Sunday, 18 July 2010

ஈழத்து குரல்

''அம்மா நான் விளையாடப் போறேன்''

யாழ்ப்பாணத்தின் ஒவ்வொரு வீட்டினில் அந்த இனிய மாலை வேளையில் எழுகின்ற குரல் சப்தங்கள்  ஊர் வீதியினை கலகலப்பாக வைத்திட தயாராகிவிடும்.

''யாரோடையும் சண்டையிடாம விளையாடி வெருசா வீட்டுக்கு வந்துருங்கோ''

தாயின் கரிசனத்தின் அன்பினில் குழந்தைகள் குதூகலமாக வீதிகளில் காய்ந்து கிடக்கும் மண்ணில் சேர்ந்து காய்ந்திட தயாராவார்கள். அப்படி நான் காய்ந்து திரிந்த காலங்கள் கண்ணுக்குள் இன்னும் இருக்கின்றன.

1950வது வருடத்துடன்  எனது விளையாட்டு தருணம் அந்த மண்ணில் தொலைந்து போனது. அந்த இருபது வயதில் யாழ்ப்பாணம் விட்டுவிட்டு ராமநாதபுரம் வந்து குடும்பம், குழந்தைகள் என ஆகிப்போனது.

சொந்த மண் என வருடம் ஒரு தரமாவது யாழ்ப்பாணம்தனில் எனது கால் வைக்காத தருணம் இல்லை. அங்கே வீடுகளில் ''அம்மா நான் விளையாடப் போறேன்'' எனும் குரல் ஒலித்து கொண்டுதான் இருந்தது. தெருவில் விளையாடும் குழந்தைகளை கண்டு மனம் மகிழும். ஒவ்வொரு வருடமும் அந்த மண்ணில் கால் வைக்கும்போது எனது உயிரின் ஒலி எனக்கு கேட்கும்.

சொந்த மண்ணைவிட்டு போன வருத்தம் என்னுடன் இருந்து கொண்டே இருந்தது. சரியாக ஆறு வருடங்களுக்கு பின்னால் நான் சென்றபோது நடந்த விசயம் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எப்பொழுது சிங்கள மொழியை ஆட்சி மொழியாக்கினார்களோ அப்பொழுதே தமிழ் பேசும் மக்களுக்கு அழிவுதனை விதைத்து வைத்தார்கள். எனக்கு தெரிந்த பலர் அரசு பணியில் இருந்து நீக்கப்பட்டார்கள். அடக்குமுறை ஒரு மொழியினால் வந்தது இந்த சிலோனில்தான். எனக்கு தேகம் சிலிர்த்தது. எனக்கு தெரிந்தவர்களுக்காக நான் அரசுதனை எதிர்த்து போராடினேன்.

எனது சுயநலம். என் குடும்பம், என் பிள்ளைகள் எனும் நினைப்பால், சில வாரங்களிலேயே ராமநாதபுரம் வந்து சேர்ந்தேன். வீட்டில் விபரம் கேட்டு என்னை யாழ்ப்பாணம் செல்ல வேண்டாம் என தடுத்தார்கள். வருடா  வருடம் செல்வது குறைந்து போனது. பத்து  வருடம் பின்னால் ஒரு முறை சென்றேன். பிள்ளைகள் தெருக்களில் விளையாடிக் கொண்டுதான் இருந்தார்கள். தமிழுக்கு எதிரான அடக்குமுறையை எதிர்த்து போராட்டம் நடத்த இளைஞர்கள் துடி துடித்து கொண்டு இருந்தார்கள்.

ஆறு வருடங்கள் பின்னர் 1972 என நினைக்கிறேன். சிலோன் இலங்கையாகி இருந்தது. தமிழ் மீதான வன்முறை தொடர்ந்து கொண்டு இருந்தது. ''அம்மா நான் விளையாடப் போறேன்'' எனும் குரல் கேட்க முடிந்தது. எனது அம்மம்மா, அப்பப்பா என அனைவருமே தென் தமிழகத்தில் குடியானோம். நிலங்கள் விற்றோம்.

பின்னர் யாழ்ப்பாணம் பற்றிய விசயங்கள் செய்திதாளில் படிப்பது போன்று ஆனது. ஒரு நண்பர் மட்டும் தொடர்பில் இருந்தார். மற்றவர்களுடன் முற்றிலும் தொடர்பு விட்டு போனது. என்றாவது சுற்றுலா செல்வது போல் நானும் எனது மனைவியும் சென்று வந்தோம். 1976 என நினைக்கிறேன், விடுதலை புலிகள் அமைப்பு தோன்றிய போது எனக்கு 46 வயது இருக்கும்.

இனக்கலவரம் நடந்தபோது நண்பர் ஒருவரின் மரண நிகழ்வில் கலந்து கொள்ள நான் யாழ்ப்பாணத்தில் தான் இருந்தேன். எனக்கு 53 வயது. துடி துடித்து போனேன். அம்மா நான் விளையாடப் போறேன் பதிலாக அழுகுரல் கேட்டது. வேதனையுடன் ராமநாதபுரம் வந்து சேர்ந்தேன்.

தினம் தினம் என் மண் நாசமாகும் செய்தி கேட்டு எதுவும் செய்ய இயலாமல் போனேன். எனது பிள்ளைகளை எனது மண் காத்திட அனுப்ப விழைந்தேன். ''விசரம் பிடிச்சிப் போச்சோ'' என வீட்டில் என்னை பேசினார்கள். எனது மூன்று மகன்களிடம் விபாமாக கதைத்தேன். ''வெளிநாடு போறோம்'' என லண்டன், கனடா என பறந்து போனார்கள்.

வேதனையில் என் உயிரின் ஒலி அடங்கி போனது. அகதிகளாய் ஒவ்வொருவரும் வந்து குவிந்தபோது எனது மனம் துடித்தது. மனைவியுடன் கொரனைத்துக் கொண்டு யாழ்ப்பாணம் வந்து போராடினேன். என் மண் பிள்ளைகள் ''அம்மா நான் விளையாடப் போறேன்'' என ஆடி திரிய வேணும் என்பதுதான் எனது ஆசையாய் இருந்தது.

வேதனையிலும், உடல் நலம் சரியாய் கவனியாத காரணத்திலும் சில வருடமே உடல் தாக்கு பிடித்தது. ராமநாதபுரம் வந்து சேர்ந்தேன். திடீரென அமைதியும், சட்டென சண்டையுமாய் ஆகி போனது எனது பூமி. மண்ணில் படும் துயரம் என்னை வாட்டியது. சாவுடன் நான் நடத்தியே வந்தேன் போராட்டம்.

இன்றுடன் எனக்கு 80 வயது. சொந்த மண்ணை விட்டுவிட்டு அவரவர் நலன் தேடி புலம் பெயர்ந்து போனார்கள். சொந்த மண்ணின் விடுதலைக்கு பல உயிர்கள் போனதுதான் மிச்சம். எனது பிள்ளைகள் சொந்த தேசம் ராமநாதபுரம் என்றே சொல்கிறார்கள். புலம் பெயர்ந்து போனவர்களுக்கு இனி யாழ் பற்றியோ, ஈழம் பற்றியோ என்ன அக்கறை இருந்து விடப் போகிறது. என் யாழ் மண்ணில் உயிர் நீத்தவர்கள் எத்தனை எத்தனையோ.

கண் பார்வையும், காதும் நன்றாகவே இருக்கிறது எனக்கு. ஏதேதோ சொல்கிறார்கள். வெளியில் இருந்து எல்லாம் அரசு என சொல்கிறார்கள். எல்லாம் செய்து கொள்ளுங்கள். சென்ற வருடம் நான் யாழ்ப்பாணம் சென்றபோது அம்மா நான் விளையாடப் போறேன் எனும் குரல்தனை என்னால் எந்த வீட்டினில் இருந்தும் கேட்க இயலவில்லை.

என் உயிர்களே, நான் செத்து போகும் முன்னராவது அந்த 'அம்மா நான் விளையாடப் போறேன்' எனும் குரல்களை ஒவ்வொரு வீட்டினுளும் ஒலிக்க செய்ய மாட்டீர்களோ!

Wednesday, 14 July 2010

அதிகாலை குருவிகள்




சூரியனே


குயில்கள் குரல் கேட்க குளிர்ச்சியாய்

எழுந்து வந்தாயோ

செந்தூர வானத்தில்

வெள்ளை வட்ட பொட்டு வைத்து



குருவியே

ஒற்றைக்காலில் நின்று

ஒய்யாரமாய் உன் குரல்வளம்

சரிசெய்கிறாயோ

அதென்ன சூரிய

நமஸ்காரம் செய்யாமல்

இந்தப் பக்கம் பார்வை



மகிழ்வைத் தந்து விடுவாய்

மனதில் வைத்து போற்றுகிறேன்

அதிகாலை என்றும் அழகுதான்

அதிலும் உன்குரல் மெல்லிய இசைதான்

குருவியே உன்குரல் பிடிக்கும்

உன்குரல் மட்டுமே பிடிக்கும்

எனக்காக நீ பாடும் பாடல்!

கோழிதான் முதலில் வந்தது

முதலில் வந்தது எது? கோழியா? முட்டையா?

விடை தெரியாத கேள்விக்கு ஒரு விடை கிடைத்துவிட்டதாய் அறிவியலாளர்கள் அறிவிப்பு.

முதலில் வந்தது கோழிதான் என திட்டவட்டமாக அறிவித்து விட்டார்கள்.

ஒரு புரதம் (ஒவோக்லேடிடின் 17) முட்டை உருவாவதற்கு காரணம் என்பதை கண்டுபிடித்ததன் மூலம் இதை அறிவித்து இருக்கிறார்கள். இந்த புரதம் கோழியின் அண்ட செல்லில் மட்டுமே இருப்பதாலும், இந்த புரதம் பல வினைகளை செயல்படுத்துவதாலும் கோழிதான் முதல் என சொல்லி இருக்கிறார்கள்.

இந்த புரதம் கால்சியம் கார்பனேட் தனை மாற்றி முட்டையின் ஓடுதனை உருவாக்குகிறதாம்.

விடை தெரியாத கேள்விக்கெல்லாம் விடை உண்டு. அந்த விடையையும் மாற்றும் வல்லமை அறிவியலுக்கு உண்டு.