Thursday, 14 January 2010

வெறும் வார்த்தைகள் - கருத்துரை

தங்களின் "வெறும் வார்த்தைகள்" படித்தேன். முடித்ததும் வெறும் வார்த்தைகளா இவை? என்ற வினா எழுந்தது உண்மை. பதில். இவை வெறும் வார்த்தைகள் அல்ல. பெரும் வார்த்தைகள். மற்றவர்களும் பெற வேண்டிய வார்த்தைகள்.

ஆன்மீகம், அறிவியல், காதல், மனித நேயம், ஜீவகாருண்யம் என்று சொல்ல வந்த வார்த்தைகள் அடக்கத்திலும், ஆற்றலிலும் அடர்த்தி மிக்கவை.

உறங்'குகை'யில் உயிர் நிற்கும் இடமேது
உணர்வில்லா நிலையில் கூட
உன்னை மட்டும் உணர்தலுக்கு நிகரேது.
இல்லை நீயெனச் சொல்லுதற்கு சொல்லைத் தந்து விட்டு
எல்லையிலா அண்டவெளியில் மறைந்து நின்று
காத்து அருளிகின்றாயோ அறிவதற்கு...

இந்த வினாக்கள் மனத்தில் எழுப்பும் அதிர்வலைகளை வார்த்தகளுக்குள் வரையறுத்தல் சிரமம். உறங்குகையில் என்பதைக் கூட இருவிதமாகப் பொருள் கொள்ளத் தூண்டுகிறது. உறங்குதல் என்பது தூக்கம். அதையே பிரித்து (குகையை எண்ணிப்) பார்த்தால் புரியும் பொருளின் தளம் அர்த்தம் பெறுகிறது. சலனமற்ற நீர் வெளியில் வந்து விழும் கூழாங்கல் எழுப்பிச் செல்லும் அலைகளைப் போல் ஞான வட்டம் முடிவிலியாய் விரிந்து கொண்டே போகிறது.

உருவம் இல்லா உன்னோடு
உருவகம் இல்லாத காதல்.

அரூபமான இறைவனைப் போற்ற ரூபங்கள் அவசியமல்ல. அவன் அத்தனை மொழிகளும் தெரிந்தவன். மௌனம் தரும் அடர்த்தியை பேச்சு மொழி தந்து விடாது. காதலின் பால பாடம் மௌனம் தான். அறியாமையை அறிந்து கொள்வது தான் ஆன்மத் தேடலின் ஆதி. இந்தச் சூட்சுமத்தை ஆங்காங்கே பொடி வைத்து வெடி வைத்திருக்கிறீர்கள்.

நிலத்தடியில் புதைந்த விதை. தருணம் வந்ததும் துளிர் விட்டுத் தளிர் விடுவது போல நிச்சயம் பலன் வரும் தங்கள் வார்த்தைகளுக்கு. அதற்கான நம்பிக்கையை நிறையவே விதைத்திருக்கிறீர்கள். வாய்மைக்கும், பொய்மைக்கும் இடையில் உள்ள நுண்ணிய திரையை உரசிப் பார்க்கும் கேள்விகளை நிறையவே எழுப்பியிருக்கிறீர்கள். சில கவிதைகளை இன்னும் செழுமைப்படுத்தியிருக்கலாமே என்று சொல்கிறது வாசக மனம்.

"வெறும் வார்த்தைகள்" மனித மனங்களில் மாற்றத்தைப் பெற்றுத் தரும். அப்போது அவை அட்சர இலட்சம் பெறும்.

எல்லாருக்கும் பொதுவான இறைவனின் ஆசியையும், ஞானத்தையும் அனைவருக்கும் வேண்டியவனாய்.


வெறும் வார்த்தைகள் கவிதைத் தொகுப்பு பெற:

தமிழ் அலை
1, காவலர் குறுந்தெரு,
ஆலந்தூர் சாலை,
சைதாப்பேட்டை
சென்னை ‍ 600 015
தொடர்புக்கு: 00919786218777

Wednesday, 13 January 2010

அரசியல்வாதிகள் (உரையாடல் கவிதைப் போட்டி)

அரசியல்வாதிகள்

வெட்டிப் பேச்சு, வீண் எழுத்து
சட்டி சட்டியாய் நிறைந்திருக்கும்

அதை செய்தோம், இதை செய்தோம்
கதை சொல்லி காலம் கடத்தும்

ஆதங்கங்கள் நிறைய கொண்டு
வாதங்கள் செய்வது மட்டும் உண்டு

நாட்டின் நிலைமையை கைகாட்டுவோமே
வீட்டின் நிலைமையை பார்த்தோமா

உற்ற உறவுகளையும், பெற்ற நட்புகளையும்,
கற்ற கல்வியையும், சிற்றறிவுடன்
விற்ற பெருமையும் நம்மை சார்ந்ததாம்

கட்சியில்லை, கொடியுமில்லை
கூட்டம் கூட்டமாய் அலைந்து திரிவோம்
மாட்சியில்லா மந்தைகளாய் மாய்ந்தும் போவோம்

எத்தனை வாக்குறுதிகள், எத்தனை உறுதிமொழிகள்
பித்தனைப் போல், எத்தனைப் போல்
வருடவேஷம் கட்டி நீசமனம் கொண்டு
திருடகோஷம் போடும் நாமும் அரசியல்வாதிகளே.



Tuesday, 12 January 2010

நாச்சாரம்மாள்

நாச்சாரம்மாள் வண்ணமயமான தெருவினில் நின்று கொண்டு மனதினில் நாராயணப் பெருமாளை நினைத்து வழிபட்டு கொண்டு இருந்தாள். ஊரில் உள்ள மக்கள் எல்லாம் திரண்டு இருந்தனர்.

நடு இரவு ஆகியும் சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அந்த அதிசய நிகழ்வினை காண்பதற்கு காத்துக் கொண்டு இருந்தனர். ஊரின் நாட்டாமையும் ஊரின் பூசாரியும் தகதகவென நெருப்பாய் பிரகாசித்துக் கொண்டு இருந்த நெருப்புக் கோளங்களை ஒரு சட்டியில் எடுத்து வரச்சொன்னார்கள். எரிக்கப்பட்ட கட்டையானது நெருப்புத் துண்டுகளாய் மாறி நெருப்புக்கோளங்கள் போன்று இருந்தது. நாச்சாரம்மாள் வழிபாட்டினைத் தொடர்ந்து கொண்டு இருந்தார். மூதாட்டிகள் அவரைச் சுற்றி ஒரு வளையம் மூன்று அடிகள் தள்ளி அமைத்து இருந்தனர்.

நாச்சாரம்மாளின் கண்களில் இருந்து கண்ணீர் சொட்டாய் தரையில் விழுந்தது அது பூமியினை பெரும் குளிர்ச்சி அடையச் செய்தது. பூசாரி நெருப்புக் கோளங்களை நெருப்புக் கடத்தா பொருளின் உதவியுடன் வாங்கிக் கொண்டு வளையம்தனை விளக்கி நாச்சாரம்மாளின் முன் வந்தார். ‘’தாயே சேலையைப் பிடிச்சி மடி ஏந்து’’ என்று சொன்னதும் ஊரில் உள்ள அனைவரும் கோவிந்தா, கோவிந்தா, கோவிந்தா, நாராயணா, நாராயணா, நாராயணா, பெருமாளே பெருமாளே, பெரூமாளே என கோஷம் இட்டனர். பூசாரியின் கைகள் நடுங்கியது. அந்த அரும்பெரும் காட்சியினைக் காண ஒருவரையொருவர் முன்னும் பின்னும் தள்ளிக் கொண்டு கால்களை சிறகுகளாக மாற்றிகொண்டு இருந்தனர். முன் இருப்பவரின் தோள்களில் கைகள் வைத்து அழுத்தியது கூட உணராமல் மற்றவர்கள் தாங்கிக் கொண்டு இருப்பதைக் காணும்போது இந்நிகழ்ச்சி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்த்திக் கொண்டு இருந்தது.

நாச்சாரம்மாள் சேலையின் மடியினை தாங்கிப் பிடித்தார், இம்முறை ஒவ்வொருவரும் அமைதியாய் பெருமாளே பெருமாளே என வேண்டிக் கொண்டு இருந்தனர், பூசாரி நெருப்புக் கோளங்களினை சேலையின் மடியில் போட்டார். 'கோவிந்தா' என்னும் கோஷம் விண்ணைப் பிளந்தது. நெருப்புக்கோளங்களை தனது சேலையில் நாச்சாரம்மாள் இன்னும் தாங்கிக் கொண்டு இருந்தார். ஒரு நெருப்புக் கூட சேலையினை எரிக்கவில்லை தரையில் விழவும் இல்லை. அந்த நிகழ்வினைக் கண்டு அனைவரும் 'தாயே' என விழுந்து வணங்கினர். பூசாரியும் விழுந்து வணங்கினார். ‘’நம்ம ஊர்ல தெய்வம் குடி இருக்கு’’ என அனைவரும் கூறினர். பூசாரி நெருப்புக் கோளங்களினை சட்டியில் வாங்கிக் கொண்டார். ஊரெல்லாம் நாச்சாரம்மாளினை தெய்வம் என கொண்டாடியது. மறுநாள் காலையில் நாச்சாரம்மாள் வைகுண்டப் பதவி அடைந்தார். ஊரெல்லாம் சோகத்தில் மூழ்கியது.