Wednesday, 23 September 2009

தாய்மையை போற்றுக; வேண்டாம் தூற்றுக

தாய்மையைக் கேள்வி குறியாக்கும் செய்திகள் தொடர்ந்து அறிந்து கொண்டே வரும் வேளையில், சமீபத்தில், தனது இரண்டு குழந்தைகளை உயிருடன் கொன்ற தாய் பற்றிய செய்தி அறிந்ததும், ஒரு தாய் எப்படி தனது குழந்தைகளைக் கொல்லத் துணிவாள் எனும் கேள்வி மனதில் எழாமல் இல்லை. நம் வீட்டில் எதுவும் நடக்காதவரை எல்லாமே கேள்விக்குறியாகத்தான் இருக்கும் என்பதை அறியாமல் இல்லை.

நல்லதங்காள் கதையைக் கேள்விபட்ட போதே எப்படி ஒரு தாய் இப்படி தன்னைத் தயார் படுத்திக் கொள்கிறாள் எனும் கேள்வியும் எழுந்தது.

தனது மகள் வேறொருவனைக் காதலிக்கிறாள் என அறிந்ததும் அந்த மகளை உயிருடன் எரித்த தாய் பிறந்த ஊரில் தான் நானும் பிறந்து இருக்கிறேன் என எண்ணும்போதே இந்த தாய்மையை பற்றி சிலாகித்துப் பேச மனம் முன்வருவதில்லை.

தாய்மை உணர்வைத் தூக்கி எறிந்துவிட்டு நவநாகரீகத்தில் உழலும் பெண்கள் பற்றி பேசினால் ஆணாதிக்கம் எனும் அவச்சொல் வந்து சேர்ந்துவிடும் என்பதாலேயே நடப்பதெல்லாம் நடக்கட்டும் என இருந்துவிடத்தான் ஆசை.

வாழ்க்கையில் போராட முடியாமல், அவமானம் தாங்க இயலாமல் தாய்மை தள்ளாடுகிறது. இதுபோன்ற தாய்மை பற்றி விரிவாக எழுதத்தான் ஆசை. ஆனால் உலகம் அறிந்த மக்களிடம் ஒன்றைப் பற்றி நாம் சொல்ல வருமுன்னரே, அது என்ன ஏது என அறியாமல், அதைப்பற்றிய திசைமாறிய எண்ணங்கள் அடுக்கடுக்காக வந்து சேரும் என்பதால் இப்படியே விட்டுவிடுகிறேன்.

இதுகுறித்து எழுதுவோர் எழுதட்டும்.

Tuesday, 22 September 2009

இறைவனும் இறை உணர்வும் - 3

3.
உண்மையாய் வாழ்வது துன்பம் என்றிருந்தேன்
உண்மையாய் வாழ இயலாது தவித்திருந்தேன்
பொய்மையை மனதில் நிறைத்து இருந்தேன்
கயமை குணத்துடனே வாழ்வை கழித்து இருந்தேன்
ஐயனே உன்னை அறிந்த பின்னும்
பொய்யனாய் வாழ்வது முறையோ?

என பாடிய ஒருவரை எதேச்சையாகச் சந்தித்த மற்றொரு நபர், பாடியவரிடம் சென்று நன்றாக இருந்தது பாடல், சிலர்தான் தங்கள் செயல்களை பரிசீலனை செய்து முறையாக வாழப் பழகிக் கொள்வார்கள் என வாழ்த்திவிட்டுச் சென்றார்.

சில வருடங்கள் பின்னர் அந்த பாடலை பாடியவரைச் சந்திக்கும் வாய்ப்பு எதிர்பாரா விதமாக மீண்டும் அந்த நபருக்கு கிட்டியது. பாடலும் ஒலித்தது. அதே வரிகள். ஐயனே உன்னை அறிந்த பின்னும் பொய்யனாய் வாழ்வது முறையோ? என்றே முடித்ததைக் கேட்டதும் அந்த நபரிடம் சென்று ‘’சில வருடங்கள் முன்னர் இதே வரிகளைத்தான் பாடீனீர்கள், நீங்கள் பொய்யான வாழ்க்கையில் இருந்து மீள முயற்சிப்பதில்லையா’’ என்று கேட்டார்.

‘’முடியவில்லை, பொய்யாகவே வாழ்ந்து பழகிவிட்டது. அந்த பொய்யில் இருந்து உண்மையாய் வாழ்வது என்பது இயலாததாக இருக்கிறது’’ என்றார் பாடியவர். ‘’இறைவனைத்தானே ஐயன் எனக் குறிப்பிட்டீர்கள், இறைவனை அறிந்த பின்னும் பொய்யாக வாழ்வது முறையா என்றுதானே அர்த்தம் சொல்கிறது பாடல்’’ என்றார் அந்த நபர்.

‘’ஆமாம், எனது இயலாமையைத் தான் ஐயனிடம் சொல்லி புலம்புகிறேன்’’ என்றார் பாடியவர். ‘’இறைவனிடம் இப்படி புலம்புவதன் மூலம் எப்படி நீங்கள் உண்மையாக வாழ முடியும், உண்மையாக வாழ முயற்சி செய்ய வேண்டுமல்லவா’’ என்றார் அந்த நபர்.

‘’முயற்சி செய்து கொண்டிருக்கிறேன், ஆனால் முடியவில்லை. என்னை ஆட்டிப்படைக்கும் ஐயனிடம் அதனால்தான் மன்றாடிக் கேட்கிறேன். ஐயனை அறியாதபோது செய்த தவறெல்லாம் ஐயனை அறிந்த பின்னும் தொடர்வது ஐயனின் விளையாட்டுதானேயன்றி வேறென்ன?’’ என்றார் பாடியவர்.

‘’ஐயனின் விளையாட்டு அல்ல அது, இது உங்கள் விளையாட்டு. மன தைரியத்துடன் உண்மையாகவே வாழ்வது என பொய்மையையும், கயமையையும் ஒழித்துவிட்டு வாழ்ந்து பாருங்கள். உண்மையாய் வாழ்வது இன்பம் எனப் பாட வரும்’’ என்றார் நபர்.

‘’அந்த ஐயனே உங்களை அனுப்பி இருக்கிறார். என்ன தவம் செய்தேன் நான்’’ என்றார் பாடியவர்.

‘’எந்த ஒரு ஐயனும் என்னை அனுப்பவில்லை, நீங்கள் ஒரு தவமும் செய்யவில்லை. எதேச்சையாக உங்களை நான் பார்க்க நேரிட்டது. எனக்கென்ன வருத்தமெனில் நீங்கள் அந்த ஐயனை அறியவே இல்லை. அந்த ஐயனை அறிந்து அந்த ஐயன் வழி நடந்திருந்தால் நீங்கள் பொய்யான வாழ்வினை வாழ மாட்டீர்கள்’’ எனச் சொல்லிவிட்டு நடக்கலானார் அந்த நபர்.

இறைவனை நம்புவர்கள் மட்டுமே உண்மையாக இருப்பார்கள் என எவர் எங்கு எழுதிக் கொடுத்த நியதி?. இறைவனை நம்பாதவர்கள் உண்மையாக இருக்கமாட்டார்கள் என எழுதித் தரப்பட்டா இருக்கிறது? சில வேதங்கள் அப்படித்தான் சொல்லிக்கொண்டிருக்கின்றன. அதனாலேயே நான் மிகவும் உண்மையானவன், ஆனால் இறைவனை நான் நம்புவதில்லை, நான் இறைவனை நம்பாத காரணத்தினால் உண்மையில்லாதவன் என என்னைச் சொல்ல இயலுமா என குரல்கள் எழுப்பப்படுகின்றன.

இறைவன் ஒரு உண்மை. அந்த உண்மையை நம்பாதபோது நீ எப்படி உண்மையாக இருக்க இயலும் என்றே எதிர் குரல்களும் ஓங்கி ஒலிக்கின்றன. அப்படியெனில் உண்மையின் சொரூபமாக மட்டுமேத் திகழ்பவரா இறைவன்?

(தொடரும்)

Monday, 21 September 2009

அடியார்க்கெல்லாம் அடியார் - 2

வீட்டுக்குத் திரும்பாமல், திரும்பிச் சென்றால் அம்மா ஏதாவது நினைக்கக்கூடும் என கண்கள் கலங்கியவாறே தொடர்ந்து நடக்கத் தொடங்கினான் கதிரேசன்.

கல்லூரியானது சிங்கமநல்லூரிலிருந்து சற்று உள்ளே தள்ளி அமைந்து இருந்தது. சிங்கமநல்லூர்தனை ஒரு நகரமோ, அல்லது ஒரு கிராமமோ எனச் சொல்லிவிட முடியாதபடி இருந்தது.

மாணவியர்கள் விடுதியானது கல்லூரி வளாகத்திலிருந்து சற்று தள்ளி இருந்தது. மாணவர்கள் விடுதி கல்லூரிக்கு உட்பட்ட இடத்திலேயே அமைந்து இருந்தது. எஞ்சினீயரிங் கல்லூரியும், பாலிடெக்னிக்குடன் சேர்ந்தே இருந்தது. பாலிடெக்னிக்கில் பெரும்பாலும் மாணவர்களே சேர்ந்து இருந்தார்கள். இந்த கல்லூரியை நிறுவி இதோடு எட்டு வருடங்கள் ஆகிறது. இந்தக் கல்லூரியின் முதல்வராக இருந்து வருபவர் சிவநாதன். இவர் ஒரு சிவபக்தர். மிகவும் கண்டிப்பானவர். கருநிற முடியும், துறுதுறுவென இருக்கும் இவரது செயலும் இவரை இளமையானவராகவேக் காட்டிக் கொண்டிருக்கிறது. கல்லூரியை ஒட்டி பெரிய சிவன் கோவில் ஒன்றையும் அவர் கட்டி இருந்தார். கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவியர்கள் மற்றும் சிங்கமநல்லூர் ஊர்க்காரர்களும்அந்த சிவன் கோவிலுக்குச் செல்வது உண்டு.

கதிரேசன் சிங்கமநல்லூர் சென்று அடையும்போது மாலை நேரம் ஆகிவிட்டது. விடுதிக்குச் செல்லும் முன்னர் நேராக தான் கொண்டு வந்திருந்த தகரப் பெட்டியை கோவிலின் வாயிலில் ரசீது கொடுப்பவரிடம் பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு சிவன் கோவிலின் உள்ளே சென்றான் கதிரேசன். சிவனை வணங்கிவிட்டு சிறிது நேரம் கோவிலில் அமர்ந்துவிட்டு பின்னர் விடுதியைச் சென்று அடைந்தான். வரிசையாக பல மாணவர்கள் அவரவர் தாய் தந்தையரோடு நின்று இருந்தார்கள். தானும் அவர்கள் வரிசையில் சென்று நின்று கொண்டான்.

அனைவரும் உற்சாகமாகத் தென்பட்டார்கள். அம்மாவை இம்முறையும் உடன் அழைத்து வந்திருக்கலாமோ என கதிரேசனுக்கு மனதில் பட்டது. கண்டிப்பும், கோபமும் அதிகமே நிறைந்த விடுதி காப்பாளர் தெய்வேந்திரனிடம் சென்று அறைக்கான எண்ணையும், அறைக்கதவுக்கான சாவியையும் பெற்றுக்கொண்டுவிட்டு ‘ஒவ்வொரு சனிக்கிழமை ஊருக்குச் சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை வரலாமா சார்’ எனக் கேட்டான் கதிரேசன். ‘நீ ஊருலேயே இருக்க வேண்டியதுதானே, படிக்க வந்தியா ஊருக்குப் போக வந்தியா’ எனக் கடுமையாகவேச் சொன்னார் அவர். கதிரேசனுக்குப் பின்னால் நின்று இருந்தவர்கள் பயந்துதான் போனார்கள். ஆனால் கதிரேசன் பயப்படாமல் ‘படிக்கத்தான் வந்தேன் சார், வாய்ப்பு இருக்குமானு கேட்டேன்’ என்றான். முறைத்தார் தெய்வேந்திரன். தலையை குனிந்து கொண்டான் கதிரேசன். ‘ரூமுக்குப் போ’ என அதட்டியவர் கதிரேசன் பெயரை மனதில் பதித்தார்.

தயக்கத்துடனே அறையில் சென்று தனதுப் பெட்டியை வைத்துவிட்டு சுற்றிப் பார்க்க தனக்கு முன்னரே இரண்டு பேர் அந்த அறைக்கு வந்திருப்பது தெரிந்தது. ஒவ்வொரு அறையிலும் மூன்று பேர் தங்கிக்கொள்ளலாம். கட்டில் எல்லாம் கிடையாது. தரையில்தான் படுத்துக் கொள்ள வேண்டும். அறையில் புதிதாக வர்ணம் பூசி இருந்தது தெரிந்தது. மிகவும் சுத்தமாக இருந்தது. பெட்டிக்கு அருகில் அமர்ந்து கொண்டான் கதிரேசன்.

பெட்டியைத் திறந்தான். பெட்டியில் உள்புறம் ஒட்டப்பட்டு இருந்த சிவன் அபயம் அளித்துக் கொண்டு இருந்தார்.

‘தென்னாட்டுச் சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’

எனச் சொல்லிக்கொண்டே சின்னத் தலைகாணியும், போர்வையும் எடுத்து கீழே வைத்தான். தட்டு, டம்பளர், மிட்டாய், சேவு, முறுக்கு என எல்லாம் எடுத்து வைத்தான். பெட்டியை மூடினான். கதிரேசன் அறையில் தங்கிக்கொள்ளும் இரண்டு மாணவர்கள் உள்ளே வந்தார்கள்.

சிறிது நேரம் பின்னர் மூவரும் அறிமுகம் செய்து கொண்டார்கள். ஒருவன் நாகராஜன், காரியநேந்தல். மற்றொருவன் கார்த்திகேயன், வடமதுரை. அப்பொழுது அறைக்குள் தெய்வேந்திரன் வந்தார். ஒவ்வொரு பெயராக அழைத்தார். மூவரும் ஆம் என்றார்கள். கதிரேசனுக்கு அருகில் வந்தார் தெய்வேந்திரன். கதிரேசனை ஓங்கி ஒரு அறை விட்டார் அவர். 'சிவனே' என்று அலறினான் கதிரேசன்.

அருகில் இருந்து இருந்தால் அம்மா உன்னையே அழைத்திருப்பேன் என மனதுக்குள் கேவினான். ‘என்ன தைரியம் இருந்தா நீ வந்ததும் வராததுமா என்னை எதிர்த்துப் பேசுவ’ என்றார் தெய்வேந்திரன். மெளனமானான் கதிரேசன். ‘இங்க ஒழுக்கம்தான் முக்கியம். பெரியவங்களை மதிச்சி நடக்கனும். எதிர்த்துப் பேசினா கழுத்தைப் பிடிச்சி வெளியே தள்ளிருவேன், ஒழுங்காப் படிச்சி வெளியேப் போக வழியைப் பாரு’ எனத் திட்டிவிட்டுச் சென்றார். மற்ற இருவரும் நடுங்கினார்கள். கதிரேசன் பெட்டியைத் திறந்தான்.

‘உள்ளூர ஆசையில் ஒருவினாவும் கேட்டு வைத்தேன்
எள்ளிநெருப்பாடி என்மேல் எச்சமிட்டுச் சென்றார்
அம்மாவின் அரவணைப்பில் நானும் இருந்து இருந்தால்
சும்மாதான் அவளும் இருப்பாளோ சொல்சிவனே’

கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடியது. துடைக்க மன விருப்பமில்லாமல் தொடர்ந்து மெல்லிய குரலில் பலமுறை இதே பாடலைப் பாடினான். மற்ற இருவரும் பயத்துடனே இருந்தார்கள். கதிரேசனின் கண்கள் பெட்டியில் ஒட்டப்பட்டிருந்த சிவன் படத்தின் மேல் நிலையாய் நின்றது.

(தொடரும்)