Friday, 30 July 2010

வாசகர் கடிதங்களை பொதுவில் வைக்கலாமா?

எனக்கு நீண்ட நாட்களாக தீர்க்க முடியாத சந்தேகம் ஒன்று இருந்து வருகிறது.

வாசகர் கடிதங்களை பொதுவில் வெளியிட்டு அதற்கு பதில் தெரிவிப்பது சரியான முறையா?

வாசகர்கள் எப்படி தனியாய் நேரம் ஒதுக்கி நமக்கு தனியாய் எழுதுகிறார்களோ அதைப் போல நாமும் அவர்களுக்கு நேரம் ஒதுக்கி எழுதுவதை தனியாய் அனுப்புவதுதான் சரியா?

சில வாசகர்கள் தங்களது எண்ணங்களை பொதுவில் வைக்க விரும்புவதில்லை என்பதால் மட்டுமே தனிப்பட எழுதி அனுப்புகிறார்கள் என்பதை எவரேனும் உணர்ந்து இருக்கிறார்களா?

மேலும் பின்னூட்ட மட்டுறுத்தல் வைத்திருப்பவர்கள் உண்மையிலேயே வந்திருக்கும் பின்னூட்டங்களை படித்துதான் வெளியிடுகிறார்களா?

எவரும் கருத்து தெரிவிக்கலாம் எனும் வாய்ப்பு இருப்பதால் அதனை முறை கேடாக பயன்படுத்தும் நபர்களின் பின்னூட்டங்களை தைரியமாக நீக்கும் பண்பு உண்டா அல்லது அந்த முறைகேடுகளையும் சிரித்து வாசிக்கும் பண்புதான் நீடிக்கிறதா?

வாசகர்களே உங்கள் எண்ணங்கள் பல எழுத்தாளர்களின் எள்ளல்களுக்கு உள்ளாகி இருப்பதை எப்போதேனும் நினைத்து பார்த்தது உண்டா?

எனது கருத்துதனை சொல்கிறேன் என விழலுக்கு நீர் பாய்ச்சுதலை இனிமேலாவது தவிர்த்து விடுங்கள் வாசகர்களே.

Thursday, 29 July 2010

இனிமேல் நீங்கள் பின்னூட்டம் இட இயலாதே

ஒரு வலைப்பூ வைத்திருந்தால் அதற்கு கட்டாயம் பின்னூட்டம் எழுதும் வாய்ப்புதனை வைத்திருக்க வேண்டும், இல்லையெனில் அது ஒரு வலைப்பூவே அல்ல.

                                                 - ஆங்கில வலைப்பதிவர்

வலைப்பூ அங்கீகாரம்தனை இன்றுமட்டும்  எனது வலைப்பூ இழக்கிறது. :)

அடியார்க்கெல்லாம் அடியார் 25

வைஷ்ணவியும் கதிரேசனும் பல விசயங்களைப் பேசினார்கள். பேசிக் கொண்டிருந்ததில் நடு இரவும் தாண்டியது. டார்வின் பற்றிய பேச்சு அதிகமாக இருந்தது. வைஷ்ணவி சொன்ன விசயங்கள் கதிரேசனுக்கு ஆச்சரியமாக இருந்தது.


''டார்வின் சொன்ன விசயங்களை யாருமே ஏற்றுக்கொள்ளாதிருந்தார்களாம். அப்பொழுது டார்வின் தன்னைப்போலவே ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் தனது நண்பருக்கு தனது கருத்துக்களை பரிமாறிக்கொண்டே இருந்தாராம். அப்பொழுது அந்த நண்பர் டார்வின் சொன்ன ஒரு முக்கியமான விசயத்தைப் படித்ததும் 'அடடே எனக்குத் தோணாமல் போய்விட்டதே' என சொல்லி டார்வினைப் பாராட்டினாராம்.

இருப்பினும் டார்வின் தனது கண்டுபிடிப்புகளையெல்லாம் எழுதி ஒரு இடத்தில் ஒளித்து வைத்தாராம். ஏனெனில் அந்த காலகட்டத்தில் வெளியிட்டால் மதத்தினரால் பெரும் பிரச்சினைகள் எழக்கூடும் என எண்ணி தனது மனைவிக்கு ஒரு குறிப்பு எழுதி வைத்திருந்தாராம், தான் இறந்த பிறகு அனைத்தையும் வெளியிட வேண்டும் எனவும் கேட்டிருந்தாராம்.

நிலைமை இப்படியிருக்க டார்வினின் நண்பர் தான் கண்டுபிடித்த விசயங்களை மட்டுமே வெளியிட முயற்சி செய்து வந்தாராம். இதை அறிந்த டார்வின் தான் முதலில் வெளியிடவில்லையெனில் தனது கண்டுபிடிப்புகள் எல்லாம் அர்த்தமற்றதாகிவிடும் என வெகுவேகமாக நண்பருக்கு முன்னரே வெளியிட்டாராம். அப்படி அவர் ஒருவேளை வெளியிடாது போயிருந்தால் இன்று டார்வின் என்ற பெயர் உலகத்தில் எப்படி அவரது நண்பர் பெயர் பிரபலமாகாது இருக்கிறதோ அதைப் போலவே போயிருந்து இருக்கும்'' என சொல்லி முடித்தாள் வைஷ்ணவி.

''நமக்குத் தெரிஞ்சதை உடனே உலகத்துக்குத் தெரியப்படுத்திரனும்'' என்றான் கதிரேசன். ''யார் ஏத்துப்பாங்கனு நினைச்சிட்டிருந்தா நினைச்சிட்டே இருக்க வேண்டியதுதான்'' என்றாள் வைஷ்ணவி. ''சமணர் பத்தி உனக்குத் தெரியுமா?'' என்றான் கதிரேசன். ''சமணர்களைத்தான் நாளைக்குப் பார்க்கப் போறோமே'' என சமணர்கள் பற்றி எதுவும் சொல்லாது நிறுத்தினாள் வைஷ்ணவி.

''தூக்கம் வந்தா தூங்கு கதிரேசா'' எனச் சொன்னாள் வைஷ்ணவி. ''நாளைக்கு பஸ்ல போறப்ப தூங்கிக்கிறேன், எனக்கு இருக்கிற சந்தேகத்துக்கு என்ன பதில்னு சொல்றியா'' என்றான் கதிரேசன். ''டார்வின் சந்தேகமா?'' எனக் கேட்டாள் வைஷ்ணவி. ''இல்லை, என் பாடல் பத்தின சந்தேகம்'' என நிறுத்தினான் கதிரேசன்.

''தப்பில்லை கதிரேசா, உள்ளமும் உடலும் இணையற ஒரே இடம் காதலுலதான் சாத்தியம். இதையேன் தப்பான விசயமா நினைக்கிற நீ'' என அதற்கு மேல் பேசாமல் தவிர்த்தாள் வைஷ்ணவி. அமைதியாக இருந்த கதிரேசனிடம் ''நீ ஈஸ்வரியைக் கல்யாணம் பண்ணி குழந்தைகளோட நல்லா இருக்கற வழியைப் பாரு, நாம எல்லாம் தனித்தனியா குழந்தையைப் பெத்து வளர்த்துக்க முடியாது இயற்கையில அது சாத்தியமில்லை இப்போது'' என்றாள். கதிரேசன் பெரும் யோசனையிலிருந்தான்.

''மதுசூதனனை கல்யாணம் பண்ணிக்கிருவியா?'' எனக் கேட்டான் கதிரேசன். ''அவனை நான் கல்யாணம் பண்ணனுமா? சரி பண்ணிக்கிறேன்'' எனச் சிரித்தாள் வைஷ்ணவி. சற்று இடைவெளி விட்டு ''ஒரு வருசப் படிப்பு இருக்கு, வேலை தேடனும் அவன் தான் என்னை வேண்டாம்னு சொல்லிட்டானே'' என்றாள் அவள்.

''உன்னை அவன் வேணும்னு சொல்வான், உன் காதலோட'' என சொன்னான் கதிரேசன். ''ம் பார்க்கலாம்'' என சொல்லிவீட்டு சிறிது நேரத்திற்குப் பின்னர் உறங்கினார்கள்.

கதிரேசன் அதிகாலையில் எழுந்து குளித்துத் தயாராக இருந்தான். தாயாரம்மாள் எழுந்திருந்தார். வைஷ்ணவி இன்னமும் உறங்கிக்கொண்டிருந்தாள்.

பூஜையறையில் சென்று அமர்ந்து கதிரேசன் கணீரெனும் குரலில் பாடினான்.

''படைப்பது கஷ்டம் பாவியென எம்மை பெருமானே
புடைப்பது தகுமோ பூவின் மணமோ
இல்லறம் இல்லா வாழ்வதை உயிர் போற்றிடும்
நல்லறம் ஆகுமோ சொல்பெருமானே''

பாடல் கேட்டு விழித்தாள் வைஷ்ணவி. அவசர அவசரமாக கிளம்பினாள். ஆனால் நேரம் கடந்துவிட்டிருந்தது. சமணர் கோவில் நோக்கிச் சென்றார்கள். சமணர் கோவிலின் வாசலில் மதுசூதனன் நின்று கொண்டிருந்தான்.

(தொடரும்)