Wednesday, 27 January 2010

காமம் - 1

1. எனக்கு மிகவும் பயமாகத்தான் இருக்கிறது. எங்கேனும் எவரேனும் இதனைப் படித்துவிட்டு என்ன நினைப்பார்களோ என்கிற அச்சம் அதிகமாகவே இருக்கிறது. இதனை எழுதி முடித்த பின்னர் ஒளித்து வைத்துவிடலாம் என்று மனதில் ஒரு எண்ணம் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது. எழுதியதை ஒளித்து வைத்து இருப்பேனோ எனும் ஒரு தேடல் உங்களுக்குள் இப்போதைக்கு எழுந்து இருக்கலாம்.

'காமம்' என்ற சொல் மிகவும் அருவெறுப்பாகவேத் தெரிகிறது. காமம் என்பதற்கான அர்த்தம் என்னவாக இருக்கும் எனும் ஒரு தேடல் என்னுள் இருந்தது. இப்பொழுதெல்லாம் ஏதேனும் தேவையெனின் நூலகங்களுக்கோ, அறிவிற்சிறந்தவர்களைத் தேடியோ செல்ல வேண்டிய நிர்பந்தங்கள் ஏதும் இல்லாமல் இருப்பது ஒரு செளகரியமாக இருக்கிறது.

காமம் என்ற சொல்லுக்கு ஆசை, விருப்பம், புலன் சார்ந்த இன்பம், காதல் மற்றும் வாழ்க்கையின் பிற இன்பங்களையும் பொதுவாக குறிக்கக்கூடிய சொல் எனவும்  காமம் என்பதின் விளக்கம் காம சூத்திரத்தில்

'ஸ்ரோத்ரதவக்சக்ஷுர்ஜிஹ்வாக்ராணானாம் ஆத்மசம்யுக்தேன மனசாதிஷ்டிதானாம் ஷ்வேஷு ஷ்வேஷு ஆனுகூல்யதாம் ப்ரவருத்திம் காமம்'

எனும் சுலோகம் மூலம் சொல்லப்பட்டு அதற்கு விளக்கமாக காமம் என்பது ஐம்புலன்கள், மனம், ஆன்மா ஆகிய அனைத்தின் சங்கமத்தால் உணரக்கூடிய அனைத்து இன்பம் தருபவனவற்றையும் குறிக்கும் எனக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது கண்டு அதிசயமாக இருந்தது.

இந்த காமசூத்திரத்தை வாத்சயானர் எனும் முனிவர் எழுதினார் என பலமுறைக் கேள்விபட்டதுண்டு. அப்படி என்னதான் எழுதி இருக்கிறார் என இதுவரை படிக்கும் வாய்ப்புக் கிட்டியதில்லை. ஆனால் இந்த காமசூத்திரம் பலரால் பின்னர் தொகுத்து எழுதப்பட்டது என தமிழ்விக்கிபீடியா சொல்கிறது.

அதுவும் காமசூத்திரத்தின் முதல் வரிகள் 'தர்மார்த்த காமேப்யோ நம' அதாவது 'அறம் பொருள் இன்பமே போற்றி' எனவும் சொல்கிறதாம். அதோடு மட்டும் இல்லாமல் ஒரு மனிதன் ஒவ்வொரு பருவகாலத்திலும் என்ன என்ன செய்ய வேண்டும் எனச் சொல்வதாகவும் ஒரு சுலோகம் அமைந்திருக்கிறது.

அந்த சுலோகத்தின் விளக்கமாக குழந்தைப் பருவத்தில் கல்வி மற்றும் பொருள் எனவும், இளமைப் பருவத்தில் காமம் எனவும் முதுமைப்பருவத்தில் தர்மம் செய்யவும் அதனால் மோட்சம் கிட்டும் என்பது போல் எழுதப்பட்டு இருக்கிறது.

ஷாதாயுர் வை புருஷோ விபஜய காலம் அன்யோன்யானுபத்தாம் பரஸ்பரசஸ்யானுபகாடகம் த்ரிவர்கம் சேவேத
பால்யே வித்யாக்ரஹணாடின் அர்தான்
காமம் ச யௌவனே
ஸ்தாவிர தர்மம் மோக்ஷம் ச

காமம் என்றாலே தலைதெறிக்க ஓடிய காலங்களும், காமம் பற்றி பேசினால் அவர்கள் தவறானவர்கள் எனும் எண்ணம் கொண்ட அந்த சிறு வயது முதலான இளமைப் பருவ காலங்கள் நினைவுக்கு வந்தது. ஒரு அறிவியல் நோக்கோடுப் பார்க்க வேண்டும் எனும் நிர்பந்தமோ, சொந்த அறிவோ இருந்திருக்கவில்லை.

திருக்குறளில் எழுதப்பட்ட காமத்துப்பால் பக்கம் எட்டி கூடப் பார்ப்பதற்கு அத்தனை அசெளகரியமாக இருந்தது. அசிங்கமான வார்த்தைகளாகக் எனக்குக் காட்டப்பட்டவைகள் என எதையுமே எப்போதும் பிரயோகம் செய்தது இல்லை. அப்படி பேசினால் நான் மோசமானவன் எனும் எண்ணம் என்னுள் ஆழ வேரூன்றியிருந்தது. எழுத்து நாகரீகம் என்று நினைத்துக்கொண்டிருக்கும் எனக்கு, 'கொச்சையான வார்த்தைகள் எல்லாம் அவற்றை கொச்சையாகப் பார்ப்பதில்தான் இருக்கிறது என பலர் உரக்கச் சொல்லிக்கொள்வதோடு எழுத்திலும் வைக்கிறார்கள். ஆனால் எனக்குத்தான் அதிர்ச்சியாக இருக்கிறது.

திருப்பாவை எழுதிய ஆண்டாள் எழுதவில்லையா எனவும் கேட்கிறார்கள். இலக்கியத்தரத்தோடு ஒரு விசயத்தை பார்க்க வேண்டும், வக்கிர புத்தியோடு பார்த்தால் எல்லாம் வக்கிரமாகத்தான் தெரியும் எனவும் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதில் ஏதேனும் உண்மை இருந்துவிடட்டும் என்றுதான் நானும் நினைக்கிறேன். ஆனால் உண்மையிலேயே நமது கலாச்சாரத்திற்கு அவையெல்லாம் முகம் சுளிக்க வைக்கும் வார்த்தைகளாகவே இன்றுவரை எனக்குத் தெரிகிறது. இலைமறை காயாகவே எல்லாம் உணர்த்தப்பட்டு வந்திருக்கிறது. வெளிப்படையாக பேசுவது என்பது நாகரிகமற்ற செயலாகவே கருதப்பட்டு வருகிறது. இனப்பெருக்கம் பற்றிய விசயங்களை பாடம் சொல்லித்தர  ஒருவித தயக்கமாகத்தான் இருக்கிறது. நிற்க.

'மோகத்தைக் கொன்றுவிடு; அல்லால் என் மூச்சை நிறுத்திவிடு' எனும் கவிதையை மனதில் பதிவு செய்தபோது 'மோகம்' என்றால் பெண் மோகம் என்றுதான் அர்த்தப்படுத்திக் கொண்டிருந்தேன். மோகம் என்பதற்கான அர்த்தங்கள் நன்றாக தமிழ் தெரிந்ததும் பலவகையில் புரிந்து  போனது.

காமம் சம்பந்தமான விசயங்கள் எதுவெனினும் கெட்டவர்கள் செய்யக்கூடியது என்றும் 'நீலப்படம்' பார்ப்பவர்கள் அயோக்கியர்கள், அங்க அவயங்களை வெளிக்காட்டும் எந்த ஒரு இதழ்களையும் பார்ப்பவர்கள் கேவலமானவர்கள் என்றெல்லாம் மனதில் சித்திரம் வரைந்து வைத்திருந்தேன்.

ஏன் அப்படி இருந்தேன், எதற்காக அப்படி இருந்தேன் என என்னுள் கேட்டுக் கொண்டபோது எனக்குள் ஒரே ஒரு விசயம் தெரிந்தது. என்னை எவரும் தவறாக நினைத்துவிடக்கூடாது என்பதுதான் அது. அதாவது நல்லவன் என்றால் மது அருந்தக்கூடாது, புகை பிடிக்கக்கூடாது, பிற பெண்களுடன் உறவு வைத்துக்கொள்ளக் கூடாது என்பது போன்றவைதான் எனக்குத் தெரிந்தவைகள். கல்லூரிக் காலங்களில் பெண்களிடம் பேசுவதற்கு வெட்கப்பட்டு ஓடி ஒளிந்திருக்கிறேன். அவர்களாகவே நான் எழுதிய கவிதையைப் பாராட்டிய போது என்ன சொல்வது எனத் தெரியாமல் விழித்திருக்கிறேன்.

இந்த காமம் வாழ்க்கையில் ஒருவர் அடைய வேண்டிய குறிக்கோளாகக் குறிப்பிடப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது தர்மம், அர்த்தம், காமம் மற்றும் மோட்சம் என்பன ஒருவர் வாழ்வில் அடைய வேண்டிய செயல்களாகும்.

ஆனால் சமீபத்தில் எழுதிய 'காதல் மட்டும்' கவிதை ஒன்றில் இப்படியும் எழுதினேன்.

நான் உன்னை காதலிக்கிறேன் என்றோ
நீ என்னை காதலிக்கிறாய் என்றோ
ஒருபோதும் சொல்லியதுமில்லை
காதல் சொல்லித்தான் தெரிவதில்லை

காதலில் ஆசை கடுகளவும் இல்லை
காதலில் காமம் தர்மம் இல்லை
உணர்வினால் மட்டுமே காதலி
அதுதானே காதலின் உயிர்மொழி.

நான் காமத்திலிருந்து காதலைப் பிரித்துப் பார்க்கிறேன். காதலை காமத்திலிருந்து விலக்கி வைத்திடவே விளைகிறேன். காதல் கொண்ட பார்வைக்கும், காமம் கொண்ட பார்வைக்கும் வேறுபாடு இருப்பதாகவேத்தான் நான் பார்க்கிறேன்.

காமம் இன்பம் தருவதில்லை, மாறாக காதல் இன்பம் தருகிறது. இப்பொழுது காமம் என்பதற்கான அர்த்தம் எனக்குள் வேறுபடுகிறது.

(தொடரும்)

Tuesday, 26 January 2010

ஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 5

மெண்டலீவ் வேதியயில் பாடத்தில் விரிவுரையாளாராக பணியாற்றிக் கொண்டு இருந்தார். தான் படித்துச் சொல்லித்தர வேண்டி புத்தகங்கள் தேடினார். அவருக்கு எந்த புத்தகமும் திருப்தி அளிக்கவில்லை. தான் ஒரு புத்தகம் எழுதினால் என்ன என அவருக்குத் தோன்றியது. 

அந்த காலகட்டத்தில் அதற்கு முன்னர் வாழ்ந்த விஞ்ஞானிகள் 50 க்கு மேற்பட்ட தனிமங்களைக் கண்டறிந்து இருந்தனர். 

அனைத்து தனிமங்களையும் பார்த்த மெண்டலீவ் அதனை ஒரு குறிப்பிட்ட வரிசையில் அடக்கினார். அவர் வரிசைப்படுத்த முயன்ற முறை அணுவின் எடையைப் பொறுத்துத்தான். அந்த கால கட்டத்தில் ஹைட்ரஜனை வைத்தே மற்ற அனுக்கள் எடைச் சொல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

அணுவின் எடைக்கும் வேதியியல் தன்மைக்கும் தொடர்பு உண்டு என கருதியே அவ்வாறு செய்தார். அவர் செய்த ஒரு மாபெரும் பணியானது மேலும் தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டி உள்ளது என இடைவெளிகள் விட்டு வரிசைப்படுத்தினார். ஆனால் சோதனையாக கதிரியக்கத்தன்மையுள்ள சில தனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டபோது அதனை முறையாகச் செய்யமுடியவில்லை, காரணம் அளவுச் சரியாகக் கிடைக்காததுதான்.மேலும் இது போன்று அணுவின் எடையைப் பொறுத்து வகைப்படுத்தியதன் பொருட்டு தனிமத்தின் வேதியியல் தன்மையானது ஒத்துவரவில்லை. ஆனால் இந்த அரிய சிந்தனைதான் இன்றைய தனிம அட்டவணையின் முன்னோடி எனச் சொன்னால் யார் மறுப்பார்கள். 

பின்னால் மோஸ்லி அணுவின் எண்களை வைத்து வரிசைப்படுத்தி உருவாக்கினால் சரிவரும் எனச் சொன்னார். முக்கியமாக எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் எல்லாம் பின்னால் கண்டுபிடிக்கப்பட்டன, அதுவரை அணு எடை என்பது தான் அவர்களுக்குத் தெரிந்த ஒன்று. தெரிந்த ஒன்றை வைத்துப் பின்னப்பட்ட விசயங்கள் பின்னாளில் வேறு கிடைத்ததும் மாற்றம் செய்ய ஏதுவாகின. 

பல பொருட்கள் ஒன்று என இருந்தவர்களுக்கு சில அறிவியல் சோதனைகள் அவைத் தனித்தனியான தனிமங்கள் ஒன்று சேர்ந்ததால் வந்தது எனக் காண்பிக்கப்பட்டது ஆச்சரியம் அளித்து இருக்கக்கூடும். 



எங்கு எங்கு எப்படி இந்த எலெக்ட்ரான் செல்கிறது என கண்டு கொள்ள முடியும் அதுவும் குவாண்டம் கொள்கை கணிப்பினால். 

ஒரு பொருளானது எப்படி பார்க்கப்படுகிறது எனில் ஒளியானது பொருளின் மேல் பட்டு பிரதிபலித்து அந்த ஒளியானது நமது கண்களில் பட்டு நமக்கு அந்த பொருள் தெரிகிறது என்பது அறிந்ததே. நுண்ணிய பொருள்களை ஒளியினை குவித்து ஒளி நுண்ணோக்கியால் நாம் அதனை பெரிதுபடுத்தி காண்கிறோம் அதாவது அளவில் சிறியதை பெரிது படுத்துகிறோம், நம்மால் பார்க்க முடிகிறது. ஆனால் அதற்கு எல்லைகள் உண்டு. 



நேனோ தொழில்நுட்பம் நுண்ணிய பொருள் பற்றி மிகவும் ஆராய்ந்து வருகிறது. இது தவிர்த்து எலெக்ட்ரான் நுண்ணோக்கியும் உண்டு. இதன் மூலம் மேலும் நுண்ணிய பொருள்கள் காணலாம். அணுவை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நுண்ணோக்கியால் தனிப்பட்ட அணுக்களை காணாலாம். ஆனால் எனக்கு தெரிந்தவரை யாரும் எலெக்ட்ரானைப் பார்த்ததாக இல்லை, அதனுடைய போக்கினை இப்படித்தான் இருக்கும், இங்குதான் இருக்கும் என கணிக்கும் திறமை நம்மில் உண்டு. 


(தொடரும்)


பாதை 1


பாதை 2


பாதை 3


பாதை 4

Monday, 25 January 2010

நாமும் தாவரம் ஆகிவிடலாம்

நாமும் தாவரங்கள் ஆகிவிட வேண்டியதுதான் 
எத்தனை காலம் தான் அண்டி பிழைப்பது

இவ்வுலகத்தில் வாழ்ந்திட மாற்றம் ஒன்றே
மரபணுக்களில் ஏற்பட்டு வந்தது எனில்
நமது செல்களுக்கும் தானே உணவு
தயாரிக்க சொல்லித் தராதா மரபணுக்கள்

மரபணு முறைகொண்டு நம்மிலும்
ஏற்படுத்துவோம் புதிய மாற்றங்கள்

எத்தனை காலம்தான் சொல்லிக் கொண்டிருப்பது
மரங்களை அழிக்க வேண்டாமென

எத்தனை மாநாடுதான் போடுவது
உலகம் வெப்பமாகி போகிறதென

மதங்கள் பணங்கள் நிறங்கள் யாவும்
வேற்றுமை தொலைத்து விட
நாமும் தாவரங்கள் ஆகிவிட வேண்டியதுதான்

உணவு நமக்கு மட்டும் தயாரிப்பதில் அல்ல
பிறருக்கு கொடுத்து விடுவதிலும் தான்.