Friday, 28 May 2010

நல்லாவே சமைப்பேன்

''இன்னுமா கிளம்பலை'' அம்மா சத்தம் போட்டுக் கொண்டிருந்தார். ''இதோ ரெடியாயிட்டேன்'' நானும் பதிலுக்கு சத்தம் போட்டேன். ''பொண்ணு தானே பார்க்கப் போறோம், பொண்ணு மாதிரியே சீவி சிங்காரிச்சிட்டு இருக்கானே'' அப்பாவின் முனகல் சத்தம் தெளிவாகத்தான் கேட்டது.

நான் அப்பொழுதுதான் கல்லூரி படிப்பு முடித்து இருந்தேன். வேலைக்கு விண்ணப்பம் செய்து கொண்டிருந்த தருணம். கடந்த வார நேர்முகத் தேர்வில் சிறப்பாக செய்தது போன்ற உணர்வு. ஒரு வாரத்தில் அழைக்கிறேன் என சொல்லி இருந்தார்கள். எப்படியும் அழைத்து விடுவார்கள் என தினமும் எனது மொபைல்தனை மறக்காமல் சார்ஜ் செய்துவிடுவேன். சில பல நேரங்களில் பேட்டரி தீர்ந்து அவசரத்திற்கு கூட மொபைல் உதவாமல் போய்விடுகிறது.

அவசர அவசரமாக மாடியிலிருந்து கீழிறங்கி வந்தேன். அம்மாவும் அப்பாவும் தயாராக இருந்தார்கள். அந்த நேரம் பார்த்து எனது சொந்தக்கார பாட்டி வந்து சேர்ந்தார். ''எங்க மூணு பேருமா கிளம்பிட்டீங்க, நம்ம சொந்த பந்தத்துல இல்லாத பொண்ணுகளா, அதுல ஒரு பொண்ணை கட்டிக்கிற வேண்டியதுதானே, வெளியூர் பொண்ணு கட்டப் போறானாம்'' என பேசியதும் தான் தாமதம், அப்பாவுக்கு கடுமையான கோபம் வந்துவிட்டது. அந்த பாட்டி நன்றாகத்  திட்டு வாங்கினார்.

எங்கள் உறவினர் எவரும் எங்களுடன் பெண் பார்க்க வர முயற்சிக்கவில்லை. அவரவருக்கு கோபம் மட்டுமே மிஞ்சி இருந்தது. ''என்னங்க ஒரு எட்டு என் அண்ணனை கூப்பிட்டு போவோம்'' என்றார் அம்மா. ''அன்னைக்கு நல்லா வாங்கி கட்டிக்கிட்டது போதாதுன்னு இப்ப வேறயா'' என கோபம் தீராமலே சொன்னார் அப்பா.

பேருந்து நிலையம் நோக்கி நாங்கள் மூவரும் நடந்தோம். எங்கள் எதிரில் வந்த எனது மாமா மகள் ''மாமாவுக்கு பொண்ணு பாக்கப் போறீங்களா அத்தை, நானும் கூட வரட்டுமா, மூணு பேரா  சேர்ந்து ஒரு நல்ல காரியத்துக்கு போகக் கூடாதுல'' என்றாள். ''உங்க அப்பன் கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு வா'' என்றார் என் அம்மா. ''சொல்லிட்டுதான் அத்தை வந்தேன்'' என்றாள் எனது மாமா மகள் முகம்  மலர்ந்தபடியே.

உறவினர்களுக்குள் எந்த பொண்ணும் எடுக்கக் கூடாது என மிகவும் தீவிரமாகவே இருந்தார் எனது அப்பா. அதற்கு அவர் சொல்லும் காரியங்கள் ஆயிரம் ஆயிரம். ஒரு காரணத்தைக் கூட இதுவரை நான் மறுத்துப் பேசியது இல்லை.

பேருந்து   நிலையத்தில் நாங்கள் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தோம்.  ''மாமா, பொண்ணு போட்டோ இருக்கா'' என்றாள் எனது மாமா மகள். ''ம்ம்'' என சொல்லியவாறே எடுத்துக் காட்டினேன்.

போன  வாரம் தான் தரகர் எனது சாதகத்திற்கு பொருந்திய சாதகங்கள் என ஐந்து பெண்களின் போட்டோவுடன் அவர்களது விபரங்களையும் தந்து இருந்தார். முதல் போட்டோவை பார்த்ததும் மூக்கும் முழியுமாக இருந்த அந்த பெண் பளிச்சென மனதில் இடம் பெற்றுவிட்டாள், மத்த படங்களை பார்க்க வேண்டாம் என தோன்றினாலும் பார்த்து வைத்தேன். நல்லவிதமாக வேறு எந்த பெண்ணும் எனக்குப் பிடிக்கவில்லை. எனக்குப் பிடித்த பெண்ணையே என் அப்பா அம்மா சரி என சம்மதம் சொல்லிவிட்டார்கள்.

போட்டோவைப் பார்த்தபடியே ''என்னை மாதிரியே அழகா இருக்காங்க'' என்றாள் மாமா மகள். ஆமாம், அவள் சொல்வதும் உண்மைதான்,  என் மாமா மகள் கொள்ளை அழகு. நன்றாகப் படித்து வருகிறாள். அடுத்த வருடம் கல்லூரி படிப்பை முடித்து விடுவாள். ஒரு நல்ல வேலையிலும் சேர்ந்து விடுவாள். இவளது நிலையில் நான் இருந்தால் 'வெயிலுக்குகந்தம்மனுக்கு இந்நேரம் காசு வெட்டி போட்டுருப்பேன், என் மாமா மனம் மாற வேண்டும் என ஏறாத கோவிலுக்கு எல்லாம் ஏறி இருப்பேன், ஆனால் இவளோ தன்னை ஒதுக்கியவன் என்று கூட பார்க்காமல் எனது பெண் பார்க்கும் படலத்துக்கு உடன் வருகிறாளே' எனும் யோசனையில் இருந்தேன். பேருந்து வந்து நின்றது. ''இந்தாங்க மாமா போட்டோ'' என தந்தாள்.

பெண்ணின் வீடு மிகவும் அழகாக இருந்தது. அகர்பத்தியின் நறுமணம் தாலாட்டியது. ''வாங்க வாங்க'' என எனது வருங்கால மாமனாரும், மாமியாரும் வரவேற்றார்கள். அவர்களது உறவினர்கள் என பலர் அங்கே தென்பட்டார்கள். அத்துடன் சுற்றும் முற்றும் பார்த்தார்கள். ''நாங்க மட்டும் தான் வந்தோம்'' என குறிப்பறிந்து சொன்னார் என் அப்பா. ''தரகர் வரலையா'' என்றார் என் வருங்கால  மாமனார். எனது கண்கள் பெண்ணை தேடியது. நாங்கள் நால்வரும் சோபாவில் அமர்ந்தோம். எனது மாமா மகள் என் அம்மாவின் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள், சிரித்த முகமாய் இருந்தாள்.

பலகாரங்கள் என மேசையில் இருந்தது. எடுத்துக்கோங்க என தட்டை காட்டியவர்  ''நாங்க சுத்த சைவம்'' என்றார் என் வருங்கால மாமனார். ''நாங்களும் தான், அதை தரகர் கிட்ட ரொம்ப முக்கியமா சொல்லி இருந்தேன்'' என்றார் என் அப்பா. நான் சைவ உணவு சாப்பிட்டே வளர்ந்தவன். ஆசைக்கு கூட முட்டை சாப்பிட்டது இல்லை. எனக்கு அப்படியொரு கொள்கை பிடிப்பு. பலகாரம் ருசித்த போது ''யார் செஞ்சது'' என்றார் என் அம்மா. அந்த பலகாரம் செய்தது அவளது வருங்கால மருமகளாக இருக்க வேண்டும் எனும் ஆசையாய் கூட இருக்கலாம். ''என் பொண்ணு தான்'' என்றார் என் வருங்கால மாமியார். ''ரொம்ப நல்லா இருக்கு'' என்றாள் என் மாமா மகள்.

அனைவரின் கண்களும் எனது மாமாவின் மகளின் மீது இருந்தது. அங்கிருந்த நடுத்தர வயதான பெண் ஒருவர் ''அடி ஆத்தி எம்புட்டு அழகு'' என்று தனது முகவாய் கட்டையில் கைவைத்து சொன்னவர், பின்னர் தலையில் சொடுக்கிக் கொண்டார். எனது மாமா மகள் வெட்கத்தில் தலை குனிந்து கொண்டாள். அனைவரும் எனது மாமா மகளை எனது சகோதரி என்றே நினைத்து இருக்கக் கூடும் என சொல்ல முடியாது, ஏனெனில் என் அப்பா விலாவாரியாக எங்கள் குடும்பத்தை பற்றி, வெளியில் பெண் எடுப்பதற்கான  காரணங்கள் ஐந்து என தரகரிடம் எழுதிக் கொடுத்து இருந்தார்.

பெண்ணை அழைத்தார்கள். காபியுடன் பெண் வந்தார். எனது மாமா மகள் என்னை பார்த்து அவளது கட்டை விரலை உயர்த்தி காட்டினாள். அவளது முகத்தில் எத்தனை சந்தோசம். அந்த நேரம் பார்த்து எனது மொபைல் ஒலித்தது. எங்கும் எழுந்து செல்லாமல் அங்கிருந்தே பேசினேன். வேலை கிடைச்சிருக்குமே என நீங்கள் நினைத்து இருந்தால் அது சரிதான். எனக்கு வேலை கிடைத்த விசயத்தை என் அப்பா அம்மாவிடம் மெதுவாக சொன்னேன். ''பொண்ணோட ராசி'' என்றார்கள். ''என்  மாமா மகளோட ராசியா'' என்றேன் மெதுவாக சிரித்துக் கொண்டே. என் அப்பா என்னை முறைத்துவிட்டு ''பொண்ணு பார்க்க வந்த நல்ல நேரம், என் பையனுக்கு நல்ல உத்தியோகம் கிடைச்சிருச்சி'' என்றார் சந்தோசத்துடன். அனைவரும் சந்தோசப்பட்டார்கள். எனது மாமா மகளின் முகத்தில் இரட்டிப்பு மகிழ்ச்சி. இரண்டு கட்டை விரலை உயர்த்தி காட்டினாள். பெண் வெட்கத்தில் சிரித்தாள்.

ஒவ்வொருவருக்காக காபி தந்தவள் எங்களுக்கும் தந்தாள். போட்டோவைப் பார்த்ததைவிட நேரில் மிகவும் அழகாய் இருந்தாள். காபி அருந்தினோம். எனது மாமா மகள் ரசித்துக் குடித்து கொண்டிருந்தாள். பெண்ணை பார்த்து ''நல்லா சமைப்பியாம்மா'' என்றார் என் அம்மா. ''நல்லாவே சமைப்பேன்'' என்றாள். அவளது குரல் கேட்டதும் எனக்கு ''பேசு இன்னும் பேசு'' என சொல்லத் தோன்றியது. உடனே எழுந்து பெண்ணுடன் தனியாய் பேச வேண்டும் என அனுமதி பெற்று பேசினேன்.

என்னை மிகவும் பிடித்து இருப்பதாக சொன்னாள். எனக்கு மனதில் மிகவும் சந்தோசமாக இருந்தது. வேலைக்கு செல்ல விருப்பமா என்றேன். சமைப்பது, துணி துவைப்பது, வீட்டை சுத்தமாக வைத்திருப்பது எல்லாம் வேலைதானே. வேலை செய்யாமல் எவரும் சும்மா இருக்க இயலுமா என இயல்பாக பேசிய அவளது பேச்சில் காதல் கொண்டேன். என் அப்பாவின் விருப்பத்திற்கு ஏற்றவாறே அவர் பெண் பார்த்து வைத்திருக்கிறார் என நினைத்துக் கொண்டேன்.

ஊருக்கு போய் தகவல் சொல்றோம் என சொல்லாமல் அங்கேயே சம்மதம் சொன்னோம். என் மாமா மகள் என் வருங்கால மனைவியை கட்டிப்பிடித்தாள். அத்தனை சந்தோசம் அவளுக்கு.

சந்தோசமாக பேருந்து நிலையத்தில் வந்து நின்றபோது என்னருகில் வந்து  என் மாமா மகள் அதிக சந்தோசத்துடன் சொன்னாள் ''மாமா, என் ரூட் இப்போ கிளியர், தேங்க்ஸ் மாமா'' சிறு வயது காலங்களில் அவளும் நானும் ஓடிபிடித்து விளையாடிய தருணங்கள் நினைவில் ஆடியது.

அவளது செல்பேசி ஒலித்தது. சற்று தள்ளிச்  சென்றுதான் பேசினாள், இருந்தும் எனக்கு கேட்டது.  ''இனி நம்ம காதலுக்கு யாரும் தடையா வரமாட்டாங்கடா, நான் நினைச்ச வேலைக்கு நிச்சயம் போகலாம், இல்லைன்னா இத்தனை படிச்சும் அடுப்படியிலே அடைச்சி வைச்சிருப்பாங்கடா''

எனது வருங்கால மனைவிக்கு வேலைக்கு செல்ல விருப்பம் எனில் முதன் முதலாக எனது அப்பாவின் காரணத்தை எதிர்க்க காரணம் தேடிக் கொண்டிருந்தேன்.

Wednesday, 26 May 2010

அடியார்க்கெல்லாம் அடியார் - 13

மதுசூதனனை உள்ளே அழைத்து அமர வைத்தான் கதிரேசன். என்ன விபரம் எனக் கேட்டபோது விடுதியில் தன்னால் ஒரு பெரிய பிரச்சினை உண்டாகிவிட்டதாகவும், தானே பொறுப்பேற்றுக்கொண்டு விடுதியை விட்டு வெளியேறி வந்ததாகவும் தனது ஊருக்கு தகவல் தந்துவிட்டதாகவும் கூறியவன் தங்குவதற்கு ஒரு இடம் தேட வேண்டும் என்றான். கதிரேசன் நீலகண்டன் எழுந்ததும் கேட்டு சொல்வதாக சொன்னான். ஆனால் மதுசூதனன் தனக்கு வேறு ஒரு இடம் வேண்டும் என்பதில் குறிப்பாய் இருந்தான். 

இருவரும் வெளியே சென்று தேடினர். அப்பொழுது வழியில் வந்த  நாமம் அணிந்த ஒருவரிடம் மதுசூதனன் தனக்கு எங்கேனும் ஒரு வீடு அறை வாடகைக்கு கிடைக்குமா என்று கேட்டான். என்ன விபரம் என கேட்டவரிடம் நான் வைணவன் என ஆரம்பித்து கதையை சொன்னான் மதுசூதனன். நாமம் அணிந்தவர் மதுசூதனனுக்கு தனது வீட்டிலேயே ஒரு அறை ஏற்பாடு செய்து தருவதாக சொன்னார். தனது வீட்டு முகவரி தந்துவிட்டு காலையில் வருமாறு சொன்னார். கதிரேசன் மகிழ்ந்தான். உனக்கு மட்டும் தான் இடம் கிடைக்கும்னு நினைச்சியா என சிரித்தான் மதுசூதனன். 

''எங்களோட தங்கி இருந்து இருக்கலாமே, ஏன் நாங்க சைவம்னு யோசிக்கிறியா?'' என்றான் கதிரேசன். ''இல்லை, நானும் சேர்ந்து எதுக்கு தொல்லை தரனும்னுதான் வேறு வீடு பார்க்கச் நினைச்சேன்'' என்றான் மதுசூதனன்.

இத்தனை நாள் சமண சமயம் பற்றி பேசாத கதிரேசன் அன்று சமண சமயத்தைப் பற்றி மதுசூதனனிடம் கூறினான். மதுசூதனன் கோபம் கொண்டவனாய் ''அது எல்லாம் வைணவத்தைப் பத்தி தப்பா சைவர்கள் எழுதியது'' என்றான். அதற்கு கதிரேசன் ''அப்படின்னா சைவத்தைப் பத்தி தப்பா வைணவர்கள் எழுதியதா?'' என்றான். மதுசூதனன் யோசித்தான். ''நீ நல்லாப்படிச்சிப் பாரு வேத மதம்னும், திருஞானசம்பந்தரைப் பத்தியும் கூட அவதூறா எழுதியிருக்காங்க'' என்றான் கதிரேசன். மதுசூதனன் ''ஏன் இப்போ இதைப்பத்தி என்கிட்ட பேசுற,  நானே விடுதியில ஒரு பிரச்சினைக்கு ஆளாகி வந்துருக்கேன், அப்படியிருந்தும்'' என கூறினான். ''இல்லை எனக்கு என்னமோ மொத்த வரலாறு திரிக்கப்பட்டு இருக்குனு மனசுக்கு தோணுது, அதான் உன்கிட்ட சொன்னா நீயும் என்ன ஏதுனு பார்ப்ப'' என்றான் கதிரேசன். ''பார்க்குறேன், ஆனா இப்ப வேணாம், நாளைக்கு நான் சிவநாதன் சாரை வேறப் பார்க்கனும்'' என்றான் மதுசூதனன். கதிரேசன் மேற்கொண்டு எதுவும் பேசாமல் விட்டான்.

உறங்கிக் கொண்டிருந்த நீலகண்டன் 'கதிரேசா கதிரேசா' என அழைத்தார். ''தாத்தா'' என்ற கதிரேசன் அவரது அறையில் விளக்கைப் போட்டுப் பார்த்தான். நீலகண்டன் கதிரேசனை அருகில் அழைத்து அவனது தலையில் கையை வைத்தார். அடுத்த சில விநாடிகளில் அவரது கண்கள் அசைய மறுத்தது. ''தாத்தா'' என அலறினான் கதிரேசன். மதுசூதனன்  அறைக்குள் ஓடி வந்தான்.

நீலகண்டனின் உடல் அசைவற்றுப் போனதைக் கண்டு பதறிய கதிரேசன் மதுசூதனனை அவர் அருகில் இருக்கச் சொல்லிவிட்டு மருத்துவரை அழைக்க ஓடினான். நீலகண்டனையேப் பார்த்துக் கொண்டிருந்தான் மதுசூதனன். திருநீறு இன்னும் அழியாமல் அவரது உடலில் ஒட்டி இருந்தது. திருநீறு தாங்கிய நெஞ்சில் தனது கையை வைத்தான் மதுசூதனன். பாடினான். குரல் தழுதழுத்தது.

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பல்கோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா உன்
செவ்வடி செவ்வி திருக்காப்பு.

அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம்பல்லாண்டு
வடிவாய் நின்வலமார்பினில் வாழ்கின்றமங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதிவலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படைபோர் புக்குமுழங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே

அவரது நெஞ்சில் கையை வைத்து பலமாக அழுத்தியபடியே பாடி முடித்தவன்  ''எம்பெருமானே சிவனே உதவி செய்யீரோ'' என ஓங்கி நெஞ்சை அழுத்தினான். திடுக்கிட்டு விழித்தார் நீலகண்டன். ''தாத்தா'' என அழைத்தான். ''செத்துட்டேன்னு நினைச்சேன், உயிர்ப்பிச்சைப் போட்டியோ'' என மதுசூதனனை படுக்கையிலிருந்தபடியே கைகள் எடுத்து கும்பிட்டார் நீலகண்டன். அவரது கட்டிலின் அருகில் இருந்த புத்தகத்தில் வரிகள் கண்டான் மதுசூதனன்.
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்,
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்,
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்,
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே

அந்த வேளையில் மருத்துவருடன் கதிரேசன் உள்ளே நுழைந்தான். கதிரேசன் நீலகண்டன் கட்டிலில் எழுந்து உட்கார்ந்திருப்பதைக் கண்டான். நீலகண்டனைப் பரிசோதித்த மருத்துவர்  ''இப்போதைக்கு பயப்படுறமாதிரி ஒண்ணுமில்ல சில பரிசோதனை செய்யனும்'' எனக் கூறிவிட்டு நாளை அதிகாலை நீலகண்டனை மருத்துவமனைக்கு வரச் சொல்லிவிட்டு சென்றார். இருவரும் நீலகண்டனின் அறையிலேயே இருந்தார்கள். நீலகண்டன் மேற்கொண்டு பேசாமல் தூக்கம் வருவதாக தூங்கினார்.


''என்ன செய்தாய், எப்படி எழுந்தார்'' எனக் கேட்டான் கதிரேசன். தான் தன் தந்தையிடம் கற்றுக்கொண்ட முதலுதவி செய்தேன் என்றான் மதுசூதனன். மதுசூதனனை கட்டிப்பிடித்தான் கதிரேசன். தூக்கம் கண்களைச் சுழட்ட கட்டிலுக்கு அருகிலேயே உறங்கினார்கள்.

நீலகண்டன் காலையில் எழுந்து குளித்துவிட்டு திருநீறு பூசிக்கொண்டு வழக்கம்போல பூஜை அறையில் அமர்ந்தார். அவருடன் கதிரேசனும் அமர்ந்தான். சிறிது நேரத்தில் மதுசூதனனும் பூஜை அறைக்குள் நுழைந்தான். ''பெருமாளை அங்க வைச்சி நீ பூஜை பண்ணு'' என பூஜை அறையில் ஓரிடம் காட்டினார் நீலகண்டன். 


பூஜைகள் முடிந்து மருத்துவமனைக்குச் சென்றார்கள். அதிகாலையிலேயே நீலகண்டனின் இதயம், இரத்தம் சிறுநீர் என பரிசோதனை தொடங்கியது. கல்லூரிக்குச் செல்லும் வேளை நெருங்கிட மதுசூதனனை கல்லூரிக்குப் போகச் சொன்னான் கதிரேசன். மதுசூதனன் உடனிருப்பதாக சொன்னான். சில நாட்கள் கழித்து வரச் சொன்னார் மருத்துவர். வீட்டிற்கு வந்து ஓய்வெடுத்தார் நீலகண்டன். கதிரேசன் சங்கரன்கோவிலுக்கு தகவல் சொன்னான். கல்லூரிக்கு செல்லாமல் அவருடனே இருந்தான்.

மதுசூதனன் புதிய வீட்டிற்கு சென்று தனது பொருட்களை வைத்துவிட்டு மதிய வேளையில் கல்லூரியில் சிவநாதனை சந்தித்தான். சிவநாதன் அவனை கடுமையாக எச்சரித்தார். சாதி மத வேறுபாட்டினை எவரேனும் தூண்டும் வகையில் நடந்தால் கல்லூரியில் இருந்து விலக்கிவிடுவதாக கூறினார். தனது தவறை உணர்ந்த மதுசூதனனுக்கு ஒரு முறை வாய்ப்பளிப்பதாக கூறி அனுப்பினார். கல்லூரியில் மாணவர்கள் மிகவும் கட்டுப்பாடுடன் இருக்கக் கற்றுக்கொடுக்கப்பட்டனர்.

அன்று மாலையில் அனைவரும் சங்கரன்கோவிலில் இருந்து வந்து சேர்ந்தார்கள். நீலகண்டனை அவர்களுடன் அழைத்துச் செல்ல முடிவெடுத்தார்கள். கதிரேசன் தனித்து தனியாய் நின்றான். மதுசூதனன் அப்பொழுது நீலகண்டனின் வீட்டிற்குள் நுழைந்தான். 


(தொடரும்) 

Friday, 21 May 2010

புகைபிடித்தலும், தண்ணி அடித்தலும்

ராமானுசபுரம்னு தமிழ்நாட்டுல தெற்கால இருக்கற ஊருலதான் சின்னசாமி வாழ்ந்து வந்தான்.

சின்ன வயசுல வயக்காட்டுல கூலிக்காக ஓடியாடி வேலை செஞ்சிட்டிருந்த காலத்தில வெங்கடசனோட சேர்ந்து முத முதல தோட்டத்தில மறைஞ்சி நின்னு குடிக்க ஆரம்பிச்ச சிகரெட்டு பழக்கத்தை சின்னசாமி தொடங்கினப்போ அவனுக்கு பதினேழு வயசுதான். அதக்கப்பறம் அந்தப் பழக்கத்தை நிறுத்திக்கவே இல்லை. வெங்கடேசன் படிச்சி பட்டம் வாங்கி திருச்சியில வேலைக்குச் சேர்ந்துட்டான், ஆனா இந்த சின்னசாமி ராமனுசபுரத்தைவிட்டு எங்கயும் போகலை. படிச்சிட்டு இருக்கறப்போ ஊருக்கு எப்பவாச்சும் வர வெங்கடேசன், சின்னசாமிகிட்ட 'சிகரெட் பழக்கத்தை விட்டுடா'னு சொன்னாலும் சின்னசாமி விடுறதா இல்லை.

அதோட விட்டானா சின்னசாமி, இருவது, இருவத்தி ரண்டு வயசுலேயே உடல் அலுப்புக்குனு வயக்காட்டு வேலை முடிஞ்சதும் கொஞ்சம் சாராயம் வாங்கி குடிக்க ஆரம்பிச்சான். அதுவே கொஞ்சம் அதிகப்படியாப் போக ஆரம்பிச்சிருச்சி. குடிக்காம அவனால ஒருநாளும் இருக்க முடியல. இருந்தாலும், குடிச்சிட்டு அவனோட வீட்டுல போய் பேசாம படுத்துக்குவான் சின்னசாமி. ரோட்டுல கத்தறது, கெட்ட கெட்ட வார்த்தை பேசறதுனு எதுவுமே பண்ணமாட்டான் சின்னசாமி.

இப்படி இருந்த சின்னசாமிய, தங்கராசு மக கல்யாணி விரும்பினா. அப்போ சின்னசாமிக்கு வயசு இருவத்தி மூணு இருக்கும், கல்யாணிக்கு பத்தொன்பதுதான் இருக்கும். இந்த காதலு விசயத்தை சின்னசாமிகிட்டயும் அவ சொல்லி வைச்சா. கூடவே ஒரு கட்டளை போட்டுட்டா. 'எப்போ சிகரெட்டையும், குடியையும் விடறியோ அப்பதான் கட்டிக்குவேனு' சொன்னதும் 'சரி சரினு' சொன்ன சின்னசாமிக்கு சாராயம் குடிக்காமலும், சிகரெட்டு பிடிக்காமலும் இருக்க முடியல. கல்யாணியை சின்னசாமிக்கு ரொம்பவேப் பிடிச்சிப் போயிருந்துச்சு. இருந்தும் என்ன செய்ய?

கல்யாணிகிட்ட 'என்னைக் கட்டிக்கோ, கல்யாணத்துக்கப்பறம் மாறிருவேன், உடம்பு வலி அதான் குடிக்கிறேனு' ஒரு நொண்டிச் சாக்கு சொன்னான் சின்னசாமி. அதுக்கு கல்யாணி 'ஏன் நானும்தே காட்டுல மேட்டுல வேலை செய்யலயா, உடம்பு வலிக்குதுனு நா குடிக்கிறேனா' னு ஒரே வெட்டா வெட்டிப் பேசிட்டுப் போயிட்டா.

சின்னசாமி யோசிச்சிப் பார்த்துட்டு ஒரு வாரம் சிகரெட், குடியை விட்டான், ஆனா அவனால அதுக்கு மேல தாக்குப்பிடிக்க முடியல. 'குடிகாரப் பயலுக்கு என் மகளைத் தரமாட்டேனு கல்யாணியோட அப்பா ஒத்த காலுல நின்னுட்டாரு, அதோட அந்த கல்யாணியும் சின்னசாமிகிட்ட இப்படி இருக்க உன்னோட என்னால குடும்பம் நடத்த முடியாதுனு சொல்லிட்டுப் போயிட்டா'

இதனால மனசு உடைஞ்ச சின்னசாமி சிகரெட்டும், சாராயமும் கொஞ்சமா, கொஞ்சமா விட முயற்சி பண்ணினான். சின்னசாமிய 'திருத்திப் புடலாம்' னு கல்யாணிக்கு லேசா கூட நம்பிக்கை வரவேயில்லை. கல்யாணி நினைச்சமாதிரியே மறுபடியும் சின்னசாமி குடிக்க ஆரம்பிச்சிட்டான். 'இனி இந்த போக்கத்தவனை நம்பி புரயோசனமில்லைனு' கல்யாணி அப்பா சொன்னதைக் கேட்டு கல்யாணி வேற கல்யாணம் கட்டிட்டுப் போயிட்டா.

இந்த சின்னசாமிக்கு தன் மேல கோவம் கோவமா வந்துச்சு. என்ன பண்ண? யாருமே பொண்ணு தரமாட்டேனு சொல்லிட்டாங்க. இந்த சின்னசாமியும் கல்யாணி நினைப்புலயே இருந்துருவேனு ஒரு வசனம் பேசினான். அவன் பேசினது வசனமாத்தான் இருந்துச்சினாலும், அப்படியே வாழ ஆரம்பிச்சிட்டான்.

சின்னசாமிக்கு வயசு ஏறிக்கிட்டேப் போக ஆரம்பிச்சிச்சு. சிகரெட்டுல கார்பன் மோனாக்ஸைடுனு ஒரு காத்து இருக்கு. அந்த காத்து நம்ம உடம்புல இருக்கற செல்லுக்கு போகறதினால குறைச்சலான ஆக்ஸிஜன் தான் செல்லுக்கு எல்லாம் கிடைக்கும். அதனால செல் எல்லாம் வலிமை குறைஞ்சி போயிரும். அதோடு மட்டுமா, சிகரெட்டுல டார் னு ஒரு எழவும் இருக்கு, அந்த எழவு புத்து நோய கொண்டு வந்து சேத்துரும். அப்புறம் நிக்கோட்டினு சொல்வாங்க, அதுதான் திரும்ப பிடி, திரும்ப பிடினு வம்பு பண்ணும். இப்படி சிகரெட்டு குடிக்கிறதுனால மூச்சுக்குழாயில இருக்க சின்ன சின்ன இழை போல இருக்க செல் எல்லாம் செயல் இழந்து தூசுகள எல்லாம் பிடிச்சி வைக்காது, அதனால நுரையீரலு வீங்கிரும்.

இதனால சின்னசாமி தளர ஆரம்பிச்சிட்டான். அவனோட வயசு என்னவோ இருவத்தி எட்டுதான். அதோட அவன் குடிச்ச சாராயம் அவனோட கல்லீரலுக்குப் பிரச்சினை தர ஆரம்பிச்சிச்சு. அப்படியும் கூட அவனால அதை நிறுத்த முடியல. சின்னசாமி எப்பப் பார்த்தாலும் இரும ஆரம்பிச்சிட்டான். அதனால அவனுக்கு இருமல் சின்னசாமினு பட்டப்பேரு கூட வைச்சிட்டாங்க. பாவி மனுசன், திருந்தறமாதிரி தெரியல. என்ன பண்ணுவான் சின்னசாமி!

இப்படி அவனோட கதையை கொஞ்ச நாளைக்கு முன்னால பார்க்குல எதேச்சையா என்கிட்ட பேசிட்டிருந்த வெங்கடேசன் ஒருநா சொன்னதும்,  உடனே சின்னசாமியப் போய் பார்க்கனும் போல இருந்திச்சி.

சின்னசாமிகிட்ட  பக்குவமா பேசினேன். சிரிச்சிகிட்டே சொன்னான் சின்னசாமி. 'எல்லாத்தையும் விட்டுறேன்னு'  ஆனா எனக்கு நம்பிக்கை இல்லை. இருந்தாலும் அவன்கிட்ட நிக்கோட்டின் பேட்ஜ் கொடுத்து எல்லாம் சொல்லிட்டு வந்தேன். கொஞ்ச நாளைக்கப்பறம் அதே பார்க்குல வெங்கடேசனை பார்த்தப்ப சொன்னான். சின்னசாமி இப்போ குடிக்கிறது இல்லை, பிடிக்கிறது இல்லைன்னு.

குடிச்சி  கேட்டுப் போன சாம்ராஜ்யம் இருக்கு. குடிக்கிறவங்க, பிடிக்கிறவங்க எல்லாம் கெட்டவங்க இல்லைன்னு வாதாடற கூட்டம் இருக்கு. இவங்களை யாரு கெட்டவங்கனு சொன்னா, அளவுக்கு அதிகமா எதை செஞ்சாலும் உடம்பு கேட்டு போயிரும்னு தானே சொல்றாங்கனு நினைச்சிகிட்டு சின்னசாமியை பார்க்கப் போயிருந்தேன்.

சின்னசாமி என்னைப் பார்த்து கும்பிட்டான். 'என்ன பழக்கமிது'அப்படின்னு சத்தம் போட்டேன். எனக்கு கல்யாணிபோல பொண்ணு கிடைப்பாளானு கேட்டான். எதுக்கு அப்படின்னு கேட்டேன். இப்போதான்ஆம்பளைங்க மாதிரி பொம்பளைங்களும் குடிச்சிட்டும் பிடிச்சிட்டும் இருக்காங்களாமேனு சொன்னான். கலாச்சார சீரழிவு அப்படின்னு என்ன என்னமோ பேசினான் சின்னசாமி. நிக்கோட்டின் பேட்ஜ் வேணுமான்னு கேட்டேன், வேணாம்னுட்டான். இத்தனை வருஷ உத்தியோகத்துல என்னால ஒரு சின்னசாமியைத் தான் திருத்த முடிஞ்சது.

இதை நினைச்சி நான் என்ன தண்ணி அடிக்கவா முடியும், இல்லைன்னா ஊதித்தான் தள்ள முடியுமா? பொழப்பு அத்தவங்க பண்ற வேலை அதுனு கண்ணுல படற சின்னசாமிக்கெல்லாம் நிக்கோட்டின் பேட்ஜ் தந்துக்கிட்டுதான் இருக்கேன். தலையில ஒட்டிக்கோனு தூக்கி வீசிட்டு, புகைய என் முகத்துல ஊதிட்டு போறவங்களப் பாக்குறப்ப மனசு வலிக்கும். அதுக்காக நான் லாட்ஜ் எல்லாம் போடறது இல்ல. வருஷம் ஓடிருச்சி. பத்தோ பதினைஞ்சி சின்னசாமிகளை, ரெண்டோ மூனோ சின்னசாமினிகளை திருத்தினேன். வாழ்ந்துட்டு இருந்தப்ப எனக்கு ஒரு யோசனை வந்துச்சு, சிகரெட், சாராயம் உருவாக்கிறதை நிறுத்தினா என்னனு. எந்த தொழில் அதிபர்களும் என் பேச்சு கேட்கலை. என்ன பண்றது. இந்த வாழ்க்கைன்னாலே அப்படித்தான்.

இந்தாங்க நிகோட்டின் பேட்ஜ். நிகோடின் பற்றி மேலும் அறிய