Wednesday, 12 August 2009

வைரஸ்

ஒடுக்கப்பட்ட உயிர்
அடக்கப்பட்ட உயிர்
தனித்து இருந்தால் மயான நிலை
ஒன்றினுள் நுழைந்தால் உயிர்த்த நிலை

மண் துகள்களுக்கு
விமோசனம் தந்து
உயிரற்ற பொருளுக்கும்
உயிர் கொண்ட பொருளுக்கும்
பாலமும் பகையுமாய்

ஒற்றை கயிறு ஆர் என் ஏ
கொண்டு
இரட்டை கயிறு டி என் ஏ
திரித்து
உலக உயிர்களின் வழியானாய்
உலக உயிர்களுக்கு வலியுமானாய்

உன்னில் தேடுகிறேன்
எனக்கான இறைவனை!

வாழ்வைத் தேடும் விழிகள்

முன்னுரை:-

'ஆரம்பத்தைப் பார்க்காதே முடிவினைப் பார்' என்பது சொல் வழக்கு. அதாவது ஒருவர் எப்படி வாழ்ந்தார் என்பதை அவரது மரணம் ஒன்றுதான் உண்மையாய் குறித்து வைக்கும். எத்தனையோ மனிதர்கள் வாழ்க்கையை வாழ்ந்து இருக்கிறார்கள், வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள், ஒவ்வொருவரிடமும் ஒரு சிறந்த வாழ்க்கையை வாழ வேண்டும் எனும் ஆர்வமும், தேடலும் இருக்கத்தான் செய்கிறது. வாழ்க்கை ஒன்றாக தெரிந்தால் பிரச்சினை இல்லை, பலருக்கு வாழ்க்கை பலவிதமாக அல்லவா தெரிகிறது. பல வாழ்க்கை சொல்லும் தத்துவம் ஒரு வாழ்க்கை தான் என இந்த விழிகள் வாழ்க்கையை தேடுகிறது.

இயந்திர வாழ்க்கை:

'இப்பொழுதெல்லாம் வாழ்க்கை இயந்திரமயமாகிவிட்டது' என குறைப்பட்டு கொள்வோர் பலர் உள்ளனர். அதாவது செய்வதையே செய்து சிந்தனையற்று போய்விடும் தன்மை. ஆனால் செய்யும் முறையில் மாறுபாடு காண இவர்கள் முயல்வதில்லை. இந்த இயந்திரத்தனமான வாழ்க்கையில் சோகங்கள் மிஞ்சுகிறது. இந்த வாழ்க்கையைப் பார்க்கும் விழிகள் இயந்திர வாழ்க்கையில் அன்பு இணைந்திருக்குமானால் இந்த இயந்திர வாழ்க்கை இனிமையாகிவிடுமே என இதனைத் தேடலில் தேக்கி வைத்துக்கொள்கிறது. ஆக இயந்திர வாழ்க்கையைத் தேடும் விழிகள் இயந்திரத்தனத்தை தொலைக்க தயாராக இருக்க வேண்டும்.

இதில் அன்றாடம் உழைக்கும் வர்க்கத்தினர் அனைவரும் அடங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட வாழ்க்கையை பெரும்பாலான விழிகள் தேடிக்கொள்கின்றன.

அமைதி வாழ்க்கை:-

''எல்லாம் அவன் அருள்'' என உள்ளமது எதிலும் பற்று கொள்ளாது இறைவனிடம் மட்டும் பற்று கொண்டு வாழ்வதாக சொல்லப்படும் அமைதி வாழ்க்கை. பொதுவாக இந்த அமைதியானது எல்லா வாழ்க்கையிலும் இருக்க வேண்டும் என விரும்புவோர்கள்தான் அதிகம். இயந்திர வாழ்க்கையிலும் ஒரு அமைதி கிடைத்துவிட்டால் பெரும் மகிழ்வைத் தரும் என்பதில் ஐயமில்லை. எத்தகைய சூழ்நிலையிலும் பதட்டபடாமல், நிதானித்து எதையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவமுடைய மனதினைத் தரும் அந்த அமைதி வாழ்க்கையை இந்த விழிகள் உயர்வாக கருதுகிறது, இதனை தேடலின் முதன்மையாக வைத்துக்கொள்கிறது ஆனால் இந்த அமைதி வாழ்க்கை ஏனோ விழிகளுக்கு எட்டும் விசயமாகவும், நடப்பிற்கு எட்டாத விசயமாகவும் இருப்பது ஆச்சரியம்.

சித்தர்கள், முனிவர்கள் என பலரும், இராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகாநந்தர், இரமணர் புத்தர் என பலரும் இந்த வாழ்க்கையை அணுகி பெரும் வெற்றியடைந்தவர்கள்.

சாதனை வாழ்க்கை:-

''இவ்வுயிர் மண்ணில் பிறந்தது சாதிக்கத்தான், சாதனையால்தான் ஒரு மனிதர் உலகறியப்படுவார்'' இப்படிப்பட்ட வாழ்க்கையைத் தேடும் விழிகள் வழியில் பல விச்யங்களைத் தொலைத்து விடுகிறது. ஆனால் தேடிக்கொண்ட சாதனை அளவை எட்டிவிடும் என சொல்வதற்கில்லை. வாழ்வில் சாதனையாளர்கள் மிகவும் குறைவாகவே இருக்கிறார்கள். இதற்கு உதாரணமாக பித்தோவன் எனும் மாபெரும் இசை மேதையை சொல்லலாம். இந்த சாதனையாளரை பிள்ளையாய் பெற பல சாதாரண மனிதர்களை இவர்கள் பெற்றோர்கள் பெற வேண்டியிருந்தது.

உலகத்தலைவர்கள் ஒரு சிலரே, ஆனால் அவர்களுக்கு கீழ் இருக்கும் மக்கள் கோடி. இப்படிப்பட்ட சாதனை வாழ்க்கையை தேடும் விழிகள் களைப்படைந்து விடுகின்றன. களைப்பிலும் தெளிவாய் பார்க்கத் தெரிந்த விழிகளுக்கு சாதனை வாழ்க்கை கிட்டிவிடும். இந்த சாதனை வாழ்க்கையில் வரும் சோதனைகளை அமைதியாய் அன்பாய் பார்த்து சென்றால் தான் இந்த சாதனை வாழ்க்கை சாதித்ததாக பொருள்படும்.

சி.வி.இராமன், தாகூர், பாரதியார், காந்தியடிகள், நியூட்டன், கலிலியோ, ஆபிரஹாம் லிங்கன், என பலரை இங்கு குறிப்பிடலாம்.

முடிவுரை:

வாழ்க்கை இதுதான் என முதலில் தேடும் விழிகள் விலகிப்போய் வேறு வாழ்க்கையைத் தேடிக்கொண்ட வரலாறு பல உண்டு. அப்படி வாழ்க்கையில் என்ன வேண்டும் என்பதை முழுவதுமாக உணர்ந்து அந்த வாழ்க்கையைத் தேடி வாழ்வதில்தான் விழிகளுக்கு சந்தோசம் தரும். எந்த ஒரு வாழ்க்கையை எடுத்துக்கொண்டாலும், சாதாரண வாழ்க்கையிலிருந்து சாதனை வாழ்க்கை வரை, அன்பும் அமைதியும் கண்டு கொள்ளும் விழிகள் தான் ஒரு உண்மையான சத்தியமான வாழ்க்கையை வாழ்ந்ததாக கருத முடியும்.

'தேடும் விழிகளே, தேடலில் அன்பையும், அமைதியையும், கருணையையும் தொலைத்து விடாதீர்கள்' என்பதை நினைவில் வைத்து செயல்படுங்கள்.

பள்ளியின் பாதையில் பள்ளங்கள்

முன்னுரை:-

'கற்றவருக்கு செல்லுமிடமெல்லாம் சிறப்பு' இது கல்வியறிவை மட்டும் குறிப்பது அல்ல. கல்வியறிவுடன் விவேகமான அறிவை குறிப்பிடுவதாகும். ஒருவர் எத்துனைதான் கல்வியில் சிறந்த பெயர் பெற்று இருந்தாலும் அவரது செயல்பாடுகள் சரியாக இல்லையெனில் அவர் பெற்ற கல்விக்கு சிறப்பு இல்லை. இங்கு குறிப்பிடும் பள்ளியானது ஒவ்வொருவரும் பெறும் கல்வியுடன் கூடிய அனுபவங்களேயாகும். அப்படி அனுபவங்களை பெறும் போது பள்ளங்கள் எனும் இடர்ப்பாடுகள் வரும் அதை கடந்து அனுபவத்தின் மூலம் வெற்றியாளாரக மாறுவது சிறந்ததாக கருதப்படுகிறது.

அனுபவ அறிவு:-

'ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது' ஒருவர் பெற்ற கல்வியானது எப்படி உபயோகப்படும் எனில் இருவரிடம் சுரைக்காய் ஒன்று பற்றிய விளக்கம் தந்து அதன் கீழ் ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது என எழுதி வைப்போம். அதில் ஒருவர் விளக்கம் படித்து சுரைக்காயை உண்டு பண்ணி சாப்பிட்டு மகிழ்பவராகவும், மற்றவர் ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது என சொல்லி திரிபவராகவும் கருதுவோம். அப்படிப்பட்ட சூழலில் ஒருவர் எழுத்துக்களில் மட்டுமே இருந்த விசயத்தை செயல்படுத்தி தனது சாதகமாக்கிக் கொண்டவர், மற்றொருவர் எழுத்துக்களை மட்டுமே பார்த்து அந்த பள்ளத்தில் விழுந்து முன்னேறாமல் போனவர். ஆகவே நாம் பெறும் அனுபவத்தில் நமக்கும் மற்றவருக்கும் உதவியாக இருப்பது சிறந்ததாக கருதப்படுகிறது.

வறுமையின் வலி:

வறுமை நிலையில் வாடும் பலர் அவரது திறமைகள் வெளிவர முடியாத சூழ்நிலையில் அகப்பட்டு தவிக்கின்றனர். அவர்கள் கல்வி கற்பதற்கு எந்த ஒரு வாய்ப்பும் இல்லாமல் போய்விடுகிறது. அதன் காரணமாகவே அவரது வாழ்வு பிரகாசமற்று போகிறது, ஆனால் பல சாதனையாளர்கள் வறுமையெனும் பள்ளத்தில் விழுந்துவிடாது அந்த வறுமையை தனக்கு சாதகமாக்கி அதனை விரட்டியடித்த வரலாறு உண்டு.

'வறுமையை பொறுமை இழக்கச் செய்ய துணிவும் தன்னம்பிக்கை எனும் ஊன்றுகோல் வேண்டும்' இந்த வறுமை தந்த அனுபவம் 'தெருவிளக்குகளில் படித்தவர்கள் மாபெரும் மேதைகளானார்கள்' என சொல்லும் அளவிற்கு இருந்து வருகிறது.

அலட்சியபோக்கு:-

வறுமைக்கான முக்கிய காரணம் அலட்சிய போக்கு, இது மாபெரும் பள்ளமாகும். இந்த பள்ளத்தில் விழுந்து எழாதவர்கள் எந்த ஒரு பள்ளியையும் அடைவதில்லை என்பதை அறிந்து கொண்டு அலட்சியபோக்கு தீரும்பட்சத்தில் வெற்றி பெறலாம் என்பதை உணர வேண்டும்.

'எழுமின், விழிமின்' எதிலும் கண்ணும் கருத்துடன் செயல்பட்டால் எந்த ஒரு தடையும் அகன்றுவிடும். நமது முயற்சிக்கு தடையாய் இருக்கும் விசயங்களை ஒதுக்கித் தள்ளிச் செல்வதே அனுபவத்தின் ஆணிவேர்.

சுதந்திரமற்ற தன்மை:-

எந்த ஒரு விசயத்திலும் முழு சுதந்திரத்துடன் செயல்பட வேண்டும். வெளிநாடுகளில் வாழும் வெளிநாட்டு மனிதர்களுக்கு அவர்களது நிறம், கலாச்சாரம், பண்பாடு என்பவை அவர்களது வாழ்க்கையில் வெற்றி பெற முடியாமல் தடுக்கி விழ வைக்கும் பள்ளங்களாகும். இவைகளை தகர்த்து எறிந்து வருபவரே பள்ளியினை அடைகிறார்கள்.

கல்வி கற்பதிலும் சுதந்திரம் அவசியமானதாக இருக்கிறது. ''சுதந்திரம் நமது பிறப்புரிமை'' என்பதை உறுதியுடன் கடைபிடித்து வருதல் பள்ளியினை அடைய வழி செய்யும்.

முடிவுரை:-

பல மனிதர்களுக்கு பள்ளிக்கான பாதையே தெரிவதில்லை. பலருக்கு பள்ளியே தெரிவதில்லை. அப்படி பள்ளியும் பாதையும் தெரிந்த சிலருக்கு பள்ளம்தான் பெரிதாக தெரிகிறது, பள்ளம் மூடும் வழி தோன்றுவதில்லை. ஆனால் வெகு சிலரே பள்ளம்தனை தாண்டியதோடு நில்லாமல் பள்ளம்தனை மூடி பாதையை சரியாக்கி பள்ளியை தானும் அடைகின்றனர், மற்றவர்களை அடைய வழி செய்கின்றனர். இவர்களின் வழி நாமும் நடப்போம்.