Wednesday, 9 June 2010

அடியார்க்கெல்லாம் அடியார் - 16

ஒவ்வொருவராக உள்ளே சென்று உடனே திரும்பினார்கள். ஐந்து பேரையும் பேச்சுப்போட்டியில் பேசக்கூடாது என தடைவிதித்தார் சிவநாதன். அவரை எதிர்த்து ஒரு வார்த்தை கூட இவர்கள் பேசவில்லை. அனைவரிடமும் ஒரே விசயத்தை மட்டுமே சொல்லி இருந்தார். 'தலைப்பு சரியில்லைனு உங்களை பேச அனுமதிக்கலைனு நினைக்க வேணாம், உங்க நோக்கம் சரியில்லை, எப்பவுமே நோக்கம் உயர்ந்ததாக இருக்கனும்' என அவர் சொன்னதாகவே ஐவரும் சொன்னார்கள்.

கதிரேசனுக்கு தனது நோக்கம் எப்படி சரியில்லை என அவர் சொல்லலாம் என மனது துள்ளிக்கொண்டு இருந்தது. வைஷ்ணவிக்கு அவமானமாக இருந்தது. மற்ற மூவரும் கொஞ்சமும் சட்டை செய்யாமல் வெகுவேகமாக எழுதிக்கொண்டிருந்தார்கள். என்ன எனக் கேட்டபோது நாங்கள் பேச இருக்கும் விசயத்தை அவரிடம் காட்டப்போகிறோம் என்றார்கள். கதிரேசனுக்கு நல்ல யோசனை என மனதிற்குப் பட்டது.

கல்லூரியில் விசாரித்தபோது இனிமேல் அவர் மனது மாறமாட்டார் என சொன்னார்கள். எனவே கதிரேசன் அந்த முயற்சியையே கைவிட்டான். மூவருடன் வைஷ்ணவியும் எழுதிக்கொண்டு போனாள். சிவநாதனின் பார்வைக்கு சென்றது. அதைப் படித்துப் பார்த்த அவர் கட்டுரைக்கு உபயோகப்படும் என சொல்லிவிட்டார். இறுதியில் அவர்கள் யாரும் பேச்சுப்போட்டியில் கலந்து கொள்ளக்கூடாது என்றே அறிவுறுத்தப்பட்டார்கள்.

நோக்கம் நன்றாக இருக்க வேண்டும், கதிரேசனின் மனது ஓரிடத்தில் இல்லை. சிவநாதனை சந்திக்க அனுமதி வாங்கி அவன் மனதில் இருந்த கேள்வியை கேட்டே விட்டான். அதற்கு அவர் கதிரேசனைப் பார்த்து ''நீ அன்பே சிவம்னு மட்டும் சொல்லி இருந்தா எந்தப் பிரச்சினையும் இல்லை, ஆனா சமண சமயம்னு எப்பச் சேர்த்தியோ அப்பவே நீ பிரச்சினை பண்றதா முடிவு பண்ணிருக்கே, எதுக்கும் பேச்சுப்போட்டியில கலந்துக்கிறவங்க எப்படி பேசறாங்கனு பார்த்துட்டு அடுத்த வருசம் முயற்சி பண்ணிப்பாரு'' என்றார்.

''சார் அன்பையும் அகிம்சையையும் போதிச்ச சமயம் அது, ஒரு ஈ எறும்புக்குக் கூட தீங்கிழைக்க நினைக்காத சமயம் அது, தமிழ் இலக்கியங்களை வளர்த்த சமயம் அது'' எனத் தொடர்ந்தவனை ''நிறுத்து'' என்றார் கோபத்துடன். கதிரேசன் நிறுத்தினான். ''அந்த காலத்தில வாழ்ந்தவன் மாதிரி பேசற, உனக்கு உண்மையிலே என்ன நடந்ததுனு தெரியுமா, கல்வெட்டு அகழ்வாராய்ச்சி இலக்கியம் எல்லாம் காரணம் காட்டப் போறியா, நீ வெளியே போ'' என சத்தமிட்டார். ''சார் அது இல்லை சார் என் நோக்கம் உயர்ந்தது சார்'' என்றான் கதிரேசன். ''நீ வெளியே போ'' என்றார் மறுபடியும். கதிரேசன் மறுபேச்சு பேசாமல் வெளியே வந்தான். நெற்றியெல்லாம் வியர்த்து இருந்தது.

மதுசூதனன், வைஷ்ணவி என யாரிடமும் பேசாமலே தினங்களை நகர்த்தினான் கதிரேசன். தேர்வும் முடிந்து ஆண்டுவிழாவும் வந்தது. விழா மிகவும் அருமையாக நடந்தது. பேச்சுப் போட்டியில் எட்டு நபர்கள் பேசினார்கள். ஒவ்வொருவரும் மிகவும் அருமையாக பேசினார்கள். அவர்கள் பேசிய விசயத்தின் மையக்கருத்து, தவறென எது இருப்பினும் அதை களைந்துவிட்டு நல்ல விசயங்களை மட்டுமே நிலைநிறுத்துவது என்றே இருந்தது. எதையும் சாடவில்லை, அலுத்துக்கொள்ளவில்லை, சலித்துக் கொள்ளவில்லை.

சிவநாதனின் உரை கதிரேசனை உலுக்கியது. அவரது உரையில் நுனிப்புல் மேய்வது போல விசயத்தை அறிந்து வைத்திருக்கும் நபர்களால் பல பிரச்சினைகள் உண்டாகிறது எனவும் எதையும் நுண்ணிய அறிவால் தெளிந்துணர்ந்த பின்னரே உலகிற்கு எடுத்துரைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதை காலம் காலமாக தொடர்ந்து செய்த பின்னரே சாத்தியமாகும் என்றவர் இன்றைய நிலையில் உடனுக்குடன் எல்லாம் செய்தியாவது பிரச்சினையே, அதை மாற்ற ஒரு எழுச்சி வேண்டும் என முடித்தார். ஆண்டு விழா முடிந்த சில தினங்களில் கோடை கால விடுமுறை வந்தது. கதிரேசன் சங்கரன்கோவில் செல்ல வேண்டும் என எண்ணிக்கொண்டே புளியம்பட்டியை அடைந்தான்.

(தொடரும்)

Tuesday, 8 June 2010

இது பணம் பறிக்கும் முயற்சி அல்ல

உலக தமிழ் வாசகர்களே,

எனது கனவு உலகில் உள்ள மிகவும் சிரமப்படும் குழந்தைகளுக்கு நம்மாலான உதவியை செய்வது என்பதாகும். இந்த சின்னஞ்சிறு உதவியை செய்வதற்கென பல தொண்டு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அந்த தொண்டு நிறுவனங்கள் இதற்கென பணியாட்களை நியமித்து செயல்படுவதால் கொடுக்கப்படும் பணத்தில் பராமரிப்பு வேலைகளுக்கு என செலவாகிவிடுவது வாடிக்கையாகும்.

மேலும் ஆப்ரிக்கா போன்ற மிகவும் பின் தங்கிய நாடுகளுக்கென இந்த தொண்டு நிறுவனங்கள் உதவி செய்து வருகின்றன. நமது நாட்டில் மட்டுமல்லாது பல நாடுகளில் வறுமையின் காரணமாக பல சிறுவர் சிறுமியர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இவர்கள் தங்களின் எதிர்காலத்தை எப்படி அமைத்து கொள்ள போகிறார்கள் என நினைக்கும்போது வருத்தம் மட்டுமே மிஞ்சுகிறது.

நமது வளத்தை நாம் பாதுகாத்து கொள்வது அவசியமாகும். நமது தேவைகள் எப்போதும் குறையப்போவதில்லை. அந்த தேவைகளுக்கும் இடையில் நம்மால் முடிந்த உதவிகள் நலிந்தோருக்கு செய்வது நமது வாழ்நாளில் நாம் செய்யும் ஒரு முக்கிய பணியாகவே கருதுகிறேன்.

பணம் மட்டுமே எல்லா விசயங்களுக்கும் முடிவாகி விடாது. ஆனால் இந்த பணம் மூலம் பல காரியங்களை நிச்சயம் நல்ல முறையில் சாதிக்க இயலும். இதற்கான திட்டபணிகள் எல்லாம் விரிவாக நடைபெறும். பணம் இல்லாமல் பேசுவது ஆகாயத்தை பார்த்து கோட்டை கட்டுவதாகும். எனவே முதலில் உரிய பணம் சேர்ப்பதுதான் எனது முதல் திட்ட நடவடிக்கை.

பெரிய கடல்தனை சுத்தம் செய்யும் முயற்சியல்ல இது. சின்ன சின்ன ஓடைகளை, சின்ன சின்ன ஆறுகளை சுத்தம் செய்யும் பணி இது. இந்த சிறிய முயற்சி நிச்சயம் கடல்தனை சுத்தப்படுத்தும் அளவுக்கு விரிவடையும். எனது நோக்கம் உதவ வேண்டும் எனும் எண்ணம் உடைய மனிதர்களின் கரங்களின் மூலம் இந்த நல்லதொரு செயலை செய்வதாகும்.

என்னை எப்படி நம்புவது என பலருக்கும் சந்தேகம் இருக்கலாம். இதெல்லாம் தேவையா எனும் எண்ணம் கூட எழலாம். எனக்குள் எழுந்த எண்ணங்கள்தான் அவை. தீவிரமாக யோசித்தே இந்த முடிவு எடுத்து இருக்கிறேன். எனது முயற்சி உடனடியாக  பெரும் வெற்றியடையாமல் போகலாம். பல கோடிக்கணக்கான பணம் வைத்து இருக்கிறார்களே இன்னும் உலகம் இப்படி ஏன் இருக்கிறது என எண்ணும்போது எனது வாழ்க்கைமுறையும் என்னை கேலி செய்வதாகத்தான் இருக்கிறது.  கோவில்கள், சாமியார்கள் என பணத்தை கொட்டும் மனிதர்களை ஒருபோதும் குறை சொல்லப்போவதில்லை. அவரவர் தேவை அவரவருக்கு.

உலக  குழந்தைகளின் நலனுக்காக உதவிட எண்ணம் இருப்பவர்கள் உங்கள் உதவியை தாராளமாக செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இது போன்று கூறிக்கொண்டு பணம் சம்பாதிக்க முயல்பவர்கள் இருக்கக் கூடும். அதற்கு ஒரு வழி ஏற்படுத்தி நான் தருவதாக நினைத்தால் அதற்காக வருந்துகிறேன். நல்ல செயலையும் கொச்சைப்படுத்தும் கூட்டம் இவ்வுலகில் உண்டு. சுயலாபத்துக்காக எதையும் செய்யும் கூட்டம் உண்டு. அரசுக்கு இல்லாத அக்கறை தனி மனிதனுக்கு எதற்கு என்கிற எண்ணமும் எழலாம். கூட்டங்கள் என தனி தனி பிரிவாக சேர்த்துக் கொண்டு வாழும் மனிதரிடையே தனியாய் ஒரு விதை போட்டு இருக்கிறேன். இதற்கு பின்னால் உதவும் கூட்டம் மட்டுமே எனக்கு தேவை , விளம்பரம் தேடும் கூட்டம் அல்ல என்பதை உறுதி செய்கிறேன்.

ஒவ்வொரு மாதம் முதல் தேதி கணக்கு விபரங்கள் இங்கே காட்டப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன். மேலும் இந்த திட்டத்துக்கான ஆலோசனைகள் வரவேற்கப்படுகிறது.

குள்ளநரிகளின் தொல்லை

நரி அப்படின்னாலே தந்திரம் மிக்கது அப்படினு சொல்வாங்க. நரியும், சிங்கமும், எலியும் அப்படிங்கிற கதை எல்லாம் படிச்சி இருக்கேன். பாட்டி சுட்ட வடை கதையில கூட நரி வரும்ல. சாயம் வெளுத்துப் போச்சு டும் டும் டும் அப்படிங்கிற கதையில கூட நரிதான் முன்னிலை வகிக்கும்.

தந்திரமான மனிசரை நரிக்குணம் அப்படினு சொல்வாங்கனு நினைக்க வேண்டாம். இந்த நரிகள் மிகவும் நயவஞ்சகமானவைகள். நாய்க்குணம் அப்படினு மனிசரை சொன்னா நன்றியுள்ளவர்னு அர்த்தம் இல்லீங்க. அதுக்கு அர்த்தமே வேற. அதுபோலவே நயவஞ்சகமான மனிசரைத்தான் நரிகுணம்னு சொல்றாங்கனு அர்த்தப்படுத்திக்கிரனும். எது எப்படியோ, எப்படி அர்த்தப்படுத்திகிறோம் அப்படிங்கிறதுக்கு பாடமா எடுக்க முடியும், அவங்க கற்பனையில, அவங்க அவங்க தோதுக்கு ஏத்தமாதிரி அர்த்தபடுத்திகிற வேண்டியதுதான். 

தந்திரம் அப்படிங்கிறதை நேர்மைக்கு, பொது மக்களின் நன்மைக்கு பயன்படுத்தினா பாராட்டலாம். சுயலாபத்துக்கு எல்லாம் பயன்படுத்தினா நயவஞ்சகத்தன்மைனுதான் சொல்ல முடியும். சாணக்யரை தந்திரமிக்க அமைச்சர் அப்படினுதான் சொல்றாங்க. பொதுமக்களின் நன்மைக்காக செயல்பட்டாருனு பேச்சு இருக்கு. அதுலயும் இந்த குள்ளநரிகள் இருக்கே, அது மனிசரோட நண்பர் மாதிரிதான் இருக்கும், ஆனா அதோட தொல்லை தாங்க முடியாது.


இந்த குள்ளநரிகள் காட்டுப்பக்கம் திரிஞ்சிட்டு இருக்காம இப்போ ஊர்பக்கம் எல்லாம் சுத்த ஆரம்பிச்சிருச்சி. வீட்டுக்கு பின்புறத்தில இருக்கிற தோட்டப்புரத்துல இதனுடைய நடமாட்டம் அதிகம் ஆயிருச்சி. இது எலிகள், முயல்கள் அப்படினு பிடிச்சி தின்னுமாம். இப்படி இதனுடைய நடமாட்டம்தனை மனிசங்களும் நேசிச்சாங்க. அதுக்கு உணவு கூட போடற வழக்கம் இருக்கு. இதனால நல்ல சுகம் காண ஆரம்பிச்சிருச்சி.

இப்படி உணவு போடறவங்க நிறுத்திட்டா அது என்ன பண்றதுன்னு தெரியாம அடுத்த கட்ட நடவடிக்கை எல்லாம் எடுக்க ஆரம்பிச்சிருச்சி. நம்ம ஊருல இருக்கிற மாதிரி கோழி எல்லாம் சுத்திட்டு இருந்தா நல்லா சாப்பிட்டு ஹாயா இருந்திருக்கும். பூனைகதான் அங்கிட்டு இங்கிட்டு திரியும். பூனைக இந்த குள்ளநரிகளை பாத்தா ஓடிப்போயிரும்.

இந்த குள்ளநரிகளை சாப்பிடற பிராணி எதுவும் இல்லை அப்படிங்கிறதால இதனோட எண்ணிக்கை அளவுக்கு அதிகமா போயிருச்சி. அதோட இவைகளோட தொல்லை அதிகமாயிருச்சி. சமீபத்துல இரண்டு பச்சிளம் குழந்தைகளை அவங்களோட திறந்திருந்த வீட்டுக்குள்ள படுக்கையறைக்கே போய் கடிச்சி குதறி வைச்சிருச்சி. :( அந்த குழந்தைக உயிருக்கு போராடிட்டு இருக்காங்க.


இவைகளை என்ன செய்யனும் அப்படினு ஒரு ஆலோசனை சொல்லிட்டு இருக்காங்க. இவைகளை பிடிச்சி மருத்துவர்கிட்ட கொடுத்துட்டா அவங்க சத்தமில்லாம கொன்னுடுவாங்க. நாம யாரும் விஷம் வைச்சி கொல்ல வேணாம் அப்படினு சொல்றாங்க. அதோனோட தேவை கறி, அது எந்த வகையில் இருந்தா என்ன அப்படினு அது தொடங்கிருச்சி.

இந்த குள்ளநரிகள் மருத்துவ ஆராய்ச்சிக்கு பயனுள்ளதா இருந்தா எடுத்துட்டு போகலாம்னு சொல்றாங்க. மத்த விலங்கினங்களை துன்புறுத்துராங்கனு எதிர்ப்பு நடந்துகிட்டு இருக்கு. இந்த குள்ளநரிகள் மனித குலத்துக்கு தீங்கு விளைவிக்க கூடியவையா இருக்கிறதால ஒன்னும் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டங்கனு சொல்றாங்க.

ஒரு குள்ளநரி இப்படி நடந்துகிட்டதால மொத்த குள்ளநரிகளுக்கும் அபாயம் வந்துருச்சு. நாய் வளக்கறவங்களுக்கு ஒரு எச்சரிக்கை கொஞ்ச நாள் முன்னாடி விட்டுருந்தாங்க. நாயை பயன்படுத்தி தன்னோட எதிரியை ஒருத்தன் தாக்கினானம். இப்படி அபாயகரமா இந்த மனிதரின் நட்பு விலங்குகள் மாற காரணம் மனிதன் ஒரு சமூக விலங்கு அப்படிங்கிறதை மறந்துட்டதாலதான்னு சொல்றாங்க. விலங்கோ, மனிதனோ எல்லாரையும் எல்லா நேரங்களிலும் நம்ப முடியாதுதானே. அதனுடைய சுபாவத்தை எப்பவாச்சும் எப்படியாச்சும் காட்டிரும். அதுக்காகத்தான் எந்த புத்துல எந்த பாம்பு இருக்கோ அப்படினு ஊர் வழக்கத்தில சொல்வாங்க.

எங்கள் வீட்டு தோட்டத்திலும் குள்ளநரிகள் எட்டிப் பார்ப்பது உண்டு. அதன் அழகை ரசித்த நான் இப்போது அபாயமாகவே உணர்கிறேன். இருப்பினும் அதன் சுதந்திரத்தை பறித்துக் கொள்ள எனக்கு ஆசை இல்லை. வீட்டுக்குள் நுழைந்துவிடாதபடி கதவுகள் பூட்டப்பட்டுதான்  இருக்கின்றன. வீடு திறந்திருக்கும்போது  அவை ஒருவேளை நுழைந்துவிட்டால், பாதகம் பண்ண துணிந்துவிட்டால் நம்மை காத்துக் கொள்ள அவைகளை கொலை செய்வதில் தயக்கம் ஏதும் தேவை இல்லை.