சமண சமயம் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள் என பல குறிப்பிடப்பட்டு இருக்கின்றன. சமணத்தை அடியோடு அழிக்க சைவம் புறப்பட்டதாக சொல்லப்படுவதும் உண்டு. உண்மையிலேயே சமணர்கள் தான் தமிழை வளர்த்தார்களா என்றால் மிக எளிதாகச் சொல்லிவிடுவேன், எனக்குத் தெரியாது.
திருக்குறள் சமணர் நூல் என மார்தட்டிக் கொண்டிருக்கும் வீரச் சமணர்களும் உண்டு! திருக்குறள் பொது நூலா? இல்லை, அது இந்து நூல் என வாதிடுவார்கள் என்பதையும் அறிவோம். அர்த்தமுள்ள இந்துமதத்தில் கண்ணதாசன் திருக்குறள் இந்து நூல் என கட்டுரைகளும் கேள்வி கேட்டவர்களுக்கு பதிலும் எழுதி இருக்கிறார். உலகப் பொதுமறை நூல் எனும் திருக்குறளுக்கே இந்த கதி எனில்!
இந்திரனில் பல உண்டு என்பதையும் காரணம் காட்டி திருக்குறளில் வரும் இந்திரனே சாலுங் கரி எனும் குறளுக்கும் ஒரு விளக்கம் கொடுத்து அது சமணர் நூல் தான் என சொல்கிறார்கள்.
ஆதிபகவன் எனும் பெயர் சமணர் வணங்கும் ஆதிநாதனைத்தான் குறிக்குமாம். எழுதி வைத்தத் திருவள்ளுவர் இப்படியெல்லாமா நினைத்து இருப்பார், தனது நூலுக்கு சமண நூல் என வர்ணம் பூசுவார்கள் என!
காமத்துப்பால் எப்படி ஒரு சமணர் எழுதியிருப்பார் எனக் கேட்பவர்க்கும் ஒரு பதில் வைத்து இருக்கிறார்கள். திருத்தக்கத் தேவர் சீவகசிந்தாமணி எழுதவில்லையா? என்பதுடன் நில்லாது மேலும் சமணம் தான் முதன்முதலில் இல்லறத்தையும் துறவறத்தையும் தனியாய் பிரித்தது எனவும் தைரியமாகச் சொல்கிறார்கள். உண்மையைச் சொல்லத் தைரியம் தேவையில்லை என்பதை இப்போது நினைவில் கொள்க!
இதில் சீவகசிந்தாமணி கதை என்னை ஒருநிமிடம் 'அடடா' என்றுதான் சொல்ல வைத்தது. கதையின் நாயகன் பல தாரங்களை மணந்து கொள்கிறான், அதோடு நில்லாமல் இன்பத்தையும் சொல்வதே சீவக சிந்தாமணியின் கதை, அனைத்துமே ஆசிரியப்பா போன்ற வகையில் அமைந்திருக்கிறது என்றே நினைக்கிறேன். சில பாடல்களைப் படித்தேன், மிகவும் இரசனையுடனே எழுதியிருக்கிறார். நிச்சயம் அவரைப் பாராட்டியேத் தீரவேண்டும். முழு சீவக சிந்தாமணியைப் படித்து அப்படியே ஒரு அட்டகாசமான கதையாக எழுதிவிடலாம்.
திருத்தக்கத் தேவருக்கு விடப்பட்ட சவாலால்தான் அந்த சீவக சிந்தாமணியே எழுந்தது. ஒரு சமணருக்கு இல்லறம் பற்றி என்னத் தெரியும் எனக் கேட்க இப்படி எழுதிவைத்துவிட்டார்.
இதைவிடக் கொடுமை என்னவெனில் திருத்தக்கத் தேவரை அவரது பாடல்களையெல்லாம் கேட்டு முடித்தபின்னர் அவமானப்படுத்தி விட்டார்களாம். தன்னை சுத்தமானவர் என நிரூபிக்க சீதை அக்னியில் குதித்து கற்பை நிரூபித்தது போன்று இவரும் தனது கையை எரித்து, எழுதிய கை எரியவில்லை, கற்பினை என நிரூபித்தாராம். களங்கம் கற்பிக்கவே ஒரு கூட்டம் அன்று என்ன இன்றும் தொடர்ந்து வருகிறது. எழுதத் தெரியாது உனக்கு என்பது, எழுதினால் அனுபவமில்லாமலா எழுதினாய் என ஏளனம் செய்வது!
ஐம்பெருங்காப்பியங்கள் எல்லாம் சமணர்களின் நூல் தான் என்கிறார்கள் உறுதியுடன். நீலகேசி எனும் நூல் வேறு. இவர்கள் குறிப்பிடும் நூல்கள் பற்பல. தொலைந்த நூல்கள் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்கள். எப்படி தொலைந்த நூல்களின் பெயர்கள் இவர்களுக்குத் தெரியவந்தது என்பதற்கான ஆதாரம் அவர்களிடம் இருக்கும் என்றே நினைக்கிறேன். இதைப்போலத்தான் எனக்கு திருநாவுக்கரசர் எழுதிய பல பாடல்கள் காணவில்லை எனச் சொல்வது எப்படி எனவும் யோசிக்கிறேன். இத்தனை பாடல்கள் எழுதினேன் என எங்காவது திருநாவுக்கரசர் சொல்லி இருக்கிறாரா எனவும் தெரியவில்லை. இதுபோன்று பல கேள்விகளை இந்த தமிழ் எழுப்பாமல் இல்லை. திருநாவுக்கரசரை இங்கே குறிப்பிட்டது காரணம் இவர் ஒரு சமணர் என்று அடையாளம் காட்டப்பட்டதுதான்! சமணராக இருந்தபோது எழுதியவை தொலைக்கப்பட்டதா? அழிக்கப்பட்டதா என கேள்வி எழும்.
வைணவம் தமிழ் வளர்த்தது என்பதை விட ''கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்'' எனக் கேட்க எப்படி சுவையாய் இருக்கிறது. எது எப்படியோ சமணம் தமிழ் வளர்த்தது, வைணவம் தமிழ் வளர்த்தது, சைவம் தமிழ் வளர்த்தது என்றெல்லாம் சொல்லி இனிய தமிழ், பிரிவினைக்காரர்களால்தான் வளர்ந்து வந்து இருக்கிறது என நினைக்கும்போது சற்று இடைஞ்சலாகத்தான் இருக்கிறது.
திருஞானசம்பந்தர் வேண்டுமெனில் தமிழ் எனத் தன்னை அடையாளம் காட்டியிருக்கலாம், அவரைப் போல் எவரேனும் தமிழ் என்று மட்டுமே தன்னை அடையாளம் காட்டிக்கொண்டார்களா? தமிழ்க்கென ஒரு கடவுள் மட்டுமே இருந்திருக்க வேண்டும் என நினைத்துத்தானோ முருகன் என பின்னாளில் அடையாளம் காட்டினார்கள்?
இப்படித்தான் இலண்டன் கோவிலில் சொற்பொழிவு ஆற்ற வந்த மங்கையர்க்கரசி (கிருபானந்த வாரியாரின் மாணவி) முருகன் பற்றி பேசினார். தொகுப்பாளாராக பேசிய நான் முருகன் தமிழ்க் கடவுள் என்று சொல்லி வைக்க, அவரும் முருகன் தமிழ்க் கடவுள்னா மற்ற கடவுளெல்லாம் இங்கிலீஸ் கடவுளா எனக் கேட்டு வைத்தார்.
அதற்கு நான் மனதில் இப்படிச் சொல்லி வைத்தவர்களைத்தான் கேட்க வேண்டும், அதோடு இப்படிச் சொல்லும்படி மூளைச் சலவை செய்யப்பட்டு முட்டாளானது என் தவறு எனக் கூறிக்கொண்டேன்.