Saturday, 2 October 2010

ஏமாற்றிய எந்திரன் - திரை விமர்சனம்

அவதார் படம் வெளியாகி ஒரு வாரம் கழித்து அந்த படம்தனை பார்க்க சென்றபோது அரங்கு நிறைந்து விட்டது என டிக்கட் கிடைக்காமல் அடுத்த காட்சிக்கு பதிவு செய்துவிட்டு திரும்பினோம். வீட்டில் இருந்து நடந்து செல்லும் தொலைவுதான் திரையரங்கம்.

அதே திரையரங்கில் எந்திரன். முன் பதிவு செய்துவிட்டோம். ஆனால் சில காரணங்களால் படம் ஆரம்பிக்கும் நேரத்திற்கே சென்றோம். மக்கள் நிறைந்து இருக்கும் திரையரங்க வளாகத்தில் டிக்கட் வாங்கும் வரிசையில் வெகு சிலரே இருந்தார்கள். ஆச்சர்யமாக இருந்தது. எவரையும் காணவில்லையே என நினைத்து மேலே சென்றோம். அங்கேயும் ஆச்சர்யப்படும் வகையில் எவரும் இல்லை.

பொதுவாக இந்த திரையரங்கில் படம் ஆரம்பிக்கும் நேரத்திற்கு படம் ஆரம்பிக்காது. விளம்பரங்கள் என பத்து பதினைந்து நிமிடங்கள் மேல் ஆகிவிடும். சரி என திரையரங்கில் நுழைந்தால் அரங்கு நிரம்பி இருந்தது. முன் வரிசை மட்டுமே காலியாக இருந்தது.

திரைக்கு மிக அருகில் படம் பார்ப்பது என்பது 'தரை டிக்கட்' விட மோசமாக இருக்கும். அதுவும் சவுண்ட் சிஸ்டம் வேறு பாடாய்படுத்தும். ஆங்கில படங்களுக்கு இடைவேளை விடாதவர்கள் தமிழ் படத்துக்கு இடைவேளை சரியாக விடுவார்கள். இங்கே இருக்கை எண் எல்லாம் கிடையாது. முதல் செல்பவர்களுக்கே முதல் உரிமை. இருக்கையில் அமர்வதில் முதல் ஏமாற்றம்.

நாங்கள் சென்று அமர்ந்த பின்னும் விளம்பரம் ஓடிக் கொண்டிருந்தது. காலியாய் இருந்த இருக்கைகளும் நிறைந்துவிட்டது. படம் ஆரம்பித்தது. மிகவும் வித்தியாசமாக இருந்தது. முதல் பாதி வரை மிகவும் கலகலப்பாகவும், ரசிக்கும்படியாகவும் காட்சி அமைப்புகள் இருந்தது.

தமிழ் படம் மட்டுமல்ல, எந்த ஒரு படத்திலும் லாஜிக் பார்ப்பது மிகவும் தவறு. ஒரு படைப்பாளியின் கற்பனையானது எந்த அளவுக்கு மனிதர்களை நம்பும் அளவுக்கு செய்கிறது என்பது அந்த படைப்பாளியின் கற்பனைக்கு கிடைக்கும் வெற்றி. அப்படிப்பட்ட வெற்றி தரும் கற்பனையை நமது கண்ணுக்கு முன்னால் கொண்டு நிறுத்துகிறார்கள்.

அவதார் எனும் படத்தின் கதை கூட சாதாரணமானதுதான். எடுக்கப்பட்ட விதம் பிரமிக்க வைத்தாலும் நான் அந்த திரையரங்கில் படம் பார்த்தபோது ஒருவர் குறட்டைவிட்டு தூங்கும் அளவுக்கு வைத்த படம் அது. மேலும் படம் முடிந்துவிட்டதா என ஒரு கட்டத்தில் எழ வேண்டிய நேரம் என நினைக்கும்போது படம் மீண்டும் தொடர்கிறது. ஆனால் முதல் பாதி எந்திரனில் எந்தவித சங்கடங்களும் இல்லை. ரோபோவை நாம் கிரகிக்கும் நிலைக்கு பாமரர்களையும் அழைத்து செல்லும் இந்த எந்திரன் தமிழ் படத்துக்கு மிகவும் வித்தியாசமான ஒன்று.

கால்பந்தாட்ட போட்டியில் முதல் பாதி, இரண்டாம் பாதி இருக்கும். முதல் பாதியில் இருக்கும் வேகம் இரண்டாம் பாதியில் இருக்காது. அல்லது இரண்டாம் பாதியில் இருக்கும் வேகம் முதல் பாதியில் இருக்காது. இரண்டு பாதியிலும் விறுவிறுப்பாக விளையாடுவது மிகவும் சாதாரணமாகவே இருக்கும். அதைப்போலவே இரண்டாம் பாதியின் தொடக்கம் ஒரு மந்தமாகவே இருந்தது.

இரண்டாம் பாதியில் அதீத கற்பனையின் விளைவினால் செயற்கைதனத்தை அதிகமாகவே உணர முடிகிறது. கொசு காட்சிதனை  நகைச்சுவையாக காட்ட முற்பட்டாலும் சகிக்க இயலவில்லை. ஒரு ரோபோதனை எதிரியாக பாவிக்க கொஞ்சமும் மனம் இடம் தரவில்லை. இன்னும் சிறப்பாக கொண்டு சென்று இருக்கலாம். அதேவேளையில் இரண்டாம் பாகத்தில் காட்டப்படும் பிரமாண்டம் தமிழ் சினிமாவுக்கு 'பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்த்தமாதிரி' என்பது போல இருந்தது. ஆனால் இங்கே தொலைகாட்சியில் சிறுவர் நிகழ்ச்சியில் காட்டப்படும் நிகழ்ச்சிகள்தனை பெரிது படுத்தி காட்டுவது போல தான் தெரிந்தது.  'கிராபிக்ஸ்' என வரும்போது சில விசயங்கள் மனதோடு அமர மறுத்துவிடுகிறது.

இன்னும் இன்னும் சிந்தித்து கதையின் வேகத்தை அதிகரித்து இருந்து இருக்கலாம். காதல் வந்துவிட்டால் நட்டு கழன்று விடுவதாக கடைசியில் காட்டி இருப்பது மிகவும் யதார்த்தம். இது படத்துக்கும் பொருந்தும் தான். அறிவியல் விசயத்தை அழகாக சொல்லாமல் பிரமாண்டம் மூலம் சொதப்பி விட்டீர்கள். எத்தனை பிரமாண்டமாக படம் எடுக்கிறார்கள் என்பதல்ல, எப்படி ஒரு விசயத்தை சொல்கிறார்கள் என்பதில் இருக்கிறது படத்தின் வெற்றி.

எந்திரன் ஏன் கலைக்கப்பட்டான் என்றான்  படம் பார்த்த என் மகன். அறிவியல் அழிவுக்கு மட்டும் என உலகம் பார்க்கும் பார்வையின் வரிசையில் இந்த எந்திரனும் சேர்ந்து ஏமாற்றி விட்டுப் போனது துரதிர்ஷ்டமே.

ரஜினியின் கண்கள் திரையில் கலங்கியது. எனது கண்கள் உண்மையிலே கலங்கியது. வாழ்த்துகள் சங்கர். அருமையாக நடித்து இருக்கிறீர்கள் ரஜினி. பாராட்டுகள்.

அருகில் அமர்ந்து இருந்ததால் சண்டை காட்சிகளில் இதயத்தையே வெடித்துவிட வைக்கும் போன்ற இசை. இருப்பினும் இசை மிகவும் பிடித்து இருந்தது. பாடல்கள் ரசிக்கும்படியாக இருந்தது அருமை. இசை அமைப்பாளர்களுக்கு, கவிஞர்களுக்கு பாராட்டுகள். மொத்தத்தில் ஒரு பிரமாண்டமான தமிழ் படத்திற்கு எந்திரன் பட குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்.

தமிழன் என்று சொல்லடா; தலை நிமிர்ந்து நில்லடா. இந்த வரிகள் ஒரு காட்சியில் காட்டப்படும். சினிமாவில் மட்டுமல்ல ஒவ்வொரு விசயத்திலும் தமிழன் உலக அரங்கில் பேசப்படும் நாள் தான் உண்மையான பிரமாண்டம். அந்த நிலையை அடைய நமது தொழிலும் நாம் பிரமாதமாய் உழைப்போம்.

நன்றி.

Friday, 1 October 2010

கம்யூனிசமும் கருவாடும் - 4

'நமது வாழும் காலத்தில் நம்மையும், நம்மை சுற்றியுள்ளவர்களின் எண்ணங்களையும் நம்மால் சரியாக புரிந்து கொள்ள முடிவதில்லை. நமக்கு என்ன கொள்கை, நாம் கொள்கையில் கொண்டிருக்கும் உறுதிப்பாடு என்ன என பல விசயங்கள் நமக்கு உறுதியாக தெரிவதில்லை.

 பல நேரங்களில் நமது கொள்கைகளுக்கு நாம் மாறாக நடக்கப்படவேண்டிய கட்டாயத்துக்கு நம்மை காலம் தள்ளிவிடுகிறது அல்லது அப்படிப்பட்ட காலத்தில் நாம் நம்மை தள்ளிவிடுகிறோம்.  நமது எண்ணங்களுக்கு நேர்மையாக நாம் நடப்பது என்பது அத்தனை எளிதான காரியமல்ல என்பதை ஒவ்வொரு மனிதரும் தெரிந்தே வைத்து இருக்கிறார்கள். இருப்பினும் கொள்கை வீரர்களாக நம்மை வெளி உலகிற்கு காட்டுவதற்கு நாம் செய்யும் கயமைத்தனங்கள் வெளித்தெரிவதில்லை என்பதுதான் நமக்கு இருக்கும் பலமும், பலவீனமும்

இப்படிப்பட்ட நிகழ்கால வாழ்க்கையையே ஊர்ஜிதம் செய்ய முடியாமல் நாம் வாழும் வாழ்க்கையில் இறந்த காலத்தில் வாழ்ந்தவர்களின் கொள்கைகளை, அவர்கள் உண்மையிலேயே என்ன நினைத்தார்கள், என்ன விசயத்தை செயல்படுத்த நினைத்தார்கள் என நமக்கு கிடைத்திருக்கும் தகவல்களின் அடிப்படையில் நாம் செயல்படுவது அறிவுடைமையா என்பதை ஒவ்வொரு மனிதரும் சிந்தித்து பார்த்தல் அவசியம்

'சக மனிதர்களை, சக ஜீவராசிகளை அன்புடன் நடத்துவது' என்பதை தவிர இந்த உலகில் எந்த ஒரு கொள்கையும் பெரிய கொள்கை கிடையவே கிடையாது என்பதை ஒவ்வொரு மனிதரும் தமது மனதில் நிலை நிறுத்திக் கொள்வது அவசியம். அன்பு என வரும்போது அங்கே எந்த ஒரு தவறுக்கும் வாய்ப்பு இருக்காது என்பது மறுக்கப்பட முடியாத உண்மை.

சீன பழமொழி ஒன்று உண்டு. ஒருவர் முதலில் சொன்ன விசயம் கடைசி நபரை அடையும்போது அந்த விசயம் முற்றிலும் மாறுபட்டு இருக்குமாம். இந்த பழமொழி சொல்வது உண்மைதானா என்பது கூட சிந்திக்க வேண்டிய விசயம்.

அப்படிப்பட்ட சமூகம் உடைய இந்த பூமியில் முன்னால் நடந்த விசயங்களை நாம் புரிந்து கொள்ளும் பொருட்டு நாம் படித்து அதை அறிந்து கொள்வதும், அதனை மொழிபெயர்ப்பு செய்யும் போது ஏற்படும் கருத்து சிதைவுகள் எத்தகைய விளைவுகளை கொண்டு வந்து சேர்க்கும் என்பதையும் அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். 'சுய சிந்தனை இல்லாத எந்த ஒரு மனிதருமே கொத்தடிமைகள்தான்'. நமக்கு முன் வாழ்ந்தவர்கள் எந்த சூழலில் வாழ்ந்தார்கள் என்பதையும் நாம் வாழும்போது நாம் எந்த சூழலில் வாழ்கிறோம் என்பதும் தெரிந்து கொள்ளப்பட வேண்டிய ஒன்று

இதன் காரணமாக 'அன்பை அடிப்படையாக வைத்து கொள்ளாத எந்த ஒரு அமைப்பும், அரசியல் சட்டமும் புறக்கணிக்கப்பட வேண்டியவை'

இனி கம்யூனிசம் சிந்தனை பற்றி மட்டுமே இந்த தலைப்பில் கீழ் வரும் பதிவுகள் பேசும் என்பதை உறுதி செய்கிறேன்.

இந்த கம்யூனிசம் சிந்தனை தோன்றியது எவ்வாறு?

1836ல் ஜெர்மானிய தொழிலாளர்களால் பாரிஸ் நகரத்தில் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது.   இந்த அமைப்பின் தாரக மந்திரம் 'எல்லா மனிதர்களும் சகோதரர்கள்' என்பதாகும். இந்த அமைப்பின் நோக்கம் பூமியில் கடவுளின் ராஜ்யத்தை அன்பு, நீதி, சமத்துவம் என்பதன் மூலம் நிறுவுவது.

இந்த அமைப்பானது உருவானதற்கு ஒரு கருப்பொருளாக இருந்தவர் கிராக்கஸ் பெபியுப் என்பவராவர். இவர் பிரெஞ்சு நாட்டின் புரட்சிக்கு காரணமானவர்.

(தொடரும்)