Friday, 12 March 2010

காமம் 4

வர்ணனைகள், வார்த்தைகள் காமத்தில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றன. பாலுணர்வு தொடர்புடைய வார்த்தைகள் மிகவும் கொச்சையாகவேப் பார்க்கப்படுகிறது. அவை பிறரை அவமானப்படுத்தவும், கேவலப்படுத்தவும், திட்டவுமே உபயோகப்படுகிறது. சாதாரணமாக எழுதப்படும் கதைகளில், கவிதைகளில் இது போன்ற வார்த்தைகள் தாராளமாக உபயோகிக்கப்படுவதில்லை. அது எழுதுபவரின் எண்ணத்தைப் பொருத்தும் அமைந்துவிடுகிறது, மேலும் என்ன இப்படியெல்லாம் எழுதி இருக்கிறார் எனும் கண்டனத்திற்கும் உள்ளாக வேண்டியிருக்கும் என்பதால் எழுத்துகள் திருத்தி அமைக்கப் பட்டுவிடுகிறது. இது போன்ற எழுத்துகளை தவிர்ப்பது என்பது அவரவர் மனதிற்கு உட்பட்டதாகவே அமைந்து விடுகிறது. அங்கே ஒரு சாரரின் பார்வையில் வார்த்தைகள் ஆபாசத்தன்மைகளை பெற்று விடுகின்றன. ஆண் பெண் இனப்பெருக்க உறுப்புகளை தமிழில் திட்டத்தான் உபயோகப்படுத்துகிறோம், ஆனால் ஆங்கிலத்தில் மிகவும் சாதாரணமாகவே பேசுகிறார்கள்.

ஒருமுறை ஒருவரின் பேட்டிதனை வலைப்பூவில் படித்தபோது சற்று அதிர்ச்சியாகத்தான் இருந்தது, ஆனால் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை அவரது பார்வையில் பார்த்தபோது ஓரளவுக்கு அவர் சொல்வது நியாயமாகத்தான் தெரிந்தது. விளையாடும்போது, திட்டும்போது உபயோகிப்படும் வார்த்தைகள் எழுத்தில் இருந்தால் எழுத்தின் நாகரிகம் குறைந்தா போய்விடும் என்கிறார் அவர். எழுத்து நாகரிகம் குறையாது, ஆனால் படிப்பவர்கள் மனதில் ஒருவித வெறுப்பு ஏற்படும். ஆனாலும் பலரும் அப்படித்தான் எழுதுகிறார்கள். இது தவறு, இது தவறில்லை என்பது எழுதும் விசயத்தைப் பொருத்து அமைந்து விடுகிறது என்பதை உற்று நோக்குதல் அவசியமாகும்.

'வார்த்தைகளைக் கொட்டிவிட்டால் அள்ள முடியாது' என ஊர் வழக்கில் சொல்வார்கள். நாம் கோபப்படும்போது உபயோகிக்கப்படும் வார்த்தைகள் பெரும்பாலும் நாம் உபயோகிக்க வேண்டியதன் அவசியமே இருக்காது. இருப்பினும் அதனை அவசியமாக்கிக் கொள்கிறோம். கோபத்தினை வெளிக்காட்டும் ஒரு பெரிய ஆயுதம் மெளனம் ஒன்றுதான். பேசாத வார்த்தைகளையெல்லாம் இந்த மெளனம் பேசிவிடும்.

கவர்ச்சிகமான வார்த்தைகள், துள்ளலுடன் கூடிய ஆபாசமான வார்த்தைகள் காமம்தனை விரும்புவோர்க்கு மனதில் கிளர்ச்சியை உண்டு பண்ணும், காமம் பிடிக்காதோர்க்கு மனதில் எரிச்சலை ஏற்படுத்தும். காமத்தின் மூலதனம் ஆசை மொழி, வார்த்தைகளை மென்மையான வருடலாக மாற்றும் நெருடல் இல்லாத மொழி.

ஆண்குறி, பெண்குறி என்றே பொதுவாக தமிழில் எழுதுவது சரியாகப்படும். ஒன்பதாம் வகுப்பில் அறிவியல் பாடம் படித்தபோதுதான் பெண்குறிக்கு யோனி என்று மற்றொரு பெயர் உண்டு என அறிந்தேன். அந்த பாடத்தை மறைத்து வைத்துப் படிக்கத்தான் தோன்றியது, மறைத்து வைத்துத்தான் பார்க்கத் தோன்றியது. அப்போதெல்லாம் இலக்கியம் எவர் படித்தது.

ஆண்குறிக்கு இதுவரை வழக்கத்தில் இல்லாத வேறு மொழி அறிந்தது இல்லை. கல்லூரிகளில் கவிதை எழுதத் தொடங்கியபோதுதான் பெண்குறிக்கு இலக்கிய வார்த்தை என்னவென்று அறிய முடிந்தது. தமிழ் அகராதியில் தேடிப் பார்த்ததில் அல்குல் என்றே இருந்தது. தமிழ் இலக்கியமோ, தமிழ் அகராதியோ படிக்காதவர்களிடம் போய் இந்த வார்த்தையைச் சொல்லி வேறு அர்த்தம் சொன்னால் தவறாகவா நினைக்கப் போகிறார்கள்? வார்த்தை, அது வார்த்தை தான். அதை எப்படி உபயோகப்படுத்திக் கொள்கிறோம் என்பதில் தான் வார்த்தையின் அமைப்பு இருக்கிறது.

திருப்பாவையில் ஒரு பாடல் வரும், அந்த பாடலில் அல்குல் என்றே ஆண்டாள் எழுதி இருப்பார். இதுகுறித்து பெரும் சர்ச்சைகள் இலக்கிய வரலாறில் எழுந்தது உண்டு. அதே வரியில் ஆண்குறி பற்றியும் எழுதி இருப்பதாக சொல்வார்கள். எனக்கு இலக்கியமோ, அல்லது ஆண்டாள் என்ன சொல்ல வருகிறார் என்பதை பிறரின் விளக்கவுரையில் இருந்து அறிந்து கொள்ள முடியாததாலோ ஆண்டாளின் எண்ணம் நிச்சயம் கொச்சைப்படுத்துதலில் இல்லை என்பதை என்னால் உறுதி செய்து கொள்ள இயலும், பிறர் அதை உறுதி செய்ய கொள்ள வேண்டுமென வாதிட எனக்கு அவசியமில்லை. அதோ அந்த பாடல்.

''கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து, 
செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும் 
குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே!
புற்றர வல்குல் புனமயிலே! போதராய்,
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட,
சிற்றாதே பேசாதே செல்லப்பெண் டாட்டிநீ
எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்.'' 


பெண்களின் மார்பகங்கள் காமத்தின் ஒரு பெரும் அங்கமாகவே இருக்கிறது. காமம் பற்றிய வர்ணனைகளில் மார்பகங்கள் கிளர்ச்சியூட்டுவதாகவே அமைந்துவிடுகிறது. 'கச்சணிந்த கொங்கை மாந்தர்' எனும் பாரதியின் வரிகளைப் படித்தபோது சற்றே அதிர்ச்சியாக இருந்தது. எப்படி இப்படி இவர் எழுதலாம் என நினைத்தேன். 'வசந்தவள்ளி பந்து பயின்றாலே' எனும் பாடலிலும் இந்த கொங்கை எனும் வார்த்தை உபயோகிக்கப்பட்டு இருப்பதாகவே நினைவில் இருக்கிறது. ஆனால் அங்கே எழுதப்பட்டதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை, இருப்பதை அப்படியே மிகைப்படுத்தாமல் சொல்லப்பட்டது. இதில் எந்த தவறு இருப்பதாகவோ, இவை காமம்தனை அதிகரிப்பதாகவோ எனக்குத் தெரியவில்லை.

கொங்கை என்பது சற்று நாகரிகமாகத்தான் இருக்கிறது, 'விளையும் பயிர் முளையிலே தெரியும்' எனும் பழமொழியை சற்று அநாகரிகமாக பெண்களின் மார்பகங்களை காட்டி ஒரு திரைப்பாடல் காட்சி அமைத்து இருந்தபோது என்ன ரசனை என்றேதான் தோன்றுகிறது. நேரடியாகவே முலை என்ற வார்த்தையை அபிராமி பட்டர் எழுதிய அபிராமி அந்தாதியில் படித்தபோது அதிர்ச்சி அடைந்தேன். ஆனால் இவை காமத்தை கிளர்ச்சி அடையச் செய்வதில்லை. மேலும் எவருமே தாய்ப்பால் என்றுதான் சொல்வார்களே தவிர முலைப் பால் என்றோ கொங்கை பால் என்றோ சொல்வதில்லை. அந்த பாடல் உங்கள் பார்வைக்கு.

மங்கலை செங்கலசம் முலையாள் மலையாள் வருணச் 
சங்கலை செங்கைச் சகலகலாமயில் தாவு கங்கை 
பொங்கலை தங்கும் புரிசடையோன் புடையாள் உடையாள் 
பிங்கலை நீலி செய்யாள் வெளியாள் பசும் பெண்கொடியே 


நேரடியாகச் சொல்லப்பட்டதன் காரணமாக இது அநாகரிமாகவே இல்லை என்றே பலர் வாதிடலாம். ஆனால் ஒன்றின் மேல் வேறொரு பொருள் வைத்து பேசுவது, எழுதுவது சற்று அநாகரிகமாகவேத் தெரிகிறது. இப்படித்தான் சென்னை மருத்துவ கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த அன்பழகன் கவிதை எழுதினான்.

'நீ என்னை கைகாட்டி வழியனுப்பிய போது
கைகள் மட்டுமா ஆடியது அந்த
கயிலாய மலைகளும் அல்லவா ஆடியது'

இதில் வக்கிரம் இருக்கிறதா? காமத்தைத் தூண்டும் பொருள் அமைந்திருக்கிறதா என்பதை படிப்பவர்களைப் பொருத்தே அமைந்துவிடும். இப்படி நிறைய விசயங்கள் சொல்லலாம். சொல்லப்பட்ட வார்த்தையில் அகங்கார அர்த்தம் தேடுவதும் நம்மில் இயல்பு. இவையெல்லாம் கேட்கும்போது நமக்குத் தெரியாமலேயே சிரித்து மகிழ்வோம் என்பதை அறியத் தொடங்குங்கள்.

இப்படித்தான் இந்த தொடர் எழுதுவதற்காக பல இடங்களில் தேடிப் பார்த்தபோது சிறுவயதில் ஒரு பாடல் ஒன்றுக்காக நூறு தடவை தங்கமகன் எனும் திரைப்படம்தனை பார்த்த ரசிகர் ஒருவர் இருந்தார் என்றே கேள்விபட்டு இருந்தேன். அந்த பாடலைப் பற்றிதான் அந்த இணையதளத்தில் வெகுவாக விவாதிக்கப்பட்டு இருந்தது. 'மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி கண்ணே' எனும் வரிகள். இந்த வரிகளுக்கான அர்த்தம் இரட்டை அர்த்தம் தெரிந்து கொண்டவருக்கும், இரட்டை அர்த்தத்தில் பார்ப்பவருக்கும் மட்டுமே புரியும், இப்படி எழுதி வைத்துவிட்டார்களே, இதை நானும் பாடிக்கொண்டு திரிந்தேன் அப்போது என் அன்னை என்னைக் கண்டித்தார் என ஒருவர் எழுதி இருந்ததைப் பார்த்தபோது அப்படி அர்த்தம் பார்த்தால் பல தமிழ் திரைப்பாடல்களை முணுமுணுக்கவே இயலாது. இங்கே இவை எல்லாம் காமம் எனும் உணர்வை கிளர்ச்சியூட்டச் செய்கின்றனவா? இல்லை என்றே சொல்வாரும் உளர்.

இப்படி ஒன்றின் மீது பொருள் வைத்து பேசப்படும் வார்த்தைகள், வர்ணனைகள் கிளர்ச்சியூட்டுவதை விட நகைச்சுவையாகவேப் பார்க்கப்படுகிறது, அது மட்டுமில்லாமல் எரிச்சல் ஊட்டுவதாகவும் அமைந்து விடுகிறது. தமிழ் இலக்கியங்களில் எழுதப்படாததா என்றே பலரும் கேட்கிறார்கள், காமம் பரவலாகவே பரந்து கிடக்கிறது என சொல்வாரும் உளர், அங்கே காமம் ரசிக்கப்படுகிறது, காம உணர்வுகள் கிளறப்படுவதில்லை. காமசூத்திரமும் சரி, சமண முனிவர் எழுதிய இலக்கியமும் சரி, ஜெயத்தக்கத் தேவர் எழுதிய பாடல்களும் சரி காமம் மென்மையானது என்றே சொல்லிவிட்டுப் போகும்.

ஒரே விசயத்தை ஆபாசம் என்றும், இலக்கியம் என்றும் நமது மனம் ஏன் அப்படி ஒரு நிலையை எடுத்துக் கொள்கிறது?

Thursday, 11 March 2010

இயற்கை பேராபத்து



குளத்தோரம் மீன் பிடிக்க 
போகச் சொன்னா 
எங்க போய் உட்கார்ந்திருக்க 

கிணத்துல குதிச்சி 
நீந்த சொன்னா 
எங்க போய் உட்கார்ந்திருக்க 

மலையில் போய் 
செடி கொண்டு வரச் சொன்னா 
எங்க போய் உட்கார்ந்திருக்க 

உயிர் விளிம்புல 
உட்கார்ந்துகிட்டு என்னத்த 
உத்து நீயும் பார்க்கிற 

உயர ஏறி வந்ததுமே 
கீழ இருக்கிறது 
ஒன்னா தெரியுதோ 

ஒரு எலும்பும் மிஞ்சாது 
உடனே வீட்டுக்கு வா 
உட்கார்ந்து சாப்பிடு 
உன்னை இனிமே 
எங்கும் போகச் சொல்லலை!

Tuesday, 9 March 2010

கண்ணான கண்ணு



என் கைகள் வெறுமையாய் இருக்கிறது 
அழகுப்பார்த்துக் கொள்ள 
அனுமதியில்லாமல் அழுது நிற்கிறது 

அழகிய அணிவகுப்பாய் 
பெண்ணுக்கென மட்டும் 
உன்னை ஒதுக்கிக் கொண்டது ஏனோ? 

சின்னஞ்சிறு வயதில் எனக்கு 
உடைத்து விளையாட 
உருவான வளையல். 

அன்புக்கட்டிலில் நொறுங்கும் வளையல் 

காப்பு கட்டி தொட்டிலுக்கு 
வருகை சொல்லும் துள்ளல் வளையல் 

குட்டிப்பெண்ணும் குதூகலித்து 
கொண்டாடும் வளையல் 

கொலுசைப் போல் மறைந்து 
காதல் சொல்லாது 

நேராய் நிமிர்ந்து காதல் சொல்லும் 
தைரிய வளையல் 

கற்கள் கொண்டு 
கண்ணைப் பறிக்கும் வளையல் 

வானவில்லில்லா நிறங்களும் கொண்டு 
வர்ணம் ஜொலிக்கும் வளையல் 

மனதில் இடம்பிடித்ததன்றி 
தமிழ்த்திரைப்பாடலில் தனியிடம் பிடித்த 
முத்து முத்தான வளையலுங்க.