Wednesday, 16 June 2010

அடியார்க்கெல்லாம் அடியார் - 17

சிலநாட்கள் தங்கியிருந்த கதிரேசன் மனதில் சங்கரன்கோவில் செல்ல வேண்டும் என ஆசை வந்தது. செல்லாயியிடம் சொல்லிக்கொண்டு சங்கரன்கோவில் சென்ற கதிரேசன் நீலகண்டனின் வீட்டிற்குச் சென்றான். ஆனால் வீடு பூட்டப்பட்டிருந்தது. அக்கம்பக்கத்தில் விசாரித்ததில் சிறிது நேரத்திற்கு முன்னர்தான் நீலகண்டனுக்கு உடல்நலம் சரியில்லை என செந்தூரம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக சொன்னார்கள். செந்தூரம் மருத்துவமனை முகவரியைக் கேட்டு அங்கு சென்றான் கதிரேசன். வரவேற்பறையில் விசாரித்துக்கொண்டு அறைக்கு விரைந்தான் கதிரேசன். அங்கே பார்வதி முதலானோர் அனைவரும் நின்று கொண்டிருந்தார்கள். நீலகண்டன் படுக்கையில் இருந்தார்.

நீலகண்டனுக்கு சில மாதங்களாகவே உடல்நலம் சரியில்லாது போனதாலும், மருத்துவமனைக்கு வந்து செல்வதுமாகவே இருந்ததாக கூறினார்கள். இந்த முறை மருத்துவமனையிலேயே வைத்துப் பார்க்க வேண்டும் என சொன்னதாக கூறினார்கள். நீலகண்டனை அருகில் சென்று பார்த்தான் கதிரேசன். கண்கள் மூடியிருந்தவர் தாத்தா என கதிரேசன் அழைத்ததும் கண்கள் திறந்துப் பார்த்தார். அவரது உடல் மிகவும் மெலிந்து காணப்பட்டது. படுத்தவாரே எப்படி இருக்க எனக் கேட்டார். கண்களில் நீர் கோர்த்த வண்ணம் தலையை மட்டுமே ஆட்டினான் கதிரேசன்.

மருத்துவர் வந்து பார்த்துவிட்டு 'ஈஸ்வரா' என சொல்லிக்கொண்டார். சிவசங்கரனை அழைத்து நாடித் துடிப்பு ரொம்ப மெதுவாக இருப்பதாகவும், ஒரு ஊசி போடுவதாகவும் சொன்னார். அனைவரது கண்களும் கலங்கி இருந்தது. மருத்துவர் ஊசி போட்டுவிட்டுச் சென்றார். கதிரேசன் நின்று கொண்டே இருந்தான். அனைவரையும் அருகில் வருமாறு அழைத்தார் நீலகண்டன். ''எல்லோரும் சந்தோசமா இருங்க, ஒருத்தருக்கு ஒருத்தர் உதவியா இருங்க, எல்லாம் சிவமயம். யாராவது மனம் நோகுறமாதிரி நடந்துக்கிட்டா அன்புதான் ஆதாரம்னு தைரியமா இருங்க, எல்லாம் சிவமயம்'' என சொன்ன நீலகண்டன் ஈஸ்வரியை அழைத்தார். 'பாடுவியாம்மா' என அவர் சொன்னபோது தாத்தா என அவரது கைகளைப் பிடித்து அழுதுவிட்டாள் ஈஸ்வரி. கண்ணீரைத் துடைத்துவிட்டார் நீலகண்டன். ஈஸ்வரி பாடினாள். ஒவ்வொரு வரியையும் நிறுத்திப் பாடினாள்.

இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டு கின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும்நான் மகிழ்ந்து பாடி
அறவாநீ ஆடும் போதுன் அடியின்கீழ் இருக்க என்றார்.

பாடி முடித்தவள் தாத்தா என அவர் மேல் சாய்ந்து அழுதாள். ஈஸ்வரியை அருகில் அழைத்து அணைத்துக்கொண்டார் பார்வதி. கதிரேசனிடம் இது யார் யாருக்காக எழுதினது தெரியுமா? என்றார். தெரியாது  என தலையை ஆட்டினான் கதிரேசன். ''சேக்கிழார், காரைக்கால் அம்மையாருக்குப் பாடினது. நான் இங்குட்டு வந்தப்பறம் சிவனை, தமிழை மறந்துட்டியோ''' என்றார். ''இல்லை தாத்தா'' என்றான் கதிரேசன். பின்னர் அமைதியாய் இருந்தார் சில மணி நேரங்கள். அனைவரும் அங்கேயே இருந்தனர். நீலகண்டன், நீ பாடு என்றார் கதிரேசனை நோக்கி.

ஈஸ்வரியைப் பார்த்தான் கதிரேசன். பின்னர் பாடினான்.
யானே தவமுடையேன் என் நெஞ்சே நன்னெஞ்சம்
யானே பிறப்பறுப்பான் எண்ணினேன்- யானேயக்
கைம்மா உரி போர்த்த கண்ணுதலான் வெண்ணீற்ற
அம்மானுக் காளாயினேன்

முகம் மலர்ந்தார் நீலகண்டன். இன்னுமொரு பாட்டுப் பாடு என்றார் நீலகண்டன். பாடினான் கதிரேசன்.

எண்ணிய எண்ணமெலாம் நீயென இருந்தார் எம்பெருமானே
பண்ணிய புண்ணியம் எடுத்துக் கொண்டனையோ
இப்பிறப்பில் அடியாராய் இவரை ஆட்டுவித்துக் கொண்டோனே
எப்பிறப்பிலும் இவர்அடியாரோ சொல்சிவனே.

நீலகண்டன் கைகள் எடுத்துக் கும்பிட்டார். அருகிலேயே இருந்தார்கள். ஒரு சில வார்த்தைகளே பின்னர் பேசினார் அவர். சில மணி நேரங்களில் அவர் உயிர் பிரிந்தது. கதறினார்கள் அனனவரும். தனது அன்னைக்கு தகவல் சொன்னான் கதிரேசன்.

(தொடரும்)

Tuesday, 15 June 2010

மேற்குத் தெருவில் ஒரு வீடு

எனது தாத்தா (என் அப்பாவின் அப்பா) மிகவும் தெய்வ பக்தி உடையவராக திகழ்ந்தவராம். எவரேனும் உழைக்க அழைக்கமாட்டார்களா என ஏர் பூட்டி ஊரின் மந்தையில் காத்திருப்பாராம். அதன் காரணமாகவே அவருக்கு ஏட்டுப்பிள்ளை என்றொரு பட்டப்பெயர் உண்டு.

அவ்வாறு மிகவும் கடினமாக உழைத்து செல்வம் பெருக்கியவர். ஊரின் மேற்குத் தெருவில் ஒரு வீடு ஒன்றினை அவர் கட்டி இருந்தார். எவரேனும் ஊருக்குள் வந்து உணவு கேட்டால் 'மேற்குத் தெருவுக்குப் போ' அங்கே உனக்கு அன்னம் அளிப்பார்கள் என ஊரில் உள்ளோர்கள் சொல்வதுண்டாம்.

அது போலவே, எவரேனும் பசி என வந்தால் அவர்களுக்கு மறக்காமல் அன்னமிட வேண்டும் என்பது எனது தாத்தா வைத்திருந்த கொள்கையாம், அதனை வீட்டில் இருப்போர்களிடமும் சொல்லி தவறாமல் கடைபிடிக்க செய்து வருவாராம்.

கார்த்திகை விரதம்தனை எப்போதும் கடைபிடித்து வருவாராம். எனது துரதிருஷ்டம் எனக்கு என் தாத்தாவை பார்க்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. எங்கள் வீட்டில் கார்த்திகை விரதம் தொடர்ந்து செய்து வந்தார்கள், அதில் நான் கலந்து இருக்கிறேன். அப்போது வேறு எவரேனும் வந்து சாப்பிட்டு செல்வார்கள். இன்று கூட என் தந்தை கார்த்திகை மாதம் வந்தால் திருப்பரங்குன்றம் செல்லாமல் வீடு போகமாட்டார்.

இப்படி வாழ்ந்து வந்த தாத்தா ஒருமுறை கார்த்திகை விரதம் அன்று விரதம் விட தயாராக இருந்திருக்கிறார். அப்போது ஒருவர் ஊரின் பாதையில் 'படித்தவர்கள் முட்டாள், படிக்காதவர்கள் முட்டாள்' என சொல்லிக்கொண்டே 'எனக்கு ஒரு இலை மேற்குத் தெரு வீட்டில் போடப்பட்டிருக்கிறது' என வீட்டிற்கு சென்று இருக்கிறார்.

இவரைப் பார்த்ததும் 'வாங்க, சாப்பிடுங்க, ஒரு இலை போட்டிருக்கேன்' என என் தாத்தா அவரை அழைத்து யார் எவர் என எந்த கேள்வியும் கேட்காமல் அமரச் செய்து சாப்பிட சொல்லி இருக்கிறார். பொதுவாக கிராமத்தில் வீட்டின் வெளியில் தான் கை கழுவுவதற்கு பாத்திரம் வைத்திருப்பார்கள். சாப்பிட்டு முடித்த அவர் நன்றி சொல்லிவிட்டு வெளியில் கை கழுவ வந்திருக்கிறார். வெளியில் சென்றவர் அப்படியே சென்றுவிட்டார்.

இறைவன் தான் வந்திருக்கிறார் என என் தாத்தாவுக்கு தெரிந்திருக்கிறது, என் தந்தையும் அதை அவ்வாறே நம்புகிறார். இதை என் தந்தை என்னிடம் சொல்லும்போது எனக்குள் எத்தனையோ கேள்விகள். கால சூழல் என்னை அவ்வாறு கேள்வி கேட்க தூண்டுகிறது. என் எண்ணப்படியே அது இறைவனாக இருந்திடாவிட்டாலும் ஒரு மனிதர் வயிறார உண்டு சென்றிருக்கிறார் என நினைக்கும்போது என் கண்கள் கலங்குகின்றன. பிறருக்கு பசியெடுக்கும்போது அவர்களுக்கு உணவு அளிக்கும் எனது தாத்தா எனக்கு இறை உணர்வை எனது கலங்கிய கண்களில் விதைத்துதான் செல்கிறார்.

மேலும் ஒரு நிகழ்வை மேற்குத் தெரு வீட்டில் நடந்ததாக நினைவு கூர்கிறார் என் தந்தை. கிராமத்தில் பேய் விரட்டுவதற்கு 'உடுக்கு' அடிப்பார்கள். இந்த பேய் எல்லாம் உண்மைதானா என்பதெல்லாம் இங்கே கொஞ்சம் மறக்கப்பட வேண்டிய கேள்வி. ஏனெனில் நான் பேய் என்பதையெல்லாம் கொஞ்சம் கூட நம்புவதில்லை. வீட்டில் ஒருவருக்கு சுகமில்லாமல் போக அவருக்கு பேய் பிடித்திருக்கிறது என உடுக்கு அடிக்க வருகிறார் ஊரில் உள்ள ஒரு சாமி. என் தந்தை சாமி இருக்கும் வீடு, உடுக்கு அடிக்கக் கூடாது என தடுக்கிறார். ஆனால் வந்தவரோ அதையும் மீறி உடுக்கு அடிக்க உட்காருகிறார். என் தந்தையும் கண்கள் மூடி அமர்கிறார். உடுக்கு அடிக்க முயன்றவர் அடிக்க முடியாமல் திணறுகிறார். எனது தந்தையின் கைகள் நரம்புகள் முறுக்கேறி கொண்டதாகவும் தன்னில் ஒரு மாற்றம் நிகழ்ந்ததாகவும் கூறுகிறார்.

முயற்சித்துப் பார்த்த அந்த உடுக்கு அடிப்பவர் என் தந்தையை வணங்கிவிட்டு வீட்டில் சாமி இருக்கிறது என சொல்லிவிட்டு செல்கிறார். அந்த வீட்டை விட்டு தன் உயிரைக் கூட காக்க வேண்டும் எனும் கொஞ்சம் கூட அக்கறை இல்லாமல் என் தாய் கடைசி வரை அந்த வீட்டிலேயே இருந்து மரித்துப் போன விதம் தனை நினைக்கும் போது இறை உணர்வு கலக்கமடையச் செய்கிறது.

இப்பொழுது நான் எப்போதாவதுதான் அந்த மேற்குத் தெரு வீட்டிற்குச் செல்கிறேன். அன்னமிட என் அன்னை கூட இல்லாததை இப்பொழுது நினைக்கும்போது கண்களில் கண்ணீர் கொட்டுகிறது, இறை உணர்வை தொலைத்துத்தான் விட்டேன்.

Sunday, 13 June 2010

நுனிப்புல் (பாகம் 2) 7


7. தந்தை சொல்மிக்க மந்திரமில்லை


சேகர், சுந்தரன் முன்னரே கிளம்பிச் சென்றதை அறிந்து கொண்டார். அந்த மதிய வேளையில் பெரியவர் விநாயகம் சேகரைத் தொடர்பு கொண்டு பல விசயங்கள் பேசினார். திருமால் குறித்தும், பாரதி நேற்று அவரை பார்க்க சென்றதாகவும் அதுகுறித்து ஏதேனும் விபரங்கள் தெரியுமா எனக் கேட்டார். சேகர், தனக்கு இது குறித்து எதுவும் தெரியாது என தெரிவித்தவர், மன வருத்தம் கொண்டார். அருணை அழைத்துக் கொண்டு சேகர் வீட்டிற்கு வந்தார். சரோஜா, சுந்தரனை காணாமல் சேகரிடம் கேட்டார்.


‘’என்னங்க, சுந்தரன் தம்பி வரலையா’’ 


‘’வரலையா, அப்பவே வேலைய முடிச்சிட்டு கிளம்பி போயாச்சே''


''அருண், உனக்கு ஏதும் விபரம் தெரியுமா’’ 


‘’இல்லைம்மா, அவன் ஒண்ணும் சொல்லலையே’’ 


''என்னங்க, எங்க போயிருப்பான்?''


‘’எங்க போயிருக்க போறான், வந்துருவான் சாப்பாடு எடுத்து வை’’ 


சரோஜாவிற்கு இன்று சுந்தரன் பற்றிய கவலை வந்து சேர்ந்தது. பாரதியும் சாப்பிடுவதற்கு வந்து அமர்ந்தாள். அவளது எண்ணம் குளத்தூரில் இருந்தது. சரோஜா சாதம் போதுமா என கேட்டதை கேளாமல் அமர்ந்து இருந்தாள். அருண் பாரதியைப் பார்த்து சொன்னான்.


‘’வர வர கனவு காணுற வேலையாப் போச்சு உனக்கு பாரதி’’ 


பாரதி திடுக்கிட்டாள்.


‘’என்னம்மா இவ்வளவு சாதம்’’ 


‘’நான் தான் கேட்டேனே, நீ எங்கேயோ இருந்தா’’ 


பாரதி வாசனை தொடர்பு கொள்வதா வேண்டாமா என மீண்டும் எண்ணியவள், எதற்கு தன்னை வாசன் இன்னமும் தொடர்பு கொள்ளவில்லை என நினைத்துக்கொண்டும் சாப்பிட்டு முடித்தாள். சேகரும் அருணும் சாப்பிட்டு முடித்தார்கள். சிறிது நேரம் பின்னர் பாரதியை சேகர் அவரது அறைக்கு அழைத்துச் சென்றார்.


‘’உட்கார்’’ 


‘’என்ன விசயம்பா’’ 


‘’திருமால் பத்தி உனக்குத் தெரியுமா?’’ 


பாரதிக்கு மனம் படபடவென அடித்துக்கொண்டது. 


‘’எந்த திருமால் பத்தி கேட்கறீங்கப்பா?’’ 


‘’சாத்திரம்பட்டி திருமால்’’ 


பாரதிக்கு வியப்பும் பயமும் அதிகமானது. பாரதி பயந்து கொண்டே எல்லா விபரங்களையும் சொன்னாள். 


‘’வாசனுக்காக இதையெல்லாம் செய்றேன்னு சொல்றதான, வாசன் நாளைக்கு ஏதாவது உன் மனசுக்குப் பிடிக்காததை செய்ய சொன்ன செய்வியா?’’ 


‘’அப்படியில்லைப்பா’’ 


‘’நாங்க எல்லாம் இருக்கோம், சுந்தரனையோ, அருணையோ போகச் சொல்லி இருக்கலாம், பிரச்சினை ஆகாதவரைக்கும் பரவாயில்லை, பிரச்சினை ஆயிருந்தா, வாசனா பதில் சொல்வான்’’ 


‘’சரிப்பா, இனிமேல் இப்படி நடந்துக்கற மாட்டேன்பா’’ 


‘’இங்க பார் பாரதி, நீ நல்லா படி அதுதான் உனக்கு ரொம்ப முக்கியம், அதை நீ மறந்துராத, இனிமே உன்னுடைய, உனக்குத் தேவையான விசயத்தை மட்டும் செய். நீ செஞ்சதெல்லாம் தப்புனு சொல்ல வரலை, தப்பா போயிறக் கூடாதுனு சொல்றேன், என் மேல வருத்தம் எதுவும் இல்லையே, உன் சுதந்திரத்தில நான் தடையா இருக்க விரும்பல. திருமால் பத்தி உன் பெரியப்பா சில விசயங்கள் சொன்னார், அதான் உன்கிட்ட சொல்றேன். உலகத்துல எல்லாரும் நல்லவங்கதானு நாம நம்பலாம், ஆனா எல்லோரும் நல்லவங்களா இருப்பாங்கனு உறுதியாச் சொல்ல முடியாது, சூழ்நிலையும் சந்தர்ப்பங்களும் ஒரு மனிதனை தலைகீழா மாத்திரும்’’ 


''சரிப்பா, கவனமா இருந்துக்கிறேன்''


சேகர் பாரதியை அன்புடன் பார்த்தார். பாரதி புன்முறுவலிட்டாள். 


''உங்ககிட்ட அவரைப் பத்தி பேச எனக்கு பயம்மா இருந்ததுப்பா, அம்மாகிட்டவும் சொல்லலை''


''இனிமே பயப்பட வேணாம், பயப்படும்படியான விசயங்களைத்தான் முதல்ல சொல்லனும், இனி கவலையை விடும்மா''


பாரதியின் மேல் சேகர் கொண்ட அன்பும், நம்பிக்கையும் பாரதியின் மனதை புண்படுத்திவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தது. பாரதி தந்தையின் எண்ணத்தை புரிந்து கொண்டாள். சரோஜாவிடம் மட்டும் விபரத்தை கூறினார் சேகர். அருண் இதில் ஈடுபாடு இல்லாதவன் போல் வெளியில் சென்று விட்டான். சரோஜா பாரதியிடம் இதுகுறித்து பேசினார். பாரதி அமைதியாக கேட்டுக் கொண்டாள். வெளியில் சென்ற அருண் வீட்டிற்கு மாலை வேளையில் வந்தான்.


‘’என்ன இந்த சுந்தரனை இன்னும் காணோம், வீடு வேற பூட்டியிருக்கு, மொபைலுக்கு அடிச்சா எடுக்க மாட்றான், கடற்கரைக்கு போகலாம்னு சொன்னான், இங்க வந்தானாம்மா’’ 


‘’வரலையே’’ 


‘’ஊருக்குப் போய்ட்டானோ சொல்லாம கொள்ளாம’’ 


அருண் சொன்னதை ஏதோ எழுதிக்கொண்டிருந்த சேகர் பதிலளித்தார்.


‘’அப்படியெல்லாம் போகமாட்டான்’’ 


‘’அப்படின்னா வரட்டும் ஊருக்கு அனுப்பி வைச்சிருவோம்’’ 


‘’அவனை ஊருக்கு அனுப்பரதிலேயே நீயும் உன் தங்கச்சியும் குறியா இருங்க, அவன் இங்க வந்தப்பறம் எனக்கு எவ்வளவு உதவியா இருக்குத் தெரியுமா, பாவம் மனசு ஏதோ குழப்பத்தில இருக்கான்’’ 


இதைக் கேட்ட பாரதியின் மனதிற்கு கஷ்டமாக இருந்தது. அப்பொழுது கிருத்திகா பாரதியின் வீட்டிற்கு வந்தாள். அனைவருக்கும் வணக்கம் சொல்லிக்கொண்டவள் பாரதியினைத் தேடி மாடிக்குப் போனாள். 


‘’என்னய்யா படிப்போமா''


கிருத்திகாவிடம் பாரதி நடந்த விசயத்தை சுருக்கமாக கூறினாள். 


‘’திருமால் பத்தி நான் கவனிச்சிக்கிறேன்யா''


சுந்தரன் பற்றி பாரதி சொன்னதும் கிருத்திகா சிரித்தாள். 


‘’ம் கிராமத்தில உயிர்க்காதலர்கள் நிறைய கிடைப்பாங்க போலிருக்குய்யா, சுந்தரன் பாவம்யா சொல்லி வைச்சிருவோம்யா’’ 


‘’சொல்லிட்டேன் கிருத்தி, இன்னும் வீட்டுக்கு வந்து சேரலை’’ 


‘’இது வேறப் பிரச்சினையா, நாம எப்ப படிக்கிறது, எப்படி டாக்டர் ஆகிறது ஹூம்’’ 


''அந்த பிரச்சினை அப்படியே இருக்கட்டும், நான் சுந்தரன் வந்ததும் உனக்கு சொல்றேன், நீ அவன்கிட்ட போய் பேசு''


''இன்னைக்கு எத்தனை மணியானாலும் பேசிறேன்யா, இப்போ ஜெனிடிக்ஸ் பத்தி படிக்கலாம்யா''


மரபியல் மருத்துவம் பற்றி பாரதி பேச ஆரம்பித்தாள். கிருத்திகா கவனத்துடன் கேட்க ஆரம்பித்தாள். சுந்தரன், திருவேற்காட்டில் அம்மன் ஆலயத்தில் தியானத்தில் அமர்ந்து இருந்தான்.


(தொடரும்)