Friday, 7 August 2009

ஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 1

1.

சிறு வயதில் இருந்து படிக்கிறோம். படிக்கும்போது ஒரு சிலருக்கு ஒரு சில பாடங்கள் மட்டுமே பிடிக்கும். அதன் மேல் அக்கறை கொண்டு படிப்பார்கள். எல்லா பாடங்களிலும் சிறந்து விளங்கினாலும் ஒரு சில பாடங்கள் மட்டும் மனதில் அகலாது நிற்கும். அப்படி வருடங்கள் ஓடி குறிப்பிட்ட பாடம்தனை தேர்வு செய்து அல்லது குறிப்பிட்ட பிரிவுதனை தேர்வு செய்து படிக்கும் போது எதற்கு படிக்கிறோம் என சில வேளைகளில் புரியாது. அதையும் தாண்டி ஆராய்ச்சியாளனாக ஒரு துறையை எடுத்துக் கொள்கிறோம் என வைத்துக் கொண்டால் அதில் நமது வாழ்நாள் முழுவதும் செலவிட முடியுமா என ஒரு ஐய உணர்வு வந்து விடும். இப்படியாக படித்து பட்டங்கள் பெற்று இச்சமுதாயத்திற்கு என்னதான் செய்ய முடிகிறது எனப் பார்த்தால் நிறைய இருக்கிறது. வாழ்ந்த விஞ்ஞானிகள் வாழ்கின்ற விஞ்ஞானிகள் முதல் ஒவ்வொருவரும் பல விசயங்களை அனுபவப்பட்டு இருக்கிறார்கள். அந்த அனுபவம் பெரும் உதவியாக இருக்கிறது.

இந்த முயற்சி பயன் அளிக்கும் என நம்புகிறேன். சில இடங்களில் ஆங்கில வார்த்தைகளை அப்படியே தமிழில் உபயோகிக்க வேண்டி வரும் அதனால் பொறுத்துக் கொள்ளுங்கள்.

நீ இருக்கிறாய் என்ற உண்மையில்
நான் உண்மையுடன் வாழ்கிறேன்

நோய் என வந்தபோது இந்த தாவர இனம் நம்மை காத்தது என்று சொன்னால் மிகையாகாது. இயற்கையாக தாவரத்தில் இருந்து கிடைத்த அரும்பெரும் மூலக்கூறுகளே மருந்து துறையின் முன்னோடி. இந்த வழக்க முறையை பின்பற்றி பல வியாதிகளை தீர்த்து வந்து இருக்கிறோம் என்பது உண்மை. இருப்பினும் பல கலப்படங்கள் இருந்ததாலும் உரிய முறையில் செயல்படுத்த படாததாலும் இந்த "ஆயுர்வேதிக்" எனப்படும் அரும் பெரும் மருத்துவம் கண்டு கொள்ளப்படவில்லை. ஒவ்வொரு மருந்துக்கும் பின்னால் ஒரு தாவரம் ஒளிந்து இருக்கிறது.

'மிளகு' இதில் இருக்கும் 'பைப்பெரின்' எனப்படும் மூலக்கூறும் 'சிகப்பு மிளகாய்' யில் இருக்கும் 'கேப்சாய்சின்' என்னும் மூலக்கூறும் எனக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இவை இரண்டும் எனது ஆராய்ச்சியில் பங்கு கொண்ட மூலக்கூறுகள்.

'பட்டை' எனச் சொல்லப்படும் "சின்னமன்" தென் இந்தியாவிலும் இலங்கையிலும் மிகவும் பிரபலம். இந்த மரப் பட்டையை எடுத்து தண்ணீரில் ஊறப் போடுவார்கள். இந்த பட்டையில் உள்ள வாசனை எண்ணையானது ஜலதோசத்துக்கு உதவும். இது 'சின்னமால்டிகைடு' என்னும் மூலக்கூறினை பெற்றுள்ளது.

எப்படி இந்த மூலக்கூறுகள் எல்லாம் தாவர இனத்தில் ஒளிந்து கொண்டன எனபது மிகவும் ஆச்சரியமான விசயம். அதிசயமான மூலக்கூறுகளும் உள்ளே இருப்பதை கண்டு வியந்து போயினர் என்பதைவிட வியந்து போனேன்! தாவர இனம் மட்டுமா? விலங்கினமும், மனித இனமும், கடல் வாழ் உயிரினமும் மூலக்கூறுகள் பெற்று இருந்தன. இது இயற்கையாகவே அமைந்த விசயம்!

இப்படி அமைந்த மூலக்கூறுகளின் முன்னோடியான அணுக்களை பார்ப்போம். வேதியியல்தனை விளக்குவதும் புரிந்து கொள்வதும் கற்பனை திறனைப் பொருத்தது. அறிவியலுக்குள் நுழைகிறேன் என் அறியாமையை கண்டால் மன்னிக்கவும்.

(தொடரும்)

தேடினால் கிடைத்துவிடும் - 11

உற்சாகமான அந்த நபர் தான் கற்றுக் கொள்ள வேண்டும் எனும் ஆர்வத்திற்கு இன்று பலன் கிடைத்துவிட்டது என்றார். சித்தர் மெல்லியதாய் புன்னகைத்துக் கொண்டே தெரிந்து கொள்ள வேண்டும் எனும் ஆர்வமும், வெற்றியடைந்து விடவேண்டும் எனும் முயற்சியும் மட்டுமல்லாது தோற்றுவிடுவோம் என்கிற எச்சரிக்கையும் அவசியம் அப்பொழுதுதான் ஒரு விசயத்தில் உண்மையான வெற்றி காணமுடியும். ஒரு விசயத்தில் நமது முழு கவனமும் இருக்கும்போது சுற்றி நடக்கும் விசயங்களிலும் நமது கவனம் சிதறாமல் இருக்க வேண்டும் என்றார். இருவரும் கேட்டுக் கொண்டார்கள்.

தொடர்ந்து நடந்து கொண்டிருக்கையில் சித்தர்கள், முனிவர்கள் ஏன் எல்லாம் துறந்து விடுகிறார்கள் எனக் கேட்டார் கோவிந்தசாமி. சித்தர் நின்றார். என்னை என்னவாக நினைக்கிறீர்கள் என திருப்பிக் கேட்டார் சித்தர். நீங்கள் சித்தர் என்றார் கோவிந்தசாமி. எனக்கு மனைவியும் உண்டு, பிள்ளைகளும் உண்டு என சொல்லிக்கொண்டு நடந்தார் சித்தர். அந்த நபருக்கே ஆச்சரியமாக இருந்தது. யாரும் எதையும் துறக்கத் தேவையில்லை என இளந்துறவி ஒருவர் எழுதிய கவிதையினை சொன்னார்.

''உங்கள் கண்களுக்கு
பொம்மைகளுடன் விளையாடும் வயதுதான் எனக்கு
என் மனதில்
பொம்மைகளை தூரம் தள்ளிவைக்கும் பக்குவம் எனக்கு

எவரும் துறக்கச் சொல்லி துறப்பதில்லை
வேண்டியே வெறுத்து எதுவும் ஒதுக்குவதில்லை
பொருட்கள் வேண்டி சிறக்கும் நீங்கள்
பொறுப்புடன் வளர்கிறேன் வந்து பாருங்கள்

புன்னகை ஏந்தியே பூஜிக்கின்றேன்
புரியும் வாழ்க்கையதை
பள்ளி தொடாமல் பயில்கின்றேன்
இறை உணர்வினால் மட்டுமே உயிர் சுமக்கின்றேன்
சுமக்கும் உயிரை அவனுக்கே சமர்ப்பிக்கின்றேன்

உங்கள் வாழ்க்கைக்கு நான் வருவதில்லை
எந்தன் வாழ்க்கையில் உங்களுக்கு சுகமில்லை
பொன்னும் பொருளும் பேணியும் - அன்பிற்கு
எந்தன் வாசல் தொட்டு வணங்கிச் செல்வீர்

என்றும் துறந்து விடாத ஒன்றில்
எந்தன் மனதின் பற்று வைத்தே மகிழ்கின்றேன்
துறந்துவிடும் விசயத்தில் பற்று வைத்திடும் உங்களுக்கு
நானா தெரிகிறேன் துறவியாய்?''

இல்லறத்தில் இருந்துகொண்டே இறைவனை காண்பதுதான் நல்லறம் என சிரித்தார். ஒரு கட்டிடத்தை அடைந்தார்கள். கதவை திறந்து உள்ளே சென்று விளக்கு ஏற்றினார் சித்தர். உள் அறையில் தரையானது வெறும் மணல் தரையாக்வே இருந்தது. ஆழமாக தோண்டினார். பாத்திரத்தை உலோகத்துடன் உள்ளே வைத்தார். ரசாயன குடுவையை உள்ளே மெதுவாக வைத்தார். மூலிகைகளையும் சேர்த்துப் போட்டார். ஒரு சிறிய கல் எடுத்தவர் ரசாயன குடுவை மீது போட்டார். குடுவை உடையும் சப்தம் கேட்டது. வேகமாக மணலை அள்ளி மூடினார். மூன்று நாட்கள் கழித்து வந்து பார்ப்போம் என உள் அறையை மூடிவிட்டு வந்தார்.

உலோகம், ரசாயனம், மூலிகை பெயர் கேட்டார் அந்த நபர். காரீயம், பாதரசம், தங்க மூலிகைகள் என்றார் சித்தர். அந்த நபர் அவசர அவசரமாக எழுதினார். நீங்கள் புதையலைத் தேடிவிட்டு என்னை வந்து பாருங்கள் என கதவை மூடிவிட்டு நடந்தார் சித்தர்.

(தொடரும்)

Thursday, 6 August 2009

வெண்பொங்கல், சாம்பார்- சமையலும் ஒரு கலையே!

நாளை மறுதினம் என் சகோதரியும், மாமாவும் இந்தியா செல்வதால், அவர்களுக்குச் சாப்பாடு செய்து தருகிறேன் என நேற்று வாக்குறுதி தந்து இருந்தேன். நான் ஊரில் இருக்கும்போதும், கல்லூரிக்குச் சென்று திரும்பும் போதும், விடுமுறைக் காலங்களிலும், ராதா கொழுக்கட்டை ஆசையாகச் சாப்பிடுவான் என என் சகோதரி மறக்காமல் செய்து தருவார்கள். அதையே நேற்று நான் அவர்களிடம் சொல்லி வைக்க, சில தினங்களாகச் செய்ய வேண்டும் என முயற்சித்தேன், வறுத்த மாவில் சரியாக வரவில்லை எனக் குறைபட்டுக் கொண்டார்கள். எனது மற்றொரு சகோதரி, வறுத்த மாவில் 'வெதுவெதுப்பான' தண்ணீருடன் கலந்தால் நிச்சயம் நன்றாக வரும், உதவுகிறேன் என சொன்னார்கள். ஆக சில வருடங்கள் பின்னர் கொழுக்கட்டை சாப்பிடும் வாய்ப்பு கிடைத்துவிடும்.

என்ன சமைத்துச் செல்லலாம் என நினைத்துப் பார்த்தபோது எனக்கு மிகவும் பிடித்த மற்றொரு உணவு 'வெண்பொங்கல்' எனவே வெண்பொங்கலையே செய்து வருகிறேன் என சொல்லி இருக்கிறேன். சில தினங்கள் முன்னர் சகோதரி காஞ்சனா இராதாகிருஷ்ணன் அவர்களின் வலைப்பூவில் கொழுக்கட்டை பற்றிய விபரம் பார்த்தேன், கொழுக்கட்டைச் செய்ய வேண்டும் என நினைத்துக் கொண்டேன். நினைத்ததன் பலனாக கொழுக்கட்டை இன்று கிடைத்துவிடும்.

வெண்பொங்கல் தவிர்த்து வேறு என்ன செயலாம் என யோசித்து சகோதரி வித்யாவின் சமையல் அறை வலைப்பூவில் சென்றுப் பார்த்ததில் எதுவும் கிடைக்கவில்லை. திடீரென முத்தமிழ்மன்றத்தில் நான் எழுதியிருந்த வெண்பொங்கல் குறிப்பு ஞாபகம் வந்தது. சரியாக நேரமெல்லாம் பொருந்தி வருகிறதே! அது பின்வருமாறு.

-----
இன்று மதியம் வெண்பொங்கல் செய்யலாம் என இருக்கிறேன். இந்த வெண்பொங்கல் சில வருடங்கள் முன்னர் ஒரு இணையத்தளத்திலிருந்து எடுத்துச் செய்தேன். முழுவதும் ஞாபகம் இல்லையெனினும் எப்படி செய்ய இருக்கிறேன் எனச் சொல்லிவிடுகிறேன்.

புழுங்கல் அரிசி. அமெரிக்கன் நீள அரிசி என இங்கே சொல்வார்கள். அதை ஒன்றரை டம்பளரும், உடைத்த பயிர்த்தம் பருப்பு அரை டம்பளரும் தனியாக எடுத்துக்கொள்ளவேண்டும். பருப்பினை தண்ணீரில் கழுவிவிட்டு சட்டியில் இட்டு வறுக்க வேண்டும். கருப்பாக வறுத்துவிடக்கூடாது. கவனம் தேவை.

அரிசியை தண்ணீரில் கழுவிவிட்டு வறுத்த பருப்பையும் அரிசியையும் தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். சிறிது உப்பு இட்டால் மட்டும் போதும். நன்றாக வெந்தபின்னர் மிளகு, சீரகம், கடுகு,கொத்தமல்லி, வேப்பிலை என கொஞ்சமாகச் சேர்த்து நன்றாக கிளறினால் போதும். வெண்பொங்கல் தயார்.

சாம்பாருடனும், சட்டினியுடனும் சாப்பிட்டால் தனி ருசிதான்.

சாம்பார் எப்படிச் செய்வது எனில் அதுவும் வெகு சுலபம். அதையும் எழுதி இருக்கிறேன். இதோ அது பின்வருமாறு.

வெங்காயம் கொஞ்சம், கத்தரிக்காய் கொஞ்சம், பச்சை மிளகாய், உருளைக்கிழங்கு கொஞ்சம், கேரட் கொஞ்சம் என எல்லாம் வெட்டி எண்ணெயில் வதக்கி, எண்ணெய் தோய்ந்த பருப்பு கொதிக்கும் நீரில் இவை அனைத்தையும் போட்டு சாம்பார் பொடி, மஞ்சள் பொடி, சீரகப் பொடி என சிறிது உப்புடன் கலந்து கொதிக்க வைத்தால் சாம்பார் ரெடி.

ஆண்கள் சமைக்கக் கற்றுக் கொள்வது நல்லது என சொல்வார்கள், ஆனால் வாக்கெடுப்பு எடுத்துப்பாருங்கள், சமைக்கவே நேரம் போதாது என சொல்வார்கள் பெண்கள்.

கல்யாணச் சாப்பாடு என்றால் எங்கள் ஊரிலிருந்து ஆண்கள் தான் திருமண மண்டபங்களுக்குச் சமைக்கச் செல்வார்கள். சாப்பாடும் அத்தனை ருசியாக இருக்கும்.

ஹோட்டல்களில் கூட ஆண்கள் தான் சமையல்காரர்கள்.

நளபாகம் அறிந்திருப்பீர்களே.

ஆண்கள் சமையலில் கெட்டிக்காரர்கள், அந்த வேலையையும் எடுத்துக்கொண்டால் வீட்டிலும் அடிமைப்படுத்திவிட்டார்கள் என பெரும் சர்ச்சை எழும் என அந்த காலத்தில் இருந்தே வீட்டில் ஆண்கள் சமைப்பதை விட்டுவிட்டு பெண்கள் சமைக்கட்டும் என விட்டுவிட்டார்கள் போலும்.