Friday, 15 January 2010

தாரவி - Kevin McCloud, London, Channel 4

தொலைகாட்சி பார்ப்பதென்றால் சில நேரங்களில் மட்டுமல்ல, பல நேரங்களில் சற்று ஏமாற்றமாக இருக்கும். தொலைகாட்சியில் இன்று என்ன ஒளிபரப்பு செய்கிறார்கள் என நாளிதழ்கள் மூலமும், இணையங்கள் மூலமும் அறிந்து கொள்ள வாய்ப்பு இருந்தாலும் அதிக அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. இதனால் பல விசயங்கள் தெரியாமலேப் போய்விடுவதுண்டு. இவ்வாறிருக்க நேற்று தாரவி பற்றி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்ததை தற்செயலாகப் பார்க்க நேர்ந்தது.

இருபத்தி நான்கு வருடங்கள் இந்தியாவில் நெரிசலிலும், குப்பை கூளங்களிலும் வளர்ந்து திரிந்து வாழ்க்கை வாழ்ந்த விதம் தனை நினைத்தபோது கண்ணீர் கண்களில் நிறைந்தது. Slumdog Millionaire எனும் திரைப்படம் பார்த்தபோது மனதில் ஏதும் தோன்றவில்லை. அது ஒரு திரைப்படம் தானே என்கிற உணர்வுதான் மேலோங்கி இருந்தது. ஆனால் நேற்று ஒளிபரப்பு செய்யப்பட்ட தாரவி மனதில் பல கேள்விகளை எழுப்பிச் சென்றது.




இந்தியாவில் இருந்தபோது 1994ல் மும்பை பகுதிக்கு கல்லூரியில் இருந்து கல்விச் சுற்றுலாவாக ஒரே ஒரு முறை சென்றதுண்டு. மாதுங்கா எனும் இடத்தில் ஏழு நாட்கள் தங்கி இருந்தோம். தாரவியில் தமிழர்கள் அதிகம் வாழ்கிறார்கள் என்று கேள்விபட்டதோடு சரி, தாரவியை நேரில் சென்று பார்த்ததில்லை.

கெவின் எனும் தொலைகாட்சி நிருபர் தாரவிக்கு இரண்டு வார பயணமாக சென்று அங்கே வாழ்க்கை முறையை பற்றி உலகுக்கு சொல்ல முற்பட்டிருக்கிறார். படம் எடுத்த விதம் நிதர்சனத்தைச் சொன்னாலும் மனதில் பெரிய வலியை ஏற்படுத்தியது.

நினைத்த இடத்தில் மலம் கழிக்கும் சிறுவர்கள், மலம் கழித்த இடத்தின் அருகிலேயே விளையாடும் அதே சிறுவர்கள், குப்பை கூளங்களில் கட்டப்பட்ட வீடுகளா எனும் அளவுக்கு எங்கு பார்த்தாலும் குப்பையும், கழிவுகளும் நிறைந்து காணப்பட்டது. குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத ஆனால் ஜன நெருக்கடி அதிக இருக்கும் இந்த இடம் தான் ஆசியாவிலேயே முதன்மை இடமாக கருதப்படுகிறது.

ராஜேஷ் என்பவர் கெவினுக்கு இடங்களை சுற்றிக் காட்டுகிறார். கெவினுக்கு தலை சுற்றுகிறது, எப்படி இந்த இடத்தில் இவர்கள் வாழ முடிகிறதென. ராஜேஷ் வீட்டில் ஒரு நாள் தங்கிய கெவினுக்கு காலை எழுந்ததும் தண்ணீருக்கு கஷ்டப்படும் மனித வாழ்க்கை ஆச்சரியம் தருகிறது. சாலைகள் கழிவுகள் செல்ல இடமின்றி நிரம்பி இருப்பதை கண்டதும் அவரின் முகபாவனைகள் ஏனடா வந்தோம் என்பது போன்றே இருந்தது. மேலும் ஒரு விசயம் செய்வதற்கு எத்தனை சிரமங்கள் என எவரும் அவருக்கு உதவி செய்யாமல் காக்க வைப்பதை நினைக்கும்போது அவருக்கு வெறுப்பு வருகிறது.

இத்தனைக்கும் நடுவில் 85 சதவிகிதம் தாரவியில் உழைக்கும் மக்கள் இருக்கிறார்கள் எனவும், பல கோடி ரூபாய்களுக்கு வியாபாரம் நடக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டதைவிட, எந்த பொருளும் தாரவியில் இருந்து தயாராகிறது என்பதை குறிப்பிடாமலே பொருள்கள் விற்பனைக்கு செல்கிறது என்பதை அறிந்த போது உலக மக்களின் சுகாதாரத்திற்கும் இந்த மக்கள் விலை பேசுகிறார்கள்தான்.

பலர் நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள், இருப்பினும் அனைவரும் சந்தோசமாக இருக்கிறார்கள் என்கிறார் கெவின். ஒரே வீட்டில் இருபத்தியொரு பேர் வசிப்பதை அறிந்து பிரமிப்பு அடைகிறார். பள்ளிக்குச் செல்லும் சிறுமியின் வீட்டில் தங்கும் அவர், அங்கே எலித் தொல்லையால் அந்த இரவு உறங்க முடியாமல் தவிக்கிறார்.

இத்தனை நெருக்கமாக வாழும் இவர்கள் எப்படி தாம்பத்ய உறவு கொள்கிறார்கள் என்கிற பொல்லாத யோச்னையும் வந்து சேர்கிறது கெவினுக்கு, அதையும் கேட்டு வைத்திட, விடுதிகளில் வைத்துக்கொள்வோம் என்கிறார் ஒருவர். வாழ்க்கையின் அடிநிலையில் இருக்கும் மனிதர்களின் உணர்வுகள் மேல்தட்டு மனிதர்களுக்கு எப்போதுமே புரியப் போவதில்லை.

அரசுக்கு வரி செலுத்தாமல் பல கோடி வியாபாரம் நடக்கும் இந்த பகுதியானது கெவினுக்கு புதிதாக இருந்ததில் ஆச்சரியமில்லை. உழைப்பாளிகளில் சிறுவர்களும் அடக்கம், அதுவும் தகுந்த பாதுகாப்பில்லாமல் உழைப்பவர்கள் கண்டு ஆடித்தான் போகிறார் கெவின்.

அடிப்படை வசதிகள் இல்லாது இருப்பினும் சந்தோசமாக வாழ்கிறார்கள், கொஞ்சம் கூட சுகாதரம் இல்லை இருப்பினும் சந்தோசமாக வாழ்கிறார்கள் என கெவினின் கண்ணுக்கு தெரிகிறது. மேலும் இங்கு குற்றங்கள் மிகவும் குறைவாகவே நடக்கிறதாம். ஒற்றுமையாக அனைவரும் இருப்பதை கண்டு இங்கிலாந்தினை குறைபட்டு கொள்கிறார் கெவின். ஒருவர் வீட்டினுள் இறந்தால் மூன்று மாதங்களுக்கும் மேலாக அவர் இறந்தாரா, இருக்கிறாரா என்பது கூட இங்கிலாந்தில் வெளித் தெரியாமல் போக வாய்ப்புண்டு, ஆனால் தாரவியில் அப்படியில்லை என்கிறார்.

ஜன நெருக்கடியான ஒரு தெருவில் திடீரென பலர் கூடி தொழுகை நடத்துகிறார்கள். இருபது நிமிட தொழுகை மட்டுமே. பின்னர் அனைவரும் கலைந்து போய்விடுகிறார்கள். அத்தனை நெருக்கடியிலும் இறைவனை தொழும் நம்பிக்கை பிரமிப்பாக இருக்கிறது கெவினுக்கு. தாரவியில் நடக்கும் ஒரு விழா காட்டுகிறார், அங்கே தரப்படும் உணவினை சாப்பிட யோசிக்கிறார் கெவின். எத்தனை பேர் கைபட்டதோ என மனம் வெதும்புகிறார்.

தாரவியில் வாழ்பவர்கள் அனைவருமே குற்றவாளிகள் போல் தான் என் கண்களுக்குத் தெரிந்தார்கள். இயற்கையை சீரழிக்கும் குற்றவாளிகள், தங்கள் உரிமைகளை பறிகொடுத்துத் தவிக்கும் குற்றவாளிகள்.

இத்தனை சந்தோசம் இருந்தும், உழைப்பு இருந்தும் குப்பைகளை அகற்றி இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளக் கூடாதா என இங்கு வாழும் மக்களை ஏக்கத்துடன் எனது கண்களும் பார்த்துத் தவித்தது. இந்த இடமானது முற்றிலுமாக மாற்றப்பட்டு சகல வசதிகளுடன் உருவாக்கப்படும் திட்டம் இருப்பினும், இங்கே வசிப்பவர்களுக்கு இடமே இல்லாமல் செய்யும் திட்டம் என்பதால் இப்படியே இங்கேயே வாழ்கிறோம் என இருக்கும் இவர்களை காணும்போது கவலையாகத்தான் இருந்தது.

சுகாதாரம்? எனது சிறு வயது காலங்கள் நினைவுக்கு வந்தது. வீட்டின் முன்புறத்திலோ, பின்புறத்திலோ மலமும், சிறுநீரும் கழித்த காலங்கள். இயற்கை உரம் என சொல்லி தோட்டங்களிலும், காடுகளிலும் மாட்டின் கழிவுகளோடு கழிந்த தருணங்கள். இப்பொழுது கூட பல கிராமங்கள் அப்படியேதான் இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகம் எதுவுமில்லை. கழிவுகள் இருந்த இடத்திலிருந்து விளைந்ததையா சாப்பிட்டீர்கள் என என்னிடம் கேள்வி கேட்கபட்டபோது ஆம் என்று மட்டுமே சொல்ல முடிந்தது. எந்த ஒரு சுகாதாரத்தையும் பற்றியும் எண்ணத் தோன்றவில்லை.

சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வோ, அக்கறையோ கொஞ்சமும் நமது நாட்டில் செயல்பாட்டில் இல்லை. படித்தவர்களும் சரி, பாமர மக்களும் சரி எச்சில் துப்புவது, நினைத்த இடத்தில் குப்பை கொட்டுவது என கழிவுகளுடன் வாழப் பழகிக்கொண்டோம். இதில் தாரவி மட்டும் விதிவிலக்கா என்ன!



Thursday, 14 January 2010

வெறும் வார்த்தைகள் - கருத்துரை

தங்களின் "வெறும் வார்த்தைகள்" படித்தேன். முடித்ததும் வெறும் வார்த்தைகளா இவை? என்ற வினா எழுந்தது உண்மை. பதில். இவை வெறும் வார்த்தைகள் அல்ல. பெரும் வார்த்தைகள். மற்றவர்களும் பெற வேண்டிய வார்த்தைகள்.

ஆன்மீகம், அறிவியல், காதல், மனித நேயம், ஜீவகாருண்யம் என்று சொல்ல வந்த வார்த்தைகள் அடக்கத்திலும், ஆற்றலிலும் அடர்த்தி மிக்கவை.

உறங்'குகை'யில் உயிர் நிற்கும் இடமேது
உணர்வில்லா நிலையில் கூட
உன்னை மட்டும் உணர்தலுக்கு நிகரேது.
இல்லை நீயெனச் சொல்லுதற்கு சொல்லைத் தந்து விட்டு
எல்லையிலா அண்டவெளியில் மறைந்து நின்று
காத்து அருளிகின்றாயோ அறிவதற்கு...

இந்த வினாக்கள் மனத்தில் எழுப்பும் அதிர்வலைகளை வார்த்தகளுக்குள் வரையறுத்தல் சிரமம். உறங்குகையில் என்பதைக் கூட இருவிதமாகப் பொருள் கொள்ளத் தூண்டுகிறது. உறங்குதல் என்பது தூக்கம். அதையே பிரித்து (குகையை எண்ணிப்) பார்த்தால் புரியும் பொருளின் தளம் அர்த்தம் பெறுகிறது. சலனமற்ற நீர் வெளியில் வந்து விழும் கூழாங்கல் எழுப்பிச் செல்லும் அலைகளைப் போல் ஞான வட்டம் முடிவிலியாய் விரிந்து கொண்டே போகிறது.

உருவம் இல்லா உன்னோடு
உருவகம் இல்லாத காதல்.

அரூபமான இறைவனைப் போற்ற ரூபங்கள் அவசியமல்ல. அவன் அத்தனை மொழிகளும் தெரிந்தவன். மௌனம் தரும் அடர்த்தியை பேச்சு மொழி தந்து விடாது. காதலின் பால பாடம் மௌனம் தான். அறியாமையை அறிந்து கொள்வது தான் ஆன்மத் தேடலின் ஆதி. இந்தச் சூட்சுமத்தை ஆங்காங்கே பொடி வைத்து வெடி வைத்திருக்கிறீர்கள்.

நிலத்தடியில் புதைந்த விதை. தருணம் வந்ததும் துளிர் விட்டுத் தளிர் விடுவது போல நிச்சயம் பலன் வரும் தங்கள் வார்த்தைகளுக்கு. அதற்கான நம்பிக்கையை நிறையவே விதைத்திருக்கிறீர்கள். வாய்மைக்கும், பொய்மைக்கும் இடையில் உள்ள நுண்ணிய திரையை உரசிப் பார்க்கும் கேள்விகளை நிறையவே எழுப்பியிருக்கிறீர்கள். சில கவிதைகளை இன்னும் செழுமைப்படுத்தியிருக்கலாமே என்று சொல்கிறது வாசக மனம்.

"வெறும் வார்த்தைகள்" மனித மனங்களில் மாற்றத்தைப் பெற்றுத் தரும். அப்போது அவை அட்சர இலட்சம் பெறும்.

எல்லாருக்கும் பொதுவான இறைவனின் ஆசியையும், ஞானத்தையும் அனைவருக்கும் வேண்டியவனாய்.


வெறும் வார்த்தைகள் கவிதைத் தொகுப்பு பெற:

தமிழ் அலை
1, காவலர் குறுந்தெரு,
ஆலந்தூர் சாலை,
சைதாப்பேட்டை
சென்னை ‍ 600 015
தொடர்புக்கு: 00919786218777

Wednesday, 13 January 2010

அரசியல்வாதிகள் (உரையாடல் கவிதைப் போட்டி)

அரசியல்வாதிகள்

வெட்டிப் பேச்சு, வீண் எழுத்து
சட்டி சட்டியாய் நிறைந்திருக்கும்

அதை செய்தோம், இதை செய்தோம்
கதை சொல்லி காலம் கடத்தும்

ஆதங்கங்கள் நிறைய கொண்டு
வாதங்கள் செய்வது மட்டும் உண்டு

நாட்டின் நிலைமையை கைகாட்டுவோமே
வீட்டின் நிலைமையை பார்த்தோமா

உற்ற உறவுகளையும், பெற்ற நட்புகளையும்,
கற்ற கல்வியையும், சிற்றறிவுடன்
விற்ற பெருமையும் நம்மை சார்ந்ததாம்

கட்சியில்லை, கொடியுமில்லை
கூட்டம் கூட்டமாய் அலைந்து திரிவோம்
மாட்சியில்லா மந்தைகளாய் மாய்ந்தும் போவோம்

எத்தனை வாக்குறுதிகள், எத்தனை உறுதிமொழிகள்
பித்தனைப் போல், எத்தனைப் போல்
வருடவேஷம் கட்டி நீசமனம் கொண்டு
திருடகோஷம் போடும் நாமும் அரசியல்வாதிகளே.