Friday, 14 August 2009

திரு. செந்தில்நாதன் - சில யோசனைகள்.

சிங்கையில் வாழும் நண்பர்கள் இதுகுறித்து நிச்சயம் கலந்தாலோசித்து இருப்பார்கள். இருப்பினும் சிங்கையில் வாழ்ந்த நண்பர் ஒருவரின் சில ஆலோசனைகளை இங்கே இணைக்கிறேன்.

-----------------------

நண்பர் செந்தில்நாதன் நிரந்தரவாசியா? அவர் நிரந்தரவாசியோ அல்லது சிறப்பு தகுதியில் அங்கு வேலை செய்தாலும் சரி பரவாயில்லை. அவர் எந்த இடத்தில் வசிக்கின்றார் என கேளுங்கள். அந்த தொகுதி எம்.பி யை சந்திக்க அவர் இருக்கும் இடத்திற்கு அருகில் இருக்கும் மக்களின் குறையை கேட்க, வாரத்திற்க்கு ஒரு நாள் ஒதுக்கப்படும். அன்று அவரை (அவரது துணைவியாராக இருந்தாலும் சரி) தகுந்த ஆதாரங்களுடன் போய் அந்த தொகுதி எம்.பி யை பார்க்க சொல்லுங்கள். நிச்சயம் அவர் உதவுவார். கவலை வேண்டாம் என சொல்லுங்கள். தயவு செய்து அந்த தொகுதி எம்.பி.யை போய் பார்க்க சொல்லுங்கள். நிரந்தரவாசி என்றால், நிச்சயம் அவருக்கு தனிச்சலுகை கிடைக்கும்.

சிண்டா என்ற ஒரு அமைப்பு, சிங்கை வாழ் தமிழ் மக்களின் நலனுக்காக செயல்படுகின்றது. அவர்களையும் தொடர்பு கொள்ள சொல்லுங்கள். அவர்களிடம் மிக குறைந்த அளவிலேயே ரெஸ்பான்ஸை எதிர்பார்க்க முடியும். இருந்தாலும், நமக்கு காரியம் ஆக வேண்டும். மனம் தளராது போராட வேண்டும். நண்பரின் துணவியாரிடம் இருக்கும் அனைத்து ஆதாரங்களை ஒரு நகல் எடுத்து ஒலி 96.8-க்கு (சிங்கையில் இருக்கும் தமிழ் வானொலி நிலையம்) நேயர் விருப்பத்தின் பொழுது பேச சொல்லுங்கள். மீனாட்சி சபாபதி, பாலா, பாமா ஆகியோர் இரவு நேரங்களில் ஒளிபரப்பு செய்வார்கள். அவர்களை தொடர்பு கொண்டு, அவர்களையும், நேயர்களையும் உதவ கேட்கலாம்.

--------------------------

சிங்கையில் தகவல் ஊடகத்தில் வேலை பார்க்கும் நண்பர் ஒருவரிடம் இதுகுறித்து விபரம் கேட்டு மின்னஞ்சல் அனுப்புகிறேன்.

மிக்க நன்றி.

அறுபதாம் கல்யாணம்

'அப்பா உங்களுக்கு அறுபதாம் கல்யாணம் செய்து பார்க்கனும்' ஆவலுடன் நம்பெருமாள் வந்து சொன்னான்.

அப்பா, பார்த்தசாரதி, அவனை மேலும் கீழும் ஏறிட்டுப் பார்த்தார். 'அதெல்லாம் ஒண்ணும் வேணாம்பா, எதுக்கு வீண் செலவு ஆர்ப்பாட்டம் எல்லாம்' என மனதில் வேறொன்றை நினைத்தவராய்
அதைச் சொல்லாமல் தன் மகனிடம் தனது விருப்பமின்மையைச் சொன்னார்.

நம்பெருமாள் அம்மாவிடம் சென்று 'அம்மா உங்களுக்கு அறுபதாம் கல்யாணம் செய்யலாம்னா அப்பா வேணாம்னு சொல்றாரும்மா, நீதான் சொல்லி சம்மதம் வாங்கித் தரனும்மா' என்றான்.

அம்மா 'அதெல்லாம் எங்களுக்கு வேணாம்பா' என மறுத்தார். நம்பெருமாள் தன் மனைவியிடம் சென்று விசயத்தைச் சொன்னான். 'என்னங்க பண்றது' எனப் புரியாமல் விழித்தாள்.

வீட்டுக்கு மூத்தவனான நம்பெருமாள் தனது இரண்டு சகோதரர்களிடமும், இரண்டு சகோதரிகளிடமும் சென்று தனது விருப்பத்தையும் தாய் தந்தையர் சம்மதம் தரவில்லையென்றும் கூறினான்.

ஒருவேளை பிரபுவுக்கு கல்யாணம் ஆகட்டும்னு நினனக்கிறாங்களோ என நம்பெருமாள் தமக்கை மீனாட்சிதான் சொன்னாள்.

கடைசிப்பையன் பிரவுக்கு மட்டும்தான் திருமணம் செய்ய வேண்டிய பாக்கி. அனைவர்களுக்கும் திருமணம் பண்ணியாகிவிட்டது.

வீட்டுக்கு மூத்தவன் நம்பெருமாள் பெற்றோர்களுடனே துணையாய் வாழ்ந்து வந்தான்.

'அப்படின்னா பிரபுவுக்கு கல்யாண ஏற்பாடெல்லாம் பண்ணலாம்' என பிரபு காதல் புரிந்து கொண்டு இருந்த பொண்ணையே சம்மதம் பேசி மூன்றே மாதத்தில் திருமண வைபவம் நடந்தேறியது.

இம்முறை அனைவரும் சென்று பெற்றோரிடம் கேட்டனர். முடியவே முடியாது என இப்போதும் மறுத்துவிட்டனர். நம்பெருமாளுக்கோ மனது மிகவும் சங்கடமாகிப் போனது. அறுபதாம் கல்யாணம் நடக்கவே இல்லை.

வருடங்கள் உருண்டோடின. பார்த்தசாரதி இயற்கை எய்திய தினத்தன்றே அவரது மனைவி பாரிஜாதமும் இயற்கை எய்தினார்.

புருசோத்தமன் நம்பெருமாளின் நண்பன். புருசோத்தமன் தனது 7 ஆண்டுகால திருமணத்தை கேள்விக்குறியாக்கும் வண்ணம் சிற்சில காரணங்களைக் காட்டி அவனது மனைவியிடம் விவாகரத்து வாங்கப் போவதாக நம்பெருமாளிடம் வந்து சொன்னான். நம்பெருமாள் புருசோத்தமனை தனது வீட்டிற்கு அழைத்து வந்தான்.

அறுபதாம் கல்யாணம் கூட ஒருவிதத்தில் இரண்டாவது கல்யாணம் என்று செய்ய மறுத்த தனது தந்தை பார்த்தசாரதியின் படத்தின் முன்னால் அவனை நிறுத்தி தனது தந்தையின் வாழ்க்கையைச் சொல்லி 'வாழ்க்கைன்னா என்னனு புரிஞ்சிக்கோ' என்றான். புருச இலட்சணம் உணர்ந்தவனாய் புருசோத்தமன் வணங்கி நின்றான்.

முற்றும்

Thursday, 13 August 2009

அழுகிய இதயங்கள் - நகைக்கும் இதழ்கள்

முன்னுரை:-

'உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவோர் உறவு கலவாதிருத்தல் வேண்டும்'

நல்லதொரு சிந்தனையும் எண்ணமும் உடைய மனிதர்களே நமக்கு எந்த ஒரு தருணத்திலும் துணையாக இருப்பார்கள். எண்ணமும் செயலும் வெவ்வேறாக உடையவர்கள் நமக்கு பெரும் துன்பம் இழைப்பவர்கள் ஆவார்கள். அப்படிப்பட்ட மனிதர்களை அடையாளங்கண்டு வாழ்க்கையை செம்மையாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.

இதயமும் இதழும்:

இதயம் ஒன்று எண்ணித் துடிக்க
இதழ் ஒன்றை சொல்லி சிரிக்க
மனிதன் போடும் போர்வையில்
புனிதம் மூச்சிரைத்துப் போனது

என்பான் ஒரு கவிஞன். முதன்முதலில் கிரேக்க மேதை அரிஸ்டாட்டில் இதயம் தான் எல்லா விசயத்தையும் நடத்தி வைக்கிறது என சொன்னார். அதன் காரணமாகவே இதயம், மூளையை விட அதிக அந்தஸ்து பெறத் தொடங்கியது. காவியங்களும், காதல் வேள்விகளும் இதயத்தை அடிப்படையாக வைத்தே புனையப்பட்டன. இதயம் நமது உறுப்புகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இதில் இதழ்கள் பெறும் பங்கு வகித்தன. இதழ்கள் புன்னகையை வெளிப்படுத்துவதுன் மூலம் தனக்கென ஒரு இடத்தை பெற்றுக்கொண்டன. இதன் மூலம் இதயத்தை உரசுவது போன்ற உணர்வு, காதலர்கள் தரும் இதழ்கள் பரிமாறிக் கொள்ளும் முத்தம் ஏற்படுத்தும் என அறியாமை உணர்வு ஏற்பட்டது.

கருணைக்கும் கொண்ட வெறுப்புக்கும் இதயம் பங்கெடுத்துக்கொண்டது. தான் துடித்துக் கொண்டிருப்பது போதாதென மனிதர்களின் சொல்லாட்சியால் இதயம் மேலும் துடித்து துவண்டது. இதழ்களோ வர்ணம் பூசிக்கொண்டன.

அக முக:

நட்பினை பற்றி குறிப்பிடும்போது முகம் மட்டும் சிரிக்கும் நட்பானது நட்பில்லை, நெஞ்சத்திலிருந்து சிரிப்பதுதான் நட்பு என திருவள்ளுவரின் திருக்குறளிலிருந்தும் நாம் இதயம் பற்றி அறியலாம். மேலும் இதயத்திலிருந்து சொல்கிறேன் என இதயத்தில் கை வைத்து பேசுவதும் வழக்கமாகிவிட்டது. அப்படிப்பட்ட இதயம் எப்படி இருக்க வேண்டும்? மிகவும் சுகாதாரமாக, சுறுசுறுப்பாக, உண்மையின் சொரூபமாக இருக்க வேண்டும். எப்பொழுது அப்படி இருக்கும்? அன்பே உருவாக இருந்தால் இதயம் அந்த நிலையில் இருக்கும்.

இன்றைய நிலை எப்படி இருக்கிறது? எப்பொழுது யாரை வீழ்த்தலாம் எனும் வியாபார நோக்கம். இந்த நிலையில் இதயமானது அழுத்தம் கொள்கிறது என்பதை அறிபவர்கள் குறைவு. அழுத்தம் கொண்டே இதயம் அழுகிப்போய் விடுகிறது. இவர்கள் இதயத்தில் எதிரிகளாக பாவித்துக்கொண்டவர்களை, இதழ்கள் மூலம் நண்பர்களாக காட்டிக்கொள்ள முயற்சிக்கின்றனர். ஆனால் பெரும்பாலான நல்ல இதயங்கள் இந்த இதழ்களை உண்மையென நம்பிவிடுவது காலத்தின் கொடுமையாகும். இந்த நல்ல இதயங்களின் செயல்பாடுகள் அழுகிப்போன இதயத்தை சீர்திருத்த முயற்சித்தாலும் முடிவதில்லை. மாறாக அந்த இதழ்களை நம்பி உறவு கொண்டது மூலம் இந்த நல்ல இதயங்கள் பாழ்பட்டு போகின்றன.

இதனை தடுப்பது எவ்வாறு? இப்படிப்பட்ட அழுகிய இதயங்களை உடையவர்களை இனம் கண்டு கொள்ள வேண்டும். பிறர் துன்பப்படும்போது இவர்களது செயல்பாடுகளை நாம் கவனித்தால் நாம் இவர்களை இனம் பிரித்துக் கொள்ள முடியும். ''சேரும் இடம் அறிந்து சேர்'' என்பதை நாம் அறிய வேண்டும்.

மகாபாரதமும் இராமாயணமும் சொல்ல வந்தது இந்த அழுகிய இதயங்களையும் நகைக்கும் இதழ்களையும் பற்றித்தான். அத்தனை பெரும் காவியம் சொல்லியும் நம்மிடத்தில் இன்னும் இதுபோன்ற மனநிலை உடையவர்கள் வாழ்வது நமக்கு பெரும் அவமானமாகும். அவர்களிடத்தில் சிக்கிக் கொள்ளாது நாம் அவர்களை திருத்த வழி செய்ய வேண்டும்.

முடிவுரை:

'இன்னா செய்தாரை ஒறுத்தல்' என்பதற்கேற்ப நாம் அனைவரையும் சமமாக பாவித்து தீங்கில் கிடந்து உழல்பவரை காப்பாற்றி இதயமும் இதழ்களும் நகைக்கச் செய்வது ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும். இதழ்கள் மட்டும் நகைக்கிறது என ஒதுக்கி விடுதல் சமுதாய சீரழிவினை கொண்டு வந்து சேர்க்கும் என்பதை நினைவில் கொள்ளல் வேண்டும்.