Tuesday, 10 August 2010

அடியார்க்கெல்லாம் அடியார் 26

சற்று தொலைவில் வரும்போதே தனது நெற்றியில் உள்ள திருநீரை அழித்தான் கதிரேசன். ''என்ன பண்ற'' என்றாள் வைஷ்ணவி. ''பழக்க தோஷத்தில திருநீரு வைச்சிக்கிட்டேன்'' என்றான் கதிரேசன். ''பழக்கம்னு வந்தாலே எல்லாம் தோஷமாப் போறதுண்ணா'' என்றாள் சிரித்துக்கொண்டே. முகத்தை நன்றாகத் துடைத்தான்.

சமணர் கோவிலின் வாசலை அடைந்ததும் ''எப்படியிருக்க, எப்போ வந்தே'' என்றான் கதிரேசன் மதுசூதனனை நோக்கி. ''நான் வந்து அரைமணி நேரம் ஆச்சு, சொன்ன நேரத்துக்கு வரமாட்டியா'' என்றான் மதுசூதனன் சற்று கோபமாகவே. ''இவளோட வீடுதான் தெரியுமே உனக்கு, அங்க வரவேண்டியதுதான, இங்கேயே நிற்காம'' என்றான் கதிரேசன். ''அவளா என்னைக் கூப்பிட்டா?, அவ வீட்டுக்குக் கூப்பிட்டு இருந்தா நான் வந்திருப்பேன்'' என்றான் மிகவும் கோபத்துடன். ''நீ என் வீட்டுக்கு நான் கூப்பிட்டுத்தான் வரனும்னு இல்லை, நீ என் மேல அன்பு வைச்சிருந்தா எப்பவும் வரலாம்'' என சொன்னாள் வைஷ்ணவி.

''வா கடையில பழச்சாறு குடிச்சிட்டுப் பேசலாம்'' என அழைத்தான் கதிரேசன். கதிரேசனின் கண்கள் கோவிலைச் சுற்றியது. மிகவும் சின்ன கோவில். உள்ளே சிலர் அமர்ந்து இருந்தார்கள். ''நீ கூப்பிட்டேனு வந்தேன், நீ என்கிட்ட சொன்னமாதிரி இன்னும் வைணவத்துக்கு மாறலையே, அதுக்கான அறிகுறி உன் முகத்தில தெரியலையே'' என்றான் மதுசூதனன்.  வைஷ்ணவி மதுசூதனனின் வார்த்தை புரியாமல் பார்த்தாள்.

அருகிலிருந்த கடையில் சென்று பழச்சாறு குடித்தார்கள். ''எப்போ நீ வைணவத்துக்கு மாறுவ'' என்றான் மதுசூதனன் கோபம் மறைவது போல் மறைந்திருந்தது. ''இதோ இப்பவே'' என அருகிலிருந்த கடையில் குங்குமம் வாங்கினான். தண்ணீரில் குழைத்தான், நேராக ஒற்றை ராமம் இட்டான். ''இதோ நான் வைணவம்'' என்றான் கதிரேசன்.  ''நாமக்கட்டி வாங்கு, அதையும் போடு'' என்றான் மதுசூதனன். ''இது மட்டும் போதாது நீ இனிமே சிவனை வணங்கவே கூடாது, பெருமாளை மட்டுமே வணங்கனும் பெருமாளேனு தான் பாடனும், இதை மீறினா உன்கிட்ட நான் பண்ணின சத்தியம் எல்லாம் ஒரு தூசு'' என்றான் மதுசூதனன். வைஷ்ணவிக்கு விபரம் புரிந்தது. மிகவும் கோபமானாள்.

''என்ன பைத்தியக்காரத்தனம் இது கதிரேசா'' எனச் சத்தமிட்டாள். ''என் சிவன் என்னை ஏத்துப்பார், வைஷ்ணவி, மதுசூதனன் உன்மேல அதிக பிரியம் வைச்சிருக்கான், உனக்குத் தெரியும், நீயும் அவன் மேல பிரியம் வைச்சிருக்க'' என நிறுத்தினான். ''அதுக்காக நீ இப்படி மாறுவியா'' என்றாள் வைஷ்ணவி. கதிரேசன் மெளனமானான். ''இங்க பாரு வைஷ்ணவி அவன் இனிமே வைணவம், அவன் பேச்சை மீறினானு வைச்சிக்கோ உன்னைத் தூக்கி எறிஞ்சிட்டுப் போயிட்டே இருப்பேன்'' என்றான் மதுசூதனன். ''நீ என்னடா தூக்கி எறியறது, இப்படி காரணம் காட்டி காதல் பண்ற உன்னை நானே இப்பவேத் தூக்கி எறியறேன், இனிமே ஏதாவது தொந்தரவு பண்ணின அப்புறம் நீ உன் டிகிரியை முடிக்கவே முடியாது படுபாவி'' என  சொன்னாள்.

கதிரேசன் தலைகுனிந்து நின்றான். ''எல்லாம் உன்னாலதான் வந்தது'' என கதிரேசனின் கன்னத்தில் ஓங்கி அறைந்து ''நம்ப வைச்சா கழுத்தறுக்கிற'' என்றான் மதுசூதனன். கோபத்தின் உச்சியில் இருந்தான் அவன். ஒரு நிமிடம் உறைந்து போனாள் வைஷ்ணவி. ''இப்போ ஏன்டா அவனை அடிச்ச'' என ஓங்கி ஒரு அறை விடப் போனாள் மதுசூதனனை. ''வேண்டாம் வைஷ்ணவி'' என தடுத்தான் கதிரேசன். ''நீ எல்லாம் வைணவப் பொண்ணா, ஆம்படையானை அடிக்க வறேள், இனிமே என்கூட நீ பேசின'' என காலால் தரையை உதைத்துவிட்டுக் கிளம்பினான். ''நில் மதுசூதனா'' என்றான் கதிரேசன். நின்றான் மதுசூதனன்.

''நீ கொடுத்த சத்தியத்தை மீறாதே'' என்றான் கதிரேசன். ''அவளை முதல்ல வைணவப் பொண்ணா இருக்கச் சொல்லு'' என்றான் மதுசூதனன். மதுசூதனனை நோக்கி ''நீ முதல்ல மனிசனா இருடா'' என்றாள் வைஷ்ணவி. ''நீ ரொம்ப பேசற'' என கையை உயர்த்திக் காட்டிய மதுசூதனன், ''நீ வைணவப் பொண்ணுனுதான் காதலே பண்ணினேன், நீ எப்ப வைணவப் பொண்ணா இருக்கியோ அப்பதான் என்னால உன்னோட வாழ முடியும்'' எனச் சொல்லிவிட்டு விறுவிறுவென நடந்தான்.

''போடா போ, உன்னை மாதிரி மதம் பிடிச்சி அலையறவன்களைவிட மனுசத் தன்மையுடையவங்களோட என்னால நல்லாவே வாழ முடியும், வாழ்ந்து காட்டுறேன்டா'' என வைஷ்ணவி கூறினாள். நடந்தவனை நிறுத்தப் போன கதிரேசனின் கைகளை முதன்முதலில் பிடித்து நிறுத்தினாள் வைஷ்ணவி. ''அவன் போகட்டும், உனக்கு அவன் அடிச்சது வலிக்கலையா?, நீ பேசாம தடுக்காம இருந்திருந்தா அவன் ரெண்டு கன்னத்தையும் பதம் பார்த்துருப்பேன், இப்படியெல்லாம் உன்னை பண்ணச் சொன்னது எது, ஏன் இப்படி நடந்துக்கிற, என்னோட வாழ்க்கையை நான் தீர்மானிச்சுக்குவேன் நீ இப்படி இருக்காதே'' என்றாள் வைஷ்ணவி.

கதிரேசன் மிகவும் கவலையடைந்தவனாகக் காணப்பட்டான். ''வா சமணர் கோவில் போவோம்,  அப்படியே அந்த நாமத்தையும் அழி. உன்கிட்டதான் நேத்துத் தெளிவா சொன்னேனே ஏன் இப்படி அவனை இங்க வரவைச்சி, என்ன கதிரேசா இதெல்லாம், எதிலயும் ஒரு தெளிவு வேணும், தைரியம் வேணும், ஒரு முடிவு எடுத்தா அதில உறுதியா இருக்கனும் இது ஒரு வாழ்க்கை, ஒரே ஒரு வாழ்க்கை.

நமக்காக வாழறமாதிரி பிறருக்காகவும் வாழனும் அதுதான் வாழ்க்கையோட உண்மை அர்த்தம், அடுத்தவங்களுக்கு வாழறேனு நம்முடைய வாழ்க்கையைத் தொலைச்சிட்டு வாழுறவங்க மகான்கள் ஆகமுடியாது. எந்த மகான்களும் அடுத்தவங்களுக்காக மட்டுமே வாழவே இல்லை, அதைத் தெரிஞ்சிக்கோ முதல்ல, தன்னுடைய உயரிய நோக்கத்துக்கு வாழ நினைச்சவங்களுக்கு மத்தவங்க கருவியாத்தான் இருந்தாங்க, நீ இப்படி மாறினது எனக்கு சுத்தமாப் பிடிக்கல'' என்றாள். வைஷ்ணவியின் பேச்சைக் கேட்டவன் மனதில் இருந்த கவலை பறந்தது. ''நாமத்தை நீ போட்டுக்கிட்டாலும் உன் மனசில சிவன் தான் இருக்காருனு எனக்குத் தெரியும், அழி முதல்ல'' என்றாள்.

கோவில் அருகே சென்றனர். சமணர்கள் நிர்வாணமாகத்தானே இருப்பார்கள் எனக் கேட்ட கதிரேசனைப் பார்த்து, ''மனம் நிர்வாணமாக இருந்தவங்களை, இப்ப இருக்கிறவங்க என்னமோ நேரில பார்த்தமாதிரி அவங்க ஆடையில்லாம நிர்வாணமாகத்தான் இருந்தாங்கனு சொன்னது சிரிப்பாத்தான் இருக்கும், ஆனா சித்தர்கள், முக்தர்கள், முனிவர்கள்னு ஆடையெல்லாம் அணியாமத்தான் இருந்தாங்க, அது மனசு நிர்வாணமா இருந்ததுதான் காரணம்'' என சொன்னதும் ''உள்ளே வாங்க'' என ஒருவர் அன்புடன் அவர்களை கோவிலுக்குள் அழைத்தார்.

(தொடரும்)

Friday, 6 August 2010

ரஜினியை மறந்த ஐஸ்வர்யாராய் பச்சன்

என்னைக்கு படம் வரும், என்னைக்கு பாட்டு கேட்க முடியும் என இருந்த காலங்கள் எல்லாம் மாறி போயின.

உடனுக்குடன் எங்கோ நடப்பதை எங்கோ இருந்து நேரடியாகவே காண முடிகிறது. தகவல் தொழில்நுட்பத்தின் இந்த முன்னேற்றம் மிகவும் பாராட்டுக்குரியது.

எப்போதும் போலவே பெரும்பாலான எளியோர், வறியவர் எல்லாம் அந்த நிலையில் மட்டுமே இருக்கிறார்கள். அவர்களுக்கு அந்த வாழ்க்கை மட்டுமே பிடித்து போனதா? அல்லது வாய்ப்புகளை உருவாக்கி கொள்ள தவறிவிட்டார்களா? வாய்ப்பு இருந்தும் புறக்கணிக்கப்பட்டார்களா?

ரஜினி எனும் மனிதர் உழைப்பால் முன்னேறி இருக்கிறார். அவர் எடுத்துக்கொண்ட தொழில் அதிக பணம் ஈட்டும் தொழில். ஆனால் அந்த தொழில் கூட அனைவராலும் அதிக பணம் ஈட்ட முடிவதில்லை. துணை நடிகராகவே வாழ்ந்து முடித்தவர்கள் பலர். நடிக்க முடியாமல் நீடிக்க இயலாமல் ஒதுங்கி போனவர்கள் பலர். ரஜினியின் வெற்றிக்கு ரஜினி மட்டுமே காரணமல்ல என்பதை ரஜினி நன்றாகவே தெரிந்து வைத்து இருக்கிறார்.  ரஜினியை விட அதிக உழைப்பை சிந்தியும் எந்த நிலையிலும் முன்னேற இயலாமல் வாடி வரும் விவசாய மக்களை பார்த்து உழைப்பால் முன்னேறலாம் என சொன்னால் 'கையும் காலும் தானே மிச்சம்' என இவர்களது வாழ்க்கையை பாடி வைக்கத்தான் இயலும்.

ஒரு திரைப்படத்திற்கு அனுமதி சீட்டு வாங்கும்போது விலைவாசி எல்லாம் கண்ணுக்குத் தெரிவதில்லை. அதே வேளையில் தக்காளி விலை ஒரு பத்து பைசா அதிகம் எனில் அரசுதனை திட்டாமல் எவரும் இருந்ததில்லை.

லாபம் கிடைக்கும் விசயத்தில் மட்டுமே வியாபாரிகள் வியாபாரம் செய்வார்கள் என்பது மறுக்க முடியாத நியதி.  எந்திரன் எனப்படும் திரைப்படத்திற்கு செலவழிக்கப்பட்ட பணம் தனை நினைத்தால் பல விவசாயிகள் மயக்கம் போட்டு விடுவார்கள். கூட்டுறவு வங்கி மூலம் கடன் அவர்களுக்கு கிடைப்பதே பெரிய விசயம். இதைப்  போலவே வெளிநாடுகளில் எடுக்கப்படும் பல திரைப்படங்களின் செலவு பல்லாயிரம் கோடிகள். இந்த பணம் எல்லாம் எப்படி வசூல் ஆகிறது. மக்கள். மக்கள். மக்கள். இந்த திரைப்படங்களை மக்கள் புறக்கணித்தால் என்ன ஆகும்? ஆனால் மக்கள் புறக்கணிக்கமாட்டார்கள். காரணம் மிகவும் எளிது. கற்பனையினிலும், கனவுகளிலும் சஞ்சாரிக்கும் மக்கள் மிக மிக அதிகம். மேலும் அன்றாடம் உழைத்து வாழும் மக்களுக்கு இந்த திரைப்படம் ஒரு பொழுது போக்கு சாதனமாக திகழ்கிறது.  மக்கள் சக்தி என்பது எத்தனை பெரிய சக்தி. மக்களின் விருப்பத்தை நாம் குறை கூற இயலாது. கேளிக்கை, விளையாட்டு என நமது கவனம் அதிகமாகவே இருக்கத்தான் செய்யும்.

தற்போது வெளியிடப்பட்ட எந்திரன் இசை, பாடல் வெளியீடு பலரின் கவனத்தை ஈர்த்தது என்றால் மிகையாகாது. மிகவும் பிரமாண்டமாகவே நடத்தப்பட்டு இருக்கிறது. எந்திரன் குழுவினருக்கு வாழ்த்துகள். இதில் ரஜினியின் பேச்சு மிகவும் எளிமையான பேச்சு. வெற்றியை தக்க வைத்து கொள்வது என்பது அத்தனை எளிதல்ல என்பதை நன்றாகவே உணர்ந்து இருக்கிறார். எத்தனை கோடிகள் போட்டு படம் எடுத்தாலும் மக்கள் நினைத்தால் ஒன்றுமே இல்லாமல் போய்விடும் என்பதையும் அறிந்து வைத்து இருக்கிறார்.

ஐஸ்வர்யாராய் பேசும்போது அனைவருக்கும் நன்றி சொன்னவர், ரஜினியை மறந்தே போனார். அவரது பேச்சின் இடையில் ஒரு விசயம் சொல்லிவிட்டு நான் சொல்வதை ஒப்பு கொள்வீர்கள்தானே ரஜினி சார் என குறிப்பிட்டார். அதனால் ரஜினிக்கு நன்றி சொல்லிவிட்டோமோ என நினைத்தாரோ என்னவோ. ரஜினியை மட்டும் விட்டுவிட்டு அனைவருக்கும் நன்றி சொல்லிவிட்டு கிளம்பியவரை விவேக் நினைவு படுத்தினார் போலும். திரும்ப வந்தவர் ஆரம்பித்த விதம் 'அட' என சொல்ல வைத்தது. சாதனையாளர்கள் தங்கள் தவறுகளை மிகவும் எளிமையாக சமாளித்து விடுகிறார்கள்.

வெற்றியாளர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியது நம்மில் பலருக்கு நிறையவே இருக்கும். எவரிடமும் கற்று கொள்ள தேவை இல்லாதது நன்றி மறவாமல் இருப்பது. நமக்கு உணவுக்கு வழி செய்து தரும் விவசாயிகளுக்கு நாம் நன்றி உடையவர்களாக இருப்போம். அவர்களுக்கு நம்மாலான உதவிகள் கிடைக்க வழி செய்வோம்.