Friday, 7 May 2010

அடியார்க்கெல்லாம் அடியார் - 10

முதலில் கதிரேசன் எடுத்துக்கொண்டது திருஞானசம்பந்தர் பற்றியது. தினமும் சிறிது சிறிதாக  படிக்க ஆரம்பித்தான். தனது கல்லூரிப் படிப்பும் படிக்க வேண்டும் என்பதால் அவனால் முழு கவனமும் இதில் செலுத்த இயலவில்லை. நாளடைவில் கல்லூரி படிப்பையே வேண்டாம் என ஒதுக்கும் அளவுக்கு மனம் நினைத்தது. இது குறித்து நீலகண்டனிடம் கூறியபோது பக்திக்காக அனைத்தையும் துறந்துவிடுவது என்பது நல்லதில்லை, இந்த உலகத்துக்கு ஏற்றதுமில்லை என்றே பதில் அளித்து இருந்தார்.

வாரம் தவறாமல் ஊருக்குச் சென்று வந்து கொண்டிருந்தான் கதிரேசன். கதிரேசன் வந்து செல்வதையே மிகவும் சந்தோசமாக கருதினார் செல்லாயி. கதிரேசனும் தனது எண்ணத்தை அன்னையிடம் கூற அவரோ வழக்கம்போல பதறினார். 'ஏன்பா உன் மனசு இப்படி போகுது' என்றே அழுதார். கதிரேசன் தனது மனநிலையை மறைக்க விரும்பவில்லை என்று அன்னையிடம் சொன்னபோது அன்னை ஆறுதல் உற்றார். மறைத்து வாழாத வாழ்க்கை அத்தனை சுலபமில்லை என்பதை அவர் அறிந்து இருந்தார். இப்படியாக நாட்கள் நகர்ந்து கொண்டே இருந்தது.

திருஞானசம்பந்தரின் வாழ்க்கை வரலாறு படித்தபோதுதான் சமண சமயம் பற்றி தெரிந்து கொண்டான் கதிரேசன். கி.பி ஆறாம் ஏழாம் நூற்றாண்டிலிருந்து கி.பி பதினோராம் நூற்றாண்டு வரை நடந்த விசயங்கள் அவன் மனதை என்னவோ செய்துவிட்டது. அப்படிப் படித்தபோதுதான் திருநாவுக்கரசர் சமண சமயத்தைச் சார்ந்தவர் என்ற விசயம் அறிந்து கொண்டான். அவனுக்கு மனதில் பல கேள்விகள் எழத் தொடங்கியது. ஒவ்வொரு கேள்வியையும் நீலகண்டனிடமே கேட்டுக் கொள்ள நினைத்தான். ஆனால் யாராலும் எளிதாக பதில் சொல்ல முடியாது என்ற ஒரு முடிவுக்கு வந்தான். ஆனால் தொடர்ந்து படிப்பதை நிறுத்தவில்லை ஆனால் பாடல் பாடுவதை சற்று காலம் நிறுத்தி இருந்தான்.

முதல் தேர்வு வந்தது. தேர்வோடு விடுமுறையும் வந்தது. அப்பொழுது நீலகண்டன் தனது மகள் இருக்கும் சங்கரன்கோவிலுக்குச் செல்வதாக குறிப்பிட்டு கதிரேசனையும் அழைத்தார். கதிரேசனுக்கு அவருடன் செல்ல மனம் இசைந்தது. ஊருக்குச் சென்று அன்னையிடம் கூறிவிட்டு வருவதாக சொன்னான். நானும் உடன் வருகிறேன் என நீலகண்டனும் கிளம்பினார். புளியம்பட்டியில் ஒருநாள் மட்டுமே தங்கினர். அப்பொழுது செல்லாயி நீலகண்டனிடம் தனது மகனின் நிலையைச் சொல்லி வருந்தினார். நீலகண்டன் மேலும் விசயங்கள் கூறி, கவலை வேண்டாம், எல்லாம் சிவன் பார்த்துக் கொள்வான் என்றார். சற்று ஆறுதல் அடைந்தார் செல்லாயி.

இருவரும் சங்கரன் கோவில் அடைந்தனர். தந்தையை சந்தோசத்துடன் வரவேற்றாள்  பார்வதி. தந்தையுடன் வந்த கதிரேசனையும் புன்னகையுடனே வரவேற்றாள். வீட்டினில் அவர்கள் அமர்ந்து இருக்க நீலகண்டனின் இருபது வயதான பேரன் சங்கரனும், பதினேழு வயதான பேத்தி ஈஸ்வரியும் உள்ளே நுழைந்தனர். வணக்கம் சொல்லிக் கொண்டார்கள். ஈஸ்வரியைக் கண்ட கதிரேசனது  மனம் முதன் முதலாய் ஒரு பெண்ணைக் கண்டு சற்றே அல்லாடியது.

ஈஸ்வரியும் கதிரேசனை தெரிந்தவள் போல் நன்றாகப் பேசினாள். இரண்டு நாட்கள் கடந்த வேளையில் சங்கரன்கோவிலில் இருந்த சிவன் ஆலயத்தில் அமர்ந்திருந்த கதிரேசன் தன்நிலை மறந்து நன்றாக உறங்கிவிட்டான். மாலைப் பொழுதும் கடந்து கொண்டிருந்தது. யாரும் அவனை எழுப்பிவிடாமல் சென்றது ஆச்சரியமாக இருந்தது. ''சிவனே என்ன பாவம் செய்துவிட்டேன்'' என்று சொல்லியவாரே அவனாகவே எழுந்தான். ''தூங்கினது பாவம் இல்லை'' என்றார் அருகிலிருந்தவர். சிவன் கோவிலில் இருந்து வீட்டுக்கு வந்தபோது ஈஸ்வரியைக் கண்டான் கதிரேசன்.

ஈஸ்வரியிடம் அவளைக் கண்டதும் தனது மனதில் ஏற்பட்ட சலனத்தை நேரடியாகவேச் சொன்னான். அவள் பதிலேதும் பேசாமல் புன்னகைத்தவள் சிறிது இடைவெளிவிட்டு ''நீ சிவனே கதினு இருக்கறவனு எங்க தாத்தா சொல்லிட்டு இருந்தாரு'' என்றாள். ''ஆமாம் எனக்கு குடும்ப பந்தமே வேண்டாம்'' என்றான் கதிரேசன். ஆறு மாதம் இளையவளாக இருந்தாலும் துணிச்சலுடனே பேசினாள். ''வேண்டாம்னு நினைச்சப்பறம் எதுக்கு மனசு அலைபாயனும்'' என்று சொல்லிவிட்டு கோவில் நோக்கிச் சென்றாள். கதிரேசனின் மனம் ஓரிடத்தில் இல்லை.

கதிரேசனின் மனம் சஞ்சலம் கொண்டதை அறிந்து கொண்டார் நீலகண்டன். சிலநாட்கள் விடுமுறை இருக்கும்போதே செல்லலாம் எனச் சொன்ன நீலகண்டனிடம் விடுமுறையை கழித்துவிட்டுச் செல்லலாம் என கதிரேசன் சொன்னபோது நீலகண்டன் சஞ்சலத்திற்கான காரணம் தெரிந்து கொண்டார். ''சிவனை மட்டும் நீ நினைச்சி வாழ முடியுமா?'' என்றார் நீலகண்டன். கண்கள் நீரால் நிறைந்தது கதிரேசனுக்கு. ''சைவம் குடும்ப பந்தத்தை வெறுக்கச் சொல்லலை'' என்றார் நீலகண்டன். கதிரேசன் மனம் எதுவென முடிவுக்கு வரமுடியாமல் தள்ளாடியது.

(தொடரும்)

Thursday, 6 May 2010

ஒரு இயக்குநர் தேடும் கதை

எப்படியாவது திரைப்படத் துறையில் இயக்குநர் ஆகிவிட வேண்டுமெனும் கனவு பலருக்கும் இருக்கிறது. இதற்காக வெயில், மழை, உணவு, நட்பு என எதையும் பொருட்படுத்தாமல் அந்த கனவினை நிறைவேற்ற பாடுபடும் பலர் கண்களுக்குத் தெரிகிறார்கள்.

ஆனால் இவர்களில் பலர் திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பினை பெறுவதே இல்லை. இவர்களின் மன நிலை ஒரு கனவு வட்டத்தில் சுற்றிக் கொண்டே இருக்கும். ஆயிரக்கணக்கானவர்களில் ஒரு சிலரே வெற்றி பெறுகிறார்கள். அவர்களில் வெகு சிலரே தொடர்ந்து வெற்றியைத் தக்க வைத்து கொள்கிறார்கள்.

திரைப்படத்துறையில் கால் பதிக்க கதையை தேடி அலையும் இயக்குநர்களை விட, கதை சொல்ல துடிக்கும் இயக்குநர்களே அதிகம். ஒரு வரியில் எவர் ஒருவர் கதையை சொல்கிறாரோ அவரே சிறந்த கதை உடையவர். ஆனால் ஒரு வரி கதையை எப்பிடி திரைப்படம் ஆக்குவது. அதுதான் இயக்குநரின் சிந்தனைக்கு சவால். எப்படிப்பட்ட நல்ல கதையையும் ஒன்றுமில்லாமல் ஆக்குவது இயக்குநரிடம் உள்ளது.

ஒரு வரி கதையின் துணை கொண்டு நான்கு  பாடல்கள், ஒரு சண்டை, சில நகைச்சுவைகள்  என திரைக்கதை எழுதிவிட்டால் ஒரு திரைப்படம் தயார் ஆகிவிடும். இப்படி கதை வேண்டும் என ஓடித் திரியும் இயக்குநர்களின் மத்தியில் கொஞ்சம் கூட சலிப்பில்லாமல் ஒரு கதாநாயகன், ஒரு வில்லன், ஒரு காதலி என அடிதடிகளுடன் கூடிய படங்களும் எடுக்கப்படுகின்றன. இந்த படங்களுக்கு கதை என்பதை விட எடுக்கப்படும் விதமே முக்கியம்.

எத்தனையோ இயக்குநர்கள் என்ன கதைகள் வைத்து இருக்கிறார்கள், கேட்டால் எனது இருபது வருட கனவு என சொல்பவர்களும் உண்டு. மேலும் பார்க்கும் விசயத்தையெல்லாம் எழுதி வைத்துக் கொண்டு இதோ ஒரு கதை என சொல்பவர்களும் உண்டு. குறும் படங்கள் எடுத்ததும் பெரிய திரைப்படம் எடுத்துவிடலாம் என எண்ணுபவர்களும் உண்டு.

இப்படியெல்லாம் இந்த கால கட்டடத்தில் இருக்கும் இயக்குநர்கள் மத்தியில் ஒரு இயக்குநராகும் கனவுடன் ஒருவர் கதை தேடிக் கொண்டு இருந்தார். அவர் தேடத் தொடங்கிய வருடம் 1920. அப்போது அவருக்கு வயது 18. அவரால் என்ன கதை என முடிவு செய்ய முடியவில்லை. அப்போது வெறும் ஊமைப்படங்கள் மட்டுமே.  விவசாயம் பார்த்துக் கொண்டே இருந்தவர் திரைப்படங்களை பார்த்து பார்த்து என்ன கதை இது என்ன கதை இது என சொல்லிக்கொண்டே இருந்தார். ஆனால் ஒரு நல்ல கதை அவருக்கு கிடைத்த பாடில்லை. எங்கு பார்த்தாலும் பசுமையான மரங்களையும், நல்ல விளைநிலங்களையும் ஊரைச் சுற்றி உருவாக்கினார். 1976 ல் நோய்வாய்ப்பட்டார். தன்னால் ஒரு நல்ல கதையை உருவாக்க முடியவில்லை எனும் ஏக்கம் இருந்து கொண்டே இருந்தது. செத்துப் போய்விடுவோமோ எனத் துடிதுடித்தார். தனது மகனை அழைத்தார். எனது கதையை ஒரு திரைப்படம் ஆக்கிவிடு என சொல்லிவிட்டு உயிர் துறந்தார்.

திரைப்படத்தில் கதை வேண்டும் என கேட்பவர்களே உங்கள் வாழ்க்கையை ஒரு நல்ல திரைப்படம் ஆக்கும் அளவுக்கு வாழ வேண்டும் என எண்ணியது உண்டா. இதோ ஒரு இயக்குநர் ஆகும் கனவுடன் நானும் கதை செதுக்க ஆரம்பித்து விட்டேன்.

காமம் - 5

காமம் - 4

எந்த ஒரு ஆணும்  சரி, பெண்ணும் சரி தனது அந்தரங்கங்களை  அத்தனை எளிதாக வெளியே சொல்வதில்லை. விளையாட்டாகப் பேசித் திரிதல் வேறு வகை சார்ந்ததாகும். தனது ரகசியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றுதான் எவரும் விரும்புவார்கள். தன்னால் வெளிப்படையாக உலகில் நடத்த முடியாதவற்றை கனவுகள் மூலம் தீர்த்துக் கொள்ளும் நிலைக்கு பலர் தங்களை தள்ளிக் கொள்வது நடந்து வரும் செயலாகும். சமுதாய கட்டமைப்பில் இருந்து கொண்டு பாலியல் சிந்தனைக்கு உட்பட்டு இருக்கும் பலர் காமத்திற்கு அடிமைப்படுதலோடு தங்களது வாழ்க்கையையும் தொலைத்து விடுகிறார்கள். இப்படிப்பட்ட காமம் அவசியமா என்பதை சிந்திக்கும் திறன் கூட இருப்பதில்லை.

எவருக்கும் தெரியாமல் தப்பு செய்வதில் இருக்கும் ஈடுபாடு மன நிலை நோயாளியாக ஒருவரை மாற்றி விடுகிறது. விளையாட்டாக ஆரம்பிக்கும் செயல்கள் பல விபரீதமான நிலைக்கு கொண்டு சென்று விடுகிறது. இதில் காமத்தின் செயல்பாடு மிகவும் கொடுமையானது. பெண்களை போகப் பொருளாகவே பார்க்கும் சமுதாயத்தில் இருக்கும் ஆணின் கண்கள் போலவே, ஆண்களை போகப் பொருளாகப் பார்க்கும் பெண்கள் என சமுதாயத்தில் அதிகம் இருப்பதில்லை. இத்தகைய வேறுபாடுகள் இடத்திற்கு இடம் மாறுபாடு அடையும். பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தேன் என்பது ஒரு ஆணுக்கு பெருமை தரக் கூடிய விசயமாகவும், பல ஆண்களுடன் தொடர்பு வைத்திருக்கும் பெண்ணை விபச்சாரி எனும் பட்டத்துடனும் பார்க்கும் இந்த சமுதாயத்தின் புத்தி மிக மிக கோணலானது.

தாய், சகோதரி என  வேறுபாடு படுத்தி பார்க்கும் அளவுக்கு சிந்தனை பெருகிப் போன கட்டத்தில் தங்களுக்கு சம்பந்தம் இல்லாத பெண்களைப் பார்க்கும் போது மட்டும் ஏன் இந்த காம உணர்வு ஒரு கட்டுப்பாட்டில் இருப்பது இல்லை. இதற்கு  வயதில் ஏற்படும் கோளாறு என்றோ, இயற்கையான விஷயம் இது என்றோ எவரும் காரணம் கற்பித்துக் கொள்ள இயலாது. சிந்திக்கும் பக்குவம் தொலைந்து போனது என்றுதான் பொருள் கொள்ள வேண்டும்.

பிறன் மனை கள்வர்கள் என ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் எச்சரிக்கை செய்துதான் வைக்கப்பட்டு இருக்கிறது. ஒரு ஆண் தான் பார்க்கும் எல்லா பெண்களையும், ஒரு பெண் தான் பார்க்கும் எல்லா ஆண்களையும் காதல் செய்ய, திருமணம் முடித்துக் கொள்ள நினைப்பது சுரப்பிகளினால் ஏற்படும் மாற்றம் என்று எவரும் சொல்லித் திரிய இயலாது. சுரப்பிகள், நரம்புகள் செயல்பாட்டினை மீறி எண்ணங்கள் ஒன்று அனைவரிடமும் இருந்து கொண்டு இருப்பதை எவரும் மறுக்க இயலாது.

பயத்துடனே எவரும் தப்பினை செய்ய ஆரம்பிக்கிறார்கள். அந்த தப்பானது தண்டிக்கப்படாமல் போகும்போது மேலும் மேலும் அந்த தப்பை தெரிந்தே செய்கிறார்கள். ஒரு பெண் தனது கணவனுடன் வாழ்ந்து கொண்டே மற்றொரு மணமான ஆணுடன் தவறான உறவு வைத்திருந்தது கண்டுபிடிக்கப் பட்டபோது ஆண் மட்டுமே தண்டிக்கப்பட்டார். அந்த பெண்ணுக்கு வெறும் வசவு பேச்சுகளோடு நின்று போனது. ஏனெனில் ஆண் மட்டுமே தவறு செய்பவனாக பார்க்கப்படுகிறான். இதில் பெண்களுக்கு என விதிவிலக்குகள் இருக்கத்தான் செய்கிறது. இது போன்ற பெண்களை  கிராமத்து வழக்கத்தில் சொல்லப்படும் வார்த்தைகளை தள்ளி வைக்கிறேன். இப்படிப்பட்ட மறைமுகமான தவறான நடைமுறைக்கு என்ன காரணம் எனில் சமுதாய கட்டமைப்புகள் மட்டுமல்ல, தனது காமத்தை கட்டுபாட்டில் வைத்துக் கொள்ள தெரியாதவர்கள் தான். மேலும் வாய்ப்பு கிடைக்காதவரை அனைவரும் யோக்கியர்கள் என சொல்லக் கேள்விப்பட்டிருப்பதையும்  காணும்போதே, மானம் பெரியதென பலர் வாழ்ந்து கொண்டிருப்பதையும் காணலாம். ஒருவனுக்கு ஒருத்தி எனும் கட்டுப்பாடுடன் வாழும் பல கோடி மக்கள்  இருக்கத்தான் செய்கிறார்கள்.

காமத்தை முன்னிறுத்தி எவரும் காதல் புரிவதில்லை. காதல் வசப்படும் போது காமம் தொலைப்படும். குடும்ப வாழ்க்கைக்கு முன்னர் ஏனோ தானோவென திரியும் பலரும் குடும்ப அமைப்பில் உட்படும் போது எப்படி ஒரு கட்டுக் கோப்புடன் வாழச் சாத்தியப்படுகிறார்கள்? சமுதாய அமைப்பில் தங்களுக்கென ஒரு நிலையை ஏற்படுத்தி கொள்ளும்போது ஒரு அச்சம் வந்து சேரும். ஆனால் அதையும் மீறி தனது நிலை தெரிந்தே தப்பினை செய்யத் தூண்டுவது கட்டுப்பாடில்லாத காமம்.

இந்த காமத்தை அறவே துரத்துவது பிரம்மச்சரியம். ஆனால் பிரம்மச்சரியம் என்பது அத்தனை எளிதான விஷயம் அல்ல. என்னைப் பாதித்த ஒரு கதை உண்டு.  உயர் வகுப்பை சேர்ந்த ஒருவரின் மனைவி கடும் நோயால் பாதிக்கப்பட்டு இருக்கவே தினமும் அவர் தனது மனைவிக்கு பணிவிடைகள் செய்து வருவதையே பெரும் பேறாக கருதி வருகிறார். ஊரில் இருப்பவர்கள்  தருவதை  மட்டும் பெற்றுக் கொண்டு வாழ்க்கையை நகர்த்துகிறார். இவ்வாறு இருக்கும்போது ஒரு பணியாக அவர் ஒருமுறை தனியாய் காட்டின் வழியில் நடந்து செல்லும் போது எதிர்ப்பாதையில் தாழ்ந்த வகுப்பினை சார்ந்த பெண் ஒருவர் வருவதை காண்கிறார். அப்பொழுது அவரின் மனம் அல்லாடுகிறது. சல்லாபத்தில் தள்ளாடுகிறது. இப்பொழுது தான் பல வருடங்களாக கட்டிக்காத்த பிரமச்சர்யம் பற்றி, மனிதரில் ஏற்றத் தாழ்வு பற்றி அவருக்கு எந்த சிந்தனையும் எழவில்லை. சுற்றும் முற்றும் பார்க்கிறார். எவரும் கண்ணுக்குத் தென்படவில்லை என்பதை உறுதி செய்ததும் அந்த பெண் அருகில் வந்ததும் அந்த பெண்ணின் கையைப் பிடிக்கிறார். பிரம்மச்சர்யம் தொலைந்து போகிறது.

இப்படித்தான் பலர் தாங்கள் வாழும் வாழ்க்கை முறை, சமுதாயத்தில் இருக்கும் நன்மதிப்பு என பல விசயங்களை இந்த கட்டுப்பாடில்லாத காமத்திற்கு பலியாக்கி விடுகின்றனர். இது இயற்கையான விசயமா? அல்லது கட்டுப்பாடில்லாத மனதினால் ஏற்படும் அசிங்கமா?

(தொடரும்)