Sunday, 25 April 2010

அங்காடித் தெரு - டிவிடி விமர்சனம்

இந்த படத்தைப் பத்தின எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகம்தான். கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி வெயில் அப்படின்னு ஒரு படத்தைப் பார்த்துட்டு அட நம்ம ஊரு அப்படின்னு ஒரு பாசம் வந்து சேர்ந்துச்சு. அதுக்கப்பறம் இப்ப வெயில் படத்தோட கதைய நினைச்சு பார்த்தா முழு கதையும் ஞாபகத்துக்கு வந்து சேர மாட்டேங்குது. இன்னொரு தரம் வெயில் படத்தைப் பார்த்துரனும்னு முடிவு பண்ணிட்டேன். ஆனா இந்த அங்காடித் தெருவுக்கு அப்படி ஒரு நிலை ஒருபோதும் ஏற்படாது.

அங்காடித் தெரு அங்காடித் தெரு அப்படின்னு சொல்றாங்களே, இந்தப் படத்தைப் பாத்துட்டு பல பேரு மனசு ரொம்ப கனமா உணர்ந்தாங்கன்னு கேள்விபட்டு படம் பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி விட்டு இருந்துச்சி.

ரொம்ப நாளுக்கு முன்ன இப்படித்தான் பொற்காலம்னு பொக்கிஷம்னு ஒரு படத்தை ரொம்ப பொறுமையா பார்த்து முடிச்சேன். நானும் நல்லா இருக்குனு மத்தவங்ககிட்ட சொல்லி வைக்க படத்தை பாத்தவங்க சரியான குப்பைனு சொல்லிட்டாங்க. அப்படி சொன்னாக்கூட பரவாயில்லை, என்ன ரசனை உனக்குன்னு என்னைத் திட்டிட்டாங்க. அப்புறம் கந்தசாமி படத்தை நான் பாக்காம இருந்துட்டேன். மத்தவங்க எல்லாம் கந்தசாமி படத்தைப் பாத்துட்டு ஆஹா ஓகோனு பாராட்டினாங்க. சரி போய் தொலையுதுன்னு கந்தசாமியை ரொம்ப நாளைக்கப்பறம் பாத்து வைச்சேன். அப்ப என்னைய நானே திட்டிக்கிட்டேன். இது மாதிரி ஒரு படத்தை எல்லாம் பார்க்கனுமா சாமினு நினைச்சேன்.

இது போல ஒரு படம் தமிழ் சினிமாவுல வந்ததில்லைன்னு கேள்விபட்டு அதுக்கப்பறம் ஒரு படம் பார்த்தேன். அந்த படத்தோட பேரு உன்னைப் போல் ஒருவன். படம் நிறையவே பிடிச்சி இருந்தது. அப்புறம் தான் தெரிஞ்சது அந்த படத்துக்கு ரொம்ப பேரு சாயம் பூசிட்டாங்கனு. ஒரு படத்தை பாத்துட்டு ஐயோ அம்மான்னு கத்துற வழக்கம் நம்மளை விட்டு ஒருபோதும் மாறாது. அதக்கப்பறம் தமிழ்ப்படம்னு ஒரு படம், தன்னைத்தானே நகைச்சுவையோட விமர்சிக்கிறப்ப உண்மை நிலை தெரிஞ்சி போயிரும். அப்படிதான் இந்த படமும் இருந்துச்சி. நல்லாவே சிரிக்கத் தோணியது. அதுவும் கடைசி கட்டம் படத்தோட வெற்றின்னு சொல்லலாம்.

சரி அங்காடி தெருவுக்கு வருவோம். விருதுநகர் தெருவுல எல்லாம் இந்த அங்காடி அப்படிங்கிற வார்த்தை ரொம்ப பிரபல்யம். தெலுங்குல கூட 'அங்கடி' அப்படினு சொன்னா அது கடையைத்தான் குறிக்கும். அங்காடி அப்படிங்கிறது நல்ல தமிழ் சொல். கடைத் தெரு அப்படிங்கிறத விட அங்காடி தெரு ரொம்பவே நல்லா இருக்கு.

படம் தொடக்கத்திலிருந்து முடிவு வரைக்கும் நிஜமான மனிதர்கள் கண்ணுக்கு வந்துட்டே இருந்தாங்க, அதனாலவோ என்னவோ படத்துல ஒரு பிடிப்பு இல்லாம போயிருச்சி. அப்புறம் சொல்வாங்க, ஏழையின் உணர்வினை புரிந்து கொள்ளனும்னா ஏழையாவே இருந்துப் பார்த்தாத்தான் தெரியும்னு. பணத்தோட புரளுரவங்களுக்கு, என்ன பெரிய கஷ்டம்னு மத்தவங்களை ஏளனமாத்தான் பாக்கத் தோணும்.

எங்க ஊருல இருந்து கூட தீப்பெட்டி வேலைக்கு, மண் அள்ளுற வேலைக்கு, பஞ்சு ஆலைக்குனு வேலைக்குப் போய்ட்டு வரவங்களப் பார்க்கறப்போ கஷ்டமாத்தான் இருக்கும். படிச்சி நல்ல வேலைக்குப் போகலாம்னு பார்த்தா இந்த படத்துல வரமாதிரி ஏதாவது ஒரு நிகழ்வு வந்து அவகளை கஷ்டத்திலேதான் வைச்சிருக்கும். 'எங்க பொழப்பு அப்படிதான் ராசா'னு அவங்க சொல்றச்சே 'சே என்ன வாழ்க்கை இது' அப்படினு ஒரு எரிச்சல் வந்துட்டுப் போகும்.

இந்த படத்துல நல்ல நல்ல பாடல்கள் இருந்தாலும் என் வழக்கப்படி பாடல்களை படத்தோட சேர்த்துப் பார்க்கிறது கிடையாது. பாடலை தனியாத்தான் பார்க்கிறது வழக்கம். சில படங்களுல பாடலை தள்ளிவிட்டுட்டுப் பார்த்தா ஏழை பணக்காரன் ஆகியிருப்பாரு. அந்த மாதிரி அசட்டுத்தனம் எல்லாம் இந்த படத்துல இல்லை.

படத்துல கஷ்டப்படறவங்களையும், அடிமைப்படுத்துதலும், பாலியல் தொல்லைக்கு உள்ளாகிற பெண் வர்க்கம்னு காட்டி இருந்தாலும், காதலோட வலியையும், காதலோட வலிமையையும் காட்டி இருந்தது நல்லா இருந்தது. கடைக்குள்ளாறப் போய் பொருள் வாங்கறப்ப எல்லாம் அவங்களும் நம்மளைப் போல மனுசருங்கனு முகம் சிரிச்சி அவங்களோடப் பேசியே பழகிப் போன எனக்கு இந்த படம் கொஞ்சம் வித்தியாசமாத்தான் இருந்துச்சு. முன்னால இருந்த விசுவாசம் அப்படிங்கிற வார்த்தைக்கு இப்ப எல்லாம் கொடுக்கப்படற அடைமொழி அடிமைப்படுத்துதல், சுரண்டுதல். மத்தவங்களோட பலவீனத்தைப் பயன்படுத்தித் தன்னைத்தானே உயர்த்திக்கிறது ஒரு தனிமனுசனிலிருந்து ஒரு நாட்டு வரைக்கும் இருக்கத்தான் செய்து.

திருவிழா சமயத்துல பொருள் விக்கிறவங்களப் போல அங்காடித் தெருவில பொருள் விக்கிறவங்களோட வாழ்க்கை பார்க்கிறவங்களுக்கு கஷ்டம், ஆனா அப்படி வாழுறவங்களுக்கு வாழ்க்கை ஒருவித போராட்டம். பணம் வைச்சிருக்கிறவங்க காட்டுற பரிதாபம் ஒன்னும் யாரோட வாழ்க்கையையும் உயர்த்தப் போறதில.

இப்படி கஷ்டப்படறவங்க, வாழ்க்கையில நஷ்டபடறவங்களோட வேதனையை படைப்புகளாக எழுதி, படங்களா காட்டி தங்களோட பொழப்பை நடத்துர படைப்பாளிகளுக்கும், எழுத்தாளர்களுக்கும் மனசாட்சினு ஒன்னு இருந்தா இந்த நிலையை மாத்துரதுக்கு ஒரு தீர்வு கொண்டு வரட்டும். அது மட்டும் முடியாது, ஏன்னா இவங்களும் ஜோசியக்காரங்க போலதான். உன் வாழ்க்கை இப்படி ஆகும், அப்படி ஆகும்னு சொல்லும் ஜோசியக்காரங்க போல, இதோ இப்படி இருக்கு, அதோ அப்படி இருக்குனு படம் காட்டி ப்ச் கொட்டிட்டு போற கூட்டம். இதுபோன்ற இழிநிலை வலிக்கு நாமளும் காரணம்னு கொஞ்சம் கூட கவலைப்படாம எல்லாம் கர்ம வினைனு கைதட்டிட்டு போற கூட்டத்துல நாமளும் இருக்கோம்னு நினைக்கிறப்போ அதனோட வலி என்னவோ அதிகம் தான்.

Wednesday, 21 April 2010

இசையும் நானும்

சின்னஞ்சிறு வயதில் மேளமும், நாதஸ்வரமும் கண்டு ரசித்த அனுபவம் உண்டு. எப்படியெல்லாம் இசைக்கிறார்கள் என ஆவலுடன் பார்த்ததும் உண்டு, ஆனால் கற்றுக்கொள்ள வேண்டும் எனும் ஆர்வம் என்றுமே வந்ததில்லை.

கல்லூரியில் படித்த நாட்களில் மேசையில் தாளம் போட்ட சத்தியமூர்த்தி ஆச்சரியப்பட வைப்பான். அத்தனை அருமையாக தாளம் போடுவான்,  இனிய இசையாக இருக்கும் அது. நானும் மேசையில் தட்டுவேன், ஆனால் இசையாக அது வடிவம் பெற்றதில்லை.

இசைக்கும் எனக்கும் எட்டாத தூரமாகவே இருந்தது. ஆய்வுக்கூடங்களில் அதிகம் பாடல் பாடிக்கொண்டே ஆய்வு செய்யும் வழக்கம் உண்டு. எல்லாமே சொந்தமாக அந்த அந்த சூழ்நிலைக்கு என்னால் எழுதப்படும் பாடல்கள் அவை. பின்னர் அந்த பாடல்கள் மறந்து போகும்.

இலண்டனுக்கு வந்த பின்னர் எனது மகன் மிருதங்கம், பாடல் என கலைகள் கற்றுக்கொள்ளச் சென்றான். எந்த கலையை கற்றுக் கொள்வது என மனம் மிருதங்கம், வயலின், வீணை என அலைபாய ஆரம்பித்தது.

வேண்டாம், கதை எழுதுவதோடு நிறுத்திக்கொள்வோம், கலையெல்லாம் எதற்கு என நினைத்தே மூன்று வருடங்கள் ஓடியேவிட்டது. 2008 ஆக்ஸ்ட் மாதம் திடீரென நான் மிருதங்கம் கற்று கொள்ளப்போகிறேன் என எனது மகனின் குருவிடமே நான் மாணவனாக சேர்ந்தேன். எனக்குள் உள்ளூர வெட்கம், கொஞ்சம் தயக்கம்.

மிருதங்க வகுப்பில் சேர்ந்துவிட்டேன். இரண்டே வகுப்புகள் சென்றேன். ஆகஸ்ட் விடுமுறை வந்துவிட்டது. பின்னர் இரண்டு வாரம் பின்னர் மீண்டும் தொடங்கினேன். வருட சான்றிதழ் விழா  நடைபெற்றது. என்னையும் மேடையில் மிருதங்கம் வாசிக்க சொல்லி இருந்தார் குரு. மறுக்காமல் சரி என ஒப்புக்கொண்டேன். உள்ளூர பயமாக இருந்தது.

விழாவில் மகனும் மற்றவர்களும் இணைந்து செய்தார்கள். நான் மேடையில் அமர்ந்திருக்க எனக்குச் சிரிப்பாக இருந்தது, அதேவேளையில் பயமும் கூட. மிருதங்கம் நன்றாகவே செய்தேன் என அனைவரும் சொன்னார்கள். இசை எனக்கும் வந்தது.

விழா ஆரம்பிக்கும் முன்னர் மிருதங்கம் பயிலும் மாணவன் எனது பெயர் அடிப்படை பாடத்தின் பட்டியலில் இருப்பதை கண்டு ''புலவர் போல் இருக்கிறீர்கள் அடிப்படை பாடமா' என என்னைப் பார்த்துக் கேட்டான். நான் சிரித்துக் கொண்டேன்.

நவராத்திரி முன்னிட்டு வருடா வருடம் ஸ்ரீலண்டன் முருகன் ஆலயத்தில் மகனும் மற்றவர்களும் மிருதங்கம் இசைப்பார்கள். அதைக் கண்டது உண்டு. அதே வருடம், நானும் மிருதங்கம் இசைத்தேன். அதே அச்சம், அன்று செய்த பாடத்தை செய்யாமல் பயிற்சியே இல்லாமல் புது பாடத்தை சிறு பிழைகளுடன் வாசித்தேன். நன்றாக இருந்தது என்றே சொன்னார்கள். மிருதங்க வித்துவான் ஒருவர் உங்கள் முயற்சி வெற்றியாகும் என்று சொன்னது மகிழ்வைத் தந்தது.

எனக்கு நுனிப்புல் புத்தக வெளியீட்டு விழாவில் சால்வை அணிவித்து பேசிய முருகன் கோவில் குருக்கள் நான் நன்றாக வாசித்தேன் என சொன்னபோது மனம் மேலும் மகிழ்ச்சி கொண்டது. அட! மனது எவ்வளவு வெட்கம் கொள்கிறது, வயதாகிவிட்டது என நினைத்து.

மிருதங்கம் கற்றுக்கொண்டு ஆறு மாதங்கள் ஆனபின்னர்  எனக்கான முதல் தேர்வு நடந்த போது மிகவும் சுலபமாகத்தான் இருந்தது. இருப்பினும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்கிற மனோபாவம் மனதை பயமுறுத்தியது. தேர்வு எழுதச் சென்ற காலமெல்லாம் நினைவுக்கு வந்து சேர்ந்தது. நன்றாகப் படித்துவிட்டேனா, செய்முறைப் பயிற்சி செய்துவிட்டேனா என கேள்விகள் எழுந்து கொண்டே இருந்தது.

நன்றாகவே செய்தேன். அதற்கடுத்து தொடர்ந்து கற்றுக் கொண்டு இரண்டாம் நிலை தேர்வும் சென்ற வாரம் முடித்து விட்டேன். இசையினைத் தொடர்ந்து கற்றுக்கொள்ள வேண்டும் எனும் ஆர்வம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

ஐந்து வகை ஜாதிகள், அவை திஸ்ரம், சதுஸ்ரம், கண்டம், மிஸ்ரம், சங்கீரணம். ஏழு வகை தாளங்கள், அவை துருவம், மத்யம், ரூபகம், ஜம்பை, திரிபுடை, அட, ஏக ஆகும்.

விவகாரமான எழுத்தாளர்கள்

யார் எழுத்தாளர்கள் எனும் கேள்வி எழுந்து கொண்டே இருக்கிறது? புத்தகம் வெளியிட்டு விட்டால் அவர் எழுத்தாளரா? வலைப்பூ அல்லது வலைத்தளத்தில் மட்டும் பதிபவர்கள், எழுத்தாளர்கள் எனும் அங்கீகாரம் பெறாதவர்களா?

எழுத்தாளர்கள் எனும் அங்கீகாரம் உடையவர்கள் சொந்த வலைத்தளமோ, அல்லது வலைப்பூவோ வைத்துக்கொண்டு எழுதுவார்கள். எனவே இவர்களை பதிவர்கள் என அழைத்தல் முறையல்ல செயலோ?

எழுத்தாணி பிடித்தவர் எல்லாம் எழுத்தாளர்கள் ஆகி விட முடியாது என சொல்வது வழக்கம் தான். ஆனால் இப்போது பதிவர்கள் எனப்படுபவர்கள் புத்தகம் வெளியிட்டு தங்களை எழுத்தாளர்கள் எனச் சொல்லப்படும்  அங்கீகாரம் பெறத் துணிந்து விட்டார்கள், மேலும் பலர் தங்களை எழுத்தாளர்களாகவே சித்தரித்து கொள்ளத் தொடங்கிவிட்டார்கள்.  எனவே இனிமேல் பதிவர்கள் என இவர்கள் எவரையும் அழைப்பது முறையல்ல. எழுத்துதனை ஆள்பவர்கள் அனைவருமே எழுத்தாளர்கள். அப்படி பார்க்கையில் ஒருவகையில் இந்த பதிவர்கள் எழுத்துதனை ஆளத் தொடங்கிவிட்டார்கள்.  இதுவல்ல பிரச்சினை. 

பிரச்சினை என்னவெனில் இந்த  எழுத்தாளர்கள் மனதில் ஒரு பெரிய எண்ணம் தோன்றி இருக்கிறது. அது என்னவெனில் தங்களை சமூக நல காவலர்கள் போல் சித்தரித்துக் கொள்வது. எழுதுவதால் மட்டுமே எல்லா பிரச்சினைகளுக்கும் முடிவு வந்து விடும் எனும் இவர்களின் விபரீதமான கனவுதனை மிகவும் நேர்த்தியாகவே செய்கிறார்கள்.

கணினியின் முன்னர் அமர்ந்து எழுதும் உலகத்துக்கும், அதைத் தாண்டி வெளியில் இருக்கும் உலகத்துக்கும் எத்தனை வித்தியாசம் என்பதை இந்த  எழுத்தாளர்கள் அறிந்திருக்கத்தான் செய்கிறார்கள். ஒரு விஷயத்தை எப்படி வேண்டுமெனிலும் சிந்தனை செய்யலாம் என்பது சிந்திக்கத் தெரிந்த மானுடத்துக்கு கிடைத்த ஒரு அரிய வாய்ப்பு.

பலர் மனதில் இருப்பதை எல்லாம் கொஞ்சம் கூட யோசிக்காமல் எழுதுவதால் நன்றாகவே பிறரிடமிருந்து சொல்லடி படுகிறார்கள். இவர்கள் இதை எல்லாம் கணினியில் பதிவாக எழுதுவதால்தான் இந்த பிரச்சினை.   இவர்கள் நினைப்பதை எல்லாம் ஒரு புத்தகமாக போட்டுவிட்டால் படிப்பவர்களுக்கு மட்டுமே பிரச்சினை எனவும் இருந்து விட முடியாது, ஏனெனில் புத்தகம் வெளி வந்த பின்னரும் பிரச்சினையாகி விடும் நிலை இருந்துதான் வருகிறது.  

பல விசயங்களில் பலரும் எழுதி எழுதியே சிக்கித் தவிக்கிறார்கள். இது எழுதுபவர்களது பிரச்சினை என எவரும் இருப்பதில்லை, எப்படி இப்படி நடக்கலாம், சொல்லலாம் என சில காலத்திற்கு எங்கெங்குத் திரும்பினாலும் நடந்து முடிந்த விசயங்களை உலகப் பிரச்சினை போல இந்த எழுத்துகள் ஆக்கி விடுவது ஒருவித மாயை.

இதில் என்ன சுவாரஸ்யம் எனில் விசயம் சம்பந்தபட்டவர்கள் பற்றி ஒரு கண்டன அறிக்கை விடுவது வாடிக்கை. பிரச்சினை தீர வழி எதுவும் இவர்கள் அறிந்திருக்கவில்லை என்பதுதான் அதிலும் மிக மிக சுவாரஸ்யம். முன்னாள் எல்லாம் தெருவுக்கு தெரு பத்திரிக்கை படித்து பேசிக் கொள்வார்கள். பெட்டிக்கடையில் ஒருவருக்கு ஒருவர் முட்டி கொள்வார்கள். இப்பொழுது கணினி பெட்டியில் தட்டி கொள்கிறார்கள். ஒரு விஷயத்தை மாற்று கோணத்தில் சிந்திப்பது சற்று கோணலாக சிந்திக்கும் வண்ணம் தெரிவதால் எழுத்துகளும், எழுதுபவர்களும் விவகாரமானவர்களாகவேத் தெரிகிறார்கள்.   இது போன்ற சிந்தனைகளை தவிர்த்தலும், எழுதுவதும் அவரவர் சிந்தனைக்கு உட்பட்டது எனினும் சில வரைமுறைகள் உள்ளது.  மேலும் இந்த விவகாரம், பார்க்கும் கண்களில் இருக்கிறது எனும் தத்துவம் வேறு.

இப்பொழுது ஒரு பிரச்சினை தட்டப்படும், அடுத்த ஒரு பிரச்சினை வந்ததும் முதல் பிரச்சினை முடிந்துவிடும். இந்த எழுத்தாளர்களுக்கு எழுதுவதற்கு பிரச்சினைகள் புதிது புதிதாக முளைத்துக் கொண்டிருக்கும் ரகசியத்தின் மர்மம எதுவோ.

வள்ளுவர் சொல்வார்

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை.

அது சரி, எவரெல்லாம் விவகாரமான எழுத்தாளர்கள்? எவரையும் கை காட்டுவது முறையல்ல என்பதாலும் அப்படி எவரும் எவரையும் கைகாட்டுவதால் அவர்களும் விகார சொரூபமாக திகழ வாய்ப்பு  இருப்பதாலும் யானைப் போரை கண்டு களியுங்கள், சோளப்பொரிதான் எனினும்.