வாசனும். பேருந்திலிருந்து இறங்கும்போதே தடுமாறி விழுந்தான் வாசன். பெரியவர் பதறிப்போனார். வாசன் பெரியவரின் உதவியுடன் எழுந்து மேல் ஒட்டிய மண் துகளையெல்லாம் தட்டிவிட்டான். சின்னஞ்சிறு சிராய்ப்புகள் ஆங்காங்கே ஏற்பட்டு எரிச்சல் தரத் தொடங்கியிருந்தது. பார்த்து இறங்கக்கூடாதா என பார்த்துச் சென்ற கூட்டம் பரிதாபமாக சொன்னது. வாசன் தலை நிமிர்ந்து பார்த்தான்.
''என்ன ஆச்சு வாசா''
''ஒண்ணும் இல்லை ஐயா, கோபுரம் தெரியுதானு மேலே பார்த்துட்டே கீழே பார்க்க மறந்துட்டேன் ஒரு கல்லு நல்லா சிராய்ச்சிருச்சி''
''கடையில போய் ஏதாவது குடிச்சிட்டுப் போவோம்''
''எப்ப திருமலைக்கு பேருந்து போகும்னு கேட்டு தெரிஞ்சிக்கிட்டா நல்லதுனு தோணுது ஐயா''
பேருந்து நிலையத்தில் விசாரித்தனர். மாலை ஆறு மணிக்கு ஒரு பேருந்தும் அதற்கடுத்து இரவு எட்டு மணிக்கு இருப்பதாகவும் கூறினார். நடந்து சென்றால் நாற்பது நிமிடங்களில் நடக்கலாம் என கூடுதல் தகவலும் தந்தார்கள். மணி நான்கு முப்பது ஆகி இருந்ததால் பேருந்திற்காக காத்து இருந்தே செல்லலாம் என முடிவெடுத்து அங்கிருந்த கடை ஒன்றில் நுழைந்தனர். வாசன் பெரியவரிடம் ஆண்டாள் கோவில் செல்லலாமா என கேட்டான். பெரியவரும் சரி என சொன்னார். காபி அருந்தியபின்னர் கடையினை விட்டு கீழிறங்கி வரும்போது பாதையில் கால் தடுக்கி மீண்டும் விழுந்தான் வாசன். வலியுடன் இந்த முறை தானாகவே எழுந்தான். காலில் ரத்தம் சொட்டத் தொடங்கியது. பெரியவர் அங்கிருந்த மருந்து கடை ஒன்றில் மருந்தும் கட்டுப்போட துணியும் வாங்கி கட்டுப் போட்டார். வாசன் சற்று நேரம் எங்கும் செல்லாமல் நின்றான்.
கோவில் திறப்பதற்கு சற்று நேரமாகும் என சொன்ன பெரியவர் பேருந்து நிலையத்தில் ஓரிடத்தில் வாசனுடன் அமர்ந்தார். வாசன் மிகுந்த யோசனையில் அமர்ந்திருந்தான்.
''நீ கால் எடுத்து வைச்சதிலிருந்தே ரொம்ப தடுமாருற தம்பி''
''ஒண்ணும் தெரியலை ஐயா, ஏதோ ஒண்ணு என்னை இப்படி பண்ணுறத போல உணருரேன்''
''மதியம் தான் சாப்பிட்டோமே, பசி மயக்கம்னு சொல்ல முடியாது''
''அதெல்லாம் இல்லை ஐயா, கோவிலுக்கு நாளைக்குக் கூடப் போய்க்கிரலாம் ஐயா. கொஞ்ச நேரம் நான் இப்படி சாஞ்சிக்கிறேன்''
வாசன் சுவரில் அப்படியே சாய்ந்தான். மதுரையிலிருந்து கிளம்பிய பேருந்து ஒன்று திருவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தினை அடைந்தது. பேருந்து நிலையத்துக்குள்ளே வராமல் வெளியே அனைவரையும் இறக்கிவிட்டுக்கொண்டு இருந்தார்கள். ஒவ்வொருவராக நமக்குப் பரிச்சயப்படாதவர்கள் இறங்கிக்கொண்டே இருந்தார்கள். சிலர் இறங்கியதும் அதற்குப் பின்னர் திருமால் இறங்கினார். பேருந்து நிலையத்துக்குள்ளே வந்த திருமால் பெரியவரைப் பார்த்தார். கண்மூடி இருந்த வாசனும் திருமாலின் கண்களில் பட்டான். திருமலைக்குச் செல்வதற்காக திருமால் பெரியவர் அருகிலேயே வந்து அமர்ந்தார். பெரியவரைப் பார்த்து புன்னகை புரிந்தார் திருமால். பெரியவரும் திருமாலைப் பார்த்து புன்னகை புரிந்தார். அப்பொழுது அங்கே வந்த ஒருவர் திருமலைக்கு எப்போ பேருந்து போகும் எனக் கேட்டார். பெரியவர் ஆறு மணிக்கு என பதில் சொன்னார்.
திருமால் அமைதியாகவே அமர்ந்து இருந்தார். பெரியவர் தான் பேசினார்.
''நீங்க எங்க போறீங்க''
''திருமலை''
''என்ன விசயம்?''
''டாக்டர் விஷ்ணுப்பிரியனை பார்க்கப் போறேன்''
''உங்க பேரு''
''திருமால்''
''திருமால்?''
''ஆமாம், ஏன் ஆச்சரியமா கேட்கறீங்க''
''ம்ம் நீங்க சென்னையா, சொந்த ஊரு சாத்திரம்பட்டியா?''
''ஆமாம் அதெப்படி உங்களுக்குத் தெரியும்''
பெரியவர் அமைதியானார். திருமால் மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை. வாசனின் மேல் தனது பார்வையைச் செலுத்தினார். வாசன் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பது போல இருந்தது. பெரியவர் திருமாலிடம் தனது தம்பி மகள் பாரதிதான் விபரங்கள் சொன்னாள் என திருமால் திருப்பி கேட்காமலே பதில் சொன்னார். திருமால் ஆர்வமுடன் கேட்டுக்கொண்டார். பெரியவர் எழுந்து சிறிது நேரத்தில் வருவதாக திருமாலிடம் சொல்லிவிட்டு நடந்தார். திருமால் வாசன் அருகில் வந்து அமர்ந்தார். வாசன் விழித்துப் பார்த்தான். பெரியவரைக் காணாது சுற்றி சுற்றிப் பார்த்தான். திருமாலை நேருக்கு நேராய் பார்த்தான்.
வாசன் காலை நகர்த்தினான். கால் விண்ணென்று வலித்தது. பக்கத்தில் மனிதர்களின் இரைச்சலில், பேருந்துகளின் சத்தத்தில் தான் எப்படி உறங்கினோம் என நினைக்கவே ஆச்சரியமாக இருந்தது வாசனுக்கு. திருமாலைப் பார்த்துக்கொண்டே இருக்க அவனது கண்களில் கண்ணீர் நிரம்ப ஆரம்பித்தது.
''என்னோட பெயர் திருமால், இருக்கும் ஊர் சென்னை. சொந்த ஊர் சாத்திரம்பட்டி''
அவனால் எதுவும் பேச இயலவில்லை. கைகள் கூப்பி வணங்கினான். கண்களில் நீர் கொட்டியது. தலையை குனிந்து கொண்டான். பெரியவர் திரும்பினார்.
''என்ன வாசா, இப்போ வலி எப்படி இருக்கு''
''ம்ம்''
''என்ன ஆச்சு?'' திருமால் கேட்டார்.
பெரியவர் நடந்ததை கூறினார். திருமால் வாசனின் காலினை அப்போதுதான் பார்த்தார். திருமால் வாசனின் தலையை நிமிர்த்தினார். கண்கள் சிவந்து இருந்தது. கன்னங்களில் கண்ணீர் கோடு வரைந்து பழகிக்கொண்டு இருந்தது. கண்களையும் கன்னங்களையும் துடைத்துக்கொண்டான் வாசன். திருமால் புன்னகை புரிந்தார்.
''என்னைப் பார்க்கனும்னுதானே நீ நினைச்சே, இதோ நானே வந்துட்டேன்''
''ம்ம்''
''என்னைப் பார்த்ததும் ஏன் அதிர்ச்சியாயிட்ட''
''ம்ம்''
''ஊருக்குப் போனதும் பேசட்டும், உடம்புக்கு சரியில்லை போல''
திருமாலிடம் பெரியவர் சொன்னார். பேருந்து வந்து நின்றது. மூவரும் பேருந்தில் ஏறிச் சென்றனர். பெரியவரும் திருமாலும் பேசிக்கொண்டே வந்தனர். வாசன் அமைதியாய் புன்னகை புரிவதோடு நிறுத்திக்கொண்டான். திருமலை நிறுத்தம் வந்ததும் இறங்கினார்கள். இறங்கும் போது வாசன் இம்முறையும் விழப்போனான். திருமால் தாங்கிப் பிடித்துக் கொண்டார். வாசனின் உடல் நடுங்கியது. திருமால் வாசனிடம் சொன்னார்.
''மாதவியை மதுரையில நான் பார்த்தேன், பெருமாள் தாத்தா எழுதின கடிதம்தனை அவகிட்ட கொடுத்து இருக்கேன் உன்கிட்ட கொடுக்கவும் கடிதம் வச்சிருக்கேன். நீ எதுவும் பேசமாட்டேன்றியே''
''ம், அப்புறமா பேசறேன்''
''சரி''
பெரியவர் சொன்னது போலவே நேராக பார்த்தசாரதி வீட்டிற்கு திருமால் செல்ல இசைந்தார். மூவரும் பார்த்தசாரதி வீட்டிற்குள் நுழைந்தார்கள். பார்த்தசாரதியின் பெற்றோர்கள் வரவேற்றனர். திருமால் வீட்டினைப் பார்த்தார். பூங்கோதையும் மற்றவர்கள் வீட்டினுள் நுழைந்தார்கள். வாசன் நடுக்கத்துடனே அமர்ந்து இருந்தான். திருமாலைப் பார்த்த பூங்கோதை வாசனின் அருகில் வந்து நின்று கொண்டாள். திருமால் அனைவருக்கும் அறிமுகப்படுத்தப்பட்டார். பெரியவர் உற்சாகமாக காணப்பட்டார். சந்தோசமாகப் பேசிக்கொண்டு இருந்தார்.
திருமண வாழ்த்து சொன்ன திருமால் பூங்கோதையைப் பார்த்தார். பூங்கோதை வாசனுக்குப் பின்னால் சென்று நின்றாள். கேசவனின் கைகளைப் பிடித்துக்கொண்டாள். திருமால் எழுந்து தான் டாக்டர் விஷ்ணுப்பிரியனை சந்தித்துவிட்டு பின்னர் வருவதாக கிளம்பியவர் வாசனிடம் உடன் வருமாறு கூறினார். சாப்பிட இங்கு வர வேண்டும் என கூறினார்கள். அவர்களுடன் பார்த்தசாரதியும் உடன் சென்றார். வாசலில் கால் வைத்த திருமால் மீண்டும் பூங்கோதையைப் பார்த்தார். பூங்கோதை கேசவனின் கைகளை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டாள். புன்னகைத்துக்கொண்டே திருமால் நடக்கலானார்.
விஷ்ணுப்பிரியன் வீட்டுக்கு வந்தார்கள். பார்த்தசாரதி வீட்டுக்குள் வராமல் கடைக்குச் செல்வதாக கூறி விடைபெற்றுக்கொண்டார். சுபாவும் விஷ்ணுப்பிரியனும் திருமாலையும் வாசனையும் வரவேற்று அமரச் சொன்னார்கள். அறிமுகத்துடன் நலம் விசாரித்து முடிந்த மறு நிமிடம் திருமால் கேட்டார்.
''பெருமாள் தாத்தா பற்றிய குறிப்புகளை கொஞ்சம் எடுத்துட்டு வரமுடியுமா?''
விஷ்ணுப்பிரியன் திகைத்தார். வாசன் திருமாலை ஆச்சரியமாகப் பார்த்தான். சுபா வேகமாக சென்று பெருமாள் தாத்தா பற்றிய குறிப்புகள் கொண்டு வந்து திருமாலிடம் தந்தார். திருமால் ஒவ்வொரு பக்கங்களாய் புரட்டினார்.
''நீங்க நினைச்சது நடந்துரும்ல, நடக்கத்தான் வேணும் இல்லையா''
''எதை சொல்றீங்க நீங்க''
''பெருமாள் தாத்தாவை மறுபடியும் உருவாக்க நினைச்சது மட்டுமில்லாம, பூங்கோதைக்கும் கேசவனுக்கும் குழந்தை உண்டாக்கி இரட்டை குழந்தையா பிறக்க வைக்க நினைச்சது''
சுபா விஷ்ணுப்பிரியனை கோபத்துடன் பார்த்தாள். மாதவி வாசனின் மனதில் வந்து போனாள். விஷ்ணுப்பிரியன் அமைதியானார். பதில் சொல்லவில்லை. சுபாவிடம் பெருமாள் தாத்தாவின் குறிப்புகளைத் திருப்பித் தந்தார். பின்னர் விஷ்ணுப்பிரியனை தன்னுடன் திருமலைக் கோவிலுக்கு வருமாறு அழைத்தார். விஷ்ணுப்பிரியனுடன் வாசனும் உடன் கிளம்பினான். சுபாவிற்கு பயமாக இருந்தது. அவர்கள் வெளியேறியதும் பார்த்தசாரதிக்கு தகவல் தெரிவித்தாள். மூவரும் திருமலைக் கோவில் வாசல் அடைந்தார்கள். தீபம் பிரகாசமாக எரிந்து கொண்டிருந்தது. திருமால் விஷ்ணுப்பிரியனிடம் எதுவும் பேசாமல் வந்தவர் கோவிலுக்குள் நுழையும் முன்னர் வாசலில் நின்றே கேட்டார்.
''நீங்க நினைச்சது நடக்குமா டாக்டர்?''
''தெரியலை, பொறுத்திருந்துதான் பார்க்கனும்''
விஷ்ணுப்பிரியன் அமைதியாகவே பதில் சொன்னார். திருமால் கலகலவென சிரித்தார். வாசனும் உடன் சிரித்தான். கோவில் மணி ஒலிப்பது போல் இருந்தது. விஷ்ணுப்பிரியனுக்கு கலக்கமாக இருந்தது.
(தொடரும்)