Wednesday, 24 March 2010

ஒரு ஆராய்ச்சியாளனின் பாதை 10


ஒரு தனிமத்தை பிரித்தெடுப்பது என்பது அந்த தனிமத்தின் வினைத்தன்மையை பொருத்தது என அறிவோம். ஒரு தனிமம் தன்னிடமிருந்து எலக்ட்ரான்களை இழக்கும்போது பெரும் தன்மையும், எலக்ட்ரான்களை பெறும்போது பெறும் தன்மையும் வைத்தே அதனை பிரித்தெடுக்க முனைந்தார்கள். இதனை எலக்ட்ரோலைசிஸ் எனச் சொல்வார்கள். மின்சார வேதிப் பகுபாடு எனலாம்.

தனிமங்களைப் பிரித்தெடுக்கும் முன்னர் இருமல் பற்றிய கருத்தரங்கு பற்றி இங்கே குறிப்பிடுகிறேன். இருமல் பற்றிய கருத்தரங்கு மூன்று தினங்கள் நடந்தது. நூற்றுக்கும் குறைவாகவே கலந்து கொண்டனர். மூன்று நாட்கள் இந்த கருத்தரங்கு நடந்தது. 

ஒருவருக்கு இருமல் ஏன் வருகிறது? எதனால் வருகிறது? அதை எப்படி தடுப்பது என்பது குறித்து ஆராய்ச்சிகளைப் பேசினார்கள். இருமல் நமது உடலுக்கு ஒரு தடுப்புச் சாதனம் அதை ஏன் தடுத்து நிறுத்த வேண்டும் என ஒருவர் கேட்டார். இருமல் தடுப்புச் சாதனம்தான் ஆனால் அதுவே ஒருவருக்குத் தொடர்ந்து வரும்போது எவ்வளவு அவதி என்பதை இருமினால்தான் தெரியும் என்றார் அதற்கு பதில் அளித்தவர். 

பேசினால் இருமல் வருகிறது, சிரித்தால் இருமல் வருகிறது, வெயிலில் நின்றால் இருமல் வருகிறது, குளிர் அடித்தால் இருமல் வருகிறது. இப்படி சகலத்துக்கும் இருமல் வருகிறது இதைத் தடுக்க வழி இல்லையா என ஆராய்ச்சியாளர்கள் பேசியதைப் பார்க்கும்போது இன்னும் நிறைய தொலைவு செல்ல வேண்டியிருக்கிறது என்றுதான் பட்டது. ஆனால் இருமல் எதனால் ஏற்படுகிறது என மூளையில் ஏற்படும் மாற்றங்களை படம்பிடித்து போடும் அளவிற்கு ஆராய்ச்சி முன்னேறி இருப்பது வியத்தகு சாதனையே. 

மத்திய நரம்பு மண்டலமா, சுற்றியுள்ள நரம்பு மண்டலமா இருமலுக்கு காரணம் எனப் பார்க்கும்போது இரண்டும்தான் என பதில் அளித்தார்கள். பல சுவாரஸ்யமான தகவலுடன் கருத்தரங்கு நடைபெற்றது. இருமலுக்கு என ஒரே ஒரு மருந்துதான் இதுவரை வெளிவந்து உள்ளது. அதுவும் அந்த மருந்து ஒரு செடியிலிருந்து பிரித்தெடுத்து இருக்கிறார்கள். குவெய்ஃபெனசின் என அந்த மருந்தின் பெயர். இதுதான் இருமலுக்கு என அங்கீகரிக்கப்பட்ட மருந்து. மற்றதெல்லாம் அலர்ஜியை கட்டுப்படுத்தக்கூடியவையே. பல மருந்துகள் ஆராய்ச்சிநிலையிலே இன்னும் இருக்கின்றன என்பது வருந்ததக்க விசயம். 

எனது ஆராய்ச்சியை பற்றி எழுதும்போது இது குறித்து மிக விளக்கமாக எழுதுகிறேன். ஏனெனில் நான் முதன்முதலில் எடு்த்துக்கொண்ட ஆராய்ச்சியும் இப்போது செய்து வரும் ஆராய்ச்சிக்கும் அதிக தொடர்பு உண்டு. 

மின்பகுப்பு முறையானது சில தனிமங்களை பிரித்தெடுக்க உதவுகிறது. பொதுவாக மின்பகுப்பு முறையில் புரட்டான்களும், எலக்ட்ரான்களும் சுதந்திரமாக வலம் வர வேண்டும். அப்படியில்லாதபட்சத்தில் பிரித்தெடுப்பது என்பது இயலாத ஒன்று. 

மின்பகுப்பு முறைக்கு உட்படுத்தப்படும் தனிமம் எலக்ட்ரான்களை இழக்க தயாராக இருக்க வேண்டும். நேரணுக்கள், எதிரணுக்கள் அவசியம். அதைப்போல நேரணுக்களைப் பெற எதிர் மின்கடத்தி, எதிரணுக்களைப் பெற நேர் மின்கடத்தி அவசியமாகிறது. 

மின்சாரத்தைப் பாய்ச்சும்போது தனிமமானது தன்னிலை இழக்க வேண்டும். பொதுவாக தண்ணீரில் அந்த பொருளை கரைத்து இருக்க வேண்டும் அல்லது உருகிய நிலையில் இருக்க வேண்டும். திடப்பொருளாக இருக்கும்பட்சத்தில் எலக்ட்ரான்கள் சுதந்திரமாக இருப்பது கடினமாகும். 

உதாரணத்திற்கு அலுமினியம் எடுத்துக்கொள்வோம். இது பாக்ஸைட்டாக கிடைக்கிறது. அதாவது அலுமினியம் ஆக்ஸைடாக பூமியிலிருந்து கிடைக்கிறது. இதில் அலுமினியம் நேரணுக்கள் கொண்டது. ஆக்ஸிஜன் எதிரணுக்கள் கொண்டது. இந்த பாக்ஸைடிலிருந்து அலுமினியத்தை பிரிக்க அப்படியே உபயோகிக்க இயலாது, காரணம் வெப்பநிலை மிகவும் அதிகமாகும். மேலும் இந்த பாக்ஸைட்டுடன் வேறு சில பொருட்கள் கலந்து இருக்கும். அவைகளை கரைத்தல் முறை மூலம் நீக்கலாம். பாக்ஸைட்டை பிற கலப்பட பொருட்களிலிருந்து நீக்கிவிட்டு அதனுடன் கிரையோலைட் எனப்படும் பொருளை கலக்க வேண்டும். இப்போது பாக்ஸைட் 900 டிகிரியிலே உருக ஆரம்பிக்கும். இதற்கு முன்னர் 2000 டிகிரி வேண்டும். 

இந்த நிலையை அடைந்தவுடன் இதனை மின்பகுப்பு பானையில் போட்டு மின்கடத்திகளை இணைக்க வேண்டும். மின்சாரம் பாய்ச்சியவுடன் பாக்ஸைடிலிருந்து அலுமினியம் நேர் சக்தியுடனும், ஆக்ஸிஜன் எதிர் சக்தியுடனும் பிரிகிறது அவ்வாறு பிரிந்து நேர் சக்தி எதிர் மின் கடத்திக்கும், எதிர் சக்தி நேர் மின் கடத்திக்கும் செல்கிறது. கார்பன் மின்கடத்தியாக உபயோகிக்கப்படுகிறது. ஆக்ஸிஜன் கார்பனுடன் சேர்ந்து கரியமில வாயுவாக மாறிவிடுவதால் அந்த மின்கடத்தியை அடிக்கடி மாற்றுவது அவசியமாகும். இவ்வாறு அலுமினியம் பிரித்தெடுக்கப்படுகிறது. 


ஒரு வேதியியல் வினை என்பது அத்தனை எளிதான விசயமல்ல என்பதை மீண்டும் நிரூபிக்கும் முறையாக சில வேதியியல் வினைகளை மேற்கொண்டதில் அறிந்து கொள்ள முடிந்தது. இந்த வேதிவினையை சில காரணங்களால் இங்கு எழுதி விளக்கமுடியாத நிலை. இந்த ஒருங்கிணைந்த மூலக்கூறுகள் மருந்துகளாக மாறக்கூடிய வாய்ப்பு இருப்பதால் இவைகளை இப்போது மறைத்து வைக்க வேண்டிய கட்டாயம். 

வேதியியல் வினைக்கு வருவோம். 

1. இரண்டு வெவ்வேறு தொடக்க மூலக்கூறுகள். சிறு மாற்றம் மட்டுமே ஒரு மூலக்கூறுக்கும் மற்றொரு மூலக்கூறுக்கும்.

2. இந்த இரண்டு மூலக்கூறும் வினைபுரியக்கூடிய காரணிகள் ஒன்றுதான். அந்த காரணிகளில் எந்த மாற்றமுமில்லை.

3. எல்லா சூழலும் ஒன்றாக இருக்க ஒரு மூலக்கூறு மட்டுமே நினைத்தபடி வினைபுரிந்தது, மற்றொரு மூலக்கூறு வேறு விதமாக வினைபுரிந்தது. 

இப்படி சிறு மாற்றங்களே கொண்ட மூலக்கூறு வினைபுரியும் தன்மை மட்டும் வேறுபாடன்றி, நமது உடலில் அவை செயல்படும் முறையும் வித்தியாசமாக இருப்பது வியப்புக்குரியதுதான். 

மேலும் இப்பொழுதெல்லாம் தொழில் நுட்ப முன்னேற்றத்தால், முன்னர் போல் இந்த வியாதிக்கு இந்த மூலக்கூறு சரியாக இருக்கும் என உட்கார்ந்து யோசிக்க வேண்டியதெல்லாம் இல்லை. கணினியில், வியாதிக்கு காரணமான ரிசெப்டார் (receptor) எதுவென கொடுத்தால் அந்த ரிசெப்டாரில் சென்று உட்காரும் மூலக்கூறுகள் என பல மூலக்கூறுகளை தந்துவிடுகிறது. ஆனாலும் ஒரு மருந்தை உருவாக்குவது என்பது இன்னும் அத்தனை எளிதான காரியமாகவே இல்லை! விரைவில் அதற்கான வழியை கண்டுபிடிப்போம். 

வேதியியலை விளங்கிக் கொள்ளவே முடிவதில்லை. சில நேரங்களில் மிகவும் மனதை தளர்வடையச் செய்துவிடும். ஒரு ஒருங்கிணைந்த மூலக்கூறினை உருவாக்கிவிட்டோம் என இறுமாந்து இருந்துவிடமுடியாதுதான். ஒரு ஒருங்கிணைந்த மூலக்கூறினை உருவாக்கி அந்த மூலக்கூறு சரிதானா என ஆதாரத்துடன் காண்பிக்க வேண்டும். 

நிறை மட்டும் எத்தனை புரோட்டான் உள்ளது என ஆராய வேண்டும். அவை சரியாக இருந்தால் ஓரளவு நம்பிக்கை கொள்ளலாம். ஆனால் அதற்கு மேலாக அந்த மூலக்கூறில் கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன், குளோரின் என அனைத்தும் சரியான விகிதத்தில் அமைந்திருக்க வேண்டும். இவை சரியாக அமைந்திருந்தால் மட்டுமே அந்த மூலக்கூறு மிகவும் தூய்மையான ஒன்றாக கருத முடியும். 

இப்படி ஒருமுறை ஒரு மூலக்கூறினை உருவாக்கி ஆராய்ந்தபோது சம்பந்தமே இல்லாமல் இருந்தது. செய்முறை எல்லாம் சரி செய்து பார்த்தபின்னரும் இந்த விசயம் ஆச்சரியமாக இருந்தது. இந்த பணியை செய்தவரிடம் கேட்டபொழுது அவர்களும் மிகச்சரியே, மூலக்கூறில் தான் பிரச்சினை என்றார்கள். 

சில நாட்கள் பின்னர் அதே மூலக்கூறினை அனுப்பியபோது மிகச் சரியான விகிதத்தில் இருந்தது. நான் முதலில் அனுப்பியதுதான் என்ன என கண்டுபிடிக்கவே இயலவில்லை. அவர்கள் தவறு செய்யவில்லை எனவும் சொல்லிவிட்டார்கள். 

ஒரு ஒருங்கிணைந்த மூலக்கூறு உருவாக்குவது என்பது இந்த பணியில் இருப்போர்க்கு மிகவும் எளிதாக இருக்கக்கூடும். சில வேளைகளில் மிகவும் கடினமானதாகவே இருக்கிறது. 

முன்னர் சொன்னதுபோல இத்தனை சிரமம் பட்டு செய்தாலும் பல்லாயிரம் மூலக்கூறுகளில் ஒரு மூலக்கூறு மட்டுமே நாம் எதிர்பார்க்கும் பலன் தருகிறது என்பது மருத்துவ உலகிற்கு தொடர்ந்து ஏற்பட்டு வரும் போராட்டம் தான். 

ஒரு மருந்தைக் கண்டுபிடிப்பது குறித்து ஆய்வகம் இல்லாத அந்த காலத்தில் என்ன முறையைக் கண்டுபிடித்தார்கள் எனத் தெரியவைல்லை. ஆனால் கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகள் உண்மையிலேயே நோய் தீர்க்கும் மருந்தாக இருந்ததுதான் மிகவும் ஆச்சரியம். முன்னோர்கள் சொன்னது என்றே வைத்துக்கொள்வோம், முன்னோர்களுக்கு யார் சொன்னது என கேள்வி வந்து சேரும். தேடித் தேடி அலுத்துப் போயிருப்பார்கள் தான்.

ஆய்வகம் இல்லாத சூழ்நிலையினால் மொத்தமாக சாற்றினைப் பிழிந்து அப்படியே உபயோகித்த வழக்கம்தான் இருந்து வந்தது. அதுவும் ஒன்றை மட்டும் தராமல் பிற செடி இனங்களையும் அரைத்து தரும் வழக்கம் இருந்தது. இப்படி ஒன்றோடு ஒன்று இணைவதால் என்ன விளைவுகள் வந்தது, என்ன நேர்ந்தது என எவரேனும் ஒருவேளை எழுதி இருக்கலாம். மருத்துவம் எழுதிய நமது போகர் சித்தர் போல. போகர் சித்தர் எழுதியதாக நான் கேள்விபட்டதுதான் உண்டு. ஆனால் இதுவரை அவர் எழுதியதைப் படித்தது கூட இல்லை என்பதே உண்மையான விசயமாகும். 

நாளடைவில் பாட்டி வைத்தியம் என சொல்லும் அளவிற்கு மிகவும் பிரசித்தி பெற்று இருந்தது இந்த வைத்திய முறைகள். அதுவும் தலை வலித்தால் என்ன பண்ணுவார்களாம் எனில், தலையில் பக்கவாட்டில் ஒரு ஓட்டை போடுவார்களாம். இதுதான் அறுவை சிகிச்சைக்கான முதல் படி. ஏதாவது வெட்டு பட்டால் அதை சுற்றி இலைகள் வைத்துக் கட்டுபோடுவதுதான் வழக்கமாக இருந்தது. மாவுக் கட்டு தெரியாத கிராமவாசி இருக்க முடியாது. பின்னர் உடலைக் கூறுபோட்டு என்ன இருக்கிறது எனப் பார்க்கத் தொடங்கிய காலமும் உண்டு. 

இப்படி மொத்த மருத்துவமும் உள்ள செடியை முதன்முதலாகப் பிரித்து எடுத்துப் பார்க்க ஆசை வந்தது. எப்படி மருந்து உருவானது என்பது ஒரு பெரிய கதைதான். இப்படி செடிகள் தரும் மருந்து என்ன என நினைத்தபோதுதான் ஒரு எண்ணம் உதயமானது. 

அந்த செடியை காயவைத்தார்கள். பொடியாக்கினார்கள். தண்ணீரிலும் பிற ரசாயனங்களிலும் மூழ்க வைத்தார்கள். இந்த முறைதான் ஒரு மூலக்கூறினைப் பிரித்தெடுக்க வைத்த வழியாகும்.

Tuesday, 23 March 2010

அடிப்படை அறிவு

எனக்கும் ஒரு கனவு இருந்துச்சிங்க, எப்படியாவது ஒரு இணைய தளம் ஆரம்பிச்சிரனும்னு ஒரு தீராத ஏக்கமாத்தாங்க அந்த கனவு. இயற்பியல், வேதியியல், உயிரியல் அப்படினு எல்லா அறிவியலையும் ஆங்கிலத்தில எழுதி படிப்புக்கு உதவக்கூடிய இணையதளமா மாத்திரலாம்னு ஒரே கனவு. போன வருசம் ஆரம்பிச்சேன்.

ஒரு வருசம் மேல ஓடிப் போச்சு, இன்னமும் அப்படியேதான் அந்த இணையதளம் ஒரு வளர்ச்சியும் அடையாம இருக்கு. உருப்படியா ஒரு விசயத்தைச் செய்யனும்னா ஒன்னு ஆளு வைச்சி வேலை செய்யனும், இல்லைன்னா சுயமா விசயங்கள் கத்துக்கிட்டே ஒரு செயலை செய்யனும். நான் ரெண்டாவது கட்டத்துக்கு டிக் பண்ணினதால பெரிய தலைவலியாத்தான் போச்சு. யார்கிட்டயும் போய் உதவினு கேட்டாலும், மத்தவங்க வந்து செய்றதுக்கு அவங்களுக்கு நேரமும் இருக்கனும்.

முத முத எழுதினப்போ நல்லாத்தான் இருந்துச்சு, அப்படியே தொடர்ந்து செஞ்சிருக்கலாம் ஆனா அதுல முழு கவனமும் செலுத்தாம திடீரு திடீருனு போய் மாத்தம் செஞ்சதால ஒரு முறை என்னவோ பண்ண போய் இப்போ ஒழுங்கா வேலை செய்ய மாட்டேங்குது.

சைட் பில்டருல ஏகப்பட்ட குளறுபடியா இருக்கு. ஹெச் டி எம் எல் ஐ என்ன பண்ணினோ தெரியலை எடிட்டர் வருது அப்புறம் ஓடிப் போயிருது. இப்படியே போனாக்கா கடைசியில ஒன்னுமே எழுத முடியாமத்தான் போயிரும்னு ஒரு பயம் வேற வந்துருச்சு.

இனிமே அடிப்படை அறிவை வளர்த்துட்டு செய்யலாம்னு பார்த்தா நாளுதான் ஓடிட்டே இருக்கு, சம்பந்தபட்டவங்ககிட்ட ஒரு மெயில் அனுப்பி இருக்கேன், போன தடவை சொன்னப்போ எங்ககிட்ட சொல்லுங்க நாங்க சேர்க்கிறோம்னு சொன்னாங்க, ஒவ்வொரு தடவையும் அப்படி செய்ய முடியுங்களா? இதோ இப்படி பிளாக்ல எழுதறது எத்தனை ஈசியா இருக்கு, இதுக்கு எனக்கு ஏதுங்க அடிப்படை அறிவு. ஆனாலும் எத்தனையோ டெம்ப்ளேட் மாத்தி மாத்தி ஏதோதோ செஞ்சி இந்த ப்ளாக்ல விளையாடினேன், ஆனா அந்த இணையதளத்தில மட்டும் ஒன்னுமே செய்ய முடியலை.

வெறும் கனவோடு மட்டுமே இருக்கு அந்த இணையதளம். கண்ட்ரோல் பேனல் பாஸ்வேர்டு வேற அடிக்கடி மறந்து போகுது. ஒரு இணையதளத்தை எப்படி சிறப்பா வடிவமைக்கிறதுனு தமிழுல யாரச்சும் பாடம் நடத்துவாங்களானு பாத்துட்டே இருக்கிறேன், கனவு நனவாகிரும்.

http://www.remainforever.co.uk இதுதான் இணையதளம்

Friday, 19 March 2010

ஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 9

வேதியியல் பாடம் மிகவும் சிரமம் என பல மாணவர்கள் கருதுகிறார்கள். இங்கிலாந்து நாட்டில் மருத்துவ படிப்பிற்கு மிகவும் முக்கியமாக வேதியியல் பாடம் கருதப்படுகிறது. உயிரியில் பாடம் ஒரு வருடம் படித்தால் கூட போதும், ஆனால் வேதியியல் பாடம் இரண்டு வருடம் படிக்க வேண்டும். கொஞ்சம் கற்பனையுடன்  படிக்கத் தொடங்கி விட்டால் எல்லாம் மிகவும் எளிதாகிவிடும். ஆனால் அடிப்படை அறிவினை முறையாக கற்றுக்கொள்ளாமல் நாம் பயிலும்போது சிரமங்கள் இருக்கத்தான் செய்யும். 

எனக்கு அத்தனை ஆழமாக வேதியியல் ஒன்றும் தெரியாது, வேதியியல் மட்டுமா எந்த ஒரு விசயமும் எனக்கு சரிவரத் தெரியாது. தேர்வுக்கு படித்து, தேர்வில் தோற்றுப் போய்விடக்கூடாதே என்ற அச்சத்தில் படித்து தெரிந்து கொண்டேன் எனச் சொல்லலாம், புரிந்து கொண்டேன் எனச் சொல்ல முடியாது. வேதியியல் வினையானது நடக்க ஒரு மூலக்கூறு உடைய வேண்டும், உடைந்தவுடன் மற்றொன்றுடன் இணைந்து புதியதாக ஒரு மூலக்கூறு உருவாக வேண்டும். இது அத்தனை எளிதில் புத்தகத்தில் இருப்பது போன்று நடைபெறுவதில்லை. 

நான் புதிதாக ஆராய்ச்சிக்கூடத்தில் வந்து இணைந்ததும் எனது ஆய்வுக்கூடத்தில் என்னிடம் ஒரு மூலக்கூறினை உருவாக்கச் சொன்னார்கள். அந்த கடைசி மூலக்கூறினை அடைய பத்து பாதைகள் கடக்க வேண்டும். ஒவ்வொரு பாதையிலும் ஒரு மூலக்கூறு கிடைக்கும், அதில் மாற்றம் செய்து அடுத்த மூலக்கூறு, அதற்கடுத்து அதில் மாற்றம் செய்து என கடைசியில் இந்த மூலக்கூறினை பெற வேண்டும். என்ன ஆச்சரியம் அழகாக அந்த மூலக்கூறினை உருவாக்கி விட்டேன். இது அந்த ஆய்வுக்கூடத்தில் மற்றவர்களால் முன்னரே செய்ததுதான். எனவே மிகவும் எளிதாக இருந்தது. இதை என்னைச் செய்ய சொன்னதன் காரணம், நான் மருந்தாக்கியல் மட்டுமே படித்திருந்தேன், மருத்துவ வேதியியல் தனிப்பட்ட முறையில் செய்தது இல்லை, ஆதலால் எனக்கு வேதியியல் முறை அனுபவப்படட்டும் என செய்யச் சொன்னார்கள். 

பின்னர் இந்தியாவில் பெங்களூரில் உள்ள ஒரு புகழ்பெற்ற ஆய்வுக்கூடத்தால் செய்யப்பட்ட மூலக்கூறினை நான் எனது ஆராய்ச்சிக்காக செய்ய வேண்டும். இதுதான் எனது முதல் பணி. நான் கொடுக்கப்பட்ட முறைப்படி செய்தேன், ஆனால் நான் உருவாக்கின மூலக்கூறும், அவர்கள் உருவாக்கியதாக கூறப்பட்ட மூலக்கூறும் வெவ்வேறாகவே இருந்தது. பலமுறை மாற்றங்கள் செய்தும் ஒரே மாதிரியாக வரவே இல்லை. ஆய்வுக்கூடத்தில் இருந்த சிறந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் கூட முயற்சி செய்து பார்த்தார், ஆனால் நான் உருவாக்கியதைப் போலவே அவரும் உருவாக்கியதும் அப்படியே அந்த மூலக்கூறினை வைத்துக் கொண்டோம். இதுவரை அந்த மூலக்கூறினை யாருமே உருவாக்காமல் இருந்ததால் நான் அந்த மூலக்கூற்றுக்கு பார்வரைன் என பெயரிட்டேன். துரதிருஷ்டம் அந்த மூலக்கூறு மருந்தாகும் ஆற்றல் பெற்றிருக்கவில்லை. பார்வரைன் முடங்கிப் போனது. ஆராய்ச்சிக் கட்டுரையில் சொல்லப்பட்டு இருப்பதை போல எளிதாக செய்யலாம் என நினைத்த எனக்கு அந்த மூலக்கூறு அற்புதமான பாடம் சொல்லிக் கொடுத்தது. எனது ஆராய்ச்சிக்கான பொறுமையை கற்றுத் தந்த முதல் மூலக்கூறு அதுதான். எனவே வேதியியல் படிப்பதற்கும் செய்முறைக்கும் வித்தியாசப்படும். தெரிந்து கொண்ட அறிவினை கொண்டு முயற்சிகள் செய்தால் முடியலாம். இந்தியா ஆய்வுக்கூடத்திற்கு தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள் பதில் அளிக்க சற்றும் முயற்சிக்கவில்லை. எனவே அந்த மூலக்கூறினை உருவாக்கும் எண்ணம்தனை கைவிட்டு விட்டோம். 

இந்த கதை இங்கு எதற்கு என்றால் எப்படி ஒரு வேதியியல் வினையானது நடைபெறுகிறது, அதற்கான காரணிகள் எவை என்பது குறித்துப் பார்க்கப் போகிறோம். 



ஒரு வேதி வினையானது நிகழ்வதற்கு தேவையான காரணிகள் எனப் பார்த்தால், சாதாரணமாக ஒரு வேதி வினையானது எங்கும் நிகழ்ந்து கொண்டுதானிருக்கிறது. உதாரணமாக ஆக்ஸிஜன் தனித்து இருப்பதில்லை, மற்றொரு ஆக்ஸிஜனுடன் இணைந்து ஒரு மூலக்கூறாக மாறிவிடுகிறது. இதைப் போன்று வாயுவில் இருக்கும் நைட்ரஜனும் அவ்வாறே, ஹைட்ரஜனும் அவ்வாறே. இதற்காக எந்தவொரு குடுவையும் தேவையில்லை. 

பூமியானது சூரியனிலிருந்து பிரிந்து நீள்வட்டத்தில் சுற்றி வந்து கொண்டு இருந்தபோது பில்லியன் காலங்களுக்கு மீத்தேனும் அம்மோனியாவும் அதிக அளவில் இருந்ததாக அறிவியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். எரிமலை குழம்புகள் வெளிப்படும் போது இந்த அம்மோனியா அதிக அளவில் உருவாகிறது. ஒரு வேதியியல் வினையினை பார்ப்போம். இங்கு நான் குறிப்பிட போவது எழுத்துருவிலான வேதியியல் வினைதான். மூலக்கூறு கொண்டு பின்னர் எழுதலாம்.

ஹைட்ரஜன் + நைட்ரஜன் -----------> அம்மோனியா 
                                              <-----------

(அம்புக்குறி பாதியாகத்தான் இருக்க வேண்டும்) 

இதுதான் வேதியியல் வினை. இங்கே மூன்று பங்கு ஹைட்ரஜனும் ஒரு பங்கு நைட்ரஜனும் வினைபுரிந்து இரண்டு பங்கு அம்மோனியா உருவாகிறது. இந்த வினையானது நடக்கும்போது வெளிவினையாதல் வெப்பம் அதிகரிகரிக்கிறது. அதாவது வெப்பத்தை இந்த வினையானது உண்டு பண்ணுகிறது. இந்த வினையானது அவ்வாறு நடக்கட்டும் என இருந்தோம் எனில் பல நாட்கள் ஆகலாம். 

ஆனால் அம்மோனியாவை உடனடியாக உருவாக்க வேண்டும் எனில் அதிக வெப்பத்தினையும், அதிக அழுத்தத்தையும் நாம் இந்த வேதியியல் வினைக்குத் தர வேண்டும். மேலும் வினையூக்கி இருந்தால் இன்னும் வேதி வினையானது வேகமாகச் செல்லும். ஆனால் வெப்பத்தை அதிகரித்தால் லீ சாட்லியர் தத்துவப்படி வெளிவினையாதல் வெப்பம் தரும் வேதியியல் வினையானது முன்னோக்கி செல்லாது பின்னோக்கி செல்லும். பின்னர் எப்படி வேகமாக அம்மோனியா உருவாகும்? ஆனால் வெப்பம்தனை அதிகரித்தால் அம்மோனியா வேகமாக உருவாகிறது. இது எதனால் எனில் சுழல் முறை. ஹைட்ரஜனும் நைட்ரஜனும் 100% அம்மோனியா தரும். ஆனால் 10% அம்மோனியா மட்டுமே மிஞ்சும், மீதி 90% ஹைட்ரஜன், நைட்ரஜனாக திரும்பி விடும். ஆனால் இவ்வாறு திரும்பத் திரும்ப நடந்து இறுதியில் 100% அம்மோனியா கிடைத்துவிடும். இந்த வழி முறையானது மிக வேகமாக நடைபெறும். ஆக ஒரு வேதிவினையானது நடைபெற வெப்பம், அழுத்தம், மூலக்கூறு அளவு, வினையூக்கி என காரணிகள் மிகவும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இது மட்டுமல்லாது மேலும் பல விசயங்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றாக விளக்கமாக பார்ப்போம். இந்த வினைக்கு ஹேபர் (அறிவியலார் பெயர்) முறை எனப்படும். 



மூலக்கூறுகள் வினைபுரிவதற்கு சக்தி தேவைப்படுகிறது என்பது அனைவரும் அறிந்ததே. ஒவ்வொரு மூலக்கூறும் அதற்கென மிகவும் குறைந்த பட்சம் சக்தியை வினைபுரிவதற்கு அடைய வேண்டும். அப்படி அந்த சக்தியை அடையாத பட்சத்தில் எந்த ஒரு வினையும் நடைபெற வாய்ப்பு குறைவு. 

மூலக்கூறுகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும்போது வினையானது ஏற்படுகிறது. ஆனால் அவ்வாறு மோதும்போது குறிப்பிட்ட அளவான சக்தி வெளிப்படவில்லையெனில் வினையானது நிகழ்வதில்லை. பொதுவாக இந்த ''மோதல்'' வேதியியல் வினையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

உதாரணத்திற்கு மூலக்கூறுகளின் அளவினை அதிகரிக்கும்போது அந்த மூலக்கூறுகள் மோதிக் கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகின்றன. இடப்பரப்பளவானது குறைவாக இருக்கும் பட்சத்தில் இந்த மோதல் அதிகமாக நடைபெறும்.

அதே போல் வெப்பநிலையை அதிகரிக்கும் போது மூலக்கூறுகள் சக்தியினை அதிகம் பெற்று அதிர்வடைந்து மற்ற மூலக்கூறுகளுடன் மோதும் வாய்ப்பானது அதிகரிக்கிறது. இதே போல் வினையூக்கிகளும் மூலக்கூறுகள் மோதுவதற்கான காரணியாக முன்னர் சொன்னது போல் இடப்பரப்பளவு குறைவாக இருப்பதால் வினை நடக்க ஏதுவாகிறது. வினையூக்கியானது மூலக்கூறுகளை தனது பரப்பில் அமரச் செய்யும் வகையில் இருக்கும், அவ்வாறு மூலக்கூறுகள் வந்து அமர்ந்து ஒன்றுக்கு ஒன்று வினைபுரிந்து புதியதாய் உருவாகும் மூலக்கூறுகள் அந்த வினையூக்கியை விட்டு வெளியேறும் வண்ணம் வடிவமைப்பு கொண்டு இருக்கும், எனவே இந்த வினையூக்கியானது வினைக்கு மட்டும் உதவியதோடு இருந்துவிட்டு தன்னில் எந்த ஒரு மாற்றத்தையும் அடைவதில்லை எனலாம். 

அழுத்தம் பற்றியதும் இதுவே. அழுத்தம் அதிகரிக்கும்போது மூலக்கூறுகள் ஒன்றோடு ஒன்று நெருங்கும் வாய்ப்பு அதிகம். 



பொதுவாக வேதியியல் வினைகள் நடைபெற ஒரு மூலக்கூறு எலக்ட்ரானைத் தர தயாராக இருக்க வேண்டும், மற்றொரு மூலக்கூறு எலக்ட்ரானை பெறத் தயாராக இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் வேதியியல் வினை நடைபெற வாய்ப்பு இல்லாமல் போய்விடும். எலக்ட்ரான்கள் இழப்பைப் பொருத்தும், பெறுவது பொருத்தும் வேதிவினையானது விரைவாகவோ, மெதுவாகவோ நடைபெறும்.

இதன்படி உலோகங்கள் அனைத்தும் எத்தனை வேகமாக வினைபுரியக்கூடிய தன்மை உடையவை என அறிந்து வைத்து இருக்கிறார்கள். அதன்படி பொட்டாசியம், சோடியம், கால்சியம், மெக்னீசியம் கார்பன் துத்தநாகம், இரும்பு, அலுமினியம், தாமிரம், சில்வர் என அதிக வினைபுரிதல் தன்மையிலிருந்து வரிசையாக செல்கிறது, இதில் தங்கம் வினைபுரிதல் இல்லை. 

எனவே அதிகமாக வினைபுரியும் தன்மையுடைய உலோகங்களைப் பிரிப்பது மிகவும் சற்று சிரமமான காரணம். உலோகங்களைப் பிரித்தெடுக்கும் முறையில் கார்பன் கொண்டு பிரிக்கும் முறையும், மின்சாரம் கொண்டு பிரிக்கும் முறையும் அதிகபட்சமாக உபயோகிக்கப்படுகிறது.