Tuesday, 11 August 2009

பாறையில பேரு எழுதலாம்

மதுரை தெற்குத் தெருவில் இருக்கும் மொகலாயன் மார்பிள்ஸ் அண்ட் கிரானைட்ஸ் கடைக்குச் சென்றார் 40 வயதான போஸ். கடைக்குள் சென்றதும் 45 வயது மதிக்கத்தக்க வீரபாகுவிடம் கற்களைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினார்.

‘’இந்த மார்பிள் எவ்வளவு விலை?’’

‘’இது 240 ரூபாய்’’

‘’குறைஞ்ச விலையில எதுவும் இல்லையா?’’

‘’30 ரூபாயில கூட இருக்குங்க’’

‘’சரி சரி, இந்த கிரானைட் எவ்வளவு விலைனு சொல்ல முடியுமா?’’

‘’இது 440 ரூபாய்’’

‘’இந்த கல்லு ரொம்ப நல்லாருக்கு, எந்த ஊரு’’

‘’இது ராஜஸ்தான் மார்பிளு’’

‘’அதோ அது என்ன விலை’’

‘’அது இத்தாலியன் மார்பிளு 500 ரூபாய்’’

‘’அவ்வளவு விலையா?’’

‘’நீங்க கல்லு வாங்க வந்தீங்களா, விலை கேட்க வந்தீங்களா?’’

‘’நாலு கல்லோட விலை தெரிஞ்சாத்தானே எதுனு வாங்க முடியும்’’

‘’இந்தா போகுதே விஎன்பி பஸ்ஸு, இந்த முதலாளி கூட கிரானைட் நிலத்தை வாங்கினதால, கிரானைட் எல்லாம் எடுத்து வெளிநாட்டுக்கு அனுப்பி பெரிய ஆளாயிட்டார் இப்போ, அதுமாதிரி வெளிநாட்டு கல்லு நாம இறக்குமதி செஞ்சா விலை அதிகமாத்தானே இருக்கும். கல் இரண்டும் என்னவோ ஒண்ணுதான். நீங்களே சொல்லுங்க’’

‘’40 ரூபாய் மார்பிளு காட்டு, அதுல இருந்து எடுத்துக்கிறேன்’’

‘’விலை குறைஞ்சதா எடுத்தா தரமில்லைனு நினைக்காதீங்க, அந்த மார்பிளு ரொம்ப நல்லா இருக்கும்’’

‘’விலையுயர்ந்த கல்லை விற்காம இப்படி விலை குறைஞ்சதை என்கிட்ட விற்கிறியே’’

‘’வாங்குறவங்களோட தரத்தைப் பொருத்துதானே விற்கறதோட தரமும் போகும், நான் சொல்றது சரிதானேங்க’’

‘’பொருளோட தரத்துக்கும் மனுசனோட தரத்துக்கும் என்ன சம்பந்தம், நீ கஸ்டமருக்கிட்ட இப்படித்தான் பேசுவியா’’

‘’இப்போ பாருங்க, நான் எவ்வளவு மரியாதையா உங்ககிட்ட வாங்க போங்கனு பேசறேன், ஆனா நீங்க நான் இங்கே வேலை பாக்குறேனு ஒரே காரணத்துக்காக நீ வா போ னு பேசறீங்க இதுல இருந்து தெரியலையா உங்களோட தரம்? வாங்க வாங்க அந்த மார்பிளை எடுத்துத் தரேன்’’

போஸ் மார்பிளை வாங்குவதற்கான முன்பணத்தைக் கொடுத்துவிட்டு வீரபாகுவிடம் வந்தார்.

‘’நீங்க எவ்வளவு வருசமா வேலை பாக்குறீங்க’’

‘’20 வயசில இருந்து இங்கேதான் வேலை பாக்குறேன்ங்க’’

‘’உங்ககிட்ட வர கஸ்டமர் மரியாதை இல்லாம பேசுறப்போ எப்படி இருக்கும்’’
‘’ஏண்டா இப்படிப்பட்ட இடத்தில வேலை பாக்குறோம்னு இருக்கும்’’

‘’வேலை பார்க்குற இடத்தை தரக்குறைவா நினைக்குறது தப்புனு தோணலையா உங்களுக்கு’’

‘’யாரும் மதிக்கமாட்டாறாங்களே’’

‘’அடுத்தவங்க மதிக்கறமாதிரிதான் வேலை செய்யனும்னு இல்லைங்க, நாம செய்யற வேலைய மதிச்சி நடந்துக்கிறனும், முதல்ல அதைப் புரிஞ்சிக்கோங்க. இப்போ நான் நீங்கனு மரியாதையா பேசிட்டேன், உங்களுக்கு வேலை மேல மரியாதை வருமா?’’

‘’நான் சொன்னதால பேசினீங்க, இந்த வேலைய மதிக்கிறதுனாலதான் நான் இத்தனை வருசமா இங்கே இருக்கேன்’’

‘’இனிமே மரியாதையா பேசறேன்ங்க’’

போஸ் வீட்டிற்குச் சென்று மார்பிள் வாங்கிய கதையை தனது மனைவியிடம் சொன்னார். அப்பொழுது தொலைகாட்சியில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டு இருந்தது. அப்படியே அமர்ந்தவர் கவனத்துடன் கேட்க ஆரம்பித்தார்.

‘இந்த மார்பிள் கிரானைட் எல்லாம் எப்படி உருவாகிறது தெரியுமா? இது ஒன்றும் உடனடியாக நடக்கக்கூடியதில்லை. மலையில் இருக்கும் பாறையானது இயல்பு நிலை அழுத்தத்தாலும், வேதியியல் மாற்றத்தாலும், விலங்கு மற்றும் தாவரங்களினால் ஏற்படும் உராய்வுகளாலும் உடைந்து சிறு துகள்களாக மாறுகின்றன. அவ்வாறு மாறும் அந்த துகள்கள் மழை நீரினாலோ, ஆற்றினாலோ அடித்துச் செல்லப்பட்டு ஓரிடத்தில் படிமமாக படிகின்றன. அவ்வாறு படிந்த இந்த துகள்களானது பல வருடங்கள் அழுத்தத்தாலும் வெப்பத்தாலும் பூமிக்குள் புதைந்து பாறையாக மாறுகின்றன. இந்த முதல் நிலை கற்களே கட்டிடங்கள் கட்ட உபயோகமாகின்றன. இதன் வேதியியல் தன்மை கால்சியம் கார்பனேட் எனப்படுகிறது.

அவ்வாறு உருவான பாறையானது பூமியின் மேல்நோக்கு அழுத்தத்தால் வெளியே தள்ளப்படும், அல்லது இதே பாறையானது மேலும் மேலும் கீழே அமிழ்ந்து மார்பிள் போன்ற பாறையாக உருவமெடுக்கின்றன. அழுத்தத்தையும் வெப்பத்தையும் தாங்கிக்கொண்ட காரணத்தால் தன்னை மெருகுபடுத்திக் கொள்கின்றன இந்த பாறைகள். மேல்நோக்கு அழுத்தத்தை தாங்காதபோது இந்த பாறைகள் வெளியேறக்கூடும், அப்படியில்லாத பட்சத்தில் மேலும் வெப்பத்திற்கும் அழுத்தத்திற்கும் உட்பட்டு கிரானைட்டாக மாறுகின்றன இந்த பாறைகள்.

வெப்பக்குழம்புகளிலிருந்தும் கிரானைட் நேரடியாக உருவாகின்றன. உடனடியாக குளிராமல் மெதுவாக உள்ளுக்குள்ளே குளிர்வதால் பெரிய படிகங்களாக மாறி கிரானைட் உருவாகிறது. திடீரென ஏற்படும் எரிமலையால் இந்த வெப்ப குழம்புகள் வேகமாக குளிர்ந்து பாஸல்ட் எனப்படும் பாறையாக மாறுகிறது.

கிரானைட், மார்பிள் பாஸல்ட் போன்றவைகள் பெரும் அழுத்தத்தையும் வெப்பத்தையும் தாக்குதல் பிடித்து உருவானவைகள். அவை பெரும் விலையைப் பெற்று இருக்கின்றன’

போஸ் நிகழ்ச்சியைக் கேட்டுவிட்டு மனைவி போட்டுக்கொடுத்த காபியை வாங்கிக்கொண்டு வீட்டின் தாவாரத்திற்கு வந்தார். பிரச்சினைனு எதையும் நினைக்காம போராடினாத்தான் ஜெயிக்கலாம்னு வாழ்க்கையில எத்தனையோ பேரு சொல்லி வைச்சிருக்காங்க. இப்படி போராடி வர பாறைக்கு தரத்தை வைச்ச மனுசன் வாழ்க்கையில போராடுற மனுசனை மட்டும் ஏன் தள்ளி வைச்சான் என நினைத்துக்கொண்டு இருக்கும்போதே வீரபாகுவின் மேல் தனக்கு உண்மையிலே மரியாதை வந்தது.

முற்றும்.

Monday, 10 August 2009

கை ரேகை

விக்னேஷ் பையோ இன்பார்மடிக்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறான். தேர்வு முடிந்து கோடை விடுமுறைக்கு தனது கிராமத்திற்கு உற்சாகமாகத்தான் கிளம்பினான் விக்னேஷ். ஆனால் கல்லூரியைவிட்டு கிளம்பும் முன்னர் அவனது நண்பன் ஜவகர் அவன் காதலிக்கும் ஜவகர்மதியை தான் திருமணம் செய்து கொள்ள முடியுமா என கை ரேகை பார்க்கும் நிபுணரிடம் செல்ல இருந்தவன் விக்னேஷைத் துணைக்கு அழைத்தான். விக்னேஷ் மறுப்பு சொல்லமுடியாமல் ஜவகருடன் சென்றான்.

கை ரேகை நிபுணர் ஜவகரின் கையைப் பார்த்து நல்ல யோகக்காரன் என கூறினார். நினைச்சது எல்லாம் நடக்கும் என சொன்னார். ஜவகர் தனது மனதில் இருக்கும் கேள்விக்கு பதில் சொல்லமாட்டாரா என அவர் சொன்ன பல விசயங்கள் பற்றி சற்று கூட கவலைப்படாதவனாக ம்ம் என சொல்லிக் கொண்டே இருந்தான். விக்னேஷ் ஆச்சரியத்துடன் அவர் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தான். பொறுமை இழக்கும் தருவாய்க்குப் போனான் ஜவகர். கை ரேகை நிபுணர் ஜவகரை பார்த்து உனக்கு காதல் திருமணம் தான். நீ யாரை காதலிக்கிறியோ அந்த பொண்ணு தான் உன்னோட மனைவி. இனிமே நல்லா படிச்சி முன்னுக்கு வா. காதலியை பத்தி நீ கவலைப்பட வேணாம் என்றார். ஜவகர் சந்தோசத்தில் துள்ளி குதித்தான்.

''டேய் விக்னேஷ் நீயும் பாருடா''

''வேணாம்டா''

''இவனுக்கும் பாத்து சொல்லுங்க''

''கொடுப்பா கையை பாக்கலாம்''

''இல்லை வேண்டாம்ங்க''

''நான் நம்பிக்கை இல்லாதவங்களுக்கு பாக்கிறது இல்லை. எதிலயும் ஒரு நம்பிக்கை வேணும். அந்த நம்பிக்கைக்கு ஏத்தவாரு உழைக்கனும். இப்போ என்னை நம்பி நீங்க வரப்ப, உங்க நம்பிக்கையை நான் தப்பா உபயோகிச்சா அது என்னோட தொழிலுக்கு நான் செய்ற அவமரியாதை, அவருக்கு நம்பிக்கை வரட்டும் நான் சொல்ரேன்''

''எனக்கு நம்பிக்கை இருக்குங்க ஆனா இப்ப வேணாம்''

ஜவகரும் விக்னேஷும் கிளம்பி சென்றனர். ஜவகர் ஜவகர்மதியை காணும் ஆவலுடன் சென்றான். ஜவகர்மதியும் ஜவகருக்கு காத்து இருந்தாள். விக்னேஷ் இருவரிடமும் விடைபெற்றுக் கொண்டு வீடு வந்து சேர்கையில் மாலையாகி போனது. கை ரேகை நிபுணர் ஆயுள் ரேகை பற்றி சொன்னது மனதில் குடைந்து கொண்டிருந்தது. கிளம்பிய உற்சாகம் வடிந்து போனது. தனது வலது கையையே பார்த்துக் கொண்டிருந்தான். காலை எழுந்ததும் அப்படியேதான் செய்தான்.

''என்னடா நேத்து வந்ததிலிருந்து வெறும் கையை அப்படி முறைச்சி பாத்துட்டே இருக்கேடா''

''ஆயுள் ரேகை ஒட்டாம பாதியிலே நிக்குதேம்மா, குறை மாசத்துல என்னை பெத்துட்டியோ''

''எல்லாரையும் போல பத்து மாசம்னு சொல்லமாட்டேன்டா, ஒன்பது மாசம் தான் உன்னை சுமந்தேன்டா, அதுக்கு மேல சுமக்கவும் முடியாதுடா, இதை குறை மாசம்னு சொல்லுவியாடா''

''இதோ பாரும்மா ஆயுள் ரேகை ஒட்டாம பாதியில நிக்குது''

''கொடுடா பாப்போம்''

''ஜோசியக்காரனை பாத்தியாடா''

''ஜவகர் பாத்தான்மா அப்போ கேட்டுட்டே இருந்தேன் ஆயுள் ரேகை நல்லா இருக்கு. வெட்டு பட்டு பிரிஞ்சி இருந்தாத்தான் பிரச்சினைனு சொன்னாரும்மா''

''சரிடா இதுக்கு எல்லாம் கவலைப் படாதேடா அம்மா நான் இருக்கேன்டா என் உயிரை கொடுத்து உன்னை காப்பாத்துவேன்டா''

''என்னம்மா நீ வசனம் எல்லாம் பேசற, நானே வருத்தத்தில இருக்கேன்''

''பட்டுக்கோட்டை பாட்டு எல்லாம் கேட்கறதில்லையாடா நீ, இப்போ அந்த பாட்டெல்லாம் கேட்க உனக்கு எங்க நேரம் இருக்குடா''

''அம்மா எனக்கும் வசனம் தெரியும் உழைக்கும் கரத்தில் ரேகை இருப்பதில்லை அழிந்துவிடும்னு''

''அப்புறம் என்னடா படுவா லீவுக்கு வந்துட்டு இப்படி உம்னு இருக்கேடா, யாரையாச்சும் லவ் பண்றியேடா''

''அதுக்குத்தான் ரொம்ப குறைச்சல் இங்கே, நான் அவரைப் போய் பாத்துட்டு வந்துரட்டா''

''இருடா நானும் வரேன், உங்க அப்பா வராரானு ஒரு வார்த்தை கேட்டுட்டு போவோம்டா''

மூவரும் கிளம்பினார்கள். கை ரேகை நிபுணரிடம் வரிசையில் ஆட்கள் காத்து இருந்தார்கள். விக்னேஷ் வரிசையில் அமர்ந்து இருந்தான். விக்னேஷ் முறை வந்தது. விக்னேஷை அடையாளம் தெரியவில்லை அவருக்கு. விக்னேஷ் அறிமுகப்படுத்திக் கொண்டான். எத்தனையோ பேர் வராங்க ஞாபகம் வைச்சிக்கிற முடியறதுல என விக்னேஷ் கையை பாத்தார். கண்கள் கலங்கியது அவருக்கு. வெளிக் காட்டிக் கொள்ளாமல் படிப்பு பணம் என எல்லா பலன்கள் சொன்னார்.

விக்னேஷ் ஆயுள் ரேகை பற்றி கேட்டான். சரியாக்கிருவோம் பரிகாரம் இருக்கு அதை உங்க அம்மா அப்பாகிட்ட சொல்றேன் என கூறினார். விக்னேஷ் வெளியில் சென்றதும் அவனது பெற்றோரிடம் பையனை மருத்துவமனைக்கு கூப்பிட்டு ஒரு செக் அப் பண்ணிருங்களேன் என்றார். அந்த கருமாரியம்மா துணை இருப்பா.

விக்னேஷை அழைத்து ரத்த பரிசோதனை செய்தார்கள். ரத்தத்தில் லுகூமியா இருக்கிறது எனவும் அது அபாயகரமானது எனவும் கூறினார்கள். இதற்கு மருந்து எலும்பு மஞ்ஞை மாற்று சிகிச்சை என சொன்னார்கள். உடனே விக்னேஷ் தாயின் ரத்தம் பரிசோதிக்கப்பட்டது. இருவரின் திசு அமைப்பு சரியாய் இருக்கவே சிகிச்சை முறைக்கு உட்படுத்தபட்டான் விக்னேஷ். பணம் அதிகம் செலவானது. சிகிச்சைக்கு சில மாதங்கள் ஆனது. கல்லூரிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மாற்று சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. ஆறு மாதங்கள் பின்னர் விக்னேஷ் பழைய நிலைக்கு திரும்பினான்.

கல்லூரி முதல்வர் நன்றாக படிக்கும் விக்னேஷை மீதி மாதங்களில் இருந்து தொடர்ந்து படிக்க அனுமதி கொடுத்தார். அம்மா மீண்டும் தனக்கு வாழ்வு தந்தது குறித்து பூரித்துப் போனான் விக்னேஷ். சில வருடங்கள் ஓடியது. கல்லூரி படிப்பு முடிந்தது. தேர்வில் வெற்றி பெற்றான் விக்னேஷ். ஜவகரும் நல்ல மதிப்பெண்கள் எடுத்து இருந்தான். நல்ல வேலையும் கிடைத்தது. ஜவகர் வீட்டில் திருமணத்திற்கு சம்மதம் சொன்னார்கள். ஜவகர்மதிக்கும் நல்ல வேலை கிடைத்து இருந்தது.

ஜவகரும் விக்னேஷும் கை ரேகை நிபுணரை பார்க்க சென்றார்கள். ஜவகர் உற்சாகத்துடன் எல்லாம் கூறினான். கை ரேகை நிபுணர் சிரித்தார். நீ ஃபெயில் ஆயிருந்தா இந்நேரம் என்ன ஆகி இருக்கும்னு யோசிச்சியா, அந்த பொண்ணு ஃபெயில் ஆயிருந்தா என்ன ஆயிருந்திருக்கும்! அதை அதை சரியா செஞ்சா அது அது நல்லா நடக்கும், நல்லாத்தான் நடக்கனும் ரொம்ப சந்தோசம் என்றார்.

விக்னேஷ் சிரித்துக் கொண்டே ஆயுள் ரேகை வளர்ந்துருச்சு இப்போ, என கை ரேகை காட்டினான். நிபுணர், எல்லாம் கரு மாரியம்மா துணை இருப்பா என்றார்.

விக்னேஷ் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் தனது முதல் சம்பளத்தில் நிறைய பொருட்கள் வாங்கி சென்றான். தான் நினைத்த ஒரு நல அமைப்புக்கு சிறு தொகை எழுதினான். வீடு வந்து சேர்ந்ததும் அம்மா அவனை அன்புடன் பார்த்தார்.

''என்னடா ரேகை எல்லாம் கையில காணோம்டா''

தனது கையில் நிரம்பியிருந்த பொருட்களை கீழே போட்டுவிட்டு அம்மாவை கட்டிபிடித்துக் கொண்டான் விக்னேஷ்.

முற்றும்

பின்குறிப்பு:
ஜோசியமும் கை ரேகையும் சொன்னது நடந்துவிட்டால் நிஜமாக இருக்க வாய்ப்புண்டு என கருத இடம் அளிக்கிறது. இது ஒரு அற்புதமான கலை. கற்றுத் தெரிந்தவர்களிடம் செல்பவர்கள் வளம் பெறுகிறார்கள், கற்றறியாதவர்களிடம் செல்பவர்கள் ஏமாறுகிறார்கள்.

இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை என நினைத்தால், ம்ம் இருக்கட்டும். என்னைப் பொருத்தவரை இது ஒரு அழகிய விளையாட்டு, மனதுடன் விளையாடும் ஒரு உன்னத விளையாட்டு. இதனால் பாதிப்பு அடைந்தவர்களுக்கு எனது அனுதாபங்கள், இதனால் முன்னேற்றம் அடைந்தவர்களுக்கு எனது வாழ்த்துகள்.

'வாழ்க்கையே நம்பிக்கைதானே' என சொல்பவர்கள் இனிமேல் அப்படி சொல்லாமல் இருக்கத் தலைப்படுவார்களேயானால் இந்த கை ரேகையை அழித்துவிடுவோம். மிக்க நன்றி.

எப்படித்தான் ஜெயிக்கிறது? எப்பத்தான் ஜெயிக்கிறது?

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.

புகழ் எனும் மாயைக்கு உட்பட்டா திருவள்ளுவர் 1330 குறள்களையும் எழுதி வைத்திருப்பார். புகழ் அடைய வேண்டும் எனும் நோக்கத்தை முன்னிறுத்தியா திருவள்ளுவர் மெனக்கெட்டு உட்கார்ந்து எழுதி இருப்பார்.

தனக்குத் தெரிந்த ஒன்றைச் சொல்வது அவருக்கு கடமையாகத் தெரிந்திருக்க வேண்டும். தான் எழுதி வைத்ததைப் படிப்பவர்கள் வாழ்வில் நன்றாக இருப்பார்கள் எனும் நம்பிக்கை அவருக்குள் இருந்திருக்க வேண்டும்.

தன்னை காலம் காலமாக அனைவரும் நினைவில் வைத்திருப்பார்கள் என்றோ, தனது எழுத்து அனைத்து மொழிகளிலும் மொழி பெயர்ப்பு செய்யப்படும் என்றோஅவர் சிந்தித்து இருப்பாரா என்பது யோசிக்க முடியாத விசயம். ஆனாலும் எழுதி வைத்தார்.

அவரது எழுத்து பறைசாற்றுவது ஒன்றுதான். எந்தவொரு காலத்துக்கும் பொருந்தும் வகையில் எழுதப்படும் எழுத்து எப்போதும் நிலைத்து நிற்கும். அதற்கு அழிவில்லை, அதனை அழியும் வகையில் மக்கள் விடப்போவதுமில்லை. நினைவில் வைத்துக் கொண்டிருப்பார்கள். மொழி அத்தனையும் அழிந்தால் மட்டுமே திருக்குறள் அழியும். அத்தனை சிறப்பு மிக்க எழுத்து அது. இது வாழ்வில் திருவள்ளுவர் தனது எழுத்துக்குக் கிடைக்கச் செய்த மாபெரும் வெற்றி. வெற்றி பெற வேண்டுமெனவா அவர் எழுதி இருப்பார்?

தனக்குத் தெரிந்த ஒன்றை பிறருக்கு பலன் தரும் வகையில் இருக்குமென்பதை உணர்ந்து எழுதி வைத்தார். அதன் பலன் இப்போதும் திருக்குறள் பெரிதாகப் பேசப்படுகிறது.

எப்படி ஜெயிப்பது என்பதன் ரகசியம் இதுதான். இதை அறிந்து கொண்டால் நமது படைப்புகள் என்றென்றும் நிலைத்து நிற்கும். ஆனாலும் அந்த ரகசியத்தை அறிந்து வைத்திருந்த போதும் ஒரு முயற்சியும் இல்லாமல், எழுதும் முனைப்புடன் இல்லாமல் இருக்கும்போது ரகசியம் ரகசியமாகவே இருந்துவிடும் வாய்ப்புதான் அதிகம்.

எனவே சிந்தனைகளைச் செழுமையுடன் எழுதித் தொடர்வோம், எப்பத்தான் ஜெயிக்கிறது மறைந்து எப்பவும் ஜெயிக்கிறது எனத் ட்தெரியும்.

பல போட்டிகளில் கலந்து கொண்டு எழுதி இருக்கிறேன். ஒருமுறையும் வெற்றி கண்டதில்லை, அதற்காக வருந்துவதும் இல்லை. உழைப்பின் மேல் மனம் வைத்தால் தானே மேலும் மேலும் மெருகேற்ற மனம் வரும். நமது முயற்சியை நாம் கைவிடாமல் இருந்தால் நமது எழுத்து எந்த காலத்துக்கும் பேசப்படும்.

வலைப்பூ பக்கம் வந்த பின்னர் எழுதப்பட்ட இரண்டு சிறுகதைகளுமே தோல்வியைத் தழுவி இருக்கின்றன. எதிர்பார்த்த ஒன்றுதான் எனினும் எழுத்துக்கு அது ஏமாற்றமாகவே இருந்திருக்கும், ஏன் என்னை இவன் இப்படி எழுதுகிறான் என!