Friday, 5 March 2010

அந்த மான் சிறை




அழகான அந்தமானில் 
சொந்த உரிமைக்கென குரலிட்டவர்களை
குரல்வளையை நெறித்து
சுதந்திர காற்றைக் கூட 
சிறைப்படுத்தி அனுப்பிய இடமோ?

அந்த மானைத் தேடிச்சென்ற
ராமன் பட்ட அவஸ்தை
சொந்த மண்ணை வேண்டியவரை
வெந்து போக வைத்திட
கட்டப்பட்ட கல்லறை இதுவோ?

சுதந்திர வேட்கை தணித்திட
இப்படியும் ஒரு சுடுகாடோ?
மனிதம்தனை கொளுத்திட 
இப்படியும் ஒரு கல்வெட்டோ?

சுதந்திரம் பெற்றுக் கொண்டோம் நாங்கள்
இக்கட்டிடத்துக்கும் சுதந்திரம் கொஞ்சம் தாருங்கள்
உடலெல்லாம் வலியைச் சுமந்திடும் 
உடனடியாய் விடுதலை தாருங்கள்
மனிதர்களை அடைத்திடும் சிறை அல்லாது
மனிதம் உருவாக்கிடும் கருவறையாய் மாற்றுங்கள்.

Thursday, 4 March 2010

நாய் பாசம்



சிரிக்கச் சொன்னதும்
ஆ வென வாய் திறந்த
அன்பே ஆருயிரே
இந்த பாட்டிக்கு நீங்கள்
இரு கண்களாய்

நன்றிக்கும் விசுவாசத்திற்கும்
இறைவன்கூட உங்களிடம்
வந்து ஏங்குவான் 
நீங்கள் பிழைக்கும் பிழைப்பினை
பிழையென சொல்வது ஏன்

வாலை ஆட்டி வருவாய்
தோல் பாட்டி சிரித்தே மகிழ்வாள்
யாரும் கல்லெடுத்து உங்கள் மீதெறிந்தால்
அவரை சொல்லெடுத்து பாட்டி சுளுக்கெடுப்பாள்

காவல் காக்கும் தெய்வமாய்
ஏவல் கேட்கும் பிள்ளையாய்
ஆதரவோடு இருக்கும் பாட்டியின்
கொஞ்சல்கள் கேட்டு மகிழ்வாய்
ஜாக்கிரதை என்ற எச்சரிக்கை
எதுவுமின்றி...
பிறந்த பாக்கியம் இது
பெருமிதம் கொள்ளுங்கள்.

வித்து காசு பாத்துறாதண்ணே




எம்புட்டு நேரம் நிற்கிறது 
சீக்கிரமா படமெடுண்ணே 
அம்மாக்கு ஒத்தாசையா 
செங்கல் தூக்கனும் 

அழுக்குத் துணி மாத்தி 
கலைஞ்ச முடியை 
வாரி பூச்சுடி 
அழகா போஸ் கொடுக்க 
வருச பொறப்புக்கு வாண்ணே 

இந்த படத்தை எங்கயும் 
வித்து காசு பாத்துறாதண்ணே 
பள்ளிக்கூட போற வயசில்ல 
பக்கபலமா அம்மாக்கு இருக்கேன் 

குழந்தைத் தொழிலாளினு சொல்லி 
பொழப்பை கெடுத்துராதண்ணே 
உழைச்சாத்தான் பசிக்கிற 
வயிறும் சந்தோசப்படும் 
இந்த விசயம் படத்தில தெரியுமாண்ணே!