Thursday, 4 March 2010

நாய் பாசம்



சிரிக்கச் சொன்னதும்
ஆ வென வாய் திறந்த
அன்பே ஆருயிரே
இந்த பாட்டிக்கு நீங்கள்
இரு கண்களாய்

நன்றிக்கும் விசுவாசத்திற்கும்
இறைவன்கூட உங்களிடம்
வந்து ஏங்குவான் 
நீங்கள் பிழைக்கும் பிழைப்பினை
பிழையென சொல்வது ஏன்

வாலை ஆட்டி வருவாய்
தோல் பாட்டி சிரித்தே மகிழ்வாள்
யாரும் கல்லெடுத்து உங்கள் மீதெறிந்தால்
அவரை சொல்லெடுத்து பாட்டி சுளுக்கெடுப்பாள்

காவல் காக்கும் தெய்வமாய்
ஏவல் கேட்கும் பிள்ளையாய்
ஆதரவோடு இருக்கும் பாட்டியின்
கொஞ்சல்கள் கேட்டு மகிழ்வாய்
ஜாக்கிரதை என்ற எச்சரிக்கை
எதுவுமின்றி...
பிறந்த பாக்கியம் இது
பெருமிதம் கொள்ளுங்கள்.

வித்து காசு பாத்துறாதண்ணே




எம்புட்டு நேரம் நிற்கிறது 
சீக்கிரமா படமெடுண்ணே 
அம்மாக்கு ஒத்தாசையா 
செங்கல் தூக்கனும் 

அழுக்குத் துணி மாத்தி 
கலைஞ்ச முடியை 
வாரி பூச்சுடி 
அழகா போஸ் கொடுக்க 
வருச பொறப்புக்கு வாண்ணே 

இந்த படத்தை எங்கயும் 
வித்து காசு பாத்துறாதண்ணே 
பள்ளிக்கூட போற வயசில்ல 
பக்கபலமா அம்மாக்கு இருக்கேன் 

குழந்தைத் தொழிலாளினு சொல்லி 
பொழப்பை கெடுத்துராதண்ணே 
உழைச்சாத்தான் பசிக்கிற 
வயிறும் சந்தோசப்படும் 
இந்த விசயம் படத்தில தெரியுமாண்ணே!

Wednesday, 3 March 2010

தாழ்த்தப்பட்டோரும் தாழ்வு மனப்பான்மையும்

எங்கள் ஊரானது பகுதி பகுதியாகத்தான் எந்தவொரு இடைச்சுவர்களும் எழுப்பப்படாமல் பிரிக்கப்பட்டு இருந்தது. அதில் ஒரு பகுதியானது தாழ்த்தப்பட்டவர்கள் வசிக்கும் பகுதி என்றே எனக்குத் தெரிந்து இருந்தது. அவர்களும், அவர்கள் அல்லாத பிறரை 'சாமி, சாமி' என்றே அழைத்து வந்தனர். அந்த பகுதியில் வீடுகள் எல்லாம் ஓட்டு வீடுகளாகவே இருந்தது. அவர்கள் வாழும் பகுதியில் நடந்து போனால் ஒரு வித 'கெட்ட வாசனை' அடிக்கும். அதற்கான காரணமும் இருந்தது. அவர்கள் மாடுகளைக் கொன்று இறைச்சி உண்ணும் பழக்கம் உடையவர்களாகவே இருந்தனர். அவர்கள் தங்கியிருக்கும் வீடுகளைச் சுற்றியிருந்த சாலை ஓரங்களில் மலமும் சிறுநீரும் கழிக்கப்பட்டு அந்த பகுதிக்குச் செல்வது என்றாலே மிகவும் அசெளகரியமாகவே இருந்தது.

அவர்களைத் தீண்டத்தகாதவர்கள் என்று சொல்லி இருந்தார்கள். அவர்கள் அல்லாத பிறர் நடந்து சென்றால் அவர்கள் பாதையில் வழிவிட்டு ஒதுங்கி நிற்பார்கள். பெரியவரோ, சிறியவரோ குனிந்து வணக்கம் சொல்லும் வழக்கம் உடையவர்களாகவே இருந்தார்கள். இதையெல்லாம் சிறு வயதில் பார்த்தபோது கொஞ்சமும் புரியாமல் தான் இருந்தது. ஏனெனில் வேலைக்கு ஆட்கள் வேண்டுமெனில் அவர்களைப் போய்த்தான் அழைப்பார்கள். அவர்கள் கூலி வேலை செய்ய வருவார்கள். அவர்கள் விவசாயம் பார்த்து வரும் உணவு பண்டங்களைச் சாப்பிடும் போது தீண்டத்தகாதவர்கள் உருவாக்கியது எனும் எண்ணம் எவருக்குமே எழுந்திருக்கவில்லை. 

அவர்களை வீட்டுக்குள் விடமாட்டார்கள். வீட்டின் வெளியில் நிற்பதோடு அல்லாமல் அவர்களுக்கென 'சிறட்டை' (தேங்காய் ஓடு) ஒன்றை வைத்திருப்பார்கள். அதில்தான் அவர்களுக்கு தேநீர் ஊற்றித் தருவார்கள். அவர்கள் கொண்டு வரும் பாத்திரத்தில் மட்டுமே உணவோ, பொருளோ வாங்கிச் செல்வார்கள். அவர்கள் விழாக்காலங்களில் பிறருடன் சேர்ந்து கொண்டாடுவதும் கிடையாது. 

காலங்காலமாக அவர்கள் அடிமைப்படுத்தப்பட்டு வந்தார்கள், அவர்கள் தங்களைத் தாங்களே அடிமைப்படுத்திக் கொண்டார்கள். அவர்கள் தீண்டத்தகாதவர்கள் எனினும் அவர்களுடன் கள்ள உறவு கொண்டவர்கள் என அவர்கள் அல்லாத பிறர் இருக்கத்தான் செய்தார்கள். அது போன்ற நிகழ்வுகளானது மிகவும் மறைமுகமாகவே செயல்படுத்தப்பட்டு வந்திருந்தது. காற்றில் நடமாடும் வார்த்தைகள் மூலமே அவை அறியப்பட்டிருந்தது. 

பள்ளிகளில் அவர்களுக்கெனத் தனி இடம் தரப்பட்டு இருந்தது. அவர்களைத் தொட்டு விளையாட விடுவதில்லை. அவர்களை விளையாடும்போது 'அவன் தீண்டத்தகாதவன்' என்றே சொல்லி விலக்கி வைத்தார்கள். பின்னர் நாட்கள் மாறத் தொடங்கியிருந்தன. 'சாமி' என்பது போய் 'முதலாளி' ஆகியிருந்தது. சேர்ந்து விளையாட ஆரம்பித்து இருந்தார்கள். ஆனால் தொட அனுமதிக்கப்பட வில்லை. 

இப்படி பகுதியாகப் பிரிக்கப்பட்டு இருந்த ஊரில் குறிப்பிடத்தக்க மற்றொரு பகுதியும் இருந்தது. அங்கே நான்கு ஐந்து வீடுகள் மட்டுமே. அவர்களை ஊரில் இருப்போர் எல்லோருமே 'சாமி, சாமி' என்றே அழைப்பார்கள். அவர்கள் வீட்டுக்குள் பிறர் செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள். வரவேற்பறையில் மட்டும் ஓர் ஓரத்தில் அமர்ந்து கொள்ள அனுமதிக்கப்பட்டு இருந்தது. அவர்களை உயர்ந்தவர்கள் எனச் சொல்லி இருந்தார்கள். 

இந்த இரு வேறுபட்ட நிலை குறித்து எந்த ஒரு வெறுப்பும், இதைப் போக்க வேண்டும் எனும் முனைப்பும் எவருக்கும் இருந்ததில்லை. தாழ்த்தப்பட்டோர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வழியாக சில ஓட்டு வீடுகள் கட்டிடங்களாக மாறி இருந்தன. ஆனால் அவர்கள் இன்னும் அப்படியேதான் இருக்கிறார்கள். 

தாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் எனும் எண்ணத்தை இவர்களோடு நிறுத்திக் கொள்ளாமல், தொடர்ந்து வரும் சந்ததிக்கும் அதை ஒரு அடையாளமாக அவர்கள் காட்டிக் கொள்கிறார்கள். 

இப்படியாக இருந்தபொழுதில் ஊரில் இருந்த ஒரு பகுதியான பிறபடுத்தப்பட்டோர் எனும் பிரிவானது மிகவும் பிற்படுத்தபட்டோர் எனும் மற்றொரு உட்பிரிவாகவும் பிரிந்தது. பொருளாதார அடிப்படையில் ஒரு சமூகத்தைப் பிரித்து வைக்கும்போது தாழ்த்தப்பட்டோர்கள் என்பவர்கள் எப்போதுமே தாழ்த்தப்பட்டவராகவே காட்சி அளிக்கிறார்கள். தாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் எனும் மனப்பான்மை எப்போதும் அடுத்தடுத்த சந்ததிக்கு இருந்து கொண்டே வருகிறது. 

நிறத்தை வைத்தும் மனிதர்களைப் பிரித்து வைத்திருப்பதாக மனு தர்மத்தில் எழுதி இருப்பதாக கேள்விப்பட்டு இருக்கிறேன். எழுதியவர் எதை நினைத்து அப்படி எழுதினாரோ, ஒரு பெரிய கரும்புள்ளியை சமூகத்தில் உருவாக்கி வைத்துவிட்டுப் போய்விட்டார். கருப்பு நிறமானது மிகவும் தாழ்த்தப்பட்ட நிறமாகவே அடையாளம் காணப்பட்டு வந்திருக்கிறது. முன்னர் எழுதிய வரியில் கூட கரும்புள்ளி என்றே குறிப்பிடப்பட்டு இருக்கிறது. வெளியூர் செல்லும்போதெல்லாம் எவர் தாழ்த்தப்பட்டவர், எவர் தாழ்த்தப்பட்டவர் இல்லை என்பதை அடையாளம் காண்பது மிகவும் சிரமமாக இருந்தது. நெரிசல்களில், போராடும் வேகங்களில் எவருமே இதை ஒரு பொருட்டாக தனது ஊரை தவிர்த்து மற்ற ஊர்களில் முக்கியத்துவம் தந்து பார்ப்பதும் இல்லை. 

இப்படி ஒரு சமூக அமைப்பானது மாறிவிட்டுப் போனதில் பெரும் வருத்தம் வந்து சேர்ந்திருந்தது. தாழ்த்தப்பட்டவர்கள் தாழ்வு மனப்பான்மையினால் கூனி குறுகிப் போயிருந்தார்கள். அவர்கள் தங்களை முன்னிறுத்திக் கொள்ள முடியாமல் திணறினார்கள். அவர்களிலிருந்து வெளிவந்த ஒரு சிலர் அவர்களுக்காக குரல் கொடுத்தபோது அந்த அடையாளத்தை முன்னிறுத்தித்தான் செய்தார்கள். புரட்சியாளர்கள் எனப் பேசப்பட்டபோதும் அவர்களுக்குள் ஒருவித தாழ்வு மனப்பான்மை இருந்து கொண்டேதான் இருந்தது. தாழ்த்தப்பட்டவர்களாக பிறந்துவிட்டோமே எனும் தாழ்வு மனப்பான்மை.

இப்படி இருந்த போது ஒவ்வொரு செயலும் இன்னாருக்குப் பாத்தியப்பட்டது எனும் தனி அடையாளம் கொண்டு வந்து சேர்த்தார்கள். சாதிகள் இல்லை என போதிக்கப்பட்டு வந்தாலும், அவன் இந்த சாதி, அவள் இந்த சாதி எனும் எண்ணம் மனதில் எழும் வகையில் அந்தந்த பகுதிகளின் செயல்பாடுகள் நடந்து கொண்டே இருந்தது. 

'நம்ம சாதி' எனும் எண்ணம் ஆழ வேரூன்றிப் போய்விட்டது. இதை ஊக்குவிக்கும் விதமாக எங்கு பார்த்தாலும் சங்கங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. அவரவருக்கென்று சாதி அடையாளம் இருக்கத்தான் செய்தது. சாதிகள் பேசும் மொழியென மொழியும் இனம் பிரித்துக் காட்டிக் கொண்டிருந்தது. பலருக்கு இந்த அடையாளம் அவரவர் விரும்பியது இல்லை, அது அவரவர்மீது காலத்தின் கட்டாயமாகத் திணிக்கப்பட்டு இருந்தது. அதைத் தொலைத்துவிட பலர் நினைத்தாலும் அவர்களின்மீது பூசப்பட்ட இந்த அரிதாரம் அழியாமலே இருந்துவிடத்தான் போகிறது. அவன் என்ன சாதியாக இருப்பான், அவள் என்ன சாதியாக இருப்பாள் எனும் கேள்விகள் அவர்களின் உள்ளுக்குள் எழுந்து கொண்டேதான் இருக்கப் போகிறது. 

இதையெல்லாம் மாற்றியமைக்கும் வழிகள் உண்டா? இல்லையா? என்பதை சிந்தித்துப் பார்க்கும்போது நிச்சயம் இப்போதைக்கு இல்லை என்றுதான் தோன்றுகிறது. தாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்றே தங்களைச் சொல்லிக்கொண்டு, உயர்ந்தவர்கள் என மற்றவர்களைச் சுட்டிக்காட்டிக் கொண்டே இருக்கும்வரை இப்படியேதான் இருக்கப்போகிறது. 

சாதி இல்லை, சாதி இல்லை எனச் சொல்பவர்களே சாதிகளை மறைமுகமாக ஊக்குவித்துக் கொண்டிருக்கிறார்கள். 'நாங்கள் சாதி இல்லை என சொல்லும் சாதி' எனும் அடையாளத்தைத் தங்களுக்குள் போர்த்திக்கொள்ளத் தொடங்குகிறார்கள். 

இப்படிப்பட்ட எல்லா அடையாளத்திற்கும் அடித்தளமிட்டது தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடுதான். ஒரு இனத்தோடு மற்றொரு இனம் போட்டி போட முடியாமல் திணறியதுதான். அவர்கள் இல்லாதவர்கள், அவர்களுக்கென தனிவசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என அரசாங்கம் முன் வந்தபோது எங்களை மட்டமாக நினைக்க வேண்டாம் என அவர்கள் போராடி அனைத்து சலுகைகளையும் தள்ளுபடி செய்துவிட சொல்லி இருந்தால் இன்று அவர்கள் தங்களுக்கென தனி இடம் ஒன்றை அமைத்திருப்பார்கள். நாங்கள் அடிமைகளாகவே வாழப் பழகிக்கொண்டவர்கள் என வாழாமல் தங்களுக்குள் ஒரு முழு முயற்சி எடுத்திருந்தால் இந்த தாழ்த்தப்பட்டோர் எனும் முகவரி தொலைந்து போயிருக்கும். ஆனால் என்ன நடந்து கொண்டிருக்கிறது, தாழ்த்தப்பட்டோர்கள் என தங்களைத் தாங்களே சொல்லிக்கொள்வதன் மூலம் நசுக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். 

எதிர்ப்பைக் காட்டுவதில் மட்டுமே அக்கறை அந்த தாழ்த்தப்பட்டோர்களுக்கு இருக்கிறது,  ஒரு சமுதாயம் முன்னேற வேண்டும் என்பதில் எவருக்கும் அக்கறை இருப்பதில்லை. இது இத்துடன் நிற்கவில்லை, தாழ்வு மனப்பான்மையும், போட்டி மனப்பான்மையும் சமூகத்தை குடைந்து கொண்டிருக்கிறது. வியாபார நோக்கம் தான் குறிக்கோள் என்றாகிய பின்னர் என்ன விலை கொடுத்து சமூக ஒற்றுமையை நிலைநாட்டுவது? 

தாழ்வு மனப்பான்மையில் அல்லாடும் தாழ்த்தப்பட்ட ஒருவனாகவே சமூகம் என்னையும் அங்கீகரித்துக் கொள்ளட்டும்.