Thursday, 13 August 2009

சிங்கைநாதன் அவர்களுக்கு முத்தமிழ்மன்றமும் உதவும்.

'Every Little Helps'

ஒரு பெரிய கடையின் விளம்பரம் இது. இதைப் பார்க்கும்போதெல்லாம் மனதில் ஒரு பெரிய தைரியம் வந்து சேரும். அது அவர்களின் வியாபார உக்தி என நினைத்துக் கொண்டாலும் நமது அன்புக்கும் இதைச் சேர்த்துக் கொள்ளலாம். சின்ன சின்ன உதவிகள், சின்ன சின்ன பாராட்டுகள் மனிதனை சந்தோசமாகவும், நலமுடன் இருக்கவும் வழிவகை செய்யும்.

மனிதநேயம் இறந்து போய்விட்டதாகவும், மானுடம் எந்த வழியில் செல்கிறது என வருத்தப்பட்டும் இருப்போர்களுக்கிடையில் எந்தவொரு பிரதிபலனும் எதிர்பார்க்காமல் சக மனிதன் துயரப்படுவதைக் கண்டு அவனுக்கு உதவிட துடிக்கும் உள்ளங்கள் உண்டு என்பதை பல பொழுதுகளில் பார்த்திருக்கிறேன்.

திரு.செந்தில்நாதன் அவர்கள் இதய நோயால் அவதியுறுவதைக் கண்டு அவருக்கு உதவிட இணைந்திருக்கும் நண்பர்கள் கண்டு பெருமிதம் கொள்கிறேன். திரு. கே.வி.ராஜா என்பவர் எழுதிய திரு.செந்தில்நாதன் பற்றிய பதிவினை

முத்தமிழ்மன்றத்தின் நிதியிலிருந்து உதவிடக் கேட்டு முத்தமிழ்மன்றத்தில் இணைத்தேன். நிச்சயம் முடிந்ததைச் செய்யலாம் என சொல்லி இருக்கிறார்கள். இதுபோல் நீங்கள் சார்ந்திருக்கும் வலைத்தளங்களிலும் நண்பர்களைக் கேளுங்கள். உதவி புரியும் நிலையிலிருப்பவர்கள் நிச்சயம் உதவுவார்கள் எனும் நம்பிக்கை நிறைய உண்டு.

திரு. செந்தில்நாதன் அவர்கள் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

ஆழ்வாரோடு நாயன்மார்கள்

துள்ளும் மில்லி விநாடியிலும்
மனம் ததும்பும் பொருள் கொண்டு

அருள்கொண்ட தூயவனை
அன்பால் சிந்தித்து அழகிய தமிழில்
போற்றி போற்றி பாடிய பாவினில்

பொல்லாத சிந்தனை நீங்கும்
கண்கள் அலையடித்து இதயம் செழிக்கும்

உன்னை நோக்கி நானும்
ஏங்கியே எழுதுகிறேன்

நானும் ஓர் நாள்
ஆழ்வார்களில் ஒருவனாய்
நாயன்மார்களில் ஒருவனாய்
மாறிட வேண்டி

மனமுருகி இருக்கையில்
மெல்லமாய் வந்து
சொல்லிச் செல்கிறது தும்பி

பலன்நோக்கி செய்யும் செயலதில்
இறைவனது சிந்தை நிற்பதில்லை

எழுதுவதால் மட்டும்
ஆழ்வார்கள் ஆவதில்லை
எழுதுவதை மட்டுமே
நாயன்மார்கள் செய்ததில்லை

நாணிக் கொள்கிறேன்
அவர்கள் போன்று
ஆகமுடியாது போவதற்கு!

Wednesday, 12 August 2009

வைரஸ்

ஒடுக்கப்பட்ட உயிர்
அடக்கப்பட்ட உயிர்
தனித்து இருந்தால் மயான நிலை
ஒன்றினுள் நுழைந்தால் உயிர்த்த நிலை

மண் துகள்களுக்கு
விமோசனம் தந்து
உயிரற்ற பொருளுக்கும்
உயிர் கொண்ட பொருளுக்கும்
பாலமும் பகையுமாய்

ஒற்றை கயிறு ஆர் என் ஏ
கொண்டு
இரட்டை கயிறு டி என் ஏ
திரித்து
உலக உயிர்களின் வழியானாய்
உலக உயிர்களுக்கு வலியுமானாய்

உன்னில் தேடுகிறேன்
எனக்கான இறைவனை!