Tuesday, 2 March 2010

இனி எல்லாமே கனவு!



வண்ண வண்ண விளக்குகள் இல்லை 
வர்ணம் பூசிய மனிதர்கள் இல்லை 
உயரமாய் கட்டப்பட்ட மேடை இல்லை 
சுற்றி நிற்கும் பாதுகாவலர் இல்லை 

கைத்தட்ட காசு வாங்கி 
வந்து அமர்ந்த மனிதரும் இல்லை 
வாக்கு சேகரிக்க தேவையற்ற 
வாக்கு இங்கு கொடுக்கவும் இல்லை 

சுதந்திரம்தனை தப்பாய் புரிந்தவரில்லை இங்கே 
சுதந்திர காற்றை மாசுபடுத்தும் கூட்டமுமில்லை 
இங்கே 
தலைவரென்று தனிமைப் படுத்துவதில்லை இங்கே 
துணிவை தொலைக்கும் தலைவரில்லை இங்கே 

புரியும்படியாய் சொல்வதும் உண்டு 
புரிந்து நடந்திடும் பொன்மனம் உண்டு 
வாங்கி தந்த சுதந்திரம்தனில் 
வாழ்ந்து மகிழ்ந்திட வருவாயா அண்ணலே!

Sunday, 28 February 2010

இளந்துறவி



உங்கள் கண்களுக்கு 
பொம்மைகளுடன் விளையாடும் வயதுதான் எனக்கு 
என் மனதில் 
பொம்மைகளை தூரம் தள்ளிவைக்கும் பக்குவம் எனக்கு 

எவரும் துறக்கச் சொல்லி துறப்பதில்லை 
வேண்டியே வெறுத்து எதுவும் ஒதுக்குவதில்லை 
பொருட்கள் வேண்டி சிறக்கும் நீங்கள் 
பொறுப்புடன் வளர்கிறேன் வந்து பாருங்கள் 

புன்னகை ஏந்தியே பூஜிக்கின்றேன் 
புரியும் வாழ்க்கையதை 
பள்ளி தொடாமல் பயில்கின்றேன் 
இறை உணர்வினால் மட்டுமே உயிர் சுமக்கின்றேன் 
சுமக்கும் உயிரை அவனுக்கே சமர்ப்பிக்கின்றேன் 

உங்கள் வாழ்க்கைக்கு நான் வருவதில்லை 
எந்தன் வாழ்க்கையில் உங்களுக்கு சுகமில்லை 
பொன்னும் பொருளும் பேணியும் 
எந்தன் வாசல் தொட்டு வணங்கிச் செல்வீர் 

என்றும் துறந்து விடாத ஒன்றில் 
எந்தன் மனதின் பற்று வைத்தே மகிழ்கின்றேன் 
துறந்துவிடும் விசயத்தில் பற்று வைத்திடும் உங்களுக்கு 
நானா தெரிகிறேன் துறவியாய்?

Friday, 26 February 2010

மக்கா சோளம்


மெல்லத்தான் ஓடிப்போய் 
வாழைப்பழம்னு கையில் எடுத்தே 
தோலை உரிக்கும் வேகத்தில் 
இழுத்துப் பார்க்க 


முத்தாய் ஒன்று வந்தது 
என்னவென்று ருசித்துப் பார்க்க 
இனிப்பாய் இருந்தது 


ஒவ்வொரு முத்தாய் 
விழுங்கிக் கொண்டே 
வாழைப்பழம் அல்லாது இருக்கும் 
இந்த மஞ்சள் வெயில் முத்துக்கு 
பெயர் என யோசித்து நிற்கையில் 


வழியில் நடந்த இருவரில் ஒருவர் 
'இங்க பாருடா மக்கா 
உன் ஆளு மக்காசோளம் திங்குது' 

கேட்டவுடன் மனதுக்குள் 
சொல்லிக் கொண்டேன் 
நான் உங்க முன்னோர்தான் மக்கா! 


இனி எனக்கு வாழைப்பழமும் 
தேங்காய் சிதறலும் வேண்டாம் 
மக்காசோளம் ஒன்றே போதும்.