நாய்குட்டி படத்தோட விமர்சனம் மிச்சமிருக்கிறதால அதைப்பட்டி சொல்லிருவோம். நாய்க்குட்டி படத்துல விபச்சாரத்துக்கு போற பொண்ணுகளை தன்னோட சைக்கிள் ரிக்ஷாவில கூட்டிட்டு போய் விடற நாய்குட்டி பேரு வைச்சிக்கிறவருதான் படத்துல ஹீரோ. கூட்டிட்டுப் போய் ஆட்டோ, பணம்னு வளர்ந்துராரு. இப்படி அவர் வேலை செய்றப்போ அவர் பாக்குற காட்சிகள், காதலி அப்படினு படத்துலஅதிகம். ஒரு நண்பன் இந்த நாய்குட்டியை தப்பா புரிஞ்சிக்கிட்டதால அந்த நண்பனால இந்த நாய்குட்டி ஏமாத்தப்படறாரு, அந்த நண்பனால கடைசில இந்த நாய்குட்டி உயிர் பரிதாபமா போயிருது, இப்படிப்பட்ட நல்லவன் சாக காரணமாயிட்டனு அந்த நண்பனோட காதலி அந்த நண்பனை என்ன பண்றானு பல விசயங்களை சொல்லிட்டுப் போயிருக்கு நாய்குட்டியோட வாழ்க்கை. இவ்வளதான் கதை. வித்தியாசமாத்தான் இருந்திச்சி.
ஆனா இதையெல்லாம் தாண்டி ஒரு படம் பார்க்க வேண்டி வந்திருந்திச்சி. அந்த படத்தோட தலைப்பே கதை. படம் பாத்துட்டு இருக்கறப்போ எனக்கும் ஒரு மாதிரியாத்தான் இருந்திச்சி. ஏன்னா படம் ஒரு எழுத்தாளரைப் பத்தியது. படம் பாத்துட்டே இருந்தப்போ நமக்கு இப்படி ஒரு நிலைம வந்துரக்கூடாது சாமினு கடவுளை வேண்டிட்டே இருந்தேன். எப்படி ஒரு எழுத்தாளர் தத்ரூபா ஒரு கதைய எழுதுறாருனு காட்டுறாக. தான் எழுதற கதையில தன்னோடமனைவியவே கதைபாத்திரமா மாத்தி அவருக்கு தொல்லை தரக்கூடிய எழுத்தாளாரா வலம் வராரு.
வாழ்க்கையில கண்டதை, பார்த்ததை எப்படி எழுதற எல்லாருமே தன்னோட சொந்த சரக்கு மாதிரி எழுதி தள்ளிட்டு இருக்காங்கனு மனசில நினைச்சிக்கிட்டேன். சொந்த அனுபவங்கள கதைனு போர்வையில எழுதற ஆளுகளையும் இந்த படம் நினைவுக்கு கொண்டு வந்துச்சு. மனநிலை பாதிக்கப்படற அளவுக்கு ஒரு எழுத்து வெறி கொண்டு போகுதுனு பார்க்கறப்போ ஊருல உலாவுற பல எழுத்தாளர் சிகாமணிகள் கண்ணுக்கு வந்து போனாங்க.
தன்னை நிலைநிறுத்திக்க எப்படியெல்லாம் வேஷம் போட்டுத் திரியறாகனு நினைச்சப்போ இந்த படம் கொஞ்சம் அதிர்ச்சியாத்தான் இருந்துச்சு. எழுத்தாளர் ரொம்பவும் உச்சத்துக்கேப் போயிராரு. காமம் பத்தியெல்லாம் தன்னோட சொந்த விசயங்களை எழுதினத படிச்ச மனைவி துடிச்சிப் போயிருரா. மனைவியோட கருவை கலைக்க திட்டம் தீட்டி அதையும் செய்து ஒரு புத்தகமா அதைப் பத்தி எழுதி கொண்டாடும் வெறித்தனம் பிடிச்சவரா இருக்காரு இந்த எழுத்தாளரு. இதைப் பார்த்ததும் ரொம்ப பயமாத்தான் இருந்திச்சி. அட பாவிகளா, இப்படியெல்லாமா புகழ், பணம் பேருக்காக வெறி பிடிச்சி திரிவாங்கனு.
பயம் இந்த படம் கொடுத்தது இல்ல, இந்த எழுத்தாளர போலவே நேத்து ஒன்னு பேசிட்டு , இன்னைக்கு ஒன்னு பேசிட்டு திரியற எழுத்தாளருக பலரு மனசுல வட்டமிட்டு போனதுதான் பயம் கொடுத்துச்சு. படம் பாத்துட்டே இருக்கறப்போ நானு எழுதன கதையெல்லாம் என்னைப் பாத்து சிரிச்சிச்சு. நாளிதழுல படிச்ச விசயத்த கதையா மாத்தி எழுதன நிலைம, இன்னொரு கதையை தழுவி நானு எழுதன கதைனு எனக்கு ஒருமாதிரிதான் இருந்துச்சு.
இது மட்டுமில்லாம நகைச்சுவைனு ஒரு பகுதிக்கு அடுத்தவங்க எழுதுன கதையை தன் கதைனு பேரை மட்டும் மாத்தி திரியும் ஒருத்தரும் படத்துல வராரு. இதைப் பார்த்தப்போ ஒரு வலைப்பூவுல படிச்ச கதை திருடன எழுத்தாளருனு ஒருத்தரை பத்தி எழுதிருந்த விசயம்தான் நினைவுக்கு வந்துச்சு. அதே மாதிரி 'மறு பதிப்பு' அப்படினு நானு எழுதன ஒரு கதையும் ஞாபகத்துல வந்து தொலைஞ்சிச்சி. அடுத்தவங்க எழுத்தை அப்படியே எழுதி பேரு வாங்கனும்னு எதுக்கு திரியறாங்கனு நினைக்கிறப்போ, எழுத்தை மட்டுமில்ல அடுத்தவங்க வாழ்க்கையவே திருடி வாழற மனுசங்க மனசுக்கு வந்தாக.
இப்படியே படம் பாத்துட்டே போனா ஒரு கட்டம் திணற வைக்குது. அட கண்றாவி, இப்படியெல்லாமா, எழுதறதுக்கா ஒரு மனுசன் தன்னை தரம் தாழ்த்திக்குவானு தோணுச்சி. நாட்டு நடப்ப நினைச்சா இதெல்லாம் ஒன்னுமில்லைனு நினைக்கவும் தோணுச்சி. அப்படி போகுது கதை. படத்து சான்றிதழுல 'வயது வந்தவருக்கு' மட்டும்னு போட்டதால இளைய தலைமுறை பாதிக்கப்படக்கூடாதுனு நினைச்சிக்கிட்டாங்கனு நினைச்சிக்கிட்டேன்.
படத்தோட கடைசி கட்டம் தான் ஒரு நிமிசம் ஐயா சாமினு சொல்ல வைச்சது. படத்துல வர மனைவி எரிச்சல கிளப்புரா. ஏன் நம்மூரு பொண்ணுக எல்லாம் இப்படி அடைச்சி வைச்சமாதிரி இருக்காகனு கடுப்பா இருக்கு. புருசன்னா அவன் என்ன செஞ்சாலும் சரினு ஏத்துட்டு வாழற அடிமைப்பட்ட வாழ்க்கைய பொண்ணுக வாழறத நினைக்கறச்சே கோவம் கோவமா வருது. ஓங்கி அறையற புருசன அம்மி எடுத்து அப்படியே கொன்னு போட்டு போனாத்தான் குறைஞ்சா போகப்போகுது தோணுது.
வாழ்க்கையெல்லாம் அன்பே இல்லாம சத்தம் போட்டே வாழற புருசனைக்கூட தூக்கி வைச்சி ஆடற அந்த தாம்பத்ய உறவோட உன்னதம் எனக்குத்தான் தெரியாமப் போச்சு போலனு நினைச்சிக்கிட்டு இருக்கறப்போ கதைய முடிச்சவிதம் அந்த மனைவிய ஓங்கி அறை விடலாமானு தோணுச்சு. ஆனா காதலுனு ஒன்னு இருக்கே அதோட வலிமையும் கொஞ்சம் வலிக்கத்தான் செய்ய வைச்சிச்சி. காதலு எப்படியெல்லாம் ஒருத்தரை நடக்க வைக்குது. ஆனா இது காதலுனு சொல்றத விட காதல் வெறி, கட்டுக்குள்ள சிக்கிக்கிட்டு விலக முடியாத வலினு ஒவ்வொரு உசுரும் இந்த உலகத்துல போராடற வாழ்க்கையில இந்த கதை தலைப்பு வைச்ச படம் கதை இல்ல, ஏதோ ஒரு மூலையில நடந்துக்கிட்டு இருக்கற ஒரு கொடூரம். அவ்ளதேன்.